அறிந்துகொள்ள ஆவலுள்ள ஒரு மனம் உங்களுக்கு இருக்கிறதா?
அறிவார்வம் என்பது “தெரிந்துகொள்ளும் ஆசை”யாக இருக்கிறது. பலமான ஒரு அறிவார்வம், ஒரு நபரை கற்றுக்கொள்ள, காரியங்களைப் பற்றி தெரிந்துகொள்ள ஆவலுள்ளவராகச் செய்கிறது. இந்த ஆவலை யெகோவா நம்மில் பதிய வைத்திருக்கிறார். இதன் காரணமாகவே, பெரும்பாலும் பிறந்த விநாடி முதற்கொண்டே, நம்மைச் சுற்றியுள்ள உலகத்தை ஆராய நாம் தூண்டப்படுகிறோம். நாம் உயிரோடிருக்கும் வரையாக முடிவில்லாமல் கற்றுக்கொண்டே இருக்கிறோம். முதிர்ச்சியுள்ள சீராக அமைந்த மனிதர்களாக நாம் ஆகவேண்டுமானால், நம்முடைய அறிவார்வத்தை, காரியங்களைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆசையை நிறைவு செய்வது அவசியமாக இருக்கிறது.
ஆவிக்குரிய நிலையில் இது விசேஷமாக உண்மையாக இருக்கிறது. நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ளும் நம்முடைய எதிர்பார்ப்பு யெகோவா தேவனைப் பற்றி நாம் கற்றறிவதன் பேரில் சார்ந்திருக்கிறது. (யோவான் 17:3) நாம் அவரை “தடவியாகிலும் கண்டுபிடிக்கத்தக்கதாக” அவரைப் பற்றிய விவரங்களை ஆராயும்படி அவர் விரும்புகிறார் என்பதாக பைபிள் நமக்குச் சொல்கிறது. (அப்போஸ்தலர் 17:23, 24, 27) நம்முடைய அறிவார்வத்தை நாம் அடக்கி, அது வளருவதை அனுமதிக்க தவறினோமேயானால், நம்முடைய வளர்ச்சி மிகவும் தாமதப்படும். உண்மையில் ஆவிக்குரிய காரியங்களில் அக்கறை குறைவுபடுவது அழிவுக்கேதுவாக இருக்கக்கூடும்.—சங்கீதம் 119:33, 34; ஓசியா 4:6.
ஆதலால், கற்றுக்கொள்வதற்கான சரியான ஆசையை திருப்தி செய்துகொள்வதற்காகவே பூர்வ காலங்கள் முதற்கொண்டே யெகோவாவின் ஜனங்களுக்குப் போதனையின் அவசியமும் கற்பித்தலின் அவசியமும் வலியுறுத்தப்பட்டு வந்திருக்கிறது. (உபாகமம் 6:6, 7; 31:12; 2 நாளாகமம் 17:9) மேசியாவாகிய இயேசுவே பூமியில் மிகப் பெரிய போதகராக இருந்தார். (மத்தேயு 9:35) அவருடைய சீஷர்கள், அவருடைய முன்மாதிரியைப் பின்பற்றினார்கள். எதிர்ப்பை எதிர்பட்டபோதும்கூட அவர்கள் “தினந்தோறும் இடைவிடாமல் உபதேசம் பண்ணி பிரசங்கித்தார்கள்.” (அப்போஸ்தலர் 5:42) இப்படிப்பட்ட உபதேசம், அறிந்துகொள்ள ஆர்வமாயிருந்த மனங்களில் அக்கறையைத் தூண்டிவிட்டது. “மனோ வாஞ்சையாய் வசனத்தை ஏற்றுக்கொண்டு காரியங்கள் இப்படியிருக்கிறதா என்று தினந்தோறும் வேத வாக்கியங்களை ஆராய்ந்து பார்த்த” பெரோயாப் பட்டணத்தாரைப் போல அநேகர் இருந்தார்கள்.—அப்போஸ்தலர் 17:11.
