-
யெகோவா நியாயத்தன்மை உடையவர்!காவற்கோபுரம்—1994 | ஆகஸ்ட் 1
-
-
தெய்வீக ஞானத்தின் ஓர் அடையாளக்குறியான நியாயத்தன்மை
6. தெய்வீக ஞானத்தை விவரிக்கையில் யாக்கோபு பயன்படுத்திய கிரேக்க வார்த்தையின் சொல்லர்த்தமான அர்த்தமும் அதன் உட்பொருள்களும் யாவை?
6 மிகச் சிறந்த வகையில் மாற்றியமைத்துக் கொள்ளக்கூடிய இந்தக் கடவுளின் ஞானத்தை விளக்குவதற்கு சீஷனாகிய யாக்கோபு ஒரு அக்கறைக்குரிய வார்த்தையைப் பயன்படுத்தினார். அவர் எழுதினார்: “பரத்திலிருந்து வரும் ஞானம் . . . நியாயத்தன்மை உள்ளது.” (யாக்கோபு 3:17, NW) அவர் இங்குப் பயன்படுத்திய கிரேக்க வார்த்தையை (எப்பியய்கஸ், [e·pi·ei·kesʹ]) மொழிபெயர்ப்பது கடினம். “சாந்தமான,” “கடுமையற்ற,” “பொறுமையுள்ள,” “அன்பாதரவான,” என்பது போன்ற வார்த்தைகளை மொழிபெயர்ப்பாளர்கள் பயன்படுத்தியிருக்கின்றனர். “நியாயத்தன்மை” என்பதாக புதிய உலக மொழிபெயர்ப்பு இதை மொழிபெயர்க்கிறது; “வளைந்துகொடுக்கிற தன்மை” என்பது அதன் சொல்லர்த்தமான அர்த்தம் என்று குறிப்பிடும் ஒரு அடிக்குறிப்பையும் கொண்டிருக்கிறது.a சட்டத்தை இம்மியும்பிசகாமல் கடைப்பிடிக்கும்படி வற்புறுத்தாமல் இருப்பதை, மட்டுக்குமீறிய கண்டிப்பாக அல்லது இறுக்கமாக இல்லாமல் இருக்கும் அர்த்தத்தையும் அந்த வார்த்தை உணர்த்துகிறது. அறிஞர் உவில்லியம் பார்க்லி, புதிய ஏற்பாடு வார்த்தைகள் (New Testament Words) என்பதில் இவ்வாறு குறிப்பிடுகிறார்: “எப்பியய்கியா (epieikeia) என்பதைப்பற்றிய அடிப்படையான மூலாதாரமான காரியம் என்னவென்றால், அது கடவுளிடம் தொடங்குகிறது. கடவுள் தம்முடைய உரிமைகளை வற்புறுத்தினால், சட்டத்தின் உறுதியான தராதரங்களை மட்டுமே கடவுள் நம்மிடம் பொருத்தினால், நாம் எங்கே நிற்போம்? எப்பியய்கிஸ்-ஆக (epieikēs) இருப்பதற்கும் மற்றவர்களுடன் எப்பியய்கியாவுடன் நடந்துகொள்வதற்கும் கடவுளே தலைசிறந்த மாதிரியாக இருக்கிறார்.”
7. ஏதேன் தோட்டத்தில் யெகோவா எவ்வாறு நியாயத்தன்மையை வெளிக்காட்டினார்?
