அதிகாரத்தைப் பிரயோகிப்பதில் கிறிஸ்துவைப் பின்பற்றுங்கள்
மனித நடத்தையைக் குறித்து சில ஆண்டுகளுக்கு முன் ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. அதன் முடிவு விநோதமாக இருந்தது. இதில் பங்கேற்றவர்கள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டனர். ஒரு பிரிவினர் காவலர்களாகவும் அடுத்த பிரிவினர் கைதிகளாகவும் நியமிக்கப்பட்டனர். கைதிகள் பிரிவை காவலர் பிரிவினர் கண்காணிக்க வேண்டியிருந்தது. என்ன நடந்தது தெரியுமா?
“சில நாட்களுக்குள், [காவலராக நியமிக்கப்பட்டவர்களில்] அநேகர், கைதிகளைக் கேவலமாக நடத்தினார்கள், பயமுறுத்தினார்கள், அடிக்கடி தண்டித்தார்கள்; கைதிகளாக நியமிக்கப்பட்டவர்களோ அஞ்சிநடுங்கி, அடிபணிந்து போனார்கள்.” ஆக, அதிகார துஷ்பிரயோகம் என்ற கண்ணியில் யார் வேண்டுமானாலும் சிக்கிவிடலாம் என்பதையே அந்த ஆய்வு காண்பித்தது.
அதிகாரம்—பிரயோகமும், துஷ்பிரயோகமும்
அதிகாரத்தை முறையாகப் பிரயோகிக்கையில், அது பயன் அளிக்கும், நல்வழியில் நடத்தும்; உடல், மன, ஆன்மீக நன்மைகளையும் தரும். (நீதிமொழிகள் 1:5, NW; ஏசாயா 48:17, 18) என்றாலும், முன் குறிப்பிட்ட ஆய்வு காண்பிக்கிறபடி, அதிகார துஷ்பிரயோகம் எனும் ஆபத்தில் ஒருவர் எப்போது வேண்டுமானாலும் சிக்கிவிடலாம். இந்த ஆபத்தைக் குறித்து பைபிள் இவ்வாறு கூறுகிறது: “துன்மார்க்கர் ஆளும்போதோ ஜனங்கள் தவிப்பார்கள்.”—நீதிமொழிகள் 29:2; பிரசங்கி 8:9.
அதிகாரத்தை நல்ல நோக்கத்திற்காக துஷ்பிரயோகம் செய்தால்கூட அது தவறுதான். உதாரணமாக, அயர்லாந்திலுள்ள ஓர் ஆன்மீக கல்வி நிறுவனம் சமீபத்தில் பகிரங்கமாக மன்னிப்பு கோரியது. ஆசிரியர்களில் சிலர், தங்கள் பொறுப்பில் விடப்பட்ட பிள்ளைகளிடம் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததே அதற்குக் காரணம். அந்த ஆசிரியர்களில் அநேகர் உயர்ந்த நோக்கத்தோடுதான் அப்படி நடந்துகொண்டார்கள். இருந்தாலும், அவர்களில் சிலர் கையாண்ட முறைகள் மிகுந்த கேடு விளைவித்தன. “அநேக ஆசிரியர்கள் அளவுக்குமீறி வன்முறையாகவும், கொடூரமாகவும் நடந்துகொண்டதன் விளைவாக பிள்ளைகளின் மனம் ரணமானது” என ஒரு செய்தித்தாள் (த ஐரிஷ் டைம்ஸ்) அறிக்கை செய்தது. அப்படியானால், சொல்லிலும் செயலிலும் மற்றவர்களைப் புண்படுத்தி அவர்களுடைய வெறுப்பைச் சம்பாதிப்பதற்குப் பதிலாக, அவர்களிடம் புதைந்து கிடக்கும் திறமைகளை வெளிக்கொணரும் விதத்தில் அதிகாரத்தை எப்படிப் பிரயோகிப்பீர்கள்?—நீதிமொழிகள் 12:18.
“சகல அதிகாரமும்” இயேசுவுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது
இயேசு கிறிஸ்துவின் மாதிரியைக் கொஞ்சம் கவனியுங்கள். பரலோகத்திற்குச் செல்வதற்கு சற்று முன்பு தம் சீஷர்களிடம் இவ்வாறு கூறினார்: ‘வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது.’ (மத்தேயு 28:18) அதைக் கேட்டதும் சீஷர்கள் பயத்தில் உறைந்து போனார்களா? எதிர்ப்பு தெரிவித்த எவரையும் அடக்கி ஒடுக்கிய ரோம ஆட்சியாளர்களைப் போலத்தான் இனி இயேசுவும் கொடூரமாக நடந்துகொள்வார் என்று நினைத்தார்களா?
