விசுவாசத்தைக் காட்டுவதன்மூலம் கடவுளுடைய வாக்குறுதிகளுக்குப் பிரதிபலியுங்கள்
“அவர் [யெகோவா தேவன்] மகா மேன்மையும் அருமையுமான வாக்குறுதிகளைத் தாராளமாய் நமக்குக் கொடுத்திருக்கிறார்.”—2 பேதுரு 1:4, NW.
1. உண்மை விசுவாசத்தை நாம் காட்டுவதற்கு எது உதவிசெய்கிறது?
நாம் யெகோவாவின் வாக்குறுதிகளின்மேல் விசுவாசம் காட்டும்படி அவர் விரும்புகிறார். ஆனாலும், “விசுவாசம் எல்லாரிடத்திலுமில்லையே.” (2 தெசலோனிக்கேயர் 3:2) இந்தப் பண்பு, கடவுளுடைய பரிசுத்த ஆவியின் அல்லது கிரியை நடப்பிக்கும் சக்தியின் ஒரு கனியாகும். (கலாத்தியர் 5:22, 23) எனவே, யெகோவாவின் ஆவியினால் வழிநடத்தப்படுபவர்கள் மட்டுமே விசுவாசத்தைக் காட்ட முடியும்.
2. “விசுவாசத்தை” அப்போஸ்தலன் பவுல் எவ்வாறு விவரிக்கிறார்?
2 ஆனால் விசுவாசம் என்பது என்ன? அப்போஸ்தலன் பவுல் இதை, “காணப்படாதிருந்தபோதிலும் உண்மைகளை நிச்சயப்படுத்தும் காணக்கூடிய செயல்,” என்று அழைக்கிறார். இப்படிப்பட்ட காணப்படாத உண்மைகளின் அத்தாட்சிகள் அவ்வளவு பலமானதாய் இருப்பதால், விசுவாசம் அதற்கு சமமாக்கப்படுகிறது. விசுவாசம், மேலுமாக, “நம்பப்படுகிறவைகளின் உறுதி” என்றும் சொல்லப்படுகிறது, ஏனென்றால் இந்தப் பண்பை உடையவர்கள், யெகோவா தேவன் வாக்களித்திருக்கும் அனைத்தும் நிறைவேறிவிட்டதுபோல் அவ்வளவு உறுதியைக் கொண்டிருப்பதால் அவ்வாறு சொல்லப்படுகிறது.—எபிரெயர் 11:1, NW.
விசுவாசமும் யெகோவாவின் வாக்குறுதிகளும்
3. அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் விசுவாசத்தைக் காட்டினால், எதை அனுபவிப்பார்கள்?
3 யெகோவாவைப் பிரியப்படுத்துவதற்கு, அவருடைய வாக்குறுதிகளின்மீது நாம் விசுவாசத்தைக் காட்டவேண்டும். அப்போஸ்தலன் பேதுரு, சுமார் பொ.ச. 64-ல் எழுதப்பட்ட தன்னுடைய இரண்டாவது ஏவப்பட்ட கடிதத்தில் இதை எடுத்துக்காண்பித்தார். அபிஷேகஞ்செய்யப்பட்ட அவருடைய உடன் கிறிஸ்தவர்கள் விசுவாசத்தைக் காட்டினால், அவர்கள் கடவுளுடைய “மகா மேன்மையும் அருமையுமான வாக்குறுதிகளைக்” காண்பார்கள் என்று அவர் சொன்னார். இதன் விளைவாக, அவர்கள் பரலோக ராஜ்யத்தில் இயேசு கிறிஸ்துவோடு உடன் சுதந்தரவாளிகளாக, ‘திவ்விய சுபாவத்திற்கு பங்குள்ளவர்களாவார்கள்.’ இந்த உலகத்தின் இழிவான பழக்கங்களுக்கும், செயல்களுக்கும் அடிமையாகியிருப்பதிலிருந்து விசுவாசத்தாலும், யெகோவா தேவனின் உதவியினாலும், அவர்கள் விடுவிக்கப்பட்டு இருக்கிறார்கள். (2 பேதுரு 1:2-4) மேலும் சற்று கற்பனை செய்துபாருங்கள்! உண்மை விசுவாசத்தைக் காட்டுபவர்கள் இதேப் போன்ற விலைமதிப்பற்ற சுயாதீனத்தை இன்று அனுபவிக்கிறார்கள்.
4. நம் விசுவாசத்தோடுகூட என்னென்ன பண்புகளைக் கூட்டி வழங்கவேண்டும்?
