“மந்தைக்கு மாதிரிகளாக” இருக்கும் மேய்ப்பர்கள்
“உங்களிடத்திலுள்ள தேவனுடைய மந்தையை நீங்கள் மேய்த்து, . . . மனப்பூர்வமாயும், உற்சாக மனதோடும், . . . மந்தைக்கு மாதிரிகளாகவும், கண்காணிப்பு செய்யுங்கள்.”—1 பேதுரு 5:2, 3.
1, 2. (அ) அப்போஸ்தலன் பேதுருவுக்கு என்ன பொறுப்பை இயேசு கொடுத்தார், அவர்மீது இயேசு வைத்த நம்பிக்கை ஏன் வீண்போகவில்லை? (ஆ) இன்றுள்ள மேய்ப்பர்களை யெகோவா எவ்வாறு கருதுகிறார்?
பொது சகாப்தம் 33, பெந்தெகொஸ்தே தினத்திற்கு சற்று முன்பு, கலிலேயா கடற்கரையோரத்தில் பேதுருவும் மற்ற ஆறு சீஷர்களும், இயேசு கொடுத்த அப்பத்தையும் மீனையும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசுவை பேதுரு ஏற்கெனவே பார்த்திருந்தார்; இயேசு உயிரோடு இருந்ததில் பேதுருவுக்கு உண்மையில் சந்தோஷம்தான். ஆனால் அவருடைய மனதில் ஒருவித கலக்கமும் இருந்திருக்கும். ஏனென்றால் சில நாட்களுக்கு முன்புதான், இயேசுவைத் தனக்குத் தெரியவே தெரியாது என்று பொய் சொல்லியிருந்தார். (லூக்கா 22:55-60; 24:34; யோவான் 18:25-27; 21:1-14) அப்படி விசுவாசமில்லாமல் நடந்துகொண்டதற்காக இச்சந்தர்ப்பத்தில் இயேசு அவரைக் கண்டித்தாரா? இல்லை. அதற்குப் பதிலாக, தம்முடைய “ஆட்டுக்குட்டிகளை” மேய்த்து அவற்றிற்கு உணவளிக்கும் பொறுப்பைத்தான் கொடுத்தார். (யோவான் 21:15-17) அவர் பேதுருவின் மீது வைத்த நம்பிக்கை வீண்போகவில்லை; கொடுத்த பொறுப்பை பேதுரு உண்மையிலேயே நிறைவேற்றினார். இதை, முதல் நூற்றாண்டு கிறிஸ்தவ சபையைப் பற்றிய பைபிள் பதிவு காட்டுகிறது. எருசலேமிலிருந்த மற்ற அப்போஸ்தலர்களுடனும் மூப்பர்களுடனும் சேர்ந்து கிறிஸ்தவ சபையை பேதுரு கண்காணித்தார்; சபை கடும் சோதனைகளை எதிர்ப்பட்ட சமயத்திலும் சரி, வேகமாக வளர்ச்சி அடைந்த சமயத்திலும் சரி, அதைக் கவனித்துக்கொண்டார்.—அப்போஸ்தலர் 1:15-26; 2:14; 15:6-9.
2 இன்றும்கூட, இயேசு கிறிஸ்து மூலம், தகுதிவாய்ந்த சகோதரர்களை மேய்ப்பர்களாக யெகோவா நியமித்திருக்கிறார்; சரித்திரத்திலேயே மிகவும் கொடிய இந்தக் காலத்தில் தமது ஆடுகளை மேய்ப்பதற்காக அவர்களை நியமித்திருக்கிறார். (எபேசியர் 4:12, 13; 2 தீமோத்தேயு 3:1) அவர்கள்மீது யெகோவா வைத்திருக்கும் நம்பிக்கை வீணானதா? இல்லை. இதை, உலகெங்குமுள்ள கிறிஸ்தவர்களிடையே நிலவும் சமாதானமும் சகோதரத்துவமும் நிரூபிக்கின்றன. பேதுருவைப் போலவே இன்றுள்ள மேய்ப்பர்களுக்கும் குறைகள் இருப்பது உண்மைதான். (கலாத்தியர் 2:11-14; யாக்கோபு 3:2) ஆனாலும் யெகோவா, “தம்முடைய சுயரத்தத்தினாலே [“குமாரனின் இரத்தத்தினாலே,” NW] சம்பாதித்துக்கொண்ட” ஆடுகளை அவர்கள் பேணிப் பாதுகாப்பார்கள் என்று நம்புகிறார். (அப்போஸ்தலர் 20:28) அவர்கள்மீது மிகுந்த பாசம் வைத்திருக்கிறார்; அவர்கள் ‘இரட்டிப்பான கனத்திற்குப் பாத்திரர்கள்’ என்றும் கருதுகிறார்.—1 தீமோத்தேயு 5:17.
