ஆபிரகாம்—விசுவாசத்தின் முன்மாதிரி
‘விசுவாசிக்கிற யாவருக்கும் [ஆபிரகாம்] தகப்பனாயிருக்கிறார்.’—ரோமர் 4:11.
1, 2. (அ) இன்று உண்மை கிறிஸ்தவர்களால் ஆபிரகாம் எப்படி நினைவுகூரப்படுகிறார்? (ஆ) ‘விசுவாசிக்கிற யாவருக்கும் தகப்பன்’ என்று ஆபிரகாம் ஏன் அழைக்கப்படுகிறார்?
அவர் ஒரு பெரிய ஜனத்தின் முற்பிதா, ஒரு தீர்க்கதரிசி, ஒரு வர்த்தகர், ஒரு தலைவர். இருப்பினும், அசைக்க முடியாத விசுவாசத்திற்காக இன்று கிறிஸ்தவர்களால் பெரிதும் நினைவுகூரப்படுகிறார். அந்த குணமே அவரை தமது நண்பராக கருத யெகோவா தேவனைத் தூண்டியது. (ஏசாயா 41:8; யாக்கோபு 2:23) அவருடைய பெயர் ஆபிரகாம். ‘விசுவாசிக்கிற யாவருக்கும் தகப்பன்’ என்று பைபிள் அவரை அழைக்கிறது.—ரோமர் 4:11.
2 ஆபிரகாமுக்கு முன்பு வாழ்ந்த ஆபேல், ஏனோக்கு, நோவா போன்றவர்கள் விசுவாசத்தை காண்பித்தார்கள் அல்லவா? ஆம், ஆனால் பூமியின் சகல ஜனத்தாரையும் ஆசீர்வதிப்பதற்கான உடன்படிக்கை ஆபிரகாமுடன்தான் செய்யப்பட்டது. (ஆதியாகமம் 22:18) இவ்வாறு, வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட வித்துவை விசுவாசிப்போர் அனைவருக்கும் அடையாள அர்த்தத்தில் தகப்பனானார். (கலாத்தியர் 3:8, 9) ஒரு கருத்தில், ஆபிரகாமை நம்முடைய தகப்பன் எனலாம். ஏனெனில் அவருடைய விசுவாசம் நாம் பின்பற்றுவதற்கு முன்மாதிரியாக இருக்கிறது. அவருடைய முழு வாழ்க்கையுமே விசுவாசத்தின் வெளிக்காட்டு எனலாம். ஏனெனில் அது பல பரீட்சைகளும் சோதனைகளும் நிறைந்ததாய் இருந்தது. தன்னுடைய குமாரன் ஈசாக்கை பலிசெலுத்த வேண்டும் என்ற கட்டளையைப் பெற்றபோது விசுவாசத்தின் மிகப் பெரிய சோதனையை ஆபிரகாம் எதிர்ப்பட்டார் எனலாம். ஆனால் உண்மையில் அதற்கும் வெகு காலத்திற்கு முன்பே அநேக சின்னஞ்சிறிய சோதனைகளில் அவர் தன் விசுவாசத்தை நிரூபித்தார். (ஆதியாகமம் 22:1, 2) ஆரம்ப காலத்தில் அவர் எதிர்ப்பட்ட இந்த சோதனைகளில் சிலவற்றை நாம் இப்போது கலந்தாலோசிப்போம்; அவை இன்று நமக்கு என்ன படிப்பினையைக் கற்றுக்கொடுக்கின்றன என காண்போம்.
ஊர் பட்டணத்தை விட்டுச் செல்ல கட்டளை
3. ஆபிராமின் வாழ்க்கை சூழலைப் பற்றி பைபிள் நமக்கு என்ன சொல்கிறது?
3 ஆதியாகமம் 11:26-ல் ஆபிராமை (பின்னர் ஆபிரகாம் என்றழைக்கப்பட்டார்) பற்றி பைபிள் முதல் தடவையாக குறிப்பிடுகிறது. அது இவ்வாறு சொல்கிறது: “தேராகு எழுபது வயதானபோது, ஆபிராம், நாகோர், ஆரான் என்பவர்களைப் பெற்றான்.” ஆபிராம் கடவுள் பயமுள்ள சேமின் சந்ததியில் வந்தவர். (ஆதியாகமம் 11:10-24) ஆதியாகமம் 11:31-ன்படி, “ஊர் என்கிற கல்தேயருடைய” செழிப்புமிக்க பட்டணத்தில் தன் குடும்பத்தாருடன் ஆபிராம் வாழ்ந்து வந்தார். அந்தப் பட்டணம் ஒரு காலத்தில் ஐப்பிராத் நதிக்குக் கிழக்கே இருந்தது.a ஆகவே, ஊர் ஊராக அலையும் நாடோடி போல் கூடாரவாசியாக இராமல் செல்வ செழிப்பும் சகல சௌகரியங்களும் நிறைந்த பட்டணவாசியாக வளர்ந்து வந்தார். பிற தேசங்களிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை ஊர் பட்டணத்து சந்தைவெளியில் வாங்க முடிந்தது. குழாய்கள் போன்ற சகல வசதிகளும் நிறைந்த 14 அறைகள் கொண்ட வெள்ளையடிக்கப்பட்ட வீடுகள் அப்பட்டணத்து வீதிகளில் வரிசையாக இருந்தன.
