உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g98 7/22 பக். 7-11
  • சமூக பயத்தை அடக்கி ஆளுதல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • சமூக பயத்தை அடக்கி ஆளுதல்
  • விழித்தெழு!—1998
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • நோயின் அறிகுறிகளை சமாளித்தல்
  • பயத்தை ஆராய்தல்
  • பயப்படாமல் பயங்களை எதிர்கொள்ளுங்கள்
  • “நம்மைப்போன்ற உணர்ச்சியுள்ள” மனிதர்கள்
  • எல்லா கண்களும் உங்களையே மொய்க்கும்போது
    விழித்தெழு!—1998
  • பயம் படுத்தும் பாடு
    விழித்தெழு!—1998
  • உங்கள் கவலைகளையெல்லாம் யெகோவாமேல் வைத்துவிடுங்கள்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)-2016
  • மனப்பதற்ற நோயால் வாடுவோருக்கு உதவ...
    விழித்தெழு!—2012
மேலும் பார்க்க
விழித்தெழு!—1998
g98 7/22 பக். 7-11

சமூக பயத்தை அடக்கி ஆளுதல்

“பயம் என்ற நோய்க்கு சிகிச்சை அளிக்கும்போது, நல்ல பலன் இருக்கிறது என்பதை இந்நோயுள்ள நபர்கள் முக்கியமாக நினைவில் வைக்க வேண்டும். இந்த வியாதியால் காலமெல்லாம் கஷ்டப்பட வேண்டியதில்லை.”—டாக்டர் கிறிஸ் செலிடன்.

இனிய செய்தி என்னவென்றால், சமூக பயமுள்ள நிறையப்பேருக்கு, அவர்களுடைய டென்ஷனைக் குறைக்கவும், அவர்கள் பல வருடங்களாக பயந்து நடுநடுங்கிய சூழ்நிலைகளை சமாளிக்கவும் உதவியளிக்கப்பட்டுள்ளது. சமூக பயத்தால் நீங்கள் அவதிப்படுகிறீர்களா? கவலை வேண்டாம். அதை எப்படி நடைமுறையான வழிகளில் சமாளிக்கலாம் என்பதை நீங்களும்கூட கற்றுக்கொள்ளலாம். அதற்காக நீங்கள் பின்வருவனவற்றை கவனித்து, குறித்துக்கொள்ளுங்கள்: (1) பயத்தால் உடலில் ஏற்படும் மாற்றங்கள். (2) நீங்கள் பயப்படும் சூழ்நிலையைப் பற்றிய உங்களது எண்ணம். (3) பயத்தை வெளிக்காட்டும் உங்களது நடத்தை.

பைபிள் கொள்கைகள் உங்களுக்கு உதவும். உண்மைதான், கடவுளுடைய வார்த்தை ஒரு மருத்துவ புத்தகமும் அல்ல. “சமூக பயம்” என்று ஒரு விசேஷ வார்த்தையும் அதில் காணப்படுவதுமில்லை. ஆனாலும், ‘நடைமுறையான அறிவையும் சிந்திக்கும் திறனையும் காத்துக்கொள்ள’ பைபிள் உங்களுக்கு உதவும்.—நீதிமொழிகள் 3:2, NW; ஏசாயா 48:17.

நோயின் அறிகுறிகளை சமாளித்தல்

சமூக பயம் என்னும் நோயின் அறிகுறிகள் ஒவ்வொரு நபருக்கும் வித்தியாசமாக இருக்கும். பயம் நிறைந்த சூழலில் உங்களது உடலில் என்ன மாற்றம் ஏற்படுகிறது? உங்கள் கைகள் நடுங்குகின்றனவா? உங்கள் இதயம் வேகமாகத் துடிக்கிறதா? வயிற்றைக் கலக்குகிறதா? உங்களுக்கு வியர்த்து கொட்டுகிறதா, முகம் குப் என்று சிவந்துவிடுகிறதா, நாக்கு வறண்டு விடுகிறதா?

