விழிப்புடனும் சுறுசுறுப்புடனும் இருங்கள்!
“மனுஷகுமாரன் வரும் நாளையாவது நாழிகையையாவது நீங்கள் அறியாதிருக்கிறபடியால் தொடர்ந்து விழித்திருங்கள்.”—மத்தேயு 25:13, NW.
1. அப்போஸ்தலன் யோவான் எதை எதிர்பார்த்தார்?
“நான் சீக்கிரமாய் வருகிறேன்.” இது பைபிளில் காணப்படும் கடைசி உரையாடலில் இயேசு கொடுத்த வாக்குறுதி. அப்போஸ்தலன் யோவான்: “ஆமென், கர்த்தராகிய இயேசுவே, வாரும்” என்று பதிலளித்தார். இயேசு வருவார் என்பதில் அந்த அப்போஸ்தலனுக்கு எந்தவித சந்தேகமுமில்லை. இயேசுவிடம் இவ்வாறு கேட்ட அப்போஸ்தலர்களில் யோவானும் ஒருவர்: “இந்தக் காரியங்கள் எப்போது சம்பவிக்கும், உம்முடைய வந்திருத்தலுக்கும் [கிரேக்கில்: பரோஸியா] இந்தக் காரிய ஒழுங்குமுறையின் முடிவுக்கும் அடையாளம் என்ன?” ஆம், இயேசுவின் எதிர்கால வந்திருத்தலை நம்பிக்கையோடு யோவான் எதிர்பார்த்தார்.—வெளிப்படுத்துதல் 22:20; மத்தேயு 24:3, NW.
2. இயேசுவின் வந்திருத்தலை குறித்து, சர்ச்சுகளில் நிலைமை என்ன?
2 இக்காலத்தில் இத்தகைய நம்பிக்கை மிகவும் அரிதே. இயேசுவின் ‘வருகையைப்’ பற்றிய அதிகாரப்பூர்வமான கோட்பாடு பல சர்ச்சுகளில் இருக்கிறது. ஆனால், அவற்றின் உறுப்பினர்களோ அதை உண்மையில் எதிர்பார்ப்பதில்லை; அவர்களின் வாழ்க்கையும் அதைத்தான் காட்டுகிறது. புதிய ஏற்பாட்டில் பரோஸியா (ஆங்கிலம்) என்ற புத்தகம் இவ்வாறு குறிப்பிடுகிறது: “சர்ச்சின் வாழ்க்கையிலும் சிந்தனையிலும் செயலிலும் பரோஸியா நம்பிக்கையின் அர்த்தமுள்ள பாதிப்பு அதிகமில்லை. . . . மனந்திரும்புதலுக்கும் சுவிசேஷ மிஷனரி அறிவிப்புக்கும் உரிய அதன் வேலைகளை சர்ச் ஏற்று நிறைவேற்ற வேண்டும். ஆனால் இந்த வேலைகளில் சர்ச்சினுடைய அவசரத்தன்மையின் தீவிரம் முழுமையாக இழக்கப்படாவிட்டாலும் அது குறைந்திருக்கிறது,” ஆனால் எல்லாருக்கும் அவ்வாறில்லை!
3. (அ) பரோஸியாவைப் பற்றி உண்மையான கிறிஸ்தவர்கள் எவ்வாறு உணருகிறார்கள்? (ஆ) எதை முக்கியமாக இப்போது ஆலோசிப்போம்?
3 இயேசுவின் உண்மையான சீஷர்கள், தற்போதைய இந்தப் பொல்லாதக் காரிய ஒழுங்குமுறையின் முடிவுக்காக ஆவலோடு காத்திருக்கிறார்கள். உண்மை பற்றுறுதியுடன் அவ்வாறு இருக்கையில், இயேசுவின் வந்திருத்தலில் உட்பட்டுள்ள எல்லாவற்றினிடமாகவும் சரியான மனப்பான்மையை நாம் கொண்டிருக்க வேண்டும். மேலுமாக அதற்கேற்ப செயல்படவும் வேண்டும். இவ்வாறு செய்வது ‘முடிவுபரியந்தம் நிலைநின்று இரட்சிக்கப்படும்படி’ நமக்கு உதவிசெய்யும். (மத்தேயு 24:13) மத்தேயு 24, 25 அதிகாரங்களில் நாம் காண்கிற இந்தத் தீர்க்கதரிசனத்தை இயேசு சொல்லிக்கொண்டிருந்தார். அந்த சமயத்தில் நமக்கு நிரந்தரமான நன்மை உண்டாக, நாம் பொருத்திப் பயன்படுத்த இயலும் ஞானமான அறிவுரையையும் இயேசு கொடுத்தார். 25-ஆம் அதிகாரத்தில் (புத்தியுள்ளவர்களும் புத்தியில்லாதவர்களுமான) பத்துக் கன்னிகைகளைப் பற்றிய உவமையும் தாலந்துகளைப் பற்றிய உவமையும் இருக்கின்றன. இவை உங்களுக்குப் பெரும்பாலும் தெரிந்த உவமைகள்தான். (மத்தேயு 25:1-30) அந்த விளக்க உதாரணங்களிலிருந்து நாம் எவ்வாறு பயனடையலாம்?
