“யோபின் சகிப்புத்தன்மையைக் குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்”
“யோபின் பொறுமையைக் குறித்து [“சகிப்புத்தன்மையைக் குறித்து,” NW] கேள்விப்பட்டிருக்கிறீர்கள்; கர்த்தருடைய செயலின் முடிவையும் கண்டிருக்கிறீர்கள்; கர்த்தர் மிகுந்த உருக்கமும் இரக்கமுமுள்ளவராயிருக்கிறாரே.”—யாக்கோபு 5:11.
1, 2. போலந்தில் ஒரு தம்பதியர் என்ன உபத்திரவத்தை எதிர்ப்பட்டார்கள்?
ஹெரால்ட் ஆப்ட் என்பவர் யெகோவாவின் சாட்சியாகி ஒரு வருடம்கூட ஆகியிருக்கவில்லை. அப்போது ஹிட்லரின் படை போலந்து நாட்டின் வடபகுதியிலுள்ள டான்ஸிக் நகரத்தை (இப்போது கடான்ஸ்க்) கைப்பற்றியது. அதன்பிறகு நிலைமைகள் மோசமாகிவிட்டன; முக்கியமாக அங்கிருந்த உண்மைக் கிறிஸ்தவர்களுக்குப் பெரும் ஆபத்து காத்திருந்தது. நிலைமை இவ்வாறிருக்க, தன் விசுவாசத்தை விட்டுக்கொடுப்பதாக ஒரு படிவத்தில் கையெழுத்துப் போடும்படி ஹெரால்டை கெஸ்டாப்போ என்ற இரகசிய போலீஸார் வற்புறுத்தினார்கள். அவரோ மறுத்துவிட்டார். அதனால் சில வாரங்கள் அவர் சிறையில் அடைத்து வைக்கப்பட்டபின், சாக்சென்ஹாசன் சித்திரவதை முகாமிற்கு அனுப்பப்பட்டார். அங்கு அவரைப் பலமுறை மிரட்டி, அடித்து உதைத்தார்கள். சவங்களைத் தகனம் செய்யுமிடத்திலிருந்து வந்துகொண்டிருந்த புகையைச் சுட்டிக்காட்டி ஓர் அதிகாரி அவரிடம் இவ்வாறு சொன்னார்: “இன்னும் பதினான்கு நாள் டைம் தருகிறேன். அதற்குள் மனதை மாற்றிக்கொள்; இல்லையென்றால் உன் யெகோவாவிடம் போய்ச் சேர்ந்துவிடுவாய்.”
2 ஹெரால்ட் சிறையில் அடைக்கப்பட்டபோது அவருடைய மனைவி எல்சாவின் கையில் பால்குடி மறவாத பத்து மாதப் பெண்குழந்தை இருந்தது. அப்படியும் கெஸ்டாப்போ போலீஸார் கொஞ்சம்கூட ஈவிரக்கம் காட்டவில்லை; சீக்கிரமே, குழந்தையை அவரிடமிருந்து பறித்துவிட்டு ஆஷ்விட்ஸிலுள்ள படுகொலை முகாமிற்கு அவரை அனுப்பிவிட்டார்கள். ஹெரால்டைப் போலவே அவரும் பல வருடங்கள் தாக்குப்பிடித்தார். இவர்கள் இருவரும் எவ்வாறு சகித்திருந்தார்கள் என்பதை ஏப்ரல் 15, 1980 தேதியிட்ட ஆங்கில காவற்கோபுர இதழில் பார்க்கலாம். ஹெரால்ட் எழுதினதாவது: “கடவுள்மீது எனக்கிருந்த விசுவாசத்தை விட்டுக்கொடுக்காததால் என் வாழ்க்கையில் மொத்தம் 14 வருடங்களை சித்திரவதை முகாம்களிலும் சிறைச்சாலைகளிலும் செலவிட்டிருக்கிறேன். ‘நீங்கள் இத்தனைக் கஷ்டங்கள் பட்டபோது உங்கள் மனைவி உதவியாய் இருந்தார்களா?’ என்று மற்றவர்கள் என்னிடம் கேட்டிருக்கிறார்கள். ரொம்பவே உதவியாய் இருந்தாள்! எந்தக் காரணத்தைக் கொண்டும் அவள் தன் விசுவாசத்தை விட்டுக்கொடுக்க மாட்டாள் என்று எனக்கு ஆரம்பத்திலிருந்தே தெரியும். அதுவே எனக்குத் தெம்பைத் தந்தது. என் விசுவாசத்தை விட்டுக்கொடுத்து நான் விடுதலையாகி விட்டேன் என்று கேள்விப்படுவதைவிட, நான் விசுவாசத்தில் உறுதியாய் இருந்து செத்துப்போய்விட்டதைக் கேள்விப்படவே அவள் விரும்புவாள் என்பதில் எனக்குச் சந்தேகம் இருக்கவில்லை. . . . எல்சா ஜெர்மன் சித்திரவதை முகாமில் இருந்தபோது பட்ட அவஸ்தைக்கு அளவே இல்லை.”
