யெகோவாவின் மக்கள் ‘அநீதியைக் கைவிடுகிறார்கள்’
“யெகோவாவின் பெயரை நோக்கிக் கூப்பிடுகிறவர்கள் அநீதியைக் கைவிட வேண்டும்.”—2 தீ. 2:19.
1. நம் வழிபாட்டில் எதற்கு முக்கியத்துவம் தருகிறோம்?
யெகோவா என்ற பெயரை கட்டிடங்களில் அல்லது அருங்காட்சியகங்களில் பார்த்திருக்கிறீர்களா? பார்த்ததும், நீங்கள் ஒருவேளை ஆச்சரியப்பட்டிருக்கலாம். ஏனென்றால், யெகோவாவுடைய பெயருக்கு நம்மைப்போல் உலகத்தில் யாருமே முக்கியத்துவம் தருவதில்லை. அவருடைய பெயரை நம் வழிபாட்டில் பயன்படுத்துகிறோம்; அதை உயர்வாக நினைக்கிறோம். யெகோவாவின் சாட்சிகள் என்று அழைக்கப்படுவது நமக்குக் கிடைத்த மிகப்பெரிய பாக்கியம். அதேசமயத்தில், நமக்கு ஒரு முக்கிய பொறுப்பும் இருக்கிறது.
2. யெகோவாவின் பெயரைப் பயன்படுத்துவதோடு வேறு என்ன செய்ய வேண்டும்?
2 யெகோவாவின் பெயரைப் பயன்படுத்தினால் மட்டும் அவருடைய ஆசீர்வாதத்தை பெற்றுவிட முடியாது. அவருடைய ஒழுக்க நெறிகளுக்கு இசைவாக வாழவும் வேண்டும். அதனால்தான், ‘தீமையை விட்டு விலகும்படி’ பைபிள் நம்மை உற்சாகப்படுத்துகிறது. (சங். 34:14) “யெகோவாவின் பெயரை நோக்கிக் கூப்பிடுகிறவர்கள் அநீதியைக் கைவிட வேண்டும்” என்று பவுல் தெளிவாகச் சொன்னார். (2 தீமோத்தேயு 2:19-ஐ வாசியுங்கள்.) யெகோவாவின் சாட்சிகளான நாம், அவருடைய பெயரை பயன்படுத்துவதில் பேர்போனவர்கள். ஆனால், நாம் எப்படி ‘அநீதியை கைவிடுவது’?
தீமையை விட்டு “விலகிப்போங்கள்”
3, 4. பைபிள் அறிஞர்கள் எதைப் பற்றி ஆராய்ச்சி செய்தார்கள்?
3 “கடவுள் போட்டிருக்கிற உறுதியான அஸ்திவாரம்” பற்றியும் அஸ்திவாரத்தில் செதுக்கப்பட்ட இரண்டு வாக்கியங்களைப் பற்றியும் 2 தீமோத்தேயு 2:19 சொல்கிறது. “தமக்குரியவர்களை யெகோவா அறிந்திருக்கிறார்” என்ற முதல் வாக்கியம் எண்ணாகமம் 16:5-லிருந்து எடுக்கப்பட்டது. (முந்தைய கட்டுரையைப் பாருங்கள்.) “யெகோவாவின் பெயரை நோக்கிக் கூப்பிடுகிறவர்கள் அநீதியைக் கைவிட வேண்டும்” என்ற இரண்டாம் வாக்கியம் எங்கிருந்து எடுக்கப்பட்டது என்று பைபிள் அறிஞர்கள் பல காலமாக ஆராய்ந்தார்கள்.
4 பவுல் இந்த வார்த்தைகளை வேறொரு வசனத்திலிருந்து எடுத்திருப்பதுபோல் தெரிகிறது; ஆனால், எந்த வசனம் என்று தெரியவில்லை. ஏனென்றால், பைபிளில் இந்த வார்த்தைகள் வேறெங்குமே இல்லை. அப்படியென்றால் இந்த இரண்டாம் வாக்கியம், எண்ணாகமம் 16-ஆம் அதிகாரத்திலுள்ள கோராகு பற்றிய பதிவோடு, அதாவது முதல் வாக்கியத்தோடு சம்பந்தப்பட்டிருக்க வேண்டும். எப்படி என்று பார்க்கலாம்.
