உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g99 6/22 பக். 12-14
  • கேலி கிண்டலை சமாளிப்பது எப்படி?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கேலி கிண்டலை சமாளிப்பது எப்படி?
  • விழித்தெழு!—1999
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • ஏன் இந்த கேலி கிண்டல்
  • சரியான பதில்
  • தைரியமாய் பேசுதல்
  • பரீட்சிக்கப்பட்ட விசுவாசம் பலமான விசுவாசம்
  • கிறிஸ்தவ இளைஞர்களே விசுவாசத்தில் உறுதியாய் இருங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1992
  • இளைஞர்களே—உங்கள் செயலை யெகோவா மறக்க மாட்டார்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2003
  • ஸ்கூல் பிள்ளைகளிடம் எவ்வாறு பிரசங்கிப்பது?
    விழித்தெழு!—2002
  • எமது வாசகரிடமிருந்து
    விழித்தெழு!—2000
மேலும் பார்க்க
விழித்தெழு!—1999
g99 6/22 பக். 12-14

இளைஞர் கேட்கின்றனர் . . .

கேலி கிண்டலை சமாளிப்பது எப்படி?

தங்களுடைய சக வயதினரிடமிருந்து வித்தியாசமாக நடக்கும் அல்லது உடை உடுத்தும் இளைஞர்கள், பயங்கரமான ஏளனத்திற்கு பலியாகலாம். கிறிஸ்தவ இளைஞர்களின் விஷயத்தில் இது நூற்றுக்கு நூறு உண்மை. மற்ற இளைஞர்களிடம் இருந்து இவர்களுடைய நடத்தை வித்தியாசமாக இருப்பதே இதற்கு காரணம். கிறிஸ்து அவரை பின்பற்றுபவர்களைக் குறித்து, “அவர்கள் என்னைத் துன்பப்படுத்தினதுண்டானால், உங்களையும் துன்பப்படுத்துவார்கள்” என்று சொன்னாரல்லவா?​—⁠யோவான் 15:⁠20.

யெகோவாவின் சாட்சிகளாக இருக்கும் இளைஞர்களை இது எப்படி பாதிக்கிறது? குறிப்பிட்ட சில பண்டிகைகளை கொண்டாடுவதில்லை என்பதற்காக சிலர் கேலி செய்யப்படுகின்றனர்; கொடி வணக்கம் செய்வதில்லை என்பதற்காக நையாண்டி செய்யப்படுகின்றனர். போதை மருந்துகளை பயன்படுத்துவதில்லை என்பதற்காகவும் நேர்மையாக இருப்பதற்காகவும் பைபிளுடைய ஒழுக்க நெறிகளை பின்பற்றுவதற்காகவும் இவர்களில் அநேகர் இம்சை செய்யப்படுகின்றனர்.

இப்படிப்பட்ட கேலி கிண்டல்கள் புதிதல்ல. “[அவர்களோடேகூட] நீங்கள் விழாதிருக்கிறதினாலே அவர்கள் ஆச்சரியப்பட்டு, உங்களைத் தூஷிக்கிறார்கள்” என்று முதல் நூற்றாண்டில் வாழ்ந்த கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலனாகிய பேதுரு சொன்னார். (1 பேதுரு 4:4) மற்ற மொழிபெயர்ப்புகள் குறிப்பிடுகிறபடி, அவர்கள் “உங்களை பட்டப்பெயர் வைத்து அழைப்பர்” (க்னாக்ஸ்) அல்லது, “அவர்கள் உங்களை அவமதிப்பார்கள்.”—டுடேஸ் இங்லீஷ் வர்ஷன்.

உங்களுடைய மத நம்பிக்கைகளுக்காக நீங்கள் எப்போதாவது கேலி செய்யப்பட்டு இருக்கிறீர்களா? அப்படியென்றால், தைரியமாய் இருங்கள். உங்களைப் போலவே, மத நம்பிக்கைகளுக்காக நையாண்டி பண்ணப்பட்டவர்கள் அநேகர் இருக்கின்றனர்! உங்களுடைய விசுவாசத்திற்காக ஏளனம் செய்யப்படும்போது உண்டாகும் சங்கடத்தை சமாளிக்க நீங்கள் கற்றுக்கொள்ள முடியும். இதை அறிவது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும்.