3, 4. (அ) கிறிஸ்தவர்களாகிய நாம் சகித்திருப்பதற்கு யாருடைய உதாரணங்கள் உதவும்? (ஆ) யோபுவின் உதாரணத்தை ஆராயும்படி பைபிள் நம்மை ஏன் உந்துவிக்கிறது?
3 கஷ்டங்களைச் சகிப்பது சுலபமல்ல என்பதை அநேக சாட்சிகள் தங்கள் சொந்த அனுபவத்தில் கண்டிருக்கிறார்கள். எனவேதான் கிறிஸ்தவர்களாகிய நம் அனைவருக்கும் பைபிள் இவ்வாறு ஆலோசனை தருகிறது: “கர்த்தருடைய நாமத்தினாலே பேசின தீர்க்கதரிசிகளைத் துன்பப்படுதலுக்கும் நீடிய பொறுமைக்கும் திருஷ்டாந்தமாக [மாதிரியாக] வைத்துக்கொள்ளுங்கள்.” (யாக்கோபு 5:10) பல நூற்றாண்டுகளாக கடவுளுடைய ஊழியர்களில் அநேகர் காரணமின்றி துன்புறுத்தப்பட்டிருக்கிறார்கள். ‘மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகளுடைய’ முன்மாதிரிகள் கிறிஸ்தவ ஓட்டத்தில் நாம் சகிப்புத்தன்மையுடன் ஓடுவதற்கு ஊக்கம் அளிக்கலாம்.—எபிரெயர் 11:32-38; 12:1.
4 சகிப்புத்தன்மை காட்டுவதில் யோபு முன்மாதிரியாக இருந்தாரென பைபிள் சொல்கிறது. ‘இதோ, சகிப்புத்தன்மையுடன் இருப்பவர்களைச் சந்தோஷமுள்ளவர்கள் என்கிறோமே! யோபுவின் சகிப்புத்தன்மையைக் குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்; யெகோவாவுடைய செயலின் முடிவையும் கண்டிருக்கிறீர்கள்; யெகோவா மிகுந்த உருக்கமும் இரக்கமுமுள்ளவராயிருக்கிறாரே’ என்று யாக்கோபு எழுதினார். (யாக்கோபு 5:11) தமக்கு உண்மையாக இருப்பவர்களை யெகோவா எப்படி ஆசீர்வதிப்பார் என்பதை யோபுவின் உதாரணம் படம்பிடித்துக் காட்டுகிறது. யோபுவின் அனுபவத்திலிருந்து கற்றுக்கொள்ளும் சில பாடங்கள் சோதனைகளைச் சமாளிக்க நமக்கு உதவுகின்றன. பின்வரும் கேள்விகளுக்கு யோபு புத்தகமே பதிலளிக்கிறது: நாம் கஷ்டப்படும்போது, அதில் உட்பட்டுள்ள முக்கிய விவாதங்களைப் புரிந்துகொள்வது ஏன் அவசியம்? கஷ்டத்தைச் சகிப்பதற்கு நாம் என்ன குணங்களையும் மனநிலையையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்? கஷ்டப்படுகிற சக கிறிஸ்தவர்களை நாம் எப்படி பலப்படுத்தலாம்?
விவாதங்களைப் புரிந்துகொள்ளுதல்
5. நாம் கஷ்டங்களையும் சோதனைகளையும் எதிர்ப்படும்போது முக்கியமான எந்த விவாதத்தை மனதில் வைக்க வேண்டும்?
