“உன் ஊழியத்தை முழுமையாய் நிறைவேற்று”
“உன் சேவையை முற்றும் முழுமையாக செய்.”—2 தீமோத்தேயு 4:5, பையிங்டன் மொழிபெயர்ப்பு.
1, 2. கிறிஸ்தவர்கள் அனைவரும் சுவிசேஷகர்களாக இருந்தாலும் வேதப்பூர்வமாக மூப்பர்களிடம் என்ன எதிர்பார்க்கப்படுகிறது?
நீங்கள் ஒரு ராஜ்ய அறிவிப்பாளரா? அப்படியென்றால் இந்த அருமையான சிலாக்கியத்துக்காக யெகோவா தேவனுக்கு நன்றி செலுத்துங்கள். நீங்கள் சபையில் ஒரு மூப்பரா? அது யெகோவா கொடுத்திருக்கும் கூடுதல் சிலாக்கியமாகும். ஆனால், உலகப்பிரகாரமான கல்வியோ பேச்சுத் திறமையோ ஊழியம் செய்வதற்கு அல்லது சபையில் பொறுப்பேற்பதற்கு நம்மை தகுதியுள்ளவர்களாக ஆக்காது என்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக் கூடாது. யெகோவாவே நம்மை ஊழியத்திற்கு போதிய தகுதியுள்ளவர்களாக ஆக்குகிறார்; வேதப்பூர்வமாக எதிர்பார்க்கப்படும் குறிப்பிட்ட தேவைகளைப் பூர்த்தி செய்வதாலும் நம் மத்தியிலுள்ள ஆண்களில் சிலர் கண்காணிகளாக சேவை செய்யும் சிலாக்கியத்தைப் பெறுகிறார்கள்.—2 கொரிந்தியர் 3:5, 6; 1 தீமோத்தேயு 3:1-7.
2 ஒப்புக்கொடுத்த கிறிஸ்தவர்கள் அனைவரும் சுவிசேஷகர்களுடைய வேலையை செய்கிறார்கள், ஆனால் முக்கியமாக கண்காணிகள் அல்லது மூப்பர்கள் ஊழியத்தில் சிறந்த முன்மாதிரி வைப்பது அவசியம். ‘அறிவிப்பதிலும் கற்பிப்பதிலும் கடினமாக உழைக்கிற’ மூப்பர்களை கடவுளும், கிறிஸ்துவும், ஏன் உடன் சாட்சிகளும்கூட கவனிக்கிறார்கள். (1 தீமோத்தேயு 5:17, NW; எபேசியர் 5:23; எபிரெயர் 6:10-12) ஒரு மூப்பரின் போதனை எல்லா சமயத்திலும் மற்றவர்களுக்கு ஆவிக்குரிய ஆரோக்கியம் அளிப்பதாய் இருக்க வேண்டும்; எனவேதான் அப்போஸ்தலன் பவுல் கண்காணியான தீமோத்தேயுவிடம் பின்வருமாறு சொன்னார்: “அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்க மனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு, சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும். நீயோ எல்லாவற்றிலும் மனத்தெளிவுள்ளவனாயிரு, தீங்கநுபவி, சுவிசேஷகனுடைய வேலையைச் செய், உன் ஊழியத்தை [“முழுமையாய்,” NW] நிறைவேற்று.”—2 தீமோத்தேயு 4:3-5.
3. பொய்ப் போதகங்கள் சபையின் ஆவிக்குரிய தன்மைக்கு அச்சுறுத்தலாய் இராதபடி பார்த்துக்கொள்வதற்கு மூப்பர்கள் என்ன செய்ய வேண்டும்?
3 பொய்ப் போதகங்கள் சபையின் ஆவிக்குரிய தன்மைக்கு அச்சுறுத்தலாய் இராதபடி கவனமாய் பார்த்துக்கொள்வதற்கு ஒரு கண்காணி, பவுலின் பின்வரும் புத்திமதிக்கு இசைவாக நடக்க வேண்டும்: “எல்லாவற்றிலும் விழிப்புடன் இருந்து, . . . உன் சேவையை முற்றும் முழுமையாக செய்.” (2 தீமோத்தேயு 4:5, பையிங்டன்) ஆம், ஒரு மூப்பர் ‘தன் ஊழியத்தை முழுமையாய் நிறைவேற்ற’ வேண்டும். அதாவது, அதை அவர் முற்றும் முழுமையாக செய்து முடிக்க வேண்டும். அவ்வாறு தன் ஊழியத்தை முற்றும் முழுமையாக செய்யும் மூப்பர் தன் பொறுப்புகள் அனைத்திற்கும் சரிவர கவனம் செலுத்துகிறார், அதோடு அவற்றில் எதையுமே அவர் அசட்டை செய்வதுமில்லை, அரைகுறையாக செய்வதுமில்லை. மாறாக, சின்ன சின்ன விஷயத்திலும் உண்மையுள்ளவராக இருக்கிறார்.—லூக்கா 12:48; 16:10.
