ஐனிக்கேயாளும் லோவிசாளும்—பின்பற்றத்தக்க போதனையாளர்கள்
நம் பிள்ளைகளுக்கு பயனுள்ள மத கல்வி அளிப்பது ஒரு முக்கியமான பொறுப்பு என்பதை யெகோவாவின் ஊழியர்களாகிய நாம் அறிந்திருக்கிறோம். இந்த வேலை மிகச்சிறந்த சூழ்நிலையிலும்கூட எல்லா விதமான இடையூறுகளும் கஷ்டங்களும் நிறைந்ததாக இருக்கலாம். அந்தச் சவாலை மத அடிப்படையில் பிளவுபட்டிருக்கும் வீட்டிலுள்ள ஒரு கிறிஸ்தவ பெற்றோர் எதிர்ப்படுகையில் அது இன்னுமதிக கடினமாய் இருக்கும். அப்படிப்பட்ட சூழ்நிலை புதிதான ஒன்றல்ல. பொ.ச. முதல் நூற்றாண்டில் அதைப் போன்ற நிலையிலிருந்த ஒரு பெற்றோரைப் பற்றி வேதாகமம் நமக்கு சொல்கிறது.
ஐனிக்கேயாள் என்ற பெயருள்ள ஒரு பெண்ணின் குடும்பம் லீஸ்திராவில் வாழ்ந்து வந்தது; அது தென்-மத்திப சிறிய ஆசியாவிலுள்ள லிக்கவோனியா என்ற பகுதியிலிருந்த ஒரு நகரம். லீஸ்திரா, ஒரு சிறிய மாகாணத்தின் அதிக முக்கியத்துவமில்லாத நகரம். அது அகஸ்டஸ் சீசரால் ஸ்தாபிக்கப்பட்ட யூல்யா பெலிக்ஸ் ஜெமினா லஸ்ட்ரா என்றழைக்கப்பட்ட ரோமர்களின் குடியிருப்பு; அது சுற்றுப்புற பகுதிகளிலிருந்த கொள்ளைக்கூட்டத்தின் நடவடிக்கைகளை முறியடிப்பதற்காக ஸ்தாபிக்கப்பட்டது. ஐனிக்கேயாள் ஒரு யூத கிறிஸ்தவர், அவர் மத அடிப்படையில் பிளவுபட்டிருந்த வீட்டில் தன் கிரேக்க கணவரோடும், மகன் தீமோத்தேயுவோடும், தன் தாய் லோவிசாளோடும் வசித்து வந்தார்.—அப்போஸ்தலர் 16:1-3.
லீஸ்திராவில் வெகுசில யூதர்களே இருந்திருக்க வேண்டும், ஏனெனில் சுமார் 30 கிலோமீட்டர் தூரத்திலிருந்த இக்கோனியாவில் யூதர்கள் இருந்தபோதிலும் அங்கு ஒரு ஜெப ஆலயம் இருந்ததைப் பற்றி பைபிளில் எவ்வித குறிப்புமில்லை. (அப்போஸ்தலர் 14:19) ஆகையால் ஐனிக்கேயாளுக்கு தன் விசுவாசத்தை நடைமுறையில் கடைப்பிடிப்பது அவ்வளவு சுலபமானதாய் இருந்திருக்காது. தீமோத்தேயுவுக்கு பிறந்ததிலிருந்தே விருத்தசேதனம் செய்யப்படவில்லை, அந்த எண்ணத்தை ஐனிக்கேயாளின் கணவன் ஒருவேளை எதிர்த்திருக்க வேண்டும் என்று ஊகிப்பதற்கு சில கல்விமான்களை இது வழிநடத்தியிருக்கிறது.
