நீங்கள் யெகோவாவை மறந்துவிடக் கூடாது
அங்கிருந்த சிலருக்கு ஏற்கெனவே இதுபோன்ற அனுபவம் இருந்திருக்கிறது. ஆனால், பெரும்பாலோருக்கு இதுதான் முதல் அனுபவம். அவர்கள் கால் நனையாமலேயே ஆற்றுப்படுகையில் நடக்க ஆரம்பித்தார்கள். யோர்தான் நதியின் தண்ணீர் ஓடாமல் இரண்டு பக்கங்களிலும் மேலெழும்பி நிற்கும்படி யெகோவா செய்தார். லட்சக்கணக்கான இஸ்ரவேலர், ஆற்றுப்படுகை வழியாக வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்கு அணி திரண்டு சென்றார்கள். 40 வருடங்களுக்கு முன்னர் சிவந்த சமுத்திரத்தைக் கடந்தவர்கள் நினைத்தது போல யோர்தான் நதியைக் கடந்த அநேகரும், ‘யெகோவா செய்த இந்த அற்புதத்தை என்னால் மறக்கவே முடியாது’ என்று நினைத்திருக்க வேண்டும்.—யோசு. 3:13-17.
என்றாலும், இஸ்ரவேலரில் சிலர், ‘சீக்கிரமாய் தம்முடைய கிரியைகளை மறந்துவிடுவார்கள்’ என்பதை யெகோவா அறிந்திருந்தார். (சங். 106:13) ஆகவே, நதியின் நடுவிலிருந்து 12 கற்களை எடுத்து முதலில் கூடாரமிடப்போகும் இடத்தில் வைக்கும்படி இஸ்ரவேலரின் தலைவரான யோசுவாவுக்கு உத்தரவிட்டார். ‘இந்தக் கற்கள் இஸ்ரவேல் புத்திரருக்கு என்றைக்கும் நினைப்பூட்டும் அடையாளமாய் இருக்கும்’ என்று யோசுவா சொன்னார். (யோசு. 4:1-8) அந்தக் கற்கள், யெகோவாவின் மகத்தான செயல்களை இஸ்ரவேலருக்கு நினைப்பூட்டும்; அதோடு, அவரை எப்போதும் உண்மையுடன் சேவிப்பதற்கான காரணத்தையும் அவர்களுடைய மனதில் பதிய வைக்கும்.
இன்று கடவுளுடைய மக்கள் அந்தச் சம்பவத்திலிருந்து பாடம் கற்றுக்கொள்ள முடியுமா? முடியும். நாமும்கூட யெகோவாவை ஒருபோதும் மறக்காதிருக்க வேண்டும்; அதோடு, தொடர்ந்து அவருக்கு உண்மையுடன் சேவை செய்ய வேண்டும். இஸ்ரவேலருக்குக் கொடுக்கப்பட்ட மற்ற எச்சரிப்புகளும்கூட இன்றுள்ள யெகோவாவின் ஊழியர்களுக்குப் பொருந்துகின்றன. மோசே சொன்னதைக் கவனியுங்கள்: “உன் தேவனாகிய கர்த்தரை மறவாதபடிக்கும், நான் இன்று உனக்கு விதிக்கிற அவருடைய கற்பனைகளையும் நியாயங்களையும் கட்டளைகளையும் கைக்கொள்ளாமற்போகாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு.” (உபா. 8:11) யெகோவாவை மறந்துவிடுவது அவருக்கு வேண்டுமென்றே கீழ்ப்படியாமல் போவதற்கு வழிநடத்தும் என்பதை இது காட்டுகிறது. இன்று நமக்கும்கூட இப்படிப்பட்ட ஆபத்து இருக்கிறது. அப்போஸ்தலன் பவுல் கிறிஸ்தவர்களுக்கு எழுதுகையில், இஸ்ரவேலர் வனாந்தரத்தில் காண்பித்த “கீழ்ப்படியாமையை” குறித்து எச்சரித்தார்.—எபி. 4:8–11.
நாம் கடவுளை மறந்துவிடக் கூடாது என்பதை வலியுறுத்திக் காட்டுகிற சில சம்பவங்களை இஸ்ரவேலரின் சரித்திரத்திலிருந்து இப்போது புரட்டிப் பார்க்கலாம். அதுமட்டுமல்ல, சகிப்புத்தன்மையோடும் நன்றியுணர்வோடும் யெகோவாவைச் சேவிக்க நமக்கு உதவும் பாடங்களை உண்மையுள்ள இரண்டு இஸ்ரவேலரின் வாழ்க்கையிலிருந்து கற்றுக்கொள்ளலாம்.
