நம்பிக்கை நங்கூரமும் அன்பு விசையும்
“இப்பொழுது விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது; இவைகளில் அன்பே பெரியது.”—1 கொரிந்தியர் 13:13.
1. என்ன எச்சரிக்கையை அப்போஸ்தலன் பவுல் நமக்குக் கொடுக்கிறார்?
ஒரு கப்பலைப் போலவே நம்முடைய விசுவாசம் சேதமடைய வாய்ப்பிருக்கிறது என எச்சரிக்கிறார் அப்போஸ்தலன் பவுல். “விசுவாசமும் நல்மனச்சாட்சியும் உடையவனாயிரு. இந்த நல்மனச்சாட்சியைச் சிலர் தள்ளிவிட்டு, விசுவாசமாகிய கப்பலைச் சேதப்படுத்தினார்கள்” என்று அவர் சொல்கிறார். (1 தீமோத்தேயு 1:19) பொ.ச. முதல் நூற்றாண்டில், கப்பல்கள் உறுதியான மரத்தால் கட்டப்பட்டிருந்தன. மரத்தின் தரத்தையும் கட்டப்பட்டிருந்த விதத்தையும் பொறுத்தே அவை சேதமடையாமல் பயணித்தன.
2. நம்முடைய விசுவாசக் கப்பல் ஏன் நன்றாய்க் கட்டப்பட்டிருக்க வேண்டும், இதற்கு நம் பங்கில் என்ன தேவை?
2 நம்முடைய விசுவாசக் கப்பல் மனித சமுதாயத்தின் கொந்தளிக்கும் ஆழ்கடலில் மூழ்காமல் தொடர்ந்து மிதக்க வேண்டும். (ஏசாயா 57:20; வெளிப்படுத்துதல் 17:15) ஆகவே அது நல்ல முறையில் கட்டப்பட்டிருக்க வேண்டும், இது நம் கையிலேயே இருக்கிறது. யூத மற்றும் ரோம சமுதாயத்தின் “கடல்கள்,” முக்கியமாய் பூர்வக் கிறிஸ்தவர்களுக்கு, கொந்தளிக்கும் பேரலையாக எழும்பியபோது யூதா இவ்வாறு எழுதினார்: “நீங்களோ பிரியமானவர்களே, உங்கள் மகா பரிசுத்தமான விசுவாசத்தின்மேல் உங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, பரிசுத்த ஆவிக்குள் ஜெபம்பண்ணி, தேவனுடைய அன்பிலே உங்களைக் காத்துக்கொண்டு, நித்திய ஜீவனுக்கேதுவாக நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினுடைய இரக்கத்தைப் பெறக் காத்திருங்கள்.” (யூதா 20, 21) ‘பரிசுத்தவான்களுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசத்திற்காகப்’ போராடுவதைப் பற்றியும் யூதா பேசினதால், ‘மகா பரிசுத்தமான விசுவாசம்’ என்ற இந்தச் சொற்றொடர், இரட்சிப்பின் நற்செய்தி உட்பட, கிறிஸ்தவ போதகங்கள் அனைத்தையும் குறிக்கலாம். (யூதா 3) கிறிஸ்துவே அந்த விசுவாசத்தின் அஸ்திவாரம். உண்மையான கிறிஸ்தவத்தை நாம் விடாமல் பற்றியிருக்க உறுதியான விசுவாசம் தேவை.
“ஆபத்தான கும்பல்” புயலை சமாளித்து கரையேறுதல்
3. “ஆபத்தான கும்பல்” என்பதை சிலர் எவ்வாறு பயன்படுத்துகிறார்கள்?
3 சமீப ஆண்டுகளில், ஒட்டுமொத்த தற்கொலைகள், கொலைகள், தீவிரவாத கும்பல்களின் தாக்குதல்கள் போன்ற கதிகலங்க வைக்கும் சம்பவங்கள் பல நடந்திருக்கின்றன. நேர்மை வாய்ந்த அரசியல் தலைவர்கள் உட்பட பலர், அப்பாவி மக்களை, முக்கியமாய் இளைஞர்களை, அத்தகைய பயங்கர கும்பல்களிலிருந்து பாதுகாக்க அக்கறை காண்பித்து வந்திருக்கின்றனர். சந்தேகமில்லாமல், இந்த ஆபத்தான கும்பல் செய்யும் குற்றச் செயல்களுக்குக் காரணம், “இந்தக் காரிய ஒழுங்குமுறையின் கடவுள்.” ஆனால் அந்தப் பழியை யெகோவாவின் சாட்சிகளின் மேல் சுமத்தி அவர்கள் ஆபத்தான கும்பலைச் சேர்ந்தவர்கள் என்ற வதந்தியை இவன் பரப்பியிருக்கிறான். (2 கொரிந்தியர் 4:4, NW; வெளிப்படுத்துதல் 12:12) நம்முடைய ஊழியத்திற்கு எதிர்ப்பைத் தூண்டிவிடுவதற்கு, சிலர் இதை பயன்படுத்திக் கொண்டனர். சில நாடுகளில், ‘ஆபத்தான கும்பலிடமிருந்து’ ஜனங்களைப் பாதுகாக்கும் நோக்கத்தோடு செய்வதுபோல் இதை செய்திருக்கின்றனர். இவ்வாறு நம்மை மறைமுகமாக குற்றம் சாட்டியிருக்கின்றனர். இது, ஐரோப்பிய நாடுகள் சிலவற்றில், வீட்டுக்குவீடு ஊழியத்தை கடினமாக்கியுள்ளது. மேலும் நம்மிடம் பைபிள் படித்துக்கொண்டிருந்த சிலர், தங்கள் படிப்பை நிறுத்திக்கொண்டனர். இதனால் நம்முடைய சகோதரர்கள் சிலர் சோர்வடைந்து பின்வாங்கியிருக்கின்றனர்.
