காண முடியாதவரை காண்பதுபோல் உறுதியாயிருங்கள்!
“காண முடியாதவரை காண்பதுபோல் [மோசே] தொடர்ந்து உறுதியாய் நிலைத்திருந்தார்.” —எபிரெயர் 11:27, NW.
1. இயேசு தம்முடைய மலைப்பிரசங்கத்தில் கடவுளைப் பற்றி என்ன முக்கிய குறிப்பை சொன்னார்?
கடவுளாகிய யெகோவாவை காண முடியாது. யெகோவாவுடைய மகிமையைக் காண மோசே ஆசைப்பட்டபோது “நீ என் முகத்தைக் காண முடியாது, ஒரு மனுஷனும் என்னைக் கண்டு உயிரோடிரான்” என அவர் பதிலளித்தார். (யாத்திராகமம் 33:20, தி.மொ.) மேலும், “தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை” என அப்போஸ்தலன் யோவான் எழுதினார். (யோவான் 1:18) இயேசு கிறிஸ்து பூமியில் மனிதனாக வாழ்ந்த காலத்தில் அவராலும் கடவுளை காண முடியவில்லை. எனினும், இயேசு தம்முடைய மலைப்பிரசங்கத்தில் “இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்” என சொன்னார். (மத்தேயு 5:8) இப்படி இயேசு சொன்னதன் அர்த்தம் என்ன?
2. நாம் ஏன் கடவுளை நேரில் காண முடிவதில்லை?
2 யெகோவா காண முடியாத ஆவியாக இருப்பதாக வேதவசனங்கள் குறிப்பிடுகின்றன. (யோவான் 4:24; கொலோசெயர் 1:15; 1 தீமோத்தேயு 1:17) எனவே, மனிதர்களாகிய நாம் யெகோவாவை நிஜமாகவே நேரில் காண முடியும் என இயேசு சொல்லவில்லை. அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் ஆவி சிருஷ்டிகளாக உயிர்த்தெழுப்பப்பட்ட பின்பு பரலோகத்தில் யெகோவாவைக் காண்பார்கள் என்பது உண்மைதான். ஆனால் ‘இருதயத்தில் சுத்தமுள்ளவர்களும்’ பூமியில் என்றென்றும் வாழும் நம்பிக்கை உள்ளவர்களும்கூட கடவுளைக் “காண” முடியும். இது எப்படி முடியும்?
3. கடவுளுடைய பண்புகள் சிலவற்றை மனிதர்கள் எவ்வாறு மனதில் உணரலாம்?
3 யெகோவாவின் படைப்புகளை கவனமாய் ஆராய்வதன் மூலம் அவரைப் பற்றி நாம் ஓரளவு கற்றுக்கொள்கிறோம். இவ்வாறு அவருடைய வல்லமையைக் கண்டு வியந்து அவரைப் படைப்பாளராக ஏற்றுக்கொள்ள தூண்டப்படலாம். (எபிரெயர் 11:3; வெளிப்படுத்துதல் 4:11) இதன் சம்பந்தமாக அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “எப்படியென்றால், காணப்படாதவைகளாகிய அவருடைய [கடவுளுடைய] நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானது முதற்கொண்டு, தெளிவாய்க் காணப்படும்.” (ரோமர் 1:20) ஆகையால், யெகோவாவை தரிசிப்பார்கள் என்று இயேசு சொன்னபோது, கடவுளின் சில பண்புகளைக் கண்டுணரும் திறமையையும் உட்படுத்தினார். இப்படி காணுதல் திருத்தமான அறிவின் அடிப்படையில் அமைந்ததாகும்; ‘இருதயக் கண்களால்’ ஆவிக்குரிய முறையில் கண்டுணருவதாகும். (எபேசியர் 1:18, NW) இயேசு சொன்னவையும் செய்தவையும் கடவுளைப் பற்றி அதிகத்தை வெளிப்படுத்துகின்றன. ஆகையால், “என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்” என்று இயேசு சொன்னார். (யோவான் 14:9) யெகோவாவின் ஆளுமையை இயேசு முழுக்க முழுக்க அப்படியே வெளிக்காட்டினார். இவ்வாறு, இயேசுவின் வாழ்க்கையையும் போதனைகளையும் பற்றிய அறிவு, கடவுளின் பண்புகள் சிலவற்றைக் காண அல்லது மனதில் உணர நமக்கு உதவலாம்.