4. ஊழியத்தை முழுமையாக செய்வதற்கு எது நமக்கு உதவலாம்?
4 நம் ஊழியத்தை முழுமையாக செய்து முடிப்பதற்கு எப்போதுமே அதிக நேரம் தேவைப்படுவதில்லை; ஆனால் உள்ள நேரத்தை திறம்பட பயன்படுத்துவதே தேவைப்படுகிறது. ஊழியத்தை சரிவர செய்து முடிப்பதற்கு சமநிலையும் ஒழுங்கும் எல்லா கிறிஸ்தவர்களுக்கும் உதவும். ஒரு மூப்பர் வெளி ஊழியத்தில் அதிக நேரம் செலவிடுவதற்கு, தனிப்பட்ட விதத்தில் நல்ல ஒழுங்கமைப்பு தேவை; அவர் தன் அட்டவணையை சமநிலையுடன் பின்பற்றுவதற்கும், என்னென்ன பொறுப்புகளை யார் யாருக்கு எப்படி பிரித்துக் கொடுப்பதென அறிந்திருப்பதற்கும் இந்த தனிப்பட்ட ஒழுங்கமைப்பு உதவும். (எபிரெயர் 13:17) எருசலேமின் மதிற்சுவர்களைக் கட்டுவதில் தனிப்பட்ட விதத்தில் நெகேமியா பங்குகொண்டார்; அதே போல, மரியாதைக்குரிய ஒரு மூப்பரும்கூட தனிப்பட்ட விதத்தில் ஊழியத்திற்கு பங்களிக்கிறார். (நெகேமியா 5:16) சொல்லப்போனால் யெகோவாவின் ஊழியர்கள் அனைவருமே ராஜ்ய பிரசங்க வேலையில் தவறாமல் பங்குகொள்ள வேண்டும்.—1 கொரிந்தியர் 9:16-18.
5. ஊழியத்தை நாம் எப்படி கருத வேண்டும்?
5 ஸ்தாபிக்கப்பட்ட பரலோக ராஜ்யத்தின் அறிவிப்பாளர்களாக நமக்கு மகிழ்ச்சி தரும் எப்பேர்ப்பட்ட பொறுப்பு அளிக்கப்பட்டிருக்கிறது! முடிவு வருவதற்கு முன் பூலோகமெங்கும் நற்செய்தியைப் பிரசங்கிப்பதில் பங்குகொள்ளும் நம் சிலாக்கியத்தை உண்மையிலேயே போற்றுகிறோம். (மத்தேயு 24:14) நாம் அபூரணர்களாக இருந்தாலும் பவுலின் பின்வரும் வார்த்தைகள் நம்மை உற்சாகப்படுத்தலாம்: “இந்த மகத்துவமுள்ள வல்லமை எங்களால் உண்டாயிராமல், தேவனால் உண்டாயிருக்கிறதென்று விளங்கும்படி, இந்தப் பொக்கிஷத்தை [ஊழியத்தை] மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம்.” (2 கொரிந்தியர் 4:7) ஆம், கடவுள் ஏற்கத்தக்க விதத்தில் நம்மால் ஊழியம் செய்ய முடியும், ஆனால் அவர் கொடுக்கும் பலத்தாலும் ஞானத்தாலும் மட்டுமே அதை செய்ய முடியும்.—1 கொரிந்தியர் 1:26-31.
கடவுளுடைய மகிமையைப் பிரதிபலித்தல்
6. மாம்சப்பிரகாரமான இஸ்ரவேலருக்கும் ஆவிக்குரிய இஸ்ரவேலருக்கும் இடையே என்ன வேறுபாடு இருந்தது?