ஐந்து கன்னிகைகளைப்போல் விழிப்புடன் இருங்கள்!
4. கன்னிகைகளைப் பற்றிய உவமையின் முக்கிய கருத்தென்ன?
4 மத்தேயு 25:1-13-ல் காணப்படுகிற, கன்னிகைகளைப் பற்றிய உவமையை நீங்கள் திரும்பவும் வாசிக்க விரும்பலாம். அதன் சூழமைவு சிறப்பான யூத திருமணம். மணவாட்டியை மணவாளனுடைய வீட்டுக்கு (அல்லது தன் தகப்பனுடைய வீட்டுக்கு) அழைத்து வர, பெண் வீட்டுக்கு மணவாளன் செல்கிறார். அத்தகைய ஊர்வலத்தில் இசைக் கலைஞர்களும் பாடகர்களும் இருந்திருக்கலாம். அக்குழுவினர் வந்துசேரும் நேரம் திட்டமாக தெரியாது. இந்த உவமையில், மணவாளனின் வருகைக்காக பத்துக் கன்னிகைகள் ஜாமம் வரை காத்திருந்தார்கள். அவர்களில் புத்தியில்லாத ஐந்துபேர் தீவட்டிகளுக்கு போதிய எண்ணெய் கொண்டுவரவில்லை; அதனால் கடைக்குச் சென்று வாங்கி வரவேண்டியதாயிற்று. மற்ற ஐந்துபேரோ தீவட்டிகளுக்கு எண்ணெய் தீர்ந்தால் ஊற்றுவதற்கென கூடுதலாகவும் கொண்டுவந்திருந்தார்கள். மணவாளன் வந்துசேர்ந்தபோது, இந்த ஐந்துபேர் மாத்திரமே தயாராக இருந்தார்கள். ஆகையால், அவர்கள் மாத்திரமே விருந்துக்கு அனுமதிக்கப்பட்டார்கள். புத்தியில்லாத ஐந்து கன்னிகைகள் திரும்பிவந்தபோது, பூட்டிய கதவுதான் அவர்களை வரவேற்றது.
5. கன்னிகைகளைப் பற்றிய உவமையின் அடையாள அர்த்தத்தைப் புரிந்துகொள்ள எந்த வசனங்கள் நமக்கு உதவிசெய்கின்றன?
5 இந்த உவமையின் பல அம்சங்கள் அடையாள அர்த்தமுடையவை என்பதைப் புரிந்துகொள்ளலாம். உதாரணமாக, இயேசுவை மணவாளராக வேதவசனங்கள் பேசுகின்றன. (யோவான் 3:28-30) திருமண விருந்து ஆயத்தம் செய்யப்பட்ட ஓர் அரச குமாரனுக்கு இயேசு தம்மை ஒப்பிட்டார். (மத்தேயு 22:1-14) மேலும், கிறிஸ்துவை ஒரு புருஷனுக்கு பைபிள் ஒப்பிடுகிறது. (எபேசியர் 5:23) அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் வேறொரு இடத்தில் கிறிஸ்துவின் “மணவாட்டி” என விவரிக்கப்பட்டிருக்கின்றனர்; ஆனால் இந்த உவமை ஒரு மணவாட்டியை குறிப்பிடுகிறதில்லை. (யோவான் 3:29; வெளிப்படுத்துதல் 19:7; 21:2, 9) எனினும், அது பத்து கன்னிகைகளைப் பற்றி பேசுகிறது. வேறு இடங்களில், கிறிஸ்துவுக்கு மணம் செய்ய நிச்சயிக்கப்பட்ட ஒரு கன்னிகைக்கு அபிஷேகம் செய்யப்பட்டவர்கள் ஒப்பிடப்படுகிறார்கள்.—2 கொரிந்தியர் 11:2. a
6. கன்னிகைகளைப் பற்றிய உவமையைச் சொல்லி முடித்தபோது என்ன அறிவுரையை இயேசு கொடுத்தார்?
