கடவுள்–கொடுக்கும் பெலத்தின் மீது சார்ந்திருங்கள்
இரண்டாம் தீமோத்தேயுவிலிருந்து முக்கிய குறிப்புகள்
யெகோவா சோதனைகளையும் துன்புறுத்தல்களையும் சகித்துக் கொள்ளத் தம்முடைய ஊழியர்களுக்கு சக்தியளிக்கிறார். தீமோத்தேயுவுக்கும் மற்ற கிறிஸ்தவர்களுக்கும் கடவுள் கொடுத்த பெலம் எவ்வளவாய்த் தேவைப்பட்டது! பொ.ச. 64-ல் பெருந் தீ ஒன்று ரோம் நகரைச் சூறையாடியது. பேரரசன் நீரோ இதற்குப் பொறுப்பாக இருந்தான் என்ற வதந்தி பரவியது. தன்னைத் தற்காத்துக் கொள்வதற்கு அவன் கிறிஸ்தவர்களைக் குற்றஞ்சாட்டினான், இது வெளிப்படையாகவே துன்புறுத்தலின் அலையைத் தூண்டிவிட்டது. அந்தச் சமயத்தில் (சுமார் 65-ல்) அப்போஸ்தலனாகிய பவுல் ரோமில் மீண்டும் சிறைப்படுத்தப்பட்டான். மரணத்தை எதிர்ப்படுகிறவனாக இருந்தபோதிலும், அவன் தீமோத்தேயுவுக்குத் தன் இரண்டாவது கடிதத்தை எழுதினான்.
பவுலின் கடிதம், விசுவாச துரோகிகளை எதிர்க்கவும் துன்புறுத்தலின் மத்தியில் உறுதியாக நிற்கவும் தீமோத்தேயுவை தயார் செய்தது. தொடர்ந்து ஆவிக்குரிய வகையில் முன்னேறிக்கொண்டிருக்கவும், அது அவனை ஊக்குவித்து சிறையில் பவுலினுடைய விருத்தசேதனத்தைப் பற்றி தெரிவித்தது. கடவுளால் கொடுக்கப்படும் பெலத்தின் மீது சார்ந்திருக்கவும்கூட கடிதம் வாசகர்களுக்கு உதவி செய்கிறது.
தீங்கநுபவித்து சாந்தமாய் உபதேசம்பண்ணு
நற்செய்தியின் அறிவிப்பாளர்களாக, துன்புறுத்தலை சகித்துக்கொள்ள கடவுள் பெலத்தை அளிக்கிறார். (1:1–18) பவுல் தீமோத்தேயுவை தன்னுடைய ஜெபங்களில் ஒருபோதும் மறக்கவில்லை, அவனுடைய மாய்மாலமற்ற விசுவாசத்தை அவன் நினைவுகூர்ந்தான். கடவுள் தீமோத்தேயுவுக்கு ‘பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருந்தார்.’ ஆகவே சாட்சிக் கொடுப்பதைக் குறித்தும் நற்செய்திக்காக தீங்கநுபவிப்பதைக் குறித்தும் அவன் வெட்கப்படாதிருக்கக்கூடும். பவுலிடமிருந்து அவன் கேட்டிருந்த “ஆரோக்கியமான வசனங்களின் சட்டத்தைக் கைக்கொண்டிருக்கவும்”கூட அவன் துரிதப்படுத்தப்பட்டான். அதேவிதமாகவே மற்றவர்கள் அதிலிருந்து விலகிச் சென்றுவிட்டாலும் நாம் மெய்யான கிறிஸ்தவ சத்தியத்தை உறுதியாகப் பற்றிக்கொண்டிருக்க வேண்டும்.
பவுல் கற்பித்தக் காரியங்கள், மற்றவர்களுக்கு கற்பிக்கப்படும்படி, அவை உண்மையுள்ள மனிதர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டியதாயிருந்தது. (2:1–26) கிறிஸ்துவுக்குச் சிறந்த போர்ச்சேவகனாயும், தீங்கநுபவிக்கும்போது உண்மையுள்ளவனாக இருக்கும்படியாகவும் தீமோத்தேயு துரிதப்படுத்தப்பட்டான். பவுல்தானேயும் நற்செய்தியை பிரசங்கித்ததற்காக சிறை கட்டுகளை அனுபவித்தான். கடவுளின் அங்கீகரிக்கப்பட்ட ஊழியக்காரனாக தன்னை அளிப்பதற்கு தன்னாலானதைச் செய்யும்படியாக, பரிசுத்தமானதைக் கெடுக்கும் வீண்பேச்சுகளைவிட்டு விலகியிருக்கும்படியாகவும் தீமோத்தேயுவை அவன் உற்சாகப்படுத்தினான். கர்த்தருடைய ஊழியக்காரன் மற்றவர்களுக்குச் சாந்தமாய் உபதேசம் பண்ணவேண்டும் என்று அவன் சொல்லப்பட்டான்.
வசனத்தைப் பிரசங்கி!
