படிப்பு 40
திருத்தமான தகவலை அளித்தல்
ஒரு கிறிஸ்தவர் எப்படி உண்மையல்லாத விஷயத்தை சொல்லிவிடலாம்? ஒருவேளை தான் கேள்விப்பட்ட விஷயத்தை உண்மையா என ஆராயாமல் அப்படியே சொல்லிவிடலாம். அல்லது தகவல் மூலத்தை தவறுதலாக வாசித்ததால் அறியாமல் ஒரு விஷயத்தை மிகைப்படுத்திக் கூறிவிடலாம். சிறுசிறு விஷயங்களையும் திருத்தமாக சொல்வதற்கு நாம் கூர்ந்த கவனம் செலுத்தும்போது, நாம் சொல்லும் மிக முக்கியமான விஷயங்களும் உண்மையானவை என்பதில் கேட்போர் நம்பிக்கை வைப்பர்.
வெளி ஊழியத்தில். மற்றவர்களுக்கு பிரசங்கிப்பதற்கு முன்பு தாங்கள் இன்னும் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும் என உணர்வதால் அநேகர் வெளி ஊழியத்தில் ஈடுபட தயங்குகிறார்கள். என்றாலும், தாங்கள் அறிந்த அடிப்படை சத்தியத்தை வைத்தே சிறந்த சாட்சி கொடுக்க முடியும் என்பதை அவர்கள் விரைவிலேயே உணர ஆரம்பிக்கிறார்கள். எப்படி? தயாரிப்பே முக்கியம்.
வெளி ஊழியத்திற்குச் செல்வதற்கு முன்பு, நீங்கள் பேச விரும்பும் பொருளோடு நன்கு பரிச்சயமாகுங்கள். செவிகொடுத்துக் கேட்போர் என்னென்ன கேள்விகளை கேட்கலாம் என்பதை முன்கூட்டியே சிந்தித்துப் பாருங்கள். பைபிள் ஆதாரமுடைய திருப்திகரமான பதில்களைக் கண்டடைய ஆராய்ச்சி செய்யுங்கள். இது, பதட்டமின்றி திருத்தமான பதில்களைக் கொடுப்பதற்கு உங்களைத் தயாராக்கும். நீங்கள் பைபிள் படிப்பு நடத்தப் போகிறீர்களா? படிப்பு நடத்தும் அதிகாரத்தை கவனமாக ஆராயுங்கள். கேள்விகளுக்குரிய பதில்களுக்கு வேதப்பூர்வமான ஆதாரத்தை புரிந்துகொள்கிறீர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
வீட்டுக்காரரோ உங்களுடன் வேலை பார்ப்பவரோ திடீரென ஏதாவது ஒரு கேள்வி கேட்டால் என்ன செய்வீர்கள்? உங்களுக்கு பதில் தெரியவில்லையென்றால் உத்தேசமாக சொல்லாதீர்கள். “நீதிமானுடைய மனம் பிரதியுத்தரம் சொல்ல யோசிக்கும்.” (நீதி. 15:28) வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுதல் அல்லது “கலந்துரையாட பைபிள் பேச்சுப் பொருட்கள்” உங்களுக்கு கைகொடுக்கலாம். இவை இரண்டும் உங்களிடம் இல்லையென்றால் அந்த விஷயத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்து சொல்வதாக கூறுங்கள். கேள்வி கேட்டவருக்கு பதில் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற உள்ளப்பூர்வமான ஆசை இருந்தால், திருத்தமான பதிலுக்காக அவர் பொறுமையோடு காத்திருப்பார். சொல்லப்போனால், உங்களுடைய தாழ்மையான குணம் அவருடைய மனதை கவரலாம்.
அனுபவமுள்ள பிரஸ்தாபிகளுடன் ஊழியத்தில் ஈடுபடுவது, கடவுளுடைய வார்த்தையை சரியாக பயன்படுத்தும் திறமையை வளர்த்துக்கொள்ள உதவும். எந்த வசனங்களைப் பயன்படுத்துகிறார்கள், அவற்றை எப்படி நியாயங்காட்டி விளக்குகிறார்கள் என்பதை கூர்ந்து கவனியுங்கள். அவர்கள் தரும் யோசனைகளை அல்லது திருத்தங்களை தாழ்மையோடு ஏற்றுக்கொள்ளுங்கள். வைராக்கியமுள்ள சீஷனாகிய அப்பொல்லோ பிறரிடமிருந்து பெற்ற உதவியால் நன்மையடைந்தார். “சொல்வன்மை மிக்கவர்,” “புலமை வாய்ந்தவர்,” ‘ஆர்வமிக்க உள்ளம் படைத்தவர்,’ ‘இயேசுவைப் பற்றிய செய்தியைப் பிழையற அறிவித்தும் கற்பித்தும் வந்தவர்’ என அப்பொல்லோவை லூக்கா விவரிக்கிறார். ஆனால் அவருடைய புரிந்துகொள்ளுதலில் குறைபாடு இருந்தது. ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் அதை கவனித்தபோது, அவர்கள் “அவரை அழைத்துக் கொண்டுபோய், கடவுளுடைய வழியை அதிக திருத்தமாக விளக்கினர்.”—அப். 18:24-28, பொ.மொ.; NW.
‘உண்மை வசனத்தை உறுதியாகப் பற்றிக்கொள்ளுங்கள்.’ கூட்டங்களில் நாம் கொடுக்கும் பேச்சுக்கள், “சத்தியத்திற்குத் தூணும் ஆதாரமுமாயிருக்கிற” சபைக்கு மிகுந்த மதிப்பை காட்டுவதாக இருக்க வேண்டும். (1 தீ. 3:15) சத்தியத்திற்கு ஆதரவாக பேச வேண்டுமென்றால், பேச்சுக்களில் பயன்படுத்த திட்டமிட்டுள்ள வசனங்களின் கருத்தைப் புரிந்துகொள்வது முக்கியம். அவற்றின் சூழமைவையும் நோக்கத்தையும் கவனத்தில் கொள்ளுங்கள்.
சபைக் கூட்டத்தில் நீங்கள் சொன்னதை மற்றவர்களும் திரும்பச் சொல்லலாம். “நாம் எல்லாரும் அநேக விஷயங்களில் தவறுகிறோம்” என்பது உண்மைதான். (யாக். 3:2) ஆனால் திருத்தமாக பேச உதவும் பழக்கங்களை வளர்த்துக் கொண்டால் நீங்கள் பயனடைவீர்கள். தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் சேர்ந்திருக்கும் சகோதரர்கள் பலர் காலப்போக்கில் மூப்பர்களாவார்கள். அப்படிப்பட்ட பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டிருப்போரிடத்தில் “அதிகமாய்” எதிர்பார்க்கப்படுகிறது. (லூக். 12:48) மூப்பர் ஒருவர் யோசனையின்றி தவறான ஆலோசனை கொடுத்து அதனால் சபை அங்கத்தினருக்கு பெரும் பிரச்சினைகள் ஏற்பட்டால், அவர் கடவுளுடைய கோபத்திற்கு ஆளாகலாம். (மத். 12:36, 37) ஆகவே, மூப்பராக தகுதிபெறும் ஒரு சகோதரர் “தன் கற்பிக்கும் கலைக்கேற்ப உண்மையான வசனத்தை உறுதியாக பற்றிக்கொள்கிறவராக” பேர்பெற வேண்டும்.—தீத். 1:9, NW.
நீங்கள் காட்டும் நியாயங்கள் முழு வேதப்பூர்வ சத்தியத்தில் காணப்படுகிற ‘ஆரோக்கியமான வார்த்தைகளின் மாதிரிக்கு’ இசைவாக இருக்கிறதா என்பதில் கவனமாயிருங்கள். (2 தீ. 1:13, தி.மொ.) எங்கே தவறிவிடுவீர்களோ என பயப்பட வேண்டியதில்லை. ஒருவேளை நீங்கள் முழு பைபிளையும் வாசித்து முடிக்காமல் இருக்கலாம். அதற்காக தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். அதே சமயம், கற்பிப்பதற்கு நீங்கள் பயன்படுத்த நினைக்கும் தகவலை அலசிப் பார்க்க பின்வரும் ஆலோசனைகள் எவ்வாறு உதவலாம் என்பதை கவனியுங்கள்.
முதலில் உங்களையே இவ்வாறு கேட்டுக்கொள்ளுங்கள்: ‘பைபிளிலிருந்து நான் ஏற்கெனவே கற்ற விஷயங்களோடு இந்தத் தகவல் ஒத்திருக்கிறதா? செவிகொடுத்துக் கேட்போரை இது யெகோவாவிடம் நெருங்கிவரச் செய்யுமா அல்லது உலக ஞானத்தை மேம்பட்டதாக உயர்த்துவதால் அதனிடம் வழிநடத்துமா?’ “உம்முடைய வசனமே சத்தியம்” என இயேசு கூறினார். (யோவா. 17:17; உபா. 13:1-5; 1 கொ. 1:19-21) அடுத்து, படிப்பிற்காக உண்மையும் விவேகமுமுள்ள அடிமை வகுப்பார் தரும் கருவிகளை நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். இவை வேத வசனங்களை சரியாக புரிந்துகொள்வதற்கு மட்டுமல்லாமல், அவற்றை சமநிலையோடும் நியாயத்தோடும் கடைப்பிடிப்பதற்கும் உதவும். “ஆரோக்கியமான வார்த்தைகளின் மாதிரியை” அடிப்படையாக கொண்டு பேச்சை தயாரிக்கும்போதும், வேத வசனங்களை விளக்கி பொருத்திக் காட்டுகையில் யெகோவாவின் வழிமூலத்தை சார்ந்திருக்கும்போதும் உங்களுடைய கூற்றுகள் திருத்தமானவையாக இருக்கும்.
தகவலின் திருத்தமான தன்மையை பரிசோதித்தல். சில குறிப்புகளை விளக்கிக்காட்டி பொருத்தும்போது, நடப்பு செய்திகளும் மேற்கோள்களும் அனுபவங்களும் உதவியாக இருக்கலாம். அவை திருத்தமானதா என்பதை எப்படி உறுதிப்படுத்தலாம்? நம்பகமான தகவல் மூலங்களிலிருந்து எடுப்பது அதற்கு ஒரு வழி. அவை லேட்டஸ்ட் தகவல்கள்தானா என்பதை சரிபார்க்க மறந்துவிடாதீர்கள். புள்ளிவிவரங்கள் வழக்கற்றுப் போய்விடுகின்றன; விஞ்ஞான கண்டுபிடிப்புகள் சீக்கிரத்தில் பழையதாகி விடுகின்றன; வரலாறு மற்றும் பழங்கால மொழிகளைப் பற்றிய விஷயத்தில் மனிதனுடைய அறிவு வளர வளர பழைய கருத்துக்களை மாற்ற வேண்டியுள்ளது. செய்தித்தாள்கள், டிவி, ரேடியோ, ஈ-மெயில் அல்லது இன்டர்நெட் ஆகியவற்றிலுள்ள தகவல்களைப் பயன்படுத்தும்போது மிகவும் கவனமாக இருங்கள். “பேதையானவன் எந்த வார்த்தையையும் நம்புவான்; விவேகியோ தன் நடையின் மேல் கவனமாயிருக்கிறான்” என நீதிமொழிகள் 14:15 ஆலோசனை கூறுகிறது. ஆகவே நீங்கள் எதிலிருந்து தகவலை எடுத்திருந்தாலும், ‘திருத்தமான தகவல்களை கொடுப்பதற்கு அது பேர்போனதா? அந்தத் தகவல் சரிதானா என எப்படியாவது சரிபார்க்க முடியுமா?’ என உங்களையே கேட்டுக் கொள்ளுங்கள். அதன் உண்மைத்தன்மையைக் குறித்து சந்தேகம் எழுந்தால் அதைப் பயன்படுத்தாதீர்கள்.
செய்தி மூலங்களின் நம்பகத்தன்மையை பரிசோதிப்பதோடு அந்தத் தகவலை எப்படி பயன்படுத்த திட்டமிடுகிறீர்கள் என்பதையும் ஆலோசியுங்கள். நீங்கள் பயன்படுத்தும் மேற்கோள்கள் மற்றும் புள்ளிவிவரங்களின் சூழமைவை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். உங்களுடைய குறிப்பை வலியுறுத்திக் காட்டுகையில், “சிலர்” என்பதை “பெரும்பாலோர்” என்றும், “அநேகர்” என்பதை “அனைவரும்” என்றும், “சில சமயங்களில்” என்பதை “எப்போதும்” என்றும் மாற்றிவிடாதவாறு கவனமாயிருங்கள். எண்ணிக்கை, அளவு, தீவிரம் சம்பந்தமாக அறிக்கைகளை மிகைப்படுத்திக் கூறுவது அல்லது மற்ற விஷயங்களை ஒன்றுக்கு பத்தாக சொல்வது உங்களுடைய நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கும்.
நீங்கள் சொல்வது முன்னுக்குப்பின் முரண்படாமல் திருத்தமாக இருக்கும்போது, சத்தியத்திற்கு அதிக மதிப்பு கொடுப்பவர்கள் என்ற பெயரை பெறுவீர்கள். இது ஒரு தொகுதியாக யெகோவாவின் சாட்சிகள் மீது நல்லெண்ணத்தை ஏற்படுத்துகிறது. மிக முக்கியமாக, “சத்தியத்தின் கடவுளாகிய யெகோவாவுக்கு” கனத்தைக் கொண்டு வருகிறது.—சங். 31:5, NW.