6 இந்த உவமையில் இத்தகைய நுட்பவிவரங்களும் தீர்க்கதரிசன பொருத்தங்களும் மட்டுமல்ல, நாம் கற்றுக்கொள்ளக்கூடிய சிறந்த நியமங்களும் இருக்கின்றன. உதாரணமாக, இயேசு இந்த வார்த்தைகளுடன் முடித்ததை கவனியுங்கள்: “அந்த நாளையாவது நாழிகையையாவது நீங்கள் அறியாதிருக்கிறபடியால் தொடர்ந்து விழித்திருங்கள்.” ஆகவே, இந்தப் பொல்லாத ஒழுங்குமுறைக்கு முடிவு நெருங்கிவருகையில், நாம் ஒவ்வொருவரும் விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டியதன் அவசியத்தை இந்த உவமை தெரிவிக்கிறது. திட்டவட்டமான தேதியை சொல்ல முடியாதபோதிலும், இந்த முடிவு வருகிறது என்பதில் சந்தேகமில்லை. இதன் சம்பந்தமாக, இரண்டு தொகுதிகளாக இருந்த அந்தக் கன்னிகைகள் வெளிப்படுத்திய மனப்பான்மைகளை கவனியுங்கள்.
7. எந்தக் கருத்தில் அந்த உவமையில் குறிப்பிடப்பட்ட கன்னிகைகளில் ஐந்துபேர் புத்தியில்லாதவர்களாக நிரூபித்தார்கள்?
7 ‘அவர்களில் ஐந்துபேர் புத்தியில்லாதவர்கள்’ என்று இயேசு சொன்னார். இதற்கு காரணம் மணவாளன் வரப்போவதை அவர்கள் நம்பாததா? இன்பங்களை நாடிச்சென்று விட்டார்களா? அல்லது அவர்கள் ஏமாற்றப்பட்டார்களா? இவையெல்லாம் காரணமல்ல. இந்த ஐந்து பேரும், ‘மணவாளனை எதிர்கொண்டுபோகப் புறப்பட்டார்கள்’ என்று இயேசு சொன்னார். மணவாளன் வருகிறார் என்பது அவர்களுக்கு தெரியும், தாங்கள் அதில் கலந்துகொள்ளவும் ‘கலியாண விருந்தில்’ பங்குகொள்ளவும் விரும்பினார்கள். எனினும், அவர்கள் போதியளவு தயாராக இருந்தார்களா? புத்தியில்லாத அந்தக் கன்னிகைகள் அவருக்காக ‘நடுராத்திரி’ வரை காத்திருந்தார்கள். ஆனால் அவருடைய வருகை தாங்கள் எதிர்பார்த்ததற்கு முந்தியோ பிந்தியோ எப்போதாக இருந்தாலும்சரி, அதை அவர்கள் ஏற்க தயாராக இல்லை.
8. அந்த உவமையில் குறிப்பிடப்பட்ட கன்னிகைகளில் ஐந்துபேர் எவ்வாறு புத்தியுள்ளவர்களாக நிரூபித்தார்கள்?
8 ‘புத்தியுள்ளவர்கள்’ என்று இயேசு அழைத்த அந்த மற்ற ஐந்துபேரோ மணவாளன் வருவதை எதிர்பார்த்திருந்தார்கள். அவர் வந்தபோது எரிகிற தீவட்டிகளோடு சென்றார்கள். அவர்களும் காத்திருக்க வேண்டியதாக இருந்தது, ஆனால் ‘புத்தியுள்ளவர்களாக‘ இருந்தார்கள். ‘புத்தியுள்ளவர்கள்’ என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ள கிரேக்கச் சொல், ‘முன்ஜாக்கிரதையுள்ளவர்களை, பகுத்தறிவுள்ளவர்களை, ஞானமுள்ளவர்களை’ அர்த்தப்படுத்தலாம். இந்த ஐந்துபேரும், தேவைப்பட்டால் தங்கள் தீவட்டிகளில் திரும்ப எண்ணெய் நிரப்பிக்கொள்ள, பாத்திரங்களில் கூடுதலான எண்ணெய் கொண்டுவந்திருந்தார்கள்; இதன்மூலம் தங்களை புத்தியுள்ளவர்களாக நிரூபித்தார்கள். மணவாளனின் வருகைக்கு ஆயத்தமாக இருப்பதைக் குறித்து தங்களுடைய மனதை இவர்கள் ஒருமுகப்படுத்தியிருந்தார்கள். அதனால் இவர்கள் தங்கள் எண்ணெயை மற்றவர்களுக்கு கொடுக்கவில்லை. மணவாளன் வந்துசேர்ந்தபோது அவர்கள் தயாராக இருந்ததால் அவர்களுடைய நம்பிக்கை வீண்போகவில்லை. “ஆயத்தமாயிருந்தவர்கள் அவரோடேகூடக் கலியாண வீட்டுக்குள் பிரவேசித்தார்கள்; கதவும் அடைக்கப்பட்டது.”