3. கிறிஸ்தவ மேய்ப்பர்கள் எவ்வாறு மனப்பூர்வமாயும், உற்சாக மனதோடும் மந்தையை மேய்க்கிறார்கள்?
3 கிறிஸ்தவ மேய்ப்பர்கள் எவ்வாறு மனப்பூர்வமாயும் உற்சாக மனதோடும் மந்தையை மேய்த்து, மந்தைக்கு மாதிரிகளாக இருக்கிறார்கள்? பேதுருவையும் முதல் நூற்றாண்டிலிருந்த மற்ற மேய்ப்பர்களையும் போல் அவர்கள் கடவுளுடைய பரிசுத்த ஆவியின் மீது சார்ந்திருக்கிறார்கள். அது, பொறுப்பை நிறைவேற்றுவதற்கான பலத்தை அவர்களுக்குத் தருகிறது. (2 கொரிந்தியர் 4:7) மேலும், அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம் [தன்னடக்கம்] போன்ற நற்குணங்களை அவர்களில் வளர்க்கிறது. (கலாத்தியர் 5:22, 23) இந்தக் குணங்களை வெளிக்காட்டுவதில் மேய்ப்பர்கள் எவ்வாறு மந்தைக்கு மாதிரிகளாக இருக்கலாம் என்பதற்குச் சில வழிகளை இப்போது பார்க்கலாம்.
மந்தை மீதும், தனித்தனி ஆடுகள் மீதும் அன்புகாட்டுங்கள்
4, 5. (அ) யெகோவாவும் இயேசுவும் எவ்வாறு மந்தையிடம் அன்பு காட்டுகிறார்கள்? (ஆ) கிறிஸ்தவ மேய்ப்பர்கள் மந்தையிடம் அன்பு காட்டும் சில வழிகள் யாவை?
4 யெகோவாவின் ஆவி பிறப்பிக்கும் குணங்களில் முதன்மையானது அன்பு. அவர் தமது மந்தை முழுவதன் மீதும் அன்பு வைத்து, ஆன்மீக உணவை அபரிமிதமாக அளிக்கிறார். (ஏசாயா 65:13, 14; மத்தேயு 24:45-47) மந்தை முழுவதற்கும் உணவளிப்பது மட்டுமல்லாமல் அதிலுள்ள ஆடுகள் ஒவ்வொன்றுடனும் பாசத்தால் பிணைந்திருக்கிறார். (1 பேதுரு 5:6, 7, NW) இயேசுவும்கூட மந்தை முழுவதன் மீதும் அன்பு வைத்து, அதற்காக தம் ஜீவனையே கொடுத்திருக்கிறார்; அதேசமயத்தில், ஆடுகள் ஒவ்வொன்றையும் ‘பேர்சொல்லிக் கூப்பிடும்’ அளவுக்கு தனித்தனியாக அறிந்து வைத்திருக்கிறார்.—யோவான் 10:3, 14-16.
5 கிறிஸ்தவ மேய்ப்பர்கள் யெகோவாவையும் இயேசுவையும் பின்பற்றுகிறார்கள். சபையில் கருத்தாக ‘உபதேசிப்பதன்’ மூலம் கடவுளுடைய மந்தை முழுவதன் மீதும் அன்பு காட்டுகிறார்கள். பைபிள் பேச்சுகளைக் கொடுத்து, மந்தையைப் போஷித்துப் பாதுகாக்கிறார்கள். அவர்கள் பாடுபட்டு இந்தப் பேச்சுகளைத் தயாரித்துக் கொடுப்பது மற்றவர்களுக்குத் தெளிவாகத் தெரிகிறது. (1 தீமோத்தேயு 4:13, 16) ஆனால் அவர்கள் பாடுபட்டு செய்யும் இன்னும் எத்தனையோ வேலைகள் வெளியில் தெரிவதில்லை. உதாரணத்திற்கு, சபை காரியங்கள் அனைத்தும் “நல்லொழுக்கமாயும் கிரமமாயும்” நடப்பதற்காக அவர்கள் பதிவுகளைப் பராமரிக்கிறார்கள், கடிதங்களைக் கையாளுகிறார்கள், அட்டவணைகள் போடுகிறார்கள், இன்னும் எத்தனையோ காரியங்களைச் செய்கிறார்கள். (1 கொரிந்தியர் 14:40) இவற்றையெல்லாம் மற்றவர்கள் பார்ப்பதும் இல்லை, பாராட்டுவதும் இல்லை. அப்படியிருந்தும் அவர்கள் கடினமாக உழைக்கிறார்கள் என்றால், அதற்குக் காரணம் அன்புதான்.—கலாத்தியர் 5:13.