5-7. எந்தச் சம்பவத்தை மனதில் வைத்து பவுல் 2 தீமோத்தேயு 2:19-ஐ எழுதினார்? (ஆரம்பப் படத்தைப் பாருங்கள்.)
5 எலியாபின் குமாரர்கள் தாத்தானும் அபிராமும் கோராகுவுடன் சேர்ந்துகொண்டு மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாகச் செயல்பட்டார்கள் என்று எண்ணாகமம் 16:1-5-ல் வாசிக்கிறோம். யெகோவாதான் மோசேயை நியமித்திருந்தார். ஆனால், அவர்கள் மோசேயை எதிர்த்து, யெகோவாவுடைய ஏற்பாட்டை அவமதித்தார்கள். இது யெகோவாவுக்கு உண்மையோடு இருந்த மற்றவர்களையும் பாதித்தது. அந்த வெளிவேஷக்காரர்களை அழிப்பதற்குமுன் தம் உண்மையுள்ள மக்களுக்கு யெகோவா ஒரு முக்கியமான கட்டளையைக் கொடுத்தார்.
6 “யெகோவா மோசேயிடம், ‘“கோராகு, தாத்தான், அபிராம் ஆகியோருடைய கூடாரங்களைவிட்டுத் தள்ளிப்போங்கள்!” என்று நீ மக்களிடம் சொல்’ என்றார். பின்பு, மோசே எழுந்து தாத்தானிடமும் அபிராமிடமும் போனார், இஸ்ரவேல் பெரியோர்களும் அவருடன் போனார்கள். அவர் மக்களை நோக்கி, ‘தயவுசெய்து இந்தப் பொல்லாத ஆட்களுடைய கூடாரத்தைவிட்டு விலகிப்போங்கள், அவர்களுடைய பொருள்கள் ஒன்றையும் தொடாதீர்கள்; இல்லாவிட்டால், அவர்களுடைய பாவங்களுக்காக நீங்களும் அழிந்துபோவீர்கள்’ என்றார். உடனே, கோராகு, தாத்தான், அபிராம் ஆகியோருடைய கூடாரங்களைச் சுற்றிலும் இருந்தவர்கள் விலகிப்போனார்கள்; தாத்தானும் அபிராமும் தங்கள் கூடாரங்களைவிட்டு வெளியே வந்து, தங்களுடைய மனைவிகளோடும் மகன்களோடும் சிறு பிள்ளைகளோடும் வாசலில் நின்றார்கள்.” (எண். 16:23-27, NW) அதன்பின் யெகோவா அவர்களை அழித்தார். ‘அநீதியை கைவிட்டு’ தமக்கு உண்மையோடு இருந்த மக்களைக் காப்பாற்றினார்.
7 இதிலிருந்து என்ன தெரிகிறது? “யெகோவாவின் பெயரை நோக்கிக் கூப்பிடுகிறவர்கள் அநீதியைக் கைவிட வேண்டும்” என்ற இரண்டாம் வாக்கியம் எண்ணாகமம் 16:5, 23-27-லுள்ள சம்பவத்தோடு சம்பந்தப்பட்டிருக்கிறது. எனவே இரண்டு வாக்கியங்களும் ஒரே சம்பவத்திலிருந்து எடுக்கப்பட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது. 2 தீமோத்தேயு 2:19-லிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? மனதிற்குள் நாம் என்ன நினைக்கிறோம் என்பதுகூட யெகோவாவுக்குத் தெரியும். தமக்கு யாரெல்லாம் உண்மையாக இருக்கிறார்கள் என்பதை அவர் அறிந்திருக்கிறார். பொல்லாத ஆட்களை விட்டு நாம் விலகியிருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.
‘முட்டாள்தனமான அர்த்தமற்ற விவாதங்களை ஒதுக்கித்தள்ளுங்கள்’
8. யெகோவாவின் பெயரைப் பயன்படுத்துவதோ, சபையில் ஒருவராக இருப்பதோ மட்டும் ஏன் போதாது?