9, 10. கன்னிகைகளைப் பற்றிய உவமையின் குறிப்பு என்ன, நம்மைநாமே என்ன கேள்விகளை கேட்டுக்கொள்ள வேண்டும்?
9 கலியாணத்தில் நடந்துகொள்ள வேண்டிய முறையைப் பற்றிய பாடத்தையோ, தங்களிடம் இருப்பதை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதைப் பற்றிய அறிவுரையையோ இயேசு இங்கு கொடுத்துக் கொண்டிருக்கவில்லை. இதுவே அவருடைய குறிப்பு: “மனுஷகுமாரன் வரும் நாளையாவது நாழிகையையாவது நீங்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள்.” ‘இயேசுவின் வந்திருத்தலை குறித்து நான் உண்மையில் விழித்திருக்கிறேனா?’ என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். இயேசு இப்போது பரலோகத்தில் ஆளுகை செய்கிறார் என்று நாம் நம்புகிறோம். ஆனால் சீக்கிரத்தில் ‘மனுஷகுமாரன் வல்லமையோடும் மிகுந்த மகிமையோடும் வானத்தின் மேகங்கள்மேல் வருவார்’ என்ற மெய்ம்மையில் நாம் எந்தளவு கவனத்தை ஒருமுகப்படுத்தியிருக்கிறோம்? (மத்தேயு 24:30) மணவாளனை சந்திக்க அந்தக் கன்னிகைகள் முதலில் சென்ற சமயத்தைப் பார்க்கிலும், ‘நடுராத்திரி’ சமயம் நிச்சயமாகவே அவர் வருவதற்கு இன்னும் கொஞ்ச நேரமே இருக்கிறது என்பதை அர்த்தப்படுத்தியது. அவ்வாறே, தற்போதைய பொல்லாத ஒழுங்குமுறையை அழிக்க மனுஷகுமாரனின் வருகைக்காக நாம் முன்பு எதிர்பார்த்திருந்ததைவிட, இப்போது அந்தச் சமயம் மிகவும் அருகில் இருக்கிறது. (ரோமர் 13:11-14) ஆகவே நம் விழிப்புணர்வை காத்துவந்திருக்கிறோமா? அந்த நேரம் மிக அருகில் இருப்பதால் அதிக விழிப்புணர்வுடன் இருக்கிறோமா?
10 “தொடர்ந்து விழித்திருங்கள்” என்ற கட்டளைக்கு கீழ்ப்படிவது, விடாமல் விழிப்புடன் இருப்பதை அர்த்தப்படுத்துகிறது. அந்த ஐந்து கன்னிகைகள் எண்ணெய் தீர்ந்துபோகுமளவுக்கு சும்மா இருந்துவிட்டு, பின்புதான் எண்ணெய் வாங்கச் சென்றார்கள். இன்றும் அவ்வாறே ஒரு கிறிஸ்தவன் தன் கவனத்தை வேறு திசையில் செல்லவிட்டு, சீக்கிரத்தில் நிகழப்போகும் இயேசுவின் வருகைக்கு தகுந்த ஆயத்தமின்றி இருக்கலாம். முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் சிலருக்கு இதுவே நேரிட்டது. இன்றும் சிலருக்கு இது நேரிடலாம். ஆகவே, ‘இது எனக்கு நேரிடுகிறதா?’ என்று நம்மைநாமே கேட்டுக்கொள்வோமாக.—1 தெசலோனிக்கேயர் 5:6-8; எபிரெயர் 2:1; 3:12; 12:3; வெளிப்படுத்துதல் 16:15.
முடிவு நெருங்கும்போது சுறுசுறுப்புடன் இருங்கள்
11. எந்த உவமையை இயேசு அடுத்தபடியாகச் சொன்னார், அது எதற்கு ஒத்திருந்தது?
11 அடுத்த உவமையில் இயேசு தம்முடைய சீஷர்களை விழிப்புடன் இருக்க ஊக்குவித்ததோடு நிறுத்திக்கொள்ளவில்லை. புத்தியுள்ள, புத்தியில்லாத கன்னிகைகளைப் பற்றிய உவமையை சொன்ன பின்பு, தாலந்துகளைப் பற்றிய உவமையையும் அவர் சொன்னார். (மத்தேயு 25:14-30-ஐ வாசிக்கவும்.) இது, பல அம்சங்களில் அவர் முன்பு சொன்ன ராத்தல்களைப் பற்றிய உவமைக்கு ஒத்திருக்கிறது. ‘தேவனுடைய ராஜ்யம் சீக்கிரமாய் வெளிப்படுமென்று பலர் நினைத்தபடியால்’ அவர் அதைச் சொல்லியிருந்தார்.—லூக்கா 19:11-27.
