சரியான மதத்தை அறிந்துகொள்வதோடு வரும் பொறுப்பு
“கடவுளுடைய வார்த்தையைக் கேட்டு அதைக் கைக்கொள்வோரே மகிழ்ச்சியுள்ளோர்!”—லூக்கா 11:28, NW.
1. என்ன வகையான ஆட்கள், சரியான மதத்தை ஒருமுறை அடையாளம் கண்டுகொண்டவுடன், அதைச் சுற்றி தங்கள் வாழ்க்கையைக் கட்டியமைக்கின்றனர்?
சரியான மதத்தை அடையாளம் கண்டுகொள்வது மாத்திரமே போதுமானதல்ல. சரியும் உண்மையுமானதை நேசிப்போராக நாம் இருந்தால், அதை ஒருமுறை கண்டடைந்தவுடன் நம் வாழ்க்கையை அதைச் சுற்றி கட்டியமைப்போம். உண்மையான மதம் வெறும் மனத் தத்துவஞானம் அல்ல; அது ஒரு வாழ்க்கை முறை.—சங்கீதம் 119:105; ஏசாயா 2:3; அப்போஸ்தலர் 9:2-ஐ ஒத்துப் பாருங்கள்.
2, 3. (அ) கடவுளுடைய சித்தத்தைச் செய்வதன் முக்கியத்துவத்தை இயேசு எவ்வாறு அறிவுறுத்தினார்? (ஆ) சரியான மதத்தை அறிந்திருக்கிற ஒவ்வொருவருக்கு என்ன பொறுப்புமிருக்கிறது?
2 கடவுள் தம்முடைய சித்தமெனத் தெரிவித்திருப்பதைச் செய்ய வேண்டியதன் முக்கியத்துவத்தை இயேசு கிறிஸ்து அறிவுறுத்தினார். மலைப் பிரசங்கம் என அறியப்பட்டுள்ளதை முடிக்கையில், இயேசு, தம்மை நோக்கிக் கர்த்தாவே என அழைத்தவர்களில் (இவ்வாறு கிறிஸ்தவர்கள் எனச் சொல்லிக்கொள்பவர்கள்) எல்லாருமே பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பதில்லை; தம்முடைய பிதாவின் சித்தத்தைச் செய்வோர் மாத்திரமே பிரவேசிப்பரெனத் தெரிவித்தார். மற்றவர்கள், “அக்கிரமச் செய்கைக்காரர்” எனத் தள்ளிவிடப்படுவரென்று கூறினார். ஏன் அக்கிரமம்? ஏனெனில், பைபிள் கூறுகிறபடி, கடவுளுடைய சித்தத்தைச் செய்யத் தவறுவது பாவம், மேலும் எல்லா பாவமும் அக்கிரமமாகும். (மத்தேயு 7:21-23; 1 யோவான் 3:4; ரோமர் 10:2, 3-ஐ ஒத்துப் பாருங்கள்.) ஒருவர் சரியான மதத்தை அறிந்திருக்கலாம், அதைக் கற்பிப்போரை அவர் ஒருவேளை புகழ்ந்து பேசலாம், அதைக் கடைப்பிடிப்போரைப்பற்றி அவர் நல்ல முறையில் பேசலாம், ஆனால் அதைத் தன் சொந்த வாழ்க்கையில் பொருத்திப் பயன்படுத்துவதற்கான பொறுப்பும் அவருக்கு உள்ளது. (யாக்கோபு 4:17) அந்தப் பொறுப்பை அவர் ஏற்றால், தன் வாழ்க்கை வளம்பெறச் செய்யப்பட்டதாகக் காண்பார், மேலும் வேறு எந்த வகையிலும் அடைய முடியாத சந்தோஷத்தை அனுபவிப்பார்.
3 முந்தின கட்டுரையில், உண்மையான மதத்தின் ஆறு அடையாளக் குறிகளை நாம் சிந்தித்தோம். அவை ஒவ்வொன்றும் சரியான மதத்தை அடையாளம் கண்டுகொள்ள நமக்கு உதவி செய்வது மட்டுமல்லாமல், சவால்களையும் வாய்ப்புகளையுங்கூட நமக்குத் தனிப்பட அறிமுகப்படுத்துகிறது. எவ்வாறு?
கடவுளுடைய வார்த்தைக்கு எவ்வாறு பிரதிபலிக்கிறீர்கள்?
4. (அ) புதியவர்கள் யெகோவாவின் சாட்சிகளோடு கூட்டுறவுகொள்ளத் தொடங்குகையில், சாட்சிகள் பைபிளைப் பயன்படுத்துவதைக் குறித்து எதை விரைவில் கவனிக்கின்றனர்? (ஆ) ஆவிக்குரியப்பிரகாரம் நன்றாய்ப் போஷிக்கப்பட்டிருப்பது யெகோவாவின் ஊழியர்களை எவ்வாறு பாதிக்கிறது?