இருப்பினும், ஐனிக்கேயாள் தன் நம்பிக்கைகளைக் குறித்ததில் தனிமையில் இருக்கவில்லை. தீமோத்தேயு தன் தாயிடமிருந்தும், பாட்டியாகிய லோவிசாளிடமிருந்தும் ‘பரிசுத்த வேத எழுத்துக்களில்’ போதனையை பெற்றுக்கொண்டதாக தெரிகிறது. a அப்போஸ்தலனாகிய பவுல் தீமோத்தேயுவுக்கு இவ்வாறு அறிவுரை கூறினார்: “நீ கற்று நிச்சயித்துக்கொண்டவைகளில் நிலைத்திரு; அவைகளை இன்னாரிடத்தில் கற்றாய் என்று நீ அறிந்திருக்கிறதுமல்லாமல், கிறிஸ்து இயேசுவைப் பற்றும் விசுவாசத்தினாலே உன்னை இரட்சிப்புக்கேற்ற ஞானமுள்ளவனாக்கத்தக்க பரிசுத்த வேத எழுத்துக்களை, நீ சிறுவயதுமுதல் அறிந்தவனென்றும் உனக்குத் தெரியும்.”—2 தீமோத்தேயு 3:14, 15.
“சிறுவயதுமுதல்” போதனை
தீமோத்தேயுக்கு ‘சிறுவயதுமுதல் பரிசுத்த வேத எழுத்துக்களில்’ போதனை அளிக்கப்பட்டது என்று பவுல் சொன்னார்; இது குழந்தைப் பருவத்திலிருந்தே என்பதை தெளிவாக அர்த்தப்படுத்தியது. பிறந்த குழந்தையைக் குறிப்பிட பொதுவாக உபயோகிக்கும் கிரேக்க சொல்லை (பிரெபாஸ் என்பதை) அவர் பயன்படுத்தியது இதற்கு இசைவாய் உள்ளது. (லூக்கா 2:12, 16-ஐ ஒப்பிடுக.) இவ்வாறு ஐனிக்கேயாள் கடவுளால் கொடுக்கப்பட்ட கடமையை மிகவும் முக்கியமானதாய் கருதி நேரத்தை வீணடிக்காமல் கடவுளுடைய பக்தியுள்ள ஊழியராக வளருவதற்கு அவருக்கு உதவும் பயிற்றுவிப்பை ஆரம்பத்திலேயே தீமோத்தேயுவுக்கு கொடுத்தார்.—உபாகமம் 6:6-9; நீதிமொழிகள் 1:8.
தீமோத்தேயு வேதாகம சத்தியங்களை ‘கற்று நிச்சயித்துக்கொண்டிருந்தான்.’ ஒரு கிரேக்க அகராதியின்படி, பவுல் இங்கே பயன்படுத்திய சொல், ஏதோவொன்றை “உறுதியாக நம்பும்படி இணக்குவித்தல்; நிச்சயப்படுத்திக்கொள்ளுதல்” என்று பொருள்படுகிறது. தீமோத்தேயுவின் இருதயத்தில் உறுதியான நம்பிக்கையை நிலைநாட்டி, கடவுளுடைய வார்த்தையில் காரணம் காண்பித்து விளக்கி அதில் விசுவாசம் வைக்க அவருக்கு உதவி செய்வதற்கு அதிகமான நேரமும் முயற்சியும் தேவைப்பட்டிருக்கும் என்பதைக் குறித்து எவ்வித சந்தேகமுமில்லை. அப்படியென்றால் ஐனிக்கேயாளும் லோவிசாளும் தீமோத்தேயுவுக்கு வேதாகமத்திலிருந்து கற்பிப்பதற்கு கடினமாய் உழைத்திருக்க வேண்டும் என்பது தெளிவாய் தெரிகிறது. அந்தத் தேவபக்தியுள்ள பெண்கள் எப்பேர்ப்பட்ட பலனை பெற்றார்கள்! பவுல் தீமோத்தேயுவைக் குறித்து இவ்வாறு எழுதமுடிந்தது: “அந்த விசுவாசம் முந்தி உன் பாட்டியாகிய லோவிசாளுக்குள்ளும் உன் தாயாகிய ஐனிக்கேயாளுக்குள்ளும் நிலைத்திருந்தது; அது உனக்குள்ளும் நிலைத்திருக்கிறதென்று நிச்சயித்திருக்கிறேன்.”—2 தீமோத்தேயு 1:5.