யெகோவாவை நினைவில் வைப்பதற்குக் காரணங்கள்
இஸ்ரவேலர் எகிப்தில் வாழ்ந்த காலமெல்லாம் யெகோவா அவர்களை ஒருபோதும் மறக்கவில்லை. அவர், “ஆபிரகாமோடும் ஈசாக்கோடும் யாக்கோபோடும் செய்த உடன்படிக்கையை நினைவுகூர்ந்தார்.” (யாத். 2:23, 24) இஸ்ரவேலரை அடிமைத்தனத்திலிருந்து விடுவிப்பதற்காக அப்போது அவர் செய்தவை உண்மையிலேயே மறக்கக்கூடாதவை.
அவர் எகிப்தில் ஒன்பது வாதைகளைக் கொண்டுவந்தார். பார்வோனுடைய மந்திரவாதிகளால் அந்த வாதைகளைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. அப்படியிருந்தும், பார்வோன் யெகோவாவை எதிர்த்து, இஸ்ரவேலரைப் போகவிடாமல் தடுத்தான். (யாத். 7:14–10:29) என்றாலும், பத்தாவது வாதை தாக்கியபோது, கர்வம்பிடித்த பார்வோன் கடவுளுடைய விருப்பத்துக்கு அடிபணியும் கட்டாயத்திற்கு ஆளானான். (யாத். 11:1-10; 12:12) மோசேயின் தலைமையில், இஸ்ரவேலரும் பல ஜாதியான மற்ற ஜனங்களும் எகிப்தைவிட்டுப் புறப்பட்டார்கள்; அவர்கள் மொத்தமாக 30,00,000 பேர் இருந்திருக்கலாம். (யாத். 12:37, 38) அவர்கள் அங்கிருந்து கிளம்பியதும் பார்வோன் தன் மனதை மாற்றிக்கொண்டான். அவன் தன்னுடைய அடிமைகளாக இருந்திருந்த இஸ்ரவேலரை மறுபடியும் பிடித்துக்கொண்டு வரும்படி ஆயுதங்கள் பூட்டப்பட்ட ரதங்களின் சேனைக்கும் குதிரைகளின் சேனைக்கும் கட்டளையிட்டான்; அவை அக்காலத்து சேனைகளிலேயே மிகவும் பலம்படைத்தவையாக இருந்தன. இதற்கிடையே, இஸ்ரவேலரை ஈரோத் என்ற சிறிய பகுதிக்குக் கொண்டுசெல்லும்படி யெகோவா மோசேயிடம் சொன்னார்; ஆனால், அது சிவந்த சமுத்திரத்திற்கும் மலைத்தொடர்களுக்கும் இடைப்பட்ட பகுதியாக இருந்ததால் அங்கிருந்து தப்பிக்க வழியே இல்லாததுபோல் இஸ்ரவேலருக்குத் தோன்றியது.—யாத். 14:1-9.
இஸ்ரவேலர் வசமாக மாட்டிக்கொண்டதாக பார்வோன் நினைத்தான்; அவனுடைய சேனைகள் அவர்களைத் தாக்க விரைந்து வந்துகொண்டிருந்தன. ஆனால், எகிப்தியருக்கும் இஸ்ரவேலருக்கும் நடுவே மேக ஸ்தம்பத்தையும் அக்கினி ஸ்தம்பத்தையும் யெகோவா வைத்தார். பிறகு, சிவந்த சமுத்திரத்தை இரண்டாகப் பிளந்தார்; இரு பக்கங்களிலும் தண்ணீர் சுமார் 50 அடி உயரத்திற்கு மதில்போல் நின்றது. இவற்றிற்கு இடையே இருந்த வறண்ட கடல்படுகை வழியாக இஸ்ரவேலர் நடந்துசெல்ல ஆரம்பித்தார்கள். சீக்கிரத்திலேயே எகிப்தியர் கடற்கரைக்கு வந்து சேர்ந்தார்கள்; இஸ்ரவேலர் அக்கரையை நோக்கிப் போய்க்கொண்டிருந்ததை அவர்கள் பார்த்தார்கள்.—யாத். 13:21; 14:10-22.
