உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w11 7/15 பக். 24-28
  • கடவுளுடைய ஓய்வு என்றால் என்ன?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கடவுளுடைய ஓய்வு என்றால் என்ன?
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2011
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • யெகோவா இன்னமும் ஓய்ந்திருக்கிறாரா?
  • “கீழ்ப்படியாதவர்களுடைய மாதிரியை” பின்பற்றாதீர்கள்
  • “என்னோடு சேர்ந்து ஓய்வை அனுபவிக்க மாட்டார்கள்”
  • கடவுளோடு சேர்ந்து ஓய்வை அனுபவிக்கத் தவறிய கிறிஸ்தவர்கள்
  • இன்று கடவுளோடு சேர்ந்து ஓய்வை அனுபவித்தல்
  • தேவனுடைய இளைப்பாறுதலில் நீங்கள் பிரவேசித்திருக்கிறீர்களா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1998
  • வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2001
  • வேலை செய்வதற்கும் ஓய்வு எடுப்பதற்கும் “ஒரு நேரம் இருக்கிறது”
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2019
  • ஓய்வுநாள்
    வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுதல்
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2011
w11 7/15 பக். 24-28

கடவுளுடைய ஓய்வு என்றால் என்ன?

“கடவுளுடைய மக்களுக்கு இனிமேல்தான் ஓய்வுகாலம் வரப்போகிறது.”—எபி. 4:9.

1, 2. கடவுள் “ஓய்ந்திருக்கிறார்” என்று ஆதியாகமம் 2:3-ல் சொல்லப்பட்டிருப்பதன் அர்த்தம் என்ன, எந்தக் கேள்விகளுக்குப் பதிலைத் தெரிந்துகொள்ளப் போகிறோம்?

கடவுள் இந்தப் பூமியை ஆறு நாட்களில் மனிதர்களுக்காக உண்டாக்கினார் என்பதை ஆதியாகமப் புத்தகத்தின் முதலாம் அதிகாரத்திலிருந்து தெரிந்துகொள்கிறோம். அந்த ஒவ்வொரு நாளும் 24 மணிநேர நாளைக் குறிப்பதில்லை, அதைவிட நீண்ட காலப்பகுதியைக் குறிக்கிறது. அந்த ஒவ்வொரு காலப்பகுதியின் முடிவையும் பற்றிச் சொல்கையில், ‘சாயங்காலமும் விடியற்காலமும் ஆயிற்று’ என பைபிள் குறிப்பிடுகிறது. (ஆதி. 1:5, 8, 13, 19, 23, 31) ஆனால், ஏழாம் நாள் வித்தியாசமானது. அந்நாளைப் பற்றி பைபிள் இவ்வாறு சொல்கிறது: “கடவுள் ஏழாம் நாளை ஆசீர்வதிக்கத் தொடங்கி அதைப் புனிதமாக்கினார்; ஏனென்றால், அந்நாளில் கடவுள் தம் படைப்பு வேலைகள் எல்லாவற்றிலிருந்தும் ஓய்ந்திருக்கிறார்.”—ஆதி. 2:3, NW.

2 கடவுள் “ஓய்ந்திருக்கிறார்” என்று ஆதியாகமத்தில் சொல்லப்பட்டிருப்பதன் அர்த்தம் என்ன? ஆதியாகமப் புத்தகம் எழுதப்பட்ட சமயத்தில் அவர் இன்னமும் ஓய்ந்திருந்தார் என்று அர்த்தம். அதாவது, கி.மு. 1513-ம் ஆண்டில் மோசே அப்புத்தகத்தை எழுதிய சமயத்திலும் கடவுள் ஓய்ந்துதான் இருந்தார். மேலும், மனிதர்கள் அவரோடு சேர்ந்து ஓய்வை அனுபவிக்க முடியும் என்று அவர் பைபிளில் பிற்பாடு குறிப்பிட்டார். அப்படியென்றால், கடவுள் இன்றும் ஓய்ந்திருக்கிறாரா? ஆம் என்றால், நாம் எப்படி அவரோடு சேர்ந்து ஓய்வை அனுபவிக்க முடியும்? இந்தக் கேள்விகளுக்கு நாம் பதிலைத் தெரிந்துகொள்வது மிக முக்கியம்.

யெகோவா இன்னமும் ஓய்ந்திருக்கிறாரா?