4 புதிதாக அக்கறை காட்டுவோருடன் யெகோவாவின் சாட்சிகள் பைபிளைப் படிக்கையில், பைபிளிலிருந்து கற்பிக்கப்படுவதை இந்தப் புதியவர்களில் பலர் விரைவில் தெளிவாக அறிந்துணர்ந்துகொள்கின்றனர். அவர்களுடைய கேள்விகளுக்குப் பதில் தருகையில், சர்ச் விசுவாசப் பிரமாணங்களோ மனித பாரம்பரியங்களோ புகழ்பெற்ற ஆட்களின் கருத்துக்களோ அவர்களுக்குக் குறிப்பிட்டுக் காட்டப்படுகிறதில்லை. கடவுளுடைய சொந்த வார்த்தையே அதிகாரத்துவமாகக் குறிப்பிடப்படுகிறது. இராஜ்ய மன்றத்துக்கு அவர்கள் செல்கையில், அங்கேயும் பைபிளே முதன்மையான பாடபுத்தகமாக இருப்பதை அவர்கள் கவனிக்கின்றனர். யெகோவாவின் சாட்சிகளுக்குள் தாங்கள் காணும் சந்தோஷத்தின் முக்கியமான காரணமானது, கடவுளுடைய வார்த்தையிலிருந்து ஆவிக்குரியப்பிரகாரமாக அவர்கள் நன்றாய்ப் போஷிக்கப்பட்டிருப்பதே என்பதை உணர்ந்துகொள்ள, சத்தியத்தை உண்மையாகத் தேடுவோருக்கு அதிக காலம் எடுப்பதில்லை.—ஏசாயா 65:13, 14.
5. (அ) யெகோவாவின் சாட்சிகளைக் கூர்ந்து கவனிப்போருக்கு என்ன சவால் அளிக்கப்படுகிறது? (ஆ) சாட்சிகளின் மகிழ்ச்சியில் அவர்கள் எவ்வாறு பங்குகொள்ளக்கூடும்?
5 நீங்கள் இதைத் தெரிந்துணர்ந்துகொண்டால், எவ்வாறு பிரதிபலிப்பீர்கள்? நீங்கள் அதன் உட்கருத்தைப் புரிந்துகொண்டால், செயல்படாமல் கவனிப்பவராக மாத்திரமே சரியானபடி இருக்க முடியாது. அவ்வாறிருக்க நீங்கள் விரும்பவும் கூடாது. ‘கேட்கிறவர்களாய் மாத்திரம்’ இருந்து ‘திருவசனத்தின்படி செய்கிறவர்களாய்’ இராதவர்கள் ‘பொய்யான விவாதத்தால் தங்களை வஞ்சித்துக்கொள்ளுகிறார்கள்’ என்று பைபிள் காட்டுகிறது. (யாக்கோபு 1:22, திருத்திய மொழிபெயர்ப்பு) தாங்கள் என்ன சொல்லிக்கொண்டாலும், கடவுளுக்குக் கீழ்ப்படிய அவர்கள் தவறுவது, அவரை அவர்கள் உண்மையில் நேசிக்கிறதில்லையென்று காட்டுகிறதென்பதை அவர்கள் உணரத் தவறுவதனால் தங்களை வஞ்சித்துக்கொள்கின்றனர். வாயினால் மட்டுமே சொல்லி, செயல்களினால் ஆதரிக்கப்படாத விசுவாசம் செத்த விசுவாசமேயாகும். (யாக்கோபு 2:18-26; 1 யோவான் 5:3) நேர்மாறாக, யெகோவாவின்பேரிலுள்ள அன்பினால் ‘வேலையைச் செய்பவனாக’ இருக்கும்படி தூண்டியியக்கப்படும் ஒருவன், ‘அதைச் செய்வதில் மகிழ்ச்சியுள்ளவனாக’ இருப்பான். ஆம், இயேசு கிறிஸ்து விளக்கிக் கூறினபடி, “கடவுளுடைய வார்த்தையைக் கேட்டு அதைக் கைக்கொள்வோரே மகிழ்ச்சியுள்ளோர்!”—யாக்கோபு 1:25, NW; லூக்கா 11:28, NW; யோவான் 13:17.
6. கடவுளுடைய வார்த்தையை நாம் உண்மையில் மதித்துணர்ந்தால், என்ன வாய்ப்புகளைப் பற்றிக்கொள்ள நாம்தாமே முயற்சி செய்வோம்?