5 துன்பங்களைச் சந்திக்கையில் நாம் ஆன்மீகச் சமநிலையை இழந்துவிடாதிருப்பதற்கு, அவற்றில் உட்பட்டுள்ள முக்கிய விவாதங்களைப் புரிந்துகொள்ள வேண்டும். இல்லையென்றால், நம் சொந்தப் பிரச்சினைகள் நம் ஆன்மீகக் கண்ணோட்டத்தை மறைத்துவிடும். நம் உண்மைத்தன்மை பற்றி எழுப்பப்பட்ட விவாதமே மிக மிக முக்கியமானது. நம்முடைய பரலோகத் தந்தை பின்வருமாறு கேட்பதை நாம் ஒவ்வொருவரும் மனதில் வைத்திருக்க வேண்டும்: “என் மகனே, என்னை நிந்திக்கிறவனுக்கு நான் உத்தரவுகொடுக்கத்தக்கதாக, நீ ஞானவானாகி, என் இருதயத்தைச் சந்தோஷப்படுத்து.” (நீதிமொழிகள் 27:11) இது நமக்குக் கிடைத்திருக்கும் எப்பேர்ப்பட்ட பாக்கியம்! நாம் அபூரணர்களாகவும் பலவீனர்களாகவும் இருந்தாலும்கூட நம் சிருஷ்டிகரைச் சந்தோஷப்படுத்த முடியும். எப்படி? நமக்கு கஷ்டங்களும் சோதனைகளும் வரும்போது யெகோவா மீதுள்ள அன்பினால் அவற்றைச் சகிப்பதன் மூலம் அவரைச் சந்தோஷப்படுத்த முடியும். உண்மையான கிறிஸ்தவ அன்பு சகலத்தையும் தாங்கும், அது ஒருக்காலும் ஒழியாது.—1 கொரிந்தியர் 13:7, 8.
6. என்ன சொல்லி யெகோவாவை சாத்தான் நிந்திக்கிறான்? எவ்வளவு காலமாக?
6 சாத்தான், யெகோவாவை நிந்திப்பவன் என்பதை யோபு புத்தகம் தெளிவாகக் காட்டுகிறது. நம்மால் பார்க்க முடியாத இந்த எதிரியின் கெட்ட குணத்தை யோபு புத்தகம் வெட்டவெளிச்சமாக்குகிறது. யெகோவாவுடன் நமக்குள்ள உறவைக் குலைப்பதே அவனுடைய குறிக்கோள் என்பதாக அது சொல்கிறது. யெகோவாவின் ஊழியர்கள் அனைவரும் தன்னல காரணங்களுக்காகவே அவரை வணங்குகிறார்கள் என்று சாத்தான் பழிசுமத்துகிறான்; கடவுள்மீது அவர்களுக்கு இருக்கிற அன்பு தணிந்துவிடும் என்பதை நிரூபிக்க முயலுகிறான்; இதை நாம் யோபுவின் விஷயத்திலிருந்து தெரிந்துகொள்கிறோம். ஆயிரக்கணக்கான வருடங்களாக அவன் இப்படிக் கடவுள்மீது பழிசுமத்தியிருக்கிறான். அவன் பரலோகத்திலிருந்து கீழே தள்ளப்பட்டபோது வானத்தில் உண்டான சத்தம், “நம்முடைய சகோதரர் மேல் . . . குற்றஞ்சாட்டுகிறவன்” என்று அவனைக் குறித்துச் சொல்லியது. அவன் “இரவும் பகலும் நம்முடைய தேவனுக்கு முன்பாக” இப்படிக் குற்றம் சுமத்துகிறான் எனவும் அறிவித்தது. (வெளிப்படுத்துதல் 12:10) நாம் உண்மையோடு சகித்திருப்பதன் மூலம் அவனுடைய குற்றச்சாட்டுகளைப் பொய்யென நிரூபிக்கலாம்.
7. நமக்கு வரும் உடல்நலப் பிரச்சினைகளை நாம் எவ்வாறு தாக்குப்பிடிக்கலாம்?
7 யெகோவாவிடமிருந்து நம்மைப் பிரிப்பதற்காக நமக்கு வரும் எந்தக் கஷ்டத்தையும் சாத்தான் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்த முயலுவான் என்பதை எப்போதும் நாம் நினைவில் வைக்க வேண்டும். சாத்தான் எந்தச் சமயத்தில் இயேசுவைச் சோதித்தான்? இயேசு பல நாட்கள் எதுவுமே சாப்பிடாமல் மிகவும் பசியாக இருந்த சமயம் பார்த்து சோதித்தான். (லூக்கா 4:1-3) ஆனால், இயேசுவோ ஆன்மீக பலத்தினால் சாத்தானுடைய சோதனைகளை எதிர்த்து உறுதியுடன் நின்றார். எனவே, வியாதியோ முதுமையோ வேறு எந்த சரீரக் குறைபாடோ நமக்கு இருந்தாலும் அவற்றை ஆன்மீக பலத்தினால் தாக்குப்பிடிப்பது முக்கியம், அல்லவா! ‘நம் புறம்பான மனுஷனானது அழிந்தாலும்’ நாம் சோர்ந்துபோகிறதில்லை, ஏனென்றால், “உள்ளான மனுஷனானது நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறது.”—2 கொரிந்தியர் 4:16.