3. இயேசு பூமியில் வாழ்ந்த காலம் ஏழாம் நாளாக இருந்ததை யோவான் 5:16, 17-ல் அவர் சொன்ன வார்த்தைகள் எப்படிக் காட்டுகின்றன?

3 இயேசுவும் ஆரம்பகால கிறிஸ்தவர்களும் வாழ்ந்த காலப்பகுதி ஏழாம் நாளின் காலப்பகுதியாகவே இருந்தது; அதற்கு இரண்டு காரணங்களை நாம் சொல்லலாம். இயேசு தம் எதிரிகள் சிலரிடம் சொன்ன விஷயத்திலிருந்து அதற்கான முதல் காரணத்தைத் தெரிந்துகொள்கிறோம். இயேசு ஓய்வுநாளில் மக்களைக் குணப்படுத்தியதால் அந்த எதிரிகள் கோபத்தில் கொதித்தார்கள். ஓய்வுநாளில் எந்த வேலையையும் செய்யக் கூடாதெனத் திருச்சட்டம் சொன்னதால் இயேசு அந்நாளில் மக்களைக் குணப்படுத்தியது தவறென அவர்கள் நினைத்தார்கள். ஆகவே இயேசு அவர்களிடம், “என் தகப்பன் இதுவரை வேலை செய்து வந்திருக்கிறார், நானும் வேலை செய்து வருகிறேன்” என்று சொன்னார். (யோவா. 5:16, 17) அவர் உண்மையில் என்ன சொல்ல வந்தார்? இதைத்தான் சொல்ல வந்தார்: “என் தகப்பனும் நானும் ஒரேவித வேலையைச் செய்துவருகிறோம். என் தகப்பன், ஆயிரக்கணக்கான ஆண்டுகள் நீடிக்கிற தம்முடைய ஓய்வுநாளில் வேலை செய்து வந்திருக்கிறார், இன்னமும் வேலை செய்து வருகிறார். ஆகவே, நானும் ஓய்வுநாளில் வேலை செய்வது தவறல்ல.” இயேசுவின் வார்த்தைகள் என்ன காட்டுகின்றன? அவர் வாழ்ந்த காலம் ஏழாம் நாளாகவே, அதாவது பூமியில் தம் கைவண்ணங்களைப் படைப்பதிலிருந்து கடவுள் ஓய்ந்திருக்கும் நாளாகவே, இருந்தது என்பதைக் காட்டுகின்றன.a ஆனால், பூமிக்கும் மனிதருக்குமான தம்முடைய நோக்கத்தை நிறைவேற்ற கடவுள் அப்போதும் வேலை செய்துகொண்டுதான் இருந்தார்.

4. ஆரம்பகால கிறிஸ்தவர்கள் வாழ்ந்த காலப்பகுதி ஏழாம் நாளின் காலப்பகுதியாகவே இருந்தது என்பதை பவுலின் வார்த்தைகள் எப்படிக் காட்டுகின்றன?

4 இயேசுவும் ஆரம்பகால கிறிஸ்தவர்களும் வாழ்ந்த காலப்பகுதி ஏழாம் நாளின் காலப்பகுதியாகவே இருந்தது என்பதை இன்னொரு காரணத்தை வைத்தும் நாம் சொல்லலாம். எபிரெயர்களுக்கு எழுதிய கடிதத்தில் கடவுளுடைய ஓய்வைப் பற்றி அப்போஸ்தலன் பவுல் குறிப்பிட்டார். அதன் 4-ஆம் அதிகாரத்தில் ஆதியாகமம் 2:2-ஐ மேற்கோள் காட்டுவதற்குமுன், ‘விசுவாசம் வைத்திருக்கிற நாமே அந்த ஓய்வை அனுபவிக்கிறோம்’ என்று எழுதினார். (எபி. 4:3, 4, 6, 9) ஆகவே, பவுல் வாழ்ந்த காலப்பகுதி ஏழாம் நாளின் காலப்பகுதியாகவே இருந்தது. அப்படியென்றால், ஏழாம் நாள் எப்போது முடிவடையும்?

5. எந்த நோக்கத்தை நிறைவேற்றி முடிக்க ஏழாம் நாளை யெகோவா தேர்ந்தெடுத்தார், அவர் எப்போது தமது நோக்கத்தை நிறைவேற்றி முடிப்பார்?