ஆவிக்குரிய தன்மை முக்கியம்
4. ஆவிக்குரிய தன்மையில் குறைவுபடுவதை இன்று பலர் எப்படி வெளிக்காட்டுகின்றனர்?
4 இன்று விசுவாசத்தையும் உண்மையான ஆவிக்குரிய தன்மையையும் காண்பது வெகு அரிதாக உள்ளது. “விசுவாசம் எல்லாரிடத்திலுமில்லையே” என்று பவுல் சொன்னார். (2 தெசலோனிக்கேயர் 3:2) பலர் தங்கள் சொந்த அலுவல்களில் முழுமையாய் மூழ்கிவிடுவதால் கடவுளில் விசுவாசம் இல்லாதிருக்கிறார்கள். பாவத்தன்மையுள்ள நடத்தையாலும், ஆவிக்குரிய தன்மை அறவே இல்லாததாலும் அவர்கள் புரிந்துகொள்ளுதல் எனும் கண்களால் கடவுளைக் காணமுடியாமல் போகிறது; அதனால்தான், “தீமைசெய்கிறவன் தேவனைக் காணவில்லை” என அப்போஸ்தலன் யோவான் எழுதினார். (3 யோவான் 11) இப்படிப்பட்டவர்கள் தாங்கள் நிஜமாக கடவுளைக் காணாததால் தாங்கள் செய்வதை அவரால் காண முடியாது என்பதைப் போல் நடந்துகொள்கிறார்கள். (எசேக்கியேல் 9:9) ஆவிக்குரிய காரியங்களை அவர்கள் வெறுப்பதால் “தேவனை அறியும் அறிவை” அவர்கள் பெற முடிவதில்லை. (நீதிமொழிகள் 2:5) “ஜென்ம சுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான்; அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும்; அவைகள் ஆவிக்கேற்றபிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான்” என பொருத்தமாகவே பவுல் எழுதினார்.—1 கொரிந்தியர் 2:14.
5. ஆவிக்குரிய காரியங்களில் மனதை ஒருமுகப்படுத்துபவர்கள் எதை உணர்ந்திருக்கின்றனர்?
5 எனினும், நாம் ஆவிக்குரிய காரியங்களில் மனதை ஒருமுகப்படுத்துகையில், யெகோவா குற்றம் கண்டுபிடிக்கும் கடவுள் இல்லாவிட்டாலும், கெட்ட எண்ணங்களுடனும் ஆசைகளுடனும் நாம் நடந்துகொள்கையில் அவருக்குத் தெரிந்துவிடும் என்பதை எப்போதும் உணர்ந்திருப்போம். “மானிடன் வழிகள் யெகோவாவின் கண்முன் உள்ளன. அவன் பாதைகளை எல்லாம் அவர் கவனிப்பார்” என்பது உண்மைதான். (நீதிமொழிகள் 5:21, தி.மொ.) நாம் பாவம் செய்தோமானால் மனந்திரும்பி, யெகோவாவின் மன்னிப்பைப் பெற தூண்டப்படுகிறோம்; ஏனெனில் நாம் அவரை நேசிக்கிறோம், அவரை வேதனைப்படுத்த விரும்புவதில்லை.—சங்கீதம் 78:41; 130:3.
நம்மை உறுதிப்படுத்துவது எது?
6. உறுதியாய் இருப்பது எதை அர்த்தப்படுத்துகிறது?
6 யெகோவாவை நாம் காண முடியாதபோதிலும், நம்மை அவரால் காண முடியும் என்பதை எப்போதும் நினைவில் வைப்போமாக. அவர் இருக்கிறார் என்ற உணர்வும், தம்மை நோக்கி கூப்பிடுகிற யாவருக்கும் அருகில் இருக்கிறார் என்ற நம்பிக்கையும் நாம் உறுதியாக இருக்க உதவுகின்றன; அதாவது அவரிடம் வைத்திருக்கும் நம் விசுவாசத்தில் திடமானவர்களாகவும் அசைக்க முடியாதவர்களாகவும் இருக்க உதவுகின்றன. (சங்கீதம் 145:18) மோசேயைப் போல் நாமும் இருக்கலாம்; அவரைக் குறித்து பவுல் எழுதியதாவது: “விசுவாசத்தினாலே அவன் அதரிசனமானவரைத் தரிசிக்கிறதுபோல, [காண முடியாதவரைக் காண்பதுபோல்] உறுதியாயிருந்து, ராஜாவின் கோபத்துக்குப் பயப்படாமல் எகிப்தைவிட்டுப் போனான்.”—எபிரெயர் 11:27.