உண்மைதான், மற்றவர்கள் முன் பயங்கரமாக வியர்த்து கொட்டுவதை, வாய் திக்குவதை அல்லது பயந்து நடுநடுங்குவதை யோசித்துபார்க்கவும் விரும்பமாட்டோம். அதற்காக டென்ஷனாவதால் மட்டும் என்ன பிரயோஜனம்? எனவே பின்வருமாறு இயேசு கேட்டது மிகவும் பொருத்தமாக உள்ளது: “கவலைப்படுகிறதினாலே உங்களில் எவன் தன் சரீர அளவோடு ஒரு முழத்தைக் கூட்டுவான்?” (மத்தேயு 6:27; நீதிமொழிகள் 12:25-ஐ ஒப்பிடுக.) நோயைப் பற்றியும், மற்றவர்கள் என்ன நினைப்பார்களோ என்றும் சும்மா யோசித்துக்கொண்டிருந்தால், நீங்கள் நொந்து நூலாகிவிடுவீர்கள். “சமூக பயமுள்ளவர்கள் பயந்து நடுங்கும் போது மற்றவர்கள் பார்க்கிறார்களோ என்ற நினைப்பே அவர்களுக்கு மேலும் டென்ஷனைக் கொடுக்கிறது. அவர்கள் தர்மசங்கடத்தில் மாட்டிக்கொள்ளும் சூழ்நிலையை நினைத்தோ, அத்தகைய சூழ்நிலையில் ஏடாகூடமாக நடந்துவிடும் என்று எதிர்பார்த்தோ பயந்து நடுங்குகிறார்கள்” என்று குறிப்பிடுகிறது த ஹார்வர்டு மென்டல் ஹெல்த் லெட்டர்.

மூச்சை நிதானமாக இழுத்து விட பழகினால், பயத்தால் உடலில் ஏற்படும் மாற்றங்களின் தீவிரத்தன்மையைக் குறைக்க முடியும். (“மூச்சு விடுவதை கவனிக்கவும்!” என்ற பெட்டியைக் காண்க.) ஒழுங்காக உடற்பயிற்சி செய்வதும், தசையை தளர்ச்சியடைய செய்வதும்கூட நல்லது. (1 தீமோத்தேயு 4:8) உங்கள் பழக்க வழக்கங்களில் ஒருசில மாற்றங்களை நீங்கள் செய்யவேண்டியிருக்கும். உதாரணத்திற்கு பைபிள் இவ்வாறு ஆலோசனை வழங்குகிறது: “காற்றைப் பிடிக்க முயல்வது போன்ற பயனற்ற உழைப்பு இரு கை நிறைய இருப்பதைவிட மன அமைதி ஒரு கையளவு இருப்பதே மேல்.” (பிரசங்கி [சபை உரையாளர்] 4:6, பொது மொழிபெயர்ப்பு) ஆகவே, கண்டிப்பாக போதுமான ஓய்வெடுங்கள். உங்களுடைய உணவு விஷயத்திலும் கவனம் தேவை. சாப்பாட்டை தவறவிடாதீர்கள் அல்லது நேரங்கெட்ட நேரத்தில் சாப்பிடாதீர்கள். ஒருவேளை கேஃபின் உட்கொள்வதை குறைக்கவேண்டியிருக்கும். ஏனென்றால் டென்ஷன் அதிகரிக்க முக்கிய காரணம் கேஃபின்தான்.

இவை எல்லாவற்றையும்விட, பொறுமைதான் ரொம்ப ரொம்ப அவசியம். (பிரசங்கி 7:8) டாக்டர்களின் (Ph.D.) குழு ஒன்று இவ்வாறு அறிவிக்கிறது: “இப்போதும்கூட சில பார்ட்டிகளுக்கு நீங்கள் போகும்போது கொஞ்சம் பயம் இருக்கத்தான் செய்யும். ஆனால் பயத்தால் உடலில் ஏற்படும் பயங்கரமான மாற்றங்கள் பெருமளவுக்கு குறைந்து வருவதை நாள்பட நாள்பட நீங்களே உணர்ந்து கொள்வீர்கள். முக்கிய விஷயம் என்னவென்றால், நீங்கள் பயப்படும் சூழ்நிலையை எதிர்ப்பட எதிர்ப்பட உங்களது தன்னம்பிக்கையும் வளரும், நீங்கள் பயந்து நடுங்கிய பார்ட்டிகளில் கலந்துகொள்ள தயாராகவும் இருப்பீர்கள்.”

பயத்தை ஆராய்தல்

ஏதோ ஓர் உணர்வு உங்களுக்கு வரும் முன், அதைப் பற்றிய எண்ணம் வந்திருக்க வேண்டும் என்கிறார்கள். இது சமூக பயந்தாங்கொள்ளிகளின் விஷயத்திலும் உண்மை என்றே தெரிகிறது. பயத்தால் உடலில் ஏற்படும் மாற்றங்களை குறைக்க வேண்டுமென்றால், ‘மனதில் [இருக்கும் என்ன] கவலைகள்’ அத்தகைய மாற்றங்களை தூண்டுகின்றன என்பதை முதலில் ஆராய வேண்டும்.—சங்கீதம் 94:19, பொ.மொ.