6, 7. (அ) ஆடுகளை இன்னுமதிகமாய் தெரிந்துகொள்ள மேய்ப்பர்களுக்கு உதவும் ஒரு வழி என்ன? (ஆ) சிலசமயங்களில் நம் இன்பதுன்பங்களை மூப்பரோடு பகிர்ந்துகொள்வது ஏன் நன்மை பயக்கும்?
6 அன்பான கிறிஸ்தவ மேய்ப்பர்கள், சபையிலுள்ள ஆடுகள் ஒவ்வொன்றையும் அக்கறையாகக் கவனித்துக்கொள்ள முயலுகிறார்கள். (பிலிப்பியர் 2:4) சபையிலுள்ள ஒவ்வொருவரோடும் சேர்ந்து ஊழியம் செய்வதன் மூலம் அவர்களை இன்னுமதிகமாய் தெரிந்துகொள்கிறார்கள். இயேசு அவ்வாறுதான் தம் சீஷர்களோடு சேர்ந்து அடிக்கடி ஊழியம் செய்தார்; அவர்களை உற்சாகப்படுத்துவதற்கு அச்சந்தர்ப்பங்களைப் பயன்படுத்தினார். (லூக்கா 8:1) அனுபவமிக்க கிறிஸ்தவ மேய்ப்பர் ஒருவர் இவ்வாறு சொல்கிறார்: “சபையில் உள்ளவர்களை நன்றாகத் தெரிந்துகொள்வதற்கும் உற்சாகப்படுத்துவதற்கும் சிறந்த வழி அவர்களோடு சேர்ந்து ஊழியம் செய்வதுதான்.” உங்கள் சபையிலுள்ள மூப்பர் ஒருவரோடு ஊழியம் செய்ய சமீபத்தில் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால், சீக்கிரத்தில் அதற்கான ஏற்பாடுகள் செய்யலாம், அல்லவா?
7 இயேசு அன்பினால் தூண்டப்பட்டு, தம் சீஷர்களின் இன்பதுன்பங்களில் பங்குகொண்டார். உதாரணத்திற்கு, அவரது சீஷர்களில் 70 பேர் ஊழியம் செய்துவிட்டு சந்தோஷமாக திரும்பியபோது, அவர் ‘களிகூர்ந்தார்.’ (லூக்கா 10:17-21) ஆனால் லாசருவைப் பறிகொடுத்த துக்கத்தில் மரியாளும் அவளுடைய குடும்பத்தாரும் நண்பர்களும் அழுததைப் பார்த்தபோது அவர் “கண்ணீர்விட்டார்.” (யோவான் 11:33-35) அவரைப் போலவே, கரிசனையுள்ள மேய்ப்பர்களும் தங்கள் ஆடுகளின் உணர்ச்சிகளோடு ஒன்றிவிடுகிறார்கள். அன்பால் உந்துவிக்கப்பட்டு, ‘சந்தோஷப்படுகிறவர்களுடனே சந்தோஷப்படுகிறார்கள்,’ ‘அழுகிறவர்களுடனே அழுகிறார்கள்.’ (ரோமர் 12:15) நீங்களும், சந்தோஷமோ துக்கமோ எதுவானாலும் தயங்காமல் கிறிஸ்தவ மேய்ப்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். உங்கள் சந்தோஷத்தைப் பற்றிக் கேட்கும்போது அவர்கள் உற்சாகம் அடைவார்கள். (ரோமர் 1:11, 12, NW) உங்கள் துக்கத்தைப் பற்றி தெரிந்துகொள்ளும்போதோ, உங்களுக்குத் தைரியத்தையும் ஆறுதலையும் அளிப்பார்கள்.—1 தெசலோனிக்கேயர் 1:6; 3:1-3.