7 மனிதவர்க்கம் யெகோவாவின் பேரரசுரிமைக்கு விரோதமாக கலகம் செய்த சமயத்தை எண்ணிப்பாருங்கள். அந்த மூன்று கலகக்காரராகிய ஆதாம், ஏவாள், சாத்தான் ஆகியோரை அழித்துவிடுவது கடவுளுக்கு எவ்வளவு சுலபமாக இருந்திருக்கும்! மேலும், அவ்வாறு செய்வதன்மூலம் தம்மைத்தாமே எவ்வளவு வேதனையிலிருந்து காத்துக்கொண்டிருக்கக்கூடும்! அவ்வளவு கண்டிப்பான நியாயத்தை வற்புறுத்துவதற்கு அவர் அதிகாரத்தைக் கொண்டிருக்கவில்லையென யார் வாதாடியிருக்க முடியும்? இருந்தபோதிலும், ஒரு உறுதியான, மாற்றியமைக்கப்படமுடியாத நியாயத் தராதரத்திற்குள்ளாக யெகோவா பரத்திற்குரிய தம்முடைய ரதம்போன்ற அமைப்பை ஒருபோதும் பூட்டி வைத்திருப்பதில்லை. ஆகவே மனித குடும்பத்தின்மீதும் மனிதகுலத்தின் மகிழ்ச்சியான எதிர்காலத்திற்கான எல்லா எதிர்நோக்குகள்மீதும் அந்த ரதம் இரக்கமற்றவிதத்தில் உருண்டுசென்று நசுக்கிப்போடவில்லை. அதற்கு நேர்மாறாக, யெகோவா மின்னல்போன்ற வேகத்தில் தம்முடைய ரதத்தைச் செயற்படுத்தினார். கலகம் நடந்தவுடனேயே, ஆதாமுடைய எல்லா சந்ததியினருக்கும் இரக்கத்தையும் நம்பிக்கையையும் அளித்த ஒரு நீண்டகால நோக்கத்தை யெகோவா தேவன் எடுத்துரைத்தார்.—ஆதியாகமம் 3:15.
8. (அ) நியாயத்தன்மையைப்பற்றிய கிறிஸ்தவமண்டலத்தின் தவறான நோக்கு எவ்வாறு யெகோவாவின் உண்மையான நியாயத்தன்மையோடு வேறுபட்டதாய் இருக்கிறது? (ஆ) யெகோவா தெய்வீக நியமங்களை விட்டுக்கொடுக்கக்கூடும் என்பதை அவருடைய நியாயத்தன்மை அர்த்தப்படுத்துவதில்லை என்று நாம் ஏன் சொல்லலாம்?
8 என்றாலும், யெகோவாவுடைய நியாயத்தன்மையானது, அவர் தெய்வீக நியமங்களை விட்டுக்கொடுத்துவிடுவார் என்று அர்த்தப்படுத்துவதில்லை. இன்றைய கிறிஸ்தவமண்டல சர்ச்சுகள், ஏறுமாறாகச் செல்லும் தங்கள் மந்தைகளின் ஆதரவைப் பெறுவதற்கென்று ஒழுக்கயீனத்தைக் கண்டும் காணாததுபோல் இருப்பதன்மூலம் நியாயத்தன்மையுடன் இருப்பதாய் நினைக்கக்கூடும். (2 தீமோத்தேயு 4:3-ஐ ஒப்பிடவும்.) யெகோவா ஒருபோதும் தம் சொந்த சட்டங்களை மீறுவதுமில்லை, தம்முடைய நியமங்களை விட்டுக்கொடுப்பதுமில்லை. மாறாக, வளைந்துகொடுப்பதற்கும், சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு மாற்றியமைத்துக்கொள்வதற்கும் மனமுள்ளவராய் இருப்பதைக் காண்பிக்கிறார்; இவ்விதமாக அந்தக் கொள்கைகள் நியாயமாகவும் இரக்கமாகவும் பொருத்திப் பிரயோகிக்கப்படக்கூடும். தம்முடைய நியாயத்தையும் வல்லமையையும் அவர் செயல்படுத்துகையில், அதைத் தம்முடைய அன்போடும் நியாயத்தன்மையுள்ள ஞானத்தோடும் சமநிலைப்படுத்திக்கொள்ள எப்போதும் கவனமாக இருக்கிறார். யெகோவா நியாயத்தன்மையை வெளிக்காட்டும் மூன்று வழிகளை நாம் ஆராய்வோம்.
“மன்னிப்பதற்குத் தயாராக” இருத்தல்
9, 10. (அ) “மன்னிப்பதற்குத் தயாராக” இருப்பதற்கும் நியாயத்தன்மைக்கும் என்ன தொடர்பிருக்கிறது? (ஆ) மன்னிப்பதற்குத் தயாராக இருக்கும் யெகோவாவின் குணத்திலிருந்து தாவீது எவ்வாறு பயனடைந்தார், ஏன்?
