உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w02 10/1 பக். 28-31
  • ‘உங்களையே பயிற்றுவியுங்கள்’

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ‘உங்களையே பயிற்றுவியுங்கள்’
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2002
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • தலைசிறந்த பயிற்சியாளர்
  • அனுதாபமுள்ள பயிற்சியாளர்
  • ‘எல்லாவற்றிலும் இச்சையடக்கம்’
  • குறி தவறாத முயற்சிகள்
  • ‘தேவன் உங்கள் பயிற்சியை முடிவுக்குக் கொண்டுவருவார்’
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1989
  • ஜீவனுக்கான பந்தயத்தில் நீங்கள் எவ்வாறு ஓடிக்கொண்டிருக்கிறீர்கள்?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1992
  • “பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள்”
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2001
  • உங்களால் முடிவுவரை சகித்திருக்க முடியும்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1999
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2002
w02 10/1 பக். 28-31

‘உங்களையே பயிற்றுவியுங்கள்’

வேகத்திலும் வேகம், உயரத்திலும் உயரம், பலத்திலும் பலம்! பூர்வ கிரீஸிலும் ரோமிலும் இருந்த விளையாட்டு வீரர்கள் எட்ட துடித்த இலட்சியங்களே இவை. பல நூற்றாண்டுகளாக ஒலிம்பியா, டெல்ஃபை, நிமியா, கொரிந்துவின் இஸ்துமஸ் ஆகிய இடங்களில் பிரமாண்டமான விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் முன் கடவுட்களின் “ஆசீர்வாதத்தோடு” அவை அரங்கேறின. பல ஆண்டுகளாக கடினமாக பயிற்சி செய்தவர்களுக்குத்தான் இந்த விளையாட்டு போட்டிகளில் கலந்துகொள்ளும் அரிய வாய்ப்பு கிடைத்தது. வெற்றி பெற்றவர்களுக்கும் அவர்களது சொந்த ஊருக்கும் பேரும் புகழும் வந்து குவிந்தது.

அப்படிப்பட்ட ஒரு கலாச்சார பின்னணியில், கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் எழுத்தாளர்கள், கிறிஸ்தவர்களின் ஆவிக்குரிய ஓட்டத்தை விளையாட்டு போட்டிகளோடு ஒப்பிட்டுப் பேசியதில் ஆச்சரியமில்லை. வலுவான விஷயங்களை போதிப்பதற்கு அப்போஸ்தலர்களாகிய பேதுருவும் பவுலும் விளையாட்டுகளோடு சம்பந்தப்பட்ட உவமைகளை திறம்பட பயன்படுத்தினார்கள். நம் நாளிலும் அதே தீவிரமான கிறிஸ்தவ ஓட்டம் தொடர்கிறது. முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் யூத ஒழுங்குமுறையை சமாளிக்க வேண்டியிருந்தது; இன்று அழிவின் தறுவாயில் இருக்கும் உலகோடு நாம் “மல்யுத்தம்” செய்ய வேண்டியிருக்கிறது. (2 தீமோத்தேயு 2:5; 3:1-5) சிலர் தங்கள் ‘விசுவாச ஓட்டத்தில்’ அலுத்துக் களைத்துப் போகலாம். (1 தீமோத்தேயு 6:12, த நியூ இங்லிஷ் பைபிள்) பைபிளில் விளையாட்டு போட்டிகளுக்கும் கிறிஸ்தவ ஓட்டத்திற்கும் கொடுக்கப்பட்டுள்ள ஒற்றுமைகளில் சிலவற்றை ஆராய்வது நமக்கு மதிப்புள்ள பாடங்களை புகட்டும்.