4 யெகோவாவினுடைய வாக்குறுதிகளின்மீதான விசுவாசமும், கடவுள்கொடுத்த சுயாதீனத்திற்குப் போற்றுதல் மனப்பான்மையும் நாம் ஒரு முன்மாதிரியான கிறிஸ்தவர்களாக இருப்பதற்கு மிக அதிகமானதைச் செய்ய நம்மை உந்துவிக்கவேண்டும். பேதுரு இவ்வாறு சொன்னார்: “உள்ளப்பூர்வமான எல்லா முயற்சியினால், உங்கள் விசுவாசத்தோடே நற்பண்பையும், நற்பண்போடு அறிவையும், அறிவோடே தன்னடக்கத்தையும், தன்னடக்கத்தோடே சகிப்புத்தன்மையையும், சகிப்புத்தன்மையோடே தேவபக்தியையும், தேவபக்தியோடே சகோதர சிநேகத்தையும், சகோதர சிநேகத்தோடே அன்பையும் கூட்டி வழங்குங்கள்.” (2 பேதுரு 1:5-7, NW) ஆகவே, பேதுரு நாம் நன்றாகவே ஞாபகத்தில் வைத்திருக்கவேண்டிய ஒரு பட்டியலை நமக்குத் தருகிறார். இந்தப் பண்புகளை அதிக ஆழமாக ஆராய்ந்துபார்க்கலாம்.
விசுவாசத்தின் இன்றியமையாத ஆக்கக்கூறுகள்
5, 6. நற்பண்பு என்றால் என்ன, இதை நாம் எவ்வாறு நம் விசுவாசத்தோடுகூட கூட்டி வழங்கமுடியும்?
5 நற்பண்பு, அறிவு, தன்னடக்கம், சகிப்புத்தன்மை, தேவபக்தி, சகோதரசிநேகம், அன்பு இவையாவும் ஒன்றோடொன்றும் விசுவாசத்தோடும் கூட்டி வழங்கப்படவேண்டும் என்று பேதுரு சொன்னார். இந்தப் பண்புகள் நம் விசுவாசத்தின் இன்றியமையாத ஆக்கக்கூறுகளாகும்படிக் கடினமாக உழைக்கவேண்டும். உதாரணமாக, விசுவாசம் இல்லாமல் நாம் வெளிப்படுத்துகிற ஒரு பண்பல்ல நற்பண்பு. அகராதி தொகுப்பவர் W. E. வைன், 2 பேதுரு 1:5-ல், “விசுவாசத்தைக் காட்டுவதில் ஓர் அத்தியாவசியமான பண்பாக நற்பண்பு சேர்க்கப்படுகிறது” என்று சொல்கிறார். பேதுரு சொல்லியிருக்கும் மற்ற பண்புகள் ஒவ்வொன்றும் நம் விசுவாசத்தின் ஓர் ஆக்கக்கூறாகவும் இருக்கவேண்டும்.
6 முதலாவது, நாம் நம் விசுவாசத்திற்கு நற்பண்பைக் கூட்டி வழங்கவேண்டும். நற்பண்புள்ளவர்களாய் இருப்பதென்றால், கடவுளுடைய பார்வையில் நல்லது செய்வதைக் குறிக்கிறது. இங்கு “நற்பண்பு” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்க வார்த்தைக்கு “நற்குணம்” என்று சில மொழிபெயர்ப்புகள் பயன்படுத்துகின்றன. (நியூ இன்டர்நேஷனல் வெர்ஷன்; தி ஜெரூசலம் பைபிள்; டுடேஸ் இங்லிஷ் வெர்ஷன்) நற்பண்பு நாம் கெட்டது செய்வதை அல்லது உடன் மனிதர்களுக்குத் தீங்குவிளைவிப்பதைத் தவிர்க்கும்படி நம்மைத் தூண்டுகிறது. (சங்கீதம் 97:10) இது மேலும், மற்றவர்களின் ஆவிக்குரிய, உடல் சம்பந்தமான, உணர்ச்சி சம்பந்தமான நலனுக்கு நல்ல காரியங்களைச் செய்வதில் நம்மை தைரியமாகச் செயல்படத் தூண்டுகிறது.
7. நம் விசுவாசத்திற்கும் நற்பண்பிற்கும் ஏன் அறிவைக் கூட்டி வழங்கவேண்டும்?
7 நம் விசுவாசத்தோடும் நற்பண்போடும், பேதுரு ஏன் அறிவைக் கூட்டி வழங்கவேண்டும் என்று சொல்கிறார்? சரியாகவே, நாம் நம்முடைய விசுவாசத்தில் புதுப்புது சவால்களை எதிர்ப்படும்போது, தவறிலிருந்து சரியானதைப் பிரித்து எடுக்கும் அறிவு நமக்குத் தேவையாயிருக்கிறது. (எபிரெயர் 5:14) பைபிள் படிப்பு, கடவுளுடைய வார்த்தையைப் பொருத்திப் பிரயோகிப்பதில் அனுபவம், அன்றாட வாழ்க்கையில் நடைமுறை ஞானத்தைப் பின்பற்றுவது போன்றவற்றின்மூலம் நம்முடைய அறிவை நாம் அதிகரிக்கிறோம். இதன்விளைவாக, இது நம் விசுவாசத்தைக் காத்துக்கொள்ளவும், நாம் சோதனையின்கீழ் இருக்கும்போதும் நற்பண்பான காரியங்களையே தொடர்ந்து செய்யவும் நமக்கு உதவிசெய்கிறது.—நீதிமொழிகள் 2:6-8; யாக்கோபு 1:5-8.
8. தன்னடக்கம் என்றால் என்ன, அது எவ்வாறு சகிப்புத்தன்மையோடு தொடர்புடையதாக இருக்கிறது?