6 கடவுளுடைய சித்தத்தைப்பற்றிய அறிவில் வளர்ந்துகொண்டு, நீங்கள் மேலுமாகக் கற்பவற்றைப் பொருத்திப் பயன்படுத்தி வருகையில் அந்தச் சந்தோஷம் மேலும் ஆழமாகும். கடவுளுடைய வார்த்தையைக் கற்பதற்கு எவ்வளவு முயற்சி எடுப்பீர்கள்? எழுதப்படிக்கத் தெரியாதவர்களாக இருந்த பத்தாயிரக்கணக்கான நபர்கள், வேதவசனங்களைத் தாங்கள் வாசித்து அவற்றை மற்ற ஆட்களுக்குக் கற்பிக்கும்படியானத் தனிப்பட்ட நோக்கத்துடன், வாசிக்கக் கற்றுக்கொள்வதற்குக் கடினமாய் உழைத்திருக்கின்றனர். மற்றவர்கள், பைபிளையும் காவற்கோபுரம் போன்ற பைபிள்-படிப்பு உதவிகளையும் ஒவ்வொரு நாளும் வாசிப்பதற்குச் சிறிது நேரம் தாங்கள் செலவிடக்கூடும்படி, விடியற்காலையில் எழுந்திருக்கின்றனர். நீங்கள்தாமே சொந்தமாய் பைபிளைத் தொடர்ச்சியாக வாசிக்கையில் அல்லது மற்ற படிப்பு பொருளில் உள்ள வசன இடக்குறிப்புகளை எடுத்துப் பார்க்கையில், யெகோவாவின் சட்டங்களுக்கும் கட்டளைகளுக்கும் ஆழ்ந்த கவனம் செலுத்துங்கள், மற்றும் நம்முடைய வழிநடத்துதலுக்காக அங்கேயுள்ள பல நியமங்களைத் தெளிவாக உணர்ந்துகொள்ள நாடுங்கள். கடவுளையும், அவருடைய நோக்கத்தையும், மனிதகுலத்துடன் அவருடைய தொடர்புகளையும் பற்றி ஒவ்வொரு பகுதியும் வெளிப்படுத்துவதன்பேரில் ஆழ்ந்து சிந்தியுங்கள். இது உங்கள் இருதயத்தை உருப்படுத்துவதற்கு நேரம் அனுமதியுங்கள். பைபிளின் அறிவுரையை உங்கள் சொந்த வாழ்க்கையில் மேலும் முழுமையாக நீங்கள் பொருத்திப் பயன்படுத்தக்கூடியதற்கு வழிகள் உண்டாவென சிந்தியுங்கள்.—சங்கீதம் 1:1, 2; 19:7-11; 1 தெசலோனிக்கேயர் 4:1.
யெகோவாவிடம் உங்கள் பக்தி முழுமையாக உள்ளதா?
7. (அ) கடவுளை வணங்குவதற்கான ஆட்களின் முயற்சிகளைத் திரித்துவக் கோட்பாடு எவ்வாறு பாதித்திருக்கிறது? (ஆ) யெகோவாவைப்பற்றிய சத்தியத்தை ஒருவர் தெரிந்துகொள்கையில் என்ன நடக்கலாம்?
7 உண்மையான கடவுள் ஒரு திரித்துவம் அல்லரென்பதைத் தெரிந்துகொண்டது, லட்சக்கணக்கான மக்களுக்கு மன ஆறுதலாக இருந்திருக்கிறது. “அது புரியாத ஒரு புதிர்” என்ற விளக்கம் அவர்களுக்கு ஒருபோதும் திருப்தியளிக்கவில்லை. மனதால் புரிந்துகொள்ளக்கூடாத ஒரு கடவுளிடம் அவர்கள் எவ்வாறு நெருங்கிவரக்கூடும்? அந்தப் போதகத்தின் விளைவாக, பிதாவை (இவருடைய பெயரை சர்ச்சில் அவர்கள் ஒருபோதும் கேட்டதில்லை) புறக்கணிக்க மனம் சாய்ந்து இயேசுவைக் கடவுளாக வணங்க அல்லது தங்கள் வணக்கத்தை மரியாளுக்கு (இவள் “தெய்வத் தாய்” என அவர்கள் கற்பிக்கப்பட்டனர்) செலுத்த மனம் சாய்ந்தனர். ஆனால் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவர் பைபிளைத் திறந்து கடவுளுடைய சொந்த பெயர் யெகோவா என்பதை அவர்களுக்குக் காட்டியபோது அவர்களுடைய இருதயம் இன்பமகிழ்ச்சியால் செயல்பட்டது. (சங்கீதம் 83:17) வெனிசுவேலாவைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு கடவுளுடைய இந்தப் பெயர் காட்டப்பட்டபோது அவள் அவ்வளவு அதிக மகிழ்ச்சியடைந்ததால், அந்த விலைமதியா சத்தியத்தைத் தன்னிடம் பகிர்ந்துகொண்ட அந்த இளம் சாட்சியை உண்மையிலேயே கட்டியணைத்துக்கொண்டாள், வீட்டு பைபிள் படிப்பு ஒன்றை வைத்துக்கொள்ளவும் சம்மதித்தாள். இயேசு தம்முடைய பிதாவைக் குறித்து “என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும்” என்று பேசினார் எனவும், தம்முடைய பிதாவை “ஏகமெய்க்கடவுள்” என அழைத்தாரெனவும் இத்தகைய ஆட்கள் தெரிந்துகொள்கையில். கடவுளைப்பற்றி பைபிள் கற்பிப்பது புரிந்துகொள்ளக்கூடாததாக இல்லையென உணருகின்றனர். (யோவான் 17:3, தி.மொ.; 20:17) யெகோவாவின் பண்புகளை அவர்கள் தெரிந்துகொள்கையில், அவரிடமாக இழுக்கப்படுவோராக உணர்ந்து, அவரிடம் ஜெபிக்கத் தொடங்குகின்றனர், மற்றும் அவரைப் பிரியப்படுத்த விரும்புகின்றனர். இதன் பலன் என்ன?