மற்றவர்கள் நிராகரித்து விடுவார்கள் என்ற அச்சத்தால் ஏற்படுவதுதான் இந்தச் சமூக பயம் என்கிறார்கள் ஒருசில நிபுணர்கள். எடுத்துக்காட்டாக, ஒரு பார்ட்டி நடந்துகொண்டிருக்கையில், சமூக பயந்தாங்கொள்ளி தனக்குள் இவ்வாறு சொல்லிக்கொள்வார்: ‘நான் பாக்க மக்கு மாதிரி இருக்கேன். இந்தப் பார்ட்டிக்கு நான் லாயிக்கற்றவன்னு மத்தவங்க ஒருமாதிரியா என்னை பாக்கறாங்க. கண்டிப்பா, எல்லாரும் என்னைப் பத்தித்தான் என்னமோ சொல்லி சிரிச்சுக்கிட்டு இருக்காங்க.’ சமூக பயந்தாங்கொள்ளியாக இருந்த டெரேஸி இப்படித்தான் நினைத்துக்கொள்வார். ஆனால், நாளாக நாளாக, இத்தகைய எண்ணங்களை ஆராய்ந்து பார்த்தார். கிடைக்கும் நேரத்தில் செய்வதற்கு எவ்வளவோ நல்ல விஷயங்கள் மற்றவர்களுக்கு இருக்கும்போது, அவர்கள் எதற்கு வீணாக தன்னைப் பற்றி ஆராயப்போகிறார்கள் என்ற உண்மையை அறிந்துகொண்டார். டெரேஸி இந்த முடிவுக்கு வந்தார்: “ஒருவேளை ஏதோ போரடிக்கும் விஷயத்தை நான் சொல்லி இருந்தாலும், என்னை ஒரு மனுஷியாக ஏற்றுக்கொள்ள மாட்டார்களா என்ன?”

டெரேஸியைப் போல் நீங்களும்கூட தவறுதலான எண்ணங்களை ஆராய்ந்து பாருங்கள். பார்ட்டிகளில் மற்றவர்கள் உங்களை ஒதுக்கிவிடுவார்கள் என்ற உங்களது கற்பனையையும் உங்களை இப்படி இப்படி நடத்துவார்கள் என்று அவர்கள்மீது நீங்கள் குத்தியிருக்கும் முத்திரையையும் ஆராய்ந்து பாருங்கள். சரி, ஒருவேளை நீங்கள் பயந்தபடியே நடந்துவிட்டால், மற்றவர்கள் உங்கள்மீது வெறுப்படைவார்கள் என்று சொல்வது நியாயமா? அப்படியே ஒருசிலர் உங்களிடத்தில் வெறுப்படைந்தாலும், அந்த இக்கட்டான நிலையிலிருந்து நீங்கள் மீளவே முடியாதா? மற்றவர்கள் உங்களைப் பற்றி என்ன நினைத்தால் என்ன, மனிதன் என்ற உங்கள் தகுதி போய்விடுமா? இதோ பைபிள் தரும் அறிவுக்கேற்ற அறிவுரை: “சொல்லப்படும் எல்லா வார்த்தைகளையும் கவனியாதே.”—பிரசங்கி 7:21.

சமூக பயத்தைப் பற்றி எழுதிய டாக்டர்களின் குழு ஒன்று இவ்வாறு குறிப்பிட்டது: “ஒருசில சந்தர்ப்பங்களில் ஒதுக்கப்படுவது வாழ்க்கையில் சகஜம்தான். ஆனால் அதைப் பற்றி அளவுக்கு அதிகமாக டென்ஷனாகும்போது பிரச்சினைகள் வருகின்றன. ஒதுக்கும்போது ரொம்ப ஏமாற்றமாக இருக்கும். உண்மையில் மனது மிகவும் புண்படும். அதனால் மனம் இடிந்துபோக தேவையில்லை. அது ஒன்றும் பேரிடி அல்ல. நீங்களாக அப்படி நினைக்காதவரை அது உங்கள் வாழ்க்கையை அழித்துவிடாது.”

