கிறிஸ்தவக் கூட்டங்களை நன்றியோடு மதித்தல்
“அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து; சபை கூடிவருதலை . . . விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்.”—எபிரெயர் 10:24, 25.
1, 2. (அ) உண்மை கிறிஸ்தவர்களின் ஒரு கூட்டத்திற்கு வந்திருப்பது ஏன் ஒரு சிலாக்கியமாக உள்ளது? (ஆ) இயேசு, தம்மைப் பின்பற்றுவோர் கூடிவரும் கூட்டங்களில் என்ன அர்த்தத்தில் அவர் அங்கு இருக்கிறார்?
இயேசு இவ்வாறு சொன்னார்: “இரண்டுபேராவது மூன்றுபேராவது என் நாமத்தினாலே எங்கே கூடியிருக்கிறார்களோ, அங்கே அவர்கள் நடுவிலே இருக்கிறேன்.” ஆகவே, கிறிஸ்தவக் கூட்டம் ஒன்று, யெகோவாவின் வணக்கத்தார் பத்துக்குக் குறைவானவர்களே அடங்கியதாக இருந்தாலும், அல்லது பல ஆயிரக்கணக்கானோர் அடங்கியதாக இருந்தாலும் அதற்கு வந்திருப்பது எப்பேர்ப்பட்ட ஒரு சிலாக்கியம்! (மத்தேயு 18:20) அந்த வாக்குறுதியை இயேசு கொடுக்கையில், சபையில் தலைமை தாங்குகிறவர்களால் திருத்தமாய்க் கையாளப்பட வேண்டிய நியாயவிசாரணை காரியங்களைப் பற்றி அவர் பேசிக்கொண்டிருந்தார் என்பது உண்மைதான். (மத்தேயு 18:15-19) ஆனால், அவருடைய பெயரில் செய்யும் ஜெபத்துடன் தொடங்கி முடிக்கப்படும் கிறிஸ்தவக் கூட்டங்கள் எல்லாவற்றிற்குங்கூட இயேசுவினுடைய வார்த்தைகளின் நியமத்தை பொருத்திப் பயன்படுத்த முடியுமா? முடியும். சீஷராக்கும் ஊழியத்தைச் செய்யும்படி தம்மைப் பின்பற்றினோருக்கு இயேசு கட்டளையிட்டபோது, அவர் இவ்வாறு வாக்குறுதி அளித்ததை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள்: “இதோ! இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவு வரையில் சகல நாட்களிலும் நான் உங்களுடன் இருக்கிறேன்.”—மத்தேயு 28:20, NW.
2 கிறிஸ்தவ சபையின் தலைவரான, கர்த்தராகிய இயேசு கிறிஸ்து, தம்மை உண்மையுடன் பின்பற்றுவோரின் கூட்டங்களில் அனைத்திலும் கூர்ந்த அக்கறையுடையவராக இருக்கிறார் என்பதில் எந்தச் சந்தேகமும் இருக்க முடியாது. மேலும், கடவுளுடைய பரிசுத்த ஆவியின் மூலமாய் அவர், அவர்களுடன் அங்கு இருக்கிறார் என்பதில் நாம் நிச்சயமாயிருக்கலாம். (அப்போஸ்தலர் 2:33; வெளிப்படுத்துதல் 5:6) நாம் ஒன்றுகூடுவதில் யெகோவா தேவனும்கூட அக்கறையுடையவராக இருக்கிறார். ‘சபை கூட்டங்களில்’ கடவுளுக்குத் துதி எழும்ப செய்வதே அத்தகைய கூட்டங்களின் முதன்மையான நோக்கம். (சங்கீதம் 26:12) சபை கூட்டங்களுக்கு நாம் வந்திருப்பது அவரிடமாக நமக்கு இருக்கும் அன்பின் ஓர் அத்தாட்சியாக உள்ளது.
3. என்ன முக்கியமான காரணங்களின் நிமித்தமாக கிறிஸ்தவக் கூட்டங்களை நாம் நன்றியோடு மதிக்கிறோம்?
3 கிறிஸ்தவக் கூட்டங்களை நாம் ஏன் நன்றியோடு மதிக்கிறோம் என்பதற்கு மற்ற நியாயமான காரணங்களும் இருக்கின்றன. இயேசு கிறிஸ்து, பூமியைவிட்டு தாம் செல்வதற்கு முன்பாக தம்முடைய அபிஷேகஞ்செய்யப்பட்ட சீஷர்களை, விசுவாச வீட்டாருக்கு ஏற்றகால ஆவிக்குரிய உணவை அருளுவதில் ‘உண்மையும் விவேகமுமுள்ள அடிமையாக’ செயல்படும்படி நியமித்தார். (மத்தேயு 24:45, NW) ஒரு முக்கியமான வழியாக, இத்தகைய ஆவிக்குரிய உணவூட்டுதல் சபை கூட்டங்களின் மூலமாகவும் அவற்றோடுகூட அசெம்பிளிகளும் மாநாடுகளுமான பெரிய கூட்டங்களின் மூலமாகவும் நடைபெறுகிறது. இந்தப் பொல்லாத ஒழுங்குமுறையின் முடிவைத் தப்பிப்பிழைத்து, கடவுளுடைய நீதியுள்ள புதிய உலகத்தில் ஜீவனடைவதற்கு விரும்பும் எல்லாருக்கும் தேவையான தகவலை அத்தகைய கூட்டங்களில் அளிப்பதற்கு, இந்த உண்மையுள்ள அடிமையை கர்த்தராகிய இயேசு கிறிஸ்து வழிநடத்துகிறார்.
