உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w94 3/15 பக். 10-15
  • யெகோவா நோக்கமுள்ள கடவுள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • யெகோவா நோக்கமுள்ள கடவுள்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1994
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • நோக்கமுள்ள கடவுள்
  • படிப்படியாக வெளிப்படுத்தப்படுகின்றன
  • அறிவொளியூட்டப்படுதல்
  • அநேகர் அறியாமல் இருக்க தெரிந்தெடுக்கின்றனர்
  • ஒளி கொண்டுசெல்வோர்—என்ன நோக்கத்துக்காக?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1993
  • “இதோ! நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்”
    “இதோ! நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன்”
  • கடவுள் என்ன செய்து கொண்டிருக்கிறார்?
    உண்மையான சமாதானம்
  • யெகோவா தம்முடைய நோக்கத்தை நிறைவேற்ற அவரை நம்புங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1994
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1994
w94 3/15 பக். 10-15

யெகோவா நோக்கமுள்ள கடவுள்

“நான் நினைத்திருக்கிறபடியே நடக்கும்; நான் நிர்ணயித்தபடியே நிலைநிற்கும்.”—ஏசாயா 14:24.

1, 2. வாழ்க்கையின் நோக்கத்தைப் பற்றி அநேகர் என்ன சொல்கிறார்கள்?

“வழ்க்கையின் நோக்கம் என்ன?” என்று மக்கள் எங்கும் கேட்கிறார்கள். மேற்கத்திய அரசியல் தலைவர் ஒருவர் சொன்னார்: “என்றும் இல்லாத அதிகபேர், ‘நாம் யார்? நம்முடைய நோக்கம் என்ன?’ என்று கேட்கிறார்கள்.” வாழ்க்கையின் நோக்கம் என்ன என்ற கேள்விக்கு இளைஞரை ஒரு செய்தித்தாள் வாக்கெடுப்பு செய்தபோது, குறிப்பிடத்தக்க பிரதிபலிப்புகள் இவ்வாறு இருந்தன: “உங்கள் இருதயம் விரும்புகிற எதையும் செய்தல்.” “ஒவ்வொரு நிமிஷத்தையும் முடிந்தளவிற்குப் பயன்படுத்தி வாழ்தல்.” “போகிறபோக்கில் வாழ்க்கையை அனுபவித்தல்.” “குழந்தைகளைப் பெற்று, மகிழ்ந்திருந்து, பின்பு இறந்துவிடுதல்.” இவ்வளவுதான் வாழ்க்கையில் இருப்பதாக பெரும்பாலோர் நினைத்தனர். பூமியில் வாழ்க்கைக்கு எந்தவித நீண்ட கால நோக்கமும் இருப்பது பற்றி ஒருவரும் பேசவில்லை.

2 கன்ஃபியூசிய கொள்கையை ஆதரிக்கும் அறிஞர் ஒருவர் சொன்னார்: “வாழ்க்கையின் அடிப்படை அர்த்தம் நம் சாதாரண, மனித வாழ்க்கையில் காணப்படுகிறது.” இதன்பிரகாரம், மக்கள் தொடர்ந்து பிறந்துகொண்டிருந்து, 70 அல்லது 80 ஆண்டுகளுக்குக் கஷ்டப்பட்டு, பின்பு மரித்து, என்றும் இல்லாமல்போவர். ஒரு பரிணாம அறிவியல் வல்லுநர் சொன்னார்: “‘மேலான’ பதிலுக்காக நாம் ஏங்கக்கூடும்—ஆனால் பதில் ஒன்றுகூட இல்லை.” இந்தப் பரிணாமவாதிகளுக்கு வாழ்வதற்கான போராட்டமே வாழ்க்கை, இதையெல்லாம் மரணம் முடிவிற்குக் கொண்டுவருகிறது. அப்படிப்பட்ட தத்துவங்கள் வாழ்க்கைக்கு ஓர் அர்த்தமற்ற நோக்குநிலையை அளிக்கின்றன.

3, 4. வாழ்க்கையைப் பலர் கருதும்விதத்தை உலக நிலைமைகள் எப்படிப் பாதிக்கின்றன?