12. தாலந்துகளைப் பற்றிய உவமையின் சாராம்சம் என்ன?
12 தாலந்துகளைப் பற்றிய உவமையில், வெளிநாட்டுக்குப் பயணப்படும் ஒரு மனிதரைப் பற்றி இயேசு சொன்னார். அவர் தான் பயணப்படுவதற்கு முன்னால், தன் மூன்று ஊழியக்காரர்களை அழைத்து, “அவனவனுடைய திறமைக்குத்தக்கதாக,” ஒருவனிடம் ஐந்து தாலந்துகளையும் மற்றொருவனிடம் இரண்டையும் கடைசியானவனிடம் ஒரே தாலந்தையும் ஒப்படைத்தார். இது பெரும்பாலும் வெள்ளி தாலந்தாக இருக்கலாம். அப்படியானால், ஒரு வேலைக்காரனுடைய 14 ஆண்டு சம்பாத்தியத்திற்கு இது சமம். ஆகவே அது ஒரு பெருந்தொகை! ‘வெகுகாலத்திற்கு’ பின்பு அந்த மனிதர் திரும்பிவந்தார். தான் இல்லாதபோது அத்தாலந்துகளைக் கொண்டு, தன் ஊழியர்கள் என்ன செய்தார்கள் என்பதைப் பற்றி கணக்கு கேட்டார். முதல் இரண்டு ஊழியக்காரர்கள், தங்களிடம் ஒப்புவிக்கப்பட்டிருந்த தொகையின் மதிப்பை இரட்டிப்பாக்கியிருந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவரிடமும் அவர், “நல்லது” என்று சொல்லி, மேலுமதிக பொறுப்பை தருவதாக வாக்கு கொடுத்தார். “உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி” என்று முடிவாக அவர்களிடம் சொன்னார். ஒரு தாலந்து அளிக்கப்பட்ட அந்த ஊழியக்காரனுடைய முறை வந்தது. தன் எஜமானர் மட்டுக்குமீறி எதிர்பார்க்கிறார் என்பதாக இவன் நினைத்தான். ஆகவே அந்தத் தாலந்தினால் லாபம் சம்பாதிக்கவில்லை. அந்தப் பணத்துக்கு வட்டியாவது கிடைக்குமாறு வங்கியிலும் போட்டுவைக்கவில்லை. மாறாக அந்த தாலந்தை அந்த ஊழியக்காரன் புதைத்து வைத்தான். இவ்வாறு அவன் தன் எஜமானின் விருப்பத்திற்கு எதிர்மாறாக செயல்பட்டான். ஆகவே எஜமான் அந்த ஊழியக்காரனை “பொல்லாதவனும் சோம்பனுமான ஊழியக்காரனே” என்று அழைத்தார். இதன் விளைவாக, அந்தத் தாலந்து அவனிடமிருந்து எடுக்கப்பட்டது. “அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும்” இடத்தில் அவன் புறம்பே தள்ளப்பட்டான்.
13. அந்த உவமையில் குறிப்பிடப்பட்ட எஜமானரைப்போல் இயேசு எவ்வாறு தம்மை நிரூபித்தார்?
13 மற்றொரு வகையில் இதன் நுட்பவிவரங்களை அடையாளப்பூர்வமான ஒரு கருத்தில் புரிந்துகொள்ளலாம். உதாரணமாக, வெளிநாட்டுக்குப் பயணப்படும் அந்த மனிதரால் இயேசு படமாகக் குறிப்பிடப்படுகிறார். அவர் தம்முடைய சீஷர்களை விட்டு, பரலோகத்திற்குச் சென்று, அரச அதிகாரத்தைப் பெறும்வரையில் நீண்ட காலமாகக் காத்திருப்பார். b (சங்கீதம் 110:1-4; அப்போஸ்தலர் 2:34-36; ரோமர் 8:34; எபிரெயர் 10:12, 13) எனினும், நாம் எல்லாரும் வாழ்க்கையில் பொருத்திப் பயன்படுத்த வேண்டிய விரிவான ஒரு பாடம் அல்லது நியமம் ஒன்றை நாம் மறுபடியும் கவனிக்க முடிகிறது. அது என்ன?
14. தாலந்துகளைப் பற்றிய உவமை, என்ன முக்கியமான தேவையை வலியுறுத்துகிறது?