4. என்ன ஆபத்தான “வழக்கம்” பைபிளில் குறிப்பிடப்படுகிறது, இதைத் தவிர்ப்பதற்கு எது நமக்கு உதவிசெய்யும்?
4 ஆகையால், அப்போஸ்தலனாகிய பவுல் குறிப்பிட்ட இந்த ஆபத்தான வழக்கத்தை கிறிஸ்தவரான எவரும் பழக்கப்படுத்திக்கொள்ளக் கூடாது, அவர் எழுதினதாவது: “மேலும், அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனித்து; சபை கூடிவருதலைச் சிலர் [“வழக்கமாய்,” NW] விட்டுவிடுகிறதுபோல நாமும் விட்டுவிடாமல், ஒருவருக்கொருவர் புத்திசொல்லக்கடவோம்; நாளானது சமீபித்துவருகிறதை எவ்வளவாய்ப் பார்க்கிறீர்களோ அவ்வளவாய்ப் புத்திசொல்லவேண்டும்.” (எபிரெயர் 10:24, 25) கிறிஸ்தவக் கூட்டங்களுக்கு ஆஜராவதன் சிலாக்கியத்தின்பேரிலும் நன்மைகளின்பேரிலும் ஆழ்ந்து சிந்திப்பது, அத்தகைய கூட்டங்களைப் பற்றுறுதியுடனும் இருதயப்பூர்வமாயும் ஆதரிக்க நமக்கு உதவிசெய்யும்.
பக்திவிருத்திக்கு ஏதுவான கூட்டங்கள்
5. (அ) கூட்டங்களில் நம்முடைய பேச்சு எந்த விதத்தில் பயனுள்ளதாக இருக்க வேண்டும்? (ஆ) அக்கறைகாட்டும் ஆட்களை கூட்டங்களுக்கு வரும்படி அழைக்க நாம் ஏன் தாமதிக்கக்கூடாது?
5 கிறிஸ்தவக் கூட்டங்களில் யெகோவாவின் பரிசுத்த ஆவி செயல்படுவதற்காக கிறிஸ்தவர்கள் ஜெபிப்பதனால், அதற்கு வந்திருக்கும் ஒவ்வொருவரும் அந்த ஆவிக்கு இசைவாகச் செயல்பட தங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும்; ‘தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருக்க வேண்டும்.’ (எபேசியர் 4:30) தேவாவியால் ஏவப்பட்ட அந்த வார்த்தைகளை அப்போஸ்தலன் பவுல் எழுதினபோது, பேச்சை சரியான முறையில் பயன்படுத்துவதைக் குறித்து அவர் சொல்லிக்கொண்டிருந்தார். நாம் சொல்வது, ‘பக்திவிருத்திக்கு ஏதுவானதாகவும் கேட்கிறவர்களுக்குப் பிரயோஜனமுண்டாகும்படியுமே’ எப்பொழுதும் பயன்படுத்தப்படுவதற்கு ஏற்றதாக இருக்க வேண்டும். (எபேசியர் 4:29) இது, விசேஷமாய்க் கிறிஸ்தவக் கூட்டங்களில் முக்கியமானதாய் இருக்கிறது. கூட்டங்கள் பக்திவிருத்திக்கு ஏதுவானவையாகவும், அறிவூட்டுபவையாகவும், ஊக்கமூட்டுபவையாகவும் இருக்க வேண்டியதை பவுல் கொரிந்தியருக்கு எழுதின தன்னுடைய கடிதத்தில் அறிவுறுத்தினார். (1 கொரிந்தியர் 14:5, 12, 19, 26, 31) புதிதானவர்கள் உட்பட, வந்திருப்போர் எல்லாரும் அத்தகைய கூட்டங்களிலிருந்து பயன் பெறுகிறார்கள்; “தேவன் மெய்யாய் உங்களுக்குள்ளே இருக்கிறாரென்று” இவர்கள் முடிவுசெய்யக்கூடும். (1 கொரிந்தியர் 14:25) இந்தக் காரணத்தினிமித்தம், புதிதாக அக்கறை காட்டுவோரை நம்முடன் கூட்டத்திற்கு வரும்படி அழைக்க நாம் தாமதிக்கக்கூடாது. ஏனெனில், அவ்வாறு அவர்கள் வருவது அவர்களுடைய ஆவிக்குரிய முன்னேற்றத்தை விரைவாக்கும்.
6. கூட்டம், பக்திவிருத்திக்கேதுவாக இருக்கும்படி உதவும் சில காரணங்கள் யாவை?