தலைசிறந்த பயிற்சியாளர்

ஒரு விளையாட்டு வீரரின் வெற்றி, அவரது பயிற்சியாளரையே பெரிதும் சார்ந்திருக்கிறது. பூர்வ கால விளையாட்டுக்களைப் பற்றி ஆர்கியோலோஜியா க்ரைக்கா இவ்வாறு சொல்கிறது: “பத்து மாத கால ஆரம்ப பயிற்சி பெற்றிருப்பதாக சொல்லி உறுதிமொழி எடுப்பது போட்டியாளர்களின் கடமையாக இருந்தது.” கிறிஸ்தவர்களுக்கும் கடும் பயிற்சி தேவை. “தேவபக்தியை இலக்காக வைத்து உன்னையே பயிற்றுவித்துக்கொள்” என கிறிஸ்தவ மூப்பராயிருந்த தீமோத்தேயுவிற்கு பவுல் அறிவுரை வழங்கினார். (1 தீமோத்தேயு 4:7, NW) கிறிஸ்தவ ‘விளையாட்டு வீரரின்’ பயிற்சியாளர் யார்? யெகோவா தேவனே! “சகல தகுதியற்ற தயவும் பொருந்திய தேவன்தாமே . . . உங்களது பயிற்றுவிப்பை முடிப்பார், அவர் உங்களை ஸ்திரப்படுத்துவார், அவர் உங்களை பலப்படுத்துவார்” என அப்போஸ்தலனாகிய பேதுரு எழுதினார்.​—⁠1 பேதுரு 5:⁠10, NW.

“உங்களது பயிற்றுவிப்பை முடிப்பார்” என்ற சொற்றொடர் கிரேக்க வினைச்சொல் ஒன்றிலிருந்து பெறப்பட்டிருக்கிறது; “ஒரு பொருளை [அல்லது நபரை] அதன் நோக்கத்திற்கு ஏற்றதாக்குதல், அதன் பயன்பாட்டிற்கு தயார்படுத்தி சரிசெய்தல்” என அது அடிப்படையில் அர்த்தப்படுத்துவதாக தியாலஜிகல் லெக்ஸிகன் ஆஃப் த நியூ டெஸ்டமன்ட் சொல்கிறது. அதேவிதமாக, “தயார்படுத்துதல், பயிற்றுவித்தல், அல்லது முழுமையாக ஆயத்தப்படுத்துதல்” என்று இந்த வினைச்சொல்லை வரையறுக்கலாமென லிடெல் மற்றும் ஸ்காட்டின் கிரீக்-இங்லிஷ் லெக்ஸிகன் கூறுகிறது. கடினமான கிறிஸ்தவ ஓட்டத்திற்கு யெகோவா நம்மை எவ்வழிகளில் ‘தயார்படுத்துகிறார், பயிற்றுவிக்கிறார், அல்லது முழுமையாக ஆயத்தப்படுத்துகிறார்’? இந்த ஒப்புமையை புரிந்துகொள்வதற்கு, பயிற்சியாளர்கள் கையாண்ட சில முறைகளை கவனிக்கலாம்.

பூர்வ கிரீஸில் ஒலிம்பிக் விளையாட்டுகள் என்ற ஆங்கில புத்தகம் இவ்வாறு சொல்கிறது: “இளைஞருக்கு பயிற்சி கொடுத்தவர்கள் முக்கியமாக இரண்டு அடிப்படை முறைகளை பயன்படுத்தினார்கள்; அதில் ஒன்று, மிகச் சிறந்த பலன்களைப் பெறுவதற்கு முடிந்தளவு அதிகமாக சரீர முயற்சி செய்யும்படி மாணவரை உற்சாகப்படுத்துவது; மற்றொன்று, மாணவரின் திறமையையும் பாணியையும் முன்னேற்றுவிப்பது.”

அதேவிதமாக, யெகோவா நம் உள்ளாற்றல் அனைத்தையும் வெளிக்கொணரவும் அவரது சேவையில் நம் திறமைகளை முன்னேற்றுவிக்கவும் நம்மை உற்சாகப்படுத்தி பலப்படுத்துகிறார். பைபிளையும் தம் பூமிக்குரிய அமைப்பையும் முதிர்ச்சி வாய்ந்த சக கிறிஸ்தவர்களையும் பயன்படுத்தி அவர் நம்மை திடப்படுத்துகிறார். சில சமயங்களில் சிட்சிப்பதன் மூலம் நம்மை பயிற்றுவிக்கிறார். (எபிரெயர் 12:6) மற்ற சமயங்களில், நாம் சகிப்புத்தன்மையை வளர்த்துக்கொள்வதற்காக பல்வேறு சோதனைகளையும் கஷ்டங்களையும் அவர் அனுமதிக்கிறார். (யாக்கோபு 1:2-4) மேலும் அவற்றை சமாளிக்க அவர் தேவையான பலத்தைத் தருகிறார்; தீர்க்கதரிசியாகிய ஏசாயா இவ்வாறு சொல்கிறார்: “யெகோவாவுக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பலம் அடைந்து கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்.”​—⁠ஏசாயா 40:31, திருத்திய மொழிபெயர்ப்பு.