அதே விதமாகவே, தற்கால கிறிஸ்தவ சபையின் பெரும்பாலான நடவடிக்கைகள், உபதேசிப்பதை மையமாக கொண்டிருக்கின்றன. இதன் காரணமாகவே, சபை அதனுடைய அடிப்படை நோக்கத்தை நிறைவேற்றுவதாக இருக்கிறது. அதாவது யெகோவாவையும் அவருடைய நோக்கங்களையும் பற்றி கற்றுக்கொள்வதற்கான ஆசையை வளர்த்து அதைத் திருப்தி செய்வதாக இருக்கிறது. இவ்வகையான ஒரு அறிவார்வம் ஆரோக்கியமானதும் பிரயோஜனமானதுமாக இருக்கிறது.
அறிவார்வத்துக்கு சரியான வரம்புகள்
என்றபோதிலும், சில சமயங்களில் பிள்ளைகளை அறிவார்வத்திலிருந்து அவர்களைப் பாதுகாக்க வேண்டியதாக இருக்கிறது. ஒரு குழந்தை சூடான ஒரு பொருளைத் தொடுவதற்குக் கையை நீட்டும்போது அல்லது ஒரு கண்ணாடிப் பொருளின் ருசி எவ்விதமாக இருக்கிறது என்பதைப் பார்க்க ஆர்வத்தோடு அதை வாயில் போடும்போது, அது குழந்தைக்குத் தீங்கிழைக்கக்கூடும். இப்படிப்பட்ட காரியங்களில், ஆர்வத்தை நாம் தடை செய்யும்போது, குழந்தையினுடைய வளர்ச்சிக்கு நாம் இடையூறாக இல்லை.
பிள்ளைகள் வளரும்போது, அவர்களுடைய அறிவார்வம் திரும்பவுமாக அவர்களைத் தொந்தரவுக்குள் வழிநடத்திச் செல்லக்கூடும். இதன் காரணமாகவே, பருவ வயதிலுள்ள ஒரு பையன் கீழ்த்தரமான ஒரு புத்தகத்தில் என்ன இருக்கிறது என்பதை அறிய மிகவும் ஆர்வமுள்ளவனாக இருக்கக்கூடும். அல்லது அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தின் காரணமாக பருவ வயதிலுள்ள ஒரு பெண், புகையிலையை அல்லது மற்ற போதை பொருட்களைப் பரிசோதனை செய்துபார்க்கக்கூடும். இளைஞர்கள் சிலர் கூட்டமாகக்கூடி, குடித்து வெறிப்பது எப்படி இருக்கும் என்பதைப் பார்க்க அதிகமாக பியரை குடித்து பார்க்கக்கூடும். மறுபடியுமாக இவ்வகையான ஆர்வத்தை நாம் தடை செய்யும்போது, பருவ வயதினரின் இயற்கையான வளர்ச்சியை நாம் கட்டுப்படுத்துவதில்லை.
முதிர்ச்சியுள்ள ஒரு கிறிஸ்தவனின் ஆர்வம் அவனைத் தொந்தரவுக்குள் கொண்டு செல்லக்கூடிய பகுதிகள் ஏதாவது இருக்கின்றனவா? ஆம், நிச்சயமாகவே ஒரு கிறிஸ்தவனின் விசுவாசத்தைக் கவிழ்த்துப்போடும் முயற்சியில் அவனுடைய ஆர்வத்துக்குக் கவர்ச்சியூட்டக்கூடிய ஆட்களுக்கு எதிராக பவுல் தீமோத்தேயுவை எச்சரித்தான். “ஓ, தீமோத்தேயுவே, உன்னிடத்தில் ஒப்புவிக்கப்பட்டதை நீ காத்துக்கொண்டு, சீர்கேடான வீண்பேச்சுகளுக்கும் ஞானமென்று பொய்யாய்ப் பேர் பெற்றிருக்கிற கொள்கையின் விபரீதங்களுக்கும் விலகு.”—1 தீமோத்தேயு 6:20, 21.