தீமோத்தேயுவின் வாழ்க்கையில் ஐனிக்கேயாளும் லோவிசாளும் என்னே ஒரு முக்கியமான பங்கை வகித்தனர்! எழுத்தாளர் டேவிட் ரீட் இதைக் குறித்து இவ்வாறு குறிப்பிடுகிறார்: “மதம் மாறியதற்கு தீமோத்தேயுவின் சொந்த தனிப்பட்ட அனுபவத்தைத் தவிர வேறு எதுவும் காரணமாய் இருக்கமுடியாது என்று அப்போஸ்தலர் நம்பியிருந்தால், அதைக் குறித்து அவர் உடனடியாக நினைப்பூட்டியிருப்பார். ஆனால் அது ஏற்கெனவே ‘லோவிசாளிலும் ஐனிக்கேயாளிலும் உயிரோடிருந்தது’ என்றே அவர் தீமோத்தேயுவின் விசுவாசத்தைக் குறித்து முதலாவதாக சொன்னார்.” ஒரு இளம் நபரின் எதிர்கால ஆவிக்குரிய எதிர்பார்ப்புகளை நிர்ணயிப்பதில் பெற்றோர், மேலும் தாத்தா பாட்டிமாரும்கூட வீட்டில் ஆரம்பத்தில் கற்பிக்கும் ஆவிக்குரிய கல்வி மிகவும் முக்கிய பாகம் வகிக்கிறது என்பதை லோவிசாள், ஐனிக்கேயாள், தீமோத்தேயு ஆகியோரின் விசுவாசத்தைப் பற்றிய பவுலின் கூற்று காண்பிக்கிறது. கடவுளிடமாகவும் தங்கள் பிள்ளைகளிடமாகவும் இந்தப் பொறுப்பை நிறைவேற்றுவதற்கு தாங்கள் என்ன செய்கின்றனர் என்பதைக் குறித்து குடும்ப அங்கத்தினர்கள் அக்கறையோடு யோசிக்கும்படி அது செய்விக்க வேண்டுமல்லவா?
லோவிசாளும் ஐனிக்கேயாளும் உருவாக்கியிருந்த வீட்டு சூழ்நிலையைக் குறித்தும்கூட பவுல் ஒருவேளை சிந்தித்திருக்கலாம். சுமார் பொ.ச. 47/48-ல் அந்த அப்போஸ்தலன் லீஸ்திராவில் முதலாவது தங்கியிருந்தபோது அவர்களுடைய வீட்டிற்கு சென்றிருக்கலாம். அந்தச் சமயத்தில் அந்த இரண்டு பெண்களும் ஒருவேளை கிறிஸ்தவ மதத்திற்கு மாறியிருக்கலாம். (அப்போஸ்தலர் 14:8-20) தீமோத்தேயுவின் ‘பாட்டி’ என்று லோவிசாளை பவுல் அழைத்தார், ஒருவேளை அந்த வீட்டில் மகிழ்ந்து அனுபவித்த அன்பான, சந்தோஷமான உறவுகள் பவுல் அந்த வார்த்தைகளை தேர்ந்தெடுக்கும்படி செய்திருக்கலாம். கல்விமான் செஸ்லா ஸ்பெக்கின்படி, அவர் பயன்படுத்திய கிரேக்க பதம் (டெதே என்ற பண்டைய மரியாதைக்குரிய பதத்துக்கு முரணாக மாமே என்ற பதம்), தன் பாட்டிக்காக “ஒரு பிள்ளையின் கொள்ளை பிரியத்தை வெளிப்படுத்தும் சொல்,” அது இந்தச் சூழமைவில் “நெருங்கிய உறவையும் பாசத்தையும்” குறிக்கிறது.