8, 9. (அ) ஒரு மூப்பர் எவ்வாறு தன் மனைவியிடம் அன்பு காட்டினார்? (ஆ) மேய்ப்பர் தன் குடும்பத்தாரிடம் அன்பு காட்டுவது எந்தளவு முக்கியமானது?
8 மந்தையிடம் மேய்ப்பருக்கு இருக்கும் அன்பு, அவர் தன் குடும்பத்தை நடத்தும் விதத்தில் தெளிவாகத் தெரிகிறது. (1 தீமோத்தேயு 3:1, 4) அவர் மணமானவராக இருந்தால், தன் மனைவியிடம் காட்டும் அன்பும் மரியாதையும் மற்ற கணவன்மாருக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கும். (எபேசியர் 5:25; 1 பேதுரு 3:7) லின்டா என்ற ஒரு சகோதரியின் அனுபவத்தைக் கவனியுங்கள். காலமாகிவிட்ட அவரது கணவர் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சபையில் கண்காணியாக சேவை செய்தார். அவரைப் பற்றி லின்டா இவ்வாறு சொல்கிறார்: “என் கணவர் சபை வேலைகளிலேயே எப்போதும் மூழ்கியிருந்தார். அதேசமயத்தில் எனக்கும் முக்கியத்துவம் கொடுத்தார். சொல்லப்போனால், நான் செய்த உதவிகளை அடிக்கடி பாராட்டினார். கிடைத்த கொஞ்ச நேரத்தையும் என்னோடு செலவழித்தார். இதனால், அவரது அன்பு கிடைக்காமல் நான் ஏங்கவும் இல்லை, சபைக்காக அவர் நேரம் செலவிட்டதைப் பார்த்து பொறாமைப்படவும் இல்லை.”
9 கிறிஸ்தவ மேய்ப்பர் ஒருவருக்குப் பிள்ளைகள் இருந்தால், அவர்களை அவர் அன்போடு கண்டிக்கிற விதமும் தவறாமல் பாராட்டுகிற விதமும் மற்ற பெற்றோருக்கு நல்ல எடுத்துக்காட்டாக விளங்கும். (எபேசியர் 6:4) இப்படியெல்லாம் அவர் தன் குடும்பத்தாரிடம் அன்பு காட்டுவது, பரிசுத்த ஆவியால் நியமிக்கப்பட்டபோது அவரிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புக்கு அவர் உண்மையிலேயே தகுதியானவர்தான் என்பதை நிரூபித்துக்கொண்டே இருக்கும்.—1 தீமோத்தேயு 3:4, 5.
மனம்விட்டுப் பேசுங்கள், சந்தோஷத்தையும் சமாதானத்தையும் முன்னேற்றுவியுங்கள்
10. (அ) எதைச் செய்யாவிட்டால் சந்தோஷமும் சமாதானமும் பறிபோய்விடலாம்? (ஆ) எந்தப் பிரச்சினையால் முதல் நூற்றாண்டு சபையில் சமாதானம் குலைந்துபோகும் நிலை ஏற்பட்டது, அப்பிரச்சினை எவ்வாறு தீர்க்கப்பட்டது?
10 பரிசுத்த ஆவி தனித்தனி கிறிஸ்தவர்களிலும் மூப்பர் குழுவிலும் மொத்த சபையிலும் சந்தோஷத்தையும் சமாதானத்தையும் முன்னேற்றுவிக்க முடியும். ஆனால் அவர்கள் ஒருவருக்கொருவர் மனம்விட்டு பேசாவிட்டால் அந்தச் சந்தோஷமும் சமாதானமும் பறிபோய்விடலாம். சாலொமோன் ராஜா இவ்வாறு குறிப்பிட்டார்: “ஆலோசனையில்லாமையால் எண்ணங்கள் சித்தியாமற்போம்.” (நீதிமொழிகள் 15:22) ஒருவருக்கொருவர் மரியாதையுடனும் மனம்விட்டும் பேசுகையில் சந்தோஷமும் சமாதானமும் அதிகரிக்கும். ஓர் உதாரணத்தைக் கவனிக்கலாம். முதல் நூற்றாண்டு சபையில் விருத்தசேதனம் சம்பந்தமாக ஒரு பிரச்சினை எழுந்தது; அதனால் சபையின் சமாதானம் குலைந்துபோகும் நிலை ஏற்பட்டது. அப்போது, எருசலேமிலிருந்த ஆளும் குழுவினர் பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலை நாடினார்கள். அதேசமயத்தில் விருத்தசேதனத்தைப் பற்றி அவரவர் கருத்துகளையும் வெளிப்படையாகச் சொன்னார்கள். அதிக நேரம் உற்சாகமாக கலந்து பேசிய பிறகு ஒருமனதான முடிவுக்கு வந்தார்கள். அந்த முடிவைப் பற்றி சபைகளுக்குத் தெரிவித்தபோது அங்கிருந்த சகோதரர்கள் “அதனாலுண்டாகிய ஆறுதலுக்காகச் சந்தோஷப்பட்டார்கள்.” (அப்போஸ்தலர் 15:6-23, 26, 31; 16:4, 5) இவ்வாறு சந்தோஷமும் சமாதானமும் முன்னேற்றுவிக்கப்பட்டன.