முக்கியமாக, கடவுள் தமது பரிசுத்த ஆவியை நமக்கு அபரிமிதமாக அருளுகிறார்; அவர் அங்கீகரிக்கும் விதத்தில் தொடர்ந்து சேவை செய்ய அது நம்மை பலப்படுத்துகிறது. (லூக்கா 11:13) பல சந்தர்ப்பங்களில் கடவுளுடைய ஊழியர்கள் கடும் விசுவாச சோதனைகளை வெகு காலம் அனுபவித்திருக்கிறார்கள். அவர்கள் நம்மைப் போன்ற சாதாரண ஆண்களும் பெண்களும்தான். ஆனால் கடவுள் மீது முழுமையாக சார்ந்திருந்ததால் அவர்களால் சகித்திருக்க முடிந்தது. உண்மையில், ‘இயல்புக்கு அப்பாற்பட்ட சக்தி நம்முடையதல்ல, கடவுளுடையதே.’​—⁠2 கொரிந்தியர் 4:7, NW.

அனுதாபமுள்ள பயிற்சியாளர்

அக்காலத்து பயிற்சியாளர்களின் பணிகளில் ஒன்று, “விளையாட்டு வீரர் ஒருவருக்கு, அவர் கலந்துகொள்ளவிருக்கும் விளையாட்டுக்கு ஏற்ப எப்படிப்பட்ட பயிற்சிகள் தேவை, எந்தளவுக்கு தேவை என்பதை தீர்மானிப்பதே” என ஒரு அறிஞர் குறிப்பிடுகிறார். கடவுள் நம்மை பயிற்றுவிக்கும்போது நம் சூழ்நிலைகள், திறமைகள், சுபாவம், வரம்புகள் ஆகியவற்றை மனதில் வைக்கிறார். யெகோவா நம்மை பயிற்றுவிக்கும்போது நாம் யோபுவைப் போல், “நீர் என்னை களிமண்ணால் உருவாக்கியிருக்கிறீர் என்பதை தயவுசெய்து நினைத்துப் பாரும்” என அடிக்கடி மன்றாடுகிறோம். (யோபு 10:9, NW) அனுதாபமுள்ள நம் பயிற்சியாளர் அதைக் கேட்டருளுகிறாரா? யெகோவாவைப் பற்றி தாவீது இவ்வாறு எழுதினார்: “நம்முடைய உருவம் இன்னதென்று அவர் அறிவார்; நாம் மண்ணென்று நினைவுகூருகிறார்.”​—⁠சங்கீதம் 103:⁠14.

உங்களுக்கு ஒருவேளை தீராத வியாதி இருப்பதால் ஊழியத்தில் அதிகம் ஈடுபட முடியாதிருக்கலாம் அல்லது தாழ்வுணர்ச்சியை சமாளிக்க நீங்கள் போராடிக் கொண்டிருக்கலாம். ஒருவேளை ஒரு மோசமான பழக்கத்தை விட்டொழிக்க நீங்கள் பாடுபட்டுக் கொண்டிருக்கலாம் அல்லது அக்கம்பக்கத்திலோ வேலை செய்யும் இடத்திலோ பள்ளியிலோ மற்றவர்கள் தரும் தொல்லைகளை சமாளிக்க முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கலாம். நீங்கள் எப்படிப்பட்ட சூழ்நிலைகளில் இருந்தாலும், உங்கள் பிரச்சினைகளை மற்ற எவரைக் காட்டிலும்​—⁠உங்களைக் காட்டிலும்கூட​—⁠யெகோவா நன்கு புரிந்துகொள்கிறார் என்பதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள்! கரிசனையுள்ள பயிற்சியாளராக அவர் எப்போதும் உங்களுக்கு உதவ தயாராக இருக்கிறார்; ஆனால் அதற்கு நீங்கள் அவரிடம் நெருங்கி செல்ல வேண்டும்.​—⁠யாக்கோபு 4:⁠8.

“பயிற்சிகளின் விளைவாக அல்ல, ஆனால் கோபம், சோர்வு போன்ற மனம் சார்ந்த மற்ற பாதிப்புகளால் ஏற்பட்ட களைப்பை அல்லது பலவீனத்தை [பூர்வ பயிற்சியாளர்களால்] அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது. . . . [பயிற்சியாளர்களுக்கு] அந்தளவு அதிகாரம் இருந்ததால் போட்டியாளர்களின் சொந்த வாழ்க்கை மீதும் ஒரு கண் வைத்து, அவசியமென நினைத்த சமயங்களில் அதில் தலையிட்டனர்.”