9 தாவீது எழுதினார்: “ஏனென்றால், யெகோவாவே, நீர் நல்லவரும் மன்னிப்பதற்குத் தயாராகவும் இருக்கிறீர்; உம்மை நோக்கிக் கூப்பிடுகிற எல்லாரிடத்திலும் மிகுந்த அன்பார்ந்த தயை உடையவராகவும் இருக்கிறீர்.” (சங்கீதம் 86:5, NW) எபிரெய வேத எழுத்துக்கள் கிரேக்கில் மொழிபெயர்க்கப்பட்டபோது, “மன்னிப்பதற்குத் தயாராக” என்பதற்கான வார்த்தை எப்பியய்கஸ், அல்லது “நியாயத்தன்மை உள்ள” என்பதாக மொழிபெயர்க்கப்பட்டது. உண்மையில், மன்னிப்பதற்குத் தயாராக இருந்து, இரக்கம் காண்பிப்பதே நியாயத்தன்மையை வெளிக்காட்டுவதற்கான முக்கியமான வழியாக இருக்கக்கூடும்.
10 இந்த அம்சத்தில் யெகோவா எவ்வளவு நியாயத்தன்மை உள்ளவராய் இருந்தார் என்று தாவீதுதாமே நன்கு அறிந்திருந்தார். தாவீது பத்சேபாளுடன் விபசாரம்செய்துவிட்டு, அவளுடைய கணவனை கொல்லவும் ஏற்பாடுசெய்தபோது, அவனும் பத்சேபாளும் மரண தண்டனைக்குப் பாத்திரராய் இருந்தனர். (உபாகமம் 22:22; 2 சாமுவேல் 11:2-27) கட்டுறுதியான மனித நியாயாதிபதிகள் அந்த வழக்கைக் கையாண்டிருந்தால், இருவரும் தங்கள் உயிரை இழந்திருப்பார்கள். ஆனால் யெகோவா நியாயத்தன்மையை (எப்பியய்கஸ்) காண்பித்தார்; வைன்ஸ் எக்ஸ்பாஸிட்டரி டிக்ஷனரி ஆஃப் பிப்லிக்கல் உவர்ட்ஸ் சொல்லுகிறபடி, அது “‘ஒரு வழக்கின் விவரங்களை மனிதாபிமானத்துடனும் நியாயத்தன்மையுடனும்’ பார்க்கக்கூடிய அந்தளவு அன்பாதரவை வெளிப்படுத்துகிறது.” தவறுசெய்தவர்களுடைய உண்மையான மனந்திரும்புதலும் தாவீதுதானே மற்றவர்களுக்காகக் காண்பித்த இரக்கமும், யெகோவாவின் இரக்கமான தீர்மானத்தைச் செல்வாக்கு செலுத்திய உண்மைகளில் அடங்கியிருந்திருக்கவேண்டும். (1 சாமுவேல் 24:4-6; 25:32-35; 26:7-11; மத்தேயு 5:7; யாக்கோபு 2:13) என்றாலும், யாத்திராகமம் 34:4-7-ல் யெகோவா தம்மைக் குறித்து கொடுத்திருக்கும் விளக்கத்திற்கு இசைவாக, யெகோவா தாவீதுக்குச் சிட்சைகொடுப்பார் என்பது நியாயமானதாக இருந்தது. அவர் ஒரு பலமான செய்தியுடன் தீர்க்கதரிசியாகிய நாத்தானை தாவீதிடம் அனுப்பினார்; தாவீது யெகோவாவின் வார்த்தையை அவமதித்திருந்தார் என்ற உண்மையை அவருக்குப் பதியவைத்தார். தாவீது மனந்திரும்பினார். அதனால் தன்னுடைய பாவத்திற்காக மரிக்கவில்லை.—2 சாமுவேல் 12:1-14.
-
-
யெகோவா நியாயத்தன்மை உடையவர்!காவற்கோபுரம்—1994 | ஆகஸ்ட் 1
-
-
a 1769-ல் அகராதி தொகுப்பாளரான ஜான் பார்க்கர்ஸ்ட் அந்த வார்த்தையை “வளைந்துகொடுக்கிற தன்மை, அல்லது வளைந்துகொடுக்கும் மனநிலை, கருணை, சாந்தம், பொறுமை,” என்பதாக வரையறுத்தார். மற்ற அறிஞர்களும் “வளைந்துகொடுக்கிற தன்மை” என்பதை ஒரு பொருள்விளக்கமாக அளித்திருக்கின்றனர்.
-