“உங்களுக்கு சகிப்புத்தன்மை தேவை”
“வாக்குத்தத்தத்தின் நிறைவேற்றத்தை” பெற நமக்கு “சகிப்புத்தன்மை தேவை.” (எபிரெயர் 10:36, NW) “சகிப்புத்தன்மை” என்ற வார்த்தைக்கு இந்த வசனத்தில் அப்போஸ்தலனாகிய பவுல் பயன்படுத்தியிருக்கும் கிரேக்க பதம் “கடினமான, சாதகமற்ற சூழ்நிலைகளில் உயிர்வாழ்வதற்கு ஒரு செடிக்கு இருக்கும் ஆற்றலை” விளக்குவதற்கு சிலசமயங்களில் உபயோகப்படுத்தப்பட்டது என்பதாக ஒரு பைபிள் கல்விமான் விளக்குகிறார்.
ஐரோப்பிய மலைகளில், சரியாகவே இப்படிப்பட்ட ஒரு செடி வளருகிறது. ஆர்வத்தைத் தூண்டும் விதத்தில், அது என்றும் வாழ்வுள்ள செடி (live-forever) என்பதாக அழைக்கப்படுகிறது. சந்தேகமில்லாமல், ஆல்ப்ஸ் பகுதியில் வளருகிற இந்தச் செடி என்றுமாக உயிருடன் வாழ்வதில்லை, ஆனால் அது வருடக்கணக்காக நிலைத்திருந்து, ஒவ்வொரு கோடைகாலத்தின்போதும் நேர்த்தியான பூக்கள் பூக்கும்படி செய்கிறது. “கடுமையான சூழ்நிலைகளை தாங்கும் தன்மை, மற்றும் நீடித்து வாழும் தன்மையின்” காரணமாக என்றும் வாழ்வுள்ள செடி என்ற பெயர் அதற்கு கொடுக்கப்பட்டிருப்பதாக தி நியூ என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா விளக்குகிறது. (செம்பர்வைவம் என்ற இனத்தைச் சார்ந்த இந்தச் செடிகளின் அறிவியல் பெயரின் அர்த்தமும்கூட “என்றும் வாழ்தல்” என்பதாகும்.)
நீடித்து வாழும் இந்தச் செடியை எது குறிப்பிடத்தக்க ஒன்றாக ஆக்குகிறது என்றால், அது மிகவும் வள-ஆதரவற்ற இடங்களில் வளருகிறது. வெறுமனே 24 மணிநேரங்களில் 35°C அளவுக்கு சீதோஷணம் திடீரென குறையும் சாத்தியமிருக்கிற, காற்று வீசும் மலைச் சரிவுகளின் உச்சியில் அது காணப்படும். பாறையின் வெடிப்புகளிலுள்ள சிறிதளவு மண்ணில் அது வேர்கொள்ள முடியும். அப்படிப்பட்ட கடுமையான நிலைகளிலும் அது சகித்திருப்பதற்கான குறிப்பிட்ட காரணங்களில் சில யாவை?
என்றும் வாழ்வுள்ள செடி கவனமாக தண்ணீரை சேமித்து வைத்திருக்கும் சாறு நிறைந்த இலைகளைக் கொண்டிருக்கிறது. இது மழையிலிருந்தோ அல்லது உருகும் பனியிலிருந்தோ கிடைக்கிற எல்லா ஈரப்பதத்தையும் பிரயோஜனப்படுத்திக்கொள்ள உதவுகிறது. மேலுமாக, அது கொத்தாக வளர்கிறது, இக்கொத்துகள் பாறையின் ஆதாரத்தில் ஒரு உறுதியான பிடிப்பை பெற்றுக்கொள்ள அவற்றின் பலத்தை ஒன்றுபடுத்துகின்றன. வெடிப்புகளில் வேர்கொள்வதன் மூலமாக, குறைவான மண் இருந்தாலும்கூட சீதோஷண நிலைக்கு எதிராக சிறிது பாதுகாப்பைப் பெற்றிருக்கிறது. வேறு வார்த்தைகளில் சொல்லப்போனால், கடினமான சூழ்நிலைகளை சிறந்த விதத்தில் பயன்படுத்திக்கொள்வதன் மூலமாக அது செழிப்பாக வளர்கிறது.
ஆவிக்குரிய விதத்தில் பேசினால், நம்முடைய சகிப்புத்தன்மையின் குணாதிசயத்தை சோதிக்கும் சூழ்நிலைமைகளில் நம்மைநாமே காணலாம். சோதனையின்கீழ் சகித்திருக்க எது நமக்கு உதவும்? என்றும் வாழ்வுள்ள செடியைப் போல, கடவுளுடைய வார்த்தையின் உயிர் அளிக்கும் தண்ணீரை நாம் சேமித்துவைத்து, ஆதரவிற்காகவும் பாதுகாப்பிற்காகவும் உண்மைக் கிறிஸ்தவர்களுடன் நெருக்கமாக கூட்டுறவுகொள்ளலாம். எல்லாவற்றிற்கும் மேலாக, ஆல்ப்ஸ் செடியைப்போல, நம்முடைய ‘பாறையாகிய’ யெகோவாவையும் அவருடைய வார்த்தையையும் அவருடைய அமைப்பையும் கெட்டியாக பற்றிக்கொள்ள வேண்டும்.—2 சாமுவேல் 22:3, NW.
உண்மையில், கடினமான சூழ்நிலைகளிலும்கூட, கிடைக்கிற ஏற்பாடுகளை பிரயோஜனப்படுத்திக்கொண்டால், நாம் சகிப்புத்தன்மையுடன் இருக்க முடியும் என்ற காரியத்தின் கவர்ச்சியூட்டும் நினைப்பூட்டுதலாக என்றும் வாழ்வுள்ள செடி இருக்கிறது. அப்படிப்பட்ட சகிப்புத்தன்மை ‘வாக்குத்தத்தமான ஆசீர்வாதங்களை . . . சுதந்தரித்துக்கொள்ள’ நம்மை வழிநடத்தும் என்பதாக யெகோவா நமக்கு உறுதியளிக்கிறார். இது சொல்லர்த்தமாகவே என்றும் வாழ்வதை அர்த்தப்படுத்தும்.—எபிரெயர் 6:11; மத்தேயு 25:46.