8 விசுவாசத்தோடு சோதனைகளை நாம் எதிர்ப்பட உதவிசெய்வதற்கு, நாம் நம்முடைய அறிவோடுகூட தன்னடக்கத்தையும் கூட்டி வழங்கவேண்டும். “தன்னடக்கம்” என்ற வார்த்தையின் கிரேக்கச்சொல், நம்மைநாமே கட்டுப்படுத்தி வைத்திருக்கும் திறமையைக் குறிக்கிறது. கடவுளுடைய ஆவியின் இந்தக் கனி, சிந்தனையில், வார்த்தையில், நடத்தையில் கட்டுப்பாட்டைக் காண்பிக்க நமக்கு உதவிசெய்கிறது. நாம் உறுதியாகத் தன்னடக்கத்தை அப்பியாசிப்பதன்மூலம், இதனோடுகூட சகிப்புத்தன்மையைக் கூட்டி வழங்குவோம். “சகிப்புத்தன்மை” என்ற சொல்லின் கிரேக்கப் பதம், தைரியமிக்க உறுதித்தன்மையைக் குறிக்கிறது, மீளமுடியாத கஷ்டத்திற்கு கவலையுற்ற முகத்தைக் காட்டுவதை இது அர்த்தப்படுத்துவதில்லை. தமக்கு முன்பிருந்த சந்தோஷத்தின் காரணமாகத்தான், கழுமர வேதனையை இயேசு சகித்தார். (எபிரெயர் 12:2) சகிப்புத்தன்மையோடு சம்பந்தப்பட்ட கடவுள் கொடுக்கும் வல்லமை, நம் விசுவாசத்தை முட்டுக்கொடுத்துத் தாங்கும், உபத்திரவத்தில் நாம் சந்தோஷப்படவும், சோதனையை எதிர்க்கவும், துன்பப்படும்போது விட்டுக்கொடுப்பதைத் தவிர்க்கவும் உதவிசெய்கிறது.—பிலிப்பியர் 4:13.
9. (அ) தேவபக்தி என்றால் என்ன? (ஆ) நாம் ஏன் நம்முடைய தேவபக்தியோடு சகோதர சிநேகத்தைக் கூட்டி வழங்கவேண்டும்? (இ) நாம் எவ்வாறு அன்பை நம்முடைய சகோதரசிநேகத்தோடு கூட்டி வழங்கமுடியும்?
9 நம்முடைய சகிப்புத்தன்மையோடுகூட, நாம் தேவபக்தியை—பயபக்தி, வணக்கம், யெகோவாவுக்கு ஊழியம்—கூட்டி வழங்கவேண்டும். தேவபக்தியை நாம் செயலில் காட்டி, யெகோவா எப்படித் தம்முடைய மக்களோடு நடந்துகொள்கிறார் என்பதைக் காணும்போது, நம் விசுவாசம் வளர்கிறது. எனினும், தெய்வபக்தியைக் காட்டுவதற்கு, நமக்கு சகோதரசிநேகம் அவசியம். என்னத்தான் இருந்தாலும், ‘தான் கண்ட சகோதரனிடத்தில் அன்புகூராமலிருக்கிறவன், தான் காணாத தேவனிடத்தில் அன்புகூருகிறவனாக இருக்கமுடியாதே.’ (1 யோவான் 4:20) யெகோவாவின் மற்ற ஊழியர்களுக்கு உண்மையான சிநேகத்தைக் காண்பிப்பதற்கும், எப்போதுமே அவர்களுடைய நலனையே நாடுவதற்கும் நம் இருதயம் நம்மைத் தூண்டவேண்டும். (யாக்கோபு 2:14-17) ஆனால் நம்முடைய சகோதரசிநேகத்தோடுகூட அன்பையும் கூட்டி வழங்கும்படி ஏன் சொல்லப்படுகிறோம்? சான்றுகள் காண்பிக்கிறபிரகாரம், நாம் நம்முடைய சகோதரர்களுக்கு மட்டுமல்ல, முழு மனிதகுலத்திற்கும் அன்பைக் காட்டவேண்டும் என்று பேதுரு அர்த்தப்படுத்தினார். இந்த அன்பு முக்கியமாக நற்செய்தியைப் பிரசங்கிப்பதன்மூலமும் மக்களுக்கு ஆவிக்குரிய வகையில் உதவிசெய்வதன்மூலமும் காட்டப்படுகிறது.—மத்தேயு 24:14; 28:19, 20.
முரண்பாடான பாதிப்புகள்
10. (அ) நற்பண்பு, அறிவு, தன்னடக்கம், சகிப்புத்தன்மை, தேவபக்தி, சகோதரசிநேகம், அன்பு ஆகியவற்றை நம் விசுவாசத்தோடு கூட்டி வழங்கும்போது, நாம் எப்படி நடந்துகொள்வோம்? (ஆ) கிறிஸ்தவன் என்று உரிமைபாராட்டுகிறவன் இப்படிப்பட்ட பண்புகளில் குறைவுபட்டால் என்ன ஏற்படுகிறது?
