தேவ சமாதான தூதுவர்கள் கூடுகின்றனர்
“நாங்கள் ஆஜராகியிருந்த ஒவ்வொரு மாநாட்டின்மூலமும் உற்சாகப்படுத்தப்பட்டு வந்திருக்கிறோம்,” என்று ஐக்கிய மாகாணங்களிலிருந்து வந்த ஒரு கிறிஸ்தவ மூப்பர் சொல்லுகிறார். “எனினும், இந்த வருடம் விவரிக்கவே முடியாததாக இருந்தது. அடுத்த நாள் நிகழ்ச்சிநிரல் எங்களுடைய எதிர்பார்ப்புகளை எவ்வாறு மீறுமோ என்ற ஆச்சரிய சிந்தனையோடு ஒவ்வொருநாளும் நாங்கள் மாநாட்டை விட்டு சென்றோம், நாங்கள் ஏமாற்றமடையவில்லை!”
“தேவ சமாதான தூதுவர்கள்” மாவட்ட மாநாடுகளில் ஒன்றுக்கு நீங்கள் ஆஜராகியிருந்தால், இந்த ஆர்வமிகுந்த மாநாட்டுப் பிரதிநிதி சொன்னதைச் சரியென ஒப்புக்கொள்வீர்கள். கடவுளுடைய தூதுவர்களாக யெகோவாவின் சாட்சிகள் நிறைவேற்றிவரும் ஊழியப் பொறுப்பின் வெவ்வேறுபட்ட அம்சங்கள் ஒரு நாளைக்கு ஒன்றாக அந்த மாநாட்டில் கவனம் செலுத்தப்பட்டன. அந்த மூன்று-நாள் நிகழ்ச்சிநிரலுக்கு நாம் திரும்ப கவனம் செலுத்தலாம்.
“சமாதானத்தை அறிவிப்பவர் . . . எவ்வளவு அழகானவர்”
இது, அந்த மாநாட்டின் முதல் நாளினுடைய பொருள். ஏசாயா 52:7 இதற்கு ஆதாரமாக இருந்தது. இந்த இக்கட்டானக் காலங்களில், சவாலான சூழ்நிலைமைகளின்கீழ் பலர் யெகோவாவைச் சேவித்துக்கொண்டிருக்கின்றனர். “வைராக்கியமாக சமாதானத்தை அறிவிப்போரிடமிருந்து கேட்டல்” என்ற பேச்சு, உண்மையுள்ள இவர்களில் சிலருடன் பேட்டிகாணுதல் உட்பட்டிருந்தது. அவர்கள் சொன்ன தனிப்பட்ட சொந்த அனுபவங்களைக் கேட்பது மெய்யாகவே ஊக்கமூட்டுவதாக இருந்தது. மேலும், யெகோவா தங்களையும் பலப்படுத்த முடியும், சகிக்கத் தங்களுக்கு உதவிசெய்ய, “இயல்புக்கு மீறிய வல்லமையை” அளித்துங்கூட அவ்வாறு பலப்படுத்த முடியும் என்று மாநாட்டுக்கு வந்திருந்தவர்கள் உறுதியளிக்கப்பட்டனர்.—2 கொரிந்தியர் 4:7, NW.
யெகோவாவின் கட்டளைகள் பாரமானவைகள் அல்ல. (1 யோவான் 5:3) காலை நிகழ்ச்சிநிரலின் கடைசி பேச்சில் இது தெளிவாக்கப்பட்டது, உச்ச நிலையாக, கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்? என்ற 32-பக்க சிற்றேடு வெளியிடப்பட்டது. அழகான படங்களைக் கொண்டதும் படிப்புக்குரிய புதிய உதவியுமான இது, கடவுளுடைய நோக்கங்களைப் பற்றி கற்றுக்கொள்ள இன்னும் மிகப் பலருக்கு உதவிசெய்வதில் சிறந்த பாகத்தை வகிக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்தப் புதிய பிரசுரத்தின் உபயோகத்தின்பேரில் குறிப்புகள், இந்தப் பத்திரிகையின் கடைசி படிப்பு கட்டுரையிலும் 16-ம் 17-ம் பக்கங்களிலும் காணப்படுகின்றன.