8. (அ) யெகோவாவின்பேரிலுள்ள அன்பினிமித்தமாகவும் அவரைப் பிரியப்படுத்த வேண்டுமென்ற தங்கள் ஆவலினிமித்தமாகவும் லட்சக்கணக்கான ஆட்கள் என்ன செய்திருக்கின்றனர்? (ஆ) கிறிஸ்தவ முழுக்காட்டுதல் ஏன் இன்றியமையாத முக்கியத்துவமுள்ளது?
8 கடந்த பத்து ஆண்டுகளின்போது, ஆறு கண்டங்களிலும் பல தீவுகளிலும் 25,28,524 ஆட்கள் தங்கள் வாழ்க்கையை யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்து, பின்பு தண்ணீர் முழுக்காட்டால் இந்த ஒப்புக்கொடுத்தலை அடையாளப்படுத்தினர். அவர்களில் நீங்களும் ஒருவரா, அல்லது முழுக்காட்டப்படுவதற்காக இப்பொழுது ஆயத்தம் செய்துகொண்டிருக்கிறீர்களா? உண்மையான ஒவ்வொரு கிறிஸ்தவனின் வாழ்க்கையிலும் முழுக்காட்டுதல் ஒரு முக்கியமான கட்டமாக உள்ளது. சகல தேசத்தாரின் ஜனங்களையும் சீஷராக்கும்படியும் அவர்களை முழுக்காட்டும்படியும் இயேசு தம்மைப் பின்பற்றுவோருக்குக் கட்டளையிட்டு பொறுப்பளித்தார். (மத்தேயு 28:19, 20, NW) இயேசுவின் சொந்த முழுக்காட்டுதலை உடனடியாகப் பின்தொடர்ந்து யெகோவா தாமே பரலோகங்களிலிருந்து பேசி: “நீர் என்னுடைய குமாரன், மிகவும் நேசமானவர்; நான் உம்மை அங்கீகரித்திருக்கிறேன்” என்று சொன்னதும் கவனிக்கத்தக்கது.—லூக்கா 3:21, 22, NW.
9. யெகோவாவுடன் அங்கீகரிக்கப்பட்ட ஓர் உறவைக் காத்துக்கொள்ள நம்முடைய பங்கில் என்ன தேவைப்படுகிறது?
9 யெகோவாவுடன் அங்கீகரிக்கப்பட்ட ஓர் உறவு இருதயத்தில் போற்றி வளர்க்கப்படவேண்டிய ஒன்றாகும். ஒப்புக்கொடுத்து முழுக்காட்டப்படுவதால் அத்தகைய உறவுக்குள் நீங்கள் பிரவேசித்திருந்தால், அந்த உறவைக் கெடுக்கக்கூடிய எதையும் தவிர்த்து விடுங்கள். வாழ்க்கையின் கவலைகளும் பொருளாதாரங்களின்மீதுள்ள அக்கறையும் அதை இரண்டாவது இடத்தில் தள்ளிவிட அனுமதியாதீர்கள். (1 தீமோத்தேயு 6:8-12) நீதிமொழிகள் 3:6-ன் அறிவுரைக்கு ஒத்திசைவாக உண்மையில் வாழுங்கள்: “உன் வழிகளிலெல்லாம் [யெகோவாவை] நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.”
கிறிஸ்துவின் அன்பு எவ்வளவு ஆழமாக உங்களைப் பாதிக்கிறது?
10. நாம் யெகோவாவை வணங்குவது இயேசுவைப் புறக்கணிக்கும்படி நம்மை ஏன் செய்வதில்லை?
10 ஒரே உண்மையான கடவுளாக யெகோவாவுக்குத் தகுந்த மதித்துணர்வைக் காட்டுவது, நிச்சயமாகவே, இயேசு கிறிஸ்துவைப் புறக்கணிக்கும்படி ஒருவரைச் செய்வதில்லை. நேர் மாறாக, வெளிப்படுத்துதல் 19:10 (NW) பின்வருமாறு கூறுகிறது: “இயேசுவுக்குச் சாட்சிபகருவதே தீர்க்கதரிசனமுரைப்பதை ஏவுகிறது.” ஆதியாகமத்திலிருந்து வெளிப்படுத்துதல் வரையாக, ஏவப்பட்ட தீர்க்கதரிசனங்கள், யெகோவாவின் நோக்கத்தில் இயேசு கிறிஸ்து வகிக்கும் பாகத்தைக் குறித்த நுட்பவிவரங்களை அளிக்கின்றன. அந்த நுட்பவிவரங்களோடு ஒருவர் அறிமுகமாகையில், கிறிஸ்தவமண்டலத்தின் பொய்ப் போதகங்களின் விளைவாக உண்டான கருத்துப் புரட்டுகளும் தப்பெண்ணங்களும் சற்றும் இல்லாத கவர்ச்சியூட்டும் ஒரு காட்சி தோன்றுகிறது.