11. மூப்பர்கள் எவ்வாறு சபையில் சந்தோஷத்தையும் சமாதானத்தையும் முன்னேற்றுவிக்கிறார்கள்?
11 அதேபோல் இன்றும், மேய்ப்பர்கள் மனம்விட்டுப் பேசுவதன் மூலம் சபையில் சந்தோஷத்தையும் சமாதானத்தையும் முன்னேற்றுவிக்கிறார்கள். ஏதேனும் பிரச்சினையால் சபையின் சமாதானம் குலைந்துபோகும் நிலை ஏற்பட்டால், அவர்கள் ஒன்றுகூடி ஒருவருக்கொருவர் மனம்விட்டு பேசுகிறார்கள். ஒருவர் பேசும்போது மற்றவர்கள் மரியாதையோடு கேட்கிறார்கள். (நீதிமொழிகள் 13:10; 18:13) பரிசுத்த ஆவிக்காக ஜெபம் செய்துவிட்டு, பைபிள் நியமங்களின் அடிப்படையிலும் ‘உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரர்’ வழங்கும் வழிநடத்துதலின் அடிப்படையிலும் தீர்மானம் எடுக்கிறார்கள். (மத்தேயு 24:45-47; 1 கொரிந்தியர் 4:6) இவ்வாறு ஒரு குழுவாக மூப்பர்கள் எடுக்கும் வேதப்பூர்வ தீர்மானத்தை, தனிப்பட்ட ஒவ்வொரு மூப்பரும் ஆதரிக்கிறார்; தன் கருத்தை பெரும்பாலான மூப்பர்கள் நிராகரித்திருந்தாலும் அந்தத் தீர்மானத்தை ஆதரிக்கிறார்; இதன் மூலம் பரிசுத்த ஆவியின் வழிநடத்துதலுக்குக் கீழ்ப்படிகிறார். மேலும், இவ்விதத்தில் மனத்தாழ்மையைக் காட்டுவதன் மூலம், சந்தோஷத்தையும் சமாதானத்தையும் முன்னேற்றுவிக்கிறார்; அதுமட்டுமின்றி, கடவுளோடு நடக்கும் விஷயத்தில் ஆடுகளுக்குச் சிறந்த உதாரணமாக விளங்குகிறார். (மீகா 6:8) பைபிளின் அடிப்படையில் சபை மேய்ப்பர்கள் எடுக்கும் தீர்மானங்களை நீங்கள் மனத்தாழ்மையோடு ஆதரிக்கிறீர்களா?
நீடிய பொறுமையும் தயவும் காட்டுங்கள்
12. அப்போஸ்தலர்களிடம் இயேசு நீடிய பொறுமையையும் தயவையும் ஏன் காட்ட வேண்டியிருந்தது?