தீமோத்தேயுவுக்கு எழுதிய இரண்டாவது கடிதத்தில் பவுல் மேலுமாக பின்வருமாறு எச்சரித்தான்: “அவர்கள் சத்தியத்தை விட்டு விலகி, உயிர்த்தெழுதல் நடந்தாயிற்றென்று சொல்லி, சிலருடைய விசுவாசத்தைக் கவிழ்த்துப் போடுகிறார்கள்.” (2 தீமோத்தேயு 2:18) இப்படிப்பட்ட பேச்சு ஆர்வத்தை எவ்விதமாக கிளறியிருக்க வேண்டும் என்பதை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா? விழிப்பாயிராத ஆட்கள் பின்வருமாறு யோசித்திருக்கக்கூடும்: ‘இவர்கள் எதை அர்த்தப்படுத்துகிறார்கள்? உயிர்த்தெழுதல் ஏற்கெனவே நடந்தாயிற்று என்று அவர்கள் எப்படிச் சொல்லக்கூடும்?’ ஆவல் தூண்டப்பட்டவர்களாக அவர்கள் செவிகொடுத்து கேட்டிருக்கக்கூடும். விளைவு? சிலருடைய விசுவாசம் கவிழ்க்கப்பட்டது, ஆர்வத்தின் காரணமாக போதை பொருட்கள் அல்லது கீழ்த்தரமான புத்தகங்களை வைத்து பரிசோதித்துப் பார்ப்பது ஆபத்தாயிருப்பது போலவே, அறிந்துகொள்ளும் ஆர்வத்தின் காரணமாக இப்படிப்பட்ட பேச்சுகளுக்குச் செவி கொடுப்பதும்கூட ஆபத்தாக இருந்தது.
இது கிறிஸ்தவர்கள் குறுகிய மனப்பான்மையுள்ளவர்களாக, மற்ற ஆட்களின் கருத்துக்களைக் கேட்க மனமில்லாதவர்களாக இருக்கிறார்கள் என்பதாக அர்த்தமாகுமா? இல்லை, அது குறிப்பில்லை. மாறாக, பின்னால் துயரத்தைக் கொண்டுவரக்கூடிய காரியங்களுக்குத் தங்களுடைய மனதை திறப்பதைத் தவிர்க்கும்படியாக அவர்களுக்கு புத்திமதி கொடுக்கப்படுகிறது. பிசாசாகிய சாத்தானின் தந்திரமான வார்த்தைகளுக்குச் செவிகொடுப்பதன் மூலம் ஆர்வத்தை திருப்தி செய்துகொள்ள ஏவாள் மறுத்திருப்பாளேயானால் வரலாறு எத்தனை வித்தியாசமாக இருந்திருக்கக்கூடும் என்பதை எண்ணிப் பாருங்கள். (ஆதியாகமம் 3:1-6) ஏவாளிடமாக சாத்தான் விளங்கப்பண்ணின அதே ஆவியை விளங்கப்பண்ணி “சீஷர்களைத் தங்களிடத்தில் இழுத்துக்கொள்ளும்படி மாறுபாடானவைகளைப் போதிக்கக்கூடிய” “ஓநாய்களைக்” குறித்து அப்போஸ்தலனாகிய பவுல் எபேசுவிலிருந்த மூப்பர்களை எச்சரித்தான். (அப்போஸ்தலர் 20:29, 30) அவர்கள் நம்மை “வசப்படுத்திக்கொள்”வதற்காக “தந்திரமான வார்த்தைகளை” பயன்படுத்துகிறார்கள், இந்த வார்த்தைகள், ஒரு கிறிஸ்தவனின் ஆவிக்குரிய தன்மைக்கு விஷமாக இருக்கக்கூடிய கருத்துக்களை வெளிப்படுத்துகிறவையாக இருக்கின்றன.—2 பேதுரு 2:3.