5 இந்தக் கேள்விக்குப் பதிலளிக்க, ஏழாம் நாளை ஒரு விசேஷ நோக்கத்திற்காக யெகோவா தேர்ந்தெடுத்தார் என்பதை நாம் நினைவில் வைக்க வேண்டும். “கடவுள் ஏழாம் நாளை ஆசீர்வதிக்கத் தொடங்கி அதைப் புனிதமாக்கினார்” என்று ஆதியாகமம் 2:3 சொல்கிறது. யெகோவா ஏன் அந்நாளைப் புனிதமாக்கினார்? ஏனென்றால், பூமிக்குரிய தம்முடைய நோக்கத்தை நிறைவேற்றி முடிக்க அந்நாளை அவர் தேர்ந்தெடுத்தார். கீழ்ப்படிதலுள்ள ஆண்களும் பெண்களும் இந்தப் பூமியில் வாழ்ந்து அதிலுள்ள எல்லாவற்றையும் பராமரிக்க வேண்டும் என்பது அவருடைய நோக்கமாக இருந்தது. (ஆதி. 1:28) அந்த நோக்கத்தை நிறைவேற்றத்தான் யெகோவா தேவனும் ‘ஓய்வுநாளுக்கு எஜமானரான’ இயேசு கிறிஸ்துவும் ‘இதுவரை வேலை செய்து வந்திருக்கிறார்கள்.’ (மத். 12:8) ஆகவே, யெகோவா தமது நோக்கத்தை நிறைவேற்றி முடிக்கும்வரை அவரது ஓய்வுநாள் நீடிக்கும்; ஆம், கிறிஸ்துவின் ஆயிரமாண்டு ஆட்சியின் முடிவுவரை அது நீடிக்கும்.

“கீழ்ப்படியாதவர்களுடைய மாதிரியை” பின்பற்றாதீர்கள்

6. யாருடைய உதாரணங்கள் நமக்கு எச்சரிக்கையாக இருக்கின்றன, அந்த உதாரணங்களிலிருந்து நாம் என்ன பாடம் கற்றுக்கொள்ளலாம்?

6 கடவுள் பூமிக்கான தமது நோக்கத்தை ஆதாமிடமும் ஏவாளிடமும் தெளிவாகச் சொன்னார்; ஆனால், அவர்கள் அந்த நோக்கத்திற்கு இசைவாக நடக்கவில்லை. அவர்களுக்குப்பின் லட்சக்கணக்கான மற்றவர்களும் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் போயிருக்கிறார்கள். கடவுளுடைய மக்களான இஸ்ரவேலர்கூட மீண்டும் மீண்டும் அவர் பேச்சை மீறினார்கள். பவுல், தன்னுடைய காலத்தில் வாழ்ந்த கிறிஸ்தவர்களில் சிலர் அந்த இஸ்ரவேலரைப் போலவே கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் போக வாய்ப்பிருந்ததாக எச்சரித்தார். “அந்த ஓய்வை அனுபவிக்க நம்மால் முடிந்த அனைத்தையும் செய்வோமாக; நம்மில் எவரும் கீழ்ப்படியாதவர்களுடைய மாதிரியைப் பின்பற்றிப் பாவத்தில் விழுந்துவிடக் கூடாதே” என்று அவர் எழுதினார். (எபி. 4:11) ஆக, கீழ்ப்படியாதவர்கள் கடவுளுடைய ஓய்வை அனுபவிக்க முடியாது. இது நமக்கு எதை அர்த்தப்படுத்துகிறது? நாம் ஏதோவொரு விதத்தில் கடவுளுடைய நோக்கத்திற்கு எதிராகச் செயல்பட்டால் அவரோடு சேர்ந்து ஓய்வை அனுபவிக்க மாட்டோம் என்று அர்த்தப்படுத்துகிறதா? இதற்கான பதிலைத் தெரிந்துகொள்வது மிக முக்கியம்; ஆகவே, இந்தக் கட்டுரையில் அதை விவரமாகப் பார்ப்போம். ஆனால் அதற்குமுன், இஸ்ரவேலருடைய கெட்ட உதாரணத்தையும், அவர்கள் ஏன் கடவுளுடன் சேர்ந்து ஓய்வை அனுபவிக்கவில்லை என்பதையும் பற்றிச் சிந்திப்போம்.

“என்னோடு சேர்ந்து ஓய்வை அனுபவிக்க மாட்டார்கள்”

7. யெகோவா எதற்காக இஸ்ரவேலரை எகிப்திலிருந்து விடுதலையாக்கினார், அவர்கள் என்ன செய்ய வேண்டியிருந்தது?