“நற்கிரியையில் சகித்திருத்தல்” என்ற பேச்சு, யெகோவா நம்முடைய இக்கட்டுகளைப் பற்றி நன்றாக அறிந்திருக்கிறார் என்பதை அறிவுறுத்தியது. சகித்திருப்பது என்பது, நாம் தளராமல் உறுதியாக நிலைநின்று நம்பிக்கையை இழந்துவிடாமல் இருத்தலைக் குறிக்கிறது. நமக்கு உதவிசெய்ய யெகோவா, தம்முடைய வார்த்தையையும், தம்முடைய ஆவியையும், தம்முடைய அமைப்பையும் கொடுத்திருக்கிறார். பிரசங்கிப்பதற்கு சகிப்புத்தன்மை தேவைப்படுகிறது, எனினும் பிரசங்கிப்பது சகிப்பதற்கு நமக்கு உதவிசெய்கிறது, ஏனெனில் அது நம்முடைய விசுவாசத்தை உயிர்ப்புள்ளதாய் வைத்துவருகிறது. முடிவுக்கு மிக நெருங்கியிருப்போராய், நம்முடைய பிரச்சினைகள் நம் ஆர்வத்தைக் கெடுக்க நாம் அனுமதிக்கக்கூடாது. ஏனெனில் முடிவுவரை சகித்து நிலைநிற்போர் மாத்திரமே இரட்சிக்கப்படுவர்.—மத்தேயு 24:13.
“தேவ சமாதான தூதுவர்களாக நம்முடைய பங்கு,” என்ற முக்கிய பேச்சு, நாடு கடத்தப்பட்ட யூதர்கள், பொ.ச.மு. 537-ல் பாபிலோனிலிருந்து விடுதலை செய்யப்பட்டு, எருசலேமில் தூய்மையான வணக்கத்தைத் திரும்ப ஸ்தாபித்ததற்கு கவனத்தைச் செலுத்த வைத்தது. இந்தச் சம்பவம், உலகமுழுவதிலும் விரிவான அளவில் கடவுளுடைய ராஜ்யம் சீக்கிரத்தில் நிறைவேற்றவிருக்கிறதன் வெறும் முன்காட்சியேயென பேச்சாளர் விளக்கினார். (சங்கீதம் 72:7; ஏசாயா 9:7) இந்த ராஜ்யத்தைப் பற்றிய நற்செய்தியைப் பிரசங்கிப்பதும் அந்தச் செய்திக்குப் பொருந்த வாழ்வதுமே நம் தற்போதைய ஊழிய பொறுப்பாக உள்ளது. கடவுளிடமாகவும் அயலாரிடமாகவும் நமக்கிருக்கும் அன்பு, இந்த ஊழியத்தை இடைவிடாமல் தொடர்ந்து செய்துகொண்டிருக்க நம்மை ஊக்குவிக்க வேண்டும்.—அப்போஸ்தலர் 5:42.
“பொழுதுபோக்கின் மறைவான கண்ணிகளைக் குறித்து எச்சரிக்கையாய் இருங்கள்” என்ற தொடர்பேச்சு, வெள்ளிக் கிழமையின் நிகழ்ச்சிநிரலில் ஒரு முக்கிய அம்சமாக இருந்தது. இன்றைய இசை, இயங்கும் திரைப்படங்கள், வீடியோக்கள், டெலிவிஷன் காட்சிகள், வீடியோ விளையாட்டுகள், புத்தகங்கள், பத்திரிகைகள், மற்றும் காமிக்ஸ் புத்தகங்கள் பேய்த்தன சிந்தனையைப் பெரும்பாலும் பிரதிபலிக்கின்றன. ஆகையால் நாம் ‘தீமையை வெறுக்கவும்’ ‘நன்மையைப் பற்றிக்கொள்ளவும்’ வேண்டும். (ரோமர் 12:9) ஆம், இழிவான பொழுதுபோக்கு இன்பத்தை பெரும் வெறுப்பாக நாம் கருதி, அதிலிருந்து தூர விலகிக்கொள்ள வேண்டும். அதேசமயத்தில் கற்புள்ளவையும் ஒழுக்கமுள்ளவையும் புகழத்தக்கவையுமான காரியங்களின்பேரில் நம் சிந்தனையை ஊன்றவைக்க வேண்டும். (பிலிப்பியர் 4:8) யெகோவாவின் அமைப்பு அளித்துள்ள பிரசுரங்களும் ஆராய்ச்சி கருவிகளும், கட்டியெழுப்பும் எண்ணங்களால் நம் மனங்களைத் தூண்டி ஊக்குவித்து, சரியானதையும் தவறானதையும் வேறுபடுத்திக் கண்டறிய நம்மைப் பயிற்றுவிக்கின்றன. (எபிரெயர் 5:14) கொந்தளிக்கும் கடலில் கட்டுமரத்தை நாம் இறுகப் பற்றிக்கொள்வதுபோல் இந்த ஏற்பாடுகளை நாம் பற்றிக்கொள்ள வேண்டும்.