6 அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களைப் பற்றி பேசுகையில் “புது உடன்படிக்கையின் ஊழியக்காரராயிருக்கும்படி, அவரே [கடவுளே] எங்களைத் தகுதியுள்ளவர்களாக்கினார்” என பவுல் சொல்கிறார். இயேசு கிறிஸ்துவின் மூலம் ஆவிக்குரிய இஸ்ரவேலருடன் செய்யப்பட்ட புதிய உடன்படிக்கைக்கும், மோசேயின் மூலம் மாம்சப்பிரகாரமான இஸ்ரவேலருடன் செய்யப்பட்ட பழைய நியாயப்பிரமாண உடன்படிக்கைக்கும் உள்ள வேறுபாட்டை அப்போஸ்தலன் பவுல் சுட்டிக்காட்டுகிறார். பத்து கட்டளைகள் எழுதப்பட்ட கற்பலகைகளை எடுத்துக்கொண்டு சீனாய் மலையிலிருந்து மோசே இறங்கி வருகையில் அவருடைய முகம் அதிக பிரகாசமாக இருந்ததால் இஸ்ரவேலர் அவரை உற்றுப் பார்க்க முடியவில்லை எனவும் பவுல் குறிப்பிடுகிறார். எனினும் காலப்போக்கில், அவர்களுடைய இருதயத்தை முக்காடு மூடியதால் மிக முக்கியமான ஒன்று நிகழ்ந்தது; அதாவது, ‘அவர்களுடைய மனம் கடினப்பட்டு’ போனது. ஆனால், யெகோவாவுக்கு முழு இருதயத்துடன் பக்தியை செலுத்தியபோதோ அந்த முக்காடு நீக்கப்பட்டது. புதிய உடன்படிக்கைக்கு உட்பட்டவர்களுக்குக் கொடுக்கப்பட்ட ஊழியத்தைப் பற்றி அடுத்து குறிப்பிடுகையில் பவுல் இவ்வாறு சொல்கிறார்: “நாம் அனைவரும் முக்காடு இல்லா முகத்தினராய் ஆண்டவரின் [யெகோவாவின்] மாட்சியைப் பிரதிபலிக்கிறோம்.” (2 கொரிந்தியர் 3:6-8, 14-18; பொது மொழிபெயர்ப்பு; யாத்திராகமம் 34:29-35) இன்று இயேசுவின் ‘வேறே ஆடுகளை’ சேர்ந்தோரும் யெகோவாவின் மகிமையைப் பிரதிபலிக்கும் சிலாக்கியம் பெற்றிருக்கிறார்கள்.—யோவான் 10:16.
7. கடவுளுடைய மகிமையை மனிதர்கள் எப்படி பிரதிபலிக்க முடியும்?
7 பாவமுள்ள மனிதர் எவருமே கடவுளுடைய முகத்தைக் கண்டு உயிர் வாழ முடியாதபோது அவருடைய மகிமையை அவர்களால் எப்படி பிரதிபலிக்க முடியும்? (யாத்திராகமம் 33:20) யெகோவா மகிமை பொருந்தியவராக இருக்கிறார் என்பதோடுகூட, தம் ராஜ்யத்தின் மூலம் தம்முடைய சர்வலோக பேரரசுரிமையை நியாயநிரூபணம் செய்யும் மகிமையான நோக்கமும் அவருக்கு இருப்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். பொ.ச. 33, பெந்தெகொஸ்தே நாளன்று பரிசுத்த ஆவியைப் பெற்றவர்கள் அறிவிக்க தொடங்கிய ‘தேவனுடைய மகத்துவங்களில்’ ராஜ்யத்தைப் பற்றிய சத்தியங்களும் அடங்கியிருந்தன. (அப்போஸ்தலர் 2:11) ஆவியின் வழிநடத்துதலால் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட ஊழியத்தை அவர்களால் முழுமையாக செய்து முடிக்க முடிந்தது.—அப்போஸ்தலர் 1:8.
8. ஊழியத்தைக் குறித்ததில் என்ன செய்ய பவுல் திடத்தீர்மானமாய் இருந்தார்?
8 தன்னுடைய ஊழியத்தை முழுமையாக செய்து முடிப்பதற்கு எதுவும் தடையாக இருக்கக்கூடாது என்பதில் பவுல் திடத்தீர்மானமாய் இருந்தார். எனவே இவ்வாறு எழுதினார்: “இப்படிப்பட்ட ஊழியத்தை உடையவர்களாகிய நாங்கள் இரக்கம் பெற்றிருப்பதால் சோர்ந்துபோகிறதில்லை. வெட்கமான அந்தரங்க காரியங்களை நாங்கள் வெறுத்து, தந்திரமாய் நடவாமலும், தேவ வசனத்தைப் புரட்டாமலும், சத்தியத்தை வெளிப்படுத்துகிறதினாலே தேவனுக்கு முன்பாக எல்லா மனுஷருடைய மனச்சாட்சிக்கும் எங்களை உத்தமரென்று விளங்கப் பண்ணுகிறோம்.” (2 கொரிந்தியர் 4:1, 2) பவுல் குறிப்பிடும் ‘இப்படிப்பட்ட ஊழியத்தால்’ சத்தியம் யாவருக்கும் தெரிய வருகிறது, ஆவிக்குரிய வெளிச்சமும் பரவுகிறது.
9, 10. யெகோவாவின் மகிமையைப் பிரதிபலிப்பது எப்படி சாத்தியமாகிறது?