6 கிறிஸ்தவக் கூட்டத்தில், பேச்சுகள், பேட்டிகள், நடிப்புகள் ஆகியவற்றுக்கென நியமிக்கப்படுபவர்கள் எல்லாரும், தங்கள் பேச்சு, பக்திவிருத்திக்கேதுவானதாயும் கடவுளுடைய எழுதப்பட்ட வார்த்தையாகிய பைபிளுடன் ஒத்திசைந்ததாயும் இருக்கும்படி நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும். திருத்தமான பேச்சைப் பேசுவதோடுகூட, கடவுளுடையதும் கிறிஸ்துவுடையதுமான அன்புள்ள பண்புகளுக்கு இசைவான மனப்பான்மைகளையும் உணர்ச்சிகளையும் நாம் வெளிப்படுத்த வேண்டும். கூட்ட நிகழ்ச்சிநிரலில் பங்கேற்போர் எல்லாரும், சந்தோஷம், நீடியபொறுமை, விசுவாசம் போன்ற, ‘கடவுளுடைய ஆவியின் கனிகளை’ வெளிக்காட்டும்படியான உணர்வுடையோராக இருந்தால், வந்திருப்போர் எல்லாரும் பக்திவிருத்திக்கேதுவாக உற்சாகமூட்டப்பட்டவர்களாய் நிச்சயமாகவே உணருவார்கள்.—கலாத்தியர் 5:22, 23, NW.
7. கூட்டம் பக்திவிருத்திக்கேதுவாக இருப்பதில், அதற்கு வந்திருப்போர் எல்லாரும் எவ்வாறு பங்களிக்கலாம்?
7 சபை கூட்டங்களின் நிகழ்ச்சிநிரலில் சிலருக்கு மாத்திரமே பாகங்கள் இருக்கலாம் என்றாலும், பக்திவிருத்திக்கேதுவான ஒரு கூட்டத்திற்கு எல்லாரும் பங்களிக்கலாம். கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வாய்ப்புகள் சபையாருக்கு அடிக்கடி கிடைக்கின்றன. இவை நம்முடைய விசுவாசத்தை யாவரறிய அறிக்கை செய்வதற்கான சந்தர்ப்பங்கள். (ரோமர் 10:9, NW) நம்முடைய சொந்த அபிப்பிராயங்களை முன்னேற்றுவிப்பதற்கோ, நம் சொந்த சாதனைகளைப் பற்றி பெருமைபாராட்டுவதற்கோ உடன் விசுவாசி ஒருவரைக் குறித்து குற்றங்குறை கூறுவதற்கோ ஒரு வாய்ப்பாக அவற்றை ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது. அது கடவுளுடைய ஆவியைத் துக்கப்படுத்துவதாக இருக்கும் அல்லவா? உடன் விசுவாசிகளுடன் கருத்து வேற்றுமைகள் இருக்குமானால், அன்பான மனப்பான்மையுடன் தனிமையில் பேசி தீர்ப்பதே மிகச் சிறந்தது. பைபிள் இவ்வாறு கூறுகிறது: “ஒருவருக்கொருவர் தயவாயும் மன உருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள்.” (எபேசியர் 4:32) இந்தச் சிறந்த அறிவுரையைப் பொருத்திப் பயன்படுத்துவதற்கு எத்தகைய சிறந்த வாய்ப்பை கிறிஸ்தவக் கூட்டங்கள் நமக்கு அளிக்கின்றன! இந்த நோக்கத்துடன் பலர், கூட்ட நேரத்திற்கு முன்னதாகவே வருகின்றனர்; அவை முடிந்த பின்பும் சற்று தாமதமாகச் செல்கின்றனர். தாங்கள் ஆவலோடு வரவேற்கப்படுவதாக உணருவது முக்கியமாய் தேவைப்படும் நிலையிலுள்ள புதிதாய் அக்கறை காட்டுவோருக்கும் இது உதவிசெய்கிறது. இவ்வாறு, ‘அன்புக்கும் நற்கிரியைகளுக்கும் நாம் ஏவப்படும்படி ஒருவரையொருவர் கவனிப்பதால்,’ கூட்டங்களை பக்திவிருத்திக்கு ஏதுவானவையாக ஆக்குவதில், ஒப்புக்கொடுத்த கிறிஸ்தவர்கள் எல்லாருக்கும் பங்குள்ளது.
நன்றாகத் தயாரியுங்கள்
8. (அ) கூட்டங்களுக்கு வருவதற்காக, போற்றத்தக்க என்ன தியாகங்களை சிலர் செய்கின்றனர்? (ஆ) மேய்ப்பராக யெகோவா என்ன முன்மாதிரியை வைக்கிறார்?
8 கிறிஸ்தவக் கூட்டங்களுக்கு வருவது சிலருக்கு ஒருவேளை எளிதாக இருந்தாலும், மற்றவர்களுக்கு அது விடாது தொடரும் தியாகத்தைத் தேவைப்படுத்துகிறது. உதாரணமாக, தன் குடும்பத்தாரின் தேவைகளுக்கு உதவ உலகப்பிரகாரமான வேலை செய்ய வேண்டியதாக இருக்கிற ஒரு கிறிஸ்தவ தாயார், வழக்கமாய்க் களைப்புற்றவராய் வேலையிலிருந்து வீட்டுக்கு வருகிறார். அதன்பின்பு அவர் சாப்பாடு தயார் செய்யவும், கூட்டத்திற்காக தயாராகும்படி தன் பிள்ளைகளுக்கு உதவிசெய்யவும் வேண்டியதாக இருக்கலாம். மற்ற கிறிஸ்தவர்கள் கூட்டங்களுக்கு வந்து சேருவதற்கு நெடுந்தூரம் பயணப்பட வேண்டியதாக இருக்கலாம் அல்லது நோயுற்றதால் பலவீனமுள்ளவர்களாக அல்லது முதிர்வயதால் மட்டுப்படுத்தப்பட்டவர்களாக இருக்கலாம். அன்புள்ள மேய்ப்பன், தன் மந்தையிலுள்ள ஒவ்வொரு ஆட்டுக்குமுரிய தனிப்பட்ட தேவைகளைப் புரிந்துகொள்வதுபோல், கூட்டங்களுக்கு வரும் உண்மையுள்ள நபர்கள் ஒவ்வொருவரின் நிலைமையையும் யெகோவா தேவன் நிச்சயமாகவே புரிந்துகொள்கிறார். பைபிள் இவ்வாறு கூறுகிறது: “மேய்ப்பனைப்போலத் [யெகோவா] தமது மந்தையை மேய்ப்பார்; ஆட்டுக்குட்டிகளைத் தமது புயத்தினால் சேர்த்து, தமது மடியிலே சுமந்து, கறவலாடுகளை மெதுவாய் நடத்துவார்.”—ஏசாயா 40:11.
