வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
“என் சகோதரரே, அதிக ஆக்கினையை அடைவோம் என்று அறிந்து, உங்களில் அநேகர் போதகராகாதிருப்பீர்களாக,” என்று சொன்னபோது சீஷனாகிய யாக்கோபு எதை அர்த்தப்படுத்தினார்? —யாக்கோபு 3:1.
யாக்கோபு நிச்சயமாகவே மற்றவர்களுக்குச் சத்தியத்தைப் போதிப்பதிலிருந்து கிறிஸ்தவர்களைப் பின்வாங்கச் செய்யவில்லை. மத்தேயு 28:19, 20-ல், “சகல ஜாதிகளையும் சீஷராக்கி, . . . நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள்” என்று இயேசு தம்முடைய சீஷர்களுக்குக் கட்டளையிட்டார். எனவே, எல்லா கிறிஸ்தவர்களும் போதகர்களாக இருக்க வேண்டும். எபிரெய கிறிஸ்தவர்கள் இன்னும் போதகர்களாகவில்லை என்பதற்காக அப்போஸ்தலன் பவுல் அவர்களுக்கு அறிவுரை கூறினார். அவர் எழுதினார்: “காலத்தைப் பார்த்தால், போதகராயிருக்கவேண்டிய உங்களுக்குத் தேவனுடைய வாக்கியங்களின் மூல உபதேசங்களை மறுபடியும் உபதேசிக்கவேண்டியதாயிருக்கிறது.”—எபிரெயர் 5:12.
அப்படியானால், யாக்கோபு எதைக் குறித்து பேசிக்கொண்டிருந்தார்? சபையில் விசேஷித்த போதிக்கும் சிலாக்கியங்களைக் கொண்டிருப்பவர்களைக் குறித்துப் பேசிக்கொண்டிருந்தார். எபேசியர் 4:13-ல் நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “அவர் [சபையின் தலையாகிய இயேசு கிறிஸ்து], சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும் போதகராகவும் ஏற்படுத்தினார்.” இன்று இருப்பதுபோலவே முதல் நூற்றாண்டு சபைகளின் மத்தியிலும் விசேஷித்த போதிக்கும் சிலாக்கியங்கள் இருந்தன. உதாரணமாக, ஆளும் குழு, ‘உண்மையும் விவேகமுமுள்ள அடிமையை’ பிரதிநிதித்துவம் செய்கிறது; உலகளாவிய சபையின் போதனையை மேற்பார்வை செய்யும் விசேஷித்த பொறுப்பை அது கொண்டிருக்கிறது. (மத்தேயு 24:45, NW) பயணக் கண்காணிகளும் சபை மூப்பர்களும் விசேஷித்த போதிக்கும் பொறுப்புகளைக் கொண்டிருக்கின்றனர்.
தகுதிவாய்ந்த கிறிஸ்தவ ஆண்கள், கடவுளிடமிருந்து அதிகப்படியான நியாயத்தீர்ப்பைப் பெறும் பயத்தின் காரணமாக போதகர் என்ற பாகத்தை ஏற்கக்கூடாது என்று யாக்கோபு சொல்லிக்கொண்டிருந்தாரா? நிச்சயமாகவே இல்லை. 1 தீமோத்தேயு 3:1-ல் குறிப்பிடப்பட்டுள்ளபடி, மூப்பரின் பணி ஒரு பெரிய சிலாக்கியமாகும்; “கண்காணிப்பை விரும்புகிறவன் நல்ல வேலையை விரும்புகிறான்,” என்று அது சொல்லுகிறது. ஒரு சபை மூப்பராக நியமிக்கப்படுவதற்கு தேவைப்படுபவற்றில் ஒன்று, ஒரு ஆண் “போதகசமர்த்தனுமாய் இருக்கவேண்டும்.” (1 தீமோத்தேயு 3:2) பவுலால் எழுதப்பட்ட ஏவப்பட்ட வார்த்தைகளுக்கு முரணாக யாக்கோபு சொல்லவில்லை.