11. கடவுளுடைய குமாரனைப்பற்றி பைபிள் உண்மையில் கற்பிப்பதைத் தெரிந்துகொண்டது போலாந்திலுள்ள ஒரு பெண்ணை எவ்வாறு பாதித்தது?
11 கடவுளுடைய குமாரனைப்பற்றிய சத்தியத்தை மனதில் புரிந்துகொள்வது ஒருவரில் ஆழ்ந்த பாதிப்பை உண்டாக்கக்கூடும். போலாந்தில் உள்ள டனூட்டா என்ற பெண்ணின் காரியத்தில் அவ்வாறு இருந்தது. அவள் யெகோவாவின் சாட்சிகளோடு எட்டு ஆண்டுகளாகத் தொடர்பு கொண்டிருந்து, அவர்கள் கற்பித்ததில் மகிழ்ச்சியடைந்தாள், ஆனால் உண்மையான வணக்கத்தைத் தன் வாழ்க்கைமுறையாக்கிக் கொள்ளவில்லை. பின்பு, கிறிஸ்துவின் வாழ்க்கையை எளிதில் புரிந்துகொள்ளும் முறையில் அளிக்கும் எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர் என்ற புத்தகத்தின் ஒரு பிரதியைப் பெற்றாள்.a பிந்திய சாயங்காலத்தில், ஒரு அதிகாரம் மட்டுமே வாசிக்கும்படி கருதி, அந்தப் புத்தகத்தைத் திறந்தாள். எனினும், விடியற்காலை வரையாக, அந்தப் புத்தகத்தை வாசித்து முடிக்கும்வரையில் அதைக் கீழே வைக்கவில்லை. அவள் கண்ணீர்விட்டழுது, “யெகோவா, எனக்கு மன்னியும்” என்று மன்றாடினாள். தான் வாசித்தவற்றின் பலனாக, யெகோவாவும் அவருடைய குமாரனும் காட்டின அன்பை முன்னொருபோதுமிராத வகையில் அதிகத் தெளிவாகக் கண்டாள். எட்டு ஆண்டுகளாகக் கடவுள் பொறுமையுடன் தனக்கு அளித்துக்கொண்டிருந்த உதவியை நன்றிகெட்டவளாக வேண்டாமெனத் தள்ளிக்கொண்டிருந்ததை உணர்ந்தாள். 1993-ல், இயேசு கிறிஸ்துவில் வைத்த விசுவாசத்தின் ஆதாரத்தின்பேரில் யெகோவாவுக்கு தன் ஒப்புக்கொடுத்தலின் அடையாளமாக முழுக்காட்டப்பட்டாள்.
12. இயேசு கிறிஸ்துவைப்பற்றிய திருத்தமான அறிவு நம்முடைய வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கிறது?
12 “நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைப்பற்றிய திருத்தமான அறிவு,” செயல்பட்டு கனிதரும் ஒரு கிறிஸ்தவனாக இருப்பதுடன் சம்பந்தப்பட்டுள்ளது. (2 பேதுரு 1:8, NW) இராஜ்ய செய்தியை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதான, இத்தகைய நடவடிக்கையில் எந்த அளவுக்கு நீங்கள் பங்குகொள்வீர்கள்? தனி நபர்கள் செய்யக்கூடிய அளவு பல சூழ்நிலைமைகளால் பாதிக்கப்படுகிறது. (மத்தேயு 13:18-23) சில சூழ்நிலைமைகளை நாம் மாற்ற முடியாது; மற்றவற்றை நாம் மாற்ற முடியும். மாற்றக்கூடியவற்றை அடையாளங்கண்டு மாற்றங்கள் செய்வதற்கு எது நமக்கு உள்ளத் தூண்டுதலை அளிக்கும்? அப்போஸ்தலன் பவுல் பின்வருமாறு எழுதினார்: “கிறிஸ்துவினுடைய அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது”; வேறு வார்த்தைகளில் சொன்னால், நமக்காகத் தம்முடைய உயிரைக் கொடுப்பதில் அவர் காட்டின அன்பு அவ்வளவு முதன்மையாக இருப்பதால், அதற்கான நம்முடைய நன்றிமதித்துணர்வு வளருகையில், நம்முடைய சொந்த இருதயம் ஆழமாக இயக்குவிக்கப்படும். பலனாக, தன்னலமான இலக்குகளை நாம் விடாமல் நாடித் தொடர்ந்து கொண்டிருப்பதும் பெரும்பாலும் தன்னையே திருப்திசெய்வதற்காக வாழ்வதும் மிகத் தகாததென்று உணருகிறோம். அதற்குப் பதிலாக, தம்முடைய சீஷர்கள் செய்யும்படி கிறிஸ்து கற்பித்த ஊழியத்துக்கு முதலிடத்தைக் கொடுக்க நம்முடைய விவகாரங்களைச் சரிப்படுத்தியமைப்போம்.—2 கொரிந்தியர் 5:14, 15.
உலகத்திலிருந்து பிரிந்திருத்தல்—எந்த அளவுக்கு?