4. எதிர்ப்பு வருகையில் நாம் ஏன் சோர்வடைந்து விடக்கூடாது?
4 எனினும், எதிர்ப்பு நம்மை சோர்வடைய செய்யாமல், நாம் உண்மையான கிறிஸ்தவத்தைக் கடைப்பிடிக்கிறோம் என்ற நம் நம்பிக்கையைப் பலப்படுத்த வேண்டும். (மத்தேயு 5:11, 12) பூர்வ கிறிஸ்தவர்கள், அரசாங்கத்திற்கு விரோதமான கலகக்கார கும்பல் என குற்றம்சாட்டப்பட்டு, எல்லா இடங்களிலும் ‘விரோதமாகப் பேசப்பட்டார்கள்.’ (அப்போஸ்தலர் 24:5; 28:22) ஆனால், அப்போஸ்தலன் பேதுரு, பின்வருமாறு எழுதி, தன் உடன் விசுவாசிகளின் நம்பிக்கையை உறுதிப்படுத்தினார்: “பிரியமானவர்களே, உங்களைச் சோதிக்கும்படி உங்கள் நடுவில் பற்றியெரிகிற அக்கினியைக் குறித்து ஏதோ புதுமையென்று திகையாமல், கிறிஸ்துவின் மகிமை வெளிப்படும்போது நீங்கள் களிகூர்ந்து மகிழும்படியாக அவருடைய பாடுகளுக்கு நீங்கள் பங்காளிகளானதால் சந்தோஷப்படுங்கள்.” (1 பேதுரு 4:12, 13) இவ்வாறே, முதல் நூற்றாண்டு ஆளும் குழுவின் உறுப்பினர் ஒருவரும் எழுதினார்: “என் சகோதரரே, நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது, உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை [“சகிப்புத்தன்மையை,” NW] உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள். நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இருக்கும்படி, பொறுமையானது [“சகிப்புத்தன்மையானது,” NW] பூரண கிரியை செய்யக்கடவது.” (யாக்கோபு 1:2-4) ஒரு கப்பலின் உறுதித்தன்மையை வேகமாய் வீசும் புயற்காற்றுகள் சோதனை செய்வதுபோல், எதிர்ப்பின் புயல்கள் நம் விசுவாச கப்பலின் பலவீனங்களை வெளிப்படுத்தும்.
உபத்திரவம் சகிப்புத்தன்மையை உண்டாக்குகிறது
5. உபத்திரவங்கள் வருகையில் நம்முடைய விசுவாசம் உறுதியாக நிலைத்திருக்கிறதென்று நாம் எவ்வாறு நிச்சயமாயிருக்கலாம்?
5 உபத்திரவமெனும் சூறாவளியை சந்தித்த பின்பே, கிறிஸ்தவர்கள் தங்கள் சகிப்புத்தன்மையையும், தங்கள் விசுவாசத்தின் உறுதியையும் பற்றி நிச்சயமாயிருக்க முடியும். உறுதியான விசுவாசம் உட்பட, நாம் “ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும்” இருந்தால் மாத்திரமே, கொந்தளிக்கும் கடல்களில் நம்முடைய சகிப்புத்தன்மை ‘பூரண கிரியை செய்யும்.’ பவுல் இவ்வாறு எழுதினார்: “எவ்விதத்தினாலேயும், எங்களை தேவ ஊழியக்காரராக விளங்கப்பண்ணுகிறோம். மிகுந்த பொறுமையிலும், உபத்திரவங்களிலும், நெருக்கங்களிலும், இடுக்கண்களிலும் [எங்களை விளங்கப்பண்ணுகிறோம்].”—2 கொரிந்தியர் 6:3, 4.
