“உங்களுக்குச் சமாதானம் உண்டாவதாக”
“இயேசு வந்து அவர்கள் நடுவில் நின்று: ‘உங்களுக்குச் சமாதானம் உண்டாவதாக’ என்று அவர்களுக்குச் சொன்னார்.”—யோவான் 20:19, NW.
“உலகமுழுவதும் தீயோனுக்குள் கிடக்கிறது.” (1 யோவான் 5:19, தி.மொ.) யோவானின் நாளில் இது உண்மையாயிருந்தது, இன்று தனிப்பட்டவர் வன்முறை, திகிலாட்சி முறை, போர்கள், ஊழல்கள் ஆகியவை அச்சுறுத்தும் வண்ணம் பெருகிக்கொண்டிருக்க, இது அப்போதிருந்ததைவிட மிகத் தெளிவாய்த் தெரிகிறது. மேலும், போப், தேசீயத் தலைவர்கள் மற்றும் ஐ.நா. பெரும் முயற்சிகள் எடுப்பினும், மனிதருடைய முயற்சியால் உலக சமாதானத்தை அடையும் எவ்வித நம்பிக்கையையும் சாத்தியமல்லவென தேவாவியால் ஏவப்பட்ட யோவானின் கூற்று தள்ளுகிறது. ஏன்? “துன்மார்க்கருக்குச் சமாதானம் இல்லையென்று என் தேவன் சொல்லுகிறார்.”—ஏசாயா 57:21.
2 எனினும் “சமாதானம்” என்ற சொல், போர் இல்லாமையை மட்டுமல்லாமல் மற்றவற்றையும் குறிக்கும். “அமைதியற்ற அல்லது துயர வேதனையுள்ள எண்ணங்களுக்கு அல்லது உணர்ச்சி வேகங்களுக்கு விடுதலையாயிருக்கும் மன அல்லது ஆவிக்குரிய நிலைமை: மன மற்றும் இருதயத்தின் அமைதிநிலை”யும் சமாதானம் ஆகும். எனினும் “சமாதானம்” என்பதற்கு எபிரெய சொல்லும் (ஷிலோஹ்ம்) கிரேக்கச் சொல்லும் (சைரீனி) இவற்றைப் பார்க்கிலும் விரிவான கருத்தை உடையவை. “சமாதானத்துடனே போ,” என்று பிரிந்து செல்கையில் கூறும் வார்த்தைகளைப்போல் அவை சுகநலத்தையும் குறிக்கின்றன. (1 சாமுவேல் 1:17; 29:7; லூக்கா 7:50; 8:48) தம்முடைய மரணத்தைச் சூழ்ந்த அதிர்ச்சியுற்றக் காலப் பகுதியின்போது தம்முடைய சீஷர்களின்பேரில் இயேசுவுக்கிருந்த அன்புள்ள அக்கறையை மதித்துணர இது நமக்கு உதவிசெய்கிறது.
3 இயேசு பொ.ச. 33-ம் ஆண்டில் நிசான் 14, வெள்ளிக்கிழமை அன்று மரித்தார். ஞாயிறு, நிசான் 16-ல் அவர் உயிர்த்தெழுப்பப்பட்டார். தம்முடைய சீஷர்களின் சுகநலத்தில் அவர் எப்பொழுதும் ஆழ்ந்த அக்கறை கொண்டிருந்ததுபோல், அப்பொழுதும் அவர்களைத் தேடிக் கண்டுபிடித்தார். அவர்களை எங்கே கண்டார்? “யூதருக்குப் பயந்து” பூட்டிய கதவுகளுக்குப் பின்னால் இருந்தார்கள். அவர்கள் கவலையுடனும் பயத்துடனும் இருந்தது விளங்கிக்கொள்ளக் கூடியதே. ஆனால் இயேசு: “உங்களுக்குச் சமாதானம் உண்டாவதாக,” என்று சொன்னார். (யோவான் 20:19-21, 26, NW) பின்னால், பரிசுத்த ஆவியால் பலப்படுத்தப்பட்டுத் தேறினார்கள். தங்களுக்கு நியமிக்கப்பட்ட பிரசங்க வேலையைத் தைரியத்துடன் நிறைவேற்றி, தெய்வீகச் சமாதானத்தை அடைய பலருக்கு உதவி செய்தார்கள்.
இன்று தெய்வீகச் சமாதானம்
4 நாம் முடிவு காலத்தில், “கையாளுவதற்குக் கடினமான கொடிய காலத்தில்” வாழ்கிறோம். (2 தீமோத்தேயு 3:1, NW) வெளிப்படுத்தின விசேஷத்தில் முன்னறிவித்துள்ள குதிரை வீரர்கள் பூமியினூடே சவாரி செய்கின்றனர்—போர்கள், உணவு குறைபாடுகள், நோயினால் உண்டாகும் மரணம் ஆகியவற்றிலிருந்து நீங்கள் இதைக் காணலாம். (வெளிப்படுத்துதல் 6:3-8) தங்களைச் சுற்றியுள்ள நிலைமைகளாலும் யெகோவாவின் ஜனங்கள் பாதிக்கப்படுகிறார்கள். அப்படியானால் மனதிலும் இருதயத்திலும் தெய்வீகச் சமாதானத்தை நீங்கள் எப்படிக் காத்துவர முடியும்? ஆறுதலுக்கும் சமாதானத்துக்கும் மகா மூலக்காரணரிடம் நெருங்கி இருந்துவருவதன் மூலமே. முந்தின கட்டுரையில் காட்டினபடி, இவ்வாறு நெருங்கியிருப்பதற்கு அடிக்கடி செய்யும் ஜெபமும் மன்றாட்டும் தேவைப்படுகின்றன. இம்முறையில் “எல்லா புத்திக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இருதயங்களையும் உங்கள் சிந்தைகளையும் [மன சக்திகளையும், NW] கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.”—பிலிப்பியர் 4:6, 7.