12 அப்போஸ்தலர்கள் அடிக்கடி தவறு செய்த சந்தர்ப்பங்களில்கூட இயேசு நீடிய பொறுமையையும் தயவையும் காட்டினார். உதாரணத்திற்கு, மனத்தாழ்மையை அவர் கற்றுக்கொடுத்த விதத்தை எடுத்துக்கொள்ளலாம்; அதன் அவசியத்தை அவர்கள் மனதில் பதிய வைக்க மீண்டும் மீண்டும் அவர் முயற்சி செய்தார். (மத்தேயு 18:1-4; 20:25-27) அதற்காக, பூமியில் வாழ்ந்த கடைசி இரவன்று அவர்களுடைய பாதங்களைக்கூட கழுவினார்; ஆனால் கொஞ்ச நேரத்திலேயே, “தங்களில் எவன் பெரியவனாயிருப்பான் என்று அவர்களுக்குள்ளே வாக்குவாதம் உண்டாயிற்று.” (லூக்கா 22:24; யோவான் 13:1-5) உடனே இயேசு கோபப்பட்டு அவர்களைத் திட்டினாரா? இல்லை, அவர்களிடம் தயவோடு நியாயங்காட்டிப் பேசினார்; “பந்தியிருக்கிறவனோ, பணிவிடைசெய்கிறவனோ, எவன் பெரியவன்? பந்தியிருக்கிறவன் அல்லவா? அப்படியிருந்தும், நான் உங்கள் நடுவிலே பணிவிடைக்காரனைப்போல் இருக்கிறேன்” என்றார். (லூக்கா 22:27) இயேசு காட்டிய நீடிய பொறுமையும் தயவும் அவரது சிறந்த முன்மாதிரியும்கூட காலப்போக்கில் அப்போஸ்தலர்களின் இருதயத்தைத் தொட்டன.
13, 14. முக்கியமாக எப்போது மேய்ப்பர்கள் தயவோடு நடந்துகொள்ள வேண்டும்?
13 அதேபோல் இன்றும் ஒரு கிறிஸ்தவ மேய்ப்பர் சபையிலுள்ள ஒரு சகோதரருக்குத் திரும்பத் திரும்ப அறிவுரை கொடுக்க வேண்டியிருக்கலாம். அந்தச் சகோதரர் அவரது பொறுமையையே சோதித்துவிடலாம். இருந்தாலும், ‘ஒழுங்கில்லாதவருக்குப் புத்திசொல்கையில்’ தன் சொந்த குறைபாடுகளை மேய்ப்பர் நினைவில் வைத்தால், நீடிய பொறுமையையும் தயவையும் காட்ட முடியும். இவ்வகையில் இயேசுவையும் யெகோவாவையும் பின்பற்ற முடியும்; அவர்கள் எல்லா கிறிஸ்தவர்களிடமும், ஏன், மேய்ப்பர்களிடமும்கூட இக்குணங்களை வெளிக்காட்டுகிறார்களே!—1 தெசலோனிக்கேயர் 5:14; யாக்கோபு 2:13.
14 சிலசமயங்களில், பெரிய பாவத்தை செய்துவிட்ட ஒருவரை மேய்ப்பர்கள் கடுமையாகக் கண்டிக்க வேண்டியிருக்கும். அந்நபர் மனந்திரும்பாதபோதோ, அவரைச் சபையிலிருந்து நீக்க வேண்டியிருக்கும். (1 கொரிந்தியர் 5:11-13) அதேசமயத்தில், பாவம் செய்தவரை வெறுக்காமல் பாவத்தை மட்டுமே வெறுப்பதைக் காட்டும் விதத்தில் அவரை நடத்த வேண்டும். (யூதா 22) மேய்ப்பர்கள் தயவோடு நடந்துகொண்டால், வழிவிலகிப் போகும் ஆடு இறுதியில் மந்தையிடமே வந்து சேர உதவியாக இருக்கும்.—லூக்கா 15:11-24.
நன்மையான செயல்களுக்குத் தூண்டுகோல் விசுவாசம்
15. மேய்ப்பர்கள் யெகோவாவைப் போலவே நற்குணத்தை வெளிக்காட்டும் ஒரு வழி என்ன, அவ்வாறு செய்ய அவர்களைத் தூண்டுவது எது?
15 யெகோவா ‘எல்லாருக்கும் நன்மை செய்பவர்,’ அவருக்கு நன்றி காட்டாதவர்களுக்குக்கூட நன்மை செய்கிறார். (சங்கீதம் [திருப்பாடல்கள்] 145:9, பொது மொழிபெயர்ப்பு; மத்தேயு 5:45) ‘ராஜ்யத்தின் சுவிசேஷம்’ எல்லாருக்கும் அறிவிக்கப்படுவதற்கு அவர் வழிசெய்திருப்பது அவரது நற்குணத்தின் மிகப் பெரிய வெளிக்காட்டு. (மத்தேயு 24:14) மேய்ப்பர்கள் ராஜ்ய பிரசங்க வேலையை முன்நின்று நடத்துவதன் மூலம் யெகோவாவைப் போலவே நற்குணத்தை வெளிக்காட்டுகிறார்கள். அயராது உழைக்க அவர்களைத் தூண்டுவது எது? யெகோவா மீதும் அவரது வாக்குறுதிகள் மீதும் உள்ள உறுதியான விசுவாசமே.—ரோமர் 10:10, 13, 14.
