அவர்களை சிசுப்பருவத்திலிருந்தே பயிற்றுவியுங்கள்
“கர்ப்பத்திலுள்ள சிசுக்கள் பேச்சுக் குரல்களைக் கேட்கையில் உடல்சார்ந்த விளைவுகள் ஏற்படுகின்றன” என்று நவீன ஆராய்ச்சி குறிப்பிடுகிறது. “கருப்பையில் இருக்கும் தங்கள் பிள்ளைகளுக்கு தாய்மார் வாசித்துக் காட்டிய பகுதிகள் மறுபடியும் வாசித்துக் காண்பிக்கப்பட்டபோது புதிதாகப் பிறந்த குழந்தைகள் பிரதிபலித்தன,” என்று வட கரோலினா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்ததாக வின்னிப்பெக் ஃபிரீ பிரஸ் கூறுகிறது. கருவுற்றிருக்கும் சமயத்தில் பெண்கள் சப்தமாக வாசித்தால், அது நல்ல ஒழுக்க மதிப்பீடுகளை பிள்ளைக்கு சிறிதுசிறிதாகப் புகட்டுவதற்கு உதவியளிக்கக்கூடும். தீமோத்தேயு ‘பரிசுத்த வேத எழுத்துக்களை சிசுப்பருவத்திலிருந்தே அறிந்திருந்தார்’ என்று பைபிள் சொல்கிறது. (2 தீமோத்தேயு 3:14, 15) அவருடைய தாயும் அவருடைய பாட்டியும் அவரை சிசுப்பருவத்திலிருந்தே பயிற்றுவிப்பதன் மதிப்பை உணர்ந்திருந்தனர், அதில் சப்தமாக வாசிப்பதும் பெரும்பாலும் உட்பட்டிருக்கக்கூடும்.
“இன்று நம் சமுதாயத்தில் நாம் கொண்டிருக்கும் அதிக சக்திவாய்ந்த வாழ்க்கை திறமை” வாசிப்பே என்று ஆசிரியர் ஜிம் டிரிலீஸ் சொல்கிறார். சப்தமாக வாசிப்பதன் மூலம், மொழி திறமையும் சொல்ஞான திறமையும் மேம்படுத்தப்படுகின்றன.
உங்கள் சிசுவிடம் நீங்கள் பேச ஆரம்பித்தவுடனேயே சப்தமாக வாசிக்கத் தொடங்குவது ஞானமானது. உங்கள் பிறவாத குழந்தை அல்லது புதிதாகப் பிறந்த குழந்தை நீங்கள் சொல்வதை முதலில் விளங்கிக்கொள்ள முடியாவிட்டாலும், பிற்காலத்தில் விளையக்கூடிய நெடுநாளைய நன்மைகள் பெருமதிப்புடையவை. நீதிமொழிகள் 22:6 சொல்கிறது: “பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்.”
நடைமுறையானதும் பலன்தரத்தக்கதுமான என்ன விஷயங்களை நீங்கள் வாசிக்கலாம்? ஒவ்வொரு நாளும் உங்கள் பிள்ளைக்கு பைபிளை சப்தமாக வாசித்துக் காட்டுங்கள். பெரிய போதகருக்குச் செவிகொடுத்தல், என்னுடைய பைபிள் கதை புத்தகம், எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர், காவற்கோபுரம் மற்றும் விழித்தெழு! பத்திரிகைகளில் உள்ள கட்டுரைகள் போன்ற மற்ற பயனுள்ள பிரசுரங்களையும் வாசியுங்கள்.
இந்த விதத்தில் உங்களையே அளிப்பது நேரத்தை எடுத்துக்கொள்ளும் என்பது உண்மைதான், ஆனால் அது நல்லவிதத்தில் செலவழிக்கப்படும் நேரமாக இருக்கும். நீங்கள் உங்கள் பிள்ளைமீது அக்கறை காண்பிக்கிறீர்கள், அவர்களை நேசிக்கிறீர்கள் என்பதைக் காண்பிப்பதற்கு இது ஒரு பயனுள்ள வழியாய் இருக்கிறது.