9 சொல்லர்த்தமான வெளிச்சத்திற்கும் ஆவிக்குரிய வெளிச்சத்திற்கும் ஊற்றுமூலராய் இருப்பவரைக் குறித்து பவுல் இவ்வாறு எழுதினார்: “இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரகாசிக்கச் சொன்ன தேவன் இயேசு கிறிஸ்துவின் முகத்திலுள்ள தமது மகிமையின் அறிவாகிய ஒளியைத் தோன்றப் பண்ணும் பொருட்டாக, எங்கள் இருதயங்களிலே பிரகாசித்தார்.” (2 கொரிந்தியர் 4:6; ஆதியாகமம் 1:2-5) கடவுளுடைய ஊழியர்களாக இருக்கும் ஈடிணையற்ற சிலாக்கியத்தை நாம் பெற்றிருப்பதால் யெகோவாவின் மகிமையைப் பிரதிபலிக்கும் கண்ணாடி போல் இருப்பதற்கு நம்மை எப்போதும் சுத்தமுள்ளவர்களாக வைத்துக் கொள்வோமாக.
10 ஆவிக்குரிய இருளில் இருக்கும் ஆட்கள் யெகோவாவின் மகிமையை அல்லது பெரிய மோசேயாகிய இயேசு கிறிஸ்து பிரதிபலிக்கும் அந்த மகிமையை பார்க்க முடியாது. ஆனால் யெகோவாவின் ஊழியர்களாக நாம் வேதவசனங்களிலிருந்து வரும் மகிமையான வெளிச்சத்தைப் பெற்று அதை மற்றவர்களுக்கு பிரகாசிக்க செய்கிறோம். இப்போது ஆவிக்குரிய இருளில் இருப்பவர்கள் அழிவிலிருந்து தப்பிப்பிழைக்க வேண்டுமென்றால் அவர்களுக்குக் கடவுளிடமிருந்து வரும் வெளிச்சம் தேவை. எனவே யெகோவாவுக்கு மகிமை உண்டாகும் விதத்தில் இருளிலே வெளிச்சத்தைப் பிரகாசிக்கும்படி சொல்லப்பட்ட தெய்வீக கட்டளைக்கு அதிக சந்தோஷத்தோடும் வைராக்கியத்தோடும் நாம் கீழ்ப்படிகிறோம்.
பைபிள் படிப்புகள் நடத்துகையில் உங்கள் வெளிச்சம் பிரகாசிக்கட்டும்
11. நம் வெளிச்சத்தைப் பிரகாசிக்க செய்வதைக் குறித்ததில் இயேசு என்ன சொன்னார், நம் ஊழியத்தில் இதை செய்வதற்கான வழிகளில் ஒன்று எது?
11 தம்மைப் பின்பற்றுகிறவர்களிடம் இயேசு இவ்வாறு சொன்னார்: “நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்; மலையின்மேல் இருக்கிற பட்டணம் மறைந்திருக்க மாட்டாது. விளக்கைக் கொளுத்தி மரக்காலால் மூடிவைக்காமல், விளக்குத் தண்டின்மேல் வைப்பார்கள்; அப்பொழுது அது வீட்டிலுள்ள யாவருக்கும் வெளிச்சம் கொடுக்கும். இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.” (மத்தேயு 5:14-16) நம் சிறந்த நடத்தை தேவனை மகிமைப்படுத்துவதற்கு மற்றவர்களைத் தூண்டலாம். (1 பேதுரு 2:12) நம் சுவிசேஷ வேலையின் பல்வேறு அம்சங்கள் நம் வெளிச்சத்தைப் பிரகாசிக்க செய்வதற்கு அநேக வாய்ப்புகளை அளிக்கின்றன. பலன் தரும் பைபிள் படிப்புகளை நடத்துவதன் மூலம் கடவுளுடைய வார்த்தையிலுள்ள ஆவிக்குரிய வெளிச்சத்தைப் பிரதிபலிக்க செய்வது நம்முடைய முக்கிய குறிக்கோள்களில் ஒன்று. நம் ஊழியத்தை முழுமையாக செய்து முடிப்பதற்கு இது மிக முக்கியமான ஒரு வழியாகும். சத்தியத்தைத் தேடுகிறவர்களின் இருதயத்தை எட்டும் விதத்தில் பைபிள் படிப்புகளை நடத்துவதற்கு என்ன ஆலோசனைகள் நமக்கு உதவலாம்?
12. பைபிள் படிப்புகள் நடத்துவதுடன் ஜெபம் எப்படி சம்பந்தப்பட்டுள்ளது?