5 இவ்வார்த்தைகளை எழுதின அப்போஸ்தலன் பவுல் தானேயும் ஆபத்துகளையும் இக்கட்டுகளையும் சகித்திருந்தான். அவன் யூதர்களாலும் ரோமராலும் சிறைப்படுத்தப்பட்டு அடிக்கப்பட்டான். அவன் கல்லெறியப்பட்டு செத்துவிட்டதாக விடப்பட்டான். அந்நாட்களில் பயணஞ்செய்வது அபாயமிக்கதாயிருந்தது; பவுல் மூன்று தடவைகள் கப்பற்சேதத்தில் அகப்பட்டான், வழிப்பறிக்கொள்ளைக்காரர்களால் ஆபத்துண்டாகும் நிலையில் அடிக்கடி இருந்தான். தூக்கமில்லாமல் பல இரவுகளைக் கழித்தான், மேலும் அடிக்கடி குளிரிலும், பசியிலும், தாகத்திலும் வருந்தினான். இந்த எல்லாவற்றிற்கும் மேலாக, “எல்லாச் சபைகளையும் பற்றிய கவலையும்” தன்னை நாள்தோறும் நெருக்குவதை அவன் உணர்ந்தான். (2 கொரிந்தியர் 11:24-28, தி.மொ.) ஆகவே பவுல், தன் சொந்த விரிவான அனுபவத்திலிருந்து, நம்முடைய இருதயங்களைக் காத்துக்கொள்ளும் “தேவ சமாதானம்” எவ்வளவு முக்கியமென அறிந்திருந்தான்.
6 “தேவ சமாதானம்” கடவுளுடன் நல்ல உறவைப் பிரதிபலிக்கும் மிகுந்த அமைதியையும் மனசாந்தத்தையும் உணரும் உணர்ச்சியென விளக்கலாம். இது கிறிஸ்தவர்களுக்கு, முக்கியமாய் அவர்கள் துன்புறுத்தலை அல்லது கொடுந் துன்பத்தை எதிர்ப்படுகையில் அவ்வளவு மிக முக்கியமானது. ஏன்? ஏனெனில், நாம் எல்லாரும் அபூரணர்; ஆகவே, பிரச்னைகள், நெருக்கடி, எதிர்ப்பு அல்லது பல்வேறு வகைகளான தடைகள் ஆகியவற்றால் தொல்லைப்படுத்தப்பட்டால், நாம் எளிதில் பயங்கொள்ளக்கூடும். இது நம்முடைய உத்தமத்தில் உறுதியாய் நிலைத்திருக்கத் தவறுவதற்கு வழிநடத்தலாம். அவ்வாறு தவறுவது கடவுளுடைய பெயரின்பேரில் நிந்தையைக் கொண்டுவரும், யெகோவாவின் தயவை நாம் இழந்துவிட செய்யும், மேலும் நாம் நித்திய ஜீவனை இழப்பதற்கும் வழிநடத்தக்கூடும். இத்தகைய சவால்களை வெற்றிகரமாய் எதிர்ப்பட நமக்கு உதவிசெய்யும் “தேவ சமாதானத்தை” அடைய கடுமுயற்சி செய்வது எவ்வளவு இன்றியமையாதது. நிச்சயமாகவே, இந்தச் சமாதானம் நம்முடைய பரமத் தகப்பன் நமக்குக் கிடைக்கச் செய்திருக்கும் ‘நன்மையான ஈவுகளிலும் பூரணமான வரங்களிலும்’ ஒன்றாகும்.—யாக்கோபு 1:17.
7 சில ஆட்கள் அமைதியுடனும் நம்பிக்கையுடனும் வாழ்க்கை நடத்துவதை நீங்கள் கண்டிருக்கலாம் அநேகமாய் இது இயல்பான திறமை, குடும்பச் செல்வாக்கு, செல்வம், கல்வி, அல்லது இத்தகைய மற்றக் காரணங்களினிமித்தம் இருக்கலாம். “தேவ சமாதானம்” மிகவும் வேறுபட்டது. இது அனுகூலமான சூழ்நிலைமைகளின்பேரில் ஆதாரங்கொண்டில்லை, மனிதத் திறமை அல்லது பகுத்தறிவின் பலனாக உண்டாவதுமில்லை. இது கடவுளிலிருந்து தோன்றுகிறது “எல்லாப் புத்திக்கும் மேலானது.” “மனிதர் விளங்கிக்கொள்ளும் தன்மைக்கு அப்பாற்பட்ட . . . தேவ சமாதானம்,” என்று J.B. ஃபிலிப்ஸின் மொழிபெயர்ப்பு பிலிப்பியர் 4:7-ஐ மொழிபெயர்த்திருக்கிறது. அபாயமான பிரச்னைகளை, உடலுக்குத் தீங்கை, அல்லது மரணத்தையும் கிறிஸ்தவர்கள் எதிர்ப்படும் முறையைக் கண்டு உலகப்பிரகாரமான மக்கள் அடிக்கடி வியப்படைகின்றனர்.