தீமோத்தேயுவின் புறப்படுதல்
பவுல் லீஸ்திராவுக்கு இரண்டாவது முறை சென்றபோது (சுமார் பொ.ச. 50), ஐனிக்கேயாளின் விவாகம் சம்பந்தப்பட்ட நிலை என்னவாயிருந்தது என்பது தெளிவாயில்லை. அவர் ஒரு விதவை என்று அநேக கல்விமான்கள் ஊகித்துக்கொள்கிறார்கள். எதுவாயிருப்பினும், அவருடைய தாயும் பாட்டியும் அளித்த போதனையின் காரணமாக தீமோத்தேயு மிகச்சிறந்த இளம் மனிதராக வளர்ந்து வந்தார், அந்தச் சமயத்திற்குள் சுமார் 20 வயதாயிருந்தார். அவர் “லீஸ்திராவிலும் இக்கோனியாவிலுமுள்ள சகோதரராலே நற்சாட்சி பெற்றவனாயிருந்தா[ர்].” (அப்போஸ்தலர் 16:2) ராஜ்யத்தின் நற்செய்தியை பரப்புவதற்கான விருப்பம் தீமோத்தேயுவின் இருதயத்தில் நன்கு பதிக்கப்பட்டிருந்த காரணத்தால் பவுலும் சீலாவும் மிஷனரி பயணம் செய்தபோது தங்களோடு வரும்படியாக பவுல் கொடுத்த அழைப்பை தீமோத்தேயு உடனடியாக ஏற்றுக்கொண்டார்.
தீமோத்தேயு புறப்பட்டும் தருவாயில் இருந்தபோது ஐனிக்கேயாளும் லோவிசாளும் எப்படி உணர்ந்திருப்பார்கள் என்பதை கற்பனை செய்து பாருங்கள்! பவுல் அவர்களுடைய பட்டணத்துக்கு முதன் முறையாக சென்றபோது, அந்த அப்போஸ்தலனைக் கல்லெறிந்து அவர் மரித்துப் போகும்படி விடப்பட்டதை அவர்கள் அறிந்திருந்தார்கள். (அப்போஸ்தலர் 14:19) ஆகையால் இளம் தீமோத்தேயுவை வழியனுப்பி வைப்பது அவர்களுக்கு சுலபமானதாய் இருந்திருக்காது. அவர் எவ்வளவு காலம் தொலைவில் பிரிந்து இருப்பார், பத்திரமாக திரும்பி வருவாரா என்று அவர்கள் ஒருவேளை யோசித்திருப்பார்கள். அப்படி சாத்தியமான கவலைகள் இருந்தபோதிலும், யெகோவாவை இன்னும் முழுமையாய் சேவிப்பதற்காக இந்த விசேஷ சிலாக்கியத்தை ஏற்றுக்கொள்ளும்படி அவருடைய தாயும் பாட்டியும் அவரை உற்சாகப்படுத்தினார்கள் என்பதில் சந்தேகமேயில்லை.