6. நாம் ஏன் ‘துன்பங்களில் பெருமகிழ்ச்சிகொள்ள’ வேண்டும், இது எவ்வாறு நம்முடைய நம்பிக்கையைப் பலப்படுத்துகிறது?
6 சில சமயங்களில் நாம் உபத்திரவமெனும் சூறாவளியில் சிக்கும்போது, நம்முடைய விசுவாச கப்பல் பழுதற்றதாயும் உறுதியாயும் இருப்பதை நிரூபிக்க நமக்கு கிடைத்த நல்வாய்ப்பாக அவற்றை கருத வேண்டும். ரோமிலிருந்த கிறிஸ்தவர்களுக்கு பவுல் இவ்வாறு எழுதினார்: “துன்பங்களில் பெருமகிழ்ச்சி கொள்வோமாக. ஏனெனில், துன்பம் சகிப்புத்தன்மையையும், சகிப்புத்தன்மை அங்கீகரிக்கப்பட்ட நிலையையும், அங்கீகரிக்கப்பட்ட நிலை நம்பிக்கையையும் உருவாக்கும். இந்நம்பிக்கை ஏமாற்றாது.” (ரோமர் 5:3-5, NW) துன்பத்தில் உறுதியாய் நிலைத்திருப்பது யெகோவாவின் அங்கீகாரத்தைக் கொண்டுவருகிறது. அதோடு நம் நம்பிக்கையையும் பலப்படுத்துகிறது.
சிலரது கப்பல் சேதமடைய காரணம்
7. (அ) பவுலின் வார்த்தைகள் காட்டுகிறபடி, எவ்வாறு சிலருக்கு ஆவிக்குரிய கப்பற்சேதம் ஏற்பட்டிருந்தது? (ஆ) எவ்வாறு இன்று சிலர் சத்தியத்தை விட்டு விலகியிருக்கிறார்கள்?
7 ‘கப்பற்சேதம்’ ஏற்படுவதைக் குறித்து பவுல் எச்சரித்தபோது, தங்கள் நல்மனச்சாட்சியைத் ‘தள்ளிவிட்டு,’ தங்கள் விசுவாசத்தை இழந்திருந்த சிலரை மனதில் வைத்திருந்தார். (1 தீமோத்தேயு 1:19) இமெனேயும் அலெக்சந்தரும் அத்தகையோரே. இவர்கள் விசுவாச துரோகிகளாகி சத்தியத்தை விட்டு விலகி, தூஷணமாய் பேசினார்கள். (1 தீமோத்தேயு 1:20, NW அடிக்குறிப்பு; 2 தீமோத்தேயு 2:17, 18) இன்றும்கூட, சத்தியத்தை விட்டு விலகிய விசுவாச துரோகிகள், “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” வகுப்பாரை, பட்டயம்போன்ற வார்த்தைகளால் குத்துகின்றனர். சொல்லப்போனால், தங்களுக்கு ஆவிக்குரிய உணவளித்த கையை நன்றியில்லாமல் கடிக்கிறார்கள். மேலும் “என் ஆண்டவர் வர நாள் செல்லும்” என்று சொன்ன ‘பொல்லாத அடிமைக்கு’ ஒப்பாக சிலருடைய சொல்லும் செயலும் இருக்கிறது. (மத்தேயு 24:44-49; 2 தீமோத்தேயு 4:14, 15) இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவு சமீபித்திருக்கிறது என்பதை அவர்கள் மறுக்கிறார்கள். மேலும், யெகோவாவின் ஜனங்களில் அவசர உணர்வைக் காத்துவரும், ஆவிக்குரிய விழிப்புள்ள அடிமை வகுப்பாரை குற்றம் சொல்கின்றனர். (ஏசாயா 1:3) இத்தகைய விசுவாசதுரோகிகள், ‘சிலருடைய விசுவாசத்தைக் கவிழ்த்து,’ ஆவிக்குரிய கப்பற்சேதம் உண்டாகக் காரணமாகின்றனர்.—2 தீமோத்தேயு 2:18.
8. எதனால் சிலரது விசுவாசக் கப்பல் சேதமாகியோ மூழ்கியோ போய்விட்டது?