யோசித்துச் செயல்படுகிற எந்தவொரு ராஜாவும் அங்கிருந்து திரும்பிப் போயிருப்பார்; ஆனால் பார்வோன் அப்படிச் செய்யவில்லை. அளவுக்குமீறிய தன்னம்பிக்கையுடன், தன்னுடைய ரதங்களோடும் குதிரைவீரர்களோடும் சேர்ந்து கடல்படுகையில் இறங்கினான். அவர்கள் இஸ்ரவேலரை வெறித்தனமாகத் துரத்திக்கொண்டே சென்றனர். ஆனால், இஸ்ரவேலரின் அணிவரிசையில் பின்னாகச் சென்றுகொண்டிருந்தவர்களைக்கூட அவர்களால் நெருங்க முடியவில்லை. அதற்குள்ளாக அவர்களுடைய ரதங்களின் ஓட்டம் நின்றுபோனது. யெகோவா அவற்றின் சக்கரங்களைக் கழன்றுபோகும்படி செய்தார்.—யாத். 14:23-25; 15:9.
சக்கரங்கள் கழன்ற இரதங்களோடு எகிப்தியர் திண்டாடுகையில், இஸ்ரவேலர் எல்லாரும் கிழக்குக் கரையை அடைந்துவிட்டார்கள். மோசே தன்னுடைய கையை சிவந்த சமுத்திரத்தின்மேல் நீட்டினார். உடனே, மதில்போல் நின்றுகொண்டிருந்த தண்ணீர் கடல்படுகையை மூடிவிட்டது. லட்சக்கணக்கான டன் எடையுள்ள தண்ணீர் பாய்ந்துவந்து பார்வோனையும் அவனுடைய சேனைகளையும் மூழ்கடித்துவிட்டது. அவர்களில் ஒருவர்கூட தப்பவில்லை. இஸ்ரவேலருக்கு எப்பேர்ப்பட்ட விடுதலை!—யாத். 14:26-28; சங். 136:13-15.
இச்சம்பவம் நடந்து பல காலத்திற்குப் பிறகும்கூட சுற்றுப்புற தேசத்தார் அதை நினைத்து கதிகலங்கிப் போயிருந்தார்கள். (யாத். 15:14-16) நாற்பது வருடங்களுக்குப் பிறகு எரிகோ பட்டணத்தைச் சேர்ந்த ராகாப் இரண்டு இஸ்ரவேலரிடம் இவ்வாறு சொன்னார்: ‘உங்களைப்பற்றி எங்களுக்குத் திகில் பிடித்திருக்கிறது, . . . நீங்கள் எகிப்திலிருந்து புறப்பட்டபோது, கர்த்தர் உங்களுக்கு முன்பாக சிவந்த சமுத்திரத்தின் தண்ணீரை வற்றிப்போகப்பண்ணினதை . . . கேள்விப்பட்டோம்.’ (யோசு. 2:9, 10) யெகோவா தம் மக்களை எப்படி மீட்டார் என்பதை அந்தப் புறதேசத்தார்கூட மறக்கவில்லை. அப்படியிருக்க இஸ்ரவேலர் யெகோவாவை மறக்காதிருப்பதற்கு இன்னுமதிக காரணங்கள் இருக்கின்றன, அல்லவா?
‘தமது கண்மணியைப் போலக் காத்தருளினார்’
இஸ்ரவேலர்கள் சிவந்த சமுத்திரத்தைக் கடந்த பிறகு சீனாய் வனாந்தரத்திற்குள் நுழைந்தார்கள்; அது ‘பயங்கரமான பெரிய வனாந்தரமாக’ இருந்தது. அத்தனை பேரும் ‘தண்ணீரில்லாத வறட்சியுள்ள’ அந்தப் பகுதியில் உண்ண உணவின்றி நடந்து சென்றார்கள்; ஆனால் யெகோவா அவர்களைக் கைவிடவில்லை. ‘பாழான நிலத்திலும் ஊளையிடுதலுள்ள வெறுமையான அவாந்தரவெளியிலும் [யெகோவா] [இஸ்ரவேலைக்] கண்டுபிடித்தார், அவனை நடத்தினார், அவனை உணர்த்தினார் [“பாதுகாத்துப் பேணினார்,” NW], அவனைத் தமது கண்மணியைப் போலக் காத்தருளினார்’ என்று மோசே சொன்னார். (உபா. 8:15; 32:10) யெகோவா அவர்களை எப்படிப் பாதுகாத்துப் பேணினார்?
