யெகோவா தரும் விடுதலையே உண்மையான விடுதலை
‘விடுதலை அளிக்கும் பரிபூரணமான சட்டத்தைக் கூர்ந்து கவனியுங்கள்.’—யாக். 1:25.
உங்கள் பதில்?
எந்தச் சட்டம் உண்மையான விடுதலையை அளிக்கிறது, அதிலிருந்து யாரெல்லாம் பயனடைகிறார்கள்?
உண்மையான விடுதலையைப் பெற நாம் என்ன செய்ய வேண்டும்?
வாழ்வளிக்கும் பாதையில் பயணிக்கிறவர்களுக்கு எப்படிப்பட்ட விடுதலை கிடைக்கும்?
1, 2. (அ) இன்று மக்கள் உண்மையிலேயே சுதந்திரமாக இருக்கிறார்களா, ஏன்? (ஆ) சீக்கிரத்தில் யெகோவாவின் மக்கள் எப்படிப்பட்ட விடுதலையைப் பெறுவார்கள்?
இன்றைக்குத் திரும்பிய பக்கமெல்லாம் பேராசையும், சட்ட மீறல்களும் வன்முறையும்தான் கோரமுகம் காட்டுகின்றன. (2 தீ. 3:1-5) அதனால், அரசாங்கமும் தன் பங்கிற்குச் சட்டங்களுக்கு மேல் சட்டங்களைப் போடுகிறது... காவலர் படைகளைப் பலப்படுத்துகிறது... ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்துகிறது. சில நாடுகளில், மக்கள் தங்கள் வீடுகளில் எச்சரிக்கை மணிகளையும் கதவுகளில் கூடுதலான பூட்டுகளையும் பொருத்தியிருக்கிறார்கள், மின்வேலிகளையும்கூட அமைத்திருக்கிறார்கள். ஏன் இத்தனை பந்தோபஸ்து? எல்லாம் ஒரு பாதுகாப்புக்காகத்தான். நிறையப் பேர் ராத்திரி நேரங்களில் வெளியே போகப் பயப்படுகிறார்கள், பகலாய் இருந்தாலும் சரி இரவாக இருந்தாலும் சரி, குழந்தைகளைத் தனியாக வெளியில் விளையாட விடுவதற்குப் பயப்படுகிறார்கள். இதையெல்லாம் பார்க்கும்போது மக்கள் தங்கள் சுதந்திரத்தை இழந்துவருகிறார்கள் என்பது தெரிகிறது. இந்த நிலைமை நாளுக்கு நாள் இன்னும் மோசமாகலாம்.
2 ஏதேன் தோட்டத்தில் ஏவாளிடம் சாத்தான் என்ன சொன்னான் என்று ஞாபகம் இருக்கிறதா? உண்மையான விடுதலை வேண்டுமென்றால், அவர்கள் யெகோவாவைச் சார்ந்திருக்கக் கூடாது என்று சொன்னான். ஆனால், அது அப்பட்டமான பொய், அபாண்டமான பொய்! சொல்லப்போனால், கடவுள் வகுத்திருக்கும் ஆன்மீக, தார்மீக நெறிகளை மக்கள் எந்தளவு மதிக்காமல் போகிறார்களோ அந்தளவுக்குப் பயங்கரமாகப் பாதிக்கப்படுகிறார்கள். அவர்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த சமுதாயமே பாதிக்கப்படுகிறது. இதனால், யெகோவாவின் மக்களும் பாதிக்கப்படுகிறார்கள். ஆனாலும் நமக்கு ஓர் ஆறுதல் செய்தி இருக்கிறது. ஆம், பாவத்திற்கும் அழிவுக்கும் அடிமைப்பட்டுக் கிடக்கும் மனிதகுலத்திற்குச் சீக்கிரத்தில் விடிவுகாலம் வரப்போகிறது. அப்போது, நாம் அனைவரும் ‘கடவுளுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான விடுதலையைப் பெறுவோம்.’ (ரோ. 8:21) சொல்லப்போனால், அந்த விடுதலையைப் பெற யெகோவா இப்போது நம்மைத் தயார்படுத்திக் கொண்டிருக்கிறார். எப்படி?
3. கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்களுக்கு யெகோவா என்ன சட்டத்தைக் கொடுத்திருக்கிறார், என்ன கேள்விகளை நாம் இப்போது சிந்திப்போம்?
3 யாக்கோபு அதற்குப் பதில் அளிக்கிறார். ‘விடுதலை அளிக்கும் பரிபூரணமான சட்டத்தை’ யெகோவா நமக்குக் கொடுத்திருப்பதாக அவர் சொல்கிறார். (யாக்கோபு 1:25-ஐ வாசியுங்கள்.) பொதுவாகச் சட்டம் என்றாலே அதிலுள்ள கட்டுப்பாடுகள் பற்றித்தான் மக்கள் நினைப்பார்கள், விடுதலையைப் பற்றி நினைக்கமாட்டார்கள். அப்படியென்றால், ‘விடுதலை அளிக்கும் பரிபூரணமான சட்டம்’ என்றால் என்ன? அந்தச் சட்டம் நமக்கு எப்படி விடுதலை அளிக்கிறது?
விடுதலை அளிக்கும் சட்டம்
4. ‘விடுதலை அளிக்கும் பரிபூரணமான சட்டம்’ என்றால் என்ன, அதிலிருந்து யாரெல்லாம் பயனடைகிறார்கள்?
4 ‘விடுதலை அளிக்கும் பரிபூரணமான சட்டம்’ என்பது திருச்சட்டத்தைக் குறிப்பதில்லை. ஏனென்றால், அது இஸ்ரவேலர் பாவிகள் என்பதை உணர்த்தியதோடு, கிறிஸ்துவில் நிறைவேறியும் விட்டது. (மத். 5:17; கலா. 3:19) அப்படியானால், யாக்கோபு எந்தச் சட்டத்தைப் பற்றிக் குறிப்பிட்டார்? “கிறிஸ்துவின் சட்டத்தை” பற்றிக் குறிப்பிட்டார். அந்தச் சட்டம், ‘விசுவாசத்திற்குரிய சட்டம்,’ ‘சுதந்திர மக்களுடைய சட்டம்’ என்றும்கூட அழைக்கப்படுகிறது. (கலா. 6:2; ரோ. 3:27; யாக். 2:12) எனவே, ‘பரிபூரணமான சட்டத்தில்’ யெகோவா நம்மிடம் எதிர்பார்க்கும் எல்லாமே அடங்கியிருக்கிறது. பரலோக நம்பிக்கையுள்ளவர்களும் சரி “வேறே ஆடுகளும்” சரி, இந்தச் சட்டத்திலிருந்து பயனடைகிறார்கள்.—யோவா. 10:16.
5. பரிபூரணமான சட்டம் ஏன் பாரமானதல்ல?
5 ‘பரிபூரணமான சட்டம்’ உலக நாடுகளின் சட்டங்களைப் போல் சிக்கலானதும் அல்ல, பாரமானதும் அல்ல. ஏனென்றால், அதில் எளிமையான கட்டளைகளும் அடிப்படை நியமங்களுமே அடங்கியுள்ளன. (1 யோ. 5:3) “என்னுடைய நுகம் மென்மையாகவும் என்னுடைய சுமை லேசாகவும் இருக்கிறது” என்று இயேசு சொன்னார். (மத். 11:29, 30) அதுமட்டுமல்ல, ‘பரிபூரணமான சட்டத்தில்’ இன்னின்ன தப்புக்கு இன்னின்ன தண்டனை என்ற நீண்ட பட்டியல் இல்லை. ஏனென்றால், அது அன்பின் அடிப்படையில் உருவானது. அந்தச் சட்டம் கற்பலகைகளில் அல்ல, மக்களின் மனதிலும் இருதயத்திலும் எழுதப்பட்டிருக்கிறது.—எபிரெயர் 8:6, 10-ஐ வாசியுங்கள்.
‘பரிபூரணமான சட்டம்’ நமக்கு எப்படி விடுதலையளிக்கிறது
6, 7. யெகோவா வகுத்திருக்கும் நெறிகள் எப்படிப்பட்டவை, விடுதலைச் சட்டம் என்ன சுதந்திரத்தை அளிக்கிறது?