“பிசாசை எதிர்த்திடுங்கள்—எந்தப் போட்டியையும் பொறுத்திட வேண்டாம்” என்ற பேச்சு அடுத்தப்படியாகக் கொடுக்கப்பட்டது. வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் தாங்கள் பிரவேசிப்பதற்குச் சிறிது முன்னால், ஆயிரக்கணக்கான இஸ்ரவேலர் ஒழுக்கக்கேட்டில் சிக்கியிருந்தனர். உண்மையான வணக்கத்தினிடமாக எதிர்ப்பைக் கண்டிக்காது விடுபவராக பினேகாஸ் இல்லை. தவறுசெய்தவர்களுக்கு எதிராக அவர் உறுதியான நடவடிக்கை எடுத்தார், அவருடைய தனிப்பட்ட பக்திவைராக்கியம் யெகோவாவுக்குப் பிரியமாயிருந்தது. (எண்ணாகமம் 25:1-13) நம் ஒவ்வொருவரையும் கடவுளுடைய புதிய உலகத்திற்குள் பிரவேசிப்பதற்குத் தகுதியற்றவர்களாக்குவதே சாத்தனுடைய இலக்காக உள்ளது. ஆகையால், நம்மைக் கறைப்படுத்தும்படியான சாத்தானின் முயற்சிகளை நாம், பினேகாஸைப் போல் எதிர்க்க வேண்டும். மணமாகியவராகவோ மணமாகாதவராகவோ எவ்வாறு இருந்தாலும், நாம் ‘வேசித்தனத்திற்கு விலகியோட’ வேண்டும்.—1 கொரிந்தியர் 6:18.
“கடவுளுடைய வார்த்தையின் உண்மைத்தன்மையை பற்றுறுதியுடன் ஆதரித்தல்” என்பது மாநாட்டின் முதல் நாளுக்குரிய முடிவானப் பேச்சாக இருந்தது. மொழிபெயர்ப்பாளர் பலர் வேதாகமங்களின் பகுதிகளை மாற்றியமைக்கின்றனர் அல்லது விட்டுவிடுகின்றனர். உதாரணமாக, பெண்களின் உரிமைகளை ஆதரித்து வாதாடுபவர்களைச் சாந்தப்படுத்த, புதிய ஏற்பாடும் சங்கீதமும்: உள்ளடங்கலான ஒரு மொழிபெயர்ப்பு, (ஆங்கிலம்) கடவுளைப் பிதா என்றல்ல, பிதா-மாதா என்று குறிப்பிடுகிறது; இயேசுவை “மனுஷகுமாரன்” என்று குறிப்பிடுவதற்குப் பதிலாக “மனிதனானவர்” என்று குறிப்பிடுகிறது. மாறாக, புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆங்கிலம்) உண்மையுடன் மூலமொழி வாக்கியத்தை மிகத் திருத்தமாய்க் கடைப்பிடிப்பதால், வேதப்பூர்வக் காரியங்கள் பலவற்றில் நம் சிந்தனையைத் தெளிவாக்குவதற்கு உதவிசெய்திருக்கிறது. உதாரணமாக, பேச்சாளர் இவ்வாறு சொன்னார்: “முதற்நூற்றாண்டு கிறிஸ்தவ சபையில் வைக்கப்பட்ட மாதிரிக்கு நெருங்க ஒத்திருக்குமாறு, சபைகளில் மூப்பர் குழுக்களை நியமித்து, சபைகளை நாம் திரும்ப ஒழுங்குபடுத்தி அமைப்பதற்கு, புதிய உலக மொழிபெயர்ப்பின் திருத்தமான மொழிபெயர்ப்பே ஆதாரமாக இருந்தது.” அதை தினந்தோறும் வாசிப்பதன்மூலமும் அதன் அறிவுரையைப் பொருத்திப் பயன்படுத்துவதன் மூலமுமே, கடவுளுடைய வார்த்தைக்கு நம் உண்மைத்தவறாத பற்றுறுதியை நாம் மெய்ப்பித்துக் காட்டுகிறோம். பேச்சாளர் மேலும் இவ்வாறு சொன்னார்: “கடவுளுடைய வார்த்தையை ஆர்வத்துடன் மற்றவர்களுக்குப் பிரசங்கிப்பதன்மூலமும், மற்றவர்களுக்கு நாம் போதிக்கையில் அதைக் கவனமாய்ப் பயன்படுத்துவதன்மூலமும், அது சொல்வதை, நம்முடைய அபிப்பிராயங்களுக்குப் பொருந்தச் செய்யும்படி திருக்குமுறுக்காகத் திரித்துக் கூற ஒருபோதும் முயலாதபடி இருப்பதன்மூலமும் கடவுளுடைய வார்த்தையை நாம் உண்மைத் தவறா பற்றுறுதியுடன் ஆதரிப்பவர்கள் என்று காட்டுகிறோம்.”