நம்மையே யதார்த்தமாக நோக்க பைபிள் உதவுகிறது. அது பின்வருமாறு ஒத்துக்கொள்கிறது: “நாம் எல்லாரும் அநேக விஷயங்களில் தவறுகிறோம்.” (யாக்கோபு 3:2) தன்னிடத்தில் எந்தக் குறைபாடும் இல்லை என்று யாரும் சொல்ல முடியாது. அதனால் ஒருசில நேரங்களில் தர்மசங்கடத்தில் மாட்டிக்கொண்டு தவிக்கிறோம். இதைப் புரிந்துகொண்டால், மற்றவர்கள் ஏதோ தவறுசெய்யும்போது நாமும் கண்டுகொள்ளாமல் இருப்போம். அதேபோல் மற்றவர்களும் நம்மிடத்தில் புரிந்துகொள்ளுதலோடு நடந்துகொள்வார்கள். என்ன நடந்தாலும் சரி, யெகோவா தேவன் நம்மை ஏற்றுக்கொள்வதுதான் மிக மிக முக்கியம். அவர் எப்போதும் நம் குற்றங்களில் குறியாக இருப்பதில்லை. இதை கிறிஸ்தவர்கள் அறிந்திருக்கிறார்கள்.—சங்கீதம் 103:13, 14; 130:3.

பயப்படாமல் பயங்களை எதிர்கொள்ளுங்கள்

சமூக பயம் என்ற போராட்டத்தில் வெற்றிவாகை சூடவேண்டுமென்றால், நீங்கள் எப்படியும் பயத்தை எதிர்கொள்ள வேண்டும். பயத்தை எதிர்கொள்ள வேண்டும் என்ற எண்ணமே உங்களுக்கு நடுக்கத்தை கொடுக்கலாம். இதுவரை நீங்கள் பயந்து நடுங்கி, பார்ட்டிகளுக்கு போகாமல் இருந்திருப்பீர்கள். அதனால் தன்னம்பிக்கை முழுவதுமாக இழந்து, அப்படியே பயத்தில் மூழ்கிப்போய் இருப்பீர்கள். எனவேதான், “பிறரோடு ஒத்துவாழாதவர் தன்னலத்தை நாடுகின்றார்; பிறர் கூறும் தக்க அறிவுரையும் அவருக்கு எரிச்சலை உண்டாக்கும்” என்று பைபிள் கூறுவதில் வலிமையான காரணம் இருக்கிறது.—நீதிமொழிகள் 18:1, பொ.மொ.

ஆனால், நீங்கள் உங்களுடைய பயத்தை எதிர்கொள்ள முயன்றால் உங்களுடைய டென்ஷனைக் குறைக்கலாம்.a டாக்டர் ஜான் ஆர். மார்ஷல் இவ்வாறு கூறுகிறார்: “மக்களோடு கட்டாயமாக தொடர்பு கொள்ள வேண்டிய சந்தர்ப்பங்களில் அல்லது அத்தகைய சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக்கொடுக்கும் அமைப்புகளில் சமூக பயமுள்ள நோயாளிகள் வலுக்கட்டாயமாக ஈடுபட வேண்டுமென்று நாங்கள் ஊக்கம் தருகிறோம். அதிலும், குறிப்பான பயங்களை எதிர்ப்படும் நோயாளிகளுக்கு, உதாரணத்திற்கு பொது மக்களிடத்தில் பேச பயப்படும் நபர்களுக்கு அதிக ஊக்கம் தருகிறோம்.”

நீங்கள் பயந்து நடுங்கிய சூழ்நிலைகளை எதிர்கொள்ளும்போது, பின்வரும் விஷயங்கள் உங்களுக்கு தெளிவாகும்: (1) தர்மசங்கடத்தில் மாட்டிக்கொள்ளும்படி, இசகுபிசகாக நீங்கள் எதையாவது செய்துவிட்டாலும் அதற்காக மற்றவர்கள் உங்களை ஒதுக்கிவிட மாட்டார்கள். (2) அப்படியே ஏதோ காரணத்திற்காக அவர்கள் ஒதுக்கிவிட்டாலும், அது ஒன்றும் பேரிடி அல்ல. மெல்ல நிதானமாகத்தான் உங்களால் முன்னேற்றம் செய்ய முடியும் என்பதை மறந்துவிடாதீர்கள். ஒரே இரவுக்குள் எல்லாம் சரியாகிவிடாது. அதேபோல் சமூக பயம் துளிக்கூட இல்லாமல் மாயமாய் மறைய வேண்டும் என்று எதிர்பார்ப்பதும் யதார்த்தம் அல்ல. பயத்தால் உடலில் ஏற்படும் மாற்றங்களை கட்டுப்படுத்த சிகிச்சை அளிக்கப்படுமே தவிர அவற்றை விரட்டி அடிக்க அல்ல என்கிறார் டாக்டர் சாலி வின்ஸ்டன். அத்தகைய மாற்றங்களை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் அவை ஓடியே விடும் அல்லது அவற்றை கட்டுப்படுத்துவதில் ஓரளவுக்கு முன்னேற்றமாவது செய்ய முடியும் என்றார் அந்த டாக்டர்.