7, 8. பார்வோனுக்கு முன்பாக மோசே தைரியமாக இருந்ததற்கு காரணம் என்ன?
7 இஸ்ரவேலரை எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து அழைத்து வரும் பொறுப்பை மோசேயிடம் கடவுள் ஒப்படைத்தார்; அதனால் மதம், இராணுவம் ஆகியவற்றின் பெரும் தலைவர்கள் நிறைந்திருந்த கொடுங்கோலனாகிய பார்வோனின் அரசவைக்கு அவர் அடிக்கடி செல்ல வேண்டியிருந்தது. அந்த அரண்மனை சுவர்கள் விக்கிரகங்களால் நிறைந்திருந்ததாக தோன்றுகிறது. ஆனால் காண முடியாதவராக யெகோவா இருந்தபோதிலும் மோசேயைப் பொறுத்த வரை அவர் நிஜமானவராக இருந்தார், எகிப்தின் உயிரற்ற தெய்வங்களைப் பிரதிநிதித்துவம் செய்த விக்கிரகங்களைப் போல அவர் இல்லை. எனவே பார்வோனைக் கண்டு மோசே பயப்படாதிருந்ததில் ஆச்சரியம் ஏதும் இல்லை!
8 அடிக்கடி பார்வோனை சென்று சந்திக்க மோசேக்கு எது தைரியத்தைக் கொடுத்தது? “மோசேயானவன் பூமியிலுள்ள சகல மனிதரிலும் மிகுந்த சாந்தகுணமுள்ளவனாயிருந்தான்” என்று வேதவசனங்கள் நமக்குச் சொல்கின்றன. (எண்ணாகமம் 12:3) தெளிவாகவே, ஆவிக்குரிய தன்மையில் அவர் பலமுள்ளவராக இருந்ததும் கடவுள் தன்னுடன் இருந்தார் என்ற திடநம்பிக்கையும் எகிப்தின் கொடிய அரசன் முன் ‘காண முடியாதவரைப்’ பிரதிநிதித்துவம் செய்வதற்குத் தேவைப்பட்ட பலத்தை மோசேக்குத் தந்தன. இன்று, காண முடியாத இந்தக் கடவுளைக் ‘காண்கிறவர்கள்’ தங்கள் விசுவாசத்தை காட்டும் சில வழிகள் யாவை?
9. தொடர்ந்து உறுதியுடன் இருப்பதற்கு ஒரு வழி எது?
9 விசுவாசத்தைக் காட்டுவதற்கும், காண முடியாதவரைக் காண்பதுபோல் உறுதியுடன் தொடர்ந்து பின்பற்றுவதற்கும் ஒரு வழி, துன்புறுத்துதலின் மத்தியிலும் தைரியத்துடன் பிரசங்கிப்பதாகும். “என் நாமத்தினிமித்தம் எல்லாராலும் பகைக்கப்படுவீர்கள்” என இயேசு தம் சீஷர்களை எச்சரித்தார். (லூக்கா 21:17) “ஊழியக்காரன் தன் எஜமானிலும் பெரியவனல்ல . . . அவர்கள் என்னைத் துன்பப்படுத்தினதுண்டானால், உங்களையும் துன்பப்படுத்துவார்கள்” என்றும் அவர் சொன்னார். (யோவான் 15:20) இயேசு சொன்னது போலவே அவருடைய மரணத்திற்குப் பின் வெகு சீக்கிரத்தில் பயமுறுத்துதல், கைதுசெய்யப்படுதல், அடித்தல் போன்ற பல துன்புறுத்துதல்களை அவரைப் பின்பற்றினவர்கள் சகித்தார்கள். (அப்போஸ்தலர் 4:1-3, 18-21; 5:17, 18, 40) ஓயாத துன்புறுத்துதலின் மத்தியிலும் இயேசுவின் அப்போஸ்தலர்களும் சீஷர்களும் தொடர்ந்து நற்செய்தியை தைரியத்துடன் பிரசங்கித்து வந்தார்கள்.—அப்போஸ்தலர் 4:29-31.
10. யெகோவாவின் காக்கும் கரங்களின் மீதுள்ள நம் நம்பிக்கை எப்படி ஊழியத்தில் நமக்கு உதவுகிறது?