12 பைபிள் படிப்புகள் நடத்துவதைக் குறித்து யெகோவாவிடம் ஜெபிப்பது, அதற்கான ஆர்வம் நமக்கிருப்பதைக் காட்டுகிறது. கடவுளைப் பற்றிய அறிவை மற்றவர்கள் பெறுவதற்கு உதவுவதன் முக்கியத்துவத்தை நாம் புரிந்துகொண்டிருக்கிறோம் என்பதையும் அது காட்டுகிறது. (எசேக்கியேல் 33:7-9) யெகோவா நிச்சயம் நம் ஜெபங்களுக்கு பதிலளித்து, ஊழியத்தில் நாம் எடுக்கும் ஊக்கமான முயற்சிகளை ஆசீர்வதிப்பார். (1 யோவான் 5:14, 15) ஆனால், பைபிள் படிப்பு நடத்துவதற்கு யாரேனும் ஒருவரைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே நாம் ஜெபிக்கக்கூடாது. படிப்பை ஆரம்பித்த பின்பு, அந்த பைபிள் மாணாக்கருக்கு குறிப்பாக தேவைப்படுகிறவற்றைக் குறித்து ஜெபிப்பதும் தியானிப்பதும் அவசியம்; இது ஒவ்வொரு முறை நாம் படிப்பு நடத்துகிறபோதும் சிறந்த விதத்தில் அதை நடத்துவதற்கு உதவி செய்யும்.—ரோமர் 12:12.
13. பலன் தரும் பைபிள் படிப்புகளை நடத்துவதற்கு எது நமக்கு உதவலாம்?
13 பலன் தரும் பைபிள் படிப்புகள் நடத்துவதற்கு ஒவ்வொரு முறையும் நன்கு தயாரிக்க வேண்டும். நமக்குப் போதிய தகுதி இல்லையென உணர்ந்தால், சபை புத்தகப் படிப்பு கண்காணி ஒவ்வொரு வார பகுதியையும் எப்படி நடத்துகிறார் என்பதை கவனிப்பது அதிக உதவியாக இருக்கும். முடிந்தால் பைபிள் படிப்புகளை நடத்துவதில் நல்ல பலன்களைக் காணும் ராஜ்ய பிரஸ்தாபிகளுடன்கூட நாம் அவ்வப்போது போகலாம். இயேசு கிறிஸ்துவின் மனப்பான்மையையும் போதிக்கும் முறைகளையும் நாம் முக்கியமாய் கவனிப்பது தகுந்ததாக இருக்கும்.
14. நாம் எப்படி ஒரு பைபிள் மாணாக்கரின் இருதயத்தை எட்ட முடியும்?
14 இயேசு தம் பரலோக தகப்பனின் சித்தத்தை செய்வதிலும் அவரைப் பற்றி மற்றவர்களிடம் பேசுவதிலும் அதிக மகிழ்ச்சி கண்டார். (சங்கீதம் 40:8) அவர் சாந்த குணமுள்ளவராக இருந்தார், அவருக்குச் செவிகொடுத்து கேட்டவர்களின் இருதயத்தை எட்டுவதில் வெற்றி கண்டார். (மத்தேயு 11:28-30) எனவே நாமும் நம் பைபிள் மாணாக்கர்களின் இருதயத்தை எட்டுவதற்கு முயற்சி செய்வோமாக. அதற்கு நாம், ஒவ்வொரு முறை படிப்பு நடத்துகையிலும் மாணாக்கரின் தனிப்பட்ட சூழ்நிலைகளை மனதில் வைத்து தயாரித்து செல்வது அவசியம். உதாரணத்திற்கு, பைபிளைப் பற்றி எதுவும் தெரியாத சூழலில் வளர்ந்தவராக அவர் இருந்தால், பைபிள் உண்மையானது என்பதை ஆதாரங்காட்டி நம்ப வைப்பது அவசியமாக இருக்கலாம். அப்போது அநேக வசனங்களை வாசித்து அவற்றை விளக்குவது உண்மையிலேயே தேவைப்படலாம்.
உதாரணங்களைப் புரிந்துகொள்ள மாணாக்கர்களுக்கு உதவுங்கள்
15, 16. (அ) பைபிளிலுள்ள உதாரணத்தைப் புரிந்துகொள்ள முடியாத ஒரு மாணாக்கருக்கு நாம் எப்படி உதவலாம்? (ஆ) நம் பிரசுரத்திலுள்ள உதாரணத்தை பைபிள் மாணாக்கர் ஒருவர் புரிந்துகொள்ள கஷ்டப்பட்டால் நாம் என்ன செய்யலாம்?