7 யெகோவா கி.மு. 1513-ம் ஆண்டில், இஸ்ரவேலர் சம்பந்தமான தமது நோக்கத்தை மோசேயிடம் இவ்வாறு தெரிவித்தார்: “அவர்களை எகிப்தியரின் கைக்கு விடுதலையாக்கவும், அவர்களை அந்தத் தேசத்திலிருந்து நீக்கி, . . . பாலும் தேனும் ஓடுகிற நலமும் விசாலமுமான தேசத்தில் கொண்டுபோய்ச் சேர்க்கவும் இறங்கினேன்.” (யாத். 3:8) யெகோவா ஆபிரகாமுக்கு வாக்குறுதி அளித்தபடியே இஸ்ரவேலரைத் தமது மக்களாக ஆக்குவதற்கு ‘எகிப்தியரின் கைக்கு’ விடுதலையாக்கினார். (ஆதி. 22:17) இஸ்ரவேலர் தம்மோடு சமாதானமாவதற்கும் தம்முடைய நண்பர்களாவதற்கும் உதவக்கூடிய சட்டதிட்டங்களை அவர்களுக்குக் கொடுத்தார். (ஏசா. 48:17, 18) அவர்களிடம், ‘நீங்கள் என் வாக்கை உள்ளபடி கேட்டு, என் உடன்படிக்கையைக் கைக்கொள்வீர்களானால், சகல ஜனங்களிலும் நீங்களே எனக்குச் சொந்த சம்பத்தாயிருப்பீர்கள்; பூமியெல்லாம் என்னுடையது’ என்று சொன்னார். (யாத். 19:5, 6) ஆகவே, இஸ்ரவேலர் கடவுளுடைய சட்டதிட்டங்களுக்குக் கீழ்ப்படிந்தபோது மட்டுமே அவருடைய மக்களாக இருக்க முடிந்தது.

8. இஸ்ரவேலர் கடவுளுக்குக் கீழ்ப்படிந்திருந்தால் என்னென்ன ஆசீர்வாதங்களைப் பெற்றிருப்பார்கள்?

8 இஸ்ரவேலர் யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்திருந்தால் என்னென்ன ஆசீர்வாதங்களை எல்லாம் பெற்றிருப்பார்கள் என்று யோசித்துப் பாருங்கள்! யெகோவா அவர்களுடைய வயல்களையும், திராட்சத்தோட்டங்களையும், மந்தைகளையும் ஆசீர்வதித்திருப்பார். அவர்களுடைய எதிரிகளால் அவர்களை ஒன்றும் செய்ய முடிந்திருக்காது. (1 இராஜாக்கள் 10:23-27-ஐ வாசியுங்கள்.) இயேசுவின் காலப்பகுதியில்கூட அவர்கள் ரோமர்களுடைய கொடுங்கோலாட்சியில் சிக்காமல் சுதந்திரமாக இருந்திருப்பார்கள். அவர்கள் மற்ற தேசத்தாருக்குச் சிறந்த முன்மாதிரியாக விளங்கியிருப்பார்கள். அதோடு, உண்மைக் கடவுளுக்குக் கீழ்ப்படிந்தால் ஆன்மீக ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் ஆசீர்வாதங்கள் வந்து குவியும் என்பதற்குச் சிறந்த அத்தாட்சியாகத் திகழ்ந்திருப்பார்கள்.

9, 10. (அ) இஸ்ரவேலர் எகிப்துக்குத் திரும்பிப் போக விரும்பியது ஏன் தவறு? (ஆ) இஸ்ரவேலர் எகிப்துக்குத் திரும்பிப் போயிருந்தால், யெகோவா விரும்பிய விதத்தில் அவரை வழிபட்டிருக்க முடிந்திருக்குமா?