இந்த உலகிலிருந்து ஓயாமல் வரும் அழுத்தங்களும் சோதனைகளும் சிலசமயம் உங்களை அலுத்துக் களைத்துப் போக அல்லது பலவீனமாக உணரச் செய்கிறதா? உங்கள் பயிற்சியாளராக யெகோவா உங்கள் மீது பெருமளவு அக்கறையுள்ளவராக இருக்கிறார். (1 பேதுரு 5:7) ஆவிக்குரிய பலவீனத்தின் அல்லது சோர்வின் அறிகுறி உங்களிடம் துளி தென்பட்டாலும் அவர் உடனடியாக புரிந்துகொள்கிறார். நம் சுயாதீனத்தையும் நம் தெரிவையும் யெகோவா மதிக்கிறார் என்றாலும், நம் நித்திய நலனில் அக்கறை உள்ளவராக இருப்பதால் தேவைப்படுகையில் போதிய உதவியையும் சரிப்படுத்துதலையும் அளிக்கிறார். (ஏசாயா 30:21) எப்படி? பைபிள், பைபிள் சார்ந்த பிரசுரங்கள், சபையிலுள்ள ஆவிக்குரிய மூப்பர்கள், நம் அன்பான சகோதர சகோதரிகள் வாயிலாகவே.

‘எல்லாவற்றிலும் இச்சையடக்கம்’

வெற்றி என்பது நல்ல பயிற்சியாளரை மட்டுமே சார்ந்திருக்கவில்லை. விளையாட்டு வீரரையும் தீவிர பயிற்சியை ஏற்பதற்கான அவரது உறுதியையுமே அது பெரிதும் சார்ந்திருந்தது. பயிற்சி கடினமானதாக இருந்தது; ஏனெனில் பாலுறவு, மதுபானம் போன்றவற்றை அறவே தவிர்ப்பதும் திட்ட உணவு சாப்பிடுவதும் அவசியமாக இருந்தது. “அடையத் துடித்த இலட்சியத்திற்காக” போட்டியாளர்கள் “மதுவையும் மாதுவையும் தொடவில்லை” என பொ.ச.மு. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த கவிஞராகிய ஹாரஸ் கூறினார். மேலும், விளையாட்டுக்களில் கலந்துகொண்டவர்கள் “பத்து மாதங்களுக்கு . . . இச்சையடக்கத்தையும் உணவுக் கட்டுப்பாட்டையும்” கடைப்பிடிக்க வேண்டியிருந்ததாக பைபிள் அறிஞராகிய எஃப். சி. குக் குறிப்பிட்டார்.

அருகாமையில் நடைபெற்ற இஸ்த்மியன் விளையாட்டுகளைப் பற்றி நன்கு அறிந்திருந்த கொரிந்திய கிறிஸ்தவர்களுக்கு கடிதம் எழுதியபோது பவுல் இந்த ஒப்புமையைப் பயன்படுத்தினார்: “பந்தயத்திற்குப் போராடுகிற யாவரும் எல்லாவற்றிலேயும் இச்சையடக்கமாயிருப்பார்கள்.” (1 கொரிந்தியர் 9:25) இந்த உலகின் பொருளாசைமிக்க, ஒழுக்கக்கேடான, அசுத்தமான வாழ்க்கைப் பாணிகளை உண்மை கிறிஸ்தவர்கள் தவிர்க்கிறார்கள். (எபேசியர் 5:3-5; 1 யோவான் 2:15-17) தேவபக்திக்கும் வேதவசனங்களுக்கும் பொருந்தாத குணங்களை விட்டுவிட்டு, கிறிஸ்துவுக்குரிய பண்புகளை வளர்த்துக்கொள்வதும் அவர்களுக்கு அவசியமாயிருக்கிறது.​—⁠கொலோசெயர் 3:9, 10, 12.

இதை எப்படி செய்வது? வலுவான உவமையின் வாயிலாக பவுல் தரும் பதிலைக் கவனியுங்கள்: “மற்றவர்களுக்குப் பிரசங்கம் பண்ணுகிற நான்தானே ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு, என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன்.”​—⁠1 கொரிந்தியர் 9:⁠27.