6 மனிதர்களுக்காக யெகோவா வகுத்திருக்கும் வரம்புகள் அவர்களுடைய நன்மைக்காகவும் பாதுகாப்பிற்காகவும்தான். உதாரணத்திற்கு, ஆற்றலையும் சடப் பொருளையும் கட்டுப்படுத்தும் இயற்பியல் சட்டங்களை எடுத்துக்கொள்ளுங்கள். அந்தச் சட்டங்கள் தங்களைக் கட்டுப்படுத்துவதாக யாரும் குறைகூறுவதில்லை. மாறாக, அவை தங்களுடைய நன்மைக்காகவே இருப்பதைப் புரிந்துகொள்கிறார்கள். அதேபோலத்தான், கிறிஸ்துவின் ‘பரிபூரணமான சட்டத்தில்’ உள்ள யெகோவாவின் தார்மீக, ஆன்மீக நெறிகளும் மனிதர்களின் நன்மைக்காகவே கொடுக்கப்பட்டுள்ளன.
7 விடுதலைச் சட்டம் நமக்குப் பாதுகாப்பளிப்பதோடு நம்முடைய நியாயமான ஆசைகள் அனைத்தையும் பூர்த்திசெய்துகொள்ள சுதந்திரமும் அளிக்கிறது. முக்கியமாக, நமக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாமல் அல்லது மற்றவர்களுடைய உரிமையிலும் சுதந்திரத்திலும் தலையிடாமல் நம்முடைய ஆசைகளைப் பூர்த்திசெய்துகொள்ள உதவுகிறது. அப்படியானால், உண்மையான விடுதலையைப் பெறுவதற்கு, அதாவது நமக்குப் பிடித்ததைச் செய்வதற்கு, ஒரே வழி... சரியான காரியங்களுக்காக ஆசைப்படுவதாகும். அந்த ஆசைகள், யெகோவாவின் நெறிகளுக்கும் அவருடைய சுபாவத்திற்கும் இசைவாக இருக்க வேண்டும். வேறு வார்த்தைகளில் சொன்னால், யெகோவா நேசிப்பதை நேசிக்கவும் அவர் வெறுப்பதை வெறுக்கவும் நாம் கற்றுக்கொள்ள வேண்டும். அதைச் செய்ய விடுதலைச் சட்டம் நமக்கு உதவுகிறது.—ஆமோ. 5:15.
8, 9. விடுதலைச் சட்டத்தைக் கடைப்பிடிப்பவர்கள் என்ன பலன்களைப் பெறுகிறார்கள்? ஓர் உதாரணம் கொடுங்கள்.
8 நாம் அபூரணர்களாக இருப்பதால் தவறான ஆசைகளோடு மல்லுக்கட்ட வேண்டியிருக்கிறது. என்றாலும், விடுதலைச் சட்டத்தை நாம் மனதாரக் கடைப்பிடித்தால் இப்போதேகூட சுதந்திரக் காற்றை ஓரளவு சுவாசிக்க முடியும். அதற்கு ஓர் உதாரணத்தைக் கவனியுங்கள்: ஜே என்பவர் சாட்சிகளோடு பைபிள் படிக்க ஆரம்பித்தபோது புகைபிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாயிருந்தார். அது கடவுளுக்குப் பிடிக்காத பழக்கம் என்பதைத் தெரிந்துகொண்டபோது அவர் ஒரு தீர்மானம் எடுக்க வேண்டியிருந்தது. தன்னுடைய ஆசைக்கு அடிபணிவாரா அல்லது யெகோவாவுக்கு அடிபணிவாரா? ஜேயின் உடல் நிக்கோடினுக்கு ஏங்கியது. மனமோ யெகோவாவை வணங்க துடித்தது. கடைசியில் அவருடைய மனம்தான் ஜெயித்தது. அந்தப் பழக்கத்திலிருந்து விடுதலை பெற்ற பிறகு அவர் எப்படி உணர்ந்தார்? “சுதந்திர வானில் சிறகடித்துப் பறந்ததைப் போல் உணர்ந்தேன்” என்று அவரே பின்பு சொன்னார்.
