நீங்கள் ஒத்துணர்வோடு செவிகொடுக்கும் ஒரு நபரா?
உங்கள் வாழ்நாட்காலத்தில் ஒவ்வொருவருக்கும் ஒரு விலையுயர்ந்த வெகுமதியை கொடுப்பதற்கு உங்களிடம் பணம் இருந்தால் எப்படியிருக்கும் என்பதைக் கற்பனை செய்துபாருங்கள். அவர்கள் எவ்வளவு மகிழ்ச்சியும் போற்றுதலும் உள்ளவர்களாக இருப்பார்கள்! உண்மையில், மற்றவர்களுக்கு நிஜமாகவே தேவையாயிருக்கும் ஏதோவொன்றை, ஒரு விசேஷ பரிசை நீங்கள் கொடுக்க முடியும். அது உங்களுக்குப் பணச் செலவை உட்படுத்தாது. அது என்ன? உங்களுடைய கவனம். கவனத்தை பெரும்பாலானோர் விரும்புகின்றனர், அதை பெற்றுக்கொள்ளும்போது போற்றுதலோடு பிரதிபலிக்கின்றனர். என்றபோதிலும், நல்ல தரமுள்ள கவனத்தைக் கொடுப்பதற்கு நீங்கள் ஒத்துணர்வோடு செவிகொடுக்கும் ஒரு நபராக இருக்க வேண்டும்.
நீங்கள் ஒரு பெற்றோராகவோ அல்லது எஜமானராகவோ அல்லது புத்திமதிக்காகவும் வழிநடத்துதலுக்காகவும் ஆட்கள் உங்களிடம் வரும் எந்த ஸ்தானத்தில் சேவித்தாலும், நீங்கள் ஒத்துணர்வோடு செவிகொடுப்பது அவசியம். அப்படிச் செய்யவில்லையென்றால், ஆட்கள் உங்களிடம் ஒத்துணர்வுத்தன்மை குறைவுபடுவதைக் கண்டுபிடித்து விடுவார்கள், உங்களுடைய நற்பெயர் கெட்டுவிடும்.
புத்திமதி கொடுக்கும்படி உங்களை அடிக்கடி கேட்காவிட்டாலும்கூட, நீங்கள் ஆட்களுக்கு ஒத்துணர்வோடு செவிகொடுப்பவர்களாய் இருக்க வேண்டும், உதாரணமாக, ஒரு நண்பர் உங்களிடம் ஆறுதலுக்காக வரும்போது. ஒரு பைபிள் நீதிமொழி சொல்கிறபடி, பேசுவதற்கு முன் செவிகொடுக்கத் தவறுவது மதிப்பிழக்கும்படிச் செய்யும். (நீதிமொழிகள் 18:13) அப்படியென்றால், ஒத்துணர்வோடு செவிகொடுக்கும் நபராக நீங்கள் உங்களைக் காண்பிப்பதற்கு சில வழிகள் யாவை?
முழுமையாக கவனம் செலுத்துங்கள்
ஒத்துணர்வோடு செவிகொடுக்கும் ஒரு நபர் என்றால் என்ன? வெப்ஸ்டர்ஸ் நியூ காலேஜியேட் டிக்ஷனரி “ஒத்துணர்வு” என்ற சொல்லை இவ்வாறு விளக்குகிறது: “வேறொருவரின் உணர்ச்சிகளில் அல்லது எண்ணங்களில் பங்குகொள்வதற்கான திறமை.” அதே அகராதி “செவிகொடுத்தல்” என்ற சொல்லை இவ்வாறு விளக்குகிறது: “பிறர் நிலையை எண்ணிப்பார்க்கும் தன்மையோடு கேட்பது.” ஆகையால் ஒத்துணர்வோடு செவிகொடுக்கும் ஒரு நபர் வேறொருவர் சொல்வதை வெறுமனே கேட்பதைக் காட்டிலும் அதிகத்தைச் செய்கிறார். அவர் கவனித்துக் கேட்டு அந்த நபரின் எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் பகிர்ந்துகொள்கிறார்.
உங்கள் மனதை வேறு எங்கும் அலையவிடாமல், நீங்கள் கேட்பவற்றின் பேரில் முழுவதுமாக மூழ்கியிருப்பதை இது உட்படுத்துகிறது. நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள் என்பதைப் பற்றி யோசிப்பதும்கூட செவிகொடுத்துக் கேட்பதிலிருந்து உங்களைத் தடை செய்கிறது. மற்றவர் என்ன சொல்லிக்கொண்டிருக்கிறார் என்பதன் பேரில் உங்கள் கவனத்தை ஒருமுகப்படுத்துவதற்கு உங்களையே சிட்சித்துக் கொள்ளுங்கள்.
உங்களிடம் பேசிக்கொண்டிருப்பவரை நேரடியாகப் பாருங்கள். உங்கள் கண்கள் வேறு இடங்களைப் பார்த்துக் கொண்டிருந்தால், அக்கறையற்றவரைப் போல் நீங்கள் தோற்றமளிப்பீர்கள். அவருடைய சைகைகளையும், அவர் நடந்துகொள்ளும் விதத்தையும் நன்றாக கவனியுங்கள். அவர் புன்முறுவலோடு இருக்கிறாரா அல்லது கடுகடுப்பாக இருக்கிறாரா? அவருடைய கண்கள் நகைச்சுவை, கவலை அல்லது அச்சத்தை பிரதிபலிக்கின்றனவா? உங்களுடைய பதிலைக் குறித்து கவலைப்படாதீர்கள்; உங்கள் மனதை ஒருமுகப்படுத்தி செவிகொடுத்ததன் விளைவாக அது இயற்கையாகவே வரும்.
நீங்கள் செவிகொடுத்துக் கேட்கும்போது, உங்கள் தலைகளை அசைத்து, ‘அப்படியா?,’ ‘எனக்கு புரிகிறது’ போன்ற உடன்பாட்டைத் தெரிவிக்கும் சொற்றொடர்களை நீங்கள் உபயோகிப்பீர்கள். இது நீங்கள் அவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டே இருக்கிறீர்கள் என்பதைக் காண்பிக்கலாம். என்றாலும், நீங்கள் உண்மையிலேயே செவிகொடுத்துக் கொண்டிராமல் வெறுமனே தலையை அசைத்து உடன்பாட்டைத் தெரிவித்துக்கொண்டிருந்தால், நீங்கள் செவிகொடுத்துக் கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள் என்று ஆட்கள் நினைக்கும்படி செய்துவிடாது. உண்மையில், தொடர்ந்து விரைவாக நீங்கள் தலை அசைத்துக் கொண்டிருந்தால் நீங்கள் பொறுமையற்றவர்களாய் இருக்கிறீர்கள் என்பதை வெளிக்காட்டி விடக்கூடும். அது, ‘விரைவாக சொல்லுங்கள். நீங்கள் சொல்ல விரும்புவதை சீக்கிரமாக சொல்லி முடித்து விடுங்கள்,’ என்று நீங்கள் சொல்வது போல் இருக்கும்.
எப்படியிருப்பினும், செவிகொடுத்துக் கேட்பதைப் பற்றிய முறையைக் குறித்து நீங்கள் அளவுக்குமீறி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. செவிகொடுத்துக் கேட்பதை வெறுமனே மெய்யானதாக ஆக்குங்கள், அப்போது உங்களுடைய பிரதிபலிப்புகள் உங்கள் உண்மை மனதைப் பிரதிபலிக்கும்.
நீங்கள் மிகுந்த கவனத்தோடு முழுமையாய் தொடர்ந்து கேட்டுக்கொண்டு வருகிறீர்கள் என்பதை நல்ல கேள்விகள் கேட்பதும் காண்பிக்கும். அவை நீங்கள் அக்கறையுள்ளவர்களாய் இருக்கிறீர்கள் என்பதைக் காண்பிக்கும். சொல்லப்படாத அல்லது தெளிவற்ற குறிப்புகளுக்கு விளக்கத்தைக் கேளுங்கள். கேள்விகள் எழுப்புங்கள், அப்போது விரிவான விவரங்கள் கூடுதலாக கொடுக்கும்படி அது பேசுபவருக்குச் சந்தர்ப்பம் அளிக்கும். அவ்வப்போது நீங்கள் குறுக்கிட்டுக் கேட்பது அவசியமாயிருக்கலாம், அதைக் குறித்து கவலைப்படாதீர்கள், ஆனால் அதை அதிகமாகச் செய்யாதீர்கள். விஷயங்களைத் தெளிவாகப் புரிந்துகொள்வது, செவிகொடுத்துக் கேட்கும் முறையின் ஒரு பாகமாக உள்ளது. இடையே குறுக்கிடுவது அளவுக்கு மீறி செய்யப்படாவிட்டால், உங்களோடு பேசிக்கொண்டிருப்பவர் சொல்லும் அனைத்தையும் நீங்கள் முழுமையாகப் புரிந்துகொள்ள விரும்புகிறீர்கள் என்ற உங்களுடைய ஆர்வத்தைப் போற்றுவார்.
புரிந்துகொள்ளுதலைக் காண்பியுங்கள்
இது மிகவும் கடினமான பாகமாக இருக்கக்கூடும், உங்களிடம் பேசிக்கொண்டிருக்கும் நபருக்காக நீங்கள் உண்மையில் வருந்தினாலும்கூட. அதிக துயரத்தில் இருக்கும் ஒருவர் உங்களிடம் வந்தால், நீங்கள் உடனடியாக உடன்பாடான ஆலோசனைகளையும் தீர்வுகளையும் அளிப்பீர்களா? வேறொருவடைய துன்பத்தோடு ஒப்பிடுகையில், அவருடைய நிலைமை அவ்வளவு மோசமானதல்ல என்று நீங்கள் உடனடியாக அந்த நபரிடம் சொல்கிறீர்களா? இது உதவியளிப்பது போல் தோன்றலாம், ஆனால் இது எதிர்மறையான பாதிப்பை கொண்டிருக்கக்கூடும்.
நீங்கள் செவிகொடுத்துக் கேட்பதை நிறுத்திவிட்டு, பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஆரம்பிக்கும் மனச்சாய்வை ஏன் கொண்டிருக்கிறீர்கள் என்பதற்கு அநேக காரணங்கள் உள்ளன. துயரத்தில் இருப்பவரை நன்றாக உணரச்செய்வதற்கு உங்களுடைய உற்சாகமான ஆலோசனைகள் தேவை என்று நீங்கள் யோசிக்கலாம். “தவறாக” இருப்பதை “சரி செய்வது” உங்களுடைய கடமை என்று நீங்கள் உணரலாம். அவ்வாறு செய்யவில்லையென்றால், நீங்கள் உதவியளிப்பவர்களாய் இல்லை அல்லது உங்கள் கடமையைச் செய்யவில்லை என்று நீங்கள் உணரலாம்.
ஆரம்பத்திலேயே ஏராளமானத் தீர்வுகளை அளிப்பது, ‘உங்களுடைய பிரச்சினை நீங்கள் சொல்வதைக் காட்டிலும் அதிக எளிமையானது என நான் உணருகிறேன்’ அல்லது, ‘உங்களுடைய நலனைக் காட்டிலும் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் எனக்கிருக்கும் என் சொந்த நற்பெயரில் நான் அதிக அக்கறையுள்ளவனாய் இருக்கிறேன்’ அல்லது, ஒருவேளை, ‘எனக்கு புரியவில்லை—புரிந்துகொள்ள எனக்கு விருப்பமில்லை,’ என்ற உற்சாகத்தை இழக்கச்செய்யும் கருத்துக்களைப் பொதுவாக தெரிவிக்கிறது. துயரத்தில் இருப்பவரின் பிரச்சினையை மற்றவர்களுடைய பிரச்சினைகளோடு ஒப்பிட்டுப் பேசுவது, ‘உங்களைக் காட்டிலும் மற்றவர்கள் அதிகமாக துன்பப்படும்போது இப்படி வேதனைப்படுவதற்கு நீங்கள் உங்களைக் குறித்தே வெட்கப்பட வேண்டும்,’ என்பதைத்தான் பொதுவாக வெளிப்படுத்துகிறது.
நீங்கள் அறியாமலேயே இப்படிப்பட்ட உற்சாகமிழக்கும் கருத்துக்களைத் தெரிவிப்பீர்களென்றால், உங்களுடைய சிநேகிதர் நீங்கள் உண்மையிலேயே அவருக்குச் செவிகொடுத்துக் கேட்கவில்லையென்றும், அவரை நீங்கள் புரிந்துகொள்ளவில்லையென்றும் உணருவார். அவரைக் காட்டிலும் நீங்கள் உங்களை உயர்ந்தவராக எண்ணுகிறீர்கள் என்றும்கூட அவர் முடிவுக்கு வரலாம். அடுத்த முறை அவர் ஆறுதலுக்காக வேறொருவரிடம் செல்வார்.—பிலிப்பியர் 2:3, 4.
தேவையின்றி உங்களுடைய நண்பர் மனவருத்தப்பட்டால் அப்போது என்ன? உதாரணமாக, நியாயமான காரணமின்றி அவர் ஒருவேளை குற்றவுணர்ச்சி உடையவராக இருக்கலாம். அவர் தன்னைக் குறித்து நன்றாக உணர ஆரம்பிப்பதற்காக, அதை நீங்கள் அவரிடம் சொல்ல அவசரப்பட வேண்டுமா? இல்லை, நீங்கள் முதலில் அவருக்குச் செவிகொடுக்கவில்லையென்றால், உங்கள் நம்பிக்கையூட்டுதல்கள் அதிக ஆறுதலைக் கொடுக்காது. இலகுவாக உணருவதற்குப் பதிலாக அவர் தன் பளுவை இன்னும் இறக்காமல் குற்றவுணர்ச்சியை சுமந்துகொண்டிருப்பவராக உணருவார். 19-ஆம் நூற்றாண்டு தத்துவஞானி ஹென்ரி டேவிட் என்பவர் அதை இவ்விதமாகச் சொன்னார், “உண்மையைச் சொல்வதற்கு இரண்டு பேர் தேவைப்படுகின்றனர். ஒருவர் அதைச் சொல்வதற்கும், மற்றொருவர் அதைக் கேட்பதற்கும்.”
பைபிளின் புத்திமதி எவ்வளவு பொருத்தமானதாய் இருக்கிறது: “கேட்கிறதற்குத் தீவிரமாயும், பேசுகிறதற்குப் பொறுமையாயும் இருக்கக்கடவர்கள்.” (யாக்கோபு 1:19) ஒத்துணர்வோடு செவிகொடுத்துக் கேட்பதும் மிகவும் முக்கியம்! உங்கள் பேரில் நம்பிக்கை வைத்து சொல்பவரின் உணர்ச்சிகளில் பங்குகொள்ளுங்கள். அவருடைய பிரச்சினையின் கஷ்டத்தை, அவருடைய துயரத்தின் ஆழத்தை ஒப்புக்கொள்ளுங்கள். ‘உங்களுடைய பிரச்சினை கொஞ்சநாட்களுக்குத்தான் இருக்கும்’ அல்லது, ‘விஷயங்கள் அவ்வளவு மோசமாய் இல்லை’ போன்றவற்றை சொல்வதன் மூலம் அவருடைய பிரச்சினையை குறைக்காதீர்கள். அப்படிக் குறைக்க முயற்சி செய்வது எதிரிடையான அர்த்தத்தைக் கொடுத்து அவருடைய துயரமான உணர்ச்சிகளை இன்னும் அதிகரிக்கவும்கூடும். நீங்கள் அவருடைய செய்தியை கருத்தார்ந்த விதத்தில் எடுத்துக்கொள்ளாமல் இருப்பதற்காக அவர் ஏமாற்றமடைவார். அவர் சொன்னவற்றை நீங்கள் கேட்டு, அவர் விஷயங்களைக் குறித்து இப்போது இவ்வாறுதான் உணருகிறார் என்று நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள் என்பதை உங்களுடைய பிரதிபலிப்புகள் காண்பிக்கட்டும்.
ஒத்துணர்வோடு செவிகொடுத்துக் கேட்பது என்பது உங்களிடம் விஷயங்களை நம்பிக்கையோடு பேசுபவர் சொல்வதை நீங்கள் ஒத்துக்கொள்ள வேண்டும் என்று அவசியப்படுத்துவதில்லை. ஒரு நபர் “நான் என் வேலையை வெறுக்கிறேன்!” என்று கத்தும் போது, அவர் நியாயமற்றவராக இருப்பது போல் நீங்கள் உணரலாம். ஆனால் அதை நீங்கள் ஏற்றுக்கொள்ளாமல் (‘நீங்கள் அவ்விதமாக உணரக்கூடாது’) அல்லது மறுத்தால் (‘நீங்கள் அவ்விதமாக உணரக்கூடாது’) நீங்கள் அவரை புரிந்துகொள்ளவில்லை என்ற முடிவுக்கு அவர் வருவார். உங்களுடைய புரிந்துகொள்ளுதலை உங்களுடைய குறிப்புகள் பிரதிபலிக்க வேண்டும். தன் வேலையை வெறுக்கும் நபரிடம், ‘அது உங்களுக்கு அதிக அழுத்தத்தை கொடுப்பதாய் இருக்க வேண்டும்,’ என்பதாக நீங்கள் சொல்லலாம். பின்பு தெளிவாக்குவதற்கு தேவையான விவரங்களைக் கேளுங்கள். அவர் தன் வேலையை வெறுக்க வேண்டும் என்று நீங்கள் ஒத்துக்கொள்ளாமல், அவர் இப்போது அவ்வாறு உணருகிறார் என்று வெறுமனே ஒப்புக்கொள்ள வேண்டும். அவர் சொன்னதை நீங்கள் கேட்டீர்கள், அவருடைய உணர்ச்சிகளை முழுமையாக பகிர்ந்து கொண்டீர்கள் என்ற திருப்தியை நீங்கள் அவருக்கு கொடுக்கிறீர்கள். பிரச்சினையை பகிர்ந்துகொள்வது பிரச்சினையைக் குறைக்கலாம்.
அதே போன்று, “என் மனைவிக்கு இன்று மருத்துவ பரிசோதனை செய்யப்படுகிறது” என்று சொல்பவர் “நான் வருத்தமாயிருக்கிறேன்” என்று அர்த்தப்படுத்தக்கூடும். இதை உங்களுடைய பிரதிபலிப்பு ஒப்புக்கொள்ளட்டும். அவருடைய வார்த்தைகளுக்குப் பின்னால் இருக்கும் அர்த்தத்தை நீங்கள் செவிகொடுத்துக் கேட்டீர்கள் என்பதை அது காண்பிக்கிறது, அது அதிக ஆறுதலாய் இருக்கும். அவர் கூறியதன் அர்த்தத்தை நீங்கள் கவனியாது விடுவது, அதை மறுப்பது, அல்லது அவர் கவலைப்படக்கூடாது என்று அவரிடம் சொல்வதன் மூலம் அவரை சரிசெய்ய முயற்சி செய்வது—இவையெல்லாவற்றையும்விட அது அதிக ஆறுதலாய் இருக்கும்.—ரோமர் 12:15.
நன்றாக செவிகொடுத்துக் கேட்பவர்கள் பேசவும் செய்வார்கள்!
செவிகொடுத்துக் கேட்டு வெகு சிறிதே பேசும் நபர்களைக் குறித்து உரையாடல் கலை (ஆங்கிலம்) என்ற புத்தகம் பேசுகிறது. அது அவர்களுக்கு கண்ணியமுள்ள அடக்கத்தைப் போன்ற தோற்றத்தை அளிப்பதாக எண்ணிக்கொள்கின்றனர்.” இது உரையாடலின் முழு பாரத்தையும் மற்றவர் தாங்கிக் கொள்ளும்படி கட்டாயப்படுத்துகிறது, மரியாதையற்றதாய் இருக்கிறது. மறுபட்சத்தில், நீங்கள் செவிகொடுத்துக் கேட்டுக் கொண்டிருக்கும் நபர் உங்களைப் பேச விடாமல் தொடர்ந்து பேசிக்கொண்டேயிருந்தாரானால், அதுவும் மரியாதையற்றதாகவும் சலிப்புண்டாக்குவதாகவும் இருக்கிறது. ஆகையால், நீங்கள் நன்றாய் செவிகொடுத்துக் கேட்பவராய் இருக்க வேண்டியிருந்தாலும், பிரயோஜனமான ஏதோவொன்றை சொல்ல நீங்கள் விரும்புகிறீர்கள் என்பதை அவர் அறிந்துகொள்ள வேண்டும் என்றும் நீங்கள் விரும்புவீர்கள்.
நீங்கள் என்ன சொல்வீர்கள்? உங்களுடைய நண்பர் கூறியவற்றை நீங்கள் மரியாதையுடன் செவிகொடுத்துக் கேட்ட பிறகு, இப்போது நீங்கள் புத்திமதி கொடுக்க வேண்டுமா? அதைக் கொடுப்பதற்கு உங்களுக்கு தகுதியிருந்தால் நீங்கள் ஒருவேளை கொடுக்கலாம். உங்கள் நண்பரின் பிரச்சினைக்கு உங்களிடம் தீர்வு இருந்தால், நீங்கள் அதை அவரோடு நிச்சயமாகவே பகிர்ந்துகொள்ள வேண்டும். முதலில் நீங்கள் செவிகொடுத்துக் கேட்பதற்கு நேரத்தை பயன்படுத்தியதால், உங்களுடைய வார்த்தைகளுக்கு மதிப்பு இருக்கும். உங்களுடைய நண்பருக்குத் தேவையான வழிநடத்துதலையோ அல்லது உதவியையோ கொடுப்பதற்கு உங்களிடம் தேவையான தகுதிகள் இல்லையென்றால், அதை கொடுக்கும் நிலையில் உள்ளவரோடு தொடர்பு கொள்ளும்படி முயற்சி செய்யுங்கள்.
என்றபோதிலும், சிலருடைய விஷயங்களில், புத்திமதி தேவைப்படுவதுமில்லை, கேட்கப்படுவதுமில்லை. அநேக வார்த்தைகளைக் கூட்டிச் சொல்வதன் மூலம், நீங்கள் செவிகொடுத்துக் கேட்டுக் கொண்டிருந்ததன் நல்ல பாதிப்பை பெலவீனப்படுத்திவிடாதபடி ஜாக்கிரதையாயிருங்கள். உங்களுடைய நண்பர் கட்டுப்படுத்தமுடியாத ஒரு சூழ்நிலைமையை வெறுமனே சகித்துக்கொள்ள வேண்டியதாக இருக்கலாம் அல்லது இறுதியில் அவர் தன் எதிர்மறையான உணர்ச்சிகளை மேற்கொண்டு விடுவார். அவர் தன் கஷ்டங்களைப் பகிர்ந்துகொள்வதற்காக உங்களிடம் வந்தார். நீங்கள் செவிகொடுத்துக் கேட்டீர்கள். அவருடைய உணர்ச்சிகளை நீங்கள் பகிர்ந்து கொண்டீர்கள். அதைக் குறித்து நீங்கள் கவலைப்படுவதாகவும், அவரை உங்களுடைய எண்ணங்களிலும் ஜெபங்களிலும் நினைத்துக்கொள்வதாகவும் நீங்கள் உறுதியளித்தீர்கள். மறுபடியும் அவர் உங்களிடம் தாராளமாக வரலாம், அவருடைய பிரச்சினையைப் பற்றி நீங்கள் மற்றவர்களிடம் சொல்லமாட்டீர்கள் என்பதை அவருக்குத் தெரியப்படுத்துங்கள். அவருடைய பிரச்சினையை நீங்கள் தீர்க்க முயற்சி செய்வதற்கு பதிலாக, அவருக்கு அப்படிப்பட்ட ஆறுதல்தான் அதிகமாக தேவைப்படுவதாய் இருக்கலாம்.—நீதிமொழிகள் 10:19; 17:17; 1 தெசலோனிக்கேயர் 5:14.
செவிகொடுத்துக் கேட்பதோடு புத்திமதி சேர்ந்து இருந்தாலும் சரி அல்லது இல்லாவிட்டாலும் சரி, அதில் உட்பட்டிருக்கும் இரு தரப்பினருக்கும் அது பயனளிக்கிறது. பேசிக்கொண்டிருப்பவர் தான் சொல்வது கேட்கப்பட்டது, புரிந்துகொள்ளப்பட்டது என்ற திருப்தியைக் கொண்டிருக்கிறார். அவர் சொல்ல விரும்பும் எல்லாவற்றையும் கேட்பதற்கு யாரோ ஒருவர் அக்கறையுள்ளவராய் இருக்கிறார் என்பதை அறிந்து ஆறுதலடைகிறார். செவிகொடுத்துக் கேட்டுக் கொண்டிருப்பவரும்கூட பலனடைகிறார். மற்றவர்கள் அவருடைய அக்கறையை போற்றுகிறார்கள். அவர் புத்திமதி சொல்வாராகில், அது அதிக நம்பத்தக்கதாக இருக்கும், ஏனென்றால் அவருடைய கவனத்துக்குக் கொண்டுவரப்பட்ட நிலைமையை அவர் முழுவதுமாக புரிந்துகொள்ளும் வரை அவர் பேசாமல் இருக்கிறார். ஒத்துணர்வோடு செவிகொடுத்துக் கேட்பது நேரத்தை எடுத்துக்கொள்கிறது என்பது உண்மை தான். ஆனால் அது எப்படிப்பட்ட பயனுள்ள முதலீடு! உண்மையிலேயே, உங்களுடைய யோசனையுள்ள கவனிப்பை மக்களுக்குக் கொடுப்பதன் மூலம், நீங்கள் அவர்களுக்கு ஒரு விசேஷ வெகுமதியைக் கொடுக்கிறீர்கள்.