குறிப்பிட்ட ஒரு பானம் விஷமாக இருப்பது உங்களுக்குத் தெரிந்திருந்தால், அதன் ருசி எப்படிப்பட்டதாயிருக்கிறது என்பதைப் பார்க்க அல்லது அந்த விஷத்தைத் தாங்கிக்கொள்ள உங்கள் உடல் போதிய அளவு பலமுள்ளதாக இருக்கிறதா என்பதைப் பார்க்க ஆர்வத்தின் காரணமாக அதை நீங்கள் குடிப்பீர்களா? நிச்சயமாகவே மாட்டீர்கள், அதே விதமாகவே உங்களை வஞ்சித்து, சத்தியத்திலிருந்து உங்களை இழுத்துக்கொள்வதற்காக வேண்டுமென்றே திட்டமிடப்பட்ட வார்த்தைகளுக்கு உங்கள் மனதை திறப்பது ஞானமுள்ளதாக இருக்கிறதா? நிச்சயமாக இல்லை!
உலகப்பிரகாரமான தத்துவங்களைக் குறித்து எச்சரிக்கையாயிருங்கள்
அறிவார்வமானது உலகப்பிரகாரமான தத்துவங்களை ஆராய நம்மை வழிநடத்துமேயானால் அது நமக்குத் தீங்கிழைக்கவும் கூடும். தத்துவம் என்பது “முழு மனித அனுபவத்தையும், நிஜங்களுக்கு ஆதாரமாக அமையும் காரணங்களையும் நியமங்களையும் பகுத்தறிவு மற்றும் ஊகிப்பின் மூலமாக புரிந்துகொள்ளவும் அர்த்தஞ் சொல்லவும் செய்யப்படும் மனித முயற்சி” என்பதாக விளக்கப்படுகிறது. என்றபோதிலும் மனித தத்துவங்களை ஆராய முற்படுவோர் கடைசியாக, “எப்போதும் கற்றாலும் ஒருபோதும் சத்தியத்தை அறிந்து உணராதவர்களாயிருக்கிற”வர்களைப் போல ஆகிவிடுகிறார்கள். (2 தீமோத்தேயு 3:7) அவர்களின் தோல்விக்கு ஒரு முக்கியமான தவறு காரணமாயிருக்கிறது: தேவனிடமிருந்து வரும் ஞானத்தின் மீது சார்ந்திருப்பதற்குப் பதிலாக அவர்கள் மனித ஞானத்தின்மீது சார்ந்திருக்கிறார்கள்.
இந்தத் தவறை அப்போஸ்தலனாகிய பவுல் வெளியரங்கமாக பகிரங்கப்படுத்தினான். அவன் கிறிஸ்தவர்களிடம் “தேவனுக்கு முன்பாகப் பைத்தியமாயிருக்கும்” “இவ்வுலகத்தின் ஞானத்தைப்” பற்றி பேசினான். (1 கொரிந்தியர் 3:19) மேலுமாக அவன் “சிந்தனைகளில் வீணராயிருந்த” ரோமர்களுக்கு எதிராகவும் எச்சரித்தான். (ரோமர் 1:21, 22) நாம் பெற்றிருக்கும் அனைத்தும் யெகோவாவுடையதாக இருக்கிறது. சரியாகவே, “அறிவையும் எல்லா உணர்வையும்” நமக்கு அளிக்கவும் “தேவனுடைய ஆழங்களை” நமக்கு வெளிப்படுத்தவும் நாம் அவரையே நோக்கியிருக்கிறோம். (பிலிப்பியர் 1:9; 1 கொரிந்தியர் 2:10) தேவனுடைய ஞானத்தின் முக்கிய ஊற்றுமூலம் அவருடைய வார்த்தையாகிய பைபிளாக இருக்கிறது.