10 மோசேயைப் போலவே, இயேசுவின் ஆரம்ப கால சீஷர்கள், காண முடிந்த தங்கள் சத்துருக்கள் பலரைக் கண்டு கதிகலங்கிவிடவில்லை. இயேசுவின் சீஷர்களுக்கு கடவுள்மீது விசுவாசம் இருந்தது; எனவே அவர்கள் அனுபவித்த மோசமான துன்புறுத்துதலைச் சகித்து நிற்க முடிந்தது. ஆம், காண முடியாதவரைக் காண்பதுபோல் தொடர்ந்து உறுதியாய் நிலைத்திருந்தார்கள். இன்று, யெகோவாவின் காக்கும் கரங்களைக் குறித்து எப்போதும் உணர்வுள்ளவர்களாய் இருப்பது நம்மை பலப்படுத்துகிறது; அதனால், நம் பிரசங்க வேலையில் தைரியமாகவும் பயமில்லாமலும் பங்குகொள்ள முடிகிறது. “மனுஷனுக்குப் பயப்படுவது கண்ணியை வருவிக்கும், யெகோவாவை நம்புபவனோ உயர்ந்த அடைக்கலம் பெறுவான்” என்று கடவுளுடைய வார்த்தை சொல்கிறது. (நீதிமொழிகள் 29:25, தி.மொ.) ஆகையால், துன்புறுத்துதலை எண்ணி பயந்து பின்வாங்குவதுமில்லை, நம் ஊழியத்தின் நிமித்தம் வெட்கப்படுவதுமில்லை. அயலாருக்கும், உடன் வேலை செய்பவர்களுக்கும், பள்ளித் தோழர்களுக்கும், மற்றவர்களுக்கும் தைரியமாய் சாட்சி கொடுக்க விசுவாசம் நம்மைத் தூண்டுகிறது.—ரோமர் 1:14-16.
காண முடியாதவர் தம் ஜனங்களை வழிநடத்துகிறார்
11. பேதுருவும் யூதாவும் குறிப்பிட்டபடி, கிறிஸ்தவ சபையிலிருந்த சிலர் எப்படி ஆவிக்குரிய தன்மையில் குறைவுபட்டிருப்பதைக் காட்டினார்கள்?
11 தம்முடைய பூமிக்குரிய அமைப்பை யெகோவா வழிநடத்துகிறார் என்பதைக் காண விசுவாசம் நமக்கு உதவுகிறது. இதனால், சபையில் பொறுப்புகளை கையாளுகிறவர்களிடம் குற்றங்குறை காணும் மனப்பான்மையை நாம் தவிர்க்கிறோம். ஆவிக்குரிய தன்மையில் அந்தளவுக்கு குறைவுபட்டதால் கிறிஸ்தவர்களுக்குள் முன்நின்று வழிநடத்துவோரைக் குறித்து தவறாக பேசும் அளவுக்கு சென்றுவிட்ட சிலரைப் பற்றி அப்போஸ்தலன் பேதுருவும், இயேசுவின் ஒன்றுவிட்ட சகோதரன் யூதாவும் எச்சரித்தார்கள். (2 பேதுரு 2:9-12; யூதா 8) யெகோவாவை நேரடியாக காண முடிந்திருந்தால் குறை கண்டுபிடித்து வந்த அப்படிப்பட்டவர்கள் அவருக்கு முன்பாக இந்தளவுக்கு பேசியிருப்பார்களா? நிச்சயமாகவே பேசியிருக்க மாட்டார்கள்! கடவுளை காண முடியாமல் இருப்பதனால், அந்த மாம்சப்பிரகாரமானவர்கள் அவருக்குக் கணக்குக் கொடுக்க கடன்பட்டிருப்பதை சிந்திக்க தவறினார்கள்.
12. சபையில் முன்நின்று வழிநடத்துவோரிடம் என்ன மனப்பான்மையை வெளிக்காட்ட வேண்டும்?