இல்லவே இல்லை! அதைத்தான் பைபிள் தெளிவாகக் காட்டுகிறது. அதிகாரத்தைப் பிரயோகிப்பதில் இயேசு கிறிஸ்து தம் தகப்பனை அப்படியே பின்பற்றுகிறார். யெகோவா தேவன் சர்வலோகத்தின் உன்னத பேரரசராக இருக்கிறபோதிலும், யாருமே பயத்தினால் தமக்குச் சேவை செய்வதையோ, கடமைக்குச் சேவை செய்வதையோ விரும்புவதில்லை. மனதார செய்யும் சேவையையே அவர் விரும்புகிறார். (மத்தேயு 22:37) யெகோவா தம்முடைய அதிகாரத்தை ஒருபோதும் துஷ்பிரயோகம் செய்வதில்லை. எசேக்கியேல் தீர்க்கதரிசிக்குக் காண்பிக்கப்பட்ட தத்ரூபமான ஒரு தரிசனம் இதைத் தெளிவுபடுத்துகிறது.
அந்தத் தரிசனத்தில், கடவுளுடைய பேரரசுரிமையை ஆதரித்த நான்கு ஆவி சிருஷ்டிகளை எசேக்கியேல் கண்டார். ஒவ்வொன்றுக்கும் நான்கு முகங்கள் இருந்தன. “முன்புறம் மனித முகமாயும், வலப்புறம் சிங்க முகமாயும், இடப்புறம் எருது முகமாயும், பின்புறம் கழுகு முகமாயும் அவை நான்கின் முகச்சாயலும் இருந்தன” என்று எசேக்கியேல் எழுதினார். (எசேக்கியேல் 1:10, பொது மொழிபெயர்ப்பு) இந்த நான்கு முகங்கள், கடவுளுடைய முக்கியமான நான்கு பண்புகளை அடையாளப்படுத்துகின்றன; அந்தப் பண்புகளை அவர் பூரண சமநிலையோடு காண்பிக்கிறார். மனித முகம் அன்பையும், சிங்க முகம் நீதியையும், கழுகு முகம் ஞானத்தையும் அடையாளப்படுத்துவதாக பைபிள் குறிப்பிடுகிறது. இந்த மூன்று பண்புகளும் எருது முகத்தால் அடையாளப்படுத்தப்பட்ட வல்லமை என்ற பண்போடு ஒன்றிணைந்து செயல்படுகின்றன. இதெல்லாம் எதைக் காட்டுகிறது? யெகோவா தம்முடைய அளவற்ற வல்லமையை அல்லது அதிகாரத்தை அவருடைய மற்ற முக்கிய குணங்களோடு முரண்படும் விதத்தில் ஒருபோதும் பயன்படுத்த மாட்டார் என்பதையே காட்டுகிறது.
இயேசு கிறிஸ்துவும் தம்முடைய தகப்பனைப் போலவே அன்பு, ஞானம், நீதி ஆகிய பண்புகளோடு பூரணமாக சமநிலைப்படுத்தியே அதிகாரத்தை பிரயோகித்தார். இதன் காரணமாக, இயேசுவின் சீஷர்கள் அவருடைய அதிகாரத்துக்குக் கீழ்ப்படிந்தபோது மிகுந்த புத்துணர்ச்சி பெற்றனர். (மத்தேயு 11:28-30) யெகோவா தேவன், இயேசு கிறிஸ்து ஆகிய இருவருக்குமே அன்புதான் தலைசிறந்த பண்பு, வல்லமையோ அதிகாரமோ அல்ல!—1 கொரிந்தியர் 13:13; 1 யோவான் 4:8.
நீங்கள் எவ்வாறு அதிகாரத்தைப் பிரயோகிக்கிறீர்கள்?
இந்த விஷயத்தில் நீங்கள் எப்படி? உதாரணத்திற்கு, குடும்பத்தில்? அதிகாரம் உங்கள் கையில் இருப்பதால் எல்லாம் உங்கள் இஷ்டப்படிதான் நடக்க வேண்டுமென வற்புறுத்துகிறீர்களா? குடும்ப அங்கத்தினர்கள் உங்களுடைய தீர்மானங்களுக்கு ஒத்துப்போவது பயத்தினாலா அல்லது அன்பினாலா? உங்களுக்கு அதிகாரம் இருப்பதால் வேறுவழியில்லாமல்தான் அவர்கள் கீழ்ப்படிகிறார்களா? கடவுள் ஆரம்பித்து வைத்திருக்கும் குடும்ப ஏற்பாட்டை கட்டிக்காக்க, இந்தக் கேள்விகளை குடும்பத் தலைவர்கள் கவனமாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.—1 கொரிந்தியர் 11:3.