9 உலகம் அளிக்கும் சுதந்திரம் மனிதனை ‘பாவ காரியங்களில் சிந்தையாக இருக்க’ செய்து உண்மையில் அவனை அடிமைப்படுத்துகிறது. ஆனால், யெகோவா அளிக்கும் சுதந்திரம் ‘கடவுளுடைய சக்திக்குரிய காரியங்களில் சிந்தையாக இருக்க’ செய்து உண்மையான விடுதலையை அளிக்கிறது. அதோடு, ‘வாழ்வையும் சமாதானத்தையும்’ தருகிறது. இதையெல்லாம் ஜே புரிந்துகொண்டார். (ரோ. 8:5, 6) அந்த மோசமான பழக்கத்தில் ஊறிப்போயிருந்த ஜே எப்படி அதைவிட்டு வெளியே வந்தார்? அவருடைய சொந்த முயற்சியால் அல்ல, கடவுளுடைய உதவியால்தான் வெளியே வந்தார். “நான் தவறாமல் பைபிளைப் படித்தேன், கடவுளுடைய சக்திக்காக ஜெபம் செய்தேன், அதோடு, சபையிலிருந்த அன்பான சகோதர சகோதரிகளும் எனக்கு நிறைய உதவி செய்தார்கள்” என்று அவர் சொன்னார். ஜே செய்த இந்த மூன்று காரியங்களை நாம் எல்லாருமே செய்தால்... உண்மையான விடுதலையைப் பெறுவோம். எப்படி என்று பார்ப்போம்.
கடவுளுடைய வார்த்தையைக் கூர்ந்து கவனியுங்கள்
10. கடவுளுடைய சட்டத்தை ‘கூர்ந்து கவனிப்பது’ என்றால் என்ன?
10 “விடுதலை அளிக்கும் பரிபூரணமான சட்டத்தைக் கூர்ந்து கவனித்து அதை விடாமல் கடைப்பிடிக்கிறவன் . . . சந்தோஷமானவனாக இருக்கிறான்” என்று யாக்கோபு 1:25 சொல்கிறது. ‘கூர்ந்து கவனிப்பது’ என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள சொற்றொடருக்கான கிரேக்க வார்த்தை “நன்றாகப் பார்ப்பதற்காகக் குனிவதை” குறிக்கிறது. அதற்குக் கூடுதல் முயற்சி தேவை. ஆம், விடுதலைச் சட்டம் நம் மனதையும் இருதயத்தையும் செதுக்கி சீராக்க வேண்டுமென்றால் நாம் பைபிளைக் கருத்தூன்றிப் படிக்க வேண்டும், படித்த விஷயங்களை ஆழ்ந்து சிந்திக்க வேண்டும்.—1 தீ. 4:15.
11, 12. (அ) சத்தியத்தின் வழியில் நடப்பதன் அவசியத்தை இயேசு எப்படி வலியுறுத்தினார்? (ஆ) அனுபவத்தில் பார்த்தபடி, முக்கியமாக இளைஞர்கள் என்ன ஆபத்தைத் தவிர்க்க வேண்டும்?
11 அதேசமயம், கடவுளுடைய வார்த்தையில் படிக்கும் விஷயங்களைக் கடைப்பிடிக்க நாம் “விடாமல்” முயற்சி செய்ய வேண்டும். அப்போதுதான் சத்தியத்தின் வழியில் நடப்போம். இயேசுவும், தம்மீது நம்பிக்கை வைத்த சிலரிடம் இதுபோன்ற ஒரு கருத்தைச் சொன்னார்: “நீங்கள் என் வார்த்தையில் நிலைத்திருந்தால் நிஜமாகவே என் சீடர்களாக இருப்பீர்கள்; சத்தியத்தையும் அறிந்துகொள்வீர்கள், சத்தியம் உங்களை விடுதலையாக்கும்.” (யோவா. 8:31, 32) இந்த வசனத்தில் உள்ள ‘அறிந்துகொள்ளுதல்’ என்ற வார்த்தை, “ஒருவர் தான் ‘அறிந்திருக்கிற’ விஷயம் மதிப்பு வாய்ந்தது அல்லது முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை அறிந்திருப்பதால்” அதைப் பெரிதும் போற்றுவதைக் குறிப்பதாகவும் ஒரு புத்தகம் சொல்கிறது. எனவே, சத்தியத்தின் வழியில் நடக்கும்போதுதான் சத்தியத்தை நம்மால் முழுமையாய் ‘அறிந்துகொள்ள’ முடியும். அப்படிச் செய்தால்தான்... “கடவுளுடைய வார்த்தை” நம் மனதில் ‘செயல்படுகிறது’ என்று... அதாவது, நம் பரலோகத் தகப்பனை நன்கு பிரதிபலிப்பதற்குத் தொடர்ந்து நம் குணங்களைச் செதுக்கி சீராக்குகிறது என்று... நம்மால் உறுதியாகச் சொல்ல முடியும்.—1 தெ. 2:13.