15 வேதாகமத்திலுள்ள ஓர் உவமை பைபிள் மாணாக்கருக்கு பழக்கமில்லாத ஒன்றாக இருக்கலாம். எடுத்துக்காட்டாக, விளக்குத் தண்டின்மேல் விளக்கை வைப்பதைக் குறித்து இயேசு சொன்னபோது அவர் எதை அர்த்தப்படுத்தினார் என்பதை அந்த மாணாக்கர் புரிந்துகொள்ளாதிருக்கலாம். (மாற்கு 4:21, 22) திரியில் எரியும் பழங்கால எண்ணெய் விளக்கை இயேசு குறிப்பிட்டார். அத்தகைய விளக்கு பிரத்தியேக விளக்குத் தண்டின்மேல் வைக்கப்பட்டது, இந்த விதத்தில் வீட்டின் ஒரு பகுதி முழுவதற்கும் அது வெளிச்சம் தந்தது. வேதாகமத்தின்பேரில் உட்பார்வை (ஆங்கிலம்) போன்ற பிரசுரங்களில் “விளக்கு,” “விளக்குத் தண்டு” ஆகிய தலைப்புகளில் ஆராய்வது இயேசுவின் உவமையை தெளிவாக விளக்க அவசியமாக இருக்கலாம்.a எனவே மாணாக்கர் புரிந்துகொண்டு போற்றுகிற விதத்தில் விளக்கத்தைத் தயாரித்து வந்து படிப்பு நடத்துவது எவ்வளவு மனநிறைவளிப்பதாக இருக்கும்!
16 பைபிள் படிப்புக்கு உதவும் பிரசுரங்களில் ஓர் உதாரணம் கொடுக்கப்பட்டிருக்கலாம், அதைப் புரிந்துகொள்வது ஒரு மாணாக்கருக்குக் கடினமாக இருக்கலாம். எனவே, அதை விளக்குவதற்கு நேரத்தை எடுத்துக்கொள்ளுங்கள், அல்லது அதே குறிப்பை வலியுறுத்தும் வேறொரு உதாரணத்தைப் பயன்படுத்துங்கள். சிறந்த மணவாழ்க்கைக்கு நல்ல துணையும் ஒருங்கிணைந்த முயற்சியும் முக்கியமென்று ஒரு பிரசுரத்தில் வலியுறுத்தப்பட்டிருக்கலாம். இதற்கு உதாரணமாக, உயரே அந்தரத்தில் உள்ள ஊஞ்சலில் தொங்கும் ஒரு சாகச கலைஞர், அடுத்த ஊஞ்சலிலுள்ள சக கலைஞர் தன்னைப் பிடித்துக் கொள்ளும்படி லாவகமாய் தாவுவது அதில் விளக்கப்பட்டிருக்கலாம். அதே குறிப்பை விளக்குவதற்கு வேறொரு உதாரணத்தை பயன்படுத்தலாம், அதாவது படகிலிருந்து பெட்டிகளை இறக்குகையில் அடுத்தடுத்த வேலையாட்களின் கைகளில் அவற்றை கொடுக்கும்போது அவர்களிடையே காணப்படும் ஒருங்கிணைப்பைப் பற்றி சொல்லலாம்.
17. உதாரணங்களைக் குறித்ததில் இயேசுவிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
17 பிரசுரத்தில் இல்லாத வேறொரு உதாரணத்தைப் பயன்படுத்துவதற்கு முன்கூட்டியே தயாரிப்பது அவசியம். பைபிள் மாணாக்கரிடம் நம் தனிப்பட்ட அக்கறையைக் காட்டுவதற்கு அது ஒரு வழியாகும். கடினமான விஷயங்களை விளக்குவதற்கு இயேசு எளிய உதாரணங்களைப் பயன்படுத்தினார். இதற்கான உதாரணங்கள் அவருடைய மலைப்பிரசங்கத்தில் காணப்படுகின்றன, அவருடைய போதனை அவருக்குச் செவிசாய்த்தவர்களின் இதயத்தை எட்டி அவர்களை செயல்பட வைத்ததாக பைபிள் காட்டுகிறது. (மத்தேயு 5:1–7:29) இயேசுவுக்கு மற்றவர்கள் மீது ஆழ்ந்த அக்கறை இருந்ததால் அவர்களுக்கு பொறுமையுடன் காரியங்களை விளக்கினார்.—மத்தேயு 16:5-12.
18. நம் பிரசுரங்களில் மேற்கோள் காட்டப்படாமல் வேதவசன எண்கள் மட்டும் கொடுக்கப்பட்டிருந்தால் என்ன செய்யும்படி பரிந்துரைக்கப்படுகிறது?