4. (அ) மெய் கடவுளை வணங்கியவர்களுக்கு என்ன சவால்களை ஊர் பட்டணம் முன்வைத்தது? (ஆ) ஆபிராம் எவ்வாறு யெகோவாவை விசுவாசிப்பவரானார்?
4 ஊர் பட்டணம் பொருளாதார ரீதியில் வாரி வழங்கியபோதிலும், மெய் கடவுளை சேவிக்க விரும்பிய எவருக்கும் அது பெரும் சவாலை முன்வைத்தது. அந்தப் பட்டணம் விக்கிரக வணக்கத்திலும் மூட நம்பிக்கையிலும் மூழ்கிக்கிடந்தது. அந்தப் பட்டணத்தின் முக்கிய கட்டிடம், சந்திர தெய்வமாகிய நானாவை கௌரவிக்கும் வானளாவிய கோயிலாக இருந்தது. இந்த இழிவான வணக்கத்தில் பங்கு கொள்ளும்படி உண்மையிலேயே ஆபிராம் பெரிதும் வற்புறுத்தப்பட்டிருக்கலாம் என்பதில் சந்தேகமில்லை. ஒருவேளை அவருடைய உறவினரில் சிலரே அவரை வற்புறுத்தியிருக்கலாம். ஆபிராமின் தகப்பனாகிய தேராகுவே சிலை வடிக்கும் சிற்பாசாரியாக இருந்ததாக சில யூத பாரம்பரியங்கள் சொல்கின்றன. (யோசுவா 24:2, 14, 15) எப்படியிருந்தபோதிலும், ஆபிராம் அந்த இழிவான பொய் வணக்கத்தில் ஈடுபடவில்லை. முதிர் வயதிலிருந்த அவருடைய முப்பாட்டனாகிய சேம் இன்னும் உயிரோடிருந்தார், மெய் கடவுளைப் பற்றி அவர் அறிந்திருந்தவற்றை சந்தேகமில்லாமல் சொல்லிக் கொடுத்திருப்பார். இதன் காரணமாக, ஆபிராம் யெகோவாவில் விசுவாசம் வைத்தார், நானாவின் மீதல்ல!—கலாத்தியர் 3:6.
விசுவாசத்தின் பரீட்சை
5. ஆபிராம் ஊர் பட்டணத்தில் இருக்கும்போதே, என்ன கட்டளையையும் வாக்குறுதியையும் கடவுள் அவருக்குக் கொடுத்தார்?
5 ஆபிராமின் விசுவாசம் பரீட்சிக்கப்பட்டது. கடவுள் அவருக்குத் தோன்றி இவ்வாறு கட்டளையிட்டார்: “நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ. நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய். உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னைச் சபிக்கிறவனைச் சபிப்பேன்; பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும்.”—ஆதியாகமம் 12:1-3; அப்போஸ்தலர் 7:2, 3.
6. ஊர் பட்டணத்தை விட்டுச் செல்ல ஆபிராமுக்கு ஏன் உண்மையிலேயே விசுவாசம் தேவைப்பட்டது?
6 ஆபிராம் வயதானவராக, பிள்ளை பாக்கியமின்றி இருந்தார். அப்படியிருக்க அவரை எவ்வாறு ‘பெரிய ஜாதியாக்க’ முடியும்? அவர் எந்த தேசத்திற்குப் போகும்படி கட்டளையிடப்பட்டார்? எந்த இடம் என்று கடவுள் அவரிடம் அப்போது சொல்லவில்லை. ஆகையால், செல்வ செழிப்புமிக்க ஊர் பட்டணத்தையும் அதன் சகல சௌகரியங்களையும் விட்டுச் செல்வதற்கு ஆபிராமுக்கு உண்மையிலேயே விசுவாசம் தேவைப்பட்டது. குடும்பமும் அன்பும் பைபிளும் என்ற ஆங்கில புத்தகம் பூர்வ காலங்களைப் பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறது: “பெருங்குற்றம் செய்த குடும்ப அங்கத்தினர் ஒருவருக்கு அளிக்கும் தண்டனைகளிலேயே மிகக் கடுமையான தண்டனை, அவரை துரத்திவிடுவதாக, குடும்ப ‘அங்கத்தினன்’ என்ற ஸ்தானத்தை அவரிடமிருந்து பறித்துவிடுவதாக இருந்தது. . . . இதனிமித்தமே, கடவுளுடைய கட்டளைக்கு இசைய ஆபிரகாம் தன் தேசத்தை மட்டுமல்லாமல் தன் உறவினரையும் விட்டு சென்றது, அவருடைய உடனடியான கீழ்ப்படிதலையும் கடவுளிடம் அவருக்கிருந்த நம்பிக்கையையும் அசாதாரணமான விதத்தில் வெளிக்காட்டியது.”