9 இஸ்ரவேலர் எப்பேர்ப்பட்ட பாக்கியத்தைப் பெற்றிருந்தார்கள்! யெகோவாவின் நோக்கத்திற்கு இசைவாகச் செயல்பட்டு, தாங்கள் ஆசீர்வாதங்களைப் பெறுவது மட்டுமல்லாமல் பூமியிலுள்ள அனைவருக்கும் ஆசீர்வாதங்களைத் தேடித்தரும் பாக்கியத்தைப் பெற்றிருந்தார்கள்! (ஆதி. 22:18) ஆனால், அவர்களில் பெரும்பாலோர் கடவுளுடைய தேசத்தாராக இருக்கும் வாய்ப்பையும், மற்ற தேசத்தாருக்கு முன்மாதிரியாகத் திகழும் வாய்ப்பையும் முக்கியமாகக் கருதவில்லை. எகிப்துக்குத் திரும்பிப் போக வேண்டுமென்றுகூட அவர்கள் சொன்னார்கள்! (எண்ணாகமம் 14:2-4-ஐ வாசியுங்கள்.) அப்படி அவர்கள் திரும்பிப் போயிருந்தால், யெகோவா விரும்பிய விதத்தில் அவரை வழிபட முடிந்திருக்காது; அதோடு, மற்ற தேசத்தாருக்கு முன்மாதிரியாகத் திகழ முடிந்திருக்காது. அவர்கள் மீண்டும் எகிப்தில் அடிமைகளாக ஆகியிருந்தால், கடவுளுடைய சட்டதிட்டங்களைச் சுதந்திரமாகக் கடைப்பிடிக்க முடிந்திருக்காது, பாவங்களுக்கு மன்னிப்பைப் பெறவும் முடிந்திருக்காது. ஆகவே, எகிப்துக்குத் திரும்பிப் போக வேண்டுமென அவர்கள் சொன்னபோது தங்களைப் பற்றி மட்டுமே யோசித்துக் கொண்டிருந்தார்கள்; கடவுளையும் அவருடைய நோக்கங்களையும் பற்றி யோசிக்கவில்லை. அதனால்தான் யெகோவா இவ்வாறு சொன்னார்: “நான் அந்தத் தலைமுறையினரைக் கண்டு வெறுப்படைந்து, ‘அவர்களுடைய இருதயம் எப்போதும் வழிவிலகிப் போகிறது, அவர்கள் என்னுடைய வழிகளை அறிந்துகொள்ளவில்லை,’ அதனால் ‘அவர்கள் என்னோடு சேர்ந்து ஓய்வை அனுபவிக்க மாட்டார்கள்’ என்று கோபத்துடன் ஆணையிட்டுச் சொன்னேன்.”—எபி. 3:10, 11; சங். 95:10, 11.

10 அவர்கள் எகிப்துக்குத் திரும்பிப் போக ஆசைப்பட்டது, யெகோவாவிடமிருந்து பெற்ற ஆசீர்வாதங்களை அவர்கள் மதிக்காததைக் காட்டியது. ஆம், கீழ்ப்படியாமல் போன அந்த மக்கள் தாங்கள் பெற்ற ஆசீர்வாதங்களை நினைக்காமல் எகிப்தில் சாப்பிட்ட உணவு வகைகளை நினைத்து ஏங்கினார்கள். (எண். 11:5) தலைமகன் உரிமையை மதிக்காமல் வெறும் கூழுக்காக அதை விற்ற ஏசாவைப் போல் அவர்கள் இருந்தார்கள்.—ஆதி. 25:30-32; எபி. 12:16.

11. இஸ்ரவேலர் விசுவாசத்தைக் காட்டாதபோதிலும் யெகோவா தம்முடைய நோக்கத்தை மாற்றிக்கொண்டாரா?

11 அந்த இஸ்ரவேலர் விசுவாசத்தைக் காட்டாதபோதிலும் அவர்களுக்கான தம்முடைய நோக்கத்தை யெகோவா மாற்றிக்கொள்ளவில்லை. அவர்களைவிட அவர்களுடைய பிள்ளைகள் அதிக கீழ்ப்படிதலைக் காட்டினார்கள். இந்தப் புதிய தலைமுறையினர் யெகோவாவின் கட்டளைப்படி, வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் நுழைந்து அதைக் கைப்பற்ற ஆரம்பித்தார்கள். யோசுவா 24:31 (திருத்திய மொழிபெயர்ப்பு) இவ்வாறு சொல்கிறது: “யோசுவா உயிரோடிருந்த சகல நாட்களிலும், யெகோவா இஸ்ரவேலுக்குச் செய்த அவருடைய செயல்கள் யாவையும் அறிந்தவர்களும் யோசுவாவுக்குப்பின்பு உயிரோடிருந்தவர்களுமான மூப்பர்களின் சகல நாட்களிலும், இஸ்ரவேலர் யெகோவாவைச் சேவித்து வந்தார்கள்.”