18 மற்றவர்கள் மீது நமக்கு அக்கறை இருக்கும்போது, “வேதவாக்கியங்களின் நியாயங்களை எடுத்து” பேசும்படி நாம் தூண்டப்படுவோம். (அப்போஸ்தலர் 17:2, 3) இது ஜெபசிந்தையுடன் படிப்பதையும், ‘உண்மையுள்ள விசாரணைக்காரன்’ மூலம் கிடைக்கும் பிரசுரங்களை சிறந்த விதத்தில் பயன்படுத்துவதையும் தேவைப்படுத்துகிறது. (லூக்கா 12:42-44) உதாரணமாக, நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு என்ற புத்தகம் அநேக வேதவசனங்களை மேற்கோள் காட்டுகிறது.b போதுமான இடமில்லாததால் வேதவசன எண்கள் மட்டுமே சில இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இப்படி வெறுமனே குறிப்பிடப்பட்டிருக்கும் வேதவசனங்களில் சிலவற்றையாவது பைபிள் படிப்பு நடத்தும்போது வாசித்து விளக்குவது அவசியம். ஏனெனில், நாம் கடவுளுடைய வார்த்தையின் அடிப்படையிலேயே போதிக்கிறோம், அதற்கு மிகுந்த வல்லமையும் இருக்கிறது. (எபிரெயர் 4:12) படிப்பு முழுவதிலும் பைபிளை அடிக்கடி பயன்படுத்துங்கள்; பாராக்களில் உள்ள வேதவசனங்களை அடிக்கடி திறந்து வாசியுங்கள். ஒரு குறிப்பிட்ட பொருளைப் பற்றி அல்லது பின்பற்ற வேண்டிய போக்கைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்பதை மாணாக்கர் புரிந்துகொள்வதற்கு உதவுங்கள். கடவுளுக்குக் கீழ்ப்படிவதன் மூலம் அவர் எப்படி பயனடையலாம் என்பதையும் அவருக்குக் காட்ட முயலுங்கள்.—ஏசாயா 48:17, 18.
சிந்தனையைத் தூண்டும் கேள்விகளைக் கேளுங்கள்
19, 20. (அ) பைபிள் படிப்பு நடத்துகையில் நோக்குநிலைக் கேள்விகளை ஏன் பயன்படுத்த வேண்டும்? (ஆ) ஒரு குறிப்பிட்ட விஷயத்தைக் குறித்து அதிகம் கலந்தாலோசிக்க வேண்டியிருந்தால் என்ன செய்யலாம்?
19 இயேசு திறம்பட்ட விதத்தில் கேள்விகளைப் பயன்படுத்தியது ஜனங்களை சிந்திக்க வைத்தது. (மத்தேயு 17:24-27) பைபிள் மாணாக்கரை தர்மசங்கடப்பட வைக்காத நோக்குநிலைக் கேள்விகளைக் கேட்கையில் ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் அவருடைய மனநிலை என்ன என்பதை அவருடைய பதில் வெளிப்படுத்தலாம். வேதப்பூர்வமற்ற கருத்துக்களை இன்னும் அவர் நம்புவது நமக்கு தெரிய வரலாம். உதாரணமாக, அவருக்கு திரித்துவத்தில் விசுவாசம் இருக்கலாம். அறிவு புத்தகத்தில் 3-ம் அதிகாரம், “திரித்துவம்” என்ற வார்த்தை பைபிளில் காணப்படுவதில்லை என குறிப்பிடுகிறது. யெகோவாவும் இயேசுவும் தனித்தனி நபர்கள், பரிசுத்த ஆவி கடவுளுடைய செயல் நடப்பிக்கும் சக்தி, அது ஓர் ஆளல்ல என்பதற்கெல்லாம் அந்தப் புத்தகத்தில் வேதவசன மேற்கோள்களும் வேதவசன எண்களும் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த வசனங்களை வாசித்து கலந்தாலோசிப்பதே போதுமானதாக இருக்கலாம். ஆனால் கூடுதல் விளக்கம் தேவைப்பட்டால் என்ன செய்வது? ஒருவேளை அடுத்த முறை படிப்பு நடத்திய பிறகு, நீங்கள் திரித்துவத்தை நம்பவேண்டுமா? சிற்றேடு போன்ற யெகோவாவின் சாட்சிகளுடைய வேறொரு பிரசுரத்திலிருந்து பயனுள்ள விதத்தில் சிறிது நேரம் கலந்தாலோசிக்கலாம். மறுவாரம் வழக்கம்போல் அறிவு புத்தகத்திலிருந்து நாம் படிப்பைத் தொடரலாம்.
20 ஒருவேளை நோக்குநிலை கேள்விக்கான மாணாக்கரின் பதில் நமக்கு ஆச்சரியத்தையோ ஏமாற்றத்தையோ அளிப்பதாக இருக்கலாம். உதாரணமாக, புகைபிடித்தல் அல்லது அது போன்ற தர்மசங்கடமான விஷயத்தை விளக்க வேண்டியிருந்தால், படிப்பை முடித்துவிட்டு பின்னர் அதைக் குறித்து பேசுவதாக சொல்லலாம். மாணாக்கர் இன்னும் புகைபிடிக்கிறார் என்பது தெரிகையில், அவர் ஆவிக்குரிய முன்னேற்றம் செய்வதற்கு உதவும் தகவல்களை கண்டுபிடித்து கொடுக்க முடியும். மாணாக்கரின் இருதயத்தை நாம் சென்றெட்ட முயலுகையில் அவர் ஆவிக்குரிய விதமாக வளர உதவும்படி நாம் யெகோவாவிடம் ஜெபிக்கலாம்.