10 நாம் நற்பண்பு, அறிவு, தன்னடக்கம், சகிப்புத்தன்மை, தேவபக்தி, சகோதரசிநேகம், அன்பு ஆகியவற்றை நம்முடைய விசுவாசத்தோடுகூட கூட்டி வழங்கினால், நாம் கடவுள் அங்கீகரிக்கும் வழிகளில் சிந்திக்கவும், பேசவும், நடக்கவும் செய்வோம். நேரெதிராக, கிறிஸ்தவன் என்று சொல்லிக்கொள்கிறவன் இப்படிப்பட்ட பண்புகளை வெளிக்காட்டத் தவறினால், அவன் ஆவிக்குரிய வகையில் குருடனாக ஆகிறான். அவன் கடவுளிடமிருந்து வரும் ‘வெளிச்சத்திற்கு கண்களை மூடிக்கொள்பவனாக’ இருக்கிறான், முன்செய்த பாவங்களறத் தான் சுத்திகரிக்கப்பட்டதை மறந்துவிடுகிறான். (2 பேதுரு 1:8-10; 2:20-22) அவ்விதமாக நாம், ஒருபோதும் தவறிவிடாமலும், கடவுளுடைய வாக்குறுதிகளில் விசுவாசத்தை இழக்காமலும் இருப்போமாக.
11. பற்றுமாறாத அபிஷேகம்செய்யப்பட்டவர்களிடமிருந்து சரியாகவே நாம் எதை எதிர்பார்க்கலாம்?
11 பற்றுமாறாத அபிஷேகஞ்செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் யெகோவாவின் வாக்குறுதிகளில் விசுவாசம் வைத்திருந்து, அவர்களை அவர் அழைத்ததையும் தெரிந்தெடுத்ததையும் நிச்சயப்படுத்தும்படி அவர்கள் கடினமாகப் பிரயாசப்படுகிறார்கள். அவர்களுடைய வழிகளில் வரும் எந்தத் தடங்கல்களின் மத்தியிலும், அவர்கள் தெய்வீகப் பண்புகளைக் காண்பிப்பர் என்று நாம் எதிர்பார்க்கலாம். உண்மையுள்ள அபிஷேகஞ்செய்யப்பட்டவர்கள் பரலோகத்தில் ஆவி வாழ்க்கைக்கு உயிர்த்தெழுப்பப்படுவதன்மூலம், இயேசு கிறிஸ்துவினுடைய ‘நித்திய ராஜ்யத்துக்குட்படும் பிரவேசம் அவர்களுக்குப் பரிபூரணமாய் அளிக்கப்படும்.’—2 பேதுரு 1:11.
12. நாம் 2 பேதுரு 1:12-15-ன் வார்த்தைகளை எவ்வாறு புரிந்துகொள்ளவேண்டும்?
12 பேதுரு தான் சீக்கிரத்தில் மரிக்கப்போவதாக உணர்ந்தார், அவர் பரலோக வாழ்க்கைக்கு முடிவாக உயிர்த்தெழுதலைப் பெறுவதை எதிர்பார்த்தார். ஆனால் அவர் “இந்தக் கூடாரத்தில்”—அவருடைய மனித உடலில்—இருந்தக் காலம் வரை தன் உடன்விசுவாசிகளில் விசுவாசத்தை விருத்திசெய்வதற்கு முயற்சிசெய்தார்; தெய்வீக தயவைப் பெறுவதற்குத் தேவையான காரியங்களை அவர்களுக்கு ஞாபகப்படுத்துவதன்மூலம் அவர்களை ஊக்குவித்தார். அவர் மரித்தப்பின்பு, பேதுருவின் ஆவிக்குரிய சகோதரர்களும் சகோதரிகளும் அவருடைய வார்த்தைகளை மறுபடியும் மனதிற்கு கொண்டுவருவதன்மூலம் தங்களுடைய விசுவாசத்தை அழியாது காத்துக்கொண்டனர்.—2 பேதுரு 1:12-15.
தீர்க்கதரிசன வார்த்தையில் விசுவாசம்
13. கிறிஸ்து வருவதைப்பற்றிய விசுவாசத்தைப் பலப்படுத்தும் சாட்சிகொடுத்தலைக் கடவுள் எவ்வாறு அளித்தார்?
13 இயேசு “வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும்” வருவதைப்பற்றி, கடவுள்தாமே விசுவாசத்தைப் பலப்படுத்தும் ஒரு சாட்சிக் கொடுத்தார். (மத்தேயு 24:30; 2 பேதுரு 1:16-18) சான்றில்லாமல் தங்களுடைய கடவுட்களைப்பற்றி பொய்க் கதைகளைப் புறமத ஆசாரியர்கள் சொன்னார்கள். ஆனால் பேதுரு, யாக்கோபு, யோவான் ஆகியோர் கிறிஸ்துவின் மறுரூபமாகுதலைக் கண்கண்ட சாட்சிகளாக இருந்தார்கள். (மத்தேயு 17:1-5) அவர் மகிமைப்படுவதை அவர்கள் கண்டனர், மேலும் இயேசுவை, அவருடைய பிரியமுள்ள குமாரன் என்று கடவுளின் சொந்தக் குரலின் சப்தத்தையும் கேட்டார்கள். அந்த வெளிப்படையான அங்கீகாரமும் கிறிஸ்துவுக்கு அப்போது அருளப்பட்ட பிரகாசமான தோற்றமும் அவர் கனப்படுத்தப்பட்டு, மகிமைப்படுத்தப்பட்டதைக் குறித்தது. இந்தத் தெய்வீக வெளிப்பாட்டின் காரணமாக, பவுல் அந்த இடத்தை, ஒருவேளை எர்மோன் மலைத்தொடரின் பகுதியை, ‘பரிசுத்த பர்வதம்’ என்று அழைத்தார்.—யாத்திராகமம் 3:4, 5-ஐ ஒப்பிட்டுப் பாருங்கள்.