8 ஒப்புக்கொடுத்த கிறிஸ்தவர்கள் சிலர், தங்கள் மனசாட்சியை ஓரங்கட்டிவிட்டு, இந்த உலகத்தின் கட்டுப்பாடற்ற களியாட்டங்களிலும், அதன் பாலுறவு ஒழுக்கக்கேட்டிலும் மதிமயங்கி, தங்கள் விசுவாசக் கப்பலை தாங்களே சேதப்படுத்திக் கொண்டனர். (2 பேதுரு 2:20-22) இன்னும் சிலருடைய கண்ணுக்கு, புதிய காரிய ஒழுங்குமுறை எனும் துறைமுகம் அடிவானத்தில் தென்படாததால் தங்கள் விசுவாசக் கப்பலை மூழ்கடித்திருக்கின்றனர். சில தீர்க்கதரிசனங்கள் எப்போது நிறைவேறும் என்று கணிக்க முடியாமல், ‘யெகோவாவின் நாளை’ தங்கள் மனதிலிருந்து விலக்கி, உண்மையான வணக்கத்தை விட்டு விலகியிருக்கின்றனர். (2 பேதுரு 3:10-13; 1 பேதுரு 1:9) ஆக, இந்தத் தற்போதைய காரிய ஒழுங்குமுறையின் கலங்கிய, கொந்தளிக்கும் கடலில் மீண்டும் மாட்டிக்கொள்கின்றனர். (ஏசாயா 17:12, 13; 57:20) கிறிஸ்தவ சபையுடன் கூட்டுறவு கொள்வதை நிறுத்திக்கொண்ட சிலருக்கு, அது உண்மை மதம்தான் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. என்றாலும் யெகோவா வாக்கு கொடுத்துள்ள புதிய உலகம் வரும்வரை காத்திருக்க அவர்களுக்குப் பொறுமையும் சகிப்புத்தன்மையும் இல்லை என்பது தெளிவு. அவர்கள் விரும்பிய நேரத்தில் பரதீஸ் வராததே அவர்களுக்குப் பிரச்சினை.
9. ஒப்புக்கொடுத்த கிறிஸ்தவர்கள் சிலர் என்ன செய்கிறார்கள், இந்த உண்மைகள் எதைச் சிந்திக்கும்படி நம்மை வழிநடத்த வேண்டும்?
9 உலகத்தின் சில பாகங்களில் உள்ள ஒப்புக்கொடுத்த கிறிஸ்தவர்கள் சிலர், ‘கரையை’ காணும் முன்பே தங்கள் விசுவாசக் கப்பலின் பாய்களை சுருட்டி வைத்துவிட்டதாக தோன்றுகிறது. கப்பல் மிதப்பதென்னவோ உண்மைதான்; ஆனால் முழு விசுவாசத்துடன் நன்கு முன்னேறுவதற்குப் பதிலாக, ஊர்ந்து செல்லும்படி வேகத்தைக் குறைத்திருக்கிறார்கள். சிலர், “விரைவில் பரதீஸ்” என்ற நம்பிக்கையால் கவர்ந்திழுக்கப்பட்டு அதை அடைவதற்கு எல்லா முயற்சிகளையும் செய்ய ஆயத்தமாக இருந்தார்கள்—பிரசங்க ஊழியத்தில் ஆர்வமாய் இருந்தார்கள், எல்லா கூட்டங்களுக்கும், எல்லா மாநாடுகளுக்கும் தவறாமல் சென்றார்கள். இப்போதோ, தாங்கள் எதிர்பார்த்தபடி நம்பிக்கை நிறைவேறாமல், இன்னும் அதிக தொலைவில் இருப்பதாக அவர்களுக்கு தோன்றுகிறது. இதனால் இவர்கள் ஊழியத்திலும், கூட்டங்களிலும் ஒழுங்காக பங்குபெறுவதில்லை. மாநாட்டு நிகழ்ச்சிநிரல்களையும் தவறவிட்டு விடுகிறார்கள். மற்றும் சிலர், உல்லாச வாழ்க்கைக்கும், ஆடம்பரப் பொருள்களை வாங்குவதற்காக சம்பாதிப்பதிலுமே அதிக நேரத்தைச் செலவிடுகிறார்கள். இந்த உண்மைகள், யெகோவாவுக்கு நம்மை ஒப்புக்கொடுத்ததற்கு இசைவாக நம் வாழ்க்கையில் நம்மை உந்துவிக்கும் சக்தி என்னவாக இருக்க வேண்டும் என்பதைச் சிந்திக்க வைக்கின்றன. அவருடைய சேவையில் நமக்கு இருக்கும் ஆர்வம், “விரைவில் பரதீஸ்” என்ற நம்பிக்கையில் சார்ந்திருக்க வேண்டுமா?
நங்கூரம்போல் நம்பிக்கை
10, 11. நம்முடைய நம்பிக்கையை பவுல் எதற்கு ஒப்பிட்டார், இது எப்படி பொருத்தமாக இருந்தது?