8 மோசேயின் காலத்தில் நடந்த இந்த சம்பவங்களைப் பயன்படுத்தி பவுல் தீமோத்தேயுவுக்கு ஒரு முக்கியமான விஷயத்தை நினைவுபடுத்தினார். யெகோவாவோடுள்ள பந்தத்தைப் பாதிக்க தீமோத்தேயு எதையும் அனுமதிக்க கூடாது என்பதை பவுல் வலியுறுத்தினார். யெகோவாவின் பெயரைப் பயன்படுத்துவதோ, கிறிஸ்தவ சபையில் ஒருவராக இருப்பதோ மட்டும் போதாது. இது மோசேயின் காலத்திலும் பவுலின் காலத்திலும் நடந்த சம்பவங்களிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. யெகோவாவின் உண்மை ஊழியர்கள் அநீதியைக் கைவிடுவதில் தீர்மானமாக இருக்க வேண்டும். பவுலின் வார்த்தைகள் தீமோத்தேயுவுக்கு எப்படி உதவியது? நமக்கு எப்படி உதவும்?
9. ‘முட்டாள்தனமான அர்த்தமற்ற விவாதங்கள்’ சபையை எப்படி பாதித்தது?
9 கிறிஸ்தவர்கள் எப்படிப்பட்ட விஷயங்களை “கைவிட வேண்டும்” என்று பைபிள் சொல்கிறது? “வார்த்தைகளைக் குறித்துச் சண்டை போட வேண்டாம்,” ‘வீண் பேச்சுகளை அறவே தவிர்க்க’ வேண்டும் என்று பவுல் தீமோத்தேயுவுக்குச் சொன்னார். (2 தீமோத்தேயு 2:14, 16, 23-ஐ வாசியுங்கள்.) ஏனென்றால், சபைக்குள் சிலர் விசுவாசதுரோக போதனைகளைப் பரப்பினார்கள். மேலும் சிலர் முரண்பாடான கருத்துக்களைச் சபைக்குள் புகுத்தினார்கள். இதில் சில விஷயங்கள் பைபிளுக்கு விரோதமாக இல்லாவிட்டாலும் அவை சபைக்குள் பிரிவினையை ஏற்படுத்தியது. இதனால் வாக்குவாதமும் சண்டையும்தான் வந்தது. அதனால்தான், ‘முட்டாள்தனமான அர்த்தமற்ற விவாதங்களை ஒதுக்கிவிடுங்கள்’ என்று பவுல் அறிவுரை கொடுத்தார்.
10. விசுவாசதுரோகக் கருத்துகளைக் கேள்விப்படும்போது நாம் என்ன செய்ய வேண்டும்?
10 முதல் நூற்றாண்டைப்போல் இன்று விசுவாச துரோகிகளைச் சபைக்குள் நாம் பார்ப்பதில்லை. ஆனால், விசுவாசதுரோக கருத்துகள் வேறு எந்த விதத்தில் தெரியவந்தாலும் சரி, அதை நாம் முழுமையாகத் தவிர்க்க வேண்டும். விசுவாசதுரோகிகளுடன் நாம் எந்தவொரு தொடர்பும் வைத்துக்கொள்ள கூடாது. இன்டர்நெட் மூலமாக அவர்கள் வெளியிடும் தகவல்களை வாசிக்கவும் கூடாது, நம் கருத்துகளைத் தெரிவிக்கவும் கூடாது. அவர்களுக்கு உதவும் எண்ணத்தோடுகூட அவர்களிடம் பேச கூடாது. அப்படி செய்தால் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் போய்விடுவோம். எனவே, யெகோவாவின் மக்களாக நாம் விசுவாசதுரோகக் கருத்துகளை “கைவிட வேண்டும்.”
விசுவாசதுரோகிகளுடன் வாக்குவாதம் செய்யாதீர்கள் (பாரா 10)
11. சபையின் சமாதானத்தை வேறெதுவும் குலைத்துப்போடலாம்? அப்போது மூப்பர்கள் என்ன செய்ய வேண்டும்?