12 ‘நான் உண்மையிலேயே சத்தியத்தை அறிந்திருக்கிறேனா? சத்தியத்தின் வழியில் நடக்கிறேனா? அல்லது இந்த உலகம் தரும் பொய்யான சுதந்திரத்திற்காக இன்னும் ஏங்கிக்கொண்டிருக்கிறேனா?’ என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். கிறிஸ்தவப் பெற்றோரால் வளர்க்கப்பட்ட ஒரு சகோதரி இளமையில் தான் செய்த தவறைப் பற்றிச் சொல்கிறார்: “நான் வளர்ந்ததென்னவோ சத்யத்திலதான். ஆனா, யெகோவாவை பத்தி நான் முழுசா தெரிஞ்சுக்கவே இல்ல. அவர் வெறுப்பதை வெறுக்க நான் கத்துக்கவே இல்ல. நான் நல்லது செஞ்சா அவரு சந்தோஷப்படுவாரு, கெட்டது செஞ்சா வேதனைப்படுவாரு என்ற விஷயத்தை நான் நம்பவே இல்ல. பிரச்சினை வந்த சமயத்திலெல்லாம் அவர்கிட்ட ஜெபம் செய்யணும்னு எனக்குத் தோன்றியதே இல்ல. என் மனசுக்கு எது சரின்னு பட்டுச்சோ அததான் செஞ்சேன். இவ்ளோ நாளா எல்லாம் தெரிஞ்ச மாதிரி நடந்துகிட்டேன், ஆனா அது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்னு இப்பத்தான் புரியுது.” சந்தோஷகரமாக, இந்தச் சகோதரி தன் தவறை உணர்ந்து மனந்திரும்பினார். ஒழுங்கான பயனியராகச் சேவை செய்யுமளவுக்குத் தன் வாழ்க்கையில் நிறைய மாற்றங்களைச் செய்தார்.
சுதந்திரம் பெற கடவுளுடைய சக்தி உதவுகிறது
13. நாம் சுதந்திரம் பெற கடவுளுடைய சக்தி எப்படி உதவுகிறது?
13 “யெகோவாவின் சக்தி எங்கேயோ அங்கே சுதந்திரமும் உண்டு” என்று 2 கொரிந்தியர் 3:17 சொல்கிறது. நாம் சுதந்திரம் பெற கடவுளுடைய சக்தி எப்படி உதவுகிறது? “அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமை, கருணை, நல்மனம், விசுவாசம், சாந்தம், சுயக்கட்டுப்பாடு” போன்ற குணங்களை வளர்த்துக்கொள்ள அது உதவுகிறது. (கலா. 5:22, 23) இந்தக் குணங்கள் இல்லையென்றால், அதிலும் முக்கியமாக அன்பு இல்லையென்றால், மனிதர்களால் சுதந்திரமாய் இருக்கவே முடியாது. உலக நிலைமை அதைத்தான் படம்பிடித்துக் காட்டுகிறது. கடவுளுடைய சக்தி பிறப்பிக்கும் குணங்களைப் பட்டியலிட்ட பிறகு... “இப்படிப்பட்டவற்றுக்கு எதிராக எந்தவொரு சட்டமும் இல்லை” என்றும் அப்போஸ்தலன் பவுல் சொன்னார். அவர் ஏன் அப்படிச் சொன்னார்? கடவுளுடைய சக்தி பிறப்பிக்கும் இந்தக் குணங்களை நாம் வளர்த்துக்கொள்வதற்குத் தடைபோடும் எந்தச் சட்டமும் இந்த உலகத்தில் இல்லை. (கலா. 5:18) அப்படியொரு சட்டமிருந்தாலும் அதில் அர்த்தம் இருக்காது. ஏனென்றால்... நாம் கிறிஸ்துவின் குணங்களை அதிகமதிகமாய் வளர்த்துக்கொள்ள வேண்டும்... காலமெல்லாம் வெளிக்காட்ட வேண்டும்... என்பதே யெகோவாவின் சித்தம்.