12 கிறிஸ்தவ சபையில் உள்ளவர்கள் அபூரணர்கள் என்பது உண்மைதான். மூப்பர்களாக சேவிக்கிறவர்கள் தவறுகள் செய்கையில் அவை சில சமயங்களில் நம்மை தனிப்பட்ட விதமாக பாதிக்கலாம். இருப்பினும், யெகோவா அப்படிப்பட்டவர்களை தம்முடைய மந்தையின் மேய்ப்பர்களாக பயன்படுத்துகிறார். (1 பேதுரு 5:1, 2) இப்படி அவர்களை யெகோவா பயன்படுத்துவது தம்முடைய ஜனங்களை வழிநடத்துவதற்கான அவருடைய ஒரு வழி என ஆவிக்குரிய மனம் படைத்த ஆண்களும் பெண்களும் புரிந்துகொள்கிறார்கள். ஆகையால், கிறிஸ்தவர்களாக நாம் குற்றம் கண்டுபிடிக்கும், குறைகூறும் மனப்பான்மையை தவிர்த்து, தம்முடைய ஜனங்களை வழிநடத்த கடவுள் செய்திருக்கும் ஏற்பாடுகளுக்கு மதிப்பு காட்டுகிறோம். நம் மத்தியில் முன்நின்று வழிநடத்துவோருக்குக் கீழ்ப்படிவதன் மூலம், காண முடியாதவரைக் காண்பதைக் காட்டுகிறோம்.—எபிரெயர் 13:17.
நம்முடைய மகத்தான போதகராக கடவுளைக் காணுதல்
13, 14. யெகோவாவை மகத்தான போதகராக காண்பது உங்களுக்கு எதை அர்த்தப்படுத்துகிறது?
13 ஆவிக்குரிய உணர்வை வெளிக்காட்ட வேண்டிய மற்றொரு அம்சமும் உள்ளது. “உன் கண்கள் உன் மகத்தான போதகரைக் காணும் கண்களாகும்” என ஏசாயா தீர்க்கதரிசனம் உரைத்தார். (ஏசாயா 30:20, NW) யெகோவாவே தம்முடைய பூமிக்குரிய அமைப்பின் மூலம் நமக்குப் போதிக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள விசுவாசம் வேண்டும். (மத்தேயு 24:45-47) நல்ல பைபிள் படிப்பு பழக்கம் இருந்து, கிறிஸ்தவக் கூட்டங்களுக்குத் தவறாமல் போய் வருவது மட்டுமே கடவுளை நம் மகத்தான போதகராக காண்பதைக் குறிக்காது. நம்முடைய ஆவிக்குரிய நலனுக்காக கடவுள் செய்திருக்கும் ஏற்பாடுகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்வதை அது குறிக்கிறது. உதாரணமாக, ஆவிக்குரிய தன்மையிலிருந்து நாம் மெல்ல மெல்ல வழிவிலகிப் போய்விடாதிருக்க இயேசுவின் மூலம் யெகோவா அருளும் வழிநடத்துதலுக்கு எப்போதையும்விட அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.—எபிரெயர் 2:1.
14 ஆவிக்குரிய உணவிலிருந்து முழுமையாய் நன்மையடைய சில சமயங்களில் விசேஷ முயற்சி தேவை. உதாரணமாக, புரிந்துகொள்ள நமக்கு கடினமாக இருக்கும் பைபிள் விவரப்பதிவுகள் சிலவற்றை மேலோட்டமாக வாசிக்க முற்படலாம். காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகளை வாசிக்கையில் நமக்கு அந்தளவுக்கு ஆர்வமூட்டாத விஷயங்கள் அடங்கிய சில கட்டுரைகளை ஒருவேளை வாசிக்காமலே விட்டுவிடலாம். அல்லது கிறிஸ்தவக் கூட்டங்கள் நடக்கையில் நாம் அங்கிருந்தாலும் மனம் எங்கோ அலை பாய்ந்துகொண்டிருக்கலாம். எனினும், கலந்தாலோசிக்கப்படும் குறிப்புகளைக் கவனமாய் சீர்தூக்கிப் பார்த்தால் நாம் விழிப்புடன் இருக்க முடியும். நாம் பெறும் ஆவிக்குரிய போதனைக்கான ஆழ்ந்த போற்றுதல், யெகோவாவை நம்முடைய மகத்தான போதகராக ஏற்றிருப்பதைக் காட்டும்.
நாம் கணக்கு ஒப்புவிக்க வேண்டும்
15. யெகோவா தங்களைக் காணாததைப்போல் சிலர் எவ்வாறு நடந்துகொள்கிறார்கள்?