‘தேவசமாதானம் . . . சிந்தைகளைக் காக்கிறது’
பிலிப்பியர் 4:7-ல் ஆதாரங்கொண்ட இந்தப் பொருள், மாநாட்டின் இரண்டாம் நாளில் சிந்திக்கப்படவிருப்பதைக் குறிப்பிட்டது. அளிக்கப்பட்ட தகவலின் பெரும்பாகம், ஒருவரின் ஊழியம், குடும்பம், ஒப்புக்கொடுத்தல், அன்றாட வாழ்க்கையின் மற்ற அம்சங்கள் ஆகியவற்றைச் சரியான முறையில் கருதுவதைப் பற்றியதாக இருந்தது.
தினவசனம் ஆலோசிக்கப்பட்ட பின்பு, “தூதுவர்கள் சமாதானத்தின் நற்செய்தியைக் கொண்டுசெல்கிறார்கள்” என்ற தலைப்பைக்கொண்ட தொடர்பேச்சு கொடுக்கப்பட்டது. நம்முடைய செய்தி சமாதானத்திற்குரிய ஒன்றாக உள்ளது, அது சமாதான முறையில் அளிக்கப்பட வேண்டும். (எபேசியர் 6:15) விவாதத்தில் வெற்றிபெறுவதல்ல, இருதயங்களை இணக்குவிப்பதே நம்முடைய நோக்கம். யெகோவாவின் அமைப்பினிடமிருந்து நாம் பெறும் பயிற்றுவிப்பும் பிரசுரங்களும் அதைச் செய்யவே நமக்கு உதவிசெய்கின்றன. மற்றவர்கள் அக்கறை காட்டாதது அல்லது அசட்டையாக இருப்பது, நம்மைச் சோர்வுறசெய்ய நாம் விடக்கூடாது. மாறாக, தனிப்பட்ட படிப்பு, கூட்டத்திற்கு ஆஜராதல், பிரசங்க ஊழியத்தில் பங்குகொள்ளுதல் ஆகியவற்றை விடாமல் கடைப்பிடித்துக்கொண்டு, ‘நம்மால் இயன்றதையெல்லாம்’ தொடர்ந்து செய்துகொண்டிருக்க வேண்டும். (2 தீமோத்தேயு 215, NW) மற்றவர்களுக்கு, முக்கியமாய் விசுவாசத்தில் நமக்கு உறவுடையோராக இருப்போருக்கு நன்மை செய்வதில் தவறக்கூடாது. (கலாத்தியர் 6:10) நிச்சயமாகவே, நம்மால் இயன்றதையெல்லாம் செய்வது, நம்மை மிதமீறி சோர்வுறும் நிலைக்கு உட்படுத்துவதைக் குறிக்கிறதில்லை. ஒவ்வொருவரும் அவரவருடைய சொந்த திறமைக்கும் சூழ்நிலைமைகளுக்கும் தக்கவாறு செய்யக்கூடியது யெகோவாவுக்கு ஏற்கத் தகுந்ததாக இருக்கிறது.
ராஜ்ய அக்கறையை முன்னேற்றுவிக்க, கடவுளுடைய ஜனங்கள் தங்கள் நேரத்தையும், சக்தியையும், பொருளாதாரங்களையும் அளிக்கின்றனர். செம்மறியாட்டைப் போன்ற ஆட்கள் அதிகமதிகமாய் ராஜ்ய செய்திக்குச் சாதகமாகச் செயல்பட்டு வருகையில், கூடுதலான பொருள் சாதனங்களும், கூட்டம் நடத்துவதற்கான இடங்களும், கிளைக் காரியாலய வசதிகளும் தேவையாக இருப்பதைப்பற்றி, “யெகோவாவின் அமைப்பிற்குள் மனமகிழ்ச்சியோடு அளித்தல்” என்ற பேச்சில் குறிப்பிடப்பட்டது. உலகமெங்கும் விரிவாகச் செய்யப்படும் பிரசங்க ஊழியத்தை நிறைவேற்றுவதற்குத் தேவைப்படுவதை, அமைப்பு தன் கையிருப்பில் கொண்டிருப்பதற்கு, நம்முடைய நன்கொடைகள் உதவிசெய்கின்றன. மேலும், தாராள மனப்பான்மையுடன் கொடுத்தல் யெகோவாவைக் கனம்பண்ணுகிறது, கொடுப்பவருக்கு மகிழ்ச்சியைக் கொண்டுவருகிறது. ஆகையால், கிறிஸ்தவர்களாக, நம்முடைய வணக்கத்தின் இந்த முக்கியமான அம்சத்தை நாம் கவனியாமல் விடக்கூடாது.—2 கொரிந்தியர் 8:1-7.