14. உலகத்தின் சிந்தையைப் பின்பற்றுகிறவர்கள் எந்த வகையில் அதற்கு அடிமைப்பட்டு இருக்கிறார்கள்?
14 உலகத்தின் சிந்தையைப் பின்பற்றுகிறவர்களும் தங்கள் பாவ இச்சைகளைப் பூர்த்திசெய்துகொள்கிறவர்களும் சுதந்திரமாய் இருப்பதாக நினைத்துக்கொண்டிருக்கலாம். (2 பேதுரு 2:18, 19-ஐ வாசியுங்கள்.) ஆனால், அவர்கள் இந்த உலகத்தின் சிந்தைக்கு அடிமைப்பட்டுக் கிடக்கிறார்கள் என்ற விஷயம் அவர்களுக்குத் தெரிவதில்லை. அவர்களுடைய கீழ்த்தரமான ஆசைகளையும் கேடுகெட்ட நடத்தையையும் கட்டுப்படுத்த அரசாங்கங்கள் ஆயிரக்கணக்கான சட்டங்களைப் போட வேண்டியிருக்கிறது. ‘நீதிமான்களுக்காகச் சட்டம் இயற்றப்படுவதில்லை; மாறாக, அக்கிரமக்காரர்களுக்காகவும் அடங்காதவர்களுக்காகவுமே . . . இயற்றப்படுகிறது’ என்று பவுல் சொன்னார். (1 தீ. 1:9, 10) அவர்கள் பாவம் எனும் குரூர எஜமானுக்கும் அடிமைப்பட்டு இருக்கிறார்கள். அதனால்தான், தங்கள் ‘உடல் விரும்புகிறவற்றைச் செய்கிறார்கள்.’ (எபே. 2:1-3) ஒருவிதத்தில் பார்த்தால், தேனுக்கு ஆசைப்பட்டு தேன் கிண்ணத்திற்குள் விழுந்துவிடும் பூச்சிகளைப் போலத்தான் அவர்கள் இருக்கிறார்கள். தங்கள் மனதில் தோன்றும் தவறான ஆசைகளுக்கு அடிபணிந்து, கடைசியில் பாவம் எனும் படுகுழியில் விழுந்துவிடுகிறார்கள்.—யாக். 1:14, 15.
கிறிஸ்தவ சபைக்குள் சுதந்திரம்
15, 16. கிறிஸ்தவ சபையோடு கூட்டுறவுகொள்ள ஆரம்பித்த நாள்முதல் நாம் என்னென்ன பலன்களைப் பெற்றிருக்கிறோம், எப்படிப்பட்ட சுதந்திரத்தை நாம் அனுபவிக்கிறோம்?