அவர் அவர்களுக்கு அற்புதமாக ‘வானத்திலிருந்து அப்பத்தை’ கொடுத்தார்; மன்னா என்று அழைக்கப்பட்ட அது “வனாந்தரத்தின்மீதெங்கும் . . . கிடந்தது.” (யாத். 16:4, 14, 15, 35) யெகோவா “பாறையான கன்மலையிலிருந்து தண்ணீர்” பெருக்கெடுக்கும்படியும் செய்தார். வனாந்தரத்தில் 40 வருடங்களைச் செலவிட்டபோது அவர்கள் அணிந்திருந்த உடை பழையதாய்ப் போகவும் இல்லை, அவர்கள் கால் வீங்கவும் இல்லை. (உபா. 8:4) அதற்கு நன்றியாக அவர்கள் என்ன செய்ய வேண்டுமென யெகோவா எதிர்பார்த்தார்? இஸ்ரவேலர்களிடம் மோசே இவ்வாறு சொன்னார்: “உன் கண்கள் கண்ட காரியங்களை நீ மறவாதபடிக்கும், உன் ஜீவனுள்ள நாளெல்லாம் அவைகள் உன் இருதயத்தை விட்டு நீங்காதபடிக்கும் நீ எச்சரிக்கையாயிருந்து, உன் ஆத்துமாவைச் சாக்கிரதையாய்க் காத்துக்கொள்.” (உபா. 4:10) ஆகவே, யெகோவா தங்களைக் காப்பாற்றியதை இஸ்ரவேலர்கள் நன்றியோடு ஞாபகத்தில் வைத்திருந்தால் அவர்கள் எப்போதும் அவரைச் சேவித்து அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்திருப்பார்கள். ஆனால், அவர்கள் என்ன செய்தார்கள்?
மறப்பது நன்றியில்லாதவர்களாக ஆக்கிவிடும்
“உன்னை ஜெநிப்பித்த கன்மலையை நீ நினையாமற்போனாய்; உன்னைப் பெற்ற தேவனை மறந்தாய்” என்று மோசே அறிவித்தார். (உபா. 32:18) இஸ்ரவேலர்களுக்காக யெகோவா சிவந்த சமுத்திரத்தைப் பிளந்தார், வனாந்தரத்தில் உயிர்பிழைக்கத் தேவையானவற்றைத் தந்தார், இன்னும் எத்தனையோ நன்மைகளைச் செய்தார்; ஆனாலும், அவர்கள் எல்லாவற்றையும் சீக்கிரத்தில் மறந்துவிட்டு அல்லது புறக்கணித்துவிட்டு, கலகம் செய்ய ஆரம்பித்தார்கள்.
ஒரு சந்தர்ப்பத்தில், தண்ணீர் கிடைக்க வழியே இல்லையென நினைத்து மோசேயுடன் சண்டை போட்டார்கள். (எண். 20:2-5) அவர்கள் உயிர்வாழ்வதற்குக் கொடுக்கப்பட்ட உணவான மன்னாவைக் குறித்து, “இந்த அற்பமான உணவு எங்கள் மனதுக்கு வெறுப்பாயிருக்கிறது” என்று சொல்லி முறுமுறுத்தார்கள். (எண். 21:5) யெகோவாவின் தீர்மானத்தைக் குறித்து கேள்வியெழுப்பினார்கள்; அதோடு, மோசேயை தங்கள் தலைவராக ஏற்றுக்கொள்ள மறுத்து, “எகிப்து தேசத்திலே செத்துப்போனோமானால் நலமாயிருக்கும்; இந்த வனாந்தரத்திலே நாங்கள் செத்தாலும் நலம். . . . நாம் ஒரு தலைவனை ஏற்படுத்திக்கொண்டு எகிப்துக்குத் திரும்பிப்போவோம் வாருங்கள்” என்று ஒருவரோடொருவர் சொல்லிக்கொண்டார்கள்.—எண். 14:2-4.