காலை கூட்டத்தின் முடிவாக முழுக்காட்டுதலுக்குரிய பேச்சு கொடுக்கப்பட்டது—யெகோவாவின் சாட்சிகளுடைய பெரிய கூட்டங்களில் முக்கிய ஒன்றாக இது எப்பொழுதும் உள்ளது. புதிதாய் ஒப்புக்கொடுத்தவர்கள் இயேசுவின் மாதிரியைப் பின்பற்றி, தண்ணீர் முழுக்காட்டுதலுக்குத் தங்களை உட்படுத்துவதைக் காண்பது எத்தகைய மகிழ்ச்சியாக இருந்தது! (மத்தேயு 3:13-17) இந்தப் படியை மேற்கொள்வோர் யாவரும், எல்லாவற்றிலும் மிக உயர்ந்த ஞானத்தின் ஊற்றுமூலத்தில்—பைபிளில்—கற்பிக்கப்பட்டிருப்பவர்கள். மேலும், வாழ்க்கையில் உண்மையான நோக்கத்தை அவர்கள் கண்டடைந்திருக்கின்றனர், மற்றும், சரியானதைத் தாங்கள் செய்துகொண்டிருக்கின்றனர் என்று அறிவதிலிருந்து வருகிற சமாதானத்தால் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கின்றனர்.—பிரசங்கி 12:13.
“பகுத்துணர்வு உங்களைப் பாதுகாப்பதாக” என்ற பேச்சில் திட்டமான அறிவுரை கொடுக்கப்பட்டது. வியாபார அலுவல்கள் சம்பந்தமாக பகுத்துணர்வு மிக முக்கியமானது. ராஜ்ய மன்றத்தில் நம் சொந்த வியாபார அலுவல் நடவடிக்கைகளை நாம் நடத்தவும் கூடாது, பண லாபத்திற்காக உடன் விசுவாசிகளைப் பயன்படுத்திக்கொள்ளவும் கூடாது. (யோவான் 2:15, 16-ஐ ஒப்பிடுக.) ஒரு வியாபாரத்தில் பணத்தை முதலீடு செய்கையிலும் அல்லது பணம் கடன்வாங்குகையில் அல்லது கடன் கொடுக்கையிலும் பகுத்துணர்வு தேவை. “கிறிஸ்தவர்களுக்குள் வியாபாரத் துணிகர முயற்சிகளின் தோல்வி, ஏமாற்றத்திற்கும், பெரும் இழப்பு ஏற்படக்கூடிய பணம் பெருக்கும் திட்டங்களில் பதற்றமாய் உட்பட்ட சிலரின் பங்கில் ஆவிக்குரிய இழப்புக்குங்கூட வழிநடத்தியிருக்கிறது” என்று பேச்சாளர் குறிப்பிட்டார். கிறிஸ்தவர்கள் ஒருவரோடொருவர் வியாபாரம் செய்வது தவறல்ல என்றபோதிலும், எச்சரிக்கையாக இருப்பது நிச்சயமாகவே ஞானமாக இருக்கிறது. இரு பகுதியினருக்குள் வியாபார ஒப்பந்தம் செய்யப்படுகையில், ஒப்பந்த நியமங்கள் எப்போதும் எழுத்தில் குறித்து வைக்கப்பட வேண்டும்.