14. நம் விசுவாசம் எவ்வாறு இயேசுவின் மறுரூபமாகுதலால் பாதிக்கப்படவேண்டும்?
14 நம்முடைய விசுவாசத்தை இயேசுவின் மறுரூபமாகுதல் எவ்வாறு பாதிக்கவேண்டும்? பேதுரு சொன்னார்: “அதிக உறுதியான தீர்க்கதரிசன வசனமும் நமக்கு உண்டு; பொழுதுவிடிந்து விடிவெள்ளி உங்கள் இருதயங்களில் உதிக்குமளவும் இருளுள்ள ஸ்தலத்தில் பிரகாசிக்கிற விளக்கைப்போன்ற அவ்வசனத்தைக் கவனித்திருப்பது நலமாயிருக்கும்.” (2 பேதுரு 1:19) ‘தீர்க்கதரிசன வசனம்’ தெளிவாகவே மேசியாவைப்பற்றிய எபிரெய வேதாகமத்தின் தீர்க்கதரிசனங்களை மட்டுமல்ல, அவர் “வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும்” வருவார் என்ற இயேசுவின் வார்த்தையையும் உள்ளடக்கியது. மறுரூபமாகுதலால் வசனம் எவ்வாறு ‘அதிக உறுதியாக்கப்பட்டது?’ அந்த நிகழ்ச்சி ராஜ்ய அதிகாரத்தில் கிறிஸ்துவின் மகிமைபொருந்திய வருகையைப்பற்றிய தீர்க்கதரிசன வசனத்தை உண்மையென மெய்ப்பித்தது.
15. தீர்க்கதரிசன வசனத்திற்குக் கவனம் செலுத்துவதில் என்ன உட்பட்டிருக்கிறது?
15 நம்முடைய விசுவாசத்தைப் பலப்படுத்துவதற்கு நாம் தீர்க்கதரிசன வசனத்திற்குக் கவனம் செலுத்தவேண்டும். இது அந்தத் தீர்க்கதரிசன வசனத்தைப் படிப்பதையும், கிறிஸ்தவக் கூட்டங்களில் அதைக் கலந்தாலோசிப்பதையும் அதன் ஆலோசனையைப் பொருத்திப் பயன்படுத்துவதையும் உட்படுத்துகிறது. (யாக்கோபு 1:22-27) “இருளில் பிரகாசிக்கும் ஒரு விளக்கைப்” போல நம் இருதயங்களில் அது பிரகாசிக்கும்படி நாம் அதை அனுமதிக்கவேண்டும். (எபேசியர் 1:19) அப்படிச்செய்தால்தான், ‘பகல் நட்சத்திரமாகிய,’ அல்லது, ‘பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமாகிய’ இயேசு கிறிஸ்து தம்முடைய மகிமையில் வெளிப்படும்வரை அது நம்மை வழிநடத்தும். (வெளிப்படுத்துதல் 22:16) அந்த வெளிப்படுத்துதல், விசுவாசமற்றவர்களுக்கு அழிவையும், விசுவாசத்தைக் காட்டுகிறவர்களுக்கு ஆசீர்வாதத்தையும் அர்த்தப்படுத்தும்.—2 தெசலோனிக்கேயர் 1:6-10.
16. கடவுளுடைய வார்த்தையிலுள்ள எல்லாத் தீர்க்கதரிசன வாக்குறுதிகளும் நிச்சயம் நிறைவேறும் என்று நாம் ஏன் விசுவாசிக்கலாம்?
16 “வேதத்திலுள்ள எந்தத் தீர்க்கதரிசனமும் சுயதோற்றமான பொருளையுடையதாயிராதென்று நீங்கள் முந்தி அறியவேண்டியது. தீர்க்கதரிசனமானது ஒருகாலத்திலும் மனுஷருடைய சித்தத்தினாலே உண்டாகவில்லை; தேவனுடைய பரிசுத்த மனுஷர்கள் பரிசுத்தஆவியினாலே ஏவப்பட்டுப் பேசினார்கள்,” என்று பேதுரு சொல்லியிருப்பதால், கடவுளுடைய தீர்க்கதரிசிகள் ஞானமான முன்னறிவிப்புகளை மட்டும் அறிவித்த வெறும் புத்திக்கூர்மைமிக்க மனிதர்கள் அல்லர். (2 பேதுரு 1:20, 21) உதாரணமாக, தாவீது சொன்னார்: “கர்த்தருடைய ஆவியானவர் என்னைக்கொண்டு பேசினார்.” (2 சாமுவேல் 23:1, 2) மேலும் பவுல் எழுதினார்: “வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது.” (2 தீமோத்தேயு 3:16) கடவுளுடைய தீர்க்கதரிசிகள் அவருடைய ஆவியினால் தூண்டப்பட, அவருடைய வசனத்தின் எல்லா வாக்குறுதிகளும் நிச்சயமாக நிறைவேறும் என்று நாம் விசுவாசிக்கலாம்.