3 மனித வாழ்வு இவ்வளவு துயரத்தால் நிறைந்திருப்பதைக் காணும்போது, வாழ்க்கை ஒரு நோக்கமுடையதாய் இருக்கிறது என்பதை பலர் சந்தேகிக்கின்றனர். தொழில் மற்றும் அறிவியல் சாதனைகளில் ஓர் உச்சநிலையை அடைந்திருக்கிறதாக நம்பப்படுகிற நம் காலத்தில், உலகமெங்கும் சுமார் நூறுகோடி மக்கள் மோசமான நிலையில் நோய்வாய்ப்பட்டு அல்லது ஊட்டச்சத்துக் குறைவுபட்டு இருக்கின்றனர். அப்படிப்பட்ட காரணங்களால் லட்சக்கணக்கான குழந்தைகள் ஒவ்வொரு வருடமும் மரிக்கின்றனர். கூடுதலாக, மொத்தத்தில் முந்தைய நானூறு ஆண்டு காலப்பகுதியில் நடந்த யுத்தங்களில் மரித்தவர்களைவிட நான்கு மடங்கு அதிகமானவர்கள் மரிப்பதை இந்த 20-ம் நூற்றாண்டு கண்டுவருகிறது. குற்றச்செயல், வன்முறை, போதைமருந்து துர்ப்பிரயோகம், குடும்பப்பிளவுகள், எய்ட்ஸ் மற்றும் பாலுறவுமூலம் கடத்தப்படுகிற மற்ற நோய்கள்—எதிர்மறையான அம்சங்களின் பட்டியல் நீண்டுகொண்டேயிருக்கிறது. இந்தப் பிரச்னைகளுக்கு உலகத் தலைவர்கள் தீர்வுகளைக் கொண்டில்லை.

4 இப்படிப்பட்ட நிலைமை காரணமாக, பலர் நம்புகின்றதை ஒரு பெண் வெளிப்படுத்தினாள்: “வாழ்க்கைக்கு நோக்கமில்லை. இந்த மோசமான காரியங்கள் எல்லாம் நடந்துகொண்டிருந்தால், வாழ்க்கைக்கு அர்த்தம் ஏதும் இல்லை.” ஒரு முதிர்வயதான மனிதர் சொன்னார்: “நான் ஏன் இங்கே இருக்கிறேன் என்று என் வாழ்வின் பெரும்பாலான சமயத்தில் கேட்டுக்கொண்டே இருக்கிறேன். ஒரு நோக்கம் உண்டென்றால், இனி நான் அக்கறைக்காட்டப் போவதில்லை.” எனவே, திரளானோர் கடவுள் ஏன் துன்புறுத்துதலை அனுமதித்திருக்கிறார் என்று அறியாததால், எதிர்காலத்தைப் பற்றிய ஓர் உண்மையான நம்பிக்கையை வைக்கும்படி கடுந்துயர்மிக்க உலக நிலைமைகள் அனுமதிப்பதில்லை.

5. வாழ்க்கையின் நோக்கத்தைப் பற்றிய குழப்பத்தை ஏன் இந்த உலக மதங்கள் அதிகரிக்கின்றன?

5 வாழ்க்கையின் நோக்கத்தைப் பற்றி மதத் தலைவர்களும்கூட கருத்துவேறுபட்டு, நிச்சயமற்று இருக்கின்றனர். லண்டனில் உள்ள புனித பவுலுடைய பேராலயத்தின் முன்னாள் தலைமைகுரு சொன்னார்: “என் வாழ்நாளெல்லாம் வாழ்வதன் நோக்கத்தைக் கண்டுபிடிக்க நான் போராடியிருக்கிறேன். . . . நான் தோற்றுவிட்டேன்.” உண்மையில், மரிக்கையில் நல்லவர்கள் பரலோகத்துக்குப் போகிறார்கள் என்றும், கெட்டவர்கள் நிரந்தரமாக எரிநரகத்திற்குப் போகிறார்கள் என்றும் பல குருவர்க்கத்தினர் கற்பிக்கிறார்கள். ஆனால், இந்த நோக்குநிலை, பூமியிலுள்ள மனிதகுலம் துன்புறுத்தப்பட்ட வாழ்க்கைப்போக்கைத் தொடரும்படி விட்டுவிடுகிறது. மேலும், தேவதூதர்களை அவர் செய்ததுபோல, பரலோகத்தில் மக்களை வாழவைப்பது என்பது கடவுளுடைய நோக்கமாக இருந்தால், ஆரம்பத்திலேயே அவர்களை வெறுமனே பரலோக சிருஷ்டிகளாக உருவாக்குவதன் மூலம் மனிதர்களை அவ்வளவு துன்பத்திலிருந்து ஏன் அவர் விடுவித்திருக்கக்கூடாது? எனவே பூமியில் வாழ்க்கையின் நோக்கம் பற்றி குழப்பம் இருப்பது அல்லது வாழ்க்கைக்கு ஏதேனும் நோக்கம் இருக்கிறது என்று நம்ப மறுப்பது சர்வசாதாரணம்தான்.

நோக்கமுள்ள கடவுள்

6, 7. சர்வலோக பேரரசரைப் பற்றி பைபிள் நமக்கு என்ன சொல்கிறது?