15 கிறிஸ்தவ சபையுடன் கூட்டுறவுகொள்வது... ஏதோவொரு கிளப்பில் நாமாகவே போய் அங்கத்தினர் ஆவதுபோல் கிடையாது. யெகோவா உங்களை ஈர்த்ததால்தான் கிறிஸ்தவ சபைக்குள் வந்திருக்கிறீர்கள். (யோவா. 6:44) அவர் ஏன் உங்களை ஈர்த்தார்? நீங்கள் மிகவும் நல்லவராக... கடவுள் பக்திமிக்கவராக... இருந்ததைப் பார்த்து ஈர்த்தாரா? “நான் அந்தளவுக்கு இல்லைங்க!” என்று நீங்கள் சொல்லலாம். அப்படியென்றால் அவர் எதைப் பார்த்து உங்களை ஈர்த்தார்? அவருடைய சட்டதிட்டங்களுக்குக் கீழ்ப்படிய உங்களுக்கு உண்மையிலேயே விருப்பம் இருந்ததையும்... அவருடைய அன்பான வழிநடத்துதலுக்கு அடிபணியும் உள்ளம் உங்களிடம் இருந்ததையும்... பார்த்து ஈர்த்தார். கிறிஸ்தவ சபையோடு நீங்கள் கூட்டுறவுகொள்ள ஆரம்பித்த நாள்முதல் யெகோவா அவருடைய வார்த்தையிலிருந்து உங்களுக்குக் கற்பித்து வந்திருக்கிறார். பொய் மதப் போதனைகளிலிருந்தும் மூடநம்பிக்கைகளிலிருந்தும் அவர் உங்களுக்கு விடுதலை அளித்திருக்கிறார். கிறிஸ்துவின் சுபாவத்தை வளர்த்துக்கொள்ள உங்களுக்குக் கற்றுத்தந்திருக்கிறார். (எபேசியர் 4:22-24-ஐ வாசியுங்கள்.) உங்களுக்காக யெகோவா இதையெல்லாம் செய்திருப்பதால்... உலகில் ‘சுதந்திர மக்கள்’ என்ற பாக்கியத்தைப் பெற்றவர்களில் நீங்களும் ஒருவராக இருக்கிறீர்கள்.—யாக். 2:12.
16 கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்: யெகோவாவை உள்ளப்பூர்வமாய் நேசிக்கிறவர்கள் மத்தியில் இருக்கும்போது பயத்தினால் உங்கள் நெஞ்சம் படபடக்குமா? யார் என்ன செய்வார்களோ என்ற பயத்தில் எப்போதும் பின்னால் திரும்பித் திரும்பிப் பார்ப்பீர்களா? ராஜ்ய மன்றத்தில் சகோதர சகோதரிகளுடன் பேசும்போது உங்கள் உடைமைகள் எங்கே காணாமல் போய்விடுமோ என்று பயந்துகொண்டு அவற்றைக் கையிலேயே வைத்துக்கொள்கிறீர்களா? இல்லவே இல்லை! எந்தப் பயமும் கவலையும் இல்லாமல் இருப்பீர்கள். ஆனால், ஒரு பொது நிகழ்ச்சிக்குப் போகிறீர்கள் என்றால், அதேபோல் இருப்பீர்களா? நிச்சயமாக இருக்கமாட்டீர்கள்! உண்மையில், இன்று கடவுளுடைய மக்கள் மத்தியில் நீங்கள் அனுபவிக்கும் சுதந்திரம்... எதிர்காலத்தில் நீங்கள் அனுபவிக்கப் போகும் சுதந்திரத்தின் ஒரு சிறுதுளிதான்!
“கடவுளுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான விடுதலை”
17. ‘கடவுளுடைய மகன்களின் மகிமையான வெளிப்படுதல்’ மனிதர்களுக்கு எப்படி விடுதலை அளிக்கிறது?
17 பூமியிலிருக்கும் ஊழியர்களுக்கு யெகோவா அளிக்கப்போகும் சுதந்திரத்தைப் பற்றி பவுல் குறிப்பிட்டபோது, “கடவுளுடைய மகன்களின் மகிமை வெளிப்படுவதற்காகப் படைப்பு பேராவலோடு காத்திருக்கிறது” என்று சொன்னார். ‘படைப்பு அழிவுக்குரிய அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டு கடவுளுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான விடுதலையைப் பெறும்’ என்றும் பவுல் சொன்னார். (ரோ. 8:19-21) “படைப்பு” என்பது பூமியில் என்றென்றும் வாழும் நம்பிக்கையுள்ளவர்களைக் குறிக்கிறது. இவர்கள், பரலோக நம்பிக்கையுள்ள கடவுளுடைய மகன்களின் மகிமை ‘வெளிப்படும்போது’ பயனடைவார்கள். அந்த மகிமையான வெளிப்படுதல், கடவுளுடைய ‘மகன்கள்’ பரலோகத்திற்கு உயிர்த்தெழுப்பப்பட்டு... கிறிஸ்துவுடன் சேர்ந்து பூமியிலுள்ள பொல்லாதவர்களை ஒழித்துக்கட்டி... புதிய உலகில் ‘திரள் கூட்டமான மக்களை’ குடியேற்றும் சமயத்தில்... ஆரம்பமாகும்.—வெளி. 7:9, 14.