14 நம்முடைய நம்பிக்கை பரலோகத்தில் அழியாமையுடைய வாழ்க்கையாகவோ, பரதீஸான பூமியில் நித்திய வாழ்க்கையாகவோ எதுவாக இருந்தாலும்சரி, நாம் கிறிஸ்தவ நடவடிக்கைகளில் சுறுசுறுப்பாக ஈடுபட வேண்டும் என்பது இயேசுவின் உவமையிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. உண்மையில், இந்த உவமையின் செய்தியை, சுறுசுறுப்பு என்ற சொல்லில் இரத்தின சுருக்கமாக கூறலாம். பொ.ச. 33 முதற்கொண்டு, அப்போஸ்தலர் சிறந்த முன்மாதிரி வைத்தார்கள். நாம் வாசிப்பதாவது: “[பேதுரு] இன்னும் அநேக வார்த்தைகளாலும் [“முழுமையான,” NW] சாட்சிகூறி, மாறுபாடுள்ள இந்தச் சந்ததியை விட்டு விலகி உங்களை இரட்சித்துக்கொள்ளுங்கள் என்றும் புத்திசொன்னான்.” (அப்போஸ்தலர் 2:40-42) அவருடைய முயற்சிகள் எப்பேர்ப்பட்ட சிறந்த பலன்களைத் தந்தன! கிறிஸ்தவ பிரசங்க ஊழியத்தில் மற்றவர்களும் அப்போஸ்தலரோடு சேர்ந்துகொண்டபோது, அவர்களும் சுறுசுறுப்பாக ஈடுபட்டார்கள்; இதனால், நற்செய்தி ‘உலகமெங்கும் பரம்பிப் பலன் தந்தது.’—கொலோசெயர் 1:3-6, 23; 1 கொரிந்தியர் 3:5-9.
15. தாலந்துகளைப் பற்றிய உவமையின் முக்கிய குறிப்பை எந்தத் தனிப்பட்ட முறையில் நாம் பொருத்திக்கொள்ள வேண்டும்?
15 இந்த உவமையின், அதாவது, இயேசுவின் வந்திருத்தலைப் பற்றிய ஒரு தீர்க்கதரிசனத்தின் சந்தர்ப்ப சூழ்நிலையை மனதில் வையுங்கள். இயேசுவின் பரோஸியா இப்போது நடந்து வருகிறது; இது, சீக்கிரத்தில் உச்சக்கட்டத்தை எட்டும் என்பதை உறுதிப்படுத்த போதிய அத்தாட்சியும் நமக்கு இருக்கிறது. ‘முடிவையும்,’ கிறிஸ்தவர்கள் செய்யவேண்டிய வேலையையும் இயேசு இணைத்துப் பேசியதை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள்: “ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்.” (மத்தேயு 24:14) இதை மனதிற்கொண்டு, எப்படிப்பட்ட ஊழியக்காரனைப்போல் நாம் இருக்கிறோம்? உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்: ‘தன்னிடம் ஒப்புவிக்கப்பட்டதைப் புதைத்து வைத்து, அதே சமயத்தில் ஒருவேளை தன் சொந்த அக்கறைகளை மட்டும் கவனிக்கத் தவறாத அந்த ஊழியக்காரனைப்போல் நான் இருக்கிறேன் என்ற முடிவுக்கு வர ஏதாவது காரணம் இருக்கிறதா? அல்லது உத்தமமும் உண்மையுமுள்ளவர்களாக இருந்தவர்களைப்போல் நான் இருக்கிறேன் என்பது தெளிவாயிருக்கிறதா? ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எஜமானரின் அக்கறைகளைப் பெருகச் செய்வதற்கு நான் முற்றிலும் தீர்மானித்திருக்கிறேனா?’
அவருடைய வந்திருத்தலின்போது விழிப்புடனும் சுறுசுறுப்புடனும் இருத்தல்
16. நாம் ஆராய்ந்த இந்த இரண்டு உவமைகளும் உங்களுக்கு என்ன செய்தியை தெரிவிக்கின்றன?
16 ஆம், இந்த இரண்டு உவமைகளுக்குமே அடையாளக் குறிப்பான அர்த்தமும் தீர்க்கதரிசன அர்த்தமும் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல், இயேசுவின் வாயிலிருந்தே வருகிற தெளிவான ஊக்கமூட்டுதலையும் இவை நமக்கு அளிக்கின்றன. அவருடைய செய்தி இதுவே: விழிப்புடன் இருங்கள்; சுறுசுறுப்புடன் இருங்கள், முக்கியமாய் கிறிஸ்துவின் பரோஸியாவைப் பற்றிய அடையாளம் காணப்படுகையில் அவ்வாறு இருங்கள். அது இப்பொழுதே இருக்கிறது. ஆகையால் நாம் உண்மையில் விழிப்புடன் சுறுசுறுப்புள்ளவர்களாக இருக்கிறோமா?