6 ஆனால், வரலாற்றிலேயே மிகப் பரவலாக விநியோகிக்கப்பட்ட புத்தகமாகிய பரிசுத்த பைபிள், சர்வலோகப் பேரரசர் யெகோவா, நோக்கமுள்ள கடவுளாய் இருக்கிறார் என்று நமக்குச் சொல்கிறது. அவர் பூமியிலுள்ள மனிதகுலத்திற்கு ஒரு நீண்டகால, உண்மையில் ஒரு நித்திய கால நோக்கத்தை உடையவராய் இருக்கிறார் என்று அது நமக்குக் காண்பிக்கிறது. மேலும் யெகோவா ஒன்றை நோக்கமிடும்போது, அது தவறாமல் நடந்தேறும். மழை விதையை வளரச்செய்வதுபோல, கடவுள் சொல்கிறார், “அப்படியே என் வாயிலிருந்து புறப்படும் வசனமும் இருக்கும்; அது வெறுமையாய் என்னிடத்திற்குத் திரும்பாமல், அது நான் விரும்புகிறதைச் செய்து, நான் அதை அனுப்பின காரியமாகும்படி வாய்க்கும்.” (ஏசாயா 55:10, 11) யெகோவா தாம் சொல்கிற எல்லாவற்றையும் நிறைவேற்றுவார், ‘அதன்படியே நிலைநிற்கும்.’—ஏசாயா 14:24.

7 கடவுள் ‘பொய்யுரையாதவர்,’ ஆகையால், சர்வவல்லமையுள்ளவர் தம்முடைய வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என்ற முழு நம்பிக்கையை மனிதர்களாகிய நாம் வைத்திருக்க முடியும். (தீத்து 1:3; எபிரெயர் 6:18) அவர் எதையாவது செய்வார் என்று நம்மிடம் சொல்லும்போது, அது கண்டிப்பாக நிறைவேறும் என்பதற்கு அவருடைய வார்த்தையே உத்தரவாதம். அது நடந்துவிட்டதற்குச் சமம். அவர் அறிவிக்கிறார்: “நானே தேவன், வேறொருவரும் இல்லை; நானே தேவன், எனக்குச் சமானமில்லை. அந்தத்திலுள்ளவைகளை ஆதிமுதற்கொண்டும், இன்னும் செய்யப்படாதவைகளைப் பூர்வகாலமுதற்கொண்டும் அறிவிக்கிறேன்; என் ஆலோசனை நிலைநிற்கும், எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் செய்வேன் . . . அதைச் சொன்னேன், அதை நிறைவேற்றுவேன்; அதைத் திட்டம்பண்ணினேன், அதைச் செய்து முடிப்பேன்.”—ஏசாயா 46:9-11.

8. கடவுளை உண்மையில் அறிந்துகொள்ள விரும்புபவர்கள் அவரைக் கண்டடைய முடியுமா?

8 மேலுமாக யெகோவா, ‘ஒருவரும் கெட்டுப்போகாமல் எல்லாரும் மனந்திரும்பவேண்டுமென்று விரும்புகிறார்.’ (2 பேதுரு 3:9) இந்தக் காரணத்திற்காகவே, யாருமே தம்மை அறியாமல் இருக்கும்படி அவர் விரும்புகிறதில்லை. அசரியா என்ற பெயருடைய தீர்க்கதரிசி சொன்னார்: “நீங்கள் [கடவுளை] தேடினால், உங்களுக்கு வெளிப்படுவார்; அவரை விட்டீர்களேயாகில், அவர் உங்களை விட்டுவிடுவார்.” (2 நாளாகமம் 15:1, 2) எனவே, கடவுளையும் அவருடைய நோக்கங்களையும் உண்மையில் அறிந்துகொள்ள விரும்புபவர்கள், அவரைத் தேடும் முயற்சியை எடுத்தார்களென்றால் நிச்சயமாகவே அவ்வாறு செய்யமுடியும்.

9, 10. (அ) கடவுளை அறிய விரும்புகிறவர்களுக்கு என்ன கொடுக்கப்பட்டிருக்கிறது? (ஆ) கடவுளுடைய வார்த்தைக்கான தேடுதல் நாம் என்ன செய்யும்படி உதவுகிறது?