மனித தத்துவங்கள் தேவனுடைய வார்த்தையை அசட்டை செய்துவிடுவதன் காரணமாக அவைகளால் ஏற்படக்கூடிய ஆபத்தை நாம் ஒருபோதும் குறைவாக மதிப்பிட்டுவிடக்கூடாது. நவீன தத்துவ சிந்தனை அநேக கிறிஸ்தவ மண்டல போதகர்களை, பரிணாமக் கோட்பாட்டை ஏற்றுக்கொள்ளும்படியாக தவறான வழியில் தூண்டியிருக்கிறது. அறிவு பூர்வமான மதிப்பை சமுதாயத்தில் பெற்றுக்கொள்ளும் முயற்சியில், சிக்கலான விளக்கங்களை ஆதரித்து, பைபிள் ஆவியால் ஏவப்பட்டு எழுதப்பட்டது என்ற நம்பிக்கையையுங்கூட அவர்கள் உதறி தள்ளிவிடுகிறார்கள். தனிப்பட்ட சுதந்திரத்துக்கு அதிக முக்கியத்துவம் தரும் அரசியல் மற்றும் சமுதாய தத்துவங்கள், கருச்சிதைவு கொள்ளை நோய்க்கும் மிகப் பரவலான பாலின ஒழுக்கக் கேட்டுக்கும், போதை மருந்தின் துர்பிரயோகத்துக்கும் மற்ற அழிவுண்டாக்கும் பழக்க வழக்கங்களுக்கும் வழிநடத்தியிருக்கின்றன. பொருள் பற்றுள்ள சிந்தனை, இன்று அநேகரை அவர்களுடைய பொருளாதார உடைமைகளை வைத்து, மகிழ்ச்சியையும் வெற்றியையும் அளவிடும்படியாகச் செய்கிறது.
இந்த எல்லா தத்துவங்களுமே, கடவுளுடைய உதவியில்லாமல் மனித பகுத்தறிவின் மூலமாக பிரச்னைகளுக்குத் தீர்வு காணும் அல்லது மகிழ்ச்சியை நாடும் முயற்சிகளாக இருக்கின்றன. எரேமியா ஒப்புக்கொண்ட அடிப்படை சத்தியத்தை அவை அனைத்துமே அசட்டை செய்கின்றன: “யெகோவாவே, மனுஷனுடைய வழி அவனாலே ஆகிறதல்லவென்றும், தன் நடைகளை நடத்துவது நடக்கிறவனாலே ஆகிறதல்லவென்றும் அறிவேன்.” (எரேமியா 10:23) நம்முடைய மகிழ்ச்சியும் நம்முடைய இரட்சிப்பும் யெகோவாவுக்கு நாம் கீழ்ப்படிந்து அவர் மீது சார்ந்திருப்பதன் பேரில்தானே சார்ந்திருக்கிறது. நம்முடைய ஆர்வத்துக்குக் கட்டுப்பாடற்ற வாய்ப்பை அளித்து, நம்முடைய சிந்தனைகளைக் கறைப்படுத்தி, கடைசியாக நம்பிக்கை எதுவும் இல்லாதவர்கள் மத்தியில் நாம் காணாமற்போய் விடுவதற்கு வழிநடத்தக்கூடிய மனித கருத்துக்களுக்கு நமது மனதில் இடமளிக்கும் சோதனையை எதிர்ப்பது ஞானமுள்ள போக்காக இருக்கிறது.