12. இன்றுள்ள கிறிஸ்தவர்களும் கடவுளோடு சேர்ந்து ஓய்வை அனுபவிக்க முடியுமென நமக்கு எப்படித் தெரியும்?

12 ஆனால், கீழ்ப்படிதலைக் காட்டிய இந்தத் தலைமுறையினர் வயதாகி இறந்துபோனார்கள். அவர்களுக்குப் பின்வந்த தலைமுறையினர் ‘யெகோவாவையும், அவர் இஸ்ரவேலுக்காகச் செய்த கிரியையையும் அறியாதவர்களாக’ இருந்தார்கள். அதனால், ‘யெகோவாவின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்து, பாகால்களைச் சேவிக்க’ ஆரம்பித்தார்கள். (நியா. 2:10, 11) இவர்கள் கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் போனதால் அதற்குமேல் அவரோடு சமாதானத்தை அனுபவிக்கவில்லை. ஆகவே, வாக்குப்பண்ணப்பட்ட தேசம் இவர்களுக்கு ‘ஓய்வுபெறும் இடமாக’ இருக்கவில்லை. இவர்களைப் பற்றி பவுல் குறிப்பிடுகையில், “ஓய்வுபெறும் இடத்திற்கு அவர்களை யோசுவா வழிநடத்தியிருந்தார் என்றால், வேறொரு நாளைப் பற்றிப் பிற்பாடு கடவுள் சொல்லியிருக்க மாட்டாரே” என்றார். “அதனால், கடவுளுடைய மக்களுக்கு இனிமேல்தான் ஓய்வுகாலம் வரப்போகிறது” என்றும் சொன்னார். (எபி. 4:8, 9) ‘கடவுளுடைய மக்கள்’ என பவுல் குறிப்பிட்டது கிறிஸ்தவர்களைத்தான். கிறிஸ்தவராவதற்குமுன் திருச்சட்டத்தைப் பின்பற்றி வந்தவர்களும் சரி, திருச்சட்டத்தை ஒருபோதும் பின்பற்றாதவர்களும் சரி அவர்களில் அடங்குவர். அப்படியென்றால், இன்றுள்ள கிறிஸ்தவர்களும் கடவுளோடு சேர்ந்து ஓய்வை அனுபவிக்க முடியும் என்பதை பவுலின் வார்த்தைகள் காட்டுகின்றன.

கடவுளோடு சேர்ந்து ஓய்வை அனுபவிக்கத் தவறிய கிறிஸ்தவர்கள்

13, 14. (அ) இஸ்ரவேலரின் காலத்தில், கடவுளோடு சேர்ந்து ஓய்வை அனுபவிக்க அவர்கள் என்ன செய்ய வேண்டியிருந்தது? (ஆ) பவுலின் காலத்தில், கடவுளோடு சேர்ந்து ஓய்வை அனுபவிக்க கிறிஸ்தவர்கள் என்ன செய்ய வேண்டியிருந்தது?

13 எபிரெய கிறிஸ்தவர்களில் சிலர் கடவுளுடைய நோக்கத்திற்கு எதிரான காரியங்களைச் செய்து வந்ததால் அவர்களுக்கு பவுல் ஒரு கடிதத்தை எழுதினார். (எபிரெயர் 4:1-ஐ வாசியுங்கள்.) அவர்கள் என்ன செய்து வந்தார்கள்? திருச்சட்ட முறைமைகள் சிலவற்றை அப்போதும் கடைப்பிடித்து வந்தார்கள். சுமார் 1,500 ஆண்டுகளாக, கடவுளுடைய மக்களான இஸ்ரவேலர் அவரைப் பிரியப்படுத்துவதற்குத் திருச்சட்டத்தைக் கடைப்பிடிக்க வேண்டியிருந்தது உண்மைதான். ஆனால், இயேசுவின் மரணத்திற்குப் பிறகு கடவுளுடைய மக்கள் திருச்சட்டத்தைக் கடைப்பிடிக்க வேண்டியிருக்கவில்லை. இதைச் சில கிறிஸ்தவர்கள் புரிந்துகொள்ளவில்லை; அதனால்தான், திருச்சட்ட முறைமைகள் சிலவற்றைக் கடைப்பிடிக்க வேண்டுமென அப்போதும் நினைத்துக் கொண்டிருந்தார்கள்.b