9, 10. எவ்வாறு கூட்டங்களிலிருந்து நாம் மிகுதியான பயன்பெற முடியும்?
9 தவறாமல் கூட்டங்களுக்கு வரும்படி பெரும் தியாகங்கள் செய்ய வேண்டிய நிலையில் இருப்போருக்கு, அங்கு சிந்திக்கப்படவிருக்கிற விஷயங்களை முன்னதாகவே தயாரிக்க குறைவான நேரமே இருக்கலாம். வாராந்தர பைபிள் வாசிப்பு திட்டத்தைத் தவறாமல் பின்பற்றுவது, தேவராஜ்ய ஊழியப்பள்ளியில் ஆஜராயிருப்பதை அதிக பலன்தருவதாக்குகிறது. அவ்வாறே, காவற்கோபுர படிப்பு, சபை புத்தகப் படிப்பு போன்ற மற்ற கூட்டங்களுக்காகவும் முன்னதாகவே தயாரிப்பது, அவற்றிலிருந்து மேலுமதிக பயன்பெறும்படி செய்கிறது. படிப்புக் கட்டுரையை முன்னதாகவே வாசிப்பதாலும், இடக்குறிப்பு கொடுக்கப்பட்டுள்ள பைபிள் வசனங்கள் சிலவற்றிற்காவது சிந்தனை செலுத்துவதாலும், குடும்ப காரியங்களுக்குப் பேரளவு நேரம் செலவிட நேரிடும் நிலையிலுள்ளோர், முக்கியமான பைபிள் கலந்தாலோசிப்புகளில் அர்த்தமுள்ளவிதத்தில் பங்குகொள்வதற்கு மேலுமதிக ஆயத்தமாய் இருப்பார்கள்.
10 சூழ்நிலைமைகளால் அதிகம் மட்டுப்படுத்தப்படாத நிலையிலுள்ள மற்றவர்கள், கூட்டத்திற்காக தயாரிப்பதில் அதிக நேரம் செலவிடலாம். உதாரணமாக, மேற்கோள் காட்டப்படாமல் இடக்குறிப்பு மட்டுமே கொடுக்கப்பட்டுள்ள வேதவசனங்களை எடுத்துப் பார்த்து ஆராய்ச்சி செய்யலாம். இவ்வாறு எல்லாரும் கூட்டங்களிலிருந்து உச்ச அளவில் பயன்பெறவும், தாங்கள் அளிக்கும் பேச்சுகளாலும், சொல்லும் குறிப்புகளாலும் சபையை பக்திவிருத்திக்கேதுவாக கட்டியெழுப்புவதில் சிறந்த பங்குகொள்ளவும் ஆயத்தமாக இருக்கலாம். நன்றாக தயார் செய்திருப்பதால், அர்த்தமுள்ள சுருக்கமான பதில்கள் அளிப்பதில் மூப்பர்களும் உதவி ஊழியர்களும் சிறந்த முன்மாதிரியை வைப்பார்கள். கூட்டங்களுக்கு வந்திருப்போர், யெகோவாவின் ஏற்பாடுகளுக்கு உயர் மதிப்பை காட்டுபவர்களாய், கூட்டங்கள் நடக்கையில் கவனச்சிதறல் உண்டாக்கும் எந்தப் பழக்கவழக்கங்களையும் தவிர்ப்பார்கள்.—1 பேதுரு 5:3.
11. தயாரிப்புடன் கூட்டங்களுக்கு வருவதற்கு சுயக்கட்டுப்பாடு ஏன் தேவை?