17, 18. இயேசுவின் வந்திருத்தல் சம்பந்தமாக, சீஷனாகிய யாக்கோபு என்ன அறிவுரை கூறினார்?
17 இயேசுவின் ஒன்றுவிட்ட சகோதரன்தான் யாக்கோபு. இவர் இயேசுவின் தீர்க்கதரிசனத்தைக் கேட்பதற்கு ஒலிவ மலையில் இருக்கவில்லை; ஆனால், அதைப் பற்றி அவர் பின்னால் தெரிந்துகொண்டு, அதன் முக்கியத்துவத்தைத் தெளிவாகப் புரிந்துகொண்டார். அவர் இவ்வாறு எழுதினார்: ‘சகோதரரே, கர்த்தர் வருமளவும் நீடிய பொறுமையாயிருங்கள். இதோ, பயிரிடுகிறவன் பூமியின் நற்பலனை அடையவேண்டுமென்று, முன்மாரியும் பின்மாரியும் வருமளவும், நீடிய பொறுமையோடே காத்திருக்கிறான். நீங்களும் நீடிய பொறுமையோடிருந்து, உங்கள் இருதயங்களை ஸ்திரப்படுத்துங்கள்; கர்த்தரின் வருகை [“வந்திருத்தல்,” NW] சமீபமாயிருக்கிறதே.’—யாக்கோபு 5:7, 8.
18 தங்கள் ஐசுவரியங்களைத் தவறாகப் பயன்படுத்துகிறவர்களுக்கு கடவுள் தண்டனைத் தீர்ப்பளிப்பார் என்று யாக்கோபு உறுதியளித்தார்; ஆகவே யெகோவா நடவடிக்கை எடுப்பதற்காகக் காத்திருக்கையில் பொறுமையோடிருக்க அவர் கிறிஸ்தவர்களை உற்சாகப்படுத்தினார். பொறுமையற்ற ஒரு கிறிஸ்தவன், தவறுகளை தானே சரிசெய்ய வேண்டும் என்பதுபோல் ஒருவேளை பழிக்குப்பழி வாங்கிவிடலாம். இருந்தபோதிலும் நாம் அவ்வாறு செய்யக்கூடாது, ஏனெனில், நியாயத்தீர்ப்பின் காலம் நிச்சயமாக வரவிருக்கிறது. யாக்கோபு குறிப்பிட்டபடி பயிரிடுபவனின் உதாரணம் அதை விளக்கிக் காட்டுகிறது.
19. ஒரு இஸ்ரவேல் விவசாயி என்ன வகையான பொறுமையைக் காட்டலாம்?
19 விதைவிதைத்த இஸ்ரவேல் விவசாயி ஒருவனை கவனியுங்கள். அவன் குருத்து தோன்றுவதற்காகவும் பின்பு அந்தச் செடி முதிருவதற்காகவும் கடைசியாக அறுவடைக்காகவும் காத்திருக்க வேண்டியிருந்தது. (லூக்கா 8:5-8; யோவான் 4:35) அந்த இடைப்பட்ட காலமாகிய சில மாதங்கள் முழுக்க கவலையுடன் காத்திருப்பது மறுக்க முடியாததுதான். முன்மாரி மழை வருமா, போதியளவு பெய்யுமா? பின்மாரி மழையைப் பற்றியதென்ன? பூச்சிகள் அல்லது புயல் செடிகளை அழித்துவிடுமா? போன்ற கவலைகள் அவனது மனதை வாட்டி வதைத்துவிடும். (ஒப்பிடுக: யோவேல் 1:4; 2:23-25.) இருப்பினும், எல்லாவற்றிற்கும் மேலாக ஓர் இஸ்ரவேல் விவசாயி, யெகோவாவையும் அவர் ஸ்தாபித்திருக்கிற இயற்கை சுழற்சிகளையும் நம்ப முடியும். (உபாகமம் 11:14; எரேமியா 5:24) அவனது பொறுமைக்கு ஏற்ப நம்பிக்கையுடன் எதிர்பார்த்து காத்திருப்பான். தான் எதற்குக் காத்திருக்கிறானோ அது நிச்சயமாக வரும் என்ற விசுவாசம் அவனுக்கு இருந்தது. அது உண்மையாகவே வரும்!