9 எங்குத் தேடுவது? கடவுளை உண்மையில் தேடுபவர்களுக்கு தம்முடைய வார்த்தையாகிய பைபிளை அவர் கொடுத்திருக்கிறார். சர்வலோகத்தையும் படைப்பதற்காகக் கடவுள் பயன்படுத்தின அதே செயல்நடப்பிக்கும் சக்தியாகிய அவருடைய பரிசுத்த ஆவியின்மூலம், அவருடைய நோக்கங்களைப் பற்றி நாம் என்ன அறியவேண்டும் என்பதை எழுதும்படி விசுவாசமுள்ள மனிதர்களைக் கடவுள் வழிநடத்தினார். உதாரணமாக, பைபிள் தீர்க்கதரிசனத்தைப் பற்றி, அப்போஸ்தலன் பேதுரு சொன்னார்: “தீர்க்கதரிசனமானது ஒருகாலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை; தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்டு பேசினார்கள்.” (2 பேதுரு 1:21) இதைப்போலவே, அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு அறிவித்தார்: “வேதவாக்கியங்களெல்லாம் தேவஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் [முழுமையாக, NW] தேறினவனாகவும் எந்த நற்கிரியையுஞ் செய்ய [முழுமையாக, NW] தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.”—2 தீமோத்தேயு 3:16, 17; 1 தெசலோனிக்கேயர் 2:13.

10 கடவுளுடைய வார்த்தை நம்மை பகுதியளவிலோ அரைகுறையாகவோ அல்ல, ஆனால் ‘முழுமையாக தேறினவர்களாகவும், முற்றிலும் தகுதியுள்ளவர்களாகவும்’ இருக்கும்படி செய்கிறது. கடவுள் யார், அவருடைய நோக்கங்கள் யாவை, அவர் தம் ஊழியர்களிடமிருந்து எதை எதிர்பார்க்கிறார் போன்றவற்றைக் குறித்து ஒருவர் நிச்சயமாய் இருக்க அது உதவிசெய்கிறது. கடவுளால் இயற்றப்பட்ட ஒரு புத்தகத்திலிருந்து இது எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் அது மட்டுமே கடவுளைப் பற்றிய திருத்தமான அறிவை அடைய நாம் தேடக்கூடிய ஒரே ஊற்றுமூலமாக இருக்கிறது. (நீதிமொழிகள் 2:1-5; யோவான் 17:3) அவ்வாறு செய்வதன்மூலம், நாம் ‘இனிக் குழந்தைகளாயிராமல், மனுஷருடைய சூதும் வஞ்சிக்கிறதற்கேதுவான தந்திரமுமுள்ள போதகமாகிய பலவித காற்றினாலே அலைகளைப் போல அடிபட்டு அலைகிறவர்களாயிராமலிருப்போம்.’ (எபேசியர் 4:11, 14) சங்கீதக்காரன் சரியான நோக்குநிலையைக் காட்டினார்: “உம்முடைய [கடவுளுடைய] வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது.”—சங்கீதம் 119:105.

படிப்படியாக வெளிப்படுத்தப்படுகின்றன

11. யெகோவா தம்முடைய நோக்கங்களை மனிதகுலத்திற்கு எவ்வாறு வெளிப்படுத்தியிருக்கிறார்?

11 மனித குடும்பத்தின் ஆரம்பத்திலேயே இந்தப் பூமி மற்றும் அதிலுள்ள மனிதர்கள்குறித்து யெகோவா தம் நோக்கங்களை வெளிப்படுத்தினார். (ஆதியாகமம் 1:26-30) ஆனால் நம் முதல் பெற்றோர் கடவுளுடைய பேரரசாட்சியை ஏற்க மறுத்தபோது, மனிதகுலம் ஆவிக்குரிய இருளுக்குள்ளும் மரணத்துக்குள்ளும் சென்றது. (ரோமர் 5:12) எனினும், யெகோவா தம்மைச் சேவிக்க விரும்புகிறவர்கள் இருப்பார்கள் என்று அறிந்திருந்தார். எனவே, நூற்றாண்டுகளினூடே தம்முடைய நோக்கங்களை தம் உண்மையுள்ள ஊழியர்களுக்கு படிப்படியாக அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். அவர் தொடர்பு கொண்டவர்களில் சிலர், ஏனோக்கு (ஆதியாகமம் 5:24; யூதா 14, 15), நோவா (ஆதியாகமம் 6:9, 13), ஆபிரகாம் (ஆதியாகமம் 12:1-3), மற்றும் மோசே (யாத்திராகமம் 31:18; 34:27, 28). கடவுளுடைய தீர்க்கதரிசியாகிய ஆமோஸ் எழுதினார்: “கர்த்தராகிய ஆண்டவர் தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரருக்குத் தமது இரகசியத்தை வெளிப்படுத்தாமல் ஒரு காரியத்தையும் செய்யார்.”—ஆமோஸ் 3:7; தானியேல் 2:27, 28.