7. ஆபிராமைப் போன்றே இன்று கிறிஸ்தவர்கள் எவ்வாறு பரீட்சைகளை எதிர்ப்படலாம்?
7 இன்று கிறிஸ்தவர்களும் இதே போன்ற பரீட்சைகளை எதிர்ப்படலாம். ஆபிராமைப்போல், தேவராஜ்ய அக்கறைகளுக்கும் மேலாக பொருளாதார காரியங்களுக்கு இடம் கொடுக்கும்படி நாம் வற்புறுத்தப்படலாம். (1 யோவான் 2:16) சபை நீக்கம் செய்யப்பட்ட உறவினர் உட்பட, அவிசுவாசிகளான குடும்ப அங்கத்தினர்கள் நம்மை எதிர்க்கலாம். வஞ்சமான விதத்தில் ஆரோக்கியமற்ற கூட்டுறவுக்குள் நம்மை உட்படுத்த முயலலாம். (மத்தேயு 10:34-36; 1 கொரிந்தியர் 5:11-13; 15:33) இதில் ஆபிராம் நமக்குச் சிறந்த முன்மாதிரி வைத்திருக்கிறார். யெகோவாவுடன் இருந்த நட்பை எல்லாவற்றிற்கும் மேலானதாக, ஏன் குடும்ப பந்தபாசங்களுக்கும் மேலானதாக கருதினார். எவ்வாறு, எப்போது, அல்லது எங்கு கடவுளுடைய வாக்குறுதிகள் நிறைவேறும் என்பதை அவர் திட்டவட்டமாக அறியாதிருந்தார். இருப்பினும், அந்த வாக்குறுதிகளின் மீதே தன் வாழ்க்கையை அமைக்க மனமுள்ளவராக இருந்தார். இன்று நம் வாழ்க்கையில் ராஜ்ய அக்கறைகளுக்கு முதலிடம் கொடுப்பதற்கு இது எத்தகைய சிறந்த ஊக்குவிப்பை அளிக்கிறது!—மத்தேயு 6:33.
8. ஆபிராமின் நெருங்கிய குடும்பத்தாரின்மீது அவருடைய விசுவாசம் என்ன பாதிப்பை ஏற்படுத்தியது, இதிலிருந்து கிறிஸ்தவர்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்?
8 ஆபிராமின் நெருங்கிய குடும்பத்தாரைப் பற்றி என்ன சொல்லலாம்? ஆபிராமின் விசுவாசமும் நம்பிக்கையும் அவர்களில் குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்தியதாக தோன்றுகிறது. ஏனென்றால் அவருடைய மனைவி சாராயும், பெற்றோரை இழந்த அவருடைய சகோதரன் மகன் லோத்துவும் கடவுளுடைய அழைப்புக்குக் கீழ்ப்படிந்து ஊர் பட்டணத்தை விட்டுச் செல்ல தூண்டப்பட்டார்கள். பின்னர், ஆபிராமின் சகோதரன் நாகோரும் அவருடைய சந்ததியாரில் சிலரும் ஊர் பட்டணத்திலிருந்து வெளியேறி ஆரானில் குடியேறினார்கள், அங்கு அவர்கள் யெகோவாவை வணங்கினார்கள். (ஆதியாகமம் 24:1-4, 10, 31; 27:43; 29:4, 5) ஏன், ஆபிராமின் தகப்பன் தேராகுவே தன் குமாரனோடுகூட அங்கிருந்து செல்ல ஒப்புக்கொண்டாரே! ஆகவே குடும்பத்துடன் கானானுக்கு குடிமாறி போகையில் குடும்பத் தலைவர் என பைபிள் அவரையே குறிப்பிடுகிறது. (ஆதியாகமம் 11:31) நம் உறவினர்களுக்கு சாதுரியமாய் சாட்சி கொடுத்தால் நாமும் ஓரளவு வெற்றியை அனுபவித்து மகிழலாம் அல்லவா?
9. தன் பயணத்திற்கு ஆபிராம் என்ன காரியங்களை தயார் செய்ய வேண்டியிருந்தது, அது ஏன் தியாகத்தை உட்படுத்தியிருக்கலாம்?