மதிப்புவாய்ந்த பாடங்கள்
ஐனிக்கேயாளையும் லோவிசாளையும் பற்றி ஆராய்ந்து பார்ப்பதிலிருந்து நாம் அதிகத்தைக் கற்றுக்கொள்ளலாம். தீமோத்தேயுவுக்கு ஆவிக்குரியப்பிரகாரமாய் முழுமையான பயிற்றுவிப்பை அளிப்பதற்கு விசுவாசம் அவர்களை உந்துவித்தது. தாத்தா பாட்டிமார் தங்கள் பேரப்பிள்ளைகளுக்கும் மற்றவர்களுக்கும் வைக்கும் தேவபக்திக்கான முதிர்ச்சிவாய்ந்த, நிலையான முன்மாதிரி முழு கிறிஸ்தவ சபைக்கும் நிச்சயமாகவே பயனுள்ளதாய் இருக்கும். (தீத்து 2:3-5) அதேபோல் ஐனிக்கேயாளின் முன்மாதிரி, விசுவாசத்தில் இல்லாத கணவன்மாரை உடைய தாய்மார்களுக்கு, தங்கள் பிள்ளைகளுக்கு ஆவிக்குரிய போதனையை அளிக்க வேண்டிய பொறுப்புகளையும் பலன்களையும் நினைப்பூட்டுகிறது. விசேஷமாக தகப்பன் தன் துணையின் மத நம்பிக்கைகளில் ஈடுபாடில்லாதவராக இருந்தால், இதைச் செய்வதற்கு சில சமயங்களில் அதிக தைரியமும் சாதுரியமும் தேவை. ஏனெனில் கிறிஸ்தவ மனைவி தன் கணவனின் தலைமை ஸ்தானத்துக்கு மரியாதை காண்பிக்க வேண்டும்.
தீமோத்தேயு மிகச்சிறந்த மிஷனரியாகவும் கண்காணியாகவும் உயரும் நிலைக்கு ஆவிக்குரிய முன்னேற்றம் செய்ததை பார்த்தபோது, லோவிசாளும் ஐனிக்கேயாளும் காண்பித்த விசுவாசம், முயற்சி, சுயமறுப்பு ஆகியவற்றுக்கு பலன் கிடைத்தது. (பிலிப்பியர் 2:19-22) அதேபோல் இன்று, நம் பிள்ளைகளுக்கு வேதாகம சத்தியங்களை கற்றுக்கொடுப்பதற்கு நேரம், பொறுமை, நோக்கத்தில் உறுதி ஆகியவை தேவைப்படுகிறது, ஆனால் அதற்காக எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வீணாய்ப் போகாமல் சிறந்த பலன் கொடுக்கின்றன. மத சம்பந்தமாக பிளவுபட்டிருக்கும் குடும்பத்தில் உள்ள அநேக முன்மாதிரியான கிறிஸ்தவ இளைஞர்கள் ‘சிறு வயது முதல் பரிசுத்த வேத எழுத்துக்களை’ கற்றுத் தந்துள்ள தங்கள் கடவுள் பக்தியுள்ள பெற்றோருக்கு பெரும் சந்தோஷத்தை கொண்டு வருகின்றனர். பின்வருமாறு சொல்லும் நீதிமொழி எவ்வளவு உண்மையாய் இருக்கிறது: ‘ஞானமுள்ள பிள்ளையைப் பெற்றவள் அவனால் மகிழுவாள்’!—நீதிமொழிகள் 23:23-25.
அப்போஸ்தலனாகிய யோவான் தன் ஆவிக்குரிய பிள்ளைகளைக் குறித்து இவ்வாறு சொன்னார்: “என் பிள்ளைகள் சத்தியத்திலே நடக்கிறார்கள் என்று நான் கேள்விப்படுகிற சந்தோஷத்திலும் அதிகமான சந்தோஷம் எனக்கு இல்லை.” (3 யோவான் 4) நிச்சயமாகவே, அந்த வார்த்தைகளில் வெளிப்படுத்தப்பட்டிருக்கும் உணர்ச்சியில், பின்பற்றத்தக்க இரண்டு போதனையாளர்களாய் இருந்த ஐனிக்கேயாள், லோவிசாளைப் போன்று நிரூபித்த அநேகருக்கும் பங்குண்டு.
[அடிக்குறிப்பு]
a லோவிசாள் தீமோத்தேயுவுக்கு தந்தை வழி தாய் அல்ல என்பது அரேமிக் மொழிபெயர்ப்பு 2 தீமோத்தேயு 1:5-ல் ‘உன் தாயின் தாய்’ என்று குறிப்பிடுவதிலிருந்து தெரிகிறது