உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஜெபம்​—கடவுளிடம் நெருங்க வழி
    இன்றும் என்றும் சந்தோஷம்!—கடவுள் சொல்லும் வழி
    • 3. கடவுள் நம் ஜெபத்துக்கு எப்படிப் பதில் கொடுக்கிறார்?

      நிறைய வழிகளில் அவர் பதில் கொடுக்கிறார். உதாரணத்துக்கு, நம் மனதில் இருக்கிற கேள்விகளுக்கு பைபிளில் பதில் கண்டுபிடிக்க உதவுகிறார். பைபிள், “அனுபவம் இல்லாதவனை ஞானியாக்குகிறது.” (சங்கீதம் 19:7, அடிக்குறிப்பு; யாக்கோபு 1:5-ஐ வாசியுங்கள்.) பிரச்சினைகளில் நாம் சிக்கித் தவிக்கும்போது அவர் நமக்கு மனநிம்மதி தருகிறார். தன் ஊழியர்கள் மூலமாகக்கூட உதவுகிறார்.

  • நல்ல முடிவுகள் எடுப்பது எப்படி?
    இன்றும் என்றும் சந்தோஷம்!—கடவுள் சொல்லும் வழி
    • நாம் எல்லாருமே தீர்மானங்களை எடுக்க வேண்டியிருக்கிறது. நிறைய தீர்மானங்கள் நம் வாழ்க்கையையே மாற்றிவிடலாம், யெகோவாவோடு இருக்கும் நம் பந்தத்தையும் பாதிக்கலாம். உதாரணத்துக்கு, எங்கே வாழ்வது, என்ன வேலை செய்வது, கல்யாணம் செய்வதா வேண்டாமா என்றெல்லாம் நாம் முடிவு செய்ய வேண்டியிருக்கலாம். சரியான முடிவுகளை எடுத்தால் நம் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும், யெகோவாவும் சந்தோஷப்படுவார்.

      1. சரியான முடிவுகளை எடுக்க பைபிள் எப்படி உதவும்?

      உதவிக்காக முதலில் யெகோவாவிடம் ஜெபம் செய்யுங்கள். பிறகு, அந்த விஷயத்தைப் பற்றி அவர் என்ன நினைக்கிறார் என்று பைபிளில் தேடிப் பாருங்கள். (நீதிமொழிகள் 2:3-6-ஐ வாசியுங்கள்.) அது சம்பந்தமாக அவர் நேரடியான கட்டளை தந்திருந்தால், அதற்குக் கீழ்ப்படிவதுதான் சரியான முடிவாக இருக்கும்.

      நேரடியான கட்டளை இல்லையென்றால்? கவலைப்படாதீர்கள்! அப்போதும், “நீங்கள் நடக்க வேண்டிய வழியில்” யெகோவா உங்களை நடத்துவார். (ஏசாயா 48:17) எப்படி? பைபிள் நியமங்கள் மூலமாக! அவருடைய எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் புரிந்துகொள்ள உதவுகிற அடிப்படையான உண்மைகள்தான் அந்த நியமங்கள். பைபிளில் ஒரு பதிவைப் படிக்கும்போது ஒரு விஷயத்தைப் பற்றி கடவுள் என்ன நினைக்கிறார் என்று பெரும்பாலும் தெரிந்துகொள்ள முடியும். அப்போது, அவரை சந்தோஷப்படுத்துகிற முடிவுகளை எடுக்க முடியும்.

      2. ஒரு முடிவெடுப்பதற்கு முன்பு எதையெல்லாம் யோசிக்க வேண்டும்?

      “சாமர்த்தியமாக நடக்கிறவன் ஒவ்வொரு அடியையும் யோசித்துதான் எடுத்து வைக்கிறான்” என்று பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 14:15) ஒரு முடிவை எடுப்பதற்கு முன்பு நேரமெடுத்து யோசிக்க வேண்டும். உதாரணத்துக்கு, ‘இது சம்பந்தமா பைபிள்ல என்னென்ன நியமங்கள் இருக்கு? எந்த முடிவை எடுத்தால் எனக்கு மன நிம்மதி கிடைக்கும்? நான் எடுக்கிற முடிவு மத்தவங்கள எப்படி பாதிக்கும்? முக்கியமா, அது யெகோவாவோட மனச சந்தோஷப்படுத்துமா?’ என்றெல்லாம் யோசிக்க வேண்டும்.—உபாகமம் 32:29.

      நமக்கு எது நல்லது எது கெட்டது என்று சொல்லும் உரிமை யெகோவாவுக்கு இருக்கிறது. அதனால், அவருடைய சட்டங்களையும் நியமங்களையும் பற்றி நாம் தெரிந்துகொள்ள வேண்டும். அவற்றைக் கடைப்பிடிப்பதில் உறுதியாக இருக்க வேண்டும். அப்போது, நம் மனசாட்சிக்கு நல்ல பயிற்சி கிடைக்கும். மனசாட்சி என்பது எது சரி, எது தவறு என்பதை சுட்டிக்காட்டும் உணர்வு. (ரோமர் 2:14, 15) பயிற்சி கொடுக்கப்பட்ட மனசாட்சி சரியான முடிவுகளை எடுக்க உதவும்.