12. கடவுளுடைய நோக்கங்களின்மீது இயேசு எவ்வாறு அதிக வெளிச்சத்தைக் கொடுத்தார்?

12 ஏதேனில் கலகம்நடந்து சுமார் 4,000 ஆண்டுகளுக்குப் பிறகு, கடவுளுடைய குமாரன் இயேசு கிறிஸ்து பூமியில் இருந்தபோது, யெகோவாவினுடைய நோக்கங்களின் பல கூடுதலான விவரங்கள் வெளிப்படுத்தப்பட்டன. முக்கியமாக, பூமியின்மீது ஆட்சிசெய்ய ஒரு பரலோக ராஜ்யத்தை நிறுவும் கடவுளுடைய நோக்கம் சம்பந்தமாக இது அவ்வாறு இருந்தது. (தானியேல் 2:44) இயேசு அந்த ராஜ்யத்தை தம்முடைய போதகத்தின் தலைப்புப்பொருளாக ஆக்கினார். (மத்தேயு 4:17; 6:10) அந்த ராஜ்யத்தின்கீழ் பூமிக்கும் மனிதகுலத்திற்குமான கடவுளுடைய ஆதி நோக்கம் நிறைவேற்றப்படும் என்று அவரும் அவருடைய சீஷர்களும் கற்பித்தனர். இந்தப் பூமி பரதீஸாக மாறியிருக்கும்; இதில் என்றும் வாழும் பரிபூரண மனிதர்கள் குடியிருப்பர். (சங்கீதம் 37:29; மத்தேயு 5:5; லூக்கா 23:43; 2 பேதுரு 3:13; வெளிப்படுத்துதல் 21:4) மேலும், இயேசுவும் அவருடைய சீஷர்களும் கடவுள் தங்களுக்கு அளித்திருந்த அதிகாரத்தினால் செய்த அற்புதங்களின்மூலம், அந்தப் புதிய உலகில் என்ன நடக்கும் என்பதை மெய்ப்பித்துக் காட்டினர்.—மத்தேயு 10:1, 8; 15:30, 31; யோவான் 11:25-44.

13. மனிதகுலத்துடன் கடவுளுடைய செயல்தொடர்புகள் சம்பந்தமாக, பொ.ச. 33 பெந்தெகொஸ்தேயன்று என்ன மாற்றம் நடந்தது?

13 இயேசுவின் உயிர்த்தெழுதலுக்குப் பின் 50 நாள்கள் கழித்து பொ.ச. 33 பெந்தெகொஸ்தே அன்று, கிறிஸ்துவைப் பின்பற்றுவோரின் சபையின்மீது கடவுளுடைய ஆவி ஊற்றப்பட்டது. அது யெகோவாவினுடைய உடன்படிக்கையின் மக்களாக இருந்த அவிசுவாச இஸ்ரவேலை மாற்றீடுசெய்தது. (மத்தேயு 21:43; 27:51; அப்போஸ்தலர் 2:1-4) அந்தச் சம்பவத்தின்போது பரிசுத்த ஆவியின் ஊற்றுதல், கடவுள் தம்முடைய நோக்கங்களைப் பற்றிய சத்தியங்களை அந்தச் சமயத்திலிருந்து இந்தப் புதிய ஏதுவழியாக வெளிப்படுத்துவார் என்பதற்குச் சான்றாக இருந்தது. (எபேசியர் 3:10) பொ.ச. முதல் நூற்றாண்டின்போது, கிறிஸ்தவச் சபையின் அமைப்பு சார்ந்த கட்டமைப்பு நிறுவப்பட்டது.—1 கொரிந்தியர் 12:27-31; எபேசியர் 4:12, 13.

14. சத்தியத்தை நாடுபவர்கள் உண்மைக் கிறிஸ்தவச் சபையை எப்படி அடையாளம் கண்டுகொள்ள முடியும்?

14 இன்று, சத்தியத்தை நாடுபவர்கள் உண்மைக் கிறிஸ்தவச் சபையைக் கடவுளின் பிரதான குணமாகிய அன்பின் மாறாத வெளிப்பாட்டின் மூலமாக அடையாளம் கண்டுகொள்ள முடியும். (1 யோவான் 4:8, 16) உண்மையில், சகோதர அன்பு உண்மையான கிறிஸ்தவத்தின் அடையாளச் சின்னமாக இருக்கிறது. இயேசு சொன்னார்: “நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்.” “நான் உங்களில் அன்பாயிருக்கிறதுபோல நீங்களும் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கவேண்டுமென்பதே என்னுடைய கற்பனையாயிருக்கிறது.” (யோவான் 13:35; 15:12) மேலும் இயேசு தமக்குச் செவிசாய்ப்போரிடம் இவ்வாறு ஞாபகப்படுத்தினார்: “நான் உங்களுக்குக் கற்பிக்கிற யாவையும் நீங்கள் செய்வீர்களானால், என் சிநேகிதராயிருப்பீர்கள்.” (யோவான் 15:14) எனவே, கடவுளுடைய உண்மை ஊழியர்கள் அன்பின் சட்டத்தை வாழ்ந்துகாட்டுபவர்கள். அவர்கள் வெறுமனே அதைக் குறித்துப் பேசமட்டும் செய்வதில்லை, ஏனென்றால் “கிரியைகளில்லாத விசுவாசமும் செத்ததாயிருக்கிறது.”—யாக்கோபு 2:26.