8. (அ) தவறான சிந்தைகள் நம்மை எவ்வாறு பாதிக்கலாம்? (ஆ) இயேசுவிற்கு என்ன சிந்தை இருந்தது?
8 அதுமட்டுமல்ல, நாம் மனதளவில் சோர்வடையும்போது நம் ஆன்மீக பலம் குறைந்துவிடலாம். ‘யெகோவா ஏன் இதை அனுமதித்தார்?’ என்று நாம் சிந்திக்கக்கூடும். நம்மிடம் யாராவது கரிசனையின்றி நடந்துகொண்டால், ‘எப்படி அந்தச் சகோதரர் என்னிடம் அந்தமாதிரி நடந்துகொள்ளலாம்?’ என்று நாம் யோசிக்கக்கூடும். இவ்வாறு நினைப்பதால் முக்கிய விவாதங்களை மறந்துவிட்டு நம்மைக் குறித்தே அளவுக்கதிகமாக கவலைப்பட வாய்ப்பிருக்கிறது. யோபுவின் விஷயத்தில், அவருடைய மூன்று போலி நண்பர்களின் தவறான விளக்கங்கள் அவரை விரக்திக்குள்ளாக்கின; இதனால் அவர் உடல் ரீதியில் எந்தளவுக்குப் பாதிக்கப்பட்டாரோ, அந்தளவுக்கு உணர்ச்சி ரீதியிலும் பாதிக்கப்பட்டார். (யோபு 16:20; 19:2) தீராத கோபம், ‘பிசாசுக்கு இடங்கொடுக்க’ வைத்துவிடலாம் என்று அப்போஸ்தலன் பவுலும்கூட கூறினார். (எபேசியர் 4:26, 27) கோபத்தில் மற்றவர்கள்மீது எரிந்துவிழுவதையோ நடந்த அநியாயத்தை நினைத்து நினைத்து வெந்துபோவதையோ தவிர்க்க வேண்டும்; மாறாக, இயேசுவின் மாதிரியைப் பின்பற்றுவதே சரியான செயலாகும். அவரைப் போல, ‘நியாயமாய்த் தீர்ப்புச்செய்கிறவராகிய யெகோவா தேவனுக்கு [நம்மை] ஒப்புவித்தால்’ பயனடைவோம். (1 பேதுரு 2:21-23) முக்கியமாக, இயேசுவின் “சிந்தையை” வளர்த்துக்கொண்டால் சாத்தானுடைய தாக்குதல்களை நாம் நன்கு எதிர்க்க முடியும்.—1 பேதுரு 4:1.
9. கஷ்டங்கள் சோதனைகள் என எது வந்தாலும், கடவுள் நமக்கு என்ன உறுதி அளிக்கிறார்?
9 கடவுள் நம்மீது கோபமாக இருப்பதால்தான் நமக்குப் பிரச்சினைகள் வருகின்றன என்பதாக நாம் ஒருபோதும் நினைக்கக் கூடாது. யோபுவின் விஷயத்திலிருந்து இதை நாம் புரிந்துகொள்கிறோம்; எப்படியெனில், ஏற்கெனவே தன்னுடைய போலி நண்பர்களின் அர்த்தமற்ற வார்த்தைகளால் நொந்துபோயிருந்த யோபு அப்படித் தவறாக நினைத்துக்கொண்டதால் இன்னுமதிகமாகப் புண்பட்டுப்போனார். (யோபு 19:21, 22) பைபிள் நமக்குப் பின்வருமாறு ஆறுதலளிக்கிறது: “தேவன் பொல்லாங்கினால் சோதிக்கப்படுகிறவரல்ல, ஒருவனையும் அவர் சோதிக்கிறவருமல்ல.” (யாக்கோபு 1:13) அதற்கு மாறாக, நமக்கு என்ன கஷ்டம் வந்தாலும், அவற்றை நாம் தாங்கிக்கொள்வதற்கான சக்தியைத் தருவதாக யெகோவா வாக்குறுதி அளிக்கிறார்; என்ன சோதனை வந்தாலும், அவற்றிலிருந்து நம்மை விடுவிப்பதாகவும் அவர் உறுதி அளிக்கிறார். (சங்கீதம் 55:22; 1 கொரிந்தியர் 10:13) ஆபத்துக் காலத்தில் நாம் யெகோவாவிடம் நெருங்கிச் சென்றால் பிரச்சினைகளை சரியான கண்ணோட்டத்துடன் பார்க்க முடியும். பிசாசை உறுதியுடன் எதிர்த்து நிற்க முடியும்.—யாக்கோபு 4:7, 8.
சகித்திருக்க உதவிகள்
10, 11. (அ) சகித்திருக்க யோபுவுக்கு எது உதவியது? (ஆ) சுத்தமான மனசாட்சி யோபுவுக்கு எவ்வாறு உதவியது?