      ஆராய்ந்து பார்க்கலாம்!

      சரியான முடிவுகளை எடுப்பதற்கு பைபிள் நியமங்களும் நம் மனசாட்சியும் எப்படி உதவி செய்யும் என்று பார்க்கலாம்.

      3. பைபிள் நியமங்களின்படி முடிவெடுங்கள்

      நல்ல முடிவுகளை எடுக்க பைபிள் நியமங்கள் எப்படி உதவும்? வீடியோவைப் பார்த்துவிட்டு, கீழே இருக்கும் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்.

      வீடியோ: பைபிள் நியமங்கள் உங்களை வழிநடத்தட்டும் (5:54)

      • யெகோவா நமக்கு என்ன சுதந்திரத்தைக் கொடுத்திருக்கிறார்?

      • ஏன் அந்த சுதந்திரத்தைக் கொடுத்திருக்கிறார்?

      • அந்த சுதந்திரத்தைச் சரியாகப் பயன்படுத்த எதைக் கொடுத்து உதவியிருக்கிறார்?

      உதாரணமாக, ஒரு பைபிள் நியமத்தை எபேசியர் 5:15, 16-ல் படித்துப் பாருங்கள். பிறகு, இதையெல்லாம் செய்வதற்கு எப்படி ‘நேரத்தை மிக நன்றாகப் பயன்படுத்தலாம்’ என்று கலந்துபேசுங்கள்:

      • தவறாமல் பைபிள் படிப்பதற்கு.

      • நல்ல கணவனாக, மனைவியாக, பெற்றோராக, மகனாக, அல்லது மகளாக ஆவதற்கு.

      • சபைக் கூட்டங்களில் கலந்துகொள்வதற்கு.

      4. மனசாட்சிக்குப் பயிற்சி கொடுங்கள்

      ஒரு விஷயத்தைப் பற்றி பைபிளில் நேரடியான கட்டளை இருக்கும்போது சரியான முடிவெடுப்பது சுலபம். ஆனால், அப்படி இல்லாதபோது? வீடியோவைப் பார்த்துவிட்டு, கீழே இருக்கும் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்.

      வீடியோ: “நல்ல மனசாட்சியோடு இருங்கள்” (5:13)

      • வீடியோவில் வந்த சகோதரி, மனசாட்சிக்குப் பயிற்சி கொடுக்கவும் யெகோவாவுக்குப் பிடித்த முடிவை எடுக்கவும் என்னென்ன செய்தார்?

      நமக்காக மற்றவர்களை முடிவெடுக்கச் சொல்வது ஏன் சரியாக இருக்காது? எபிரெயர் 5:14-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

      • மற்றவர்களிடம் கேட்பது சுலபமாக இருந்தாலும், எதைப் பிரித்துப் பார்க்க நாம் கற்றுக்கொள்ள வேண்டும்?

      • மனசாட்சிக்குப் பயிற்சி கொடுப்பதற்கும் சரியான முடிவுகளை எடுப்பதற்கும் நமக்கு உதவி செய்ய என்னென்ன கருவிகள் இருக்கின்றன?

      ஒருவர் காரை ஓட்டிக்கொண்டு போகிறார். அவருடைய மொபைலில் இருக்கும் ஜிபிஎஸ் அவருக்குச் சரியான பாதையைக் காட்டுகிறது.

      நம் மனசாட்சி ஒரு வரைபடம் போன்றது, நாம் போக வேண்டிய பாதையை அது நமக்குக் காட்டும்

      5. மற்றவர்களுடைய மனசாட்சிக்கு மதிப்புக் கொடுங்கள்

      நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக முடிவெடுப்போம். நாம் எப்படி மற்றவர்களுடைய மனசாட்சிக்கு மதிப்புக் கொடுக்கலாம்? இரண்டு சூழ்நிலைகளை இப்போது கவனிக்கலாம்:

      சூழ்நிலை 1: ஒரு சகோதரிக்கு மேக்கப் போட்டுக்கொள்ள பிடிக்கும். ஆனால் அவர் மாறிப் போகும் சபையில் இருக்கும் சகோதரிகளுக்கு அது உறுத்தலாக இருக்கிறது.

      ரோமர் 15:1-ஐயும் 1 கொரிந்தியர் 10:23, 24-ஐயும் படித்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

      • இந்த வசனங்களின் அடிப்படையில் அந்தச் சகோதரி என்ன முடிவெடுக்கலாம்? உங்கள் மனசாட்சிக்கு சரியாக படுகிற விஷயம் இன்னொருவருடைய மனசாட்சியை உறுத்தினால் நீங்கள் என்ன செய்வீர்கள்?

      சூழ்நிலை 2: அளவோடு குடிப்பதை பைபிள் தடை செய்வதில்லை என்று ஒரு சகோதரருக்குத் தெரியும். ஆனாலும், குடிக்கவே கூடாதென்று அவர் முடிவு செய்திருக்கிறார். ஒரு பார்ட்டியில் மற்ற சகோதரர்கள் மதுபானம் குடிப்பதை அவர் பார்க்கிறார்.

      பிரசங்கி 7:16-ஐயும் ரோமர் 14:1, 10-ஐயும் படித்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:

      • இந்த வசனங்களின் அடிப்படையில் அந்தச் சகோதரர் என்ன முடிவெடுக்கலாம்? உங்கள் மனசாட்சிக்கு உறுத்தலாக இருக்கும் ஒரு விஷயத்தை இன்னொருவர் செய்யும்போது நீங்கள் என்ன பண்ணுவீர்கள்?

      நல்ல முடிவெடுக்க படிகள்

      ஒரு பெண் ஜெபம் செய்கிறார்.

      1. சரியான முடிவெடுக்க யெகோவாவிடம் உதவி கேளுங்கள்.—யாக்கோபு 1:5.

      அதே பெண் பைபிளையும் பைபிள் பிரசுரங்களையும் கம்ப்யூட்டரையும் பயன்படுத்தி ஆராய்ச்சி செய்கிறார்.

      2. பொருத்தமான நியமங்களைக் கண்டுபிடிக்க பைபிளிலும் பைபிள் பிரசுரங்களிலும் ஆராய்ச்சி செய்யுங்கள். அனுபவமுள்ள கிறிஸ்தவர்களிடமும் பேசிப் பாருங்கள்.

      அதே பெண் யோசிக்கிறார்.

      3. உங்கள் முடிவு உங்கள் மனசாட்சியையும் மற்றவர்களுடைய மனசாட்சியையும் எப்படிப் பாதிக்கும் என்று யோசியுங்கள்.

      சிலர் இப்படிச் சொல்கிறார்கள்: “நம் இஷ்டப்படி முடிவு எடுக்குறதுக்கு நமக்கு உரிமை இருக்கு. மத்தவங்க என்ன நினைச்சா நமக்கென்ன!”

      • நாம் எடுக்கும் முடிவைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பார்கள், கடவுள் என்ன நினைப்பார் என்றெல்லாம் நாம் ஏன் யோசித்துப் பார்க்க வேண்டும்?

      சுருக்கம்

      நல்ல முடிவை எடுப்பதற்கு அந்த விஷயத்தைப் பற்றி யெகோவா என்ன நினைக்கிறார் என்று யோசித்துப் பார்க்க வேண்டும். நம்முடைய முடிவு மற்றவர்களை எப்படிப் பாதிக்கும் என்றும் யோசித்துப் பார்க்க வேண்டும்.

      ஞாபகம் வருகிறதா?

      • யெகோவாவுக்குப் பிடித்த மாதிரி நீங்கள் எப்படி முடிவெடுக்கலாம்?

      • உங்கள் மனசாட்சிக்கு எப்படிப் பயிற்சி கொடுக்கலாம்?

      • மற்றவர்களுடைய மனசாட்சிக்கு நீங்கள் எப்படி மதிப்புக் கொடுக்கலாம்?

      குறிக்கோள்

      அலசிப் பாருங்கள்

      கடவுளோடு உங்களுக்கு இருக்கும் நட்பைப் பலப்படுத்தும் விதத்தில் நீங்கள் எப்படி முடிவுகள் எடுக்கலாம்?

      “நம் தீர்மானங்கள் கடவுளுக்குப் புகழ் சேர்க்க...” (காவற்கோபுரம், ஏப்ரல் 15, 2011)

      யெகோவா நமக்கு எப்படி ஆலோசனை கொடுக்கிறார் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

      யெகோவா தன் மக்களை வழிநடத்துகிறார் (9:50)

      ஒரு கஷ்டமான முடிவை எடுக்க ஒருவருக்கு எதுவெல்லாம் உதவி செய்தன என்று பாருங்கள்.

      யெகோவாவை நம்புறவங்க சந்தோஷமாதான் இருப்பாங்க (5:51)

      யெகோவா நேரடியான சட்டங்களைக் கொடுக்காத சூழ்நிலையில்கூட அவருக்குப் பிடித்த முடிவுகளை நாம் எப்படி எடுக்கலாம் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

      “எதற்கெடுத்தாலும் உங்களுக்கு பைபிள் சட்டம் தேவையா?” (காவற்கோபுரம், டிசம்பர் 1, 2003)

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்