11 நம்முடைய ஆவிக்குரிய நலத்திற்கு பயனுள்ளதாய் இராத நடவடிக்கைகளும் இன்பமான பொழுதுபோக்குகளும் நம்முடைய நேரத்தை மட்டுக்குமீறி எடுத்துக்கொள்ளக்கூடும். அவ்வாறு இருந்தால், நம்மைநாமே ஆராய்ந்து, நம் நேரத்தைப் பயன்படுத்துவதில் ‘மதியற்றவர்களாவதை’ தவிர்க்க வேண்டும். (எபேசியர் 5:17) தனிப்பட்ட பைபிள் படிப்பிலும் கூட்டங்களுக்காகத் தயாரிப்பதிலும், அவற்றோடுகூட ராஜ்ய சேவையிலும் மேலுமதிக நேரம் செலவிடும்படியாக, குறைந்த முக்கியத்துவமுடைய காரியங்களிலிருந்து ‘நேரத்தை வாங்குவதே’ நம்முடைய குறிக்கோளாக இருக்க வேண்டும். (எபேசியர் 5:16, NW) மறுப்புக்கிடமின்றி, இது எப்போதும் எளிதாக இருப்பதில்லை, இதற்கு சுயக்கட்டுப்பாடு தேவை. இதற்கு கவனம் செலுத்துகிற இளைஞர், எதிர்கால முன்னேற்றத்திற்குச் சிறந்த ஆதாரத்தைப் போடுகின்றனர். பவுல், தன் இளைய கூட்டாளியாகிய தீமோத்தேயுவுக்கு இவ்வாறு எழுதினார்: “நீ தேறுகிறது யாவருக்கும் விளங்கும்படி இவைகளையே [பவுல் தீமோத்தேயுவுக்குக் கொடுத்த ஆலோசனைகளையே] சிந்தித்துக் கொண்டு, இவைகளிலே நிலைத்திரு.”—1 தீமோத்தேயு 4:15.
கடவுளுடைய வார்த்தையிலிருந்து உதாரணங்கள்
12. கவனிக்கத்தக்க என்ன முன்மாதிரியை சாமுவேலின் குடும்பத்தார் வைத்தார்கள்?
12 சாமுவேலின் குடும்பத்தாருடைய சிறந்த முன்மாதிரியைக் கவனியுங்கள். கடவுளுடைய ஆசரிப்புக்கூடாரம் சீலோவிலே இருந்தபோது, உடன் வணக்கத்தாரோடு ஒன்றுகூடுவதற்கான ஏற்பாடுகளில் இவர்கள் தவறாமல் பங்குகொண்டார்கள். பண்டிகை ஆசரிப்புகளுக்கு ஆண்கள் மாத்திரமே ஆண்டுதோறும் அங்கு செல்வது தேவைப்பட்டது. ஆனால் சாமுவேலின் தகப்பனாகிய எல்க்கானா, ‘சேனைகளின் யெகோவாவைப் பணிந்து கொள்ளவும் அவருக்குப் பலியிடவும் வருஷந்தோறும் தன் ஊரிலிருந்து சீலோவுக்குப் போய்வருகையில்,’ தன் முழு குடும்பத்தையும் அழைத்துச் சென்றார். (1 சாமுவேல் 1: 3-5, தி.மொ.) சாமுவேலின் சொந்த ஊராகிய ராமதாயீம் சோப்பீம், ‘எப்பிராயீம் மலைத்தேசத்தின்’ மலையடிவாரக் குன்றுகளில் உள்ள தற்கால ரென்டிஸ் கடற்கரைக்கு அருகில் பெரும்பாலும் இருந்திருக்கலாம். (1 சாமுவேல் 1:1) இவ்வாறு, சீலோவுக்குப் பயணப்பட்டது ஏறக்குறைய 30 கிலோமீட்டர் தூரத்தை உட்படுத்தியிருக்கலாம்; அந்நாட்களில் அது மிகக் களைப்படைய செய்யும் ஒரு பயணம். அவர்கள் “வருஷந்தோறும் யெகோவாவின் வாசஸ்தலத்திற்குச் செல்லும்போது” இந்தப் பயணத்தையே எல்க்கானா குடும்பத்தார் உண்மைத்தவறாமல் மேற்கொண்டனர்.—1 சாமுவேல் 1:7, தி.மொ.
13. இயேசு பூமியில் இருந்த காலத்தில் உண்மையுள்ள யூதர்களால் என்ன முன்மாதிரி வைக்கப்பட்டது?
13 இயேசுவும் ஒரு பெரிய குடும்பத்தில் வளர்ந்தார். எருசலேமில் பஸ்கா பண்டிகைக்குச் செல்லும்படி ஆண்டுதோறும், நாசரேத்திலிருந்து தெற்கே ஏறக்குறைய 100 கிலோமீட்டர் இந்தக் குடும்பத்தார் பயணப்பட்டனர். அவர்கள் சென்றிருப்பதற்குச் சாத்தியமான இரண்டு வழிகள் இருக்கின்றன. பெரும்பாலும் நேர்வழியாக இருந்ததானது, மெகிதோ பள்ளத்தாக்குக்குள் கீழிறங்கி, பின்பு சமாரிய பிராந்தியத்தின் வழியாக ஏறக்குறைய 600 மீட்டர் மேலேறி, எருசலேமை நோக்கிச் செல்வதை உட்படுத்தினது. பெரும்பாலும் விரும்பப்பட்ட மற்றொரு வழியானது, பொ.ச. 33-ல் எருசலேமுக்குச் சென்ற தம்முடைய கடைசி பயணத்தில் இயேசு மேற்கொண்ட வழியாக இருந்தது. இது, ‘யோர்தானுக்கு அக்கறையிலுள்ள . . . யூதேயாவின் எல்லைகளைத்’ தாம் எட்டும் வரையில், கடல்மட்டத்திற்குக் கீழான யோர்தான் பள்ளத்தாக்கில் நடப்பதை உட்படுத்தினது. (மாற்கு 10:1) இந்த நிலையிலிருந்து ‘மேலே எருசலேம் வரையான பாதை’ ஏறக்குறைய 1,100 மீட்டருக்கு மேற்பட்ட ஏற்றத்தை உட்படுத்துவதாக, ஏறக்குறைய 30 கிலோமீட்டர் தூர அளவாக உள்ளது. (மாற்கு 10:32, NW) உண்மையான பற்றுடன் பண்டிகை ஆசரிப்போரின் கூட்டத்தார், கலிலேயாவிலிருந்து எருசலேமுக்கு அந்தக் கடினமான பயணத்தைத் தவறாமல் மேற்கொண்டனர். (லூக்கா 2:44) இன்று செல்வம் மிகுந்த நாடுகளிலுள்ள யெகோவாவின் ஊழியர்களுக்கு இது எத்தகைய சிறந்த ஒரு முன்மாதிரியாக உள்ளது. இவர்களில் பலர், நவீன போக்குவரத்து சாதனங்களின் உதவியால், பெரும்பாலும் எளிதாக கிறிஸ்தவ கூட்டங்களுக்கு வர முடியும்!