“அவர்களை ஆணும் பெண்ணுமாக அவர் சிருஷ்டித்தார்” என்ற பேச்சில், ஆண்களுக்கும் பெண்களுக்கும் வைக்கப்பட்டுள்ள கடவுளுடைய தராதரம் ஆராய்ந்து பேசப்பட்டது. ஆண் பெண் பாலரின் வாழ்க்கைப் பங்குகள், சரித்திரம் முழுவதிலுமே நெறிபிறழ்வு செய்யப்பட்டிருக்கின்றன. “ஆண்மையைக் கொடுங்கோன்மையான ஆதிக்கத்துடன், முரட்டுத்தனத்துடன், அல்லது ஆண் என்ற அகந்தை உணர்வுடன் தவறாகப் பலர் சம்பந்தப்படுத்துகின்றனர்” என்று பேச்சாளர் சொன்னார். “குறிப்பிட்ட சில நாகரிகங்களில், ஓர் ஆண், யாவர் முன்னும் அல்லது தனிமையிலுங்கூட அழுவது அரிதாக அல்லது வெட்கக்கேடாகவும் இருக்கும். எனினும், லாசருவின் கல்லறைக்கு வெளியிலிருந்த ஜனக்கூட்டத்தில் இருக்கையில், ‘இயேசு கண்ணீர் விட்டார்’ என்று யோவான் 11:35 குறிப்பிடுகிறது.” பெண்களைப் பற்றியதென்ன? பெண்ணின் இயல்பு, உடல் கவர்ச்சியோடு அடிக்கடி சம்பந்தப்படுத்தப்படுகிறது. ஆனால் பேச்சாளர் இவ்வாறு கேட்டார்: “ஒரு பெண் அழகாக இருந்து, ஆனால் நல்லறிவில்லாதவளாய் வாதாடுபவளாகவோ, நிந்தனையாகப் பேசுபவளாகவோ, அல்லது அகந்தையுள்ளவளாகவோ இருந்தால், அந்த வார்த்தையின் மெய்யானக் கருத்தில் அவள் உண்மையில் அழகாக இருக்கிறாளா, மெய்யாகவே பெண்மையுடையவளாக இருக்கக்கூடுமா?” (ஒப்பிடுக: நீதிமொழிகள் 11:22; 31:26.) கிறிஸ்தவ ஆண்களும் பெண்களும், தங்கள் பேச்சிலும், நடத்தையிலும், உடைநடையிலும், பைபிளின் தராதரங்களைப் பின்பற்ற முயற்சி செய்கிறார்கள். பேச்சாளர் இவ்வாறு சொன்னார்: “ஆவியின் கனியைக் காட்டுகிற ஒர் ஆணுக்கு மரியாதை கொடுப்பது எளிது, அவ்வாறு செய்யும் ஒரு பெண்ணை நேசிப்பதும் எளிது.”—கலாத்தியர் 5:22, 23.
அடுத்தபடியாக “சமாதானத்தின் கடவுள் உங்கள்மீது அக்கறை காண்பிக்கிறார்” என்ற தொடர் பேச்சு கொடுக்கப்பட்டது. கிறிஸ்தவர்கள் பலர் பணசம்பந்தமான கவலைகளை உடையோராக இருக்கின்றனர். இருப்பினும், யெகோவா: “நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை,” என்று வாக்களிக்கிறார். (எபிரெயர் 13:5) பொருளாதார வறுமையுடையோராக இருக்கிறபோதிலும் சிலர், துணைப் பயனியர் அல்லது ஒழுங்கான பயனியர் சேவையில் ஈடுபடுவதன்மூலம் இந்த வாக்கில் நம்பிக்கை காட்டியிருக்கின்றனர். தற்போது பயனியர் செய்ய முடியாத மற்றவர்கள், சாட்சிகொடுப்பதற்குக் கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திக்கொள்வதன்மூலம் ராஜ்ய அக்கறைகளை முதலாவதாக வைக்கின்றனர். (மத்தேயு 6:33) அத்தகைய எல்லா முயற்சிகளையும் போற்ற வேண்டும்! நம்முடைய ஊழியத்தில் நமக்கு உதவியாயிருக்கவும் நம்முடைய பிரச்சினைகளைச் சமாளிக்க நமக்கு உதவிசெய்யவும் ஏராளமான பிரசுரங்களை யெகோவாவின் அமைப்பு அளித்திருக்கிறது. யெகோவாவின் ஆவிக்குரிய ஏற்பாடுகளுக்கு நன்றிமதித்துணர்வை நாம் காட்டினால், பொருளாதார கொந்தளிப்பான இந்தக் காலங்களில் சமாதானத்தை அளித்து நம்மை ஆசீர்வதிப்பார்.—சங்கீதம் 29:11.