9 ஆபிராம் தன் பயணத்தைத் தொடங்குவதற்கு முன்பு செய்ய வேண்டிய காரியங்கள் அநேகம் இருந்தன. சொத்தையும் பொருளுடைமைகளையும் விற்றுவிட்டு, கூடாரங்கள், ஒட்டகங்கள், உணவுப் பொருட்கள், தேவைப்பட்ட மற்ற பொருட்களை வாங்க வேண்டியிருந்தது. இப்படி அவசர அவசரமாய் புறப்படுகையில் ஆபிராம் ஒருவேளை பண நஷ்டத்தை அனுபவித்திருக்கலாம். ஆனால் யெகோவாவுக்குக் கீழ்ப்படிவதில் அவர் பெருமகிழ்ச்சியடைந்தார். எல்லாம் தயாராகி, ஆபிராமின் பயணக் கூட்டம் ஊர் பட்டணத்தின் மதில்களுக்கு வெளியே புறப்பட இருந்த அந்த நாள் எப்பேர்ப்பட்ட நாளாக இருந்திருக்கும்! ஐப்பிராத் நதி ஓடும் திசையிலேயே திரும்பி அந்தப் பயணக் கூட்டம் வடமேற்கே பயணித்தது. ஏறக்குறைய 1,000 கிலோமீட்டர் தூரம் பல வாரங்களுக்கு பயணித்த பின்பு, மெசொப்பொத்தாமியாவில் வடக்குப் பகுதியிலே இருந்த ஆரான் என்ற பட்டணத்தை வந்தடைந்தார்கள். அது அவர்களுடைய பயணத்தின் இடையில் நிறுத்திய முக்கிய ஸ்தலம்.
10, 11. (அ) எதற்காக ஆபிராம் சிறிது காலம் ஆரானில் தங்கியிருந்திருக்கலாம்? (ஆ) வயதான பெற்றோரை கவனிக்கும் கிறிஸ்தவர்களுக்கு என்ன ஊக்குவிப்பை அளிக்கலாம்?
10 ஆபிராம் ஆரானில் குடியேறினார். ஒருவேளை தன் வயதான தகப்பன் தேராகுக்காக அப்படி செய்திருக்கலாம். (லேவியராகமம் 19:32) இன்று கிறிஸ்தவர்கள் பலருக்கு அவ்வாறே தங்கள் வயதான அல்லது நோயுற்ற பெற்றோரை கவனிக்கும் பொறுப்பும் வாய்ப்பும் உள்ளது. இதற்காக சில மாற்றங்களையும்கூட சிலர் செய்ய வேண்டி இருந்திருக்கிறது. அப்படிப்பட்ட சமயங்களில் தங்கள் அன்பான தியாகங்கள் ‘தேவனுக்கு முன்பாகப் பிரியமாயிருப்பதை’ அத்தகையோர் மறந்துவிட வேண்டாம்.—1 தீமோத்தேயு 5:4.
11 காலம் கடந்தோடியது. “தேராகுடைய ஆயுசுநாட்கள் இருநூற்றைந்து வருஷம்; தேராகு ஆரானிலே மரித்தான்.” இந்த இழப்பால் ஆபிராம் உண்மையிலேயே பெரிதும் துக்கமடைந்திருப்பார். ஆனால் துக்க நாட்கள் முடிந்த பின்பு அவர் உடனடியாக அங்கிருந்து புறப்பட்டார். “ஆபிராம் ஆரானைவிட்டுப் புறப்பட்டபோது, எழுபத்தைந்து வயதுள்ளவனாயிருந்தான். ஆபிராம் தன் மனைவியாகிய சாராயையும், தன் சகோதரனுடைய குமாரனாகிய லோத்தையும், தாங்கள் சம்பாதித்திருந்த தங்கள் சம்பத்தெல்லாவற்றையும், ஆரானிலே சவதரித்த ஜனங்களையும் கூட்டிக்கொண்டு, அவர்கள் கானான் தேசத்துக்குப் புறப்பட்டுப்” போனார்கள்.—ஆதியாகமம் 11:32; 12:4, 5.
12. ஆரானில் வாழ்ந்தபோது ஆபிராம் என்ன செய்தார்?