நெருங்கி வரும் முடிவைப் பற்றிய அறிவார்வம்
சாத்தானின் கலகத்தால் விளைந்த தீய பாதிப்புகளை நீக்குவதற்குத் தாம் ஒரு நோக்கத்தைக் கொண்டிருப்பதாக ஏதேனில் யெகோவா தெரிவித்த சமயம் முதற்கொண்டு, தெய்வீக நோக்கத்தின் நிறைவேற்றத்தைக் குறித்து அவருடைய உண்மையுள்ள ஊழியர்கள் எப்போதும் சுறுசுறுப்பான ஒரு ஆர்வத்தை கொண்டவர்களாகவே இருந்திருக்கிறார்கள். ஏன், தேவதூதர்களும் கூட இதை அறிய ஆவலாக இருந்திருக்கிறார்கள். (1 பேதுரு 1:12) இயேசுவின் நாளில், ராஜ்யம் எப்பொழுது வரும் என்பதை துல்லிபமாகத் தெரிந்துகொள்வதில் அநேகர் தீவிரமாக அக்கறை காண்பித்தார்கள். என்றபோதிலும் அவர்கள் அதைத் தெரிந்துகொள்வது யெகோவாவின் சித்தம் அல்ல என்பதை இயேசு அவர்களுக்குப் பல முறைகள் சொன்னார். (மத்தேயு 25:13; மாற்கு 13:32; அப்போஸ்தலர் 1:6, 7) திட்டவட்டமாக ஒரு தேதியை குறிப்பிட முயற்சிசெய்வது வீணாக இருந்திருக்கும். மாறாக, அவர் அவர்களுடைய கிறிஸ்தவ உத்தரவாதங்களுக்குக் கவனம் செலுத்தி ஒவ்வொரு நாளும் அவசர உணர்வைக் காத்துக் கொள்ளும்படியாக ஞானமாக அவர்களைத் துரிதப்படுத்தினார்.—லூக்கா 21:34-36.
இன்று, முடிவு சமீபமாயிருக்கிறது என்பதற்கு உலக சம்பவங்கள் ஏராளமான அத்தாட்சிகளைத் தருகின்றன. அது சம்பவிக்கப்போகும் தேதியைப்பற்றி அறிய ஆர்வமும் அதிகமாக இருக்கிறது. ஒரு சில சம்பவங்களைப் பார்த்து, அந்த நாளையும் நாழிகையையும் கண்டுபிடித்து விட்டதாக சிலர் உறுதியாக நம்பியிருக்கலாம். அவர்களுடைய எதிர்பார்ப்புகள் நிறைவேறாதபோது அவர்கள் அதிகமாக வேதனையை அனுபவித்து, ஒருவேளை கடவுளை சேவிப்பதிலிருந்தே வீழ்ந்துபோகும் நிலையையுங்கூட அடைந்திருக்கிறார்கள். முடிவை யெகோவா சரியான நேரத்தில் கொண்டுவருவார் என்பதாக நம்பி, அவருடைய கரங்களில் காரியங்களை விட்டுவிடுவது எத்தனையோ மேலானதாக இருக்கும். ஆயத்தமாயிருப்பதற்குத் தேவையான அனைத்தும் நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.
சமநிலையின் அவசியம்
ஆகவே, வாழ்க்கையில் மற்ற அநேக காரியங்களைப் போலவே, நம்முடைய அறிவார்வமும் ஆசீர்வாதமாகவோ சாபமாகவோ இருக்கக்கூடும். சரியான திசையில் அது வழிநடத்தப்படும்போது, சந்தோஷத்தையும் புத்துயிரையும் கொண்டுவரக்கூடிய விலையேறப்பெற்ற அறிவின் இரத்தினக் கற்களை காண அது உதவி செய்யக்கூடும். நம்முடைய சிருஷ்டிகரையும் அவருடைய சித்தத்தையும் அவருடைய நோக்கங்களையும் பற்றிய ஒரு ஆரோக்கியமான ஆர்வம் வெகுவாக மனநிறைவை அளிப்பதாயும் பிரயோஜனமாயும் இருக்கக்கூடும். கட்டுப்படுத்தப்படாத கொடிய அறிவார்வம், கற்பனைகளும் மனித கோட்பாடுகளும் நிறைந்த ஒரு குழப்பத்துக்குள் நம்மை கவர்ந்திழுத்துக் கொள்ளக்கூடும். இங்கே விசுவாசத்துக்கும் தேவபக்திக்கும் இடமிருக்காது. ஆகவே உங்களுடைய அறிவார்வம் கேள்விக்குரிய ஏதோ ஒன்றுக்குள் உங்களை வழிநடத்திச் செல்ல உங்களை அச்சுறுத்தும்போது, “நீங்கள் இழுப்புண்டு உங்கள் உறுதியிலிருந்து விலகி விழுந்து போகாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்.”—2 பேதுரு 3:17. (w87 2/1)