கடைசிநாட்களை எதிர்ப்பட்டு, வேதாகம சத்தியத்தைப் பற்றிக்கொண்டிருக்க கடவுள் கொடுக்கும் பெலன் தேவையாக இருக்கும். (3:1–17) தேவபக்தியற்றவர்கள் மத்தியிலிருந்து ‘எப்போதும் கற்றாலும் ஒருபோதும் சத்தியத்தை அறிந்து உணராத’ ஆட்கள் எழும்புவார்கள். இப்படிப்பட்ட ‘பொல்லாதவர்களும் எத்தர்களுமானவர்கள் மோசம்போக்குகிறவர்களாகவும் மோசம் போகிறவர்களாகவுமிருந்து மேன்மேலும் கேடுள்ளவர்களாவார்கள்.’ என்றபோதிலும், தீமோத்தேயு ‘கற்று நிச்சயித்துக் கொண்டவைகளில் நிலைத்திருக்க’ வேண்டியவனாக இருந்தான். ‘வேதவாக்கியங்கள் தேவ ஆவியினால் அருளப்பட்டு, அது தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவை உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருப்பதை’ அறிந்தவர்களாய், நாமும் அவ்விதமாகவே இருக்கவேண்டும்.
தீமோத்தேயு விசுவாச துரோகிகளை எதிர்த்து தன் ஊழியத்தை நிறைவேற்ற வேண்டியவனாக இருந்தான். (4:1–22) ‘வசனத்தைப் பிரசங்கித்து’ அதைப் பற்றிக்கொண்டிருப்பதன் மூலம் அவன் அவ்விதமாகச் செய்யக்கூடும். இது அத்தியாவசியமாக இருந்தது, ஏனென்றால் சிலர் பொய்யான கோட்பாடுகளைப் போதித்துக் கொண்டிருந்ததன் காரணமாக சபை “தொந்தரவான ஒரு சமயத்தை” எதிர்ப்பட்டது. யெகோவாவின் சாட்சிகளும்கூட இப்பொழுது கடவுளுடைய வார்த்தையைப் பற்றிக்கொண்டு, சபையிலும் வெளியிலுமுள்ள ஆட்களுக்கும் சாதகமில்லாத நிலைமைகளிலும்கூட அவசரமாக அதைப் பிரசங்கித்து வருகிறார்கள். ஒரு சிலரால் அவன் கைவிடப்பட்ட போதிலும் பவுல் “விசுவாசத்தைக் காத்துக்” கொண்டான். ஆனால், ‘அவனாலே பிரசங்கம் முழுமையாக நிறைவேறுகிறதற்காக கர்த்தர் அவனைப் பலப்படுத்தினார்.’ நாமும்கூட கடவுள் கொடுக்கும் பெலத்தின் மீது சார்ந்திருந்து நற்செய்தியை பிரசங்கித்துக் கொண்டிருப்போமாக. (w91 1/15)
[பக்கம் 28-ன் பெட்டி/படம்]
நல்ல போர்ச்சேவகன்: பவுல் தீமோத்தேயுவை இவ்விதமாக துரிதப்படுத்தினான்: “இயேசு கிறிஸ்துவுக்கு நல்ல போர்ச்சேவகனாய்த் தீங்கநுபவி. தண்டில் சேவகம் பண்ணுகிற எவனும், தன்னைச் சேவகமெழுதிக் கொண்டவனுக்கு ஏற்றவனாயிருக்கும்படி, பிழைப்புக்கடுத்த அலுவல்களில் சிக்கிக் கொள்ளமாட்டான்.” (2 தீமோத்தேயு 2:3, 4) ஒரு ரோம போர்ச்சேவகன், கனமான போர்க் கருவிகள், ஒரு கோடரி, ஒரு கூடை, மூன்று நாட்களுக்கு உணவுப் பொருட்கள் இன்னும் மற்ற உருபடிகளை சுமந்து செல்கையில் ‘தீங்கநுபவித்தான்.’ (ஜோஸிபஸின் யூதர்களின் போர்கள், புத்தகம் 3, அதிகாரம் 5) அவன் பிழைப்புக்கடுத்த அலுவல்களை நாடிக்கொண்டில்லை, ஏனென்றால் அது அவனுடைய மேலதிகாரிக்குப் பிரியமாயிராது, மேலும் அவனுடைய செலவுகளுக்குப் பணம் கொடுக்கப்பட்டது. அதேவிதமாகவே, ஒரு கிறிஸ்தவன் “கிறிஸ்துவுக்கு நல்ல போர்ச்சேவகனாய்” இருப்பதோடு சம்பந்தப்பட்டச் சோதனைகளை அனுபவிக்கிறான். வேதப்பூர்வமான கடமைகளை நிறைவேற்ற அவன் உலகப்பிரகாரமான ஒரு வேலையைக் கொண்டிருந்தாலும், பொருளாதார காரியங்களில் அனாவசியமான ஈடுபாடு, ஆவிக்குரிய போராட்டத்தைச் செய்வதை நிறுத்திவிடும்படியாகச் செய்ய அனுமதிக்கக்கூடாது. (1 தெசலோனிக்கேயர் 2:9) வீட்டுக்கு வீடு சாட்சி கொடுக்கிறவனாக, அவன் “தேவ வசனமாகிய ஆவியின் பட்டயத்தைப்” பயன்படுத்தி மதசம்பந்தமான பிழையிலிருந்து மக்களை விடுவிக்க உதவி செய்கிறான். (எபேசியர் 6:11–17; யோவான் 8:31, 32) உயிர் ஆபத்திலிருப்பதன் காரணமாக, எல்லாக் கிறிஸ்தவப் போர்ச் சேவகர்களும், இயேசு கிறிஸ்துவையும், யெகோவா தேவனையும் இவ்வகையில் தொடர்ந்து பிரியப்படுத்திக் கொண்டிருப்பார்களாக.