சமூக பயத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதற்கு பலமான தூண்டுதல் கிறிஸ்தவர்களுக்கு உள்ளது. ஏனென்றால் ‘அன்பு செலுத்தவும் நற்செயல்கள் புரியவும் ஒருவரையொருவர் தூண்டியெழுப்பக் கருத்தாயிருக்கும்படி’ அவர்களுக்குச் சொல்லப்படுகிறது. (எபிரேயர் 10:24, 25, பொ.மொ.) கிறிஸ்தவ ஊழியத்தில் பலரோடு பேசும் சந்தர்ப்பங்கள் வருவதால், சமூக பயத்தை மேற்கொள்ள கடினமாக முயற்சி செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் உங்களுடைய ஆன்மீக வளர்ச்சிக்கு பெரும் உதவியாக இருக்கும். (மத்தேயு 28:19, 20; அப்போஸ்தலர் 2:42; 1 தெசலோனிக்கேயர் 5:14) இதைக் குறித்து யெகோவா தேவனிடத்தில் ஜெபம் செய்யுங்கள், அவர் உங்களுக்கு “இயல்புக்கு மீறிய சக்தியை” கொடுப்பார். (2 கொரிந்தியர் 4:7, NW; 1 யோவான் 5:14) மற்றவர்கள் நம்மை ஏற்றுக்கொள்ளும் விஷயத்தில் அளவுக்குமீறி எதிர்பாராமல் இருக்கவும், யெகோவா எதிர்பார்க்கும் திறமைகளை வளர்த்துக்கொள்ளவும் அவரிடமே உதவியைக் கேளுங்கள்.

கவனத்தில் கொள்க: ஒவ்வொரு நோயாளிக்கும் வெவ்வேறு பிரச்சினைகள் இருக்கும், அவருக்கு ஏற்படும் இடையூறுகளும் வித்தியாசமாக இருக்கும். அவருக்கு தேவைப்படும் ஆற்றலும் வேறுபடும். இதுவரை பார்த்த ஆலோசனைகளை ஒருசிலர் பின்பற்றி, நல்ல முன்னேற்றமும் அடைந்திருக்கிறார்கள். ஒருசிலருக்கு கூடுதலான உதவி தேவைப்படலாம். உதாரணத்திற்கு, ஒருசிலருக்கு மருத்துவ சிகிச்சை உதவியிருக்கிறது.b வேறுசிலர் மனநல நிபுணர்களின் உதவியை நாடியிருக்கிறார்கள். எந்தவொரு குறிப்பிட்ட சிகிச்சை முறையையும் விழித்தெழு! பரிந்துரை செய்வதுமில்லை, ஆதரவு தெரிவிப்பதுமில்லை. கிறிஸ்தவர் ஒருவர் சிகிச்சை பெறுகிறார் என்றால், அது அவருடைய தனிப்பட்ட தீர்மானம். ஆனால், அவர் பெறும் சிகிச்சை பைபிள் கொள்கைகளுக்கு விரோதமாக இருக்கக்கூடாது என்பதில் மாத்திரம் அவர் கவனமாக இருக்க வேண்டும்.

“நம்மைப்போன்ற உணர்ச்சியுள்ள” மனிதர்கள்

பைபிளிலிருந்து அதிக ஊக்கம் பெறலாம். ஏனென்றால் தனிப்பட்ட இடையூறுகளையெல்லாம் மேற்கொண்டு, கடவுள் சொன்ன செயலை நிறைவேற்றிய மக்களின் உண்மைக் கதைகள் அதில் உள்ளன. உதாரணத்திற்கு எலியா என்பவரை எடுத்துக்கொள்வோம். அவர் இஸ்ரவேலில் முக்கிய தீர்க்கதரிசியாக இருந்தபோது, ஒரு சூப்பர்மேன் போல தைரியமாக இருந்தார். ஆனால் அவர் பயந்து நடுநடுங்கிய காலங்களும் இருந்தன. டென்ஷனால் சோர்ந்துபோன காலங்களும் இருந்தன. “எலியா நம்மைப்போன்ற உணர்ச்சியுள்ள மனுஷனே” என்று கூறுவதன் மூலம் பைபிள் நமக்கு நம்பிக்கை அளிக்கிறது.—யாக்கோபு 5:17, NW; 1 இராஜாக்கள் 19:1-4.