11 கருத்து வேறுபாடுகளும் சபையின் சமாதானத்தைக் குலைத்துப்போடலாம். உதாரணத்திற்கு, பொழுதுபோக்கு விஷயத்தில் வரும் கருத்து வேறுபாடு ‘முட்டாள்தனமான அர்த்தமற்ற விவாதத்தில்’ கொண்டுபோய்விடலாம். யெகோவாவுடைய ஒழுக்க நெறிகளுக்கு எதிரான பொழுதுபோக்கில் ஈடுபடுவது தவறில்லை என்று யாராவது சொன்னால் மூப்பர்கள் என்ன செய்வார்கள்? வாக்குவாதங்களைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காக கண்டும்காணாமல் விட்டுவிடுவார்களா? இல்லை, சரியான நடவடிக்கை எடுப்பார்கள். (சங். 11:5; எபே. 5:3-5) அதேசமயம், மூப்பர்கள் தங்களுடைய சொந்த கருத்துகளைச் சபையார்மீது திணிக்க மாட்டார்கள். “உங்கள் பொறுப்பிலுள்ள கடவுளுடைய மந்தையை . . . மேய்த்துவாருங்கள்; கடவுளுடைய சொத்தாக இருக்கிற மந்தையின் மீது ஆதிக்கம் செலுத்தாமல், மந்தைக்கு முன்மாதிரிகளாக இருங்கள்” என்ற பைபிள் ஆலோசனையை மூப்பர்கள் பின்பற்றுகிறார்கள்.—1 பே. 5:2, 3; 2 கொரிந்தியர் 1:24-ஐ வாசியுங்கள்.
12, 13. (அ) பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில் எந்த பைபிள் நியமங்கள் உதவும்? (ஆ)வேறு எந்த விஷயங்களுக்கும் இந்த நியமம் பொருந்தும்?
12 எந்தத் திரைப்படங்களைப் பார்ப்பது, எந்த வீடியோ கேம்களை விளையாடுவது, எந்தப் புத்தகங்களைப் படிப்பது, எந்தப் பாடல்களைக் கேட்பது என்று அமைப்பு சொல்வது கிடையாது. ஏனென்றால், ‘நன்மை எது, தீமை எது எனக் கண்டறிய தங்களுடைய பகுத்தறியும் திறன்களைப் பயன்படுத்தும்படி’ பைபிள் ஒவ்வொருவரையும் உற்சாகப்படுத்துகிறது. (எபி. 5:14) சரியான பொழுதுபோக்கைத் தேர்ந்தெடுக்க பைபிள் நியமங்கள் நமக்கு உதவும். நம் வாழ்க்கையில் எல்லாவற்றிலும், ‘நம் எஜமானருக்கு எது பிரியமானதென்று எப்போதும் நிச்சயப்படுத்திக்கொள்ள’ வேண்டும். (எபே. 5:10) குடும்பத்தினர் எப்படிப்பட்ட பொழுதுபோக்கில் ஈடுபடுகிறார்கள் என்று கவனிக்கும் பொறுப்பு குடும்பத் தலைவர்களுக்கு இருக்கிறது.—1 கொ. 11:3; எபே. 6:1-4.
13 ஆடை, அலங்காரம், உணவு, ஆரோக்கியம் போன்ற விஷயங்களுக்கும் இந்த பைபிள் நியமங்கள் பொருந்தும். இப்படிப்பட்ட விஷயங்களில் நம்முடைய சொந்த கருத்துகளை மற்றவர்கள் மீது திணிக்கக் கூடாது. ஏனென்றால், தீர்மானம் எடுக்கும் உரிமை எல்லோருக்கும் இருக்கிறது. எனவே, மற்றவர்கள் எடுக்கும் தீர்மானத்தைப் பற்றி வாக்குவாதம் செய்யக் கூடாது. ‘நம் எஜமானரின் ஊழியக்காரன் சண்டைபோடக் கூடாது; மாறாக, எல்லாரிடமும் மென்மையாய் [சாமர்த்தியமாய், அடிக்குறிப்பு] நடந்துகொள்கிறவனாக இருக்க வேண்டும்’ என்று பைபிள் அனைவரையும் உற்சாகப்படுத்துகிறது.—2 தீ. 2:24.
கெட்ட சகவாசங்களைத் தவிர்த்திடுங்கள்
14. கெட்ட சகவாசங்களைத் தவிர்க்க பவுல் என்ன உதாரணத்தைச் சொன்னார்?