ஏன் இந்த கேலி கிண்டல்

தங்களுடைய நம்பிக்கைகளில் இருந்தும் நடத்தையில் இருந்தும் வித்தியாசமாய் இருப்போரை சிலர் ஏன் கேலி கிண்டல் செய்கின்றனர்? சில சமயங்களில், நையாண்டி செய்பவர்கள்​—⁠வம்புக்கு இழுப்பவர்களைப் போலவே​—⁠தன்னம்பிக்கை இல்லாதவர்களாக உணருகின்றனர். தங்களுடைய சக நண்பர்களுக்கு மத்தியில் அவர்களுடைய செல்வாக்கை காட்ட அவர்கள் உங்களை கிண்டல் செய்யலாம். கூட்டாளிகள் இல்லாமல் தன்னந்தனியாக இருக்கும்போது, இந்த நையாண்டி பேர்வழிகளில் அநேகருக்கு உங்களை வெளிப்படையாக கேலி செய்யும் ஆசையோ அல்லது தைரியமோ இருக்காது.

மறுபட்சத்தில், பேதுரு எழுதியதுபோல், கிண்டல் செய்யும் சிலர் ‘ஆச்சரியப்படுகிறார்கள்.’ ஆம், உங்களுடைய நடத்தையை கவனித்து அதிசயப்பட்டு, உண்மையிலேயே அவர்கள் குழம்பிப் போயிருக்கலாம். உதாரணமாக, நீங்கள் யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக இருந்தால், குறிப்பிட்ட சில பண்டிகைகளோடு சம்பந்தப்பட்ட செயல்களில் நீங்கள் பங்குகொள்ளாமல் இருப்பது அவர்களுக்கு விசித்திரமாக தோன்றலாம். யெகோவாவின் சாட்சிகளை வேண்டுமென்றே எதிர்ப்பவர்கள், ஒருவேளை தப்பான தகவல்களை அவர்களுக்குக் கொடுத்திருக்கலாம்.

காரணம் எதுவாயிருந்தாலும்சரி, ஏளனக் கணைகள் சரமாரியாக உங்கள் மேல் தொடுக்கப்படும்போது, “சிந்தனையற்ற பேச்சு வாள் போலப் புண்படுத்தும்” என்ற பைபிள் நீதிமொழியை நீங்களும் ஒத்துக்கொள்வீர்கள். (நீதிமொழிகள் 12:18, பொது மொழிபெயர்ப்பு) ஆனால், ஒன்றை கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். உங்களை வெறுப்பதால் இப்படிப்பட்ட நையாண்டிப் பேச்சுகளை பேசுகிறார்கள் என்று நினைக்காதீர்கள். பைபிள் நீதிமொழி குறிப்பிடுகிறபடி, அவர்கள் ‘சிந்தனையின்றி பேசுகிறார்கள்.’

இருந்தாலும், நையாண்டிப் பேச்சு பட்டயக்குத்துகளைப் போல் வேதனை தரும். புண்படுத்தும் இப்படிப்பட்ட பேச்சுகளுக்கு அணை போடுவதற்காகவே உங்களுடைய விசுவாசத்தை விட்டுக்கொடுக்கவும் நீங்கள் ஒருவேளை தூண்டப்படலாம். அப்படியெனில், உங்களுடைய நம்பிக்கைகளுக்காக கிண்டல் செய்யப்படுவதை நீங்கள் எப்படி சமாளிக்கலாம்?

சரியான பதில்

‘உங்களிலிருக்கிற நம்பிக்கையைக்குறித்து உங்களிடத்தில் விசாரித்துக் கேட்கிற யாவருக்கும் சாந்தத்தோடும் வணக்கத்தோடும் உத்தரவு சொல்ல எப்பொழுதும் ஆயத்தமாயிருங்கள்’ என அப்போஸ்தலனாகிய பேதுரு கிறிஸ்தவர்களுக்கு அறிவுரை கூறினார். (1 பேதுரு 3:15) இப்படிப்பட்ட உத்தரவு சொல்ல வேண்டுமென்றால் நீங்கள் திருத்தமான அறிவையும் உங்கள் நம்பிக்கைகளுக்கான காரணங்களை நன்றாக புரிந்தும் இருக்கவேண்டும்.

இருந்தாலும், உங்களுடைய விளக்கங்களை “மிகுந்த மரியாதையோடு” (NW) சொல்லக் கற்றுக் கொள்ள வேண்டும். அல்லது த பைபிள் இன் பேஸிக் இங்லீஷ் மொழிபெயர்ப்பின்படி, “கர்வம் இல்லாமல்” சொல்ல வேண்டும். பைபிளையும் அதன் போதகங்களையும் பற்றிய உங்கள் அறிவால் அகந்தை அடையாதீர்கள். அதற்குமாறாக, அப்போஸ்தலனாகிய பவுலின் மனப்பான்மையை வளர்க்க முயற்சி செய்யுங்கள். “நான் அதிக ஜனங்களை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்கு, என்னைத்தானே எல்லாருக்கும் அடிமையாக்கினேன்” என்று அவருடைய ஊழியத்தைக் குறித்து எழுதினார்.​—⁠1 கொரிந்தியர் 9:⁠19.