கிறிஸ்தவ சபையில் உங்களுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டிருந்தால், அதை எவ்வாறு பிரயோகிக்கிறீர்கள்? உங்கள் அதிகாரத்தைச் சரியாகப் பயன்படுத்துகிறீர்களா என்பதை பின்வரும் நியமங்களை வைத்துச் சோதித்துப் பாருங்கள். இவற்றைக் கொடுத்திருப்பது யெகோவா தேவன், இவற்றைப் பின்பற்றுவதில் சிறந்த உதாரணமாக விளங்குவது இயேசு கிறிஸ்து.
‘கர்த்தருடைய ஊழியக்காரன் . . . எல்லாரிடத்திலும் சாந்தமுள்ளவனும், . . . தீமையைச் சகிக்கிறவனுமாயிருக்க வேண்டும். எதிர்பேசுகிறவர்களுக்கு . . . சாந்தமாய் உபதேசிக்க வேண்டும்.’—2 தீமோத்தேயு 2:24-26.
ஆரம்பகால கிறிஸ்தவ சபையில் இருந்த சிலருக்கு அதிகப்படியான அதிகாரம் கொடுக்கப்பட்டிருந்தது. உதாரணமாக, ‘வேற்றுமையான உபதேசங்களைப் போதியாதபடிக்கு . . . சிலருக்குக் கட்டளையிட’ தீமோத்தேயுவுக்கு அதிகாரம் இருந்தது. (1 தீமோத்தேயு 1:3) என்றாலும், அவர் எல்லா சூழ்நிலைகளிலும் தெய்வீகப் பண்புகளை வெளிக்காட்டினார். சபையைக் கண்காணிக்கையில், “சாந்தமாய்” உபதேசிக்கும்படியும், ‘எல்லாரிடத்திலும் சாந்தமுள்ளவராக’ நடந்துகொள்ளும்படியும் பவுல் கொடுத்த அறிவுரைக்கு அவர் முழுமையாகக் கீழ்ப்படிந்ததே அதற்குக் காரணம். மற்ற மூப்பர்களைவிட இளையவராக இருந்த தீமோத்தேயு, வயதில் மூத்தவர்களிடத்தில் மரியாதையுள்ள மகனைப் போலவும், சிறியோரிடத்தில் அக்கறையுள்ள அண்ணனைப் போலவும் நடந்துகொள்ள வேண்டியிருந்தது. (1 தீமோத்தேயு 5:1, 2) இவ்வாறு அன்பான அக்கறை காட்டப்படுகையில், கிறிஸ்தவ சபை வியாபார ஸ்தலத்தைப் போலில்லாமல், பரஸ்பர நேசம் நிலவுகிற ஓர் இனிய குடும்பத்தைப் போல இருக்கும்.—1 கொரிந்தியர் 4:14; 1 தெசலோனிக்கேயர் 2:7, 8.
“புறஜாதியாருடைய அதிகாரிகள் அவர்களை இறுமாப்பாய் ஆளுகிறார்கள் [“மக்களை அடக்கி ஆளுகிறார்கள்,” பொ.மொ.] . . . பெரியவர்கள் அவர்கள்மேல் கடினமாய் அதிகாரஞ் செலுத்துகிறார்கள் . . . உங்களுக்குள்ளே அப்படி இருக்கலாகாது; உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைக்காரனாயிருக்கக்கடவன்.”—மத்தேயு 20:25, 26.
‘அடக்கி ஆளும்’ உலக அதிகாரிகள் மற்றவர்கள்மீது தங்கள் விருப்பங்களைத் திணிக்கிறார்கள், தாங்கள் சொல்கிறபடிதான் நடக்க வேண்டும் என வற்புறுத்துகிறார்கள், மீறினால் தண்டிப்பதாக மிரட்டுகிறார்கள். ஆனால் இயேசு கிறிஸ்துவோ, மற்றவர்களுக்கு ஊழியம் செய்வதற்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுத்தார், அவர்களை ஆட்டிப்படைப்பதற்கு அல்ல. (மத்தேயு 20:27, 28) இயேசு தம்முடைய சீஷர்களை எப்போதுமே அன்போடும், கரிசனையோடும் நடத்தினார். நீங்கள் இயேசுவின் மாதிரியைப் பின்பற்றினால், உங்களோடு ஒத்துழைப்பது மற்றவர்களுக்கு எளிதாக இருக்கும். (எபிரெயர் 13:7, 17) அதுமட்டுமின்றி, நீங்கள் செய்யச் சொல்வதைக் காட்டிலும் அவர்கள் அதிகமாகவே செய்வார்கள், கட்டாயத்தினால் அல்ல, மனப்பூர்வமாக.—மத்தேயு 5:41.