21. பைபிள் மாணாக்கரின் பிரத்தியேக தேவைக்கேற்ப போதிக்கும் முறைகளை மாற்றியமைத்துக் கொண்டால் என்ன நடக்கும்?
21 நல்ல தயாரிப்போடும், யெகோவாவின் உதவியோடும் பைபிள் மாணாக்கரின் பிரத்தியேக தேவைகளுக்கேற்ப நம்மால் போதிக்க முடியும் என்பதில் சந்தேகமில்லை. காலம் செல்லச் செல்ல, கடவுளிடம் ஆழ்ந்த அன்பை அவர் வளர்த்துக்கொள்ள நம்மால் உதவ முடியும். யெகோவாவின் அமைப்பிடம் மரியாதையையும் போற்றுதலையும் அவர் மனதில் வளர்ப்பதிலும் நாம் வெற்றி காணலாம். “தேவன் மெய்யாய் உங்களுக்குள்ளே இருக்கிறாரென்று” பைபிள் மாணாக்கர்கள் ஒப்புக்கொள்ளுகையில் எவ்வளவு ஆனந்தமாக இருக்கும்! (1 கொரிந்தியர் 14:24, 25) எனவே பலன் தரும் பைபிள் படிப்புகளை நடத்தி, மற்றவர்கள் இயேசுவின் சீஷர்களாக ஆவதற்கு நம்மாலான அனைத்து உதவியையும் செய்வோமாக.
போற்ற வேண்டிய பொக்கிஷம்
22, 23. நம் ஊழியத்தை முழுமையாக செய்து முடிப்பதற்கு நமக்கு என்ன தேவை?
22 நம் ஊழியத்தை முழுமையாக செய்து முடிப்பதற்கு கடவுள் கொடுக்கும் பலத்தில் நாம் சார்ந்திருக்க வேண்டும். ஊழியத்தைக் குறித்து அபிஷேகம் செய்யப்பட்ட சக கிறிஸ்தவர்களுக்கு பவுல் இவ்வாறு எழுதினார்: “இந்த மகத்துவமுள்ள வல்லமை எங்களால் உண்டாயிராமல், தேவனால் உண்டாயிருக்கிறதென்று விளங்கும்படி, இந்தப் பொக்கிஷத்தை மண்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம்.”—2 கொரிந்தியர் 4:7.
23 அபிஷேகம் செய்யப்பட்டவர்களாக இருந்தாலும்சரி, ‘வேறே ஆடுகளை’ சேர்ந்தவர்களாக இருந்தாலும்சரி நாம் எளிதில் உடைந்துவிடும் மண்பாண்டம் போலிருக்கிறோம். (யோவான் 10:16) என்றாலும், நமக்கு எதிராக எழும்பும் அழுத்தங்களின் மத்தியிலும் நம் பொறுப்புகளை நிறைவேற்றுவதற்குத் தேவையான பலத்தை யெகோவா நமக்குக் கொடுப்பார். (யோவான் 16:13; பிலிப்பியர் 4:13, NW) எனவே யெகோவா மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்து, நம் ஊழிய சிலாக்கியத்தை பொக்கிஷமாய் போற்றி, நம் ஊழியத்தை முழுமையாக செய்து முடிப்போமாக.
[அடிக்குறிப்புகள்]
a யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.
b யெகோவாவின் சாட்சிகளால் பிரசுரிக்கப்பட்டது.
நீங்கள் எப்படி பதிலளிப்பீர்கள்?
• தங்கள் ஊழியத்தை முழுமையாக செய்து முடிப்பதற்கு மூப்பர்கள் என்ன செய்யலாம்?
• பலன் தரும் விதத்தில் பைபிள் படிப்புகள் நடத்துவதற்கு நம் திறமையை எப்படி முன்னேற்றுவிக்கலாம்?
• பைபிள் மாணாக்கர் ஓர் உதாரணத்தைப் புரிந்துகொள்ளாதபோது அல்லது ஒரு குறிப்பிட்ட விஷயத்தின் பேரில் கூடுதல் தகவல் அவருக்குத் தேவைப்படும்போது நீங்கள் என்ன செய்வீர்கள்?
[பக்கம் 16-ன் படம்]
சபையில் கிறிஸ்தவ மூப்பர்கள் போதிக்கிறார்கள், ஊழியத்தில் சக விசுவாசிகளுக்கு பயிற்சியளிப்பதில் உதவுகிறார்கள்
[பக்கம் 18-ன் படம்]
பலன் தரும் பைபிள் படிப்புகளை நடத்துவது நம் வெளிச்சத்தைப் பிரகாசிக்க செய்வதற்கு ஒரு வழியாகும்