14, 15. (அ) அன்னாள் என்ன முன்மாதிரியை வைத்தார்கள்? (ஆ) புதிதாக கூட்டங்களுக்கு வரும் சிலர் காட்டியிருக்கும் சிறந்த மனப்பான்மையிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?
14 மற்றொரு முன்மாதிரி, 84 வயது விதவையான அன்னாளைப் பற்றியது. அந்த அம்மாள் ‘ஆலயத்துக்கு வராமல் ஒருபோதும் இருக்கவில்லை’ என்று பைபிள் சொல்லுகிறது. (லூக்கா 2:37, NW) மேலும், அன்னாள் மற்றவர்களில் அன்புள்ள அக்கறையைக் காட்டினார்கள். குழந்தையாகிய இயேசுவைக் கண்டு, அவரே வாக்குத்தத்தம் செய்யப்பட்ட மேசியா என்று அறிந்தபோது, அவர்கள் என்ன செய்தார்கள்? கடவுளுக்கு நன்றி செலுத்தி, ‘எருசலேமிலே மீட்புண்டாகக் காத்திருந்த யாவருக்கும் அவரைக்குறித்துப் பேசத்’ தொடங்கினார்கள். (லூக்கா 2:38) எத்தகைய ஒரு சிறந்த மனப்பான்மை, இன்று கிறிஸ்தவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக உள்ளது!
15 ஆம், கூட்டங்களுக்கு வருவதும் அவற்றில் பங்குகொள்வதும் அத்தகைய இன்பமகிழ்ச்சியாக நமக்கு இருந்து, அன்னாளைப்போல், கூட்டங்களுக்கு வர ஒருபோதும் தவறாதவர்களாய் இருக்க நாம் விரும்ப வேண்டும். புதியவர்கள் பலர் இவ்வாறே உணருகிறார்கள். இருளிலிருந்து விலகி கடவுளுடைய அதிசயமான ஒளியினுள் வந்திருக்கிறவர்களாய், தங்களால் இயலும் எல்லாவற்றையும் கற்க அவர்கள் ஆவலுடையோராக இருக்கிறார்கள்; மேலும், கிறிஸ்தவக் கூட்டங்களுக்கு மிகுந்த ஆர்வத்தைப் பலர் வெளிப்படுத்துகிறார்கள். மறுபட்சத்தில், சத்தியத்தில் நெடுங்காலமாக இருப்பவர்கள், “ஆதியில் கொண்டிருந்த அன்பை விடாதபடி’’ பாதுகாத்துக்கொள்ள வேண்டும். (வெளிப்படுத்துதல் 2:4) கடும் சுகநலமில்லா பிரச்சினைகள் அல்லது தவிர்க்க முடியாத மற்ற காரணங்கள் கூட்டத்திற்கு ஆஜராவதை சில சமயங்களில் மட்டுப்படுத்தக்கூடும். ஆனால், பொருளாசை, பொழுதுபோக்கு அல்லது அக்கறையின்மை ஆகியவை, கூட்டங்களுக்கு தயாரிக்காமல், அக்கறையற்று, அல்லது ஒழுங்காக வராதவர்களாய் இருக்கும்படி நம்மைச் செய்விக்க ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.—லூக்கா 8:14.
மிகச் சிறந்த முன்மாதிரி
16, 17. (அ) ஆவிக்குரிய கூட்டங்களைக் குறித்ததில் இயேசுவின் மனப்பான்மை என்னவாக இருந்தது? (ஆ) என்ன நல்ல வழக்கத்தைப் பின்பற்ற கிறிஸ்தவர்கள் எல்லாரும் பிரயாசப்பட வேண்டும்?