இஸ்ரவேலர்கள் கீழ்ப்படியாமல் போனதைப் பார்த்து யெகோவா எப்படி உணர்ந்தார்? அந்தச் சம்பவங்களைக் குறித்து ஒரு சங்கீதக்காரன் பிற்பாடு இவ்வாறு எழுதினார்: “அந்த ஜனங்கள் பாலைவனத்தில் தேவனுக்கு மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தினார்கள்! அவருக்கு மிகுந்த விசனமடையச் செய்தார்கள். மீண்டும் மீண்டும் அந்த ஜனங்கள் தேவனுடைய பொறுமையைச் சோதித்தார்கள். இஸ்ரவேலின் பரிசுத்தரை அவர்கள் உண்மையாகவே புண்படுத்தினார்கள். தேவனுடைய வல்லமையை அந்த ஜனங்கள் மறந்து விட்டார்கள். பகைவரிடமிருந்து பலமுறை தேவன் அவர்களைக் காத்தார் என்பதை அவர்கள் மறந்தார்கள். எகிப்தில் ஆண்டவர் நடத்திய அற்புதங்களை . . . மறந்தார்கள்.” (சங். 78:40-43, ஈஸி டு ரீட் வர்ஷன்) ஆம், இஸ்ரவேலர்கள் யெகோவாவை மறந்தது அவரை மிகவும் விசனப்படுத்தியது.
மறக்காமல் இருந்த இருவர்
என்றாலும், சில இஸ்ரவேலர்கள் யெகோவாவை மறக்கவில்லை. அவர்களில் இருவர்தான் யோசுவாவும் காலேபும். வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தை வேவுபார்க்க காதேஸ்பர்னெயாவிலிருந்து அனுப்பப்பட்ட 12 பேரில் இவர்களும் இருந்தார்கள். அவர்களில் 10 பேர் திரும்பிவந்து, மக்களின் நம்பிக்கையைக் குலைக்கும் விதத்தில் விஷயங்களை விவரித்தார்கள். ஆனால் யோசுவாவும் காலேபும், “நாங்கள் போய்ச் சுற்றிப்பார்த்து சோதித்த தேசம் மகா நல்ல தேசம். கர்த்தர் நம்மேல் பிரியமாயிருந்தால், அந்தத் தேசத்திலே நம்மைக் கொண்டுபோய், பாலும் தேனும் ஓடுகிற அந்தத் தேசத்தை நமக்குக் கொடுப்பார். கர்த்தருக்கு விரோதமாக மாத்திரம் கலகம்பண்ணாதிருங்கள்” என்றார்கள். ஆனால் மக்கள் இதைக் கேட்டபோது, யோசுவாமீதும் காலேபின்மீதும் கல்லெறிய வேண்டுமெனப் பேசிக்கொண்டார்கள். என்றாலும், அவர்கள் இருவரும் யெகோவாமீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருந்தார்கள்.—எண். 14:6-10.
பல வருடங்களுக்குப் பிறகு யோசுவாவிடம் காலேப் இவ்வாறு சொன்னார்: ‘தேசத்தை வேவுபார்க்கக் கர்த்தரின் தாசனாகிய மோசே என்னைக் காதேஸ்பர்னெயாவிலிருந்து அனுப்பினார்; . . . என் இருதயத்திலுள்ளபடியே அவருக்கு மறுசெய்தி கொண்டுவந்தேன். ஆனாலும் என்னோடேகூட வந்த என் சகோதரர் ஜனத்தின் இருதயத்தைக் கரையப்பண்ணினார்கள்; நானோ என் தேவனாகிய கர்த்தரை உத்தமமாய்ப் பின்பற்றினேன்.’ (யோசு. 14:6-8) யோசுவாவும் காலேபும் கடவுள்மீது நம்பிக்கை வைத்து பல கஷ்டங்களைச் சகித்தார்கள். தங்கள் வாழ்நாள் காலமெல்லாம் யெகோவாவை மறக்காதிருக்க தீர்மானமாய் இருந்தார்கள்.
யெகோவா தம் மக்களை வளமான தேசத்திற்குக் கொண்டுசெல்வதாகக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியதற்காக அவர்கள் இருவரும் நன்றியுள்ளவர்களாகவும் இருந்தார்கள். உண்மையில், உயிரோடு இருந்ததற்காக இஸ்ரவேலர்கள் எல்லாருமே யெகோவாவுக்கு நன்றி காட்டியிருந்திருக்க வேண்டும். “கர்த்தர் இஸ்ரவேலுக்குக் கொடுப்பேன் என்று அவர்களுடைய பிதாக்களுக்கு ஆணையிட்ட தேசத்தையெல்லாம் கொடுத்தார்; . . . கர்த்தர் இஸ்ரவேல் குடும்பத்தாருக்குச் சொல்லியிருந்த நல்வார்த்தைகளிலெல்லாம் ஒரு வார்த்தையும் தவறிப்போகவில்லை; எல்லாம் நிறைவேறிற்று” என்று யோசுவா எழுதினார். (யோசு. 21:43, 45) காலேபையும் யோசுவாவையும்போல் இன்று நாம் எப்படிக் கடவுளுக்கு நன்றியைக் காட்டலாம்?