18. கீழ்ப்படிதலுள்ள மனிதர்கள் எப்படிப் படிப்படியாக விடுதலை பெறுவார்கள், கடைசியில் அவர்கள் எப்படிப்பட்ட விடுதலையை அனுபவிப்பார்கள்?
18 மனிதர்கள் அப்போது முற்றிலும் வித்தியாசமான சுதந்திரத்தை அனுபவிப்பார்கள். ஆம், சாத்தானின் ஆதிக்கத்திலிருந்தும் அவனுடைய பேய்களின் ஆதிக்கத்திலிருந்தும் அவர்கள் விடுதலை பெற்றிருப்பார்கள். (வெளி. 20:1-3) அது எப்பேர்ப்பட்ட விடுதலையாக இருக்கும்! அதன் பிறகு, கிறிஸ்துவின் உடன் அரசர்களும் குருமார்களுமான 1,44,000 பேர்... ஆதாமால் விளைந்த பாவமும் அபூரணமும் முழுமையாகத் துடைத்தழிக்கப்படும்வரை இயேசுவின் மீட்புவிலையின் அடிப்படையில் மனிதர்களைப் படிப்படியாகப் பரிபூரணத்திற்கு வழிநடத்துவார்கள். (வெளி. 5:9, 10) விசுவாசப் பரீட்சைகளை வெற்றிகரமாகச் சமாளித்த பிறகுதான் மனிதர்கள் உண்மையான விடுதலையைப் பெறுவார்கள்; ஆரம்பத்தில் ஆதாம் ஏவாள் அனுபவித்த அதே விடுதலையை, ஆம் ‘கடவுளுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான விடுதலையை’ பெறுவார்கள். அது எப்படியிருக்கும் என்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்! கடவுளுடைய பார்வையில் சரியானதைச் செய்வது உங்களுக்கு இனியும் போராட்டமாக இருக்காது. ஏனென்றால், உங்கள் உடலும் உள்ளமும் பரிபூரணமாக இருக்கும். நீங்கள் அப்போது கடவுளுடைய சாயலை முழுமையாகப் பிரதிபலிப்பீர்கள்.
19. ‘கடவுளுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான விடுதலையை’ பெற நாம் தொடர்ந்து என்ன செய்ய வேண்டும்?
19 ‘கடவுளுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான விடுதலையை’ பெற நீங்கள் ஆவலாய் இருக்கிறீர்களா? அப்படியானால், ‘விடுதலை அளிக்கும் பரிபூரணமான சட்டம்’ உங்கள் மனதையும் இருதயத்தையும் எப்போதும் பயிற்றுவிக்க அனுமதியுங்கள். அதற்கு, பைபிளைக் கருத்தூன்றிப் படியுங்கள். சத்தியத்தின் வழியில் நடவுங்கள். கடவுளுடைய சக்திக்காக ஜெபம் செய்யுங்கள். சபைக் கூட்டங்களிலிருந்தும், யெகோவா தரும் ஆன்மீக உணவிலிருந்தும் முழுமையாகப் பயனடையுங்கள். கடவுள் கெடுபிடியாக நடந்துகொள்வதாகச் சொல்லி ஏவாளை சாத்தான் ஏமாற்றியதைப் போல் உங்களை அவன் ஏமாற்ற இடம்கொடுக்காதீர்கள். மக்களை ஏமாற்றுவதில் பிசாசு பலே கில்லாடி! ஆனாலும் ‘அவனுடைய சதித்திட்டங்கள் நமக்குத் தெரிந்தவை’ என்பதால் அவனிடம் நாம் ஏமாற வேண்டிய அவசியமில்லை. அவனுடைய சதித்திட்டங்களைக் குறித்து அடுத்த கட்டுரையில் சிந்திப்போம்.—2 கொ. 2:11.
[பக்கம் 9-ன் படங்கள்]
இந்த உலகம் தரும் பொய்யான சுதந்திரத்திற்காக இன்னும் ஏங்கிக்கொண்டிருக்கிறேனா?
[பக்கம் 9-ன் படங்கள்]
சத்தியத்தின் வழியில் நடக்கிறேனா?