இங்கே பவுல் எப்பேர்ப்பட்ட வலுவான குறிப்பை சொன்னார்! உடலுக்கு வேதனையளித்துக் கொள்வதை அவர் சிபாரிசு செய்யவில்லை. மாறாக, தனக்கும் மனப் போராட்டங்கள் இருந்ததை ஒப்புக்கொண்டார். சிலசமயங்களில் விரும்பிய காரியங்களை செய்யாமல் தான் விரும்பாததையே அவர் செய்தார். ஆனால் தன் பலவீனங்கள் தன்னை கட்டுப்படுத்த ஒருபோதும் அனுமதியாதிருக்க அவர் போராடினார். தன் ‘சரீரத்தை ஒடுக்கி,’ மாம்சப்பிரகாரமான விருப்பங்களையும் பண்புகளையும் தீவிரமாக கீழ்ப்படுத்தினார்.​—⁠ரோமர் 7:21-25.

கிறிஸ்தவர்கள் அனைவரும் அதையே செய்ய வேண்டும். ஒரு காலத்தில் விபச்சாரம், விக்கிரகாராதனை, ஓரினப்புணர்ச்சி, திருட்டு போன்றவற்றில் ஈடுபட்டிருந்த கொரிந்தியர் சிலர் செய்த மாற்றங்களைப் பற்றி பவுல் குறிப்பிட்டார். மாறுவதற்கு எது அவர்களுக்கு உதவியது? கடவுளுடைய வார்த்தையின் வல்லமையும், பரிசுத்த ஆவியின் வல்லமையும், அவற்றின் செல்வாக்கிற்கு இசைவாக நடப்பதற்கான அவர்களது தீர்மானமுமே. “ஆயினும் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலும், நமது தேவனுடைய ஆவியினாலும் கழுவப்பட்டீர்கள், பரிசுத்தமாக்கப்பட்டீர்கள், நீதிமான்களாக்கப்பட்டீர்கள்” என்று பவுல் குறிப்பிட்டார். (1 கொரிந்தியர் 6:9-11) அதேவிதமாக கெட்ட பழக்கங்களை விட்டுவிட்டவர்களைப் பற்றி பேதுருவும் எழுதினார். கிறிஸ்தவர்களாக அவர்கள் அனைவரும் பெரும் மாற்றங்களைச் செய்திருந்தனர்.​—⁠1 பேதுரு 4:3, 4.

குறி தவறாத முயற்சிகள்

ஆன்மீக இலக்குகளை அடைவதில் கவனம் சிதறாமல் ஒரே மனதாக தான் இருந்ததைப் பற்றி பவுல் இவ்வாறு சொன்னார்: “காற்றைக் குத்துபவரைப்போலக் குத்துச் சண்டை இடமாட்டேன்.” (1 கொரிந்தியர் 9:26, பொது மொழிபெயர்ப்பு) குத்துச்சண்டையில் பங்கெடுப்பவர் எப்படி குத்துவார்? கிரேக்கர்கள் மற்றும் ரோமர்களின் வாழ்க்கை என்ற ஆங்கில புத்தகம் இவ்வாறு சொல்கிறது: “முரட்டுத்தனமான பலம் மட்டுமல்ல, எதிரியின் பலவீனங்களை கண்ணால் அளந்துவிடும் கூரிய பார்வையும் அவசியமாயிருந்தது. மல்யுத்த பயிற்சிப் பள்ளிகளில் கற்ற திறமையான சில தாக்குதல் முறைகளும் எதிரியை வீழ்த்துவதில் துரிதமும்கூட அவசியமாக இருந்தது.”

நம் எதிரிகளில் ஒன்று நம் அபூரண மாம்சமே. நம் சொந்த ‘பலவீனங்களை’ நாம் அறிந்திருக்கிறோமா? மற்றவர்கள்​—⁠முக்கியமாக சாத்தான்​—⁠நம்மை பார்க்கும் கண்ணோட்டத்தில் நம்மை நாமே பார்க்க மனமுள்ளவர்களாக இருக்கிறோமா? அதற்கு நேர்மையான சுயபரிசோதனையும் மாற்றங்களை செய்வதற்கான விருப்பமும் தேவை. நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வது வெகு எளிது. (யாக்கோபு 1:22) ஞானமற்ற செயலை நியாயப்படுத்துவது எவ்வளவு சுலபம்! (1 சாமுவேல் 15:13-15, 20, 21) இது ‘காற்றைக் குத்துவதற்கு’ சமம்.