15 இந்த ‘முடிவு காலத்தில்’ அக்கிரமம் வெகுவாய் பெருகியிருப்பதால், காண முடியாத கடவுளிடம் விசுவாசம் வைப்பது மிக முக்கியம். (தானியேல் 12:4) நேர்மையின்மையும் பாலுறவு ஒழுக்கக்கேடும் இன்று எங்கும் நிறைந்திருக்கின்றன. நம் செயல்களை மனிதர்கள் காண முடியாவிட்டாலும் யெகோவா கவனிக்கிறார் என்பதை நினைவில் வைப்பது ஞானமானது. சிலர் இந்த உண்மையை உணரத் தவறியிருக்கின்றனர். அதனால் மற்றவர்கள் காணாதிருக்கையில் பைபிளுக்கு விரோதமான நடத்தையில் அவர்கள் ஈடுபடலாம். உதாரணமாக, இன்டர்நெட், டெலிவிஷன், மற்ற நவீன சாதனங்கள் ஆகியவற்றின் மூலம் மோசமான பொழுதுபோக்கு காட்சிகளையும் ஆபாச படங்களையும் காணும் ஆவலை எதிர்த்து போராட சிலர் தவறியிருக்கிறார்கள். தனிமையில் அத்தகைய காரியங்களில் இரகசியமாக ஈடுபடும் சிலர், தாங்கள் செய்வதை யெகோவா காணாததைப் போல் நடந்துகொள்கிறார்கள்.
16. யெகோவாவின் உயர் தராதரங்களுக்கு ஏற்ப நடப்பதற்கு எது நமக்கு உதவ வேண்டும்?
16 “நம்மில் ஒவ்வொருவனும் தன்னைக்குறித்து தேவனுக்குக் கணக்கொப்புவிப்பான்” என்ற அப்போஸ்தலன் பவுலின் வார்த்தைகளை மனதில் வைப்பது நல்லது. (ரோமர் 14:12) நாம் பாவம் செய்கிற போதெல்லாம் யெகோவாவுக்கு விரோதமாக பாவம் செய்கிறோம் என்பதை நினைவில் வைப்பது அவசியம். இதை அறிந்திருப்பது, யெகோவாவின் உயர் தராதரங்களுக்கு இசைவாய் நடக்கவும், அசுத்தமான நடத்தையைத் தவிர்க்கவும் நமக்கு உதவும். “அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை; சகலமும் அவருடைய கண்களுக்கு முன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயுமிருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்க வேண்டும்” என பைபிள் நமக்கு நினைப்பூட்டுகிறது. (எபிரெயர் 4:13) கடவுளுக்கு நாம் கணக்கு ஒப்புவிக்க வேண்டும் என்பது உண்மைதான்; ஆனாலும் யெகோவாவிடமுள்ள ஆழமான அன்பே அவருடைய சித்தத்தைச் செய்யவும் அவருடைய நீதியுள்ள தராதரங்களுக்கு இசைய நடக்கவும் நம்மைத் தூண்டுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஆகையால், பொழுதுபோக்கை தேர்ந்தெடுப்பது, எதிர்பாலாரோடு நடந்துகொள்ளும் விதம் போன்றவற்றில் விவேகத்தை பயன்படுத்துவோமாக.
17. என்ன விதமான அக்கறையோடு யெகோவா நம்மை கவனிக்கிறார்?
17 யெகோவா நம்மீது அதிக அக்கறை காட்டுகிறார். ஆனால் அது, நாம் எப்போது தவறு செய்வோம் தண்டிக்கலாம் என அவர் காத்திருப்பதை அர்த்தப்படுத்தாது. மாறாக, கீழ்ப்படிதலுள்ள தன் பிள்ளைகளுக்கு பரிசளிக்க விரும்பும் தகப்பனைப் போல அன்போடும் கரிசனையோடும் அவர் நம்மை கவனிக்கிறார். நம்முடைய பரலோகத் தகப்பன் நம் விசுவாசத்தைக் கண்டு மனமகிழ்கிறவர், ‘தம்மைத் தேடுகிறவர்களுக்குப் பலன் அளிக்கிறவர்’ என்பதை அறிவது எவ்வளவு ஆறுதலாயிருக்கிறது! (எபிரெயர் 11:6) யெகோவாமீது முழுமையான விசுவாசம் வைத்து, ‘முழு மனத்தோடு . . . அவருக்கு ஊழியம் செய்வோமாக.’—1 குறிப்பேடு [நாளாகமம்] 28:9, பொ.மொ.