கடவுளுடைய வாக்குறுதிகளில் அவர்கள் விசுவாசம் வைத்திருந்தனர்
17. ஆபேலின் விசுவாசத்திற்கு அடிப்படையாக இருந்த வாக்குறுதி என்ன?
17 ‘திரளான மேகம்’ போன்ற யெகோவாவினுடைய கிறிஸ்தவத்துக்கு முந்தின சாட்சிகளின் விசுவாசத்திற்கு அடிப்படை அவருடைய வாக்குறுதிகளேயாகும். (எபிரெயர் 11:1–12:1) எடுத்துக்காட்டாக, ‘சர்ப்பத்தை’ தலையில் நசுக்கும் ஒரு ‘வித்தைப்’ பற்றிய கடவுளுடைய வாக்குறுதியை ஆபேல் விசுவாசித்தார். கடவுளுடைய தீர்ப்பின் நிறைவேற்றத்திற்கு சான்று ஆபேலின் பெற்றோரில் காணப்பட்டது. ஏதேனிற்கு வெளியே, ஆதாமும் அவருடைய குடும்பத்தினரும் தங்களுடைய வேர்வைச் சிந்துதலினால் உணவைப் பெற்றார்கள். ஏனென்றால், சபிக்கப்பட்ட பூமி முட்களையும் முட்செடிவகைகளையும் உண்டாக்கியது. ஒருவேளை ஏவாள் தன்னுடைய கணவனிடம் கொண்டிருந்த அடங்காத ஆசையையும், ஆதாம் அவளைக் கீழ்ப்படுத்தி நடத்துவதையும் ஆபேல் கண்டிருப்பான். நிச்சயமாகவே அவள் அவளுடைய பேறுகாலத்தின் வேதனையைப்பற்றி சொல்லியிருப்பாள். மேலும் ஏதேன் தோட்டத்துக்குப் போகும் வழி கேருபீன்களாலும், வீசிக்கொண்டிருந்த சுடரொளி பட்டயத்தாலும் காக்கப்பட்டது. (ஆதியாகமம் 3:14-19, 24) இவையெல்லாம் ரட்சிப்பு, வாக்குப்பண்ணப்பட்ட வித்துவின்மூலம் தான் வரும் என்பதை நிச்சயப்படுத்தும் ஒரு ‘காணக்கூடிய செயலாக’ இருந்தது. விசுவாசத்தோடு செயல்படுபவராக ஆபேல், கடவுளுக்கு ஒரு பலியைக் கொடுத்தார், அது காயீனின் பலியைவிட அதிக மதிப்பு வாய்ந்ததாக நிரூபித்தது.—எபிரெயர் 11:1, 4.
18 கோத்திரப் பிதாக்கள் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோரும் யெகோவாவின் வாக்குறுதிகளில் நம்பிக்கை வைத்தனர். ஆபிரகாம், அவர்மூலம் பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் ஆசீர்வதிக்கப்படும் என்றும், தேசம் அவருடைய சந்ததிக்குக் கொடுக்கப்படும் என்றும் சொன்ன கடவுளின் வாக்குறுதியில் விசுவாசம் காட்டினார். (ஆதியாகமம் 12:1-9; 15:18-21) அவருடைய மகன் ஈசாக்கும், பேரன் யாக்கோபும், ‘அந்த வாக்குறுதிக்கு உடன் சுதந்தரராக’ இருந்தனர். விசுவாசத்தினாலே ஆபிரகாம், ‘வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திலே பரதேசியைப்போலச் சஞ்சரித்தார்,’ மேலும் ‘உண்மையான அஸ்திவாரங்களுள்ள நகரமாகிய’ கடவுளுடைய பரலோக ராஜ்யத்தின்கீழ் பூமியில் உயிர்த்தெழுப்படுவார் என்று காத்துக்கொண்டிருந்தார். (எபிரெயர் 11:8-10) இதேப் போன்ற விசுவாசம் உங்களுக்கு இருக்கிறதா?
18, 19. ஆபிரகாமும், சாராளும் என்னென்ன வழிகளில் விசுவாசத்தைக் காட்டினர்?
19 ஆபிரகாமின் மனைவி, சாராள், சுமார் 90 வயதுடையவளாக இருந்தாள். கர்ப்பந்தரிக்கும் காலம் நன்றாகவே கடந்தபின்பும், அவள் கடவுளின் வாக்குறுதியின்மீது விசுவாசம் காட்டியதால் ‘பிள்ளைப் பெறுவதற்குப்’ பலன் கொடுக்கப்பட்டு, ஈசாக்கைப் பெற்றெடுத்தாள். எனவே, பிள்ளைப் பிறப்பிப்பதைப் பொறுத்தவரையில் “சரீரஞ்செத்தவனென்று எண்ணத்தகும்” 100 வயதான ஆபிரகாமினாலே, இறுதியில் ‘வானத்திலுள்ள பெருக்கமான நட்சத்திரங்களைப்போல மிகுந்த ஜனங்கள் பிறந்தார்கள்.’—எபிரெயர் 11:11, 12; ஆதியாகமம் 17:15-17; 18:11; 21:1-7.
