‘தேவனுடைய வார்த்தை . . . வல்லமை உள்ளது’
1 ‘தேவனுடைய வார்த்தையானது ஜீவனும் வல்லமையும் உள்ளது’ என்பதாக அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (எபி. 4:12) அவர் எதை அர்த்தப்படுத்தினார்? பைபிளில் காணப்படும் கடவுளுடைய வார்த்தை அல்லது செய்தி, மக்கள்மீது பலத்த செல்வாக்கு செலுத்த முடியும் என்பதையே. பைபிளிலுள்ள ஞானத்திற்கு ஒருவரின் வாழ்க்கையை மேம்படுத்தும் வல்லமை இருக்கிறது. அது அளிக்கும் ஆறுதலும் நம்பிக்கையும் உயிர் கொடுத்தவராகிய யெகோவா தேவனிடம் மக்களை நெருங்கி வரச் செய்கிறது. அதன் செய்தி நேர்மை இருதயமுள்ளவர்களை நித்திய ஜீவ பாதையில் அடியெடுத்து வைக்க உதவுகிறது. என்றாலும், இந்த பலன்களைக் காண வேண்டுமானால், மற்றவர்களுக்கு சாட்சி கொடுக்கையில் நாம் பைபிளைப் பயன்படுத்த வேண்டும்.
2 ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் ஒரு வசனத்தை வாசியுங்கள்: சாட்சி கொடுக்கையில் பைபிளை பயன்படுத்தும் பழக்கம் அநேக பிரஸ்தாபிகளிடம் இல்லாதிருப்பது தெரிகிறது. நீங்களும் அவர்களில் ஒருவரா? நீண்ட நேரம் உரையாட அநேகருக்கு நேரம் இல்லை என்பதால் ஒருவேளை நீங்கள் பிரசுரங்களை மட்டும் கொடுப்பது அல்லது ஒரு வசனத்தின் சுருக்கத்தை சொல்வது போன்ற பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கலாம். நற்செய்தியை அளிக்கையில், ஒரேவொரு வசனத்தையாவது வாசிக்க ஊக்கமான முயற்சி எடுக்கும்படி எல்லா பிரஸ்தாபிகளையும் உற்சாகப்படுத்துகிறோம்; இவ்வாறு செய்வதன் மூலம், உண்மையில் நம் செய்தி கடவுளுடைய வார்த்தையில் உள்ளது என்பதை காண அந்த நபருக்கு உதவுவோம்.
3 பைபிள் வாசிக்கும் பழக்கம் அநேகருக்கு இல்லாவிட்டாலும் அது பொதுவாக மதிக்கப்படுகிறது. அதிக வேலையாக இருப்பவர்கள்கூட கடவுளுடைய வார்த்தையிலிருந்து நேரடியாக வாசிக்கப்படும் செய்திக்கு ஓரிரு நிமிடம் செவிசாய்ப்பார்கள். பொருத்தமான வசனத்தை உணர்ச்சியுடன் வாசித்து, சுருக்கமாக விளக்கினால் யெகோவாவின் வார்த்தையின் வல்லமை கேட்பவர்மீது நல்ல பாதிப்பை ஏற்படுத்தலாம். ஆனால் உங்கள் அறிமுக குறிப்புகளையும் பைபிள் வசனத்தையும் எப்படி இணைப்பீர்கள்?
4 பத்திரிகை ஊழியத்தில் இதை முயன்று பாருங்கள்: பத்திரிகை ஊழியத்தில் ஈடுபடும்போது, ஒரு பயணக் கண்காணி வேதவசனங்களை திறம்பட பயன்படுத்துகிறார். தன் பாக்கெட்டில் ஒரு சிறிய பைபிளை கொண்டுபோகிறார். பத்திரிகைகளை அளித்து, சுருக்கமாக பேசி ஒரு கட்டுரையை அறிமுகப்படுத்தியபின், தயங்காமல் பைபிளை திறந்து அந்த கட்டுரையோடு சம்பந்தப்பட்ட ஒரு வசனத்தை வாசிக்கிறார். “உற்சாகமளிக்கும் இந்த வாக்குறுதியைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?” என்று மட்டும் கேட்டுவிட்டு, அந்த வசனத்தை வாசித்துவிடலாம்.
5 செவிகொடுக்கும் ஒவ்வொருவரிடமும் ஓரிரு வசனங்கள் வாசிப்பதை உங்கள் இலக்காக வையுங்கள். அநேகர் கடவுளிடம் ஈர்க்கப்படுவதற்கு அதன் தூண்டும் வல்லமை வழிதிறக்கக்கூடும்.—யோவா. 6:44.