12 ஆரானில் இருக்கையில் ஆபிராம் ‘சம்பத்து சம்பாதித்திருந்தது’ கவனிக்கத்தக்கது. ஊர் பட்டணத்திலிருந்து செல்வதற்காக பொருளாதார காரியங்களை ஆபிராம் விட்டு வந்திருந்தபோதிலும் ஆரானிலிருந்து புறப்படுகையில் செல்வந்தராக இருந்தார். இது தெளிவாகவே கடவுளுடைய ஆசீர்வாதத்தினாலாகும். (பிரசங்கி 5:19) இன்று தம்முடைய ஜனங்கள் எல்லாருக்கும் கடவுள் செல்வத்தை வாக்குறுதி அளிக்காதபோதிலும், ராஜ்யத்தினிமித்தமாக ‘வீட்டையாவது, சகோதரரையாவது, சகோதரிகளையாவது விடுகிறவர்களின்’ தேவைகளைக் கவனித்துக்கொள்வதாக கொடுத்த வாக்குறுதியை கடவுள் உண்மையுடன் நிறைவேற்றுகிறார். (மாற்கு 10:29, 30) அவர் ‘சவதரித்த ஜனங்களும்,’ அதாவது அநேக வேலைக்காரர்களும் ஆபிராமுக்கு இருந்தார்கள். ஆபிராம் ‘மதமாற்றினார்’ என்று ஜெரூசலம் டார்கமும், கால்டி பாராஃப்ரேஸும் சொல்கின்றன. (ஆதியாகமம் 18:19) உங்கள் அயலாரோடும், உடன் வேலை செய்பவரோடும், அல்லது பள்ளித் தோழரோடும் பேசுவதற்கு விசுவாசம் உங்களை தூண்டுவிக்கிறதா? குடியேறுவதற்கும், கடவுளுடைய கட்டளையை மறந்துவிடுவதற்கும் மாறாக, ஆரானில் தன் நேரத்தை பயனுள்ள முறையில் ஆபிராம் கழித்தார். ஆனால் இப்போது அங்கு தங்குவதற்கான நேரம் முடிந்துவிட்டது. ஆகவே, “யெகோவா தனக்குச் சொன்னபடியே ஆபிராம் போனான்.”—ஆதியாகமம் 12:4, திருத்திய மொழிபெயர்ப்பு.
ஐப்பிராத்தைக் கடந்து
13. ஆபிராம் ஐப்பிராத் நதியை எப்போது கடந்தார், இந்தச் சம்பவத்தின் முக்கியத்துவம் என்ன?
13 இது ஆபிராம் மீண்டும் பயணப்படுவதற்கான நேரம். ஆரானை விட்டு புறப்பட்டு அவருடைய பயணக் கூட்டம் மேற்கு நோக்கி ஏறக்குறைய 90 கிலோமீட்டர் பயணித்தது. இடையில், ஐப்பிராத் நதியண்டையில் ஓரிடத்தில் ஆபிராம் தங்கியிருக்கலாம்—அக்கரையில் பூர்வ வாணிக கேந்திரமான கார்க்கெமிஷ் இருந்தது. அவர் தங்கியிருந்தது பொதுவாக பயணக் கூட்டங்கள் கடந்து சென்ற முக்கிய இடம்.b ஆபிராமின் பயணக் கூட்டம் எந்த தேதியில் ஆற்றைக் கடந்தது? பொ.ச.மு. 1513, நைசான் 14-ல் யூதர்கள் எகிப்தை விட்டு புறப்படுவதற்கு 430 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்ததாக பைபிள் காட்டுகிறது. யாத்திராகமம் 12:41 இவ்வாறு சொல்கிறது: ‘நானூற்றுமுப்பது வருஷம் முடிந்த அன்றைத்தினமே கர்த்தருடைய சேனைகள் எல்லாம் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டது.’ அப்படியானால், ஆபிராம் கீழ்ப்படிதலுடன் ஐப்பிராத் நதியைக் கடந்தபோது பொ.ச.மு. 1943, நிசான் 14-ல் ஆபிரகாமிய உடன்படிக்கை அமலுக்குவர ஆரம்பித்திருக்க வேண்டும்.
14. (அ) ஆபிராமால் விசுவாசக் கண்களால் எதைக் காண முடிந்தது? (ஆ) இன்று என்ன அர்த்தத்தில் கடவுளுடைய ஜனங்கள் ஆபிராமைவிட அதிகமாய் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறார்கள்?
14 ஆபிராம் செல்வ செழிப்புமிக்க நகரத்தை விட்டு வந்தார். எனினும் இப்போது, “அசையாத அடித்தளமுள்ள ஒரு நகரை,” மனிதகுலத்தை ஆளும் நீதியுள்ள ஓர் அரசாங்கத்தை அவரால் மனக்கண்ணில் காண முடிந்தது. (எபிரேயர் 11:10, பொது மொழிபெயர்ப்பு) ஆம், ஏதோ கொஞ்சம் தகவல் அறிந்தவராக, மரிக்கும் மனிதகுலத்தை மீட்பதற்கான கடவுளுடைய நோக்கத்தின் அடிப்படை அம்சங்கள் சிலவற்றை ஆபிராம் புரிந்துகொள்ள ஆரம்பித்தார். இன்று நாமோ ஆபிராமைவிட கடவுளுடைய நோக்கங்களை மிக நன்றாக புரிந்துகொள்வதற்கு ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறோம். (நீதிமொழிகள் 4:18) ஆபிராம் எதிர்நோக்கியிருந்த அந்த ‘நகரம்’ அல்லது ராஜ்ய அரசாங்கம் இப்போது நிஜமாகியிருக்கிறது, அது 1914 முதற்கொண்டு பரலோகங்களில் ஸ்தாபிக்கப்பட்டிருக்கிறது. அப்படியானால், யெகோவாவில் விசுவாசத்தையும் நம்பிக்கையையும் வெளிப்படுத்தும் செயல்களில் நாம் ஈடுபட வெகுவாய் தூண்டப்படுகிறோம் அல்லவா?
வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தில் ஆரம்பமாகும் தற்காலிக வாசம்
15, 16. (அ) யெகோவாவுக்கு ஒரு பலிபீடம் கட்டுவதில் ஆபிராமுக்கு ஏன் தைரியம் தேவைப்பட்டது? (ஆ) ஆபிராமைப்போல் இன்று கிறிஸ்தவர்கள் எவ்வாறு தைரியமாய் இருக்கலாம்?
15 ஆதியாகமம் 12:5, 6 நமக்கு இவ்வாறு சொல்கிறது: “அவர்கள் . . . கானான் தேசத்தில் சேர்ந்தார்கள். ஆபிராம் அந்தத் தேசத்தில் சுற்றித் திரிந்து சீகேம் என்னும் இடத்துக்குச் சமீபமான மோரே என்னும் சமபூமிமட்டும் வந்தான்.” எருசலேமுக்கு வடக்கே 50 கிலோமீட்டர் தொலைவில், “பரிசுத்த தேசத்தின் பரதீஸ்” என்று விவரிக்கப்பட்டிருக்கிற வளமான பள்ளத்தாக்கில் சீகேம் இருந்தது. எனினும், “அக்காலத்திலே கானானியர் அத்தேசத்தில் இருந்தார்கள்.” கானானியர் ஒழுக்க ரீதியில் கேடுகெட்டவர்களாய் இருந்ததால் அவர்களுடைய மோசமான செல்வாக்கிலிருந்து தன் குடும்பத்தைப் பாதுகாக்க ஆபிராம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருந்திருப்பார்.—யாத்திராகமம் 34:11-16.
16 இரண்டாவது தடவையாக, “யெகோவா ஆபிராமுக்குத் தரிசனமாகி: உன் சந்ததிக்கு இந்தத் தேசத்தைக் கொடுப்பேன் என்றார்.” எவ்வளவு கிளர்ச்சியூட்டும் விஷயம்! தன்னுடைய எதிர்கால சந்ததியாரே அனுபவிக்கப் போகிற ஒன்றைக் குறித்து சந்தோஷப்பட நிச்சயமாகவே ஆபிராமுக்கு விசுவாசம் தேவைப்பட்டது. இருப்பினும், அதை ஏற்றுக்கொள்பவராக ஆபிராம், “தனக்குத் தரிசனமான யெகோவாவுக்கு அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டினான்.” (ஆதியாகமம் 12:7, தி.மொ.) பைபிள் கல்விமான் ஒருவர் கூறுகிறபடி, “நிலத்தில் ஒரு பலிபீடத்தைக் கட்டுவது, தன் விசுவாசத்தை வெளிக்காட்டுவதற்குரிய உரிமையை பெற்றுக் கொண்டதன் அடிப்படையில் அந்த நிலத்தை உடைமையாக்கிக் கொள்ளும் சம்பிரதாய முறையாக இருந்தது.” அப்படியொரு பலிபீடத்தைக் கட்டுவதும்கூட தைரியமான செயல். இந்தப் பலிபீடம், இயற்கையாக காணப்படும் (முறையாக செதுக்கப்படாத) கற்களால் ஆனதாக, பின்னால் நியாயப்பிரமாண உடன்படிக்கையில் விவரிக்கப்பட்ட விதமாக இருந்ததில் சந்தேகமில்லை. (யாத்திராகமம் 20:24, 25) அது பார்ப்பதற்கு கானானியர் பயன்படுத்தின பலிபீடங்களிலிருந்து முற்றிலும் வித்தியாசமானதாக இருக்கும். இவ்வாறு, மெய் கடவுளாகிய யெகோவாவை வணங்குவதை ஆபிராம் தைரியமாய் வெளிப்படுத்தினார், பகைமையையும் சரீரப்பிரகாரமாக தாக்கப்படும் ஆபத்தையும் எதிர்ப்பட துணிந்தார். இன்று நம்மைப் பொருத்ததில் எப்படி? நம்மில் சிலர், முக்கியமாய் இளைஞர்கள், நாம் யெகோவாவை வணங்குகிறோம் என்பதை அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கோ பள்ளி தோழர்களுக்கோ தெரியப்படுத்த தயங்குகிறோமா? யெகோவாவின் ஊழியராக இருப்பதில் பெருமிதம் கொள்ளும்படி, ஆபிராமின் தைரியமான முன்மாதிரி நம்மெல்லாரையும் ஊக்குவிப்பதாக!