18. யெகோவா நம்மை கவனிப்பதாலும் நம் விசுவாசத்தை நினைவில் வைப்பதாலும், வேதவசனங்களிலிருந்து என்ன உறுதியை நாம் பெறுகிறோம்?
18 நீதிமொழிகள் 15:3 (தி.மொ.) இவ்வாறு சொல்லுகிறது: “யெகோவாவின் கண்கள் எல்லாவிடங்களிலும் நல்லோர் தீயோரையும் பார்த்திருக்கும்.” ஆம், கடவுள் பொல்லாதவர்களைக் கவனிக்கிறார், அவர்களுடைய நடத்தைக்கு ஏற்ப அவர்களை தண்டிக்கிறார். எனினும், ‘நல்லோரில்’ ஒருவராக நாம் இருந்தால், விசுவாசத்துடன் நாம் நடப்பிக்கும் செயல்களை யெகோவா கவனிக்கிறார் என்பதில் நிச்சயமாயிருக்கலாம். ‘கர்த்தருக்குள் நாம் படுகிற பிரயாசம் விருதாவாயிராதென்றும்,’ நம்மால் காண முடியாத கடவுள் ‘நம் கிரியையையும், தமது நாமத்திற்காக நாம் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடார்’ என்றும் அறிவது எந்தளவுக்கு நம் விசுவாசத்தைப் பலப்படுத்துகிறது!—1 கொரிந்தியர் 15:58; எபிரெயர் 6:10.
நம்மை சோதிக்க யெகோவாவை அழைத்தல்
19. யெகோவாவின்மீது உறுதியான விசுவாசத்துடன் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள் சில யாவை?
19 யெகோவாவின் உண்மை ஊழியர்களாக இருப்பதால், நாம் அவருக்கு அருமையானவர்கள். (மத்தேயு 10:29-31) அவரை காண முடியாதபோதிலும், அவர் நமக்கு நிஜமானவராக இருக்க முடியும்; அவருடன் அருமையான உறவை அனுபவித்து மகிழ முடியும். நம்முடைய பரலோக தகப்பனிடம் இத்தகைய மனப்பான்மையுடன் இருப்பது நமக்கு பல நன்மைகளைத் தருகிறது. நம்முடைய உறுதியான விசுவாசம், யெகோவாவுக்கு முன்பாக சுத்தமான இருதயத்துடனும் நல்மனச்சாட்சியுடனும் இருக்க நமக்கு உதவுகிறது. போலியற்ற விசுவாசம் இரட்டை வாழ்க்கை வாழ்வதிலிருந்தும் நம்மைக் காக்கிறது. (1 தீமோத்தேயு 1:5, 18, 19) கடவுள்மீது அசைக்க முடியாத நம் விசுவாசம் நல்ல முன்மாதிரியாக இருந்து, மற்றவர்களுக்கு நம்பிக்கை ஊட்டலாம். (1 தீமோத்தேயு 4:12) மேலும், அத்தகைய விசுவாசம், கடவுள் அங்கீகரிக்கும் நடத்தைக்கு வழி செய்து, யெகோவாவின் இருதயத்தைச் சந்தோஷப்படுத்துகிறது.—நீதிமொழிகள் 27:11.
20, 21. (அ) யெகோவாவின் கண்கள் நம்மீது இருப்பது ஏன் விரும்பத்தக்கது? (ஆ) சங்கீதம் 139:23, 24-ஐ நமக்கு எவ்வாறு பொருத்தலாம்?
20 நாம் உண்மையில் ஞானமுள்ளோராக இருந்தால், யெகோவா எப்போதும் நம்மை கவனிப்பதைக் குறித்து மகிழ்ச்சி அடைவோம். அவர் நம்மை கவனிப்பதோடுகூட நம் எண்ணங்களையும் செயல்களையும் முழுமையாக சோதித்துப் பார்க்க வேண்டும் என்றும் விரும்புவோம். நம்மிடம் தவறான மனப்பான்மைகள் ஏதாவது இருக்கிறதாவென சோதித்தறியும்படி ஜெபத்தில் யெகோவாவிடம் வேண்டிக்கொள்வது நல்லது. நம்முடைய பிரச்சினைகளை சமாளிக்கவும், தேவைப்படும் சரிப்படுத்துதல்களைச் செய்யவும் அவர் நமக்கு நிச்சயம் உதவலாம். “தேவனே, என்னை ஆராய்ந்து, என் இருதயத்தை அறிந்துகொள்ளும்; என்னைச் சோதித்து, என் சிந்தனைகளை அறிந்துகொள்ளும். வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து, நித்திய வழியிலே என்னை நடத்தும்” என சங்கீதக்காரனாகிய தாவீது பாடினது பொருத்தமானதே.—சங்கீதம் 139:23, 24.