20. கோத்திர பிதாக்கள், தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கடவுளுடைய வாக்குறுதிகளின் முழு நிறைவேற்றத்தைப் பார்க்காவிட்டாலும், அவர்கள் என்ன செய்தார்கள்?
20 உண்மையுள்ள கோத்திரப் பிதாக்கள், தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கடவுளுடைய வாக்குறுதிகள் முழுவதும் நிறைவேறுவதைக் காணாமலே மரித்துப்போனார்கள். ஆனாலும், ‘தூரத்திலே அவைகளை [வாக்குறுதியளிக்கப்பட்ட காரியங்களை] கண்டு, நம்பி, அணைத்துக்கொண்டு, பூமியின்மேல் தங்களை அந்நியரும் பரதேசிகளும் என்று அறிக்கையிட்டனர்.’ ஆபிரகாமின் சந்ததி வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தைப் பெறுவதற்கு முன்பே பல தலைமுறைகள் கடந்துபோயின. எனினும், அவர்களுடைய வாழ்க்கை முழுவதும், கடவுள் பயமுள்ள கோத்திரப் பிதாக்கள், யெகோவாவின் வாக்குறுதிகளில் விசுவாசம் காட்டினர். அவர்கள் ஒருபோதும் விசுவாசத்தை இழந்துவிடவில்லை, ஆகையால், மேசியானிய ராஜ்யத்தில், கடவுள் அவர்களுக்காக ஆயத்தம்பண்ணின ‘நகரத்தின்’ பூமிக்குரிய பகுதியில், சீக்கிரத்தில் உயிரோடு எழுப்பப்படுவர். (எபிரெயர் 11:13-16) இதைப்போலவே, நாம் யெகோவாவினுடைய ஆச்சரியமான வாக்குறுதிகள் அனைத்தினுடைய உடனடியான நிறைவேற்றத்தைக் காணாவிட்டாலும், விசுவாசம் நம்மை அவருக்கு உண்மைத்தவறாமல் இருக்கும்படிச் செய்யும். ஆபிரகாமைப்போல நாமும் கடவுளுக்குக் கீழ்ப்படிந்திருக்க நம் விசுவாசம் நம்மைத் தூண்டவுங்கூடும். மேலும் அவர் தன்னுடைய சந்ததிக்கு ஆவிக்குரிய சுதந்தரத்தைக் கடத்தியதுபோல, யெகோவாவின் அருமையான வாக்குறுதிகளில் விசுவாசத்தைக் காட்டுவதற்கு நம்முடைய பிள்ளைகளுக்கு நாம் உதவிசெய்யலாம்.—எபிரெயர் 11:17-21.
விசுவாசம் கிறிஸ்தவர்களுக்கு இன்றியமையாதது
21. இன்று கடவுளால் அங்கீகரிக்கப்பட, நம்முடைய விசுவாசத்தைக் காட்டுவதில் எதுவும் உட்பட்டிருக்கவேண்டும்?
21 என்றபோதிலும், யெகோவாவின் வாக்குறுதிகளின் நிறைவேற்றத்தில் நம்பிக்கை வைப்பதைக் காட்டிலும், அதிகத்தை விசுவாசம் உள்ளடக்குகிறது. நாம் அவருடைய அங்கீகாரத்தைப் பெறுவதற்கு, மனித வரலாறு முழுவதிலும், பல்வேறுபட்ட வழிகளில் கடவுளின்மீது நாம் விசுவாசத்தைக் காட்டவேண்டிய தேவையிருந்திருக்கிறது. “விசுவாசமில்லாமல் [யெகோவா] தேவனுக்குப் பிரியமாயிருப்பது கூடாத காரியம்; ஏனென்றால், தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்கவேண்டும்,” என்று பவுல் குறிப்பிட்டுச் சொன்னார். (எபிரெயர் 11:6) இன்று யெகோவாவினால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர்களாக இருப்பதற்கு, ஒருவர் இயேசு கிறிஸ்துவிலும் அவர்மூலமாகக் கடவுள் கொடுத்திருக்கிற கிரயபலியிலும் விசுவாசம் காட்டவேண்டும். (ரோமர் 5:8; கலாத்தியர் 2:15, 16) இது இயேசுதாமே பின்வருமாறு சொன்னதுபோல் இருக்கிறது: “தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் [மனிதகுலத்திடம்] அன்புகூர்ந்தார். குமாரனிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்தியஜீவனை உடையவனாயிருக்கிறான்; குமாரனை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை, தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும்.”—யோவான் 3:16, 36.
22. மேசியானிய ராஜ்யம் என்ன வாக்குறுதியின் நிறைவேற்றத்தைக் கொண்டுவரும்?