அறிவொளியூட்டப்படுதல்

15. எதைப்பற்றி கடவுளுடைய ஊழியர்கள் நிச்சயமாய் இருக்கலாம்?

15 காலம் செல்லச்செல்ல, உண்மைக் கிறிஸ்தவச் சபை கடவுளுடைய நோக்கங்களைக் குறித்தவகையில் அதிகமதிகமாக அறிவொளியூட்டப்படும் என்று இயேசு முன்னறிவித்தார். தம்மைப் பின்பற்றுவோரிடம் அவர் இவ்வாறு வாக்குறுதிகொடுத்தார்: ‘என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதிப்பார்.’ (யோவான் 14:26) இயேசு மேலும் சொன்னார்: “இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன்.” (மத்தேயு 28:20) இவ்வாறு கடவுள் மற்றும் அவருடைய நோக்கங்களைப் பற்றிய சத்தியம் சார்ந்த அறிவொளியூட்டப்படுதல் கடவுளுடைய ஊழியர்கள் மத்தியில் அதிகரிக்கிறது. ஆம், “நீதிமான்களுடைய பாதை நடுப்பகல்வரைக்கும் அதிகமதிகமாய்ப் பிரகாசிக்கிற சூரியப்பிரகாசம்போலிருக்கும்.”—நீதிமொழிகள் 4:18.

16. கடவுளுடைய நோக்கங்களைக் குறித்ததில் நாம் எங்கே இருக்கிறோம் என்பதைப் பற்றி நம்முடைய ஆவிக்குரிய அறிவொளியூட்டப்படுதல் என்ன சொல்கிறது?

16 இன்று, அந்த ஆவிக்குரிய வெளிச்சம் எப்போதையும்விட பிரகாசமாய் இருக்கிறது. ஏனென்றால் நாம் பைபிளின் பல தீர்க்கதரிசனங்கள் நிறைவேற்றமடைந்துவரும் காலத்தில் அல்லது நிறைவேற்றமடையப்போகும் காலத்தில் வாழ்ந்துவருகிறோம். இந்தப் பொல்லாத ஒழுங்குமுறையின் “கடைசிநாட்களில்” நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை இவை நமக்குக் காண்பிக்கின்றன. இந்தக் காலப்பகுதியே, “காரிய ஒழுங்குமுறையின் முடிவு” என்று அழைக்கப்படுகிறது, இது கடவுளுடைய புதிய உலகத்தால் பின்தொடரப்படும். (2 தீமோத்தேயு 3:1-5, 13; மத்தேயு 24:3-13, NW) தானியேலினால் முன்சொல்லப்பட்டபடி, கடவுளுடைய பரலோக ராஜ்யம் சீக்கிரத்தில் “[இப்போது இருக்கிற] ராஜ்யங்களையெல்லாம் நொறுக்கி, நிர்மூலமாக்கி, தானோ என்றென்றைக்கும் நிற்கும்.”—தானியேல் 2:44.

17, 18. என்ன மகத்தான தீர்க்கதரிசனங்கள் இப்போது நிறைவேறி வருகின்றன?

17 இப்போது நிறைவேறிவரும் தீர்க்கதரிசனங்களில் ஒன்று மத்தேயு 24-ம் அதிகாரம் 14-ம் வசனத்தில் [NW] பதிவுசெய்யப்பட்டுள்ளதாகும். அங்கே இயேசு சொன்னார்: “ராஜ்யத்தைப்பற்றிய இந்த நற்செய்தி குடியிருக்கப்பட்ட பூமியெங்கும் சகல தேசத்தாருக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும்; அப்போது முடிவு வரும்.” பூமி முழுவதும், லட்சக்கணக்கான யெகோவாவின் சாட்சிகளால் ராஜ்ய பிரசங்கவேலை செய்யப்பட்டுவருகிறது. ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கான மக்கள் அவர்களோடு சேர்ந்துவருகின்றனர். இது ஏசாயா 2:2, 3-ல் உள்ள தீர்க்கதரிசனத்தோடு ஒத்திருக்கிறது. அது, இந்தப் பொல்லாத உலகத்தின் “கடைசிநாட்களில்,” பல தேசங்களிலிருந்து மக்கள் யெகோவாவின் உண்மை வணக்கத்திற்கு வருவார்கள், ‘அவர் தமது வழிகளை அவர்களுக்குப் போதிப்பார், அவர்கள் அவர் பாதைகளில் நடப்பார்கள்,’ என்று சொல்லுகிறது.