17. எவ்வாறு ஆபிராம் கடவுளுடைய பெயரை பிரசங்கிப்பவராக நிரூபித்தார், இன்று கிறிஸ்தவர்களுக்கு இது எதை நினைப்பூட்டுகிறது?
17 ஆபிராம் சென்ற இடத்தில் எல்லாம் யெகோவாவின் வணக்கத்திற்கே எப்போதும் முதலிடம் கொடுத்தார். “பின்பு அவன் அவ்விடம் விட்டுப் பெயர்ந்து, பேதேலுக்குக் கிழக்கே இருக்கும் மலைக்குப் போய், பேதேல் தனக்கு மேற்காகவும் ஆயி கிழக்காகவும் இருக்கக் கூடாரம்போட்டு, அங்கே யெகோவாவுக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, யெகோவாவின் நாமத்தைத் தொழுதுகொண்டான்.” (ஆதியாகமம் 12:8, தி.மொ.) ‘நாமத்தைத் தொழுதுகொள்ளுதல்’ என்பதற்குரிய எபிரெய சொற்றொடர், “பெயரை அறிவித்தல் (பிரசங்கித்தல்)” என்ற அர்த்தத்தையும் தருகிறது. தன் கானானிய அயலாரின் மத்தியில் யெகோவாவின் பெயரை ஆபிராம் தைரியமாய் அறிவித்தார் என்பதில் சந்தேகமில்லை. (ஆதியாகமம் 14:22-24, தி.மொ.) இன்று ‘அவருடைய திருநாமத்தை அறிக்கையிடுவதில்’ நம்மால் முடிந்த மட்டும் பெருமளவு பங்குகொள்ளும் கடமையை இது நமக்கு நினைப்பூட்டுகிறது.—எபிரேயர் 13:15, தி.மொ.; ரோமர் 10:10.
18. கானானின் குடிகளுடன் ஆபிராம் எப்படிப்பட்ட உறவு வைத்திருந்தார்?
18 இடையில் தங்க நேர்ந்த இடங்களிலும் ஆபிராம் அதிக நாட்கள் தங்கவில்லை. “அதின் பின் ஆபிராம் அங்கிருந்து பெயர்ந்து தென்னாட்டுக்குப் [“படிப்படியாக நெகேபு நோக்கிப்,” பொ.மொ.] பிரயாணம் பண்ணிக்கொண்டு போனான்.” இது யூதாவின் மலைகளுக்குத் தெற்கேயுள்ள ஓரளவு வறண்ட பிரதேசம். (ஆதியாகமம் 12:9, தி.மொ.) இவ்வாறு தொடர்ந்து ஒவ்வொரு இடமாக குடிபெயர்ந்து, அந்தப் புதிய இடங்களில் எல்லாம் யெகோவாவின் வணக்கத்தாராக தன்னை அடையாளம் காட்டிக்கொள்வதன் மூலம், ஆபிராமும் அவருடைய வீட்டாரும், ‘பூமியின்மேல் தங்களை அந்நியரும் பரதேசிகளும் என்று அறிக்கையிட்டார்கள்.’ (எபிரெயர் 11:13) தங்கள் புறமத அயலாருடன் நெருங்கிய உறவு வைத்துக்கொள்வதை எப்போதும் தவிர்த்தார்கள். இன்று கிறிஸ்தவர்களும் அவ்வாறே ‘உலகத்தின் பாகமல்லாதவர்களாக’ நிலைத்திருக்க வேண்டும். (யோவான் 17:16, NW) அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுடனும் உடன் வேலை செய்பவர்களுடனும் தயவாகவும் மரியாதையுடனும் நடந்துகொள்கையில், கடவுளிடமிருந்து விலகியிருக்கும் இந்த உலகத்தின் மனப்பான்மையை வெளிக்காட்டும் நடத்தையில் சிக்கிக்கொள்ளாதிருக்க கவனமாயிருக்கிறோம்.—எபேசியர் 2:2, 3.
19. (அ) நாடோடி வாழ்க்கை ஆபிராமுக்கும் சாராய்க்கும் ஏன் சவால்களை அளித்திருக்கும்? (ஆ) மேலும் என்ன சோதனைகள் ஆபிராமுக்கு வரவிருந்தன?