16. மேய்ப்பர்கள் எவ்வாறு ஆடுகளுக்கு ‘நன்மை செய்யலாம்’?
16 மேய்ப்பர்கள், பிரசங்கிப்பதன் மூலம் ‘யாவருக்கும் நன்மை’ செய்வதோடுகூட, ‘விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும்’ நன்மை செய்ய வேண்டும். (கலாத்தியர் 6:10) இதற்கு ஒரு வழி, மேய்ப்பு சந்திப்புகள் மூலம் அவர்களை உற்சாகப்படுத்துவதாகும். ஒரு மூப்பர் இவ்வாறு சொல்கிறார்: “மேய்ப்பு சந்திப்புக்குப் போக எனக்கு ரொம்ப பிடிக்கும். ஏனென்றால் சகோதர சகோதரிகளைப் பாராட்ட வாய்ப்பு கிடைக்கிறது, அவர்கள் கடினமாக உழைப்பது எந்தளவு மதிக்கப்படுகிறதென புரிய வைக்கவும் முடிகிறது.” இத்தகைய சந்திப்பின்போது, ஊழியத்தில் எவ்வாறு முன்னேறலாம் என்பதற்கான ஆலோசனைகளை மேய்ப்பர்கள் சிலசமயம் கொடுக்கலாம். அவ்வாறு செய்கையில், அவர்கள் அப்போஸ்தலன் பவுலைப் பின்பற்றுவது ஞானமானது. தெசலோனிக்கேயிலிருந்த சகோதரர்களிடம் பவுல் பேசிய விதத்தைக் கவனியுங்கள்; “நாங்கள் கட்டளையிடுகிறவைகளை நீங்கள் செய்துவருகிறீர்களென்றும், இனிமேலும் செய்வீர்களென்றும், உங்களைக் குறித்துக் கர்த்தருக்குள் நம்பிக்கையாயிருக்கிறோம்” என்று சொன்னார். (2 தெசலோனிக்கேயர் 3:4) இவ்வாறு, சகோதரர்கள்மீது நம்பிக்கை வைத்திருப்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்துவது, அவர்களின் மனதைத் தொடுகிறது; அதோடு, முன்நின்று ‘நடத்துகிறவர்களுக்கு கீழ்ப்படிய’ அவர்களைத் தூண்டுகிறது. (எபிரெயர் 13:17) அடுத்த முறை ஒரு மூப்பர் உங்களை சந்தித்து உற்சாகப்படுத்துகையில், அதற்காக நன்றி தெரிவிக்கலாம், அல்லவா?
சாந்தத்திற்குத் தேவை தன்னடக்கம்
17. இயேசு சொல்ல வந்த எந்தக் குறிப்பை பேதுரு புரிந்துகொண்டார்?
17 கோபத்தைக் கிளறும் சூழ்நிலைகளில்கூட இயேசு சாந்தமாகவே இருந்தார். (மத்தேயு 11:29) காட்டிக்கொடுக்கப்பட்டு கைது செய்யப்பட்ட போது அவர் சாந்தத்தையும் மிகுந்த தன்னடக்கத்தையும் காட்டினார். பேதுருவோ அவசரப்பட்டு தன் பட்டயத்தை உருவி வேலைக்காரனின் காதை வெட்டினார். ஆனால் இயேசு அவரிடம், “நான் இப்பொழுது என் பிதாவை வேண்டிக்கொண்டால், அவர் பன்னிரண்டு லேகியோனுக்கு அதிகமான தூதரை என்னிடத்தில் அனுப்ப மாட்டாரென்று நினைக்கிறாயா?” என்று கேட்டார். (மத்தேயு 26:51-53; யோவான் 18:10) இயேசு சொல்ல வந்த குறிப்பை பேதுரு நன்கு புரிந்துகொண்டு, பிற்பாடு கிறிஸ்தவர்களுக்கு இவ்வாறு நினைப்பூட்டினார்: “கிறிஸ்துவும் உங்களுக்காகப் பாடுபட்டு, நீங்கள் தம்முடைய அடிச்சுவடுகளைத் தொடர்ந்துவரும்படி உங்களுக்கு மாதிரியைப் பின்வைத்துப் போனார். . . . அவர் வையப்படும்போது பதில் வையாமலும், பாடுபடும்போது பயமுறுத்தாமலும், நியாயமாய்த் தீர்ப்புச் செய்கிறவருக்குத் தம்மை ஒப்புவித்தார்.”—1 பேதுரு 2:21-23.