உங்களுடைய விசுவாசத்தைப் பற்றி சரியான பதிலைக் கொடுக்க நீங்கள் தயங்குகிறீர்களா? சோர்ந்து போகாதீர்கள். சாட்சிகளாய் இருக்கும் அநேக இளைஞர்கள் இப்படித்தான் உணர்ந்திருக்கிறார்கள். “ஆரம்பப் பள்ளியில் இருக்கும்போது, பண்டிகைகளை நான் ஏன் கொண்டாடுவதில்லை என்பதற்கோ அல்லது ஏன் கொடிவணக்கம் செய்வதில்லை என்பதற்கோ அல்லது ஏன் வீட்டுக்கு வீடு ஊழியம் செய்கிறேன் என்பதற்கோ எப்படி பதில் தருவதென எனக்கு தெரியாது” என்கிறார் ஜமோல். அவருக்கு உதவியது யார்? “இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விளக்கத்தை சரியாக கொடுக்க கற்றுக்கொள்ளும்வரை என் அப்பா எனக்கு மிகவும் உதவினார். அது என் வாழ்க்கையில் மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தியது” என்கிறார். உங்களுடைய நம்பிக்கைகளை மற்றவர்களுக்கு விளக்குவதில் ஏதாவது பிரச்சினை இருந்தால், உதவியை நாடுங்கள். கடவுளைப் பற்றி நன்றாக தெரிந்துகொள்ள உங்கள் பெற்றோரையோ அல்லது கிறிஸ்தவ சபையில் இருக்கும் அனுபவம் வாய்ந்த ஒருவரையோ அணுகுங்கள்.​—⁠எபேசியர் 3:17-19.

பதினாறு வயது சாட்சியின் வார்த்தைகள் இதைத்தான் நிரூபிக்கின்றன. அவள் தனிப்பட்ட முறையில் பைபிளை படிப்பதற்கு ஒரு நல்ல படிப்பு திட்டத்தை வைத்திருந்தாள்; இதனால் அவள், ஸ்கூலில் மற்றவர்களிடம் தன் விசுவாசத்தைப் பற்றி தைரியமாக பேச முடிந்தது. “முன்பெல்லாம், நான் ஒரு சாட்சியாக இருப்பதை என்னுடைய வகுப்பு மாணவர்கள் கேலி செய்யும்போது, என்ன சொல்வதென்றே எனக்கு தெரியாது. ஆனால், இப்பொழுதோ ஒரு முழுநேர ஊழியராக பைபிளை அதிகம் படிப்பதால் சரியான பதிலை என்னால் கொடுக்க முடிகிறது. காவற்கோபுரம், விழித்தெழு! பத்திரிகைகள் வந்ததும் உடனுக்குடன் வாசிப்பது, என் பள்ளி மாணவர்களோடு என்னுடைய நம்பிக்கைகளைப் பற்றி பேச எனக்கு உதவுகிறது” என ஆமோதிக்கிறாள்.

என்றபோதிலும், எல்லா சந்தர்ப்பங்களும் ஒரே மாதிரி இருப்பதில்லை. வித்தியாசமான சந்தர்ப்பங்களில் வித்தியாசமான பதில்கள் தரவேண்டும். இருந்தாலும், வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவதுபோன்ற வார்த்தைகளால் உங்களுக்கு கோபம் தலைக்கேறினாலும் “தீமைக்கு தீமை” செய்வது ஒருபோதும் சரியல்ல. (ரோமர் 12:17-21) பேச்சுக்கு பேச்சு பதிலடி கொடுத்துக் கொண்டிருந்தால், அது எவ்வளவுதான் புத்திசாலித்தனமான பதிலாக இருந்தாலும் எரிகிற கொள்ளியில் எண்ணெய் வார்ப்பதுபோல் மேலும் மேலும் வார்த்தை வளர்ந்து கொண்டேதான் போகும். எனவே, இப்படிப்பட்ட நையாண்டிப் பேச்சுகளை பொருட்படுத்தாமல் விட்டுவிடுவதே மேல் என்று சிலர் புரிந்திருக்கின்றனர்.