இந்தக் கடைசி நாட்களில் யெகோவாவைப் பிரியப்படுத்தி ஜீவனைப் பெற விரும்புகிறவர்கள், சரி, தவறுக்கு இடையே உள்ள தெரிவை செய்ய தயங்கக்கூடாது; கடவுளுடைய சபை, இந்த சீர்கெட்ட உலகம் ஆகியவற்றிற்கு இடையே உள்ள தெரிவை செய்யவும் தயங்கக்கூடாது. அவர்கள் ‘இருமனமுள்ளவர்களாக, தங்கள் வழிகளிலெல்லாம் நிலையற்றவர்களாக’ தடுமாறிக் கொண்டிருப்பதைத் தவிர்க்க வேண்டும். (யாக்கோபு 1:8) பலன்தராத காரியங்களுக்காக தங்கள் முயற்சிகளை அவர்கள் வீணாக்கக்கூடாது. ஒருவர் இவ்வாறு ஒரே மனதாக நேர்ப்பாதையில் செல்லும்போது அவர் சந்தோஷமாக இருப்பார்; அவர் “தேறுகிறது யாவருக்கும் விளங்கும்.”​—⁠1 தீமோத்தேயு 4:⁠15.

ஆம், கிறிஸ்தவ ஓட்டம் தொடர்கிறது. நமது மகத்தான பயிற்சியாளராகிய யெகோவா தேவன் நம் சகிப்புத்தன்மைக்கும் இறுதி வெற்றிக்கும் தேவையான அறிவுரையையும் உதவியையும் அன்போடு அளிக்கிறார். (ஏசாயா 48:17) பூர்வ காலத்து விளையாட்டு வீரர்களைப் போல், நம் விசுவாச போராட்டத்தில் நாம் சுயகட்டுப்பாட்டையும் இச்சையடக்கத்தையும் ஒருமுகப்படுத்தப்பட்ட மனதையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். குறி தவறாத நம் முயற்சிகள் அபரிமிதமான பலன்களைத் தரும்.​—⁠எபிரெயர் 11:⁠6.

[பக்கம் 31-ன் பெட்டி]

‘அவனுக்கு எண்ணெய் பூசு’

பூர்வ கிரீஸில் விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதில் எண்ணெய் பூசுபவருக்கும் பங்கிருந்தது. பயிற்சியை ஆரம்பிக்கும் முன் அவர்களது உடலுக்கு எண்ணெய் தேய்த்து விடுவதே அவரது பணி. “பயிற்சிக்கு முன்பு தசைகளை திறம்பட மசாஜ் செய்தது அதிக பலன் தந்ததாகவும் நீண்ட நேர பயிற்சிக்குப் பின்பு கவனமாகவும் மெதுவாகவும் மசாஜ் செய்தது பழையபடி சகஜ நிலைக்கு திரும்ப உதவியதாகவும்” பயிற்சியாளர்கள் கண்டனர் என பூர்வ கிரீஸில் ஒலிம்பிக் விளையாட்டுகள் என்ற ஆங்கில புத்தகம் சொல்கிறது.

ஒருவரது உடலுக்கு எண்ணெய் தேய்த்துவிடுவது எவ்வாறு இதமும் சுகமும் குணமும் அளிக்கிறதோ அவ்வாறே கடவுளுடைய வார்த்தையை பயன்படுத்துவது சோர்வுற்ற கிறிஸ்தவ “விளையாட்டு வீரரை” சீர்படுத்தி, இதமளித்து, குணப்படுத்த முடியும். ஆகவே யெகோவாவின் வழிநடத்துதலுக்கு இசைய சபையிலுள்ள மூப்பர்கள் அப்படிப்பட்ட நபருக்காக ஜெபம் செய்து ‘யெகோவாவின் நாமத்தினாலே அவனுக்கு [அடையாளப்பூர்வமாக] எண்ணெய் பூசுமாறு’ சொல்லப்படுகிறார்கள். இதுவே ஆவிக்குரிய குணமடைவதற்கு வழிவகுக்கும் முக்கிய செயலாகும்.​—⁠யாக்கோபு 5:13-15; சங்கீதம் 141:⁠5.

[பக்கம் 31-ன் படம்]

பலி செலுத்திய பிறகு, விளையாட்டு வீரர்கள் தாங்கள் பத்து மாத கால பயிற்சி பெற்றதை உறுதிமொழியில் சொன்னார்கள்

[படத்திற்கான நன்றி]

Musée du Louvre, Paris

[பக்கம் 29-ன் படத்திற்கான நன்றி]

Copyright British Museum

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்