8 ஆப்பிரிக்க நாடு ஒன்றில், பெரும்பாலும் அவ்விடத்துக் கத்தோலிக்கரால் தூண்டப்பட்டு, யெகோவாவின் சாட்சிகள் பயங்கரவாதிகளென குற்றஞ்சாட்டப்பட்டனர்; அங்கே கிறிஸ்தவ கூட்டத்தை நடத்தின யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர் இதற்குத் தற்கால உதாரணமாயிருக்கிறார். திடீரென்று, இராணுவ காவற்படையினர் ஈட்டி சொருகிய துப்பாக்கிகளுடன் தோன்றினர். பெண்களையும் பிள்ளைகளையும் வீட்டுக்கு அனுப்பிவிட்டு ஆண்களை அவர்கள் அடிக்கத் தொடங்கினர். அந்தச் சாட்சி நினைவுபடுத்திச் சொல்வதாவது: “நாங்கள் நடத்தப்பட்ட முறையை விவரிக்க எனக்குச் சொற்களே இல்லை. நாங்கள் அடித்துச் சாகடிக்கப்படுவோமென அந்தப் படைத் தலைவர் நேரடியாக அறிவித்தார். பருத்த மரத்தடியால் நான் அப்பேர்ப்பட்ட வண்ணம் அடிக்கப்பட்டதால் பின்னால் 90 நாட்கள் இரத்தம் வாந்தியெடுத்தேன். ஆனால் என் தோழர்களின் உயிர்களைப் பற்றியே நான் கவலையாயிருந்தேன். தம்முடைய செம்மறியாடுகளாகிய இவர்களின் உயிர்களைக் கவனித்துக் காக்கும்படி ஜெபத்தில் நான் யெகோவாவைக் கேட்டேன்.” அவர்களெல்லாரும் தப்பிப் பிழைத்தார்கள். பயங்கர துன்பத்தின்போது மன அமைதியுடனிருப்பதற்கும் மற்றவர்களை அன்புடன் எண்ணிப் பார்ப்பதற்கும் எத்தகைய ஓர் முன்மாதிரி! ஆம், நம்முடைய அன்புள்ள பரமத் தகப்பன் தம்முடைய உண்மையுள்ள ஊழியரின் வேண்டுதல்களுக்கு நிச்சயமாய்ப் பதில்கொடுத்து, அவர்களுக்குச் சமாதானத்தை அருளுகிறார். இந்த நிகழ்ச்சியில் திகைப்படைந்த போர்ச் சேவகரில் ஒருவன், சாட்சிகளின் கடவுள் “மெய்யானவராக இருக்க வேண்டும்” என்று கூறினான்.
9 இந்த இக்கட்டான காலங்களில் கிறிஸ்தவர்கள் பலருக்கு ஏமாற்றமும் சோர்வும் உண்டாக்கும் உணர்ச்சியைத் தரும் பிரச்னைகள் உண்டு. மனசமாதானத்தை இழக்காமல் தொடர்ந்து காத்துவருவதற்குச் சிறந்த வழி பைபிளை வாசித்து அதன்பேரில் ஆழ்ந்த சிந்தனை செய்வதாகும். தொடர்ந்து முன்னேறவும் உறுதியாய் நிலைநிற்கவும் பலத்தையும் தீர்மானத்தையும் இது ஒருவருக்குள் புகுத்தி ஊக்கப்படுத்தும். ‘தேவனுடைய வார்த்தை ஜீவனும் வல்லமையும் உள்ளது.’—எபிரெயர் 4:12.
10 எனினும், பைபிள் கிடைக்கக்கூடாதபோது துன்பம் நமக்குத் திடீரென ஏற்பட்டால் என்ன செய்வது? உதாரணமாக, ஒரு கிறிஸ்தவன் திடீரென கைது செய்யப்பட்டு பைபிளில்லாமல் சிறையில் அடைக்கப்படலாம். இப்படிப்பட்ட சமயத்தில், பிலிப்பியர் 4:6, 7; நீதிமொழிகள் 3:5, 6; 1 பேதுரு 5:6, 7; மற்றும் சங்கீதம் 23 ஆகியவற்றைப் போன்ற வசனங்களை நினைவுக்குக் கொண்டுவர முடிவது உண்மையான ஆசீர்வாதமாயிருக்கும். இத்தகைய பகுதிகளை நினைவுக்குக் கொண்டுவரவும் அவற்றின்பேரில் ஆழ்ந்து சிந்திக்கவும் உங்களால் கூடியதாயிருப்பதை நீங்கள் வெகு நன்றியோடு மதிப்பீர்களல்லவா? சிறைச்சாலையின் கடுமையான சூழமைப்பில் அது யெகோவாதாமே உங்களிடம் பேசுவதுபோல் இருக்கும். கடவுளுடைய வார்த்தை, புண்பட்ட மனதை ஆற்றக்கூடும், திடமற்ற இருதயங்களைத் திடப்படுத்தும், மன வேதனையை நீக்கிச் சமாதானத்தால் அதை நிரப்பும். (சங்கீதம் 119:165-ஐப் பாருங்கள்.) ஆம், வேத வசனங்களை நம்முடைய மனதில் ஆழமாய் ஊன்றிப் பதிய வைப்பதற்குத் தக்க சமயம் நமக்கு இன்னும் இருக்கும் இப்பொழுதே அவ்வாறு செய்வது வெகு முக்கியம்.