“குடும்ப வாழ்க்கையில் தேவ சமாதானத்தை நாடுங்கள்” என்ற அந்த நாளின் கடைசி பேச்சின் முடிவில், குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம் என்ற புதிய புத்தகத்தைப் பெற்றுக்கொள்வதில் மாநாட்டுக்கு வந்திருந்தவர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்தனர். “தனிப்பட்டவராயும் குடும்பத் தொகுதிகளாகவும் இந்தப் புத்தகத்தை ஊக்கமாய்ப் படியுங்கள்,” என்று பேச்சாளர் வற்புறுத்திக் கூறினார். “பைபிளில் ஆதாரங்கொண்ட அதன் அறிவுரையைப் பொருத்திப் பயன்படுத்துவதற்கு ஆர்வத்துடன் முயற்சி செய்யுங்கள், உங்கள் குடும்பத்தின் சமாதானத்தையும் சந்தோஷத்தையும் நீங்கள் நிச்சயமாய் அதிகரிப்பீர்கள்.”
‘சமாதானத்தின் ஐக்கிய கட்டில் . . . ஒற்றுமையைக் கடைப்பிடியுங்கள்’
எபேசியர் 4:3-ல் ஆதாரங்கொண்ட இது, மாநாட்டின் கடைசி நாளுக்குரிய பொருத்தமான பொருளாக இருந்தது. உலகத்தின் எல்லா தேசத்தாரிலிருந்தும் வந்துள்ள யெகோவாவின் சாட்சிகள், கடவுளால் போதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆகையால், அவர்கள் சமாதானத்தை நேசிக்கிறார்கள். இயேசுவின் முன்மாதிரியை அவர்கள் பின்பற்றி, ‘சமாதானத்தின் ஐக்கிய கட்டில் ஆவியின் ஒற்றுமையைக் கடைப்பிடிக்க’ முயற்சி செய்கிறார்கள்.
கடவுளுடைய அமைப்பில் ஊடுருவிப் பரவியிருக்கும் இந்தச் சமாதானம், “சரியான தூதுவர்களை அடையாளம் கண்டுகொள்ளுதல்,” என்ற தொடர் பேச்சில் முக்கியப்படுத்திக் காட்டப்பட்டது. பூர்வ இஸ்ரவேலில் பொய்த் தீர்க்கதரிசிகள் இருந்துவந்தார்கள். எனினும், கடவுளுடைய உண்மையானத் தூதுவர்கள்—ஏசாயா, எசேக்கியேல், மற்றும் எரேமியாவைப் போன்றவர்கள்—எருசலேமின் வீழ்ச்சியையும், நாடுகடத்தப்பட்டிருக்கப்போகும் காலப்பகுதியையும், முடிவாக கடவுளுடைய ஜனத்தின் விடுதலையையும் திருத்தமாய் முன்னறிவித்தார்கள். அதைப்போன்ற ஒரு நிலைமை இன்று இருந்துவருகிறது. அரசியல் மற்றும் பொய்மத துறைகளில் பொய்த் தூதுவர்கள் ஏராளமாய்ப் பெருகியிருக்கின்றனர். எனினும், இந்தக் காரிய ஒழுங்குமுறையைக் குறித்த தம்முடைய நோக்கத்தை யாவரறிய அறிவிக்கும்படி, யெகோவா தம்முடைய சாட்சிகளை எழுப்பியிருக்கிறார். முக்கியமாய் 1919 முதற்கொண்டு, கடவுளுடைய செய்தியை யாவரறிய அறிவிக்கும்படி யெகோவாவின் ஊழியர்கள் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறார்கள். கிறிஸ்தவமண்டலத்தின் பொய்த் தூதுவர்களிலிருந்து இவர்கள் எவ்வளவாய் வேறுபட்டவர்களாக இருக்கிறார்கள்! முடிந்துவிட்டது என்று யெகோவா சொல்லும் வரையில் தளரா ஊக்கத்துடன் இந்த ஊழியத்தில் நம் பங்கை நாம் நிறைவேற்றி வருவோமாக!
வேதவசனங்கள், வழிநடத்துதலுக்கும், ஆறுதலுக்கும், நம்பிக்கைக்குமுரிய மிகப் பெரும் ஊற்றுமூலம் என்பதை, “கடவுளுடைய வார்த்தைக்குச் செவிகொடுத்து, கீழ்ப்படியுங்கள்” என்ற பேச்சு அறிவுறுத்தியது. (ஏசாயா 30:20, 21; ரோமர் 15:4) இன்றைய உலகம் அதிகமதிகமாய்க் கட்டுப்பாடற்றதாக ஆகிக்கொண்டிருக்கிறது. ஆகையால், கடவுளுடைய வார்த்தையிலிருந்தும் அமைப்பினிடமிருந்தும் வருகிற அறிவுரைக்கு, முன்னிலும் அதிகமாக நாம் செவிகொடுக்க வேண்டும். நம்முடைய பலவீனங்களை யெகோவா அறிந்திருக்கிறார், நமக்கு நன்மை பயக்கும் வழியை அவர் தம்முடைய வார்த்தையில் தெளிவாகக் குறிப்பிட்டு வைத்திருக்கிறார். யெகோவா நம்மை ஆதரிக்கிறார் என்பதை அறிந்திருப்பது, அவர் நமக்குக் கட்டளையிடும் எதையும் செய்துகொண்டு முன்சென்றுகொண்டிருக்க நமக்குத் திட நம்பிக்கையை அளிக்கிறது.