21 “வேதனை உண்டாக்கும் வழி” ஏதாவது தன்னிடம் உள்ளதா என்பதைக் கண்டறிய தன்னை ஆராய்ந்து பார்க்கும்படி தாவீது யெகோவாவிடம் கெஞ்சி மன்றாடினார். இந்தச் சங்கீதக்காரனைப் போல், கடவுள் நம் இருதயத்தை ஆராய்ந்து, தவறான உள்நோக்கங்கள் நம்மிடம் உண்டோவென காண ஆவலாய் இருக்கிறோமல்லவா? அப்படியானால், நம்மை ஆராயும்படி விசுவாசத்துடன் யெகோவாவைக் கேட்போமாக. ஆனால், ஏதோ தவறின் காரணமாக கவலைப்பட்டால் அல்லது ஏதோவொன்று நம்மைத் தொல்லைப்படுத்தினால் என்ன செய்வது? அப்போது, நம்முடைய அன்புள்ள கடவுளாகிய யெகோவாவிடம் ஊக்கமாய் தொடர்ந்து ஜெபிப்போமாக; அவருடைய பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலுக்கும், அவருடைய வார்த்தையின் புத்திமதிக்கும் தாழ்மையுடன் கீழ்ப்படிவோமாக. அவர் நம்மை ஆதரிப்பார், நித்திய ஜீவ வழியில் தொடர்ந்து நடக்க நமக்கு உதவுவார் என நாம் நம்பிக்கையுடன் இருக்கலாம்.—சங்கீதம் 40:11-13.
22. நம்மால் காண முடியாதவரைக் குறித்ததில் என்ன தீர்மானத்துடன் நாம் இருக்க வேண்டும்?
22 யெகோவா எதிர்பார்க்கும் தராதரங்களை அடைந்தால் அவர் நித்திய ஜீவனை அளித்து நம்மை ஆசீர்வதிப்பார். அப்போஸ்தலன் பவுல் பின்வருமாறு எழுதினபோது செய்ததுபோல், நாம் அவருடைய வல்லமையையும் அதிகாரத்தையும் உண்மையிலேயே ஒப்புக்கொள்ள வேண்டும்: “நித்தியமும் அழிவில்லாமையும் அதரிசனமுமுள்ள ராஜனுமாய், தாம் ஒருவரே ஞானமுள்ள தேவனுமாயிருக்கிறவருக்கு, கனமும் மகிமையும் சதாகாலங்களிலும் உண்டாயிருப்பதாக. ஆமென்.” (1 தீமோத்தேயு 1:17) இருதயப்பூர்வமான பயபக்தியை நாம் எப்போதும் யெகோவாவுக்குக் காட்டுவோமாக. என்ன நடந்தாலும் சரி, நாம் காண முடியாதவரைக் காண்பதுபோல் உறுதியுடன் தொடரும்படியான தீர்மானத்தில் ஒருபோதும் தளராதிருப்போமாக.
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
• மனிதர்களால் கடவுளை எப்படி காண முடியும்?
• யெகோவா நமக்கு நிஜமானவராக இருந்தால், துன்புறுத்தப்படுகையில் நாம் எவ்வாறு நடந்துகொள்வோம்?
• யெகோவாவை நம்முடைய மகத்தான போதகராக காண்பது எதை அர்த்தப்படுத்துகிறது?
• யெகோவா நம்மை ஆராய்ந்து பார்க்க நாம் ஏன் விரும்ப வேண்டும்?
[பக்கம் 18-ன் படம்]
பார்வோனுக்கு அஞ்சாமல் தன்னால் காண முடியாத கடவுளாகிய யெகோவாவைக் காண்பதுபோல் மோசே நடந்துகொண்டார்
[பக்கம் 21-ன் படம்]
நம் செயல்களை யெகோவா காணாதது போல் ஒருபோதும் நாம் நடக்காமலிருப்போமாக
[பக்கம் 23-ன் படம்]
கடவுளை நம்முடைய மகத்தான போதகராக காண்பதால், அவரைப் பற்றிய அறிவை ஊக்கமாய்த் தேடுகிறோம்