13. தன்னை உலகத்தின் பாகமாக்கிக்கொண்டிருக்கிற ஒரு மதத்தில் நமக்கு ஏன் எந்தப் பாகமும் வேண்டாம்?
13 கிறிஸ்தவமண்டலமும் மற்ற மதங்களும், உலகத்தின் பாகமாக இருக்க விரும்புவதால் அவை செய்துள்ள பதிவைக் காண்பது கடினமாக இல்லை. புரட்சி நடவடிக்கைக்கு பணமளிக்க சர்ச்சுக்குரிய நிதிகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. மதகுருக்கள் முறையற்ற போர் தொடுப்போராகியிருக்கின்றனர். நாள்தோறும் செய்தித்தாள்கள், பூமியின் பல்வேறு பாகங்களில் ஒன்றையொன்று எதிர்த்து சண்டையிடும் மத உட்கட்சிகளைப் பற்றிய அறிவிப்புகளை முதன்மைப்படுத்திக் காட்டுகின்றன. அவர்களுடைய கைகளில் இரத்தம் சொட்டிக்கொண்டிருக்கிறது. (ஏசாயா 1:15) உலகமெங்கும் மதகுருக்கள் அரசியல் காட்சியைப் பயன்படுத்தி காரியங்களைச் சாதித்துக்கொள்ள தொடர்ந்து முயற்சி செய்கின்றனர். உண்மையான வணக்கத்தாருக்கு இதில் ஒரு பாகமும் இல்லை.—யாக்கோபு 4:1-4.
14. (அ) உலகத்திலிருந்து பிரிந்தவர்களாக நம்மை வைத்துக்கொள்ளப் போகிறோமென்றால் நாம்தாமே எதைத் தவிர்க்க வேண்டும்? (ஆ) உலகப்பிரகாரமான மனப்பான்மைகளாலும் பழக்கச் செயல்களாலும் சிக்கவைக்கப்படுவதைத் தவிர்ப்பதற்கு எது நமக்கு உதவிசெய்யக்கூடும்?
14 ஆனால் உலகத்திலிருந்து பிரிந்திருப்பது அதைப்பார்க்கிலும் அதிகத்தை உட்படுத்துகிறது. உலகமானது, பணத்தின்மீதும் பணத்தின்மூலம் வாங்கக்கூடியவற்றின் பேரிலுமுள்ள ஆசை, தாங்கள் முதன்மைநிலையிலிருப்பதற்கான ஆசை, மற்றும் ஓயாது இன்பத்தை நாடித் தொடருதல், இவற்றோடுகூட மற்றவர்களுக்காக உண்மையான அக்கறையில்லாமை, பொய் சொல்லுதலும் திட்டுதலும், அதிகாரத்துக்கு எதிராகக் கலகம் செய்தல், தற்கட்டுப்பாடோடு இருக்கத் தவறுதல் ஆகிய தன்மைகள் நிரம்பியதாயுள்ளது. (2 தீமோத்தேயு 3:2-5; 1 யோவான் 2:15, 16) நம்முடைய சொந்த அபூரணத்தினிமித்தம் நாம் சிலசமயங்களில் ஏதோவொரு வகையில் அந்தத் தன்மைகளில் ஒன்றைப் பிரதிபலிக்கலாம். அத்தகைய கண்ணிகளைத் தவிர்ப்பதற்கான நம் போராட்டத்தில் எது நமக்கு உதவிசெய்யக்கூடும்? அந்த எல்லாவற்றிற்கும் பின்னால் இருப்பவன் யாரென நம்மைநாமே நினைப்பூட்டிக்கொள்ள வேண்டும். ‘உலகமுழுவதும் பொல்லாங்கனுக்குள் கிடக்கிறது.’ (1 யோவான் 5:19) குறிப்பிட்ட ஒரு போக்கு எவ்வளவு கவர்ச்சியூட்டியிழுப்பதாக இருந்தாலும் சரி, மற்ற ஆட்கள் எத்தனைபேர் அம்முறையில் வாழ்ந்தாலும் சரி, அதற்குப் பின்னால் யெகோவாவின் பிரதான எதிரியாகிய பிசாசான சாத்தான் இருப்பதை நாம் காண்கையில், அது உண்மையில் எவ்வளவு அருவருக்கத்தக்கதாக இருக்கிறதென்பதை உணருகிறோம்.—சங்கீதம் 97:10.
உங்கள் அன்பு எவ்வளவு தூரம் எட்டுகிறது?
15. நீங்கள் கவனித்த தன்னலமற்ற அன்பு, சரியான மதத்தை அடையாளம் கண்டுகொள்ள உங்களுக்கு எவ்வாறு உதவியது?