சில சமயங்களில், தீங்கான நோக்கம் எதுவுமில்லாமல் நகைச்சுவையாக சில வார்த்தைகளை ஒருவர் சொல்லலாம். அந்த சமயங்களில் சட்டென்று கோபிக்காமல், அவர்களோடு சேர்ந்து நீங்களும் சிரிப்பதே புத்திசாலித்தனம். (பிரசங்கி 7:9) நையாண்டி செய்பவர் தன்னுடைய வார்த்தைகளுக்கு சிறிதளவே அல்லது எந்தவித பாதிப்பும் இல்லை என்பதை உணர்ந்தால், காலப்போக்கில் கிண்டல் பண்ணுவதை நிறுத்திக் கொள்வார்.​—⁠ஒப்பிடுக: நீதிமொழிகள் 24:29; 1 பேதுரு 2:⁠23.

தைரியமாய் பேசுதல்

இருந்தபோதிலும், உங்களுடைய நம்பிக்கைகளை சுருக்கமாகவும் சாதுரியமாகவும் விளக்க வேண்டிய சந்தர்ப்பங்களும் உண்டு. 13 வயது சிறுமி இப்படி பதிலளித்து, பிரமாதமான பலன்களையும் அடைந்தாள். “என்னுடைய பயிற்சி வகுப்புக்கு சென்று கொண்டிருந்தேன். அப்போது, சில மாணவர்கள் யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி கிண்டலடிக்க ஆரம்பித்தார்கள். அந்த சமயத்தில் தைரியமாக அவர்களுக்கு பதில் கொடுக்க நினைத்தேன். ஆனால், அவர்கள் நிற்காமல் போய்விட்டார்கள். என்னைப் பார்த்து கேலியாக சிரித்துக்கொண்டே போனார்கள். ஆனால், அந்தக் கூட்டத்தில் இருந்த ஒரு மாணவி மட்டும் அவர்களுடைய கேலிப்பேச்சில் கலந்துகொள்ளவில்லை. அந்த மாணவியின் பெயர் ஜேமீ. நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் a புத்தகம் தன்னிடம் இருப்பதாகவும் அதில் முக்கால்வாசி படித்து முடித்துவிட்டதாகவும் சொன்னாள். நம்முடைய நம்பிக்கைகளைப் பற்றி இன்னும் நிறைய தெரிந்து கொள்ள ஆசைப்படுவதாகவும் சொன்னாள். நான் அவளோடு ஒரு பைபிள் படிப்பை ஆரம்பித்தேன்” என சொல்கிறாள். இந்த அனுபவம் கொடுத்த உற்சாகத்தால், சாட்சியாய் இருந்த அந்த மாணவி மற்றவர்களிடமும் பேச ஆரம்பித்தாள். இதன் பலன்: “ஆர்வம் காட்டிய நான்கு மாணவர்களை ஒழுங்காக போய் சந்திக்கிறேன். சீக்கிரம், பைபிள் படிப்பை ஆரம்பிப்போம்” என்று அவள் நம்பிக்கை தெரிவித்தாள்.

சில ஆண்டுகளுக்குமுன், ஆப்பிரிக்க நாட்டில் இருக்கும் லைபீரியாவில் உள்ள ஒரு மாணவனுக்கும் இதேபோன்ற அனுபவம் ஏற்பட்டது. சமூகவியல் பாடம் நடந்துகொண்டிருந்தது. அப்போது, ஒரு யெகோவாவின் சாட்சியாக, பரிணாமத்தில் அல்ல, படைப்பில்தான் தனக்கு நம்பிக்கை இருப்பதாக பணிவோடு விளக்கினார். முதலில், உடன்மாணவர்களில் அநேகர் மிகவும் கேலி செய்தனர். ஆனால், அவருடைய நம்பிக்கைகளை விளக்கும்படி ஆசிரியர் அனுமதித்தார். அதற்குப் பிறகு, உயிர்​—⁠எப்படி இங்கு வந்தது? பரிணாமத்தாலா படைப்பினாலா? b (ஆங்கிலம்) புத்தகத்தை ஆசிரியர் பெற்றுக் கொண்டார்.