10 யோபுவின் நிலைமை படுமோசமாக இருந்தது. அவருடைய போலி நண்பர்கள் தங்கள் வார்த்தைகளால் அவர் மனதை ரணமாக்கினார்கள்; அதுமட்டுமின்றி, தான் கஷ்டப்படுவதற்கான காரணம் என்னவென்றே புரியாமல் யோபு குழம்பிப்போயிருந்தார். என்றாலும், அவர் உத்தமத்தில் உறுதியாக நிலைத்திருந்தார். அவர் சகிப்புத்தன்மை காட்டிய விதத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? யெகோவாவிற்கு உண்மையாக இருந்ததே யோபு சகித்திருந்ததற்கு முக்கியக் காரணம். ‘அவர் தேவனுக்குப் பயந்து பொல்லாப்புக்கு விலகியிருந்தார்.’ (யோபு 1:1) அதுதான் அவரது வாழ்க்கைமுறையாக இருந்தது. தான் பட்ட கஷ்டங்களுக்கான காரணம் அவருக்குப் புரியாதபோதிலும்கூட அவர் யெகோவாவை விட்டு விலகவே இல்லை. இன்பத்திலும் துன்பத்திலும் கடவுளைச் சேவிக்க வேண்டும் என யோபு உறுதியாய் இருந்தார்.—யோபு 1:21; 2:10.
11 யோபுவின் மனசாட்சி சுத்தமாக இருந்தது. அதுவே அவருக்கு ஆறுதல் அளித்தது. ஏனெனில், தன்னால் முடிந்தளவு மற்றவர்களுக்கு உதவியிருந்தார், யெகோவாவின் நீதியான தராதரங்களைக் கடைப்பிடித்திருந்தார், பொய் வணக்கத்திலிருந்து முற்றிலுமாக விலகியிருந்தார். இவையெல்லாம் அவருக்கு ஆறுதல் அளித்தன. ஆகவே, தனக்கு மரணம் நெருங்கிவிட்டதாக அவருக்குத் தோன்றியபோதுகூட அதற்காக அவர் கவலைப்படவில்லை.—யோபு 31:4-11.
12. எலிகூவின் உதவியைப் பெற்றபோது யோபு என்ன செய்தார்?
12 ஆனாலும் சில விஷயங்களில் தன் சிந்தையைச் சரிப்படுத்திக்கொள்ள யோபுவுக்கு உதவி தேவைப்பட்டது. அவரும் அதை மனத்தாழ்மையுடன் ஏற்றுக்கொண்டார், கஷ்டத்தைச் சகித்துக்கொள்ள இதுவும் அவருக்கு உதவியது. எலிகூவின் ஞானமான அறிவுரைகளுக்கு யோபு மரியாதையோடு செவிகொடுத்தார், யெகோவாவின் சிட்சைக்கு முழுமனதுடன் கீழ்ப்படிந்தார். ‘நான் அறியாததை அலப்பினேன் . . . நான் என்னை அருவருத்து, தூளிலும் சாம்பலிலும் இருந்து மனஸ்தாபப்படுகிறேன்’ என்று அவர் சொன்னார். (யோபு 42:3, 6) அந்தச் சமயத்திலும் அவர் வியாதியால் அவதிப்பட்டுக்கொண்டுதான் இருந்தார். என்றாலும், தன் சிந்தையைச் சரிப்படுத்திக்கொண்டதன் மூலம் கடவுளிடம் நெருங்கிவர முடிந்ததை நினைத்துச் சந்தோஷப்பட்டார். “தேவரீர் சகலத்தையும் செய்யவல்லவர் . . . என்பதை அறிந்திருக்கிறேன்” என்று அவர் சொன்னார். (யோபு 42:2) யெகோவா தம் மகத்துவத்தை யோபுவுக்கு விளக்கினதால் சிருஷ்டிகருடன் ஒப்பிட, தான் ஒரு தூசியே என்பதை யோபு மிக நன்றாகவே புரிந்துகொண்டார்.
13. இரக்கம் காட்டியதால் யோபுவுக்கு என்ன பலன் கிடைத்தது?