14 “யெகோவாவின் பெயரை நோக்கிக் கூப்பிடுகிறவர்கள்” வேறு என்ன வழிகளில் “அநீதியைக் கைவிட வேண்டும்?” கெட்ட சகவாசங்களைத் தவிர்ப்பதன் மூலம் இதைச் செய்யலாம். அஸ்திவாரத்தைப் பற்றிய உதாரணத்தைச் சொன்ன பிறகு பவுல் வேறொரு உதாரணத்தைச் சொன்னார். “ஒரு பெரிய வீட்டில் தங்கப் பாத்திரங்களும் வெள்ளிப் பாத்திரங்களும் மட்டுமல்ல, மரப் பாத்திரங்களும் மண் பாத்திரங்களும் உண்டு. அவற்றில் சில கண்ணியமான காரியத்திற்காகவும், மற்றவை கண்ணியமற்ற காரியத்திற்காகவும் பயன்படுத்தப்படுகின்றன.” (2 தீ. 2:20, 21) கெட்ட சகவாசங்களில் இருந்து பிரிந்திருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதற்காக பவுல் இந்த உதாரணத்தைச் சொன்னார்.
15, 16. பவுல் சொன்ன உதாரணத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
15 அவர் சொன்ன உதாரணத்தின் அர்த்தம் என்ன? கிறிஸ்தவ சபையை ‘ஒரு பெரிய வீட்டிற்கும்’ அதில் இருக்கும் ‘பாத்திரங்களை’ சபையிலுள்ள ஒவ்வொரு நபருக்கும் ஒப்பிட்டார். அசுத்தமான அல்லது ஆபத்தான பொருள்களினால் நல்ல பாத்திரங்கள் நாசமடையலாம். அதனால், நாம் சுத்தமான பாத்திரங்களை, அதுவும் சமையலுக்குப் பயன்படுத்தும் பாத்திரங்களை, இப்படிப்பட்ட ஆபத்தான பொருள்களிலிருந்து பிரித்து வைப்போம்.
16 அதேபோல் சபையில் யெகோவாவின் நியமங்களை தொடர்ந்து அவமதிக்கும் நபர்களிடம் இருந்து அவருடைய மக்கள் பிரிந்திருக்கிறார்கள். (1 கொரிந்தியர் 15:33-ஐ வாசியுங்கள்.) சபைக்கு உள்ளேயே நாம் ‘இப்படிப்பட்டவர்களை விட்டு விலக’ வேண்டுமென்றால் சபைக்கு வெளியே இருப்பவர்களிடம் நாம் எவ்வளவு ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்! அவர்களில் பலர் ‘பண ஆசைபிடித்தவர்களாக, பெற்றோருக்குக் கீழ்ப்படியாதவர்களாக, நன்றிகெட்டவர்களாக, அவதூறு பேசுகிறவர்களாக, கொடூரமானவர்களாக, நல்ல காரியங்களை விரும்பாதவர்களாக, காட்டிக்கொடுக்கிறவர்களாக, கடவுளை நேசிக்காமல் சுகபோகங்களை நேசிக்கிறவர்களாக இருக்கிறார்கள்.’—2 தீ. 3:1-5.
யெகோவா நம் தீர்மானங்களை ஆசீர்வதிப்பார்
17. ‘அநீதியை கைவிடுவதில்’ இஸ்ரவேலர்கள் எப்படிச் சிறந்த முன்மாதிரி வைத்தார்கள்?
17 “கோராகு, தாத்தான், அபிராம் ஆகியோருடைய கூடாரங்களைவிட்டுத் தள்ளிப்போங்கள்” என்று இஸ்ரவேலர்களுக்கு யெகோவா கட்டளையிட்டபோது அவர்கள் ‘உடனே விலகிப்போனார்கள்.’ (எண். 16:24, 27, NW) அதைச் செய்ய அவர்கள் தயங்கிக்கொண்டோ தாமதித்துக்கொண்டோ இருக்கவில்லை. “கோராகு, தாத்தான், அபிராம் ஆகியோருடைய கூடாரங்களைச் சுற்றிலும் இருந்தவர்கள் விலகிப்போனார்கள்.” யெகோவாவுக்கு உண்மையோடு இருந்தவர்கள் முழு மனதோடு கீழ்ப்படிந்தார்கள். யெகோவாவின் பக்கம் உறுதியாக நின்றார்கள்; ‘அநீதியை கைவிட்டார்கள்.’ இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
18. தீமோத்தேயுவுக்கு பவுல் என்ன அறிவுரை கொடுத்தார்?
18 யெகோவாவோடு இருக்கும் பந்தத்தைக் காத்துக்கொள்ள நாம் தீர்மானமாய் இருக்க வேண்டும்; அதைப் பாதிக்கும் எந்த விஷயத்தையும் உடனடியாக வேரோடு பிடுங்கி எறிய வேண்டும். “இளமைப் பருவத்திற்குரிய ஆசைகளிலிருந்து நீ விலகியோடு” என்று பவுல் தீமோத்தேயுவிடம் சொன்னார். (2 தீ. 2:22) பவுல் இதைச் சொன்ன சமயத்தில் தீமோத்தேயுவுக்கு 30 வயதிற்கு மேல் இருக்கும். ‘இளமைப் பருவத்திற்குரிய ஆசைகள்’ எந்த வயதில் வேண்டுமானாலும் வரலாம். அப்படிப்பட்ட ஆசைகளிலிருந்து அவர் ‘விலகியோட’ வேண்டியிருந்தது, அதாவது ‘அநீதியை கைவிட வேண்டியிருந்தது.’ இயேசுவும் இதுபோன்ற ஒரு அறிவுரையைக் கொடுத்தார்: “நீ பாவம் செய்ய உன் கண் காரணமாக இருந்தால், அதைப் பிடுங்கிப்போடு.” (மத். 18:9) இந்த ஆலோசனைக்கு நாம் உடனடியாகக் கீழ்ப்படிய வேண்டும். அப்போதுதான், யெகோவாவோடுள்ள நம் பந்தத்தைக் காத்துக்கொள்ள முடியும்.
19. கடவுளோடு இருக்கும் பந்தத்தைக் காக்க சிலர் என்ன செய்கிறார்கள்?
19 குடிகாரர்களாக இருந்த சிலர் யெகோவாவின் சாட்சியான பிறகு குடிக்கவே கூடாது என்ற முடிவுக்கு வந்திருக்கிறார்கள். இன்னும் சிலர் தங்கள் மனதில் தவறான ஆசைகளைத் தூண்டிவிடும் சில பொழுதுபோக்குகளைத் தவிர்த்திருக்கிறார்கள். (சங். 101:3) இந்த உதாரணத்தைக் கவனியுங்கள். சத்தியத்திற்கு வருவதற்குமுன் ஒரு சகோதரருக்கு ஒழுக்கங்கெட்ட டான்ஸ் பார்ட்டிகளுக்கு செல்வது ரொம்ப பிடிக்கும். ஆனால், யெகோவாவின் சாட்சியான பிறகு டான்ஸ் ஆடுவதையே விட்டுவிட்டார். ஏனென்றால், அது தவறான ஆசைகளைத் தன் மனதில் மீண்டும் தூண்டிவிடும் என்று பயந்தார். மது அருந்துவது, நடனம் ஆடுவது போன்ற விஷயங்கள் தவறு கிடையாது. ஆனால், அது யெகோவாவோடுள்ள நம் பந்தத்திற்கு உலை வைக்கும் என்றால், அதை உடனடியாகத் தவிர்க்க வேண்டும்.
20. ‘அநீதியைக் கைவிடுவது’ சுலபமாக இல்லாவிட்டாலும், எது நமக்கு ஆறுதலளிக்கிறது?
20 யெகோவாவின் சாட்சிகள் என்று அழைக்கப்படுவது நமக்குக் கிடைத்த மிகப்பெரிய பாக்கியம். அதோடு நமக்கு ஒரு முக்கிய பொறுப்பும் இருக்கிறது. நாம் “அநீதியைக் கைவிட வேண்டும்,” அதாவது “தீமையை விட்டு விலகி” இருக்க வேண்டும். (சங். 34:14) அதைச் செய்வது எப்போதும் சுலபமில்லை. ஆனால், அப்படிச் செய்தால் யெகோவா நம் தீர்மானங்களை ஆசீர்வதிப்பார். “தமக்குரியவர்களை,” அதாதவது அவருக்குப் பிரியமாக வாழ்பவர்களை யெகோவா எப்போதும் நேசிக்கிறார். இதைத் தெரிந்துகொள்வது எவ்வளவு ஆறுதலாக இருக்கிறது!—2 தீ. 2:19; 2 நாளாகமம் 16:9 முதல் பகுதியை வாசியுங்கள்.