அந்தப் புத்தகத்தை படித்த பிறகு, “இந்தப் புத்தகம் ஈடு இணையற்ற புத்தகம். சிருஷ்டிப்பைப் பற்றி நான் படித்த விஞ்ஞானப் புத்தகங்களிலேயே இதுதான் மிகச் சிறந்தது” என்று ஆசிரியர் வகுப்பில் சொன்னார். அடுத்து வரும் இரண்டு செமஸ்டர்களுக்கும் பாடப்புத்தகத்தோடு சேர்த்து படைப்பு புத்தகத்தை பயன்படுத்தப் போவதாகவும், மற்ற மாணவர்கள் சாட்சி மாணவரிடம் இருந்து சில பிரதிகளை பெற்றுக்கொள்ளும்படியும் ஆசிரியர் சொன்னார். நிறைய புத்தகங்கள் கொடுக்கப்பட்டன. யெகோவாவின் சாட்சிகளைப் பற்றிய தங்கள் அபிப்பிராயத்தை அநேக மாணவர்கள் மாற்றிக்கொண்டனர்!

பரீட்சிக்கப்பட்ட விசுவாசம் பலமான விசுவாசம்

உங்களுடைய பைபிள் அடிப்படையிலான நிலைநிற்கையை அநேகர் ஏற்றுக்கொள்ளாததாலோ அல்லது பாராட்டுதல் தெரிவிக்காததாலோ நீங்கள் ஒருவேளை சில சமயங்களில் சோர்வுற்றிருக்கலாம். (ஒப்பிடுக: சங்கீதம் 3:1, 2.) எனவே, உங்களுடைய நம்பிக்கைகளையும் விசுவாசத்தையும் ஏற்றுக்கொள்கிறவர்களுடைய நட்பை நாடுவது ஞானமான செயல். (நீதிமொழிகள் 27:17) ஆனால், உங்களுடைய வட்டாரத்திலோ அல்லது நீங்கள் படிக்கும் பள்ளி, கல்லூரியிலோ உங்கள் விசுவாசத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இல்லையென்றால் அப்போது?

அப்படியென்றால், உங்களுடைய மிகச் சிறந்த நண்பர் யெகோவா தேவனே என்பதை நினைவில் வையுங்கள். அவர் உங்களை ஒருபோதும் கைவிடமாட்டார். ஆயிரக்கணக்கான வருடங்களாக பிசாசாகிய சாத்தானுடைய தூஷணங்களைப் பொறுத்துக்கொண்டிருக்கிறார். எனவே, உங்களுடைய விசுவாசத்திற்காக நீங்கள் உறுதியான நிலைநிற்கை எடுக்கும்போது, அது யெகோவாவுடைய இருதயத்தை மகிழ்விக்கிறது என்பதை மனதில் வையுங்கள். இப்படிப்பட்ட ஒரு போக்கு ‘அவரை நிந்திக்கிற சாத்தானுக்கு உத்தரவு’ கொடுக்கும் சந்தர்ப்பத்தை அவருக்கு தருகிறது.​—⁠நீதிமொழிகள் 27:⁠11.

அவ்வப்பொழுது, நம்முடைய விசுவாசம் பரீட்சிக்கப்படும் என்பது நாம் அனைவரும் எதிர்பார்க்க வேண்டிய ஒன்று. (2 தீமோத்தேயு 3:12) இருந்தாலும், பரீட்சிக்கப்பட்ட நம்முடைய விசுவாசம், ‘அக்கினியினாலே சோதிக்கப்பட்ட, அழிகிற பொன்னைப் பார்க்கிலும் அதிக விலையேறப்பெற்றதாயிருக்கிறது’ என அப்போஸ்தலனாகிய பேதுரு உறுதியளிக்கிறார். (1 பேதுரு 1:7) எனவே, உங்களுடைய விசுவாசத்திற்காக தூஷிக்கப்படும்போது, விசுவாசத்தைப் பலப்படுத்தவும் உங்களுடைய சகிப்புத்தன்மையை நிரூபிக்கவும் அதை ஒரு சந்தர்ப்பமாக கருதுங்கள். சகிப்புத்தன்மை “அங்கீகரிக்கப்பட்ட நிலைக்கு” வழிநடத்தும் என அப்போஸ்தலனாகிய பவுல் எழுதினார். (ரோமர் 5:3-5, NW) ஆம், யெகோவாவுடைய தயவைப் பெற வேண்டும் என்ற ஆவல், உங்களுடைய விசுவாசத்திற்காக நீங்கள் நையாண்டி பண்ணப்படும்போது, அதை சமாளிக்க தேவையான சக்தியை அளிக்கும்.

[அடிக்குறிப்புகள்]

a உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் இண்டியாவால் பிரசுரிக்கப்பட்டது.

b உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டியால் பிரசுரிக்கப்பட்டது.

[பக்கம் 13-ன் படம்]

உங்கள் விசுவாசத்தைக் குறித்து சரியான பதிலை உங்களால் கொடுக்க முடியுமா?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்