13 முடிவாக, இரக்கம் காட்டுவதிலும் யோபு சிறந்த முன்மாதிரியாக இருக்கிறார். அவருடைய போலி நண்பர்கள் அவர் மனதை மிகவும் நோகடித்திருந்தார்கள். ஆனாலும், அவர்களுக்காக ஜெபம் செய்யும்படி யெகோவா சொன்னபோது அவர் அப்படியே செய்தார். அதன்பிறகு யோபுவை யெகோவா குணப்படுத்தினார். (யோபு 42:8, 10) ஆகவே, மனக்கசப்பை வளர்த்தால் நாம் சகிப்புத்தன்மை காட்டுவது கடினம். மாறாக, அன்பையும் இரக்கத்தையும் வளர்த்தால் சகிப்புத்தன்மை காட்டுவது எளிது. மனக்கசப்பை வளர்க்காதிருப்பது நமக்கு ஆன்மீகப் புத்துணர்ச்சி அளிக்கும். அப்படிச் செய்கையில் யெகோவா தேவனும் ஆசீர்வதிப்பார்.—மாற்கு 11:25.
ஞானமுள்ள ஆலோசகர்கள் சகித்திருக்க உதவுகிறார்கள்
14, 15. (அ) மற்றவர்களைத் தேற்ற ஓர் ஆலோசகருக்கு என்ன குணங்கள் தேவை? (ஆ) யோபுவுக்கு எலிகூ நல்ல விதத்தில் ஆறுதல் அளிக்க முடிந்ததற்கான காரணங்களை விவரியுங்கள்.
14 யோபுவின் வரலாறு ஞானமுள்ள ஆலோசகர்களின் மதிப்பையும் நமக்கு எடுத்துக்காட்டுகிறது. ‘இடுக்கணில் உதவ பிறந்திருக்கும்’ சகோதரர் போலவே அவர்கள் இருக்கிறார்கள். (நீதிமொழிகள் 17:17) என்றாலும், யோபுவின் விஷயத்தில் பார்த்தபடி சில ஆலோசகர்கள் புண்பட்ட மனதைத் தேற்றுவதற்குப் பதிலாக ‘வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவார்கள்.’ ஒரு நல்ல ஆலோசகர் எலிகூவைப் போலவே அனுதாபத்துடனும் மரியாதையுடனும் தயவுடனும் நடந்துகொள்ள வேண்டும். கஷ்டத்தில் தவிக்கும் சகோதரர்களின் மனநிலையை மூப்பர்களும் முதிர்ச்சியுள்ள மற்ற கிறிஸ்தவர்களும் சரிசெய்ய வேண்டியிருக்கலாம். இந்த விஷயத்தில் யோபு புத்தகத்திலிருந்து நல்ல பாடங்களை அவர்கள் கற்றுக்கொள்ளலாம்.—கலாத்தியர் 6:1; எபிரெயர் 12:12, 13.
15 யோபுவிடம் எலிகூ நடந்துகொண்ட விதத்திலிருந்து நாம் அநேக நல்ல பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம். யோபுவின் மூன்று நண்பர்களும் தவறாக ஏதேதோ பேசிக்கொண்டிருந்தபோது அதை நீண்ட நேரத்திற்கு பொறுமையாகக் கேட்ட பிறகே எலிகூ பேசினார். (யோபு 32:11; நீதிமொழிகள் 18:13) யோபுவை எலிகூ பெயர் சொல்லி அழைத்து சிநேகபாவத்துடன் பேசினார். (யோபு 33:1) அந்த மூன்று போலி நண்பர்கள் கருதியதுபோல் யோபுவைவிட உயர்ந்தவராக அவர் தன்னைக் கருதவில்லை. “நானும் மண்ணினால் உருவாக்கப்பட்டவன்” என்றார். யோசிக்காமல் பேசி யோபுவின் வேதனையைக் கூட்ட அவர் விரும்பவில்லை. (யோபு 33:6, 7; நீதிமொழிகள் 12:18) யோபு தவறு செய்ததாகச் சொல்லி அவரைக் குறைகூறுவதற்குப் பதிலாக அவர் நீதிமானாய் இருந்ததற்காக அவரைப் பாராட்டினார். (யோபு 33:32) அதைவிட முக்கியமாக, காரியங்களைக் கடவுளுடைய கண்ணோட்டத்தில் பார்த்தார். யெகோவா ஒருபோதும் அநியாயமாக நடந்துகொள்ளமாட்டார் என்பதை மனதில் வைக்க அவர் யோபுவுக்கு உதவினார். (யோபு 34:10-12) தான் ஒரு நீதிமான் என்பதை நிரூபிக்க முயலுவதற்குப் பதிலாக யெகோவாமீது நம்பிக்கை வைக்கும்படி யோபுவுக்கு ஊக்கம் அளித்தார். (யோபு 35:2; 37:14, 23) எலிகூவின் முன்மாதிரியிலிருந்து மூப்பர்களும் மற்றவர்களும் நிச்சயமாகவே பயனடையலாம்.
16. யோபுவின் மூன்று நண்பர்கள் சாத்தானின் கைப்பாவைகளாக இருந்தது எப்படி?