18 இந்தப் புதியவர்கள், ஏசாயா அதிகாரம் 60, வசனம் 8-ல் முன்சொல்லப்பட்டுள்ளபடி, “மேகத்தைப் போல” யெகோவாவின் வணக்கத்தை நாடி திரள்திரளாய் வருகிறார்கள். வசனம் 22 தொடர்கிறது: “சின்னவன் ஆயிரமும், சிறியவன் பலத்த ஜாதியுமாவான்; கர்த்தராகிய நான் ஏற்றகாலத்தில் இதைத் தீவிரமாய் நடப்பிப்பேன்.” அந்தச் சமயம், இப்போதே வந்திருக்கிறது என்று சான்று காண்பிக்கிறது. மேலும் புதியவர்கள், யெகோவாவின் சாட்சிகளோடு கூட்டுறவுகொள்வதில் அந்த உண்மைக் கிறிஸ்தவச் சபையோடு தொடர்புகொள்கின்றனர் என்று நம்பிக்கையோடு இருக்கலாம்.

19. யெகோவாவின் சாட்சிகளோடு கூட்டுறவுகொள்ளும் புதியவர்கள், உண்மைக் கிறிஸ்தவச் சபைக்கு வருகிறார்கள் என்று நாம் ஏன் சொல்கிறோம்?

19 உறுதியாக நாம் இதைச் சொல்லமுடிவதேன்? ஏனென்றால் இந்தப் புதியவர்கள், யெகோவாவின் அமைப்பில் ஏற்கெனவே இருக்கிற லட்சக்கணக்கானோரோடு, தங்களுடைய வாழ்க்கையைக் கடவுளுக்கு ஒப்புக்கொடுத்து, அவருடைய சித்தத்தை செய்துகொண்டு வருகிறார்கள். தெய்வீக அன்பின் சட்டத்திற்கு இசைவாக வாழ்ந்துவருவதை இது உட்படுத்துகிறது. இதன் ஒரு சான்று காண்பிக்கிறபிரகாரம், இந்தக் கிறிஸ்தவர்கள் ‘தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடித்திருக்கிறார்கள். இனிமேலும் அவர்கள் யுத்தத்தைக் கற்றுக்கொண்டில்லை.’ (ஏசாயா 2:4) உலகமெங்குமுள்ள யெகோவாவின் சாட்சிகள் இதைச் செய்திருக்கிறார்கள். ஏனென்றால் அவர்கள் அன்பைச் செயலில் காட்டுகிறார்கள். ஒருவருக்கொருவரோ மற்றவருக்கெதிராகவோ அவர்கள் ஒருபோதும் யுத்த கருவிகளை எடுக்கமாட்டார்கள் என்பதை இது அர்த்தப்படுத்துகிறது. இதில், அவர்கள் உலக மதங்களைப் போல் இல்லாமல் விசேஷித்தவர்கள். (யோவான் 13:34, 35; 1 யோவான் 3:10-12, 15) பிரிவினை உண்டாக்கும் தேசப்பக்தியில் தங்களை ஈடுபடுத்திக்கொள்வதில்லை. ஏனென்றால் அவர்கள் “பூரண சற்குணத்தின் கட்டாகிய” அன்பினால் பிணைக்கப்பட்ட உலகளாவிய சகோதரத்துவத்தை உருவாக்குகின்றனர்.—கொலோசெயர் 3:14; மத்தேயு 23:8; 1 யோவான் 4:20, 21.