10 ஆசீர்வாதங்கள் ஆபிரகாமின் மூலமாக வரும் என்ற யெகோவாவின் வாக்கை பவுல் நினைவுகூர்ந்தார். பின்பு அவர்: “தேவனும் . . . தமது ஆலோசனையின் மாறாத நிச்சயத்தைப் பரிபூரணமாய்க் காண்பிக்கும்படி சித்தமுள்ளவராய், ஓர் ஆணையினாலே அதை ஸ்திரப்படுத்தினார். நமக்கு முன் வைக்கப்பட்ட நம்பிக்கையைப் பற்றிக்கொள்ளும்படி அடைக்கலமாய் ஓடிவந்த நமக்கு இரண்டு மாறாத விசேஷங்களினால் [அவருடைய வார்த்தையும் அவருடைய ஆணையும்] நிறைந்த ஆறுதல் உண்டாகும்படிக்கு எவ்வளவேனும் பொய்யுரையாத தேவன் அப்படிச் செய்தார். அந்த நம்பிக்கை நமக்கு நிலையும் உறுதியும் திரைக்குள்ளாகப் போகிறதுமான ஆத்தும நங்கூரமாயிருக்கிறது.” (எபிரெயர் 6:17-19; ஆதியாகமம் 22:16-18) அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு முன்பாக வைக்கப்படும் இந்த நம்பிக்கை, பரலோகத்தில் சாவாமையுடைய வாழ்க்கை. இன்று, யெகோவாவின் ஊழியர்களில் பெரும்பாலானோருக்கு, பரதீஸான பூமியில் நித்தியமாய் வாழும் சிறந்த நம்பிக்கை இருக்கிறது. (லூக்கா 23:43) அந்த நம்பிக்கை இல்லாமல், ஒருவருக்கு விசுவாசம் இருக்க முடியாது.
11 நங்கூரம்—வலிமைமிக்க ஒரு பாதுகாப்பு கருவி; கப்பல் நகர்ந்துவிடாதபடி அதன் இடத்தில் அதை உறுதியாய் பிடித்து வைப்பதற்கு இது இன்றியமையாதது. எந்தவொரு மாலுமியும் நங்கூரம் இல்லாமல் துணிச்சலுடன் கப்பலை கடலுக்குள் செலுத்த மாட்டார். பவுலுக்கு பல தடவை கப்பற்சேதம் ஏற்பட்டிருந்ததால், மாலுமிகளின் உயிர்கள், அவர்களுடைய கப்பல்களின் நங்கூரங்களின்மீதே பெரும்பாலும் சார்ந்திருந்ததை அறிந்திருந்தார். (அப்போஸ்தலர் 27:29, 39, 40; 2 கொரிந்தியர் 11:25) முதல் நூற்றாண்டில், மாலுமி தன் விருப்பப்படி கப்பலை இயக்குவதற்கு, கப்பலில் இயந்திர வசதியில்லை. துடுப்பினால் ஓட்டப்பட்ட போர்க் கப்பல்களைத் தவிர, மற்றவை முக்கியமாய் காற்றையே நம்பியிருந்தன. சிலசமயம் கடுமையான காற்று வீசி, கப்பல் கற்பாறைகளில் மோதிவிடும் ஆபத்தில் சிக்கினால், அதிலிருந்து பாதுகாக்க, மாலுமிக்கு இருந்த ஒரே வழி நங்கூரம் பாய்ச்சுவதே. கடல் தரையில் அந்த நங்கூரம் அதன் பிடியை விடாது உறுதியாக பிடித்துக்கொள்ளும் என்ற நம்பிக்கையிலிருக்கும் மாலுமி, இவ்வாறு புயல்காற்றிலிருந்து தப்பித்துக்கொள்வார்.ஆகையால் பவுல், கிறிஸ்தவர்களின் நம்பிக்கையை ‘நிலையும் உறுதியுமான . . . ஆத்தும நங்கூரம்’ என குறிப்பிட்டார். (எபிரெயர் 6:19) எதிர்ப்பின் புயல்களால் நாம் தாக்கப்படுகையில் அல்லது வேறு இக்கட்டுகளை அனுபவிக்கையில், நம்முடைய அருமையான நம்பிக்கை, ஒரு நங்கூரத்தைப்போல், உயிருள்ள ஆத்துமாக்களாகிய நம்மை பாதுகாக்கிறது. நம்முடைய விசுவாசக் கப்பல், சந்தேகம் எனும் நீருக்குள் மறைந்து காணப்படும் மணல்திட்டுகளை அல்லது விசுவாசதுரோகம் எனும் பேரழிவுண்டாக்குகிற பாறைகளை நோக்கி சென்றுவிடாதபடி அது பார்த்துக்கொள்கிறது.—எபிரெயர் 2:1; யூதா 8-13; NW.
12. யெகோவாவிடமிருந்து விலகிச் செல்வதை நாம் எவ்வாறு தவிர்க்கலாம்?