16 எலிப்பாஸ், பில்தாத், சோப்பார் ஆகியோரின் புண்படுத்தும் வார்த்தைகளுக்கும் எலிகூவின் ஞானமான ஆலோசனைக்கும் இடையே எப்பேர்ப்பட்ட வித்தியாசம்! “நீங்கள் என்னைக் குறித்து நிதானமாய் [அதாவது, உண்மையை] பேசவில்லை” என்று யெகோவா அவர்களிடம் கூறினார். (யோபு 42:7) அவர்கள் நல்லெண்ணத்துடன் வந்ததாகச் சொல்லிக்கொண்டாலும் உண்மையான நண்பர்களாக நடந்துகொள்ளவில்லை; மாறாக சாத்தானின் கைப்பாவைகளாகவே நடந்துகொண்டார்கள். யோபு ஏதோ தவறு செய்ததால்தான் கஷ்டப்படுவதாக ஆரம்பத்திலிருந்தே நினைத்தார்கள். (யோபு 4:7, 8; 8:6; 20:22, 29) கடவுளுக்கு தம் ஊழியர்கள்மீது நம்பிக்கையே இல்லை, நாம் நல்லவர்களாக இருக்கிறோமா இல்லையா என்பதில் அவருக்கு அக்கறையே இல்லை என்பதுதான் எலிப்பாஸ் அளித்த விளக்கம். (யோபு 15:15; 22:2, 3) செய்யாத பாவங்களைச் செய்ததாகச் சொல்லி யோபுவை அவர் குற்றம் சாட்டினார். (யோபு 22:5, 9) ஆனால், எலிகூ அப்படியெல்லாம் செய்யாமல் கடவுளோடு ஒரு நல்லுறவை ஏற்படுத்திக்கொள்ள யோபுவுக்கு உதவினார். இதுவே ஓர் அன்பான ஆலோசகரின் முக்கியக் குறிக்கோளாக இருக்க வேண்டும்.
17. கஷ்டங்களை எதிர்ப்படுகையில் நாம் எதை மனதில் வைக்க வேண்டும்?
17 சகிப்புத்தன்மை குறித்து நாம் இன்னொரு பாடத்தையும் யோபு புத்தகத்திலிருந்து கற்றுக்கொள்ளலாம். நம்முடைய அன்பான கடவுள் நம் நிலையைக் கவனிக்கிறார். அநேக விதங்களில் நமக்கு உதவி செய்யவே விரும்புகிறார், அவ்வாறு உதவி அளிக்க அவருக்குச் சக்தியும் இருக்கிறது. இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் எல்சா ஆப்ட்டின் அனுபவத்தை வாசித்தோம், அல்லவா? அவர் என்ன முடிவுக்கு வந்தார் என்பதைக் கொஞ்சம் சிந்தித்துப்பாருங்கள்: “நான் சிறையில் அடைக்கப்படுவதற்கு முன்பு ஒரு சகோதரியின் கடிதத்தை வாசித்தேன். அதில் அவர் மிகக் கடுமையான துன்பத்தை எதிர்ப்பட்ட சமயத்தில் யெகோவாவின் ஆவி தனக்கு மனஅமைதி தந்ததாக எழுதியிருந்தார். அவர் சற்று மிகைப்படுத்திச் சொல்வதாகவே எனக்குத் தோன்றியது. ஆனால் நான் கஷ்டங்களை அனுபவித்தபோதுதான் அந்தச் சகோதரி சொன்னது உண்மை என்பதைப் புரிந்துகொண்டேன். அதை அவரவர் அனுபவித்தால்தான் புரியும். ஆம், அதை என் அனுபவத்தில் கண்டேன். நிச்சயமாகவே யெகோவா நமக்கு உதவுகிறார்!” ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு யோபுவின் காலத்தில் யெகோவா செய்ததையோ, அவரால் செய்ய முடிந்ததையோ பற்றி எல்சா இங்கு பேசவில்லை. மாறாக, நம்முடைய காலத்தில் அவர் என்ன செய்கிறார் என்பதையே எல்சா குறிப்பிடுகிறார்; ஆம், “நிச்சயமாகவே யெகோவா நமக்கு உதவுகிறார்!”
சகிப்புத்தன்மையுடன் இருப்பவர்கள் சந்தோஷமுள்ளவர்கள்
18. சகிப்புத்தன்மை காட்டியதால் யோபு என்னென்ன பலன்களை அனுபவித்தார்?