நன்றியோடு இருங்கள்
“கர்த்தர் எனக்குச் செய்த எல்லா உபகாரங்களுக்காகவும், அவருக்கு என்னத்தைச் செலுத்துவேன்” என்று தேவபயமுள்ள ஒருவர் கேட்டார். (சங். 116:12) கடவுள் நமக்குக் கொடுத்திருக்கிற எல்லாக் காரியங்களுக்காகவும், நமக்கு அளித்திருக்கிற ஆன்மீக வழிநடத்துதலுக்காகவும், எதிர்காலத்தில் நம்மை மீட்பதற்காகச் செய்திருக்கிற ஏற்பாட்டிற்காகவும் நாம் எத்தனை முறை நன்றி சொன்னாலும், ஏன், நித்திய காலத்திற்கு நன்றி சொன்னாலும் போதாது. உண்மையில், இவற்றிற்கெல்லாம் ஈடாக நம்மால் யெகோவாவுக்கு எதுவும் செய்ய முடியாது. ஆனால், நம் அனைவராலும் அவருக்கு நன்றிகாட்ட முடியும்.
யெகோவாவின் அறிவுரைகள் பிரச்சினைகளைத் தவிர்க்க உங்களுக்கு உதவியிருக்கின்றனவா? அவருடைய மன்னிப்பினால் நீங்கள் சுத்தமான மனசாட்சியைப் பெற முடிந்திருக்கிறதா? யெகோவா செய்யும் இப்படிப்பட்ட உதவிகளால் கிடைக்கும் நன்மைகள் நீடித்தவை, அவற்றிற்காக நீங்கள் காட்டும் நன்றியும் நீடித்ததாய் இருக்க வேண்டும். சான்ட்ரா என்ற 14 வயது பெண் பெரிய பிரச்சினைகளைச் சந்தித்தாள், ஆனால் யெகோவாவின் உதவியோடு அவற்றைச் சமாளித்தாள். அவள் சொல்வதாவது: “உதவிக்காக நான் யெகோவாவிடம் ஜெபம் செய்தேன், அதன்பின் அவர் உதவிய விதத்தைப் பார்த்து அசந்துபோனேன். என் அப்பா நீதிமொழிகள் 3:5, 6-ஐ ஏன் அடிக்கடி ஞாபகப்படுத்தினார் என்பது இப்போதுதான் புரிகிறது. ‘உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்’ என்று அந்த வசனம் சொல்கிறது. யெகோவா இதுவரை எனக்கு எப்படி உதவினாரோ அப்படியே இனியும் உதவுவார் என்று முழுமையாக நம்புகிறேன்.”
சகித்திருப்பது யெகோவாவை மறக்காதிருப்பதைக் காட்டுகிறது
யெகோவாவை மறக்காதிருப்பதற்கு அவசியமான இன்னொரு குணத்தை பைபிள் இவ்வாறு வலியுறுத்திக் காட்டுகிறது: “நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இருக்கும்படி, பொறுமையானது [“சகிப்புத்தன்மையானது,” NW] பூரண கிரியை செய்யக்கடவது.” (யாக். 1:4) நாம் எல்லாவற்றிலும் “பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும்” இருக்க என்ன செய்ய வேண்டும்? யெகோவா உதவுவார் என்ற நம்பிக்கையோடும், என்ன நடந்தாலும் சமாளிக்கலாம் என்ற மனஉறுதியோடும் சோதனைகளைச் சந்திப்பதற்குத் தேவையான குணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். இவ்விதத்தில் சகிப்புத்தன்மை காட்டினால், விசுவாசப் பரீட்சைகளின் முடிவில் மிகுந்த மனத்திருப்தி கிடைக்கும். அப்படிப்பட்ட விசுவாசப் பரீட்சைகள் ஒரு முடிவுக்கு வராமல் போவதில்லை.—1 கொ. 10:13.