19 நாடோடி வாழ்க்கையின் கஷ்டமான சூழ்நிலைகளுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்வது ஆபிராமுக்கும் சாராய்க்கும் எளிதாயிருந்திருக்காது என்பதை மறவாதிருப்போமாக. ஊர் பட்டணத்து சந்தைவெளிகளில் கிடைத்த நல்ல உணவுப் பொருட்களுக்கு பதிலாக தங்கள் மந்தைகளிலிருந்து கிடைத்தவற்றை அவர்கள் சாப்பிட்டார்கள். தரமாக கட்டப்பட்ட வீடுகளில் வசிப்பதற்கு பதிலாக கூடாரங்களில் வசித்தார்கள். (எபிரெயர் 11:9) ஆபிராமின் நாட்கள் ஓய்வு ஒழிச்சல் இல்லாத நாட்கள். தன் மந்தைகளையும் ஊழியக்காரரையும் கவனிப்பதில் ஆபிராம் சுறுசுறுப்பாய் ஈடுபட்டிருந்தார். அப்போதைய கலாச்சாரத்திற்கு இசைய பொதுவாக பெண்கள் செய்து வந்த வேலைகளான மாவு பிசைதல், அப்பம் சுடுதல், கம்பளி நூல் நூற்றல், உடைகள் தைத்தல் ஆகியவற்றை சாராயும் செய்தாள் என்பதில் சந்தேகமில்லை. (ஆதியாகமம் 18:6, 7; 2 இராஜாக்கள் 23:7; நீதிமொழிகள் 31:19; எசேக்கியேல் 13:18) இருப்பினும் புதிய சோதனைகள் வரவிருந்தன. தங்கள் உயிரையே ஆபத்திற்குட்படுத்தும் சூழ்நிலையை ஆபிராமும் அவருடைய வீட்டாரும் சீக்கிரத்தில் எதிர்ப்படவிருந்தார்கள்! அந்தச் சவாலை எதிர்ப்படும் அளவுக்கு ஆபிராமின் விசுவாசம் அதிக உறுதியுள்ளதாக நிரூபிக்குமா?
[அடிக்குறிப்புகள்]
a இன்று, பூர்வ ஊர் பட்டணத்திற்கு கிழக்கே 16 கிலோமீட்டருக்கு அப்பால் ஐப்பிராத் நதி ஓடுகிறபோதிலும், பூர்வ காலங்களில் அந்த நதி அப்பட்டணத்திற்கு மேற்கே ஓடினதென அத்தாட்சி காட்டுகிறது. இவ்வாறாக, ஆபிராம் “[ஐப்பிராத்] நதிக்கு அப்புறத்திலிருந்து” வந்ததாக பின்னர் குறிப்பிட முடிந்தது.—யோசுவா 24:3.
b பல நூற்றாண்டுகளுக்குப் பின், அசீரிய அரசனாகிய இரண்டாம் அஷூர்நஸிர்பால் கார்க்கெமிஷுக்கு அருகில் ஐப்பிராத் நதியைக் கடக்க கட்டுமரங்களைப் பயன்படுத்தினான். ஆபிராமுங்கூட அவ்வாறு செய்தாரா அல்லது அவரும் அவருடைய பயணக் கூட்டத்தாரும் நீந்திக் கடந்தார்களா என்பதை பைபிள் சொல்கிறதில்லை.
நீங்கள் கவனித்தீர்களா?
• ‘விசுவாசிக்கிற யாவருக்கும் தகப்பன்’ என ஆபிராம் ஏன் அழைக்கப்பட்டார்?
• கல்தேயரின் ஊர் பட்டணத்தை விட்டுச் செல்ல ஆபிராமுக்கு ஏன் விசுவாசம் தேவைப்பட்டது?
• யெகோவாவின் வணக்கத்திற்கு முதலிடம் கொடுத்ததை ஆபிராம் எவ்வாறு காட்டினார்?
[பக்கம் 16-ன் தேசப்படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
ஆபிரகாமின் பயணம்
ஊர்
ஆரான்
கார்க்கெமிஷ்
கானான்
மகா கடல்
[படத்திற்கான நன்றி]
வரைபடத்தின் உரிமையாளர்: Pictorial Archive (Near Eastern History) Est. and Survey of Israel
[பக்கம் 15-ன் படம்]
ஊர் பட்டணத்தின் சொகுசான வாழ்க்கையை விட்டுச் செல்ல ஆபிராமுக்கு விசுவாசம் தேவைப்பட்டது
[பக்கம் 18-ன் படங்கள்]
கூடாரங்களில் வாழ்வதன்மூலம் ஆபிராமும் அவருடைய வீட்டாரும் ‘தங்களை அந்நியரும் பரதேசிகளும் என்று அறிக்கையிட்டார்கள்’