11 ஆர்த்தர் உவிங்க்ளர் என்பவர், முக்கியமாய் நெதர்லாண்ட்ஸ் நாட்டை நாஜி கைப்பற்றியிருந்த காலத்தில், சாட்சிகள் தங்கள் கிறிஸ்தவ வேலையைத் தலைமறைவாய் நிறைவேற்ற வேண்டியிருந்தபோது, பைபிளை ஆழ்ந்தவண்ணமாய் மதித்துணர்ந்த ஒருவராவர். கெஸ்ட்டாபோ காவற்படையினர் சகோதரர் உவிங்க்ளரைப் பிடிக்கத் தேடியலைந்து கொண்டிருந்தனர். கடைசியாக அவர்கள் அவரைப் பிடித்தபோது தங்களுக்கு இணங்கிப்போகச் செய்ய முயன்றனர். ஆனால் தோல்வியடைந்தனர். அப்பொழுது அவரை உணர்ச்சி இழக்கும் வரை அடித்தனர். அவருடைய பற்கள் தகர்க்கப்பட்டு, கீழ்த்தாடை இணைப்புக் கழற செய்யப்பட்டு, உடல் தோலுரிந்து சதை தெரிய அடிக்கப்பட்டிருந்த இந்நிலையில் அவர் சிறைச்சாலையின் இருண்ட சிறு தனி அறைக்குள் போடப்பட்டார். ஆனால் அவரைக் காவல் காத்தவன் இரக்கத்துடனும் சிநேகப்பான்மையுடனும் இருந்தான். சகோதரர் உவிங்க்ளர் ஜெபத்தில் யெகோவாவின் வழிநடத்துதலைத் தேடினார். மேலும் தனக்கு ஆவிக்குரிய உணவு தேவைப்படுவதை வெகு ஆழ்ந்தவண்ணமாய் உணர்ந்து, உதவிசெய்யும்படி காவல் காப்பவனைக் கேட்டார். பின்னால், அந்தச் சிறை அறை கதவு திறந்தது. ஒரு பைபிள் உள்ளே எறியப்பட்டது. “அந்த இன்பமான சத்திய வார்த்தைகளை அனுபவித்து மகிழ்வது எத்தகைய மகிழ்ச்சியாயிருந்தது . . . நான் ஆவிக்குரிய பிரகாரமாய்ப் பலப்பட்டு வருவதை உணர்ந்தேன்,” என்று சகோதரர் ஊவிங்க்ளர் நினைவுபடுத்திக் கூறினார்.a
தெய்வீகச் சமாதானம் உங்களைப் பாதுகாக்கும்
12 தம்முடைய சமாதானம் “உங்கள் இருதயங்களையும் சிந்தைகளையும் [மன சக்திகளையும், NW] . . . காத்துக்கொள்ளும்,” என்று யெகோவா வாக்குக் கொடுக்கிறார். (பிலிப்பியர் 4:7) இது, அவ்வளவு மிக முக்கியமானது! இருதயம், செயல்நோக்கத்தின் மற்றும் உணர்ச்சி வேகங்களின் இருப்பிடமாகும். இந்தக் கடைசி நாட்களில், தம்முடைய இருதயம் பயத்தால் அல்லது கவலையால் எளிதில் ஊக்கமிழக்கச் செய்யப்படலாம், அல்லது தவறு செய்யும்படி நம்மை வசீகரப்படுத்தலாம். பொது வாழ்க்கை மாதிரி விரைவில் மோசமாகிக்கொண்டு போகிறது. நாம் இடைவிடாமல் எச்சரிக்கையாயிருக்க வேண்டும். உறுதியான இருதயம் தேவைப்படுவதோடுகூட, நம்முடைய “மனசக்திகளையும்” கடவுள் தம்முடைய வார்த்தையின் மூலமும் தம்முடைய சபையின் மூலமும் பலப்படுத்தி வழிநடத்த நாம் இடமளிக்க வேண்டும்.
13 W.E. வைன் என்பவர் சொல்லுகிற பிரகாரம் (“மன சக்திகள்” என்று மொழி பெயர்த்திருக்கும்) கிரேக்கச்சொல் நோயி-மா (no’e-ma) “நோக்கம்” அல்லது “திட்டம்” என்ற எண்ணத்தை உடையது. (An Expository Dictionary of New Testament Words) இவ்வாறு, கடவுளுடைய சமாதானம் நம்முடைய கிறிஸ்தவ நோக்கத்தைப் பலப்படுத்தி, நல்லக் காரணமில்லாமல் நம்முடைய மனதை ஊக்கமிழக்கச் செய்யும் அல்லது மாற்றும் எவ்விதப் போக்குக்கும் எதிராக நம்மைப் பாதுகாக்கும். இவ்வாறு மனச்சோர்வோ தொல்லைகளோ நம்மை எளிதில் விலகிப்போகச் செய்வதில்லை. உதாரணமாக, முழு நேர பயனியர் ஊழியராயிருத்தல் அல்லது ஊழியர்கள் மிகவும் தேவைப்படுகிற இடத்தில் சேவிக்க இடம் மாறிச் செல்லுதல் போன்ற ஏதோ தனிப்பட்ட ஆற்றலில் யெகோவாவைச் சேவிக்க நாம் நோக்கங் கொண்டிருந்தால், அந்த இலக்கை விடாது தொடர “தேவ சமாதானம்” நமக்கு மிகுந்த உதவி செய்யும். (லூக்கா 1:3; அப்போஸ்தலர் 15:36; 19:21; ரோமர் 15:22-24, 28; 1 தெசலோனிக்கேயர் 2:1, 18 ஆகியவற்றை ஒத்துப் பாருங்கள்.) உங்கள் மன சக்திகளை மேலும் பலப்படுத்த கடவுளுடைய வார்த்தையைப் படிப்பதற்கும் கிறிஸ்தவ கூட்டுறவுக்கும் போதிய நேரத்தை ஒதுக்கி வையுங்கள். இவ்வாறு நீங்கள் உங்கள் மனதையும் இருதயத்தையும் சுத்தமான, கட்டியெழுப்பும் எண்ணங்களால் நிரப்புகிறீர்கள். கடவுளுடைய ஏவப்பட்ட “வசனங்களைப்” புரிந்துகொள்ள உங்கள் முழு கவனத்தையும் உட்படுத்தப் போதிய நேரத்தை நீங்கள் ஒதுக்கி வைக்க முடிகிறதா? நீங்கள் அவற்றிற்கு மேலுமதிகக் கவனஞ்செலுத்த வேண்டுமா?
14 “தேவ சமாதானத்தை” அடைவதிலும் அதிலிருந்து நன்மை பெறுவதிலும் இருதயமும் மனதும், அல்லது மன சக்திகளும் உட்படுகின்றனவென நீங்கள் காணலாம். இது பின்வரும் தெய்வீக அறிவுரையில் உறுதிப்படுத்திக் காட்டப்படுகிறது: “என் மகனே, என் வார்த்தைகளைக் கவனி; என் வசனங்களுக்கு உன் செவியைச் சாய். அவைகள் உன் கண்களை விட்டுப் பிரியாதிருப்பதாக; அவைகளை உன் இருதயத்துக்குள்ளே காத்துக்கொள். அவைகளைக் கண்டுபிடிக்கிறவர்களுக்கு அவைகள் ஜீவனும், அவர்கள் உடலுக்கெல்லாம் ஆரோக்கியமுமாம். எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதினிடத்தினின்று ஜீவ ஊற்று[கள்] புறப்படும்.”—நீதிமொழிகள் 4:20-23.
15 யெகோவாவுடன் அன்புமிக்க, நெருங்கிய உறவு கொண்டிருப்பதன் பலனாக உண்டாகும் “தேவ சமாதானம்” நம்முடைய இருதயங்களையும் மன சக்திகளையும் “கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகக் காத்துக்கொள்ளும்.” (பிலிப்பியர் 4:7) இதில் இயேசு என்ன பாகத்தை வகிக்கிறார்? பவுல் பின்வருமாறு விளக்குகிறான்: “நமது பிதாவாகிய கடவுளினிடமிருந்தும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவினிடமிருந்தும் உங்களுக்குக் கிருபையும் [தகுதியற்றத் தயவும், NW] சமாதானமும் உண்டாவதாக: இவர் நமது கடவுளும் பிதாவுமானவரின் சித்தப்படியே இப்பொழுதிருக்கும் பொல்லா யுகத்தினின்று [காரிய ஒழுங்குமுறையினின்று, NW] நம்மை விடுவிக்கும்படி நமது பாவங்களுக்காகத் தம்மையே ஒப்புக்கொடுத்தார்.” (கலாத்தியர் 1:3, 4, தி.மொ.) ஆம், நாம் மீட்கப்படும்படி இயேசு அன்புடன் தம்முடைய உயிரைக் கொடுத்தார். (மத்தேயு 20:28) ஆகவே “கிறிஸ்து இயேசுவுக்குள்ளாகவே” நாம் யெகோவாவுக்கு அவருடைய ஒப்புக்கொடுத்த ஊழியராக ஏற்கத்தகுந்தவர்களாயும் நம்முடைய பாதுகாப்பாயிருக்கக்கூடிய தெய்வீகச் சமாதானத்தை அனுபவிக்கும் நிலையிலும் இருக்க முடியும்.
தெய்வீகச் சமாதானத்தைக் கெடுக்கப் பயமுறுத்தும் அபாயங்கள்
16 கடவுளிடமிருந்து வரும் சமாதானத்தை ஒருமுறை பெற்று அனுபவிக்கையில், அதை இழக்காமல் வைத்திருக்க நாம் மிகுந்தக் கவனம் செலுத்த வேண்டும். பல காரணங்கள் கிறிஸ்தவனிடமிருந்து இந்தச் சமாதானத்தைப் பறித்துப்போடக்கூடும். இவற்றில் மிக அதிகப் பொதுவாயும், நிச்சயமாகவே மிக அதிக அபாயகரமாயும் இருப்பவை வாலிபத்துக்குரிய இச்சைகளாகும். பவுல் தீமோத்தேயுவுக்கு எழுதின இரண்டாம் நிருபத்தில், பின்வரும் அறிவுரையைச் சேர்த்தான், தீமோத்தேயு அச்சமயத்தில் 30-க்குச் சற்று மேற்பட்ட வயதில் இருந்திருக்கலாம்: “பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு நீ விலகியோடி, சுத்த இருதயத்தோடே கர்த்தரைத் தொழுதுகொள்ளுகிறவர்களுடனே, நீதியையும் விசுவாசத்தையும் அன்பையும் சமாதானத்தையும் அடையும்படி நாடு.”—2 தீமோத்தேயு 2:22.
17 இந்த இச்சைகளில், திருமணத்துக்குள் மதிப்புக்குரிய இடத்தைக் கொண்டுள்ள பால் தூண்டுதலுணர்ச்சி அடங்கியிருக்கிறது. எனினும் இந்தத் தூண்டுதலுணர்ச்சி, சரித்திரம் முழுவதிலும், திருமணத்துக்கு முன்னால் அல்லது திருமணத்துக்குப் புறம்பே பாலுறவுகள் கொள்வதில் தவறாக வெளிப்படுத்தப்பட்டு வருகிறது, இவ்விரண்டையும் நம்முடைய ஞானமுள்ள சிருஷ்டிகர் கண்டனம் பண்ணுகிறார். (எபிரெயர் 13:4; ஆதியாகமம் 34:1-3) பால் சம்பந்த ஒழுக்கக்கேட்டுக்கு இடங்கொடுக்கும் அபாயம் இன்று கிறிஸ்தவர்களை இளைஞரையும் முதியோரையும், பாதிக்கும் நிலையிலிருக்கிறது. ஓழுக்கங்கெட்ட உலகத்தின் இந்தக் கடைசி நாட்களில் பாலுணர்ச்சி, பலருக்கு வெறும் மாம்ச காம வெறியையே குறிக்கும் நிலைக்கு வந்திருக்கிறது, அடிக்கடி ஆண் மற்றும் பெண் ஓரினப் புணர்ச்சிக்காரருக்குள் பொதுவாயுள்ள பழக்கங்களோடு சேர்ந்ததைக் குறிக்கிறது.—ரோமர் 1:24-27.
18 இத்தகைய சூழ்நிலையில் வாழும் இந்த உண்மை, நாம் யெகோவாவுக்கு முழுமையாய் ஒப்புக்கொடுத்திருக்கும் உறுதியுள்ள, ஒருநிலைப்பட்ட இருதயத்தைக் கொண்டிருக்க வேண்டியதன் இன்றியமையாத தன்மையை அறிவுறுத்துகிறது. ராஜ்ய செய்தியை ஏற்று, பைபிளின் அடிப்படை சத்தியங்களை நம்பி, யெகோவாவின் ஜனங்களோடு ஒழுங்காய்க் கூட்டுறவு கொள்ளும் சிலர், யெகோவாவிலும், அவருடைய வார்த்தையிலும், அவருடைய உலகளாவிய சபையிலும் ஆழ்ந்த மதித்துணர்வை வளர்க்கிறதில்லை. அவர்களுடைய இருதயம் இன்னும் நிலையான உறுதிகொண்டில்லை. அது “பாலியத்துக்குரிய இச்சைகளால்” எளிதில் வேறு பாதையில் திருப்பப்படலாம். இவர்களில் சிலர் வேசித்தனம் அல்லது விபசாரம் செய்வதற்கு உண்டாகும் சோதனைகளை எதிர்த்து நிற்கலாம், ஆனால் அவர்கள், பவுல் எச்சரித்தபடி, “கடவுளைப் பார்க்கிலும் சுகபோகத்தை அதிகமாய் நேசிக்கிறவர்க”ளாகிறார்கள். (2 தீமோத்தேயு 3:4, தி.மொ.) தனிப்பட்ட படிப்பில் கிறிஸ்தவ கூட்டங்களில், அல்லது ராஜ்ய சேவையில், செலவிடும் நேரத்தைப் பார்க்கிலும் மிக அதிக நேரத்தை டெலிவிஷன் பார்ப்பதில், காதல் கதைகள் வாசிப்பதில், அல்லது பண்பாடற்ற இசைக்குச் செவிகொடுப்பதில் அவர்கள் செலவிடுகிறார்கள். இது எளிதில் ஆவிக்குரிய தளர்ச்சிக்கு வழிநடத்துகிறது, முடிவில் வினைமையான பாவத்துக்குள் விழச்செய்கிறது.
19 இத்தகையோர், நங்கூரமில்லாதப் படகைப்போல், அழிவை நோக்கி நீரோட்டத்தில் இழுபட்டு மிதந்து சென்றுகொண்டிருக்கின்றனர். இவர்கள் என்ன செய்ய வேண்டும்? பவுல் பின்வருமாறு அறிவுரை கூறுகிறான்: “ஆகையால், நாம் கேட்டவைகளை விட்டு விலகாதபடிக்கு [வழுவிப் போகாதபடி, தி.மொ.] அவைகளை மிகுந்த ஜாக்கிரதையாய்க் கவனிக்க வேண்டும். [வழக்கமாய்ச் செலுத்துவதற்கு மேலான கவனம் செலுத்த வேண்டும், NW.] (எபிரெயர் 2:1) ஆகையால், ஆபத்தில் இருப்பவர்கள், கடவுளுடைய வார்த்தையைப் படிப்பதற்கும், கிறிஸ்தவக் கூட்டங்களுக்குத் தயாரிப்பதற்கும், மற்றவர்களுடன் ராஜ்ய சத்தியங்களைப் பகிர்ந்துகொள்வதற்கும் “வழக்கமாய்ச் செலுத்துவதற்கு மேலான கவனம் செலுத்த வேண்டும்.” நிச்சயமாகவே, “இது நல்ல அறிவுரை, ஆனால் நான் அந்த நிலையில் இல்லை, ஆகவே இது எனக்குப் பொருந்துகிறதில்லை,” என்று எண்ணுவது எளிதே. எனினும் நாம் நம் இருதயத்தையும், மிக ஆழத்திலுள்ள எண்ணங்களையும், ஆசைகளையும், நாம் மேலும் சுத்தப்படுத்தி, “சுத்த இருதயத்தோடே கர்த்தரைத் தொழுதுகொள்ளுகிறவர்களுடனே, நீதியையும் விசுவாசத்தையும் அன்பையும் சமாதானத்தையும் அடையும்படி நாடித்” தொடருவது எவ்வாறென நாம் ஒவ்வொருவரும் கருத்துடன் சிந்தித்துப் பார்ப்பது அதைப் பார்க்கிலும் எவ்வளவு ஞானமாயிருக்கும். (2 தீமோத்தேயு 2:22) எல்லாவற்றிற்கும் மேலாக, கடவுளுடைய வழிநடத்துதலுக்காகவும் அவருடைய ஆவியின் பலப்படுத்தும் உதவிக்காகவும் நாம் கடவுளைக் கேட்க வேண்டும்.
20 எவராவது வினைமையான தவறு செய்தக் குற்றமுடையவராகி, அதை மறைத்து வைத்தால், அவர்கள் தெளிவாகவே யெகோவாவின் அங்கீகாரத்தையும் தங்களுக்கிருந்த “தேவ சமாதானத்தையும்” இழந்துபோவார்கள். தங்கள் சொந்த மன சமாதானத்தையும் இழப்பார்கள். (2 சாமுவேல் 24:10 மற்றும் மத்தேயு 6:22, 23 ஒத்துப்பாருங்கள்.) அப்படியானால், வினைமையான பாவத்துக்குள் வீழ்ந்துவிட்ட எந்தக் கிறிஸ்தவனும், ஆவிக்குரிய சுகப்படுத்துதலைப் பெற உதவிசெய்யக்கூடிய யெகோவாவிடமும் அன்புள்ள மூப்பரிடமும் அதை அறிக்கையிடுவது ஏன் தவிர்க்க முடியாத அவசியமென்பதை நீங்கள் காணலாம். (ஏசாயா 1:18, 19; 32:1, 2; யாக்கோபு 5:14, 15) வழுக்கும் பாவ பாதையில் ஆவிக்குரிய சமநிலையை இழந்துவிட்ட ஒருவன், முதிர்ச்சியுள்ள சகோதரரிடம் உதவி தேடுகையில், மனச்சாட்சி அலைக்கழிக்கும் நிலையில் அவன் தொடர்ந்திரான் அல்லது தெய்வீகச் சமாதானம் இல்லாமல் இரான்.
21 இன்று, யெகோவாவின் ஒப்புக்கொடுத்த சாட்சிகளில் ஒருவராயிருப்பது எத்தகைய சிலாக்கியம்! நம்மைச் சுற்றிலும், சாத்தானின் கீழுள்ள இந்த உலகம் பிளவுற்று நொருங்கிக்கொண்டும் கொலைக்களமாகிக் கொண்டுமிருக்கிறது. அது சீக்கிரத்தில் ஒழிந்துபோகும். மிகப் பலர் “பூமியின்மேல் வரும் ஆபத்துகளுக்குப் பயந்து எதிர்பார்த்திருக்கிறதினால் சோர்ந்து” போகிறார்கள். ஆனால் நாம் நம்முடைய தலையை உயர்த்தலாம் ஏனெனில் நம்முடைய ‘மீட்பு சமீபித்துக் கொண்டிருக்கிறதென்று’ அறிந்திருக்கிறோம். (லூக்கா 21:25-28) “எல்லாப் புத்திக்கும் மேலான தேவ சமாதானத்”திற்காக நாம் யெகோவாவுக்கு எவ்வளவு நன்றியுடன் இருக்கிறோமென்பதைக் காட்டுவதற்கு, “சமாதானம் அளிக்கும் கடவுளை” உண்மையுடன் சேவிக்க நம்மால் இயலும் உச்ச அளவைச் செய்வோமாக.—ரோமர் 15:33, NW; 1 கொரிந்தியர் 15:58. (w87 2/15)
[அடிக்குறிப்புகள்]
a யெகோவாவின் சாட்சிகளின் 1986-ன் ஆண்டு புத்தகம், பக்கங்கள் 154-7 பாருங்கள்.
திரும்பப் பார்வையிடுவதற்குக் குறிப்புகள்
◻ தேவ சமாதானம் இன்று நமக்கு எப்படி உதவிசெய்கிறது, அது எவ்வாறு ‘எல்லாப் புத்திக்கும் மேலானது’?
◻ மன சமாதானத்தை இழக்காமல் காத்துவருவதற்கு என்ன காரியங்கள் நமக்கு உதவி செய்கின்றன?
◻ என்ன தந்திரமான அபாயம் இன்று பல கிறிஸ்தவர்களைத் தாக்கப் பயமுறுத்தும் நிலையிலிருக்கிறது, இது எதற்கு வழிநடத்தும்?
◻ கிறிஸ்தவன் ஒருவன் வினைமையான பாவம் செய்துவிட்டால், அவன் என்ன செய்ய வேண்டும்?
[கேள்விகள்]
1. உலக சமாதானத்தைக் கொண்டுவருவதற்கு மனிதர் எடுக்கும் முயற்சிகள் ஏன் நிச்சயமாய்த் தோல்வியடையவிருக்கின்றன?
2. “சமாதானம்” என்ற சொல் குறிப்பதென்ன, முக்கியமாய் எபிரெயுவிலும் கிரேக்கிலும் எதைத் குறிக்கிறது?
3. தாம் உயிர்த்தெழுப்பப்பட்டபின் இயேசு தம்முடைய சீஷருக்கு எவ்வாறு ஆழ்ந்த அக்கறை காட்டினார்? அதன் பலன் என்ன?
4. இந்தக் கொடிய காலங்களில் யெகோவாவின் ஜனங்கள் எவ்வாறு மன மற்றும் இருதய சமாதானத்தைக் காத்து வர முடியும்?
5. “தேவ சமாதானம்” நம்முடைய இருதயத்தைக் காத்துக்கொள்ள முடியுமென பவுல் ஏன் நிச்சயமாயிருந்தான்?
6. நம்முடைய சிருஷ்டிகருடன் அன்பான, மிக நெருங்கிய உறவை நிலைநாட்டிக் காத்துவருவது ஏன் மிக முக்கியம்?