18, 19. (அ) மேய்ப்பர்கள் குறிப்பாக எப்போது சாந்தத்தையும் தன்னடக்கத்தையும் காட்ட வேண்டும்? (ஆ) நாம் அடுத்த கட்டுரையில் என்ன கேள்விகளை சிந்திப்போம்?
18 ஆக, சிறந்த மேய்ப்பர்கள் நியாயமில்லாமல் நடத்தப்படும்போதுகூட சாந்தமாகவே இருக்கிறார்கள். உதாரணத்திற்கு, அவர்கள் சபையிலுள்ள ஒருவருக்கு உதவ முயற்சி செய்யலாம், அந்நபரோ அதை அலட்சியப்படுத்தலாம். அவர் ஆன்மீக ரீதியில் பலவீனராக இருந்தால், மேய்ப்பர்கள் அறிவுரை தருகையில் பதிலுக்கு ‘பட்டயக்குத்துகள்போல் பேசிவிடலாம்.’ (நீதிமொழிகள் 12:18) ஆனாலும் மேய்ப்பர்கள் இயேசுவைப் பின்பற்றி, சொல்லிலோ செயலிலோ பழிக்குப் பழி வாங்காமல் இருக்கிறார்கள். மாறாக, தன்னடக்கத்தையும் அனுதாபத்தையும்கூட தொடர்ந்து வெளிக்காட்டுகிறார்கள்; இது, அந்நபருக்கு மிகுந்த பயன் அளிக்கிறது. (1 பேதுரு 3:8, 9) நீங்கள் மூப்பர்களைப் பார்த்துக் கற்றுக்கொள்வீர்களா? அறிவுரை கொடுக்கப்படுகையில் சாந்தத்தையும் தன்னடக்கத்தையும் காட்டுவீர்களா?
19 உலகெங்கும் உள்ள மந்தையை ஆயிரக்கணக்கான மேய்ப்பர்கள் மனப்பூர்வமாக மேய்க்கிறார்கள்; இவர்களது கடின உழைப்பை யெகோவாவும் இயேசுவும் பெரிதும் மதிக்கிறார்கள். அதோடு, ‘பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்வதில்’ மூப்பர்களுக்கு ஆதரவு தரும் ஆயிரக்கணக்கான உதவி ஊழியர்களையும் அவர்கள் மிகவும் நேசிக்கிறார்கள். (எபிரெயர் 6:10) அப்படியென்றால், இந்த “நல்ல வேலையை” செய்ய, முழுக்காட்டப்பட்ட சகோதரர்கள் சிலர் ஏன் தயங்குகிறார்கள்? (1 தீமோத்தேயு 3:1) மேய்ப்பர்களாக நியமிக்கப்படுகிறவர்களை யெகோவா எவ்வாறு பயிற்றுவிக்கிறார்? அடுத்த கட்டுரையில் இக்கேள்விகளைச் சிந்திப்போம்.
நினைவிருக்கிறதா?
• மேய்ப்பர்கள் மந்தையிடம் அன்பு காட்டும் சில வழிகள் என்ன?
• சபையிலுள்ள அனைவரும் எவ்வாறு சந்தோஷத்தையும் சமாதானத்தையும் முன்னேற்றுவிக்கலாம்?
• அறிவுரை கொடுக்கையில் மேய்ப்பர்கள் ஏன் நீடிய பொறுமையோடும் தயவோடும் நடந்துகொள்கிறார்கள்?
• மூப்பர்கள் எவ்வாறு நற்குணத்தையும் விசுவாசத்தையும் வெளிக்காட்டுகிறார்கள்?
[பக்கம் 18-ன் படம்]
மூப்பர்கள் அன்பினால் தூண்டப்பட்டு சபைக்காக பாடுபடுகிறார்கள்
[பக்கம் 18-ன் படங்கள்]
அவர்கள் குடும்பமாக பொழுதுபோக்குகிறார்கள் . . .
. . . ஊழியம் செய்கிறார்கள்
[பக்கம் 20-ன் படம்]
மூப்பர்கள் ஒருவருக்கொருவர் மனம்விட்டு பேசுவது, சபையில் சந்தோஷத்தையும் சமாதானத்தையும் முன்னேற்றுவிக்கும்