16 ஆவிக்குரிய கூட்டங்களுக்கு மதித்துணர்வைக் காட்டுவதில் முதன்மையான முன்மாதிரியை இயேசு வைத்தார். பன்னிரண்டே ஆகிய இளம் வயதில், எருசலேமிலிருந்த கடவுளுடைய ஆலயத்திற்கான தம்முடைய பற்றார்வத்தை அவர் வெளிப்படுத்திக் காட்டினார். அவருடைய பெற்றோர் அவரைக் காணாமல் தேடி, கடைசியில் அவரை ஆலயத்தில் போதகர்களுடன் கடவுளுடைய வார்த்தையின்பேரில் கலந்துரையாடக் கண்டார்கள். தம்முடைய பெற்றோரின் கவலைக்குப் பதிலளிப்பவராய், இயேசு மரியாதையுடன் இவ்வாறு கேட்டார்: “என் பிதாவின் வீட்டில் நான் இருக்கவேண்டியதென்று அறியீர்களோ”? (லூக்கா 2:49, தி.மொ.) கீழ்ப்படிபவராய், இளைஞராகிய இயேசு தம்முடைய பெற்றோருடன் நாசரேத்துக்குத் திரும்பிச் சென்றார். அங்கே, ஜெபாலயத்துக்கு தவறாமல் செல்வதன்மூலம் வணக்கத்திற்குரிய கூட்டங்களுக்கு தம்முடைய பற்றார்வத்தை தொடர்ந்து காட்டி வந்தார். ஆகவே, தம்முடைய போதக ஊழியத்தை அவர் தொடங்குகையில், ‘தாம் வளர்ந்த ஊராகிய நாசரேத்துக்கு அவர் வந்து, தம்முடைய வழக்கத்தின்படியே ஓய்வுநாளில் ஜெபஆலயத்திலே பிரவேசித்து, வாசிக்க எழுந்து நின்றார்’ என்பதாக பைபிள் நமக்கு அறிவிக்கிறது. ஏசாயா 61:1, 2-ஐ இயேசு வாசித்து விளக்கம் கூறின பின்பு, அங்கு கூடியிருந்தவர்கள் “அவருடைய வாயிலிருந்து புறப்பட்ட கிருபையுள்ள வார்த்தைகளைக் குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.”—லூக்கா 4:16, 22.
17 இன்று கிறிஸ்தவக் கூட்டங்கள் இதே அடிப்படையான மாதிரியைப் பின்பற்றுகின்றன. துதிப்பாடலுடனும் ஜெபத்துடனும் கூட்டம் தொடங்கப்பட்ட பின்பு, பைபிளிலிருந்து வசனங்கள் (அல்லது பைபிள் படிப்பு கட்டுரையில் மேற்கோள் காட்டப்பட்ட வசனங்கள்) வாசித்து விளக்கப்படுகின்றன. உண்மையான கிறிஸ்தவர்கள், இயேசு கிறிஸ்துவின் நல்ல வழக்கத்தைப் பின்பற்ற கடமைப்பட்டவர்களாக இருக்கிறார்கள். தங்களுடைய சூழ்நிலைமைகள் அனுமதிக்கும் அளவாக, கிறிஸ்தவக் கூட்டங்களுக்குத் தவறாமல் வந்திருப்பதில் அவர்கள் இன்பமகிழ்ச்சியைக் கண்டடைகிறார்கள்.
தற்கால முன்மாதிரிகள்
18, 19. பொருள்வளம் குறைந்த நாடுகளிலுள்ள சகோதரர்கள், சபை கூட்டங்களையும், அசெம்பிளிகளையும், மாநாடுகளையும் குறித்தவற்றில் என்ன சிறந்த முன்மாதிரியை வைத்திருக்கிறார்கள்?
18 பொருள்வளம் குறைந்த நாடுகளிலுள்ள நம்முடைய சகோதர சகோதரிகளில் பலர், கிறிஸ்தவக் கூட்டங்களுக்கு மதித்துணர்வைக் காட்டுவதில் சிறந்த முன்மாதிரியை வைக்கிறார்கள். மொஸாம்பிக்கில் நடந்த ஒரு அசெம்பிளியில் பங்கேற்க, உயரமான ஒரு மலைமீது ஏறக்குறைய 90 கிலோமீட்டர் ஏறிச் செல்வதற்கு, மாவட்ட கண்காணி ஆர்லாண்டோவுக்கும் அவருடைய மனைவி எமிலியாவுக்கும் 45 மணிநேரம் எடுத்தது. பின்பு, அடுத்த அசெம்பிளியில் பங்கேற்க அவர்கள் அவ்வாறே திரும்பிவர வேண்டியதாக இருந்தது. ஆர்லாண்டோ மனத்தாழ்மையுடன் இவ்வாறு அறிவித்தார்: “பாவா சபையிலிருந்து வந்த சகோதரரை சந்தித்தபோது, அவர்களோடு ஒப்பிட நாங்கள் செய்தது அதிகம் ஒன்றுமில்லை என்பதாக உணர்ந்தோம். நடந்தே அசெம்பிளிக்கு வருவது தங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் செல்வதும் ஏறக்குறைய 400 கிலோமீட்டர் தூரத்தையும் ஆறு நாட்கள் நீடித்த பயணத்தையும் அவர்களுக்கு உட்படுத்தினது; அவர்களுக்குள் 60 வயதான ஒரு சகோதரரும் இருந்தார்!”