22 கிறிஸ்தவர்கள் ஜெபிக்கும் ராஜ்யத்தைப்பற்றிய கடவுளுடைய வாக்குறுதிகளின் நிறைவேற்றத்தில் இயேசு ஓர் இன்றியமையாத பாகத்தை வகிக்கிறார். (ஏசாயா 9:6, 7; தானியேல் 7:13, 14; மத்தேயு 6:9, 10) பேதுரு காண்பித்தப்படி, மறுரூபமாகுதல் இயேசு ராஜ்ய வல்லமையிலும் மகிமையிலும் வருவதைக் குறித்த தீர்க்கதரிசன வசனத்தை நிச்சயப்படுத்தியது. கடவுளின் மற்றொரு வாக்குறுதியின் நிறைவேற்றத்தை மேசியானிய ராஜ்யம் கொண்டுவரும், ஏனென்றால் பேதுரு இவ்வாறு எழுதினார்: “அவருடைய வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகுமென்று காத்திருக்கிறோம்.” (2 பேதுரு 3:13) பாபிலோனில் சிறைப்படுத்தப்பட்டிருந்த யூதர்கள் தங்களுடைய சொந்த நாட்டில் பொ.ச.மு. 537-ல், செருபாபேலை அதிபதியாகவும் யோசுவாவைப் பிரதான ஆசாரியராகவும் கொண்டிருந்த ஓர் அரசாங்கத்தின்கீழ், மீண்டும் திரும்பியபோது இதைப்போன்ற ஒரு தீர்க்கதரிசனம் நிறைவேறியது. (ஏசாயா 65:17) ஆனால் பேதுரு ‘புதிய வானங்களும்’—பரலோக மேசியானிய ராஜ்யம்—‘ஒரு புதிய பூமியின்’ மேல், இந்தப் பூலோகத்தில் வாழும் நீதியான மனித சமுதாயத்தின்மேல் ஆட்சிசெய்யும் எதிர்காலத்தைக் குறிப்பிட்டார்.—சங்கீதம் 96:1-ஐ ஒப்பிட்டுப்பாருங்கள்.
23. நற்பண்பைப் பற்றிய என்ன கேள்விகளை நாம் அடுத்துக் கலந்தாலோசிப்போம்?
23 யெகோவாவின் உண்மைத்தவறா ஊழியர்களாகவும் அவருடைய பிரியமுள்ள குமாரன் இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்களாகவும், கடவுளுடைய வாக்குறுதியளிக்கப்பட்ட புதிய உலகத்திற்காக நாம் ஆவலோடு காத்துக்கொண்டிருக்கிறோம். அது அருகில் இருக்கிறது என்று நமக்குத் தெரியும். மேலும் யெகோவாவின் அருமையான வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றம் அடையும் என்று நாம் விசுவாசிக்கிறோம். நம் கடவுளுக்கு முன்பாக ஏற்றுக்கொள்ளப்படும் வகையில் நடக்கவேண்டும் என்றால், நற்பண்பு, அறிவு, தன்னடக்கம், சகிப்புத்தன்மை, தேவபக்தி, சகோதரசிநேகம், அன்பு ஆகியவற்றைக் கூட்டி வழங்குவதன்மூலம் நம்முடைய விசுவாசத்தை நாம் பலப்படுத்தவேண்டும்.a இந்த நிலையில், இவ்வாறு கேட்கப்படலாம், நாம் எவ்வாறு நற்பண்பைக் காட்டலாம்? மேலும் நாம் நற்பண்புள்ளவர்களாக இருப்பது எப்படி நமக்கும் மற்றவர்களுக்கும் விசேஷமாக விசுவாசத்தைக் காட்டுவதன்மூலம் கடவுளுடைய வாக்குறுதிகளுக்குப் பிரதிபலித்த நம்முடைய கிறிஸ்தவ சகாக்களுக்கும் பலனளிக்கிறது?
[அடிக்குறிப்புகள்]
a விசுவாசமும் நற்பண்பும் இந்தக் காவற்கோபுரம் இதழில் கலந்தாராயப்படுகிறது. அறிவு, தன்னடக்கம், சகிப்புத்தன்மை, தேவபக்தி, சகோதரசிநேகம், அன்பு ஆகியவை இனிவரும் இதழ்களில் அதிக முழுமையாக ஆழ்ந்தாராயப்படும்.
உங்களுடைய பதில்கள் யாவை?
◻ “விசுவாசம்” எவ்வாறு விவரிக்கப்படலாம்?
◻ நம் விசுவாசத்தோடுகூட 2 பேதுரு 1:5-7-ன்படி, என்னென்ன பண்புகள் கூட்டி வழங்கப்படவேண்டும்?
◻ நம் விசுவாசத்தின்மீது என்ன விளைவை இயேசுவின் மறுரூபமாகுதல் கொண்டிருக்கவேண்டும்?
◻ பூர்வீக காலங்களிலிருந்த ஆபேல், ஆபிரகாம், சாராள், மேலும் மற்றவர்களாலும் விசுவாசத்திற்கு என்ன எடுத்துக்காட்டுகள் காட்டப்பட்டன?
[பக்கம் 15-ன் படம்]
ஒரு நபரின் விசுவாசத்தை இயேசுவின் மறுரூபமாகுதல் எப்படி பாதிக்கும் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா?