விசுவாசத்தில் உறுதியாய் தொடர்ந்திருங்கள்!
பேதுருவின் முதல் நிருபத்திலிருந்து முக்கிய குறிப்புகள்
யெகோவாவின் சாட்சிகள் தங்கள் விசுவாசத்தின் வித்தியாசமான சோதனைகளையும் பரீட்சைகளையும் எதிர்ப்படுகிறார்கள். சில நாடுகளில், அவர்களுடைய ராஜ்ய பிரசங்க வேலை கடும் துன்புறுத்தலை எதிர்கொண்டே செய்யப்படுகிறது. இவைகளின் பின்னாலும், கடவுளோடு உள்ள அவர்களுடைய உறவை அழித்துப் போடுவதற்கான மற்ற முயற்சிகளின் பின்னாலும் பிசாசாகிய சாத்தான் இருக்கிறான். ஆனால் அவன் வெற்றி பெறமாட்டான்; ஏனென்றால், யெகோவா அவருடைய ஊழியக்காரர்களை உறுதியாக்குகிறார், ஆம் விசுவாசத்தில் பலப்படுத்துகிறார்.
“பலவிதமான சோதனைகளினாலே துக்கப்படுகிற” “சகோதரரை ஸ்திரப்படுத்தும்” சிலாக்கியத்தை அப்போஸ்தலனாகிய பேதுரு பெற்றார். (லூக்கா 22:32; 1 பேதுரு 1:6, 7) சுமார் பொ.ச. 62-64-ல் பாபிலோனிலிருந்து அவரால் எழுதப்பட்ட அவருடைய முதல் கடிதத்தில் அவர் அவ்வாறு செய்தார். அதில் பேதுரு யூத மற்றும் புறஜாதி கிறிஸ்தவர்களுக்கு அவர் அறிவுரை, ஆறுதல், உற்சாகம் அளித்தார். அதன் மூலம் அவர்கள் சாத்தானுடைய தாக்குதல்களை எதிர்த்து ஈடுகொடுத்து “விசுவாசத்தில் உறுதியாக” தொடர்ந்திருப்பதற்கு அவர்களுக்கு உதவினார். (1 பேதுரு 1:1, 2; 5:8, 9) இப்போது பிசாசிற்கு கொஞ்சகாலம் மாத்திரம் இருப்பதினால், அவனுடைய தாக்குதல்கள் அவ்வளவு கொடூரமானதாக இருப்பதினால், நிச்சயமாகவே, பேதுருவின் ஏவப்பட்ட வார்த்தைகளிலிருந்து யெகோவாவின் ஜனங்கள் பயனடைய முடியும்.
தெய்வீக நியமங்களின்மேல் அடிப்படை கொண்ட நடத்தை
நம்முடைய நம்பிக்கை பரலோகத்திற்குரியதாகவோ அல்லது பூமிக்குரியதாகவோ இருந்தாலும், சோதனைகளை சகித்து, கடவுளுடைய வழியில் செயல்பட, அது நமக்கு உதவ வேண்டும். (1:1–2:12) அபிஷேகம் பெற்றவர்களை அவர்களுடைய பரலோகத்தை சுதந்தரிக்கும் நம்பிக்கையானது, மெய்யாகவே தங்களுடைய விசுவாசத்தை புடமிடக்கூடிய சோதனைகளை மகிழ்ச்சியோடு எதிர்ப்படும்படி செய்கிறது. கிறிஸ்துவை அஸ்திபாரமாகக் கொண்ட ஓர் ஆவிக்குரிய வீடாக தேவனுக்கு ஏற்கும் ஆவிக்குரிய பலிகளை அவர்கள் அளிக்கிறார்கள். மேலும் அவருக்கு மகிமை கொண்டுவரக்கூடிய நல்ல முறையில் தங்களை நடத்திக் கொள்கிறார்கள்.
உடன் மானிடர் யாவருடனும் உள்ள நமது நடத்தைத் தொடர்புகளிலெல்லாம் கடவுளின் நியமங்களாலேயே நாம் ஆளப்பட வேண்டும். (2:13–3:12) மனித ஆட்சியாளர்களுக்கு நாம் கீழ்ப்படிந்திருக்க வேண்டும் என்று பேதுரு காட்டினார். வீட்டு வேலைக்காரர்கள் தங்கள் எஜமான்களுக்கும், மனைவிகள் தங்கள் கணவர்களுக்கும் கீழ்ப்பட்டிருக்க வேண்டும். ஒரு கிறிஸ்தவ மனைவியின் தேவபக்திக்குரிய நடத்தை அவளுடைய அவிசுவாசியான கணவனை மெய்யான விசுவாசத்திற்குள் கொண்டுவரக்கூடும். மேலும், ஒரு விசுவாசியான கணவன், “பலவீன பாண்டமாகிய தன் மனைவிக்கு கனத்தை”ச் செலுத்த வேண்டும். கிறிஸ்தவர்கள் யாவரும், மற்றவர்கள் பேரில் இரக்க உணர்வைக் காட்ட வேண்டும்; சகோதர சிநேகம் கொண்டிருக்க வேண்டும்; நல்லதைச் செய்ய வேண்டும்; சமாதானத்தை நாடித் தொடர வேண்டும்.
சகிப்புத் தன்மை ஆசீர்வாதங்களைக் கொண்டு வருகிறது
பாடு அனுபவிக்கையில் உண்மையான கிறிஸ்தவர்களின் உண்மையுள்ள சகிப்புத் தன்மையானது ஆசீர்வாதங்களில் விளைவடையும். (3:13–4:19) நீதியின் நிமித்தம் நாம் பாடுபடுவோமானால் நாம் சந்தோஷப்பட வேண்டும். மேலுமாக, நம்மை தேவனிடத்திற்கு வழிநடத்துவதற்காக கிறிஸ்து மாம்சத்திலே பாடு அனுபவித்ததினால், நாம் இனிமேலும் மாம்ச இச்சைகளுக்கேற்ப ஜீவிக்கக்கூடாது. நாம் சோதனைகளை உண்மையுடன் சகித்திருப்போமானால், இயேசு வெளிப்படுகையில் அதிகமான களிகூருதலில் பங்கு பெறுவோம். கிறிஸ்துவின் நாமத்திற்காக அல்லது, அவருடைய சீஷர்களாக நிந்தையை சுமப்பது, நம்மை சந்தோஷப்படுத்த வேண்டும்; ஏனென்றால் அது, நாம் யெகோவாவின் ஆவியைக் கொண்டிருக்கிறோம் என்பதை நிரூபிக்கிறது. ஆகவே, நாம் கடவுளுடைய சித்தத்திற்கு இசைவாக பாடுபடுகையில், அவருக்கு நம்மையே ஒப்புக்கொடுத்து தொடர்ந்து நன்மையானதைச் செய்வோம்.
கிறிஸ்தவர்களாக நம் கடமைகளை நாம் உண்மையுள்ளவர்களாக நிறைவேற்றி தேவனுடைய பலத்த கைக்குள் அடங்கியிருக்க வேண்டும். (5:1-14) மூப்பர்கள் தேவனுடைய மந்தையை மனப்பூர்வமாய், மேய்க்க வேண்டும். அவர் நமக்காக உண்மையில் அக்கறையுடையவராக இருப்பதை அறிந்து நாம் எல்லாரும் நம் கவலைகளையெல்லாம் யெகோவாவின் மேல் வைக்க வேண்டும். பிசாசிற்கு நாம் எதிர்த்து நிற்கவும் வேண்டும்; நம் சகோதரர்கள், நாம் அனுபவிக்கும் அதே பாடுகளை அனுபவிக்கிறார்கள் என்பதினால், நாம் ஒருபோதும் உற்சாகம் குன்றிப்போய்விடக்கூடாது. யெகோவா தேவன் நம்மை ஸ்திரப்படுத்தி, விசுவாசத்தில் உறுதியாக நிலைநிற்கும்படி செய்வார் என்பதை எப்போதும் நினைவில் வையுங்கள். (w91 3/15)
[பக்கம் 30-ன் பெட்டி/படம்]
பெண்ணினத்திற்கு அலங்கரிப்பு: கிறிஸ்தவ ஸ்திரீகளுக்கு அறிவுரை கூறுபவராக பேதுரு சொன்னது: “மயிரைப் பின்னி, பொன்னாபரணங்களை அணிந்து, உயர்ந்த வஸ்திரங்களை உடுத்திக் கொள்ளுதலாகிய புறம்பான அலங்கரிப்பு உங்களுக்கு அலங்காரமாயிராமல், அழியாத அலங்கரிப்பாயிருக்கிற சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியாகிய இருதயத்தில் மறைந்திருக்கிற குணமே உங்களுக்கு அலங்காரமாயிருக்கக்கடவது; அதுவே தேவனுடைய பார்வையில் விலையேறப்பெற்றது.” (1 பேதுரு 3:3, 4) பொ.ச. முதல் நூற்றாண்டின்போது, புறமத ஸ்திரீகள் அடிக்கடி தங்கள் நீளமான தலைமுடியை பகட்டான வடிவமைப்புக்களோடு பின்னி, பின்னல் நாடாக்களில் பொன்னாபரணங்களை வைத்து அமைத்துக் கொண்ட விரிவான முடியலங்காரங்களைக் கொண்டிருந்தார்கள். எதிர்ப்பார்க்கப்படக் கூடிய விதத்தில், பலர் பகட்டான ஆடம்பரத்தை வெளிக்காட்டும் வண்ணமாக அதைச் செய்தார்கள்—கிறிஸ்தவர்களுக்கு ஒவ்வாத ஒன்று. (1 தீமோத்தேயு 2:9, 10) இருப்பினும், எல்லா அணிகலனுமே தவறு இல்லை. ஏனென்றால் பேதுரு “வஸ்திரங்களை உடுத்திக் கொள்வதை,” தெளிவாகவே அவசியமான ஒன்றையும் உட்படுத்திப் பேசுகிறார். புராதன காலங்களைச் சேர்ந்த கடவுளுடைய ஊழியர்களால் ஆபரணங்களும்கூட உபயோகப்படுத்தப்பட்டன. (ஆதியாகமம் 24:53; யாத்திராகமம் 3:22; 2 சாமுவேல் 1:24; எரேமியா 2:32; லூக்கா 15:22) இருப்பினும், ஒரு கிறிஸ்தவ ஸ்திரீ ஞானமாகவே, பகட்டான ஆபரணங்களையும், உணர்வுகளைத் தூண்டியெழுப்பும் உடைகளையும் தவிர்க்கிறாள். மேலும் தான் பயன்படுத்தும் அழகு சாதனங்கள் நல்ல அபிப்பிராயத்தை உண்டுபண்ணும்படி இருக்கிறதா என்பதில் அவள் கவனமாயிருக்க வேண்டும். இந்த அப்போஸ்தல அறிவுரையின் கருத்து, அவள் புறம்பான அலங்கரிப்புக்கு அல்ல, ஆனால் உட்புற அலங்கரிப்புக்கே முக்கியத்துவம் அளிக்க வேண்டியவளாயிருக்கிறாள். உண்மையான விதத்தில் கவர்ச்சிகரமாயிருக்க அடக்கமுடன் உடையணிந்து, தேவனுக்குப் பயப்படும் ஒருவரின் மனநிலையைக் கொண்டிருக்க வேண்டும்.—நீதிமொழிகள் 31:30; மீகா 6:8.
[படத்திற்கான நன்றி]
Israel Department of Antiquities and Museums; Israel Museum/David Harris