அநேகர் அறியாமல் இருக்க தெரிந்தெடுக்கின்றனர்

20, 21. மனிதகுலத்தின் பெரும்பான்மையோர் ஏன் ஆவிக்குரிய இருளில் இருக்கிறார்கள்? (2 கொரிந்தியர் 4:4; 1 யோவான் 5:19)

20 கடவுளுடைய ஊழியர்களின் மத்தியில் ஆவிக்குரிய வெளிச்சம் அதிகமாகப் பிரகாசிக்கும்போது, பூமியிலுள்ள மற்றவர்கள் ஒருபோதும் இல்லாத அதிகமான ஆவிக்குரிய இருளுக்குள் தொடர்ந்து கீழ்நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் யெகோவாவையோ அவருடைய நோக்கங்களையோ அறியாமல் இருக்கிறார்கள். கடவுளுடைய தீர்க்கதரிசி இவ்வாறு சொன்னபோது இந்தச் சமயத்தை விவரித்தார்: “இதோ, இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடும்.” (ஏசாயா 60:2) இது ஏன் அவ்வாறிருக்கிறதென்றால், மக்கள் கடவுளைப் பற்றி அறிவதற்கு ஓர் உண்மையான அக்கறையைக் காண்பிக்கிறதில்லை, அவரைச் சந்தோஷப்படுத்த முயற்சிசெய்யும் ஒரு விருப்பத்தையும் காண்பிப்பதில்லை. இயேசு சொன்னார்: “ஒளியானது உலகத்திலே வந்திருந்தும் மனுஷருடைய கிரியைகள் பொல்லாதவைகளாயிருக்கிறபடியினால் அவர்கள் ஒளியைப் பார்க்கிலும் இருளை விரும்புகிறதே அந்த ஆக்கினைத்தீர்ப்புக்குக் காரணமாயிருக்கிறது. பொல்லாங்கு செய்கிற எவனும் ஒளியைப் பகைக்கிறான், தன் கிரியைகள் கண்டிக்கப்படாதபடிக்கு, ஒளியினிடத்தில் வராதிருக்கிறான்.”—யோவான் 3:19, 20.

21 அப்படிப்பட்ட ஆட்கள் கடவுளுடைய சித்தத்தைக் கண்டறிவதில் உண்மையான அக்கறையில்லாதவர்கள். பதிலாக, அவர்கள் தங்களுடைய சொந்த சித்தத்தைச் செய்வதில் தங்களுடைய வாழ்க்கையை மையப்படுத்துகின்றனர். கடவுளுடைய சித்தத்தை அசட்டைசெய்வதன்மூலம், தங்களைத் தாங்களே ஆபத்தான நிலைமையில் வைக்கின்றனர். ஏனென்றால் அவருடைய வார்த்தை அறிவிக்கிறது: “வேதத்தைக் கேளாதபடி தன் செவியை விலக்குகிறவனுடைய ஜெபமும் அருவருப்பானது.” (நீதிமொழிகள் 28:9) தங்களுடைய தெரிந்தெடுக்கப்பட்ட போக்கின் விளைவுகளை அவர்கள் அடைந்தே தீருவார்கள். அப்போஸ்தலன் பவுல் எழுதினார்: “மோசம்போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம்பண்ணவொட்டார்; மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்.”—கலாத்தியர் 6:7.

22 எனினும், கடவுளுடைய சித்தத்தை அறிந்துகொள்ள விரும்புகிற திரளானோர் இருக்கிறார்கள். உண்மையில் அவரைத் தேடி, அவரிடமே இழுக்கப்படுகிறார்கள். “தேவனிடத்தில் சேருங்கள், அப்பொழுது அவர் உங்களிடத்தில் சேருவார்,” என்று யாக்கோபு 4:8 சொல்கிறது. அப்படிப்பட்டவர்களைப் பற்றி இயேசு சொன்னார்: “சத்தியத்தின்படி செய்கிறவனோ, தன் கிரியைகள் தேவனுக்குள்ளாய்ச் செய்யப்படுகிறதென்று வெளியாகும்படிக்கு, ஒளியினிடத்தில் வருகிறான்.” (யோவான் 3:21) ஒளியினிடத்தில் வருகிறவர்களுக்கு என்னே ஓர் அற்புதகரமான எதிர்காலத்தைக் கடவுள் நோக்கங்கொண்டிருக்கிறார்! எமது அடுத்த கட்டுரை அந்தக் கிளர்ச்சியூட்டும் எதிர்பார்ப்புகளைக் கலந்தாராயும்.

நீங்கள் எப்படிப் பதிலளிப்பீர்கள்?

◻ வாழ்க்கையின் நோக்கத்தைப் பற்றி பலர் என்ன சொல்கிறார்கள்?

◻ யெகோவா தம்மை ஒரு நோக்கமுள்ள கடவுளாக எப்படி வெளிப்படுத்துகிறார்?

◻ பொ.ச. முதல் நூற்றாண்டில் என்ன பெரிய அறிவொளியூட்டப்படுதல் நடைபெற்றது?

◻ உண்மைக் கிறிஸ்தவச் சபை இன்று எவ்வாறு அடையாளப்படுத்தப்படலாம்?

22. கடவுளை அறிய விரும்புகிற திரளானோர் இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்