19 வாராந்தர சபை கூட்டங்களுக்கான மதித்துணர்வைப் பற்றியதென்ன? காஷ்வாஷ்வா நஜாம்பா 70-க்கு அதிக வயதிலுள்ள பலவீனமான ஒரு சகோதரி. இவர்கள் கைஸோஸோஸியில் வாழ்கிறார்கள். இது, நமிபியா, ருன்டூவிலுள்ள ராஜ்ய மன்றத்திலிருந்து ஏறக்குறைய ஐந்து கிலோமீட்டர் தூரத்திலிருக்கும் ஒரு சிறிய கிராமம். கூட்டங்களுக்கு, காட்டுப்பகுதி வழியாக பத்து கிலோமீட்டர் தூரமுள்ள சுற்று வழியில் அவர்கள் நடந்து வருகிறார்கள். அந்த வழியாக வருகையில் மற்றவர்கள் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் காஷ்வாஷ்வா தவறாமல் வருகிறார்கள். பெரும்பான்மையானக் கூட்டங்கள் அந்த அம்மாள் புரிந்துகொள்ளாத மொழிகளில் நடத்தப்படுகின்றன. ஆகவே கூட்டங்களுக்கு வருவதிலிருந்து அவர்கள் எவ்வாறு பயனடைகிறார்கள்? “வேதவசனங்களைத் தொடர்ந்து கவனிப்பதன் மூலம், அந்தப் பேச்சு எதைப் பற்றியது என்று புரிந்துகொள்ள முயற்சி செய்கிறேன்” என்று காஷ்வாஷ்வா சொல்லுகிறார்கள். ஆனால் அவர்கள் எழுதப்படிக்கத் தெரியாதவர்கள், ஆகவே வேதவசனங்களை அவர்கள் எவ்வாறு தொடந்து கவனிக்கிறார்கள்? “எனக்கு மனப்பாடமாய்த் தெரியும் வேதவசனங்களைக் கவனிக்கிறேன்” என்று பதில் சொல்லுகிறார்கள். பல ஆண்டுகளாக பெரும் எண்ணிக்கையான வேதவசனங்களை மறக்காமல் தன் நினைவில் வைத்திருக்கிறார்கள். பைபிளைப் பயன்படுத்தும் தன் திறமையை முன்னேற்றுவிப்பதற்கு, சபை ஒழுங்குபடுத்தியுள்ள படிப்பறிவூட்டும் வகுப்புக்கு ஆஜராகிறார்கள். இவ்வாறு அந்த அம்மாள் சொல்கிறார்கள்: “கூட்டங்களுக்கு வருவதை நான் மிகவும் விரும்புகிறேன், கற்றுக்கொள்வதற்கு புதிய காரியங்கள் எப்போதும் இருக்கின்றன. சகோதர சகோதரிகளோடு கூடியிருப்பதை நான் மிகவும் விரும்புகிறேன். அவர்கள் எல்லாருடனும் நான் பேச முடியாத போதிலும், அவர்கள் எப்பொழுதும் என்னிடம் வந்து என்னை வரவேற்கிறார்கள். எல்லாவற்றிலும் மிக முக்கியமாக, கூட்டங்களுக்கு வருவதன்மூலம் யெகோவாவின் இருதயத்தை சந்தோஷப்படுத்துகிறேன் என்று அறிந்திருக்கிறேன்.”
20. நாம் ஏன் நம்முடைய கிறிஸ்தவக் கூட்டங்களுக்கு வரத் தவறக்கூடாது?
20 காஷ்வாஷ்வாவைப்போல், பூமி முழுவதிலும் யெகோவாவை வணங்குவோரான லட்சக்கணக்கானோர், கிறிஸ்தவக் கூட்டங்களுக்கு போற்றத்தக்க நன்றிமதித்துணர்வைக் காட்டுகின்றனர். சாத்தானுடைய உலகம் அதன் அழிவை நோக்கி செல்லுகையில், நாம் ஒன்றுகூடிவருவதைத் தவறவிட முடியாது. மாறாக, ஆவிக்குரிய பிரகாரமாய் விழிப்புள்ளோராக நிலைத்திருந்து, கூட்டங்களுக்கும், அசெம்பிளிகளுக்கும், மாநாடுகளுக்கும் ஆழ்ந்த நன்றிமதித்துணர்வைக் காட்டுவோமாக. அது யெகோவாவின் இருதயத்தைச் சந்தோஷப்படுத்துவது மட்டுமல்லாமல், நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற தெய்வீக போதகத்தில் நாம் பங்குகொண்டு வருகையில் நமக்கு நிறைவாய் பயனளிக்கும்.—நீதிமொழிகள் 27:11, ஏசாயா 48:17, 18; மாற்கு 13:35-37.
மறுபார்வை கேள்விகள்
◻ கிறிஸ்தவக் கூட்டங்களுக்கு ஆஜராவது ஏன் ஒரு சிலாக்கியமாக உள்ளது?
◻ வந்திருப்போர் எல்லாரும் கூட்டத்தில் பக்திவிருத்திக்கேதுவாகத் தங்கள் பங்கை எவ்வாறு செய்யலாம்?
◻ என்ன முதன்மையான முன்மாதிரியை இயேசு கிறிஸ்து வைத்தார்?
◻பொருள்வளம் குறைந்த நாடுகளிலுள்ள சகோதரரிடமிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம்?
[பக்கம் 18-ன் படம்]
ருமேனியாவிலிருக்கும் இவர்களைப் போன்ற சாட்சிகள் கிறிஸ்தவக் கூட்டங்களுக்கு நன்றிமதித்துணர்வைக் காட்டுவதில் சிறந்த முன்மாதிரியை வைக்கிறார்கள்