12 பவுல் எபிரெய கிறிஸ்தவர்களை இவ்வாறு எச்சரித்தார்: “சகோதரரே, ஜீவனுள்ள தேவனைவிட்டு விலகுவதற்கேதுவான அவிசுவாசமுள்ள பொல்லாத இருதயம் உங்களில் ஒருவனுக்குள்ளும் இராதபடிக்கு நீங்கள் எச்சரிக்கையாயிருங்கள்.” (எபிரேயர் 3:12) கிரேக்க மூலவாக்கியத்தில், ‘விலகுவது’ என்பது, சொல்லர்த்தமாய் ‘ஒதுங்கி நிற்பதை’ அதாவது, விசுவாசதுரோகம் செய்வதை அர்த்தப்படுத்துகிறது. ஆனால், அத்தகைய பயங்கர கப்பற்சேதத்தை நாம் தவிர்க்கலாம். சோதனையின் மிகக் கடும் புயல்களின்போதும், விசுவாசமும் நம்பிக்கையும் யெகோவாவைவிட்டு விலகாமலிருக்க நமக்கு உதவிசெய்யும். (உபாகமம் 4:4; 30:19, 20) விசுவாசதுரோக போதகத்தின் புயல்காற்றுகளால் அலைக்கழிக்கப்படும் ஒரு கப்பலைப்போல், நம்முடைய விசுவாசம் இராது. (எபேசியர் 4:11, 14) மேலும் யெகோவாவின் ஊழியர்களாக, நம்பிக்கையெனும் நங்கூரம் கொண்டவர்களாய் வாழ்க்கையின் புயல்களைச் சமாளிப்போம்.
அன்பினாலும் பரிசுத்த ஆவியினாலும் தூண்டி இயக்குவிக்கப்படுதல்
13, 14. (அ) நம்முடைய நம்பிக்கையாகிய நங்கூரம் மட்டுமே ஏன் போதுமானதல்ல? (ஆ) யெகோவாவுக்குப் பரிசுத்த சேவை செய்வதில் நம் உள்நோக்கம் என்னவாக இருக்க வேண்டும், ஏன்?
13 பரதீஸில் என்றும் வாழும் நம்பிக்கையையே குறியாகக்கொண்டு ஒரு கிறிஸ்தவன் யெகோவாவை சேவித்தால், புதிய ஒழுங்குமுறையை நோக்கி அவன் முன்னேறமாட்டான். நம்பிக்கையின் நங்கூரத்தைத் தன் வாழ்க்கையில் ஒரு பிடிமானமாக வைத்திருக்க வேண்டும். அதேசமயத்தில், அந்த நம்பிக்கையையும் விசுவாசத்தையும் அன்பின் தூண்டி இயக்கும் சக்தியால் மெருகூட்ட வேண்டும். பவுல் பின்வருமாறு எழுதினபோது இந்த உண்மையை அறிவுறுத்தினார்: “இப்பொழுது விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் நிலைத்திருக்கிறது; இவைகளில் அன்பே பெரியது.”—1 கொரிந்தியர் 13:13.
14 யெகோவாவின் மீதுள்ள இருதயப்பூர்வ அன்பே அவருக்கு பரிசுத்த சேவை செய்ய நம்மை தூண்ட வேண்டும். யெகோவா நம்மீது காண்பித்திருக்கும் அளவிடமுடியாத அன்புக்கு இவ்வாறு பிரதிபலன் காட்ட வேண்டும். அப்போஸ்தலன் யோவான் எழுதினார்: “அன்பில்லாதவன் தேவனை அறியான், தேவன் அன்பாகவே இருக்கிறார். தம்முடைய ஒரேபேறான குமாரனாலே நாம் பிழைக்கும்படிக்கு தேவன் அவரை இவ்வுலகத்திலே அனுப்பினதினால் தேவன் நம்மேல் வைத்த அன்பு வெளிப்பட்டது. அவர் முந்தி நம்மிடத்தில் அன்பு கூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்புகூருகிறோம்.” (1 யோவான் 4:8, 9, 19) இரட்சிப்பைப் பெறுவதே நமது ஒரே குறியாக இருக்கக்கூடாது. மாறாக கடவுளுடைய பெயர் பரிசுத்தமாக்கப்படுவதையும், அவருடைய நீதியுள்ள அரசாட்சியின் நியாயம் நிரூபிக்கப்படுவதையும் காண்பதே நமது அக்கறையாக இருக்க வேண்டும். இதுவே, நம்மை யெகோவாவுக்கு நன்றியுள்ளவர்களாகக் காட்டும்.
15. யெகோவாவின்மீதான நம்முடைய அன்பு எவ்வாறு அவருடைய அரசாட்சியோடு சம்பந்தப்பட்டிருக்கிறது?