‘உங்களிடத்திலுள்ள தேவனுடைய மந்தையை நீங்கள் மேய்த்து, . . . சுதந்தரத்தை இறுமாப்பாய் ஆளுகிறவர்களாக அல்ல, மந்தைக்கு மாதிரிகளாக கண்காணிப்பு செய்யுங்கள்.’—1 பேதுரு 5:2, 3.
சபையாரின் ஆன்மீக நலனுக்கு தாங்கள் பொறுப்பாளிகளாக இருப்பதை இன்று கண்காணிகள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள். இந்தப் பொறுப்பை மிக முக்கியமானதாகக் கருதுகிறார்கள். முழு மனதோடும், உள்ளார்வத்தோடும், அன்போடும் கடவுளுடைய மந்தையைப் பேணிக்காக்க முயலுகிறார்கள். அப்போஸ்தலன் பவுலைப் போலவே கண்காணிகளும், சபையாரின் விசுவாசத்தைப் பலப்படுத்துவதற்கு கடினமாக உழைக்கிறார்களே தவிர, அவர்களுடைய விசுவாசத்திற்கு அதிகாரிகளாக இருப்பதற்கு அல்ல.—2 கொரிந்தியர் 1:24.
சபையிலுள்ள ஒருவரைத் திருத்துவதற்காக அல்லது ஆன்மீக முன்னேற்றம் செய்ய ஒருவருக்கு உதவுவதற்காக மூப்பர்கள் பொருத்தமான அறிவுரை கொடுக்க வேண்டியிருக்கலாம். அப்போது அவர்கள் சாந்தமாக நடந்துகொள்ள வேண்டும். அப்போஸ்தலன் பவுல் கொடுத்த இந்த நினைப்பூட்டுதலை அவர்கள் நினைவில்கொள்கிறார்கள்: “சகோதரரே, ஒருவன் யாதொரு குற்றத்தில் அகப்பட்டால், ஆவிக்குரியவர்களாகிய நீங்கள் சாந்தமுள்ள ஆவியோடே அப்படிப்பட்டவனைச் சீர்பொருந்தப்பண்ணுங்கள்; நீயும் சோதிக்கப்படாதபடிக்கு உன்னைக் குறித்து எச்சரிக்கையாயிரு.”—கலாத்தியர் 6:1; எபிரெயர் 6:1, 2, 9-12.
“ஒருவரையொருவர் தாங்கி, ஒருவர் பேரில் ஒருவருக்குக் குறைபாடு உண்டானால், . . . ஒருவருக்கொருவர் மன்னியுங்கள். இவை எல்லாவற்றின்மேலும், பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.”—கொலோசெயர் 3:13, 14.
கிறிஸ்தவ தராதரங்களை முழுமையாகப் பின்பற்றத் தவறும் ஒருவரிடம் எப்படி நடந்துகொள்கிறீர்கள்? யெகோவாவையும் இயேசு கிறிஸ்துவையும் போலவே, அவர்களுடைய அபூரணத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்கிறீர்களா? (ஏசாயா 42:2-4) அல்லது எல்லா சூழ்நிலையிலும் கடவுளுடைய சட்டத்தை இம்மிபிசகாமல் கடைப்பிடிக்க வேண்டுமென்று வற்புறுத்துகிறீர்களா? (சங்கீதம் 130:3) தேவை ஏற்படும்போது மட்டும் கண்டிப்பாகவும், ஆனால் முடிந்தபோதெல்லாம் கனிவாகவும் இருப்பதே சரியானது என்பதை நினைவில்கொள்ளுங்கள். இவ்வாறு அன்பு காட்டும்போது உங்களுக்கும் உங்கள் அதிகாரத்தின் கீழ் இருப்போருக்கும் இடையே நம்பிக்கை எனும் பலமான பிணைப்பு உருவாகும்.
உங்களுக்கு எவ்வகையான அதிகாரம் அளிக்கப்பட்டிருந்தாலும் சரி, அதைப் பிரயோகிக்கும்போது யெகோவா தேவனையும் இயேசு கிறிஸ்துவையும் பின்பற்ற கடