எப்படிப்பட்ட நபராயிருக்க விரும்புகிறீர்கள்?
பிலிப்பீன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு நகரத்தில், பயனியர் சகோதரி ஒருவரிடம் போலீஸ் உயர் அதிகாரி இவ்வாறு கேட்டார்: “அந்த ஆள் நல்லவராக மாறுவதற்கு நீங்கள் என்ன செய்தீர்கள்?” மேஜையின்மேல் குவிந்திருந்த பேப்பர்களை அந்த அதிகாரி சுட்டிக்காட்டி, “உங்களுக்குத் தெரியுமா, இதெல்லாம் அவனுக்கு எதிராகப் பதிவுசெய்யப்பட்ட வழக்குகள். இந்த நகரத்தில் எங்களுக்கிருந்த ஒரு பெரிய ‘தலைவலி’ இப்போது தீர்ந்துவிட்டது!” என்றார். அந்த ஆள் பயங்கர குடிகாரராக இருந்தார், குடித்துவிட்டு அடிக்கடி தகராறு செய்தார். வாழ்க்கையில் அத்தனை பெரிய மாற்றத்தைச் செய்ய எது அவரைத் தூண்டியது? கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் எழுதப்பட்ட பைபிளே.
‘முந்தின நடக்கைக்குரிய பழைய மனுஷனைக் களைந்துபோட்டு, தேவனுடைய சாயலாகச் சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்’ என அப்போஸ்தலன் பவுல் எழுதினார்; அநேகர், அந்த ஆலோசனையை ஏற்று அதன்படி மாற்றம் செய்திருக்கிறார்கள். (எபே. 4:22–24) இப்படிச் செய்ய வேண்டிய மாற்றங்கள் சிறியதோ, பெரியதோ, ஒருவர் கிறிஸ்தவராவதற்குப் புதிய மனுஷனைத் தரித்துக்கொள்வது, அதாவது, புதிய சுபாவத்தை அணிந்துகொள்வது முக்கியமான ஒன்று.
என்றாலும், மாற்றங்கள் செய்வதும் ஞானஸ்நானம் பெறுமளவுக்கு முன்னேற்றம் செய்வதும் ஓர் ஆரம்பம் மட்டுமே. ஞானஸ்நானம் பெற முன்வருகையில், முழுமையாகச் செதுக்கப்படாத ஒரு மரத் துண்டைப் போலவே பெரும்பாலும் இருக்கிறோம். அதன் வடிவத்தை நம்மால் கண்டுபிடிக்க முடிந்தாலும், அதில் செய்ய வேண்டிய வேலைகள் நிறைய உள்ளன. சிற்பி, இன்னும் நுணுக்கமான வேலைகளைச் செய்து அதை அழகான பொருளாக வடிவமைக்க வேண்டியுள்ளது. ஞானஸ்நானம் பெறும் சமயத்தில், கடவுளுடைய ஊழியராவதற்கு என்னென்ன அடிப்படைப் பண்புகள் அவசியமோ அவற்றை நாம் பெற்றிருக்கிறோம். என்றாலும், நம்முடைய புதிய சுபாவம், இன்னும் முழுமையாகச் செதுக்கப்படாமலேயே இருக்கிறது. மாற்றங்களைச் செய்வதன் மூலம் நம் சுபாவத்திற்குத் தொடர்ந்து மெருகூட்ட வேண்டும்.
பவுலும்கூட, தான் மாற்றங்களைச் செய்வதன் அவசியத்தை உணர்ந்தார். ‘நன்மைசெய்ய விரும்புகிற என்னிடத்தில் தீமையுண்டு’ என்று ஒத்துக்கொண்டார். (ரோ. 7:21) தான் எப்படிப்பட்டவராய் இருந்தார் என்பதையும் எப்படிப்பட்டவராய் ஆக விரும்பினார் என்பதையும் பவுல் நன்றாய் அறிந்திருந்தார். நம்மைப் பற்றி என்ன சொல்லலாம்? நாமும்கூட நம்மையே இவ்வாறு கேட்டுக்கொள்வது அவசியம்: ‘நான் எப்படிப்பட்ட நபராய் இருக்கிறேன்? நான் எப்படிப்பட்ட நபராய் ஆக விரும்புகிறேன்?’
நான் எப்படிப்பட்ட நபராய் இருக்கிறேன்?
ஒரு பழைய வீட்டைப் புதுப்பித்துக் கட்டும்போது, அதன் வெளிப்புறத்தில் வண்ணம் பூசினால் மட்டும் போதாது; ஒருவேளை அதன் உத்திரங்கள் இற்றுப்போயிருக்கலாம். கட்டமைப்பில் உள்ள இதுபோன்ற குறைகளைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் பிற்பாடு பெரும் பாதிப்புகள் ஏற்படும். அவ்வாறே, பார்வைக்கு நல்லவர்களாக இருந்தால் மட்டும் போதாது. நாம் உண்மையில் எப்படிப்பட்டவர்களாய் இருக்கிறோம் என்பதைச் சோதித்துப் பார்த்து, சரிசெய்ய வேண்டிய குறைகளைக் கண்டுபிடிக்க வேண்டும். இல்லையெனில் கெட்ட சுபாவங்கள் மீண்டும் தலைதூக்கிவிடும். அப்படியானால், நம்மையே நுணுக்கமாய்ச் சோதித்துப் பார்ப்பது முக்கியம். (2 கொ. 13:5) கெட்ட சுபாவங்களைக் கண்டுபிடித்து அவற்றை அகற்ற வேண்டும். நமக்கு உதவுவதற்காக யெகோவா சில ஏற்பாடுகளைச் செய்து தந்திருக்கிறார்.
“தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளதாயும், இருபுறமும் கருக்குள்ள எந்தப் பட்டயத்திலும் கருக்கானதாயும், ஆத்துமாவையும் ஆவியையும், கணுக்களையும் ஊனையும் பிரிக்கத்தக்கதாக உருவக் குத்துகிறதாயும், இருதயத்தின் நினைவுகளையும் யோசனைகளையும் வகையறுக்கிறதாயும் இருக்கிறது” என பவுல் எழுதினார். (எபி. 4:12) கடவுளுடைய வார்த்தையாகிய பைபிளிலுள்ள விஷயங்கள் நம் வாழ்க்கையில் மிகுந்த செல்வாக்கு செலுத்த முடிந்தவை. அவை, எலும்பையும் ஊடுருவிச் சென்று ஊனை, அதாவது மஜ்ஜையை எட்டுவதுபோல் நம் உள்ளத்திற்குள் ஆழமாய்ச் செல்கின்றன. அவை நம் சிந்தனைகளையும் எண்ணங்களையும் வெளிப்படுத்துகின்றன. நாம் வெளித்தோற்றத்திற்கு எப்படிப்பட்டவர்களாய் இருந்தாலும் சரி, அல்லது நம்மைப் பற்றி நாம் என்ன நினைத்துக்கொண்டிருந்தாலும் சரி, உள்ளுக்குள் நாம் எப்படிப்பட்டவர்களாய் இருக்கிறோம் என்பதை அவை காட்டிக்கொடுத்து விடுகின்றன. நம்மிடமுள்ள குறைகளைக் கண்டுபிடிக்க கடவுளுடைய வார்த்தை எப்பேர்ப்பட்ட உதவியை அளிக்கிறது!
ஒரு பழைய வீட்டைப் பழுதுபார்க்கும்போது, சேதமடைந்தவற்றை மாற்றினால் மட்டும் போதாது; அவை சேதமடைந்ததற்கான காரணத்தையும் அறிந்துகொள்ள வேண்டும். அப்படிச் செய்வது, மீண்டும் அத்தகைய பாதிப்புகள் ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ள உதவும். அவ்வாறே, நம்மிடமுள்ள கெட்ட குணங்களைக் கண்டுபிடிப்பதோடு, அவற்றுக்கான காரணத்தை அறிந்துகொள்வது, அவற்றைக் கட்டுப்பாட்டில் வைக்க உதவும். நம் சுபாவத்தைச் செதுக்குவதில் பல்வேறு அம்சங்கள் உட்பட்டுள்ளன. நம் சமுதாய அந்தஸ்து, பொருளாதார நிலை, சுற்றுச்சூழல், பண்பாடு, பெற்றோர், நண்பர்களின் சகவாசம், மதப் பின்னணி ஆகியவை அவற்றில் சிலவாகும். நாம் பார்க்கிற டிவி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் ஆகியவையும், பிற கேளிக்கைகளும்கூட நம் சுபாவத்தைப் பாதிக்கலாம். நம் சுபாவத்தைக் கெடுப்பது எது என்பதைக் கண்டுபிடித்தால் அதன் பாதிப்பை நம்மால் கட்டுப்படுத்த முடியும்.
சுய பரிசோதனை செய்த பிறகு, ‘என் சுபாவமே அப்படித்தான்’ என்று சொல்லத் தோன்றலாம். அது சரியல்ல. கொரிந்து சபையாரில் சிலர், முன்பு விபசாரக்காரரும் சுயபுணர்ச்சிக்காரரும் வெறியரும், இன்னும் பல கெட்ட காரியங்களைச் செய்தவர்களுமாய் இருந்தார்கள்; அவர்களைப் பற்றி பவுல் இவ்வாறு சொன்னார்: ‘உங்களில் சிலர் இப்படிப்பட்டவர்களாயிருந்தீர்கள்; ஆயினும் . . . நமது தேவனுடைய ஆவியினால் கழுவப்பட்டீர்கள்.’ (1 கொ. 6:9–11) அதைப்போல, யெகோவாவுடைய சக்தியின் உதவியால் நாமும்கூட தேவையான மாற்றங்களைச் செய்துகொள்ள முடியும்.
பிலிப்பீன்ஸில் வசிக்கும் மார்க்கோஸ்a என்பவரைச் சிந்தித்துப் பாருங்கள். தன்னுடைய பின்னணியைக் குறித்து அவர் சொன்னதாவது: “என்னுடைய பெற்றோர் எப்போதும் சண்டை போட்டுக்கொண்டிருப்பார்கள். அதனால்தான் 19 வயதிலேயே நான் அடங்காப்பிடாரி ஆகிவிட்டேன்.” அவர் சூதாடுவதிலும் திருடுவதிலும் கத்தி முனையில் கொள்ளையடிப்பதிலும் பேர்போனவரானார். ஒருசமயம், அவரும் வேறு சிலரும் சேர்ந்து ஒரு விமானத்தைக் கடத்தவும்கூட திட்டம்போட்டார்கள்; ஆனால் அது பலிக்கவில்லை. திருமணத்திற்குப் பிறகும், அவருடைய கெட்ட பழக்கங்கள் தொடர்ந்தன. கடைசியில், எல்லாவற்றையும் சூதாட்டத்தில் இழந்துவிட்டார். அவருடைய மனைவிக்கு யெகோவாவின் சாட்சிகள் நடத்திவந்த பைபிள் படிப்பில் அவரும் சீக்கிரத்திலேயே கலந்துகொண்டார். முதலில், ‘நானெல்லாம் ஒரு யெகோவாவின் சாட்சியாவதற்கு லாயக்கில்லை’ என்று நினைத்தார். இருந்தாலும், கற்றுக்கொண்ட விஷயங்களைக் கடைப்பிடித்ததும், கூட்டங்களில் கலந்துகொண்டதும் தன் பழைய சுபாவத்தைத் தூக்கியெறிய அவருக்கு உதவின. இப்போது, அவர் ஞானஸ்நானம் பெற்ற ஒரு கிறிஸ்தவராக இருக்கிறார்; மற்றவர்களும்கூட தங்களை மாற்றிக்கொள்ள அவர்களுக்கு பைபிள் சத்தியத்தைக் கற்பிக்கிறார்.
நீங்கள் எப்படிப்பட்ட நபராய் ஆக விரும்புகிறீர்கள்?
கிறிஸ்தவப் பண்புகளை இன்னும் மெருகூட்டுவதற்கு என்னென்ன மாற்றங்களை நாம் செய்ய வேண்டியிருக்கலாம்? கிறிஸ்தவர்களுக்கு பவுல் இவ்வாறு ஆலோசனை கொடுக்கிறார்: ‘கோபமும் மூர்க்கமும் பொறாமையும், உங்கள் வாயில் பிறக்கலாகாத தூஷணமும் வம்பு வார்த்தைகளுமாகிய இவைகளையெல்லாம் விட்டுவிடுங்கள். ஒருவருக்கொருவர் பொய் சொல்லாதிருங்கள்; பழைய மனுஷனையும் அவன் செய்கைகளையும் களைந்துபோட்டு, தன்னைச் சிருஷ்டித்தவருடைய சாயலுக்கொப்பாய்ப் பூரண அறிவடையும்படி புதிதாக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ளுங்கள்.’—கொலோ. 3:8–10.
அப்படியானால், நமது முக்கிய இலக்கு பழைய சுபாவத்தைக் களைந்துபோட்டு, புதிய சுபாவத்தை அணிந்துகொள்வதாகும். அதற்காக, என்னென்ன குணங்களை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும்? பவுல் இவ்வாறு கூறுகிறார்: “நீங்கள் . . . உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொண்டு; ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர் பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், கிறிஸ்து [“யெகோவா,” NW] உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள். இவை எல்லாவற்றின்மேலும், பூரணசற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.” (கொலோ. 3:12–14) இந்தக் குணங்களை வளர்க்க நாம் பிரயாசப்படும்போது, ‘கர்த்தருக்கும் மனுஷருக்கும் [மிகவும்] பிரியமாக நடந்துகொள்ள’ முடியும். (1 சா. 2:26) இயேசு பூமியில் இருந்தபோது, கடவுளுடைய குணங்களை மிகச் சிறந்த விதத்தில் வெளிக்காட்டினார். கிறிஸ்துவின் முன்மாதிரியை ஆராய்ந்து அதைப் பின்பற்றுவதன் மூலம், நாமும் அவரைப்போல இன்னுமதிகமாய் ‘தேவனைப் பின்பற்ற’ முடியும்.—எபே. 5:1, 2.
நாம் செய்ய வேண்டிய மாற்றங்களைக் கண்டுணர்வதற்கு மற்றொரு வழி, பைபிள் கதாபாத்திரங்களின் சுபாவங்களைப் படித்து, அவர்களுடைய நல்ல குணங்களையும் கெட்ட குணங்களையும் சிந்தித்துப் பார்ப்பதாகும். முற்பிதாவாகிய யாக்கோபுவின் மகன் யோசேப்பை உதாரணமாக எடுத்துக்கொள்ளுங்கள். அவர் பல அநியாயங்களுக்கு ஆளானபோதிலும், எப்போதும் நல்ல மனப்பான்மை உடையவராகத் தன் உள் அழகு மங்கிவிடாதவாறு பார்த்துக்கொண்டார். (ஆதி. 45:1–15) மறுபட்சத்தில், தாவீது ராஜாவின் மகனான அப்சலோமை எடுத்துக்கொள்ளுங்கள். மக்கள்மீது தனக்கு மிகுந்த அக்கறை இருப்பதுபோல் காட்டிக்கொண்டான்; அவனது வெளி அழகைப் பார்த்து மக்கள் அவனைப் புகழ்ந்தார்கள். ஆனால், அவன் உண்மையிலேயே ஒரு துரோகியாகவும் கொலைகாரனாகவும் இருந்தான். (2 சா. 13:28, 29; 14:25; 15:1–12) நல்லவர்போல் நடிப்பதும் வெளி அழகும் ஒருவரை உண்மையிலேயே நல்லவராக ஆக்குவதில்லை.
நாமும் வெற்றி பெறலாம்
நம்முடைய சுபாவத்தைச் செதுக்கிச் சீராக்குவதற்கும் கடவுளுடைய பார்வையில் அழகுள்ளவர்களாய் இருப்பதற்கும், நாம் உண்மையில் எப்படிப்பட்டவர்கள் என்பதற்குக் கவனம் செலுத்த வேண்டும். (1 பே. 3:3, 4) நம்முடைய சுபாவத்தில் முன்னேறுவதற்கு, நம்மிடமுள்ள கெட்ட குணங்களையும் அவற்றுக்குக் காரணமான அல்லது துணைபோகிற அம்சங்களையும் கண்டுபிடிப்பது அவசியம்; அதோடு, கிறிஸ்தவ குணங்களை நம்மில் வளர்ப்பதும் அவசியம். இதற்காக நாம் எடுக்கிற முயற்சியில் வெற்றி பெறுவோமென உறுதியாய் நம்பலாமா?
அதில் சந்தேகமே இல்லை; யெகோவாவின் உதவியோடு நாம் மாற்றங்களைச் செய்துகொள்ள முடியும். சங்கீதக்காரனைப் போலவே நாமும் பின்வருமாறு ஜெபிக்கலாம்: “தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும்.” (சங். 51:10) கடவுளுடைய சக்தி நம்மில் செயல்பட்டு, அவருடைய சித்தத்திற்கு இசைய நம் வாழ்க்கையைத் தொடர்ந்து மாற்றிக்கொள்வதற்கான நம் விருப்பத்தை அதிகரிக்கும்படி நாமும் ஜெபிக்கலாம். அப்போது, யெகோவாவின் கண்களுக்கு மிகவும் அழகுள்ளவர்களாய் இருக்க நாம் எடுக்கும் முயற்சியில் வெற்றி பெறுவோம்!
[அடிக்குறிப்பு]
a அவருடைய நிஜப் பெயர் அல்ல.
[பக்கம் 4-ன் படம்]
புயலில் அடிபட்ட இந்த வீட்டின் வெளிப்புறத்திற்கு வண்ணம் பூசினால் மட்டும் போதுமா?
[பக்கம் 5-ன் படம்]
உங்களுடைய சுபாவம் கிறிஸ்துவின் சுபாவத்தைப்போல் மாறியிருக்கிறதா?