இதைப் பின்தொடர்ந்து, நாடக உடையுடன் நடித்த நாடகத்திற்கு இது மனதை ஆயத்தம் செய்தது. “ஏன் தேவராஜ்ய ஏற்பாடுகளை மதிக்க வேண்டும்?” என்ற தலைப்பை இது கொண்டிருந்தது. கிதியோனைப் பற்றிய பைபிள் விவரத்தை ஆதாரமாகப் பயன்படுத்தி, இந்த நாடகம் வல்லமை வாய்ந்த ஒரு பாடத்தை—நாம் கடவுளுடைய கட்டளைகளைப் பின்பற்ற வேண்டும் நம்முடைய சொந்த சிந்தனையை அதற்குப் பதிலாக வைக்கவோ அல்லது தேவராஜ்ய அறிவுரையை மீற முயற்சி செய்யவோ கூடாது என்பதை—உறுதியாய் அறிவுறுத்தியது.
“உண்மையான சமாதானம் இறுதியாக!—எந்த ஊற்றுமூலத்திலிருந்து?” என்ற பொருளின்பேரில் பொதுப் பேச்சு கொடுக்கப்பட்டது. கடவுள் வாக்குக்கொடுக்கிற சமாதானம், இந்த உலகம் கற்பனைசெய்ய முடிகிற எதற்கும் அப்பாற்பட்டதாக இருக்கிறது. “உண்மையான சமாதானம் ஒவ்வொரு நாளும் சமாதானத்தைக் குறிக்கிறது,” என்று பேச்சாளர் சொன்னார். “நோய், வேதனை, துக்கம், மற்றும் மரணம் இராத ஓர் உலகத்தைக் கடவுளுடைய சமாதானம் குறிக்கிறது.” யெகோவா “பூமியின் கடைமுனைமட்டும் யுத்தங்களை ஓயப்பண்ணுகிறார்,” என்று பைபிள் நமக்குச் சொல்லுகிறது. (சங்கீதம் 46:9) இதை அவர் எவ்வாறு செய்வார்? யுத்தத்தைத் தூண்டிவிடுகிறவனாகிய பிசாசான சாத்தானை ஒழித்துப்போடுவதன்முலமே. (வெளிப்படுத்துதல் 20:1-3) சாந்தகுணமுள்ளவர்கள் ‘பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பதற்கு’ இது வழிதிறக்கும்.—சங்கீதம் 37:11.
அந்த வாரத்துக்குரிய காவற்கோபுர படிப்பு கட்டுரையின் சுருக்கத்தைப் பின்தொடர்ந்து மாநாட்டின் கடைசி பேச்சு கொடுக்கப்பட்டது. “தேவ சமாதான தூதுவர்களாக முன்னோக்கிச் செல்லுதல்,” என்ற தலைப்பைக் கொண்ட, ஊக்கமூட்டின இந்தப் பேச்சு, நம்முடைய பிரசங்க ஊழியம் ஈடிணையற்றதாயும் அவசரமானதாயும் இருக்கிறது என்று அறிவுறுத்தியது. ஊக்கத்தைத் தளர்த்துவதற்கோ, காலத்தை வீணாக்குவதற்கோ, அல்லது தவறான கருத்துக்களுக்குத் திரும்புவதற்கோ இது சமயமல்ல. தேவைப்படும் சாதனங்கள்—கடவுளுடைய செய்தியும், அவருடைய பரிசுத்த ஆவியும், அவருடைய அன்புள்ள தேவராஜ்ய அமைப்பிலிருந்து வரும் ஏராளமான ஏற்பாடுகளும்—நமக்கு அளிக்கப்பட்டிருக்கின்றன. ஆகையால் நாம், யெகோவாவின் ஊழியர்களாக தேவ சமாதான தூதுவர்களாய் தொடர்ந்து முன்னோக்கிச் சென்றுகொண்டிருப்போமாக!
[பக்கம் 7-ன் படம்]
கடவுள் எதிர்பார்ப்பது என்னவென்பதை அறிய இளைஞரும் முதியோரும் ஒன்றுபோல் விரும்புகின்றனர்