14 இயேசு கிறிஸ்து எந்த அபூரண தலைமைக் குருவைவிடவும் சிறந்த தலைமைக் குரு என்பதை பவுல் அந்த எபிரெய கிறிஸ்தவர்களுக்கு விளக்கினார். இஸ்ரவேலரோடு செய்யப்பட்ட ஒப்பந்தத்தைவிட புதிய ஒப்பந்தம் மேலானது என்பதையும் சுட்டிக்காட்டினார். அதோடு, யெகோவாவின் மகா ஆலயம், “கையினால் செய்யப்பட்ட” ஆலயத்தைவிட “பூரணமான பெரிய” ஆலயம் என்பதை எடுத்துக் காட்டினார். (எபி. 7:26-28; 8:7-10; 9:11, 12) திருச்சட்டத்தில் குறிப்பிடப்பட்ட ஓய்வுநாளை உதாரணமாகக் காட்டி, கிறிஸ்தவர்கள் எப்படி யெகோவாவோடு சேர்ந்து ஓய்வுநாளை அனுபவிக்க முடியும் என்பதை விளக்கினார். “கடவுளுடைய மக்களுக்கு இனிமேல்தான் ஓய்வுகாலம் வரப்போகிறது. ஏனென்றால், கடவுள் தமது வேலைகளை முடித்துவிட்டு ஓய்வெடுப்பது போலவே அவரோடு சேர்ந்து ஓய்வை அனுபவிப்பவனும் தனது வேலைகளை முடித்துவிட்டு ஓய்வெடுக்கிறான்” என்றார். (எபி. 4:8-10) ஆக, திருச்சட்டத்தைக் கடைப்பிடிப்பதால் கடவுளுடைய அங்கீகாரத்தைப் பெற முடியுமென நினைப்பதை அந்த எபிரெய கிறிஸ்தவர்கள் விட்டுவிட வேண்டியிருந்தது. கி.பி. 33, பெந்தெகொஸ்தே நாள் முதற்கொண்டு, இயேசு கிறிஸ்துமீது விசுவாசம் வைப்பவர்களை யெகோவா பெருந்தன்மையோடு அங்கீகரித்து வருகிறார்.

15. கடவுளோடு சேர்ந்து ஓய்வை அனுபவிக்க அவருக்குக் கீழ்ப்படிய வேண்டுமென நமக்கு எப்படித் தெரியும்?

15 மோசேயின் காலத்தில் வாழ்ந்த இஸ்ரவேலர் ஏன் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் செல்லவில்லை? ஏனென்றால், அவர்கள் யெகோவாவுக்குக் கீழ்ப்படியவில்லை. பவுலின் காலத்தில் வாழ்ந்த கிறிஸ்தவர்களில் சிலர் ஏன் கடவுளோடு சேர்ந்து ஓய்வை அனுபவிக்கவில்லை? அதே காரணத்துக்காகத்தான், அவர்களும் யெகோவாவுக்குக் கீழ்ப்படியவில்லை. திருச்சட்டம் முடிவுக்கு வந்துவிட்டது என்பதையும் யெகோவா தம் மக்களை வேறு விதமாக வழிநடத்த ஆரம்பித்திருந்தார் என்பதையும் அவர்கள் நம்ப மறுத்தார்கள்.

இன்று கடவுளோடு சேர்ந்து ஓய்வை அனுபவித்தல்

16, 17. (அ) இன்று கிறிஸ்தவர்கள் எப்படிக் கடவுளோடு சேர்ந்து ஓய்வை அனுபவிக்க முடியும்? (ஆ) அடுத்த கட்டுரையில் எதைப் பற்றிச் சிந்திப்போம்?