15 யெகோவாவின் விருப்பம் நாம் அவரை நேசிப்பதன் காரணமாக சேவிக்க வேண்டும் என்பதே. பரதீஸிய வாழ்க்கைக்காக அல்ல, பைபிள் என்ஸைக்ளோப்பீடியாவாகிய வேதவாக்கியங்களின்பேரில் உட்பார்வை a (ஆங்கிலம்) புத்தகம் இவ்வாறு கூறுகிறது: “யெகோவாவின் அரசாட்சியும் அவருடைய சிருஷ்டிகள் அதை ஆதரிப்பதும், முக்கியமாய் அன்பையே ஆதாரமாக கொண்டிருப்பதால் அவர் பெருமிதங்கொள்கிறார். அவருடைய சிறந்த பண்புகளினிமித்தமாகவும் அவருடைய அரசாட்சி நீதியுள்ளதாக இருப்பதினிமித்தமாகவும் அந்த அரசாட்சியை நேசிப்பவர்களையும், எல்லாவற்றிற்கும் மேலாக அந்த அரசாட்சியையே விரும்பி தெரிந்து கொள்ளுகிறவர்களையும் மாத்திரமே அவர் விரும்புகிறார். (1கொ 2:9) அவர்கள் சுதந்தரமாக இருக்க முயற்சி செய்வதற்கு மாறாக, அவருடைய அரசாட்சியின்கீழ் சேவிப்பதையே தெரிந்துகொள்ளுகிறார்கள்—அவரைப் பற்றியும், அவருடைய அன்பையும் நீதியையும் ஞானத்தையும் பற்றியும் அவர்களுக்கு இருக்கும் அறிவின் காரணமாக இவ்வாறு செய்கிறார்கள். அவருடைய இந்த குணங்களே தங்களுடையதைவிட ஒப்பற்றவை என உணருகிறார்கள். (சங் 84:10, 11)”—தொகுதி 2, பக்கம் 275.
16. இயேசுவின்மீதான அன்பு எவ்வாறு நம்முடைய வாழ்க்கையில் தூண்டி இயக்கும் சக்தியாக இருக்கிறது?
16 கிறிஸ்தவர்களாக, இயேசு நமக்குக் காட்டிய அன்புக்கு பிரதிபலனாக நாமும் அவரிடம் அன்புகாட்டுகிறோம். பவுல் இவ்வாறு காரணம் சொல்லி விளக்கினார்: “கிறிஸ்துவினுடைய அன்பு எங்களை நெருக்கி ஏவுகிறது; ஏனென்றால், எல்லாருக்காகவும் ஒருவரே மரித்திருக்க, எல்லாரும் மரித்தார்கள் என்றும்; பிழைத்திருக்கிறவர்கள் இனித் தங்களுக்கென்று பிழைத்திராமல், தங்களுக்காக மரித்து எழுந்தவருக்கென்று பிழைத்திருக்கும்படி, அவர் எல்லாருக்காகவும் மரித்தாரென்றும் நிதானிக்கிறோம்.” (2 கொரிந்தியர் 5:14, 15) கிறிஸ்துவே அஸ்திவாரமாக இருக்கிறார், அவர்மீதே நம்முடைய ஆவிக்குரிய வாழ்க்கையும், நம்முடைய விசுவாசமும், நம்முடைய நம்பிக்கையும் கட்டப்படுகின்றன. கிறிஸ்து இயேசுவின்மீதான நம் அன்பு, நம்முடைய நம்பிக்கையை உறுதிப்படுத்தி, நம் விசுவாசத்தைத் திடமாக்குகிறது; முக்கியமாய் புயல்போன்ற கடும் சோதனையின்போது அவ்வாறு செய்கிறது.—1 கொரிந்தியர் 3:11; கொலோசெயர் 1:22, 23; 2:6, 7.
17. என்ன வலிமைவாய்ந்த சக்தியை யெகோவா நமக்கு அளிக்கிறார், அதன் முக்கியத்துவம் அப்போஸ்தலர் 1:8-லும் எபேசியர் 3:16-லும் எவ்வாறு காட்டப்பட்டிருக்கிறது?
17 கடவுள்மீதும் அவருடைய குமாரன்மீதுமுள்ள நம்முடைய அன்பு, கிறிஸ்தவர்களாக நம் வாழ்க்கையில் தூண்டி இயக்கும் முக்கியமான சக்தி. அதேசமயத்தில் அவருடைய சேவையில் முன்னேற நம்மை உந்துவித்து பலப்படுத்துகிற வேறொன்றையும் யெகோவா நமக்குத் தருகிறார். அதுவே அவருடைய செயல்படும் சக்தி, அல்லது பரிசுத்த ஆவியாகும். “ஆவி” என்று மொழிபெயர்க்கப்பட்ட எபிரெய மற்றும் கிரேக்கச் சொற்கள், அடிப்படையில், பலமாக வீசும் காற்றை குறிப்பிடுகின்றன. பவுல் பயணித்ததைப் போன்ற பாய்மரக் கப்பல்கள், அவை போகவேண்டிய இடத்திற்குப் போய்ச் சேர, காற்றின் காணக்கூடாத சக்தியின்மீதே சார்ந்திருந்தன. அவ்வாறே, நம்முடைய விசுவாசக் கப்பல் யெகோவாவின் சேவையில் நம்மை முன்னோக்கி கொண்டுசெல்ல வேண்டுமாகில், அன்பும் கடவுளுடைய காணக்கூடாத செயல்படும் சக்தியும் நமக்குத் தேவை.—அப்போஸ்தலர் 1:8; எபேசியர் 3:16.
நம் இலக்கை நோக்கி முன்னேறுதல்
18. எதிர்காலத்தில் நமக்கு விசுவாச சோதனைகள் ஏதாவது நேர்ந்தால் அவற்றை சகித்து நிலைத்திருப்பதற்கு எது நமக்கு உதவிசெய்யும்?
18 புதிய காரிய ஒழுங்குமுறைக்கு நாம் போய்ச் சேருவதற்கு முன்பாக, நம்முடைய விசுவாசமும் அன்பும் கடுமையாய் சோதிக்கப்படலாம். ஆனால், ‘நிலையும் உறுதியுமான’ ஒரு நங்கூரத்தை—அருமையான நம்பிக்கையை—யெகோவா நமக்கு அளித்திருக்கிறார். (எபிரெயர் 6:19; ரோமர் 15:4, 13) எதிர்ப்பு அல்லது மற்ற இக்கட்டுகளினால் நாம் தாக்கப்படுகையில், நம்முடைய நம்பிக்கையின்மூலம் பாதுகாப்புடன் நங்கூரமிடப்பட்டிருந்தால், சகித்து நிலைத்திருக்க முடியும். ஒரு புயல் ஓய்ந்து அடுத்தது ஆரம்பிக்குமுன், மேன்மேலும் நம்முடைய நம்பிக்கையை பலப்படுத்தவும், விசுவாசத்தை உறுதியாக்கவும் தீர்மானித்திருப்போமாக.
19. நாம் கடவுளுடைய புதிய உலகமாகிய துறைமுகத்தை அடையும்வரை, எவ்வாறு நம் விசுவாசக் கப்பலை அதன் பாதையில் செலுத்தலாம்?
19 ‘ஆத்தும நங்கூரத்தை’ குறிப்பிடுவதற்கு முன்னால் பவுல் சொன்னார்: “உங்களுக்கு நன்னம்பிக்கையின் பூரண நிச்சயம் உண்டாகும்படி உங்களில் ஒவ்வொருவரும் முடிவுபரியந்தம் அப்படியே உற்சாகத்தைக் காண்பிக்க [“வேகத்தை அதிகரிக்க,” NW அடிக்குறிப்பு] வேண்டுமென்று ஆசையாயிருக்கிறோம். நீங்கள் அசதியுள்ளவர்களாகாமல் விசுவாசத்தினாலும் நீடிய பொறுமையினாலும் வாக்குத்தத்தங்களைச் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களைப் பின்பற்றுகிறவர்களாக வேண்டுமென்றிருக்கிறோம்.” (எபிரெயர் 6:11, 12, தி.மொ.) நாம் கடவுள் வாக்குக்கொடுத்திருக்கும் புதிய உலகமாகிய துறைமுகத்தை அடையும்வரை, யெகோவாமீதும் அவருடைய குமாரன்மீதுமுள்ள அன்பினால் தூண்டி இயக்குவிக்கப்பட்டு, பரிசுத்த ஆவியினால் பலப்படுத்தப்பட்டு, நம்முடைய விசுவாசக் கப்பலை அதன் பாதையில் செலுத்துவோமாக.
[அடிக்குறிப்புகள்]
a உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டியால் பிரசுரிக்கப்பட்டது.
உங்கள் உள்ளத்திலிருந்து
◻ நம்முடைய விசுவாசத்தைக் குறித்து, பவுல் நமக்கு என்ன எச்சரிக்கை கொடுத்திருக்கிறார்?
◻ சிலருக்கு ஆவிக்குரிய கப்பற்சேதம் எவ்வாறு ஏற்பட்டிருக்கிறது, மற்றும் சிலர் எவ்வாறு படிப்படியாய்ப் பின்னடைகிறார்கள்?
◻ தேவபக்திக்குரிய என்ன பண்பு நம் விசுவாசத்துடன் இணைந்திருக்க வேண்டும்?
◻ கடவுள் வாக்கு கொடுத்திருக்கிற புதிய உலக துறைமுகத்தை அடைய எது நமக்கு உதவிசெய்யும்?
[பக்கம் 16-ன் படம்]
வாழ்க்கைப் புயல்களைத் தாங்கி நிற்பதற்கு, நம்முடைய விசுவாசக் கப்பல் உறுதியாக கட்டப்பட்டிருக்க வேண்டும்
[பக்கம் 17-ன் படம்]
நம்முடைய விசுவாசக் கப்பல் சேதமடைய வாய்ப்பிருக்கிறது
[பக்கம் 18-ன் படம்]
நம்பிக்கை, கிறிஸ்தவர்களின் வாழ்க்கைக்கு நங்கூரம்