20. யாக்கோபின் அறிவுரைக்கு இசைவான பொறுமையை நாம் எவ்வாறு காட்டலாம்?
20 அறுவடை எப்போது இருக்கும் என்பதை விவசாயி ஓரளவு கணிக்கமுடியும். ஆனால் இயேசுவின் வந்திருத்தல் எப்போதிருக்கும் என்பதை முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் கணக்கிட முடியவில்லை. எனினும் அது நிச்சயமாக வரவிருந்தது. யாக்கோபு இவ்வாறு எழுதினார்: “கர்த்தரின் வந்திருத்தல் [கிரேக்கு, பரோஸியா] சமீபித்திருக்கிறது.” (NW) யாக்கோபு இந்த வார்த்தைகளை எழுதின சமயத்தில், கிறிஸ்துவின் வந்திருத்தலுக்குரிய பெரிய அளவான அல்லது உலகளாவிய அடையாளம் தெரியவில்லை. ஆனால் இப்போது அது தெரிகிறது! ஆகையால் இந்தக் காலத்தில் நாம் எவ்வாறு உணரவேண்டும்? அந்த அடையாளம் காணக்கூடியதாக இருக்கிறது. நாம் அதை பார்க்கிறோம். ‘அடையாளம் நிறைவேறுவதை நான் பார்க்கிறேன்’ என்று உறுதியுடன் சொல்லலாம். நம்பிக்கையுடன் நாம் பின்வருமாறு சொல்லலாம்: ‘கர்த்தரின் வந்திருத்தல் இங்கே இருக்கிறது, அதன் உச்சக்கட்டம் சமீபமாயிருக்கிறதே.’
21. என்ன செய்ய நாம் முற்றிலும் தீர்மானித்தவர்களாக இருக்கிறோம்?
21 சூழ்நிலைமைகள் இவ்வாறு இருப்பதால், நாம் ஆராய்ந்த இயேசுவின் இரண்டு உவமைகளின் முக்கிய பாடங்களை இருதயத்தில் பதியவைத்துக் கொள்வோமாக. இதை பொருத்திப் பயன்படுத்துவதற்கு முக்கியமாய் நமக்கு பலத்தக் காரணம் இருக்கிறது. அவர் சொன்னார்: “மனுஷகுமாரன் வரும் நாளையாவது நாழிகையையாவது நீங்கள் அறியாதிருக்கிறபடியால் தொடர்ந்து விழித்திருங்கள்.” (மத்தேயு 25:13, NW) சந்தேகமில்லாமல், நம்முடைய கிறிஸ்தவ சேவையில் வைராக்கியத்துடன் ஈடுபட இதுவே சரியான தருணம்! இயேசுவின் குறிப்பை நாம் புரிந்துகொள்கிறோம் என்பதை நம்முடைய அன்றாட வாழ்க்கையில் காண்பிப்போமாக. நாம் விழித்திருப்போம்! சுறுசுறுப்பாய் இருப்போம்!
[அடிக்குறிப்புகள்]
a இந்த உவமையின் அடையாளப்பூர்வ நுட்பவிவரங்களுக்கு, கடவுளின் ஆயிர வருட அரசாங்கம் நெருங்கிவிட்டது (ஆங்கிலம்), பக்கங்கள் 169-211-ஐ காண்க. இது, உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டியால் பிரசுரிக்கப்பட்டது.
b கடவுளின் ஆயிர வருட அரசாங்கம் நெருங்கிவிட்டது, (ஆங்கிலம்) பக்கங்கள் 212-56-ஐ காண்க.
உங்கள் ஞாபகத்திற்கு வருகிறதா?
◻ புத்தியுள்ளவர்களும் புத்தியில்லாதவர்களுமான கன்னிகைகளைப் பற்றிய உவமையிலிருந்து என்ன முக்கிய குறிப்பைக் கற்றுக்கொள்ளுகிறீர்கள்?
◻ தாலந்துகளைப் பற்றிய உவமையின் மூலமாக, என்ன முக்கிய அறிவுரையை இயேசு உங்களுக்கு அளிக்கிறார்?
◻ என்ன கருத்தில், பரோஸியா சம்பந்தமாக உங்கள் பொறுமை, ஓர் இஸ்ரவேல் விவசாயினுடையதைப்போல இருக்கிறது?
◻ வாழ்வதற்கு, இது ஏன் கிளர்ச்சியூட்டும் சவால் நிறைந்த காலமாக இருக்கிறது?
[பக்கம் 23-ன் படம்]
கன்னிகைகளைப் பற்றிய உவமையிலும் தாலந்துகளைப் பற்றிய உவமையிலும் என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளுகிறீர்கள்?