18 நம்மில் வெகு சிலரே யோபு அனுபவித்த அளவுக்கு கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியிருக்கும். என்றாலும், சாத்தானின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் இந்தப் பொல்லாத உலகத்தில் நமக்கு என்ன கஷ்டம் வந்தாலும் யோபுவைப் போலவே நம்மாலும் உத்தமத்தில் நிலைத்திருக்க முடியும். சொல்லப்போனால், சகிப்புத்தன்மையுடன் இருந்ததாலேயே யோபு ஆசீர்வதிக்கப்பட்டார். அது அவரைச் சரிப்படுத்தி பூரணராக மாற்றியது. (யாக்கோபு 1:2-4) கடவுளோடு இருந்த அவருடைய உறவைப் பலப்படுத்தியது. “என் காதினால் உம்மைக் குறித்துக் கேள்விப்பட்டேன்; இப்பொழுதோ என் கண் உம்மைக் காண்கிறது” என்று யோபு கூறினார். (யோபு 42:5) யோபுவின் உத்தமத்தைக் குலைக்க முடியாமல் தோற்றுப்போன சாத்தான், பொய்யனாக நிரூபிக்கப்பட்டான். நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகும் யெகோவா தம் ஊழியக்காரனாகிய யோபுவை நீதிமானாகக் குறிப்பிடுகிறார். (எசேக்கியேல் 14:14) உத்தமத்தன்மைக்கும் சகிப்புத்தன்மைக்கும் முன்னுதாரணமாகத் திகழ்ந்த யோபுவின் வாழ்க்கை கடவுளுடைய மக்களுக்கு இன்றும் ஊக்கமூட்டுகிறது.
19. சகிப்புத்தன்மைக்குப் பலனுண்டு என்பதாக ஏன் நினைக்கிறீர்கள்?
19 சகிப்புத்தன்மை குறித்து முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களுக்கு யாக்கோபு எழுதியபோது அது தரும் திருப்தி குறித்தும் எழுதியிருந்தார். தம் உண்மையான ஊழியர்களை யெகோவா அளவின்றி ஆசீர்வதிப்பார் என்பதற்கு யோபுவை உதாரணமாகக் குறிப்பிட்டார். (யாக்கோபு 5:11) “கர்த்தர் யோபின் முன்னிலைமையைப் பார்க்கிலும் அவன் பின்னிலைமையை ஆசீர்வதித்தார்” என்று யோபு 42:12 சொல்கிறது. யோபு இழந்தவற்றைப் பார்க்கிலும் இருமடங்கு அதிகமாக யெகோவா அவரை ஆசீர்வதித்தார். அவர் நீண்டகாலம் சந்தோஷமாக வாழ்ந்தார். (யோபு 42:16, 17) அதேபோல் இந்தப் பொல்லாத உலகின் முடிவில் நமக்கு வரும் எந்தக் கஷ்டமும், துயரமும், வேதனையும் கடவுளுடைய புதிய உலகில் இருக்கவே இருக்காது, அவை மறக்கப்பட்டுவிடும். (ஏசாயா 65:17; வெளிப்படுத்துதல் 21:4) நாம் யோபுவின் சகிப்புத்தன்மை குறித்து படித்தோம். எனவே, யெகோவாவின் உதவியுடன் யோபுவின் உதாரணத்தைப் பின்பற்றத் தீர்மானமாக இருப்போமாக! “சோதனையைச் சகிக்கிற மனுஷன் பாக்கியவான்; அவன் உத்தமனென்று விளங்கின பின்பு கர்த்தர் தம்மிடத்தில் அன்புகூருகிறவர்களுக்கு வாக்குத்தத்தம் பண்ணின ஜீவகிரீடத்தைப் பெறுவான்” என்று பைபிள் வாக்குறுதி அளிக்கிறது.—யாக்கோபு 1:12.
எப்படி பதில் அளிப்பீர்கள்?
• நாம் யெகோவாவின் மனதை எவ்வாறு சந்தோஷப்படுத்த முடியும்?
• கடவுள் நம்மீது கோபமாக இருப்பதால்தான் நமக்குப் பிரச்சினைகள் வருகின்றன என்பதாக நாம் ஏன் நினைக்கக்கூடாது?
• சகிப்புத்தன்மையுடன் இருக்க யோபுவுக்கு எவை உதவின?
• சக விசுவாசிகளைப் பலப்படுத்தும்போது நாம் எவ்வாறு எலிகூவைப் பின்பற்றலாம்?
[பக்கம் 28-ன் படம்]
ஒரு நல்ல ஆலோசகர் அனுதாபத்துடனும் மரியாதையுடனும் அன்புடனும் நடந்துகொள்வார்
[பக்கம் 29-ன் படங்கள்]
எல்சாவும் ஹெரால்ட் ஆப்ட்டும்