கிறிஸ்தவ அப்போஸ்தலனாகிய பவுல் “பலவீனத்தோடும் பயத்தோடும் மிகுந்த நடுக்கத்தோடும்” கொரிந்து பட்டணத்திற்கு சென்றார். தன் திறமையைப் பற்றி அவர் உண்மையில் தவறாக எடைபோட்டிருந்தார். எல்லாரும் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதும் உண்மையே. அவரை எதிர்த்த ஒருசிலர் இப்படிக்கூட சொன்னார்கள்: “அவர் நேரில் வந்தால் பார்க்கச் சகிக்காது; பேச்சும் எடுபடாது.” ஆனால், மற்றவர்கள் தவறான கருத்து வைத்திருந்ததால் பவுல் தன்னைப் பற்றி வைத்திருந்த கருத்தை மாற்றிக்கொண்டார் என்பதற்கோ, அதனால் அவரது திறமைகள் பாதிக்கப்பட்டன என்பதற்கோ எந்தவொரு குறிப்பும் இல்லை.—1 கொரிந்தியர் 2:3-5; 2 கொரிந்தியர் 10:10, பொ.மொ.

மோசே தான் “திக்குவாயும் மந்தநாவும் உள்ளவன்” என்று சொல்லி, எகிப்து அரசனை போய் சந்திக்கும் அளவுக்கு தன்னிடம் திறமையில்லை என்று நினைத்தார். (யாத்திராகமம் 4:10) யெகோவா தேவன் உதவி செய்வதாக கூறியப்பிறகும், மோசே இவ்வாறு கெஞ்சினார்: “வேண்டாம் ஆண்டவரே! தகுதியுடைய வேறொருவனை நீர் . . . அனுப்பிவைப்பீராக!” (யாத்திராகமம் [விடுதலைப் பயணம்] 4:13, பொ.மொ.) மோசேக்கு தன்னிடமிருந்த திறமைகளைப் பற்றி தெரியவில்லை. ஆனால் யெகோவா தேவன் அவற்றை அறிந்திருந்தார். பொறுப்பை நிறைவேற்றும் அளவுக்கு மோசே மன ரீதியிலும், உடல் ரீதியிலும் தகுதியோடு இருப்பதை கடவுள் அறிந்திருந்தார். அப்படி இருந்தும் யெகோவா மோசேமீது அன்புகூர்ந்து, அவருக்கு ஓர் உதவியாளரை கொடுத்து உதவினார். மோசே தனியாக போய் பார்வோனை சந்திக்கும்படி கடவுள் கட்டாயப்படுத்தவில்லை.—யாத்திராகமம் 4:14, 15.

இவ்வாறு பயந்து நடுங்கியவர்களுள் எரேமியாவும் ஒருவர். கடவுளுடைய தீர்க்கதரிசியாக சேவிக்கும்படி இளம் எரேமியாவிடத்தில் கேட்டபோது இவ்வாறு பதிலளித்தார்: “ஐயோ, யெகோவாவாகிய ஆண்டவரே, நான் பேச அறியேன். நான் சிறுவன்.” கடவுள் கொடுத்த பொறுப்பை நிறைவேற்ற தேவையான பலத்தை எரேமியா பிறவியிலேயே பெற்றுக்கொண்டு வரவில்லை. ஆனால், யெகோவா அவரோடு இருந்தார். “அரண்சூழ் நகரமாகவும் இரும்புத் தூணாகவும் வெண்கலச் சுவராகவும்” ஆகும்படி யெகோவா எரேமியாவுக்கு உதவிசெய்தார்.—எரேமியா 1:6, தி.மொ.; 18, 19, பொ.மொ.

ஆகவே, பயமும் டென்ஷனும் வாட்டியெடுக்குமென்றால், உங்களுக்கு விசுவாசம் குறைந்து விட்டது, யெகோவா உங்களை கைவிட்டுவிட்டார் என்று உடனடித் தீர்மானத்திற்கு வரவேண்டாம். யெகோவா ‘உடைந்த உள்ளத்தாருக்கு அருகில் . . . இருக்கிறார்; நைந்த நெஞ்சத்தாரை அவர் காப்பாற்றுகிறார்.’—சங்கீதம் (திருப்பாடல்கள்) 34:18, பொ.மொ.

தைரியத்திற்கு பேர்போன, விசுவாசத்தில் உறுதியாக இருந்தவர்களும் தங்களுக்கு போதுமான திறமையில்லை என்று நினைத்தார்கள் என்ற உண்மை இப்போது பார்த்த பைபிள் உதாரணங்களிலிருந்து தெரிகிறது. எலியா, பவுல், மோசே, எரேமியா ஆகியோரிடத்தில் அவர்களுடைய தகுதியை மிஞ்சி செய்யவேண்டும் என்று கடவுள் எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் அவர்களுக்கு கடவுள் உதவினார். அதன் விளைவாக அவர்கள் எதிர்பார்த்ததைவிட மேலும் அதிக பொறுப்புகளை நிறைவேற்றினார்கள். யெகோவா “நம்முடைய உருவம் இன்னதென்று . . . அறிவார்; நாம் மண்ணென்று நினைவுகூருகிறார்.” எனவே உங்களைப் பற்றியும் அவ்வாறே நினைக்கிறார், உங்களுக்கும் அவர் உதவுவார் என்பதில் நீங்கள் நம்பிக்கையோடு இருக்கலாம்.—சங்கீதம் 103:14.

[அடிக்குறிப்புகள்]

a பயத்தை எதிர்கொள்வது மிகவும் கஷ்டம் என்றால், நீங்கள் பயப்படும் ஒரு சந்தர்ப்பத்தை கற்பனை செய்துகொண்டு, அதற்கேற்ப பயிற்சி செய்யுங்கள் என்று ஒருசில டாக்டர்கள் பரிந்துரைசெய்கிறார்கள். அவ்வாறு கற்பனை செய்யும்போது முடிந்த மட்டும் சின்ன சின்ன விவரங்களையும் மனக்கண்முன் கொண்டுவாருங்கள். உங்களுடைய டென்ஷன் கிடுகிடுவென்று உயரும். மற்றவர்கள் உங்களை அப்படியே ஒதுக்கித் தள்ளினாலும், அது நீங்கள் நினைப்பதைப்போல் அவ்வளவு மோசமாக இருக்காது என்பது எப்போதும் நினைவிருக்கட்டும். இப்படி நினைத்துக்கொண்டே உங்களது கற்பனைத் திரையை மூடவும்.

b மருத்துவ சிகிச்சை பெற நினைப்பவர்கள், அதில் உட்பட்டிருக்கும் அபாயங்களையும் நன்மைகளையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும். மருத்துவம் தேவைப்படும் அளவுக்கு பயம் என்ற நோய் தீவிரமாக இருக்கிறதா என்று யோசிக்க வேண்டும். மருந்தோடுகூட பயந்தாங்கொள்ளிகளின் பயங்களை தீர்க்கவும், நடத்தையை சரிசெய்யவும் சிகிச்சையையும் சேர்த்து தந்தால் நல்ல பலன் இருக்கும் என்று பல நிபுணர்கள் நினைக்கிறார்கள்.

[பக்கம் 8-ன் பெட்டி]

பயம் திகிலாக மாறும்போது

சமூக பயமுள்ள ஒருசிலருக்கு டென்ஷன் பயங்கரமாக அதிகரிக்கும்போது அவர்களுக்கு திகில் அட்டாக் (panic attack) ஏற்படுகிறது. திடீரென்று ஒருவருக்கு மிதமிஞ்சி திகில் கவ்வும்போது, அவருக்கு பயங்கரமாய் மூச்சு வாங்கும், மயக்க மயக்கமாய் வரும், தனக்கு ஹார்ட் அட்டாக் வந்துவிட்டதாகவே நினைப்பார்.

திகில் அட்டாக் வந்ததும் அதை எதிர்க்காமல் இருப்பதே சிறந்தது என்கிறார்கள் நிபுணர்கள். அதற்கு பதிலாக, திகில் நீங்கும்வரை பொறுமையோடு இருக்கும்படி, திகில் அட்டாக்கால் அவதிப்படும் நபருக்கு அவர்கள் ஆலோசனை தருகிறார்கள். ஜெர்லின் ராஸ் இவ்வாறு கூறுகிறார்: “அது வந்துவிட்டால் உங்களால் தடுக்க முடியாது. அது தானாகவே நீங்க வேண்டும். உங்கள் மனதுக்குள் இவ்வாறு சொல்லிக்கொண்டே இருங்கள்: பயமாகத்தான் இருக்கிறது, ஆனால் இதனால் ஆபத்து ஏதும் இல்லை. இது இன்னும் கொஞ்ச நேரத்தில் போய்விடும்.”

அக்கோரா போபியாவுக்கு சிகிச்சை அளிக்கும் ஏஜன்ஸியின் இயக்குநர் மெல்வின் கிரீன். அவர் திகில் அட்டாக்கை, கரையை நோக்கி வந்துகொண்டிருக்கும் சின்ன அலைக்கு ஒப்பிடுகிறார். இந்தச் சின்ன அலைதான் “முதன்முதலில் திகில் வரும்போது உங்களில் ஏற்படும் உணர்வு. அந்த அலை கரையை நோக்கி வர வர பெரிதாகிக்கொண்டே போகும். இது உங்களுடைய திகில் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிப்பதற்கு ஒப்பாகும். விரைவில் அலை ரொம்ப பெரிதாகி, உயரே எழுந்துவிடும். பிறகு சின்ன சின்னதாகப் பிரிந்து கடற்கரையில் வந்து மோதி, அடங்கும். இந்த அலையின் உதாரணம், திகில் அட்டாக் வந்தது முதல் அது போகும் வரை ஒருவருக்கு ஏற்படும் நிலையை விவரிக்கிறது” என்கிறார் கிரீன். நோயாளி தனக்குள் ஏற்படும் உணர்வை எதிர்க்கக்கூடாது. ஆனால் அதுவாக போகும்வரை அனுமதிக்க வேண்டும் என்கிறார்.

[பக்கம் 9-ன் பெட்டி]

மூச்சு விடுவதை கவனிக்கவும்!

சமூக பயமுள்ள ஒருசிலர் தாங்கள் எப்படி மூச்சு விடுகிறார்கள் என்பதை கவனித்து, பயத்தால் உடலில் ஏற்படும் மாற்றங்களை குறைத்துள்ளனர். மூச்சு விடுவதை கவனிக்க வேண்டும் என்றால் கேட்பதற்கு வினோதமாக இருக்கும். மூச்சு விடக்கூட தெரியாமல் யாராவது இருப்பார்களா என்ன! ஆனால் டென்ஷன் பிரச்சினை உள்ள பலருக்கு சரிவர மூச்சுவிட தெரிவதில்லை என்று நிபுணர்கள் சொல்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் நெஞ்சுக்கு மேலிருந்து இலேசாக மூச்சு விடுகிறார்கள் அல்லது வேகமாக மூச்சு விடுகிறார்கள் அல்லது ஒரேயடியாக அடி நெஞ்சிலிருந்து இழுத்து மூச்சு விடுகிறார்கள்.

மெல்ல மூச்சை உள்ளே இழுக்கவும், வெளியே விடவும் பழக வேண்டும். இதை எளிதாக செய்வதற்கு, வாய் வழியே மூச்சு விடுவதற்கு பதிலாக மூக்கு வழியாக மூச்சு விடவேண்டும். மேலும், டயாப்ரமிலிருந்து (diaphragm) அதாவது மார்பையும் வயிற்றையும் பிரிக்கும் தசைப் பகுதியிலிருந்து மூச்சு விட கற்றுக்கொள்ள வேண்டும். ஏனென்றால் நெஞ்சுக்கு மேலிருந்து மூச்சுவிட்டால் மூச்சு இரைக்கும் அபாயம் இருக்கிறது. நீங்கள் எப்படி மூச்சு விடுகிறீர்கள் என்பதை சோதித்துப்பார்க்க வேண்டுமென்றால், நேராக நில்லுங்கள். ஒரு கையை இடுப்புக்கு மேலே வைத்துக்கொள்ளுங்கள். இன்னொரு கையை நெஞ்சுக்கு நடுவில் வையுங்கள். மூச்சு விடும்போது எந்தக் கை அடிக்கடி அசைகிறது என்பதை கவனியுங்கள். நெஞ்சில் வைத்த கை அடிக்கடி அசைந்தால் நீங்கள் டயாப்ரமிலிருந்து மூச்சு விட பழக வேண்டும்.

உண்மைதான், நீங்கள் விடும் ஒவ்வொரு மூச்சும் டயாப்ரமிலிருந்து வரவேண்டியதில்லை. (டாயப்ரமிலிருந்து மார்பு வரை மூச்சு விடுவதன் இயல்பான விகிதம் 4:1. ஆனால் இது சில நேரங்களில் மாறுபடும்.) இதைக் கவனத்தில் கொள்க: எம்பைஸீமா அல்லது ஆஸ்துமா போன்ற தீவிர மூச்சு கோளாறு உள்ளவர்கள், மூச்சு விடும் புதிய முறைகளை பின்பற்றுவதற்கு முன் முதலில் மருத்துவரை அணுகவேண்டும்.

[பக்கம் 8-ன் படம்]

டென்ஷனைக் குறைக்க உணவில் கவனம் தேவை, ஒழுங்கான உடற்பயிற்சி தேவை, போதுமான ஓய்வும் தேவை

[பக்கம் 10-ன் படம்]

மோசே போன்ற நபர்களுக்கு யெகோவா உதவினார்; அதனால் அவர்கள் தங்கள் சேவையில் எதிர்பார்த்ததைவிட அதிகம் செய்தார்கள்

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்