15 யெகோவாவின் சாட்சிகளோடு நீங்கள் கூட்டுறவுகொள்ள முதலில் தொடங்கினபோது, அவர்களுக்குள் காட்டப்பட்ட அன்பு, உலகத்தின் ஆவிக்கு நேர்மாறாக இருந்ததனால், சந்தேகமில்லாமல் உங்கள் கவனத்தைக் கவர்ந்தது. தன்னலமற்ற அன்பின்பேரில் அறிவுறுத்துவது யெகோவாவை வணங்கும் தூய்மையான வணக்கத்தை, மற்ற எல்லா வகையான வணக்கத்திலிருந்தும் வேறுபடுத்தி வைக்கிறது. யெகோவாவின் சாட்சிகள் நிச்சயமாகவே சரியான மதத்தைக் கடைப்பிடிக்கிறார்களென்று, ஒருவேளை இதுவே உங்களை நம்பவைத்திருக்கலாம். இயேசு கிறிஸ்துதாமே பின்வருமாறு கூறினார்: “நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்.”—யோவான் 13:35.
16. தனிப்பட்டவராய் நம்முடைய அன்பை விரிவாக்குவதற்கு என்ன வாய்ப்புகள் நமக்கு இருக்கலாம்?
16 அந்தப் பண்பு உங்களையும் கிறிஸ்துவின் சீஷரில் ஒருவராக அடையாளம் காட்டுகிறதா? உங்கள் அன்பைக் காட்டுவதில் நீங்கள் விரிவாக்கக்கூடிய வழிகள் இருக்கின்றனவா? சந்தேகத்திற்கிடமில்லாமல், நாம் எல்லாரும் அவ்வாறு செய்யக்கூடும். இராஜ்ய மன்றத்தில் மற்றவர்களுக்கு நட்பு காட்டுவதைப் பார்க்கிலும் அதிகம் செய்யப்பட வேண்டியிருக்கிறது. நம்மை நேசிப்போருக்கு மாத்திரமே நாம் அன்பு காட்டினால், உலகத்திலிருந்து எவ்வகையில் வேறுபடுவோம்? “எல்லாவற்றிற்கும் மேலாக ஒருவரிலொருவர் ஊக்கமான அன்புள்ளவர்களாயிருங்கள்” என்று பைபிள் ஊக்குவிக்கிறது. (1 பேதுரு 4:8) நாம் யாரிடமாக மேலுமதிக அன்பு காட்டலாம்? நம்முடையதிலிருந்து வேறுபட்ட வளர்ப்பனுபவத்தையுடையவரும் குறிப்பிட்ட காரியங்களை அவர் செய்யும் முறை நமக்கு எரிச்சலூட்டுவதுமாக இருக்கும் கிறிஸ்தவ சகோதரன் அல்லது சகோதரி ஒருவரிடமா? நோய் அல்லது முதிர்வயதின் காரணமாக கூட்டங்களுக்குத் தவறாமல் வரக்கூடாதவராக இருக்கும் ஒருவரிடமா? நம்முடைய மணத்துணைவரிடமா? அல்லது ஒருவேளை, நம்முடைய வயதான பெற்றோரிடமா? அன்பு உட்பட ஆவியின் கனிகளை வெளிப்படுத்திக் காட்டுவதில் சிறந்து விளங்கும் சிலர், எதுவும் இயலாத ஆற்றல்கெட்ட கடும் நிலைக்குள்ளாகிவிட்ட குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு ஏறக்குறைய முழு கவனிப்பும் கொடுப்பதில் எழும்பக்கூடிய மிகக் கடும் சந்தர்ப்பநிலையை எதிர்ப்பட்டபோது இவற்றையெல்லாம் மறுபடியும் கற்பதாக உணர்ந்தனர். இந்தச் சூழ்நிலைமைகளை எதிர்ப்பட்டிருக்கையிலும், நிச்சயமாகவே, நம்முடைய அன்பு நம்முடைய சொந்தக் குடும்பத்தாருக்கு அப்பாலும் சென்றெட்ட வேண்டும்.
இராஜ்ய சாட்சி பகருதல்—உங்களுக்கு எவ்வளவு முக்கியமானது?
17. யெகோவாவின் சாட்சிகளுடைய சந்திப்புகளிலிருந்து தனிப்பட்டவராக நாம் நன்மையடைந்திருந்தால், என்ன செய்யும்படியானத் தூண்டுதலை இப்பொழுது நாம் உணர வேண்டும்?
17 நம்முடைய உடனொத்த மனிதருக்கு நாம் அன்பைக் காட்டுவதில் முக்கியமான ஒரு வழியானது, கடவுளுடைய ராஜ்யத்தைப்பற்றி அவர்களுக்குச் சாட்சி பகருவதன் மூலமாகும். ஒரே ஒரு மக்கள் தொகுதியாரே இயேசு முன்னறிவித்த இந்த ஊழியத்தைச் செய்துகொண்டிருக்கின்றனர். (மாற்கு 13:10) இவர்களே யெகோவாவின் சாட்சிகள். நாம் தாமே அதால் நன்மையடைந்திருக்கிறோம். இப்பொழுது மற்றவர்களுக்கு உதவிசெய்வது நம்முடைய சிலாக்கியமாக உள்ளது. இந்தக் காரியத்தில் கடவுளுடைய கருத்தை நாம் தெரிந்துகொண்டால், இந்த ஊழியம் நம்முடைய வாழ்க்கையில் முதன்மையானதாக இருக்கும்.