எத்தனையோ வியாதிகளின் மத்தியிலும் வெகு காலமாக யெகோவாவுக்கு ஊழியம் செய்து வந்திருக்கும் ஒருவர், தான் சகித்திருப்பதற்கு எது உதவியதென சொல்கிறார்: “நான் என்ன செய்ய விரும்புகிறேன் என்பதை யோசிக்காமல், யெகோவா என்ன செய்துகொண்டிருக்கிறார் என்பதை யோசிக்க முயற்சி செய்கிறேன். என் விருப்பங்கள்மேல் கவனம் செலுத்தாமல் கடவுளுடைய நோக்கங்கள்மேல் கவனம் செலுத்துவதுதான் என் உத்தமத்தைக் காட்ட வழியென நினைக்கிறேன். ஆகவே, பிரச்சினைகளைச் சந்திக்கும்போது, ‘யெகோவாவே, எனக்கு ஏன் இந்தக் கஷ்டம்?’ என்று கேட்பதற்குப் பதிலாக, தொடர்ந்து அவருக்கு ஊழியம் செய்கிறேன்; எதிர்பாராத பிரச்சினைகள் வந்தாலும் அவர்மேல் நம்பிக்கையாகவே இருக்கிறேன்.”
இன்றுள்ள உண்மைக் கிறிஸ்தவர்கள் யெகோவாவை “அவருடைய சக்தியின் வழிநடத்துதலோடும் சத்தியத்தோடும்” வணங்குகிறார்கள். (யோவா. 4:23, 24, NW) இஸ்ரவேலர் கடவுளை மறந்ததுபோல், இவர்கள் ஒரு தொகுதியாக கடவுளை ஒருபோதும் மறக்க மாட்டார்கள். ஆனால், நாம் சபையின் பாகமாக இருக்கிறோம் என்பதற்காக கடவுளுக்கு உத்தமமாக நிலைத்திருப்போம் என்று அர்த்தமாகிவிடாது. காலேபையும் யோசுவாவையும்போல் நாம் ஒவ்வொருவரும் யெகோவாவுக்கு நன்றியுள்ளவர்களாக இருந்து அவரது சேவையில் நிலைத்திருக்க வேண்டும். இந்தக் கஷ்ட காலத்திலும் யெகோவா தொடர்ந்து நம்மை வழிநடத்தி கவனித்துக்கொள்வதால் நாம் அப்படிச் செய்வது தகுந்ததே.
யோசுவா நினைப்பூட்டுதலுக்காக வைத்த கற்களைப்போல், கடவுள் தம் மக்களைக் காப்பாற்றியதைப் பற்றிய பதிவுகள், அவர் தமது மக்களைக் கைவிட மாட்டாரென்ற உறுதியை நமக்கு அளிக்கின்றன. ஆகவே, சங்கீதக்காரனைப்போல் நீங்களும் இப்படிச் சொல்வீர்களாக: “கர்த்தருடைய செயல்களை நினைவுகூருவேன், உம்முடைய பூர்வகாலத்து அதிசயங்களையே நினைவுகூருவேன்; உம்முடைய கிரியைகளையெல்லாம் தியானித்து, உம்முடைய செயல்களை யோசிப்பேன்.”—சங். 77:11, 12.
[பக்கம் 7-ன் படம்]
முழு தேசமும் ‘தண்ணீரில்லாத வறட்சியுள்ள’ பகுதியில் நடந்து செல்ல வேண்டியிருந்தது
[படத்திற்கான நன்றி]
Pictorial Archive (Near Eastern History) Est.
[பக்கம் 8-ன் படம்]
இஸ்ரவேலர்கள் காதேஸ்பர்னெயாவில் கூடாரமிட்டிருந்தபோது, வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தை வேவுபார்க்க ஆட்கள் அனுப்பப்பட்டார்கள்
[படத்திற்கான நன்றி]
Pictorial Archive (Near Eastern History) Est.
[பக்கம் 9-ன் படம்]
பல வருடங்களாக வனாந்தரத்தில் இருந்தபின், வளமான தேசத்திற்குக் கொண்டு செல்லப்பட்டதற்காக இஸ்ரவேலர்கள் நன்றியுடன் இருந்திருக்க வேண்டும்
[படத்திற்கான நன்றி]
Pictorial Archive (Near Eastern History) Est.
[பக்கம் 10-ன் படம்]
யெகோவாவின் நோக்கங்கள்மீது கவனம் செலுத்துவது எப்பேர்ப்பட்ட பிரச்சினைகளையும் சகித்திருக்க நமக்கு உதவும்