7, 8. (எ) “தேவ சமாதானம்” எதன்பேரில் ஆதாரங்கொண்டிருக்கிறது, அது எவ்வாறு ‘எல்லாப் புத்திக்கும் மேலானது’? (பி) ஆப்பிரிக்கச் சகோதரர் ஒருவரின் காரியத்தில் இத்தகைய சமாதானம் எவ்வாறு முன்மாதிரியாக விளக்கிக் காட்டப்பட்டது?
9. பைபிளை வாசித்து அதன்பேரில் ஆழ்ந்து சிந்திப்பது என்ன பலன் உண்டுபண்ணும்?
10. வேத வசனங்களை நினைவுக்குக் கொண்டுவர முடிவது எவ்வாறு ஆசீர்வாதமாயிருக்கும்?
11. ஆவிக்குரிய உணவுக்கான தேவையை நெதர்லாண்டில் ஒரு சகோதரர் எவ்வாறு வெளிப்படுத்தினார்?
12. நம்முடைய இருதயத்தையும் மனசக்திகளையும் பாதுகாப்பதற்கு ஏன் தனிப்பட்ட தேவை இருக்கிறது?
13. நம்முடைய மன சக்திகளைப் பாதுகாப்பதனால் உண்டாகும் நன்மைகள் யாவை?
14. தேவாவியால் ஏவப்பட்ட எந்த அறிவுரைக்கு நாம் கவனமாய்ச் செவிகொடுக்க வேண்டும், ஏன்?
15. நாம் “தேவ சமாதானத்தைக்” கொண்டிருப்பதில் இயேசு என்ன பாகத்தை வகிக்கிறார்?
16. “தேவ சமாதானத்தை” இழக்காமல் வைத்திருக்க நமக்கு உதவிசெய்யும் என்ன அறிவுரையை பவுல் கொடுத்தான்?
17. பால் சம்பந்தமாய் யெகோவா செய்த ஏற்பாட்டுக்கு அடிக்கடி என்ன நேரிட்டிருக்கிறது?
18. சிலருடைய இருதயம் ஏன் இன்னும் நிலையான உறுதி கொண்டில்லை, இது எதற்கு வழிநடத்தலாம்?
19. வழுவிப்போவதைத் தவிர்க்க நாம் என்ன செய்ய வேண்டும்?
20. வினைமையான தவறு செய்துவிட்ட ஒருவன் என்ன செய்ய வேண்டும்?
21. யெகோவாவுக்கு ஆழ்ந்த நன்றியறிதலைக் கொண்டிருக்க இன்று நமக்கு என்ன காரணம் உண்டு, நம்முடைய தீர்மானம் என்னவாக இருக்க வேண்டும்?
[பக்கம் 18-ன் பெட்டி/படம்]
இது உண்மையெனக் கற்றறிந்தாள்
இரண்டாம் உலகப் போரின்போது நாஜிக்கள் எல்ஸா அபட்டின் கணவரை, அவர் கிறிஸ்தவ பிரசங்க வேலை செய்ததனால் சாக்சன்ஹாசன் கான்சன்ட்ரேஷன் முகாமுக்கு அனுப்பினர். பின்பு மே 1942-ல் கெஸ்ட்டாபோ காவற் படையினர் அவள் வீட்டுக்கு வந்து அவளுடைய சிறு மகளை எடுத்துக்கொண்டு, எல்ஸாவை பல்வேறு முகாம்களில் வேலை செய்யவும் துன்பப்படவும் அனுப்பினர். தன் சொந்த சாட்சியத்தை அவள் பின்வருமாறு கொடுக்கிறாள்:
“ஜெர்மன் கான்சன்ட்ரேஷன் முகாம்களில் நான் செலவிட்ட ஆண்டுகள் ஒரு முதன்மையான பாடத்தை நான் கற்றுக்கொள்ள செய்தன. அது, உச்ச அளவான துன்பத்தின்கீழ் நீங்கள் இருக்கையில் யெகோவாவின் ஆவி எவ்வளவு மிகுதியாய் உங்களைப் பலப்படுத்தக்கூடும் என்பதே! நான் கைது செய்யப்படுவதற்கு முன்பாக, ஒரு சகோதரியின் கடிதத்தை வாசித்தேன். அதில், மிகக் கடுமையான துன்பத்தின் கீழிருக்கையில் யெகோவாவின் ஆவி ஒரு மன அமைதியை உங்களில் வரும்படி செய்கிறதென எழுதியிருந்தது. அவள் ஓரளவு மிகைப்படுத்திக் கூறியிருக்க வேண்டுமென்றே நான் நினைத்தேன். ஆனால் துன்பங்களினூடே நானே சென்றபோது, அவள் சொன்னது உண்மையென நான் அறிந்தேன். உண்மையில் அவ்வாறு நேரிடுகிறது. நீங்கள் இதை அனுபவித்திராவிடில், இதைக் கற்பனை செய்து பார்ப்பது கடினம். எனினும் இது உண்மையாய் எனக்கு நேரிட்டது. யெகோவா உதவி செய்கிறார்.
[பக்கம் 16-ன் படம்]
தேவசமாதானம் நமது இருதயங்களைக் காத்துக்கொள்ளும் என்று பவுல் அனுபவத்திலிருந்து அறிந்திருந்தான்
[பக்கம் 19-ன் படம்]
நீங்கள் ஆவிக்குரிய விதத்தில் வழுவிப் போகும் ஆபத்தில் இருக்கிறீர்களா?