18. யெகோவாவின் சாட்சிகள்—கடவுளுடைய ராஜ்யத்தை அறிவிப்போர் என்ற புத்தகத்தை நாம் வாசிப்பது, ராஜ்ய சாட்சி கொடுப்பதில் நம்முடைய சொந்த பங்கை எவ்வாறு பாதிக்கலாம்?
18 இந்தக் கடைசி நாட்களின்போது பூமியின் நெடுந்தொலைவான பாகங்களுக்கு இந்த ராஜ்ய செய்தி எவ்வாறு கொண்டுசெல்லப்பட்டிருக்கிறது என்பதைப்பற்றிய கிளர்ச்சியூட்டும் விவரம், யெகோவாவின் சாட்சிகள்—கடவுளுடைய ராஜ்யத்தை அறிவிப்போர் (Jehovah’s Witnesses—Proclaimers of God’s Kingdom) என்ற புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ளது. உங்களுக்கு ஆங்கிலம் தெரிந்திருந்தால், அதை வாசிக்கத் தவறாதீர்கள். மேலும் அவ்வாறு வாசிக்கையில், ராஜ்யத்தைப் பற்றி சாட்சி கொடுப்பதில் தனிப்பட்ட நபர்கள் பங்குகொண்டிருக்கிற எல்லா வழிகளையும் பற்றி முக்கியமாய்க் கவனியுங்கள். நீங்கள் பின்பற்றக்கூடிய முன்மாதிரிகள் சில இருக்கின்றனவா? நம்மெல்லாருக்கும் பல வாய்ப்புகள் திறந்திருக்கின்றன. யெகோவாவின்பேரிலுள்ள நம் அன்பு அவற்றை நன்றாய்ப் பயன்படுத்திக்கொள்ள நம்மைத் தூண்டியியக்குவதாக.
19. சரியான மதத்தை அறிந்துகொள்வதோடு வரும் பொறுப்பை நாம் ஏற்கையில் எவ்வாறு நன்மையடைகிறோம்?
19 யெகோவாவின் சித்தத்தைச் செய்வதற்கு இவ்வாறு நாம் நம்மைப் பயன்படுத்துகையில், வாழ்க்கையின் உட்பொருள் என்ன என்ற கேள்விக்குப் பதிலைக் கண்டடைகிறோம். (வெளிப்படுத்துதல் 4:11) நாம் இனிமேலும் தடவித் தேடிக்கொண்டில்லை, வெறுமையான உணர்ச்சியுடன் விடப்பட்டில்லை. யெகோவா தேவனின் சேவையில் உங்களை முழு இருதயத்துடன் ஈடுபடுத்துவது உங்களுக்குக் கொண்டுவருவதைப் பார்க்கிலும் அதிக மனத்திருப்தியைக் கொண்டுவரக்கூடிய வாழ்க்கைத் தொழில் எதுவும் இல்லை. மேலும் எத்தகைய மகத்தான எதிர்காலத்தை அது முன்வைக்கிறது! அவருடைய புதிய உலகத்தில் திருப்திதரும் ஒரு நித்திய வாழ்க்கை, அங்கே நாம் நம்முடைய தனிப்பட்ட திறமைகளை, கடவுள் மனிதகுலத்தைப் படைத்த அன்புள்ள நோக்கத்திற்கிசைய, முழுமையாகப் பயன்படுத்தக் கூடியோராக இருப்போம்.
[அடிக்குறிப்புகள்]
a உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸையிட்டி பிரசுரித்தது.
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
◻ ஒரு மதம் பைபிளைக் கடவுளுடைய வார்த்தையாக ஏற்று யெகோவாவை உண்மையானக் கடவுளாகக் கனப்படுத்துவது ஏன் இன்றியமையாதது?
◻ மீட்பராக இயேசுவின் பாகத்தைக் குறித்து உண்மையான மதம் என்ன கற்பிக்கிறது?
◻ கிறிஸ்தவர்கள் ஏன் உலகத்திலிருந்து பிரிந்தவர்களாகத் தங்களை வைத்துக்கொண்டு தன்னலமற்ற அன்பை நடைமுறையில் காட்ட வேண்டும்?
◻ சரியான மதத்தில் ராஜ்ய சாட்சிபகருதல் என்ன பாகத்தை வகிக்கிறது?
முழுக்காட்டுதல், உண்மையான வணக்கத்தின் பொறுப்புகளை ஏற்பதில் இன்றியமையாத ஒரு படியாகும். ஒவ்வொரு மாதமும், உலகமெங்கும் ஏறக்குறைய 25,000 பேர் இந்தப் படியை மேற்கொள்கின்றனர்
ரஷ்யா
செனிகல்
பாப்புவா நியூ கினீ
அ.ஐ.மா.
[பக்கம் 17-ன் படங்கள்]
பைபிள் சத்தியத்தை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்வது உண்மையான வணக்கத்தின் பாகமாகும்
அ.ஐ.மா.
பிரேஸில்
அ.ஐ.மா.
ஹாங் காங்