16 கிறிஸ்தவர்கள் திருச்சட்டத்தைக் கடைப்பிடித்தால்தான் மீட்புப் பெற முடியுமென நம்மில் ஒருவரும் நினைப்பதில்லை. பவுல் எபேசியர்களுக்கு எழுதிய வார்த்தைகள் தெளிவாக இருக்கின்றன: “இந்த அளவற்ற கருணையினால்தான் விசுவாசத்தின் மூலம் நீங்கள் மீட்புப் பெற்றிருக்கிறீர்கள்; இதை நீங்களாகவே சம்பாதித்துக்கொள்ளவில்லை, இது கடவுளுடைய அன்பளிப்பு; ஆம், இதைச் செயல்களினால் பெற முடியாது.” (எபே. 2:8, 9) ஆக, இன்று கிறிஸ்தவர்கள் எப்படிக் கடவுளோடு சேர்ந்து ஓய்வை அனுபவிக்க முடியும்? பூமிக்கும் கீழ்ப்படிதலுள்ள மனிதர்களுக்குமுரிய தம்முடைய நோக்கத்தை நிறைவேற்றி முடிக்க ஓய்வுநாளை யெகோவா தேர்ந்தெடுத்தார் என்பதை நினைவில் வையுங்கள். அவர் தம்முடைய நோக்கத்தையும் நம்மிடம் எதிர்பார்ப்பவற்றையும் பற்றித் தம்முடைய அமைப்பின் மூலம் தெரியப்படுத்துகிறார். நாம் யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்து, அவருடைய அமைப்புடன் ஒத்துழைக்கும்போது அவரோடு சேர்ந்து ஓய்வை அனுபவிக்க முடியும்.

17 நாம் அடிமை வகுப்பாருக்குக் கீழ்ப்படியவில்லை என்றால், அல்லது நமக்கு எது முக்கியமானதாகத் தோன்றுகிறதோ அதற்கு மட்டுமே கீழ்ப்படிந்தால் யெகோவாவின் நோக்கத்திற்கு எதிராகச் செயல்படுகிறோம். அப்படிச் செயல்பட்டால் அவருடைய நண்பர்களாக இருக்க முடியாது. அடுத்த கட்டுரையில், கீழ்ப்படிதலைக் காட்ட நமக்கு வாய்ப்பளிக்கும் சில சூழ்நிலைகளைப் பற்றிச் சிந்திப்போம். அந்தச் சூழ்நிலைகளில் நாம் செய்யும் தீர்மானங்கள், கடவுளோடு சேர்ந்து ஓய்வை அனுபவிக்கிறோமா என்பதைக் காட்டும்.

[அடிக்குறிப்புகள்]

a ஓய்வுநாளில் குருமார்களும் லேவியர்களும் ஆலயத்தில் வேலை செய்தார்கள், இது கடவுளுடைய சட்டத்திற்கு முரணானதாக இருக்கவில்லை. யெகோவா தேவன் இயேசுவை நமது தலைமைக் குருவாக நியமித்திருக்கிறார். ஆகவே, யெகோவா கொடுத்த வேலையை இயேசு ஓய்வுநாளில் செய்தது தவறில்லை.—மத். 12:5, 6.

b எபிரெய கிறிஸ்தவர்கள் கி.பி. 33, பெந்தெகொஸ்தே நாளுக்குப் பிறகும் பாவ நிவாரண நாளில் பலிகள் செலுத்தினார்களா என்பது நமக்குத் தெரியாது. ஒருவேளை அவர்கள் பலிகள் செலுத்தியிருந்தால், இயேசுவின் பலிக்குக் கொஞ்சமும் மதிப்பு காட்டவில்லை என்று அர்த்தம். என்றாலும், அவர்களில் சிலர் மற்ற திருச்சட்ட முறைமைகளை உடும்புபோல் பிடித்துக்கொண்டிருந்தார்கள் என்று மட்டும் நமக்குத் தெரியும்.—கலா. 4:9-11.

சிந்திக்கச் சில கேள்விகள்

• ஏழாம் நாளில் யெகோவா என்ன செய்ய விரும்பினார்?

• ஏழாம் நாள் இன்றும் நீடிக்கிறதென நமக்கு எப்படித் தெரியும்?

• மோசேயின் காலத்தில் வாழ்ந்த இஸ்ரவேலரும் பவுலின் காலத்தில் வாழ்ந்த சில கிறிஸ்தவர்களும் ஏன் கடவுளோடு சேர்ந்து ஓய்வை அனுபவிக்கவில்லை?

• இன்று நாம் எப்படிக் கடவுளோடு சேர்ந்து ஓய்வை அனுபவிக்க முடியும்?

[பக்கம் 27-ன் சிறுகுறிப்பு]

நாம் யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்து, அவருடைய அமைப்புடன் ஒத்துழைக்கும்போது அவரோடு சேர்ந்து ஓய்வை அனுபவிக்க முடியும்

[பக்கம் 26, 27-ன் படங்கள்]

இன்று கடவுளுடைய மக்கள் எப்படிக் கடவுளோடு சேர்ந்து ஓய்வை அனுபவிக்க முடியும்?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்