என்றபோதிலும், பொ.ச. முதலாம் நூற்றாண்டில், சிலர் தகுதிபெறாதவர்களாகவும் நியமிக்கப்படாதவர்களாகவும் இருந்தபோதிலும் தங்களைத்தாங்களே போதகர்களாக ஆக்கிக்கொண்டிருந்ததாகத் தெரிகிறது. ஒருவேளை, அந்த வேலையில் ஏதோ மேன்மை இருந்ததாக அவர்கள் உணர்ந்து, சுய மகிமையை விரும்பி இருக்கலாம். (ஒப்பிடுக: மாற்கு 12:38-40; 1 தீமோத்தேயு 5:17.) ‘அவர்களில் முதன்மையாயிருக்க விரும்பிய, ஆனால் யோவானிடமிருந்து வரும் எதையும் ஏற்றுக்கொள்ளாத’ தியோத்திரேப்புவைப்பற்றி அப்போஸ்தலன் யோவான் குறிப்பிட்டார். (3 யோவான் 9) ‘தாங்கள் சொல்லுகிறது இன்னதென்றும், தாங்கள் சாதிக்கிறது இன்னதென்றும் அறியாதிருந்தும், நியாயப்பிரமாண போதகராயிருக்க விரும்பினார்கள்’ என்று 1 தீமோத்தேயு 1:7 ஒருசிலரைப் பற்றிச் சொல்லுகிறது. தவறான உள்நோக்குடன் போதகர்களாகும்படி விரும்பும் ஆண்களுக்கு யாக்கோபு 3:1-ன் வார்த்தைகள் விசேஷமாகப் பொருந்துகின்றன. அப்படிப்பட்டவர்கள் மந்தைக்குக் கடுமையான தீங்கைக் கொண்டுவரலாம்; அதற்கு ஏற்றவிதத்தில் அதிகப்படியான நியாயத்தீர்ப்பைப் பெறுவார்கள்.—ரோமர் 2:17-21; 14:12.
தகுதிபெற்றவர்களாக இருக்கிற, போதகர்களாக சேவிக்கிறவர்களுக்கும் யாக்கோபு 3:1 ஒரு நல்ல நினைப்பூட்டுதலாக இருக்கிறது. அவர்களிடம் அதிகம் ஒப்படைக்கப்பட்டிருப்பதால், அவர்களிடமிருந்து அதிகம் எதிர்பார்க்கப்படும். (லூக்கா 12:48) இயேசு சொன்னார்: “மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்பு நாளிலே கணக்கொப்புவிக்கவேண்டும்.” (மத்தேயு 12:36) அதிக செல்வாக்கு செலுத்துபவையாக இருக்கும் நியமிக்கப்பட்ட மூப்பர்களுடையதைப் போன்ற வார்த்தைகளைக் குறித்ததில் இது விசேஷமாக உண்மையாய் இருக்கிறது.
யெகோவாவின் செம்மறியாடுகளைக் கையாளும் விதத்திற்காக மூப்பர்கள் கணக்கு கொடுப்பார்கள். (எபிரெயர் 13:17) அவர்கள் சொல்லும் காரியங்கள் உயிர்களைப் பாதிக்கின்றன. எனவே, பரிசேயர்களைப் போல ஒரு மூப்பர் தன் சொந்த கருத்துக்களை ஊக்குவிக்காமல் அல்லது செம்மறியாடுகளை மோசமாக நடத்தாமல் இருக்கும்படி கவனமாகப் பார்த்துக்கொள்ளவேண்டும். இயேசு காண்பித்த அதே ஆழமான அன்பை வெளிக்காட்டும்படி அவர் முயற்சிக்க வேண்டும். போதிக்கும் சந்தர்ப்பம் ஒவ்வொன்றிலும், குறிப்பாக நீதி விசாரணைக்குரிய காரியங்களில் உட்பட்டிருக்கும்போது, ஒரு மூப்பர், தன் வார்த்தைகளைக் குறித்து கவனமாக இருக்க வேண்டும்; யோசிக்காமல் உடனடியாகப் பேச அல்லது முற்றிலும் சொந்தமான கருத்துக்களை எடுத்துக்கூறக் கூடாது. யெகோவாவிலும், அவருடைய வார்த்தையிலும், அவருடைய அமைப்பின் மூலமாகக் கொடுக்கப்படும் வழிநடத்துதல்களிலும் முழுமையாகச் சார்ந்திருப்பதன் மூலம், அந்த மேய்ப்பர் “அதிக ஆக்கினையை” அல்ல, கடவுளுடைய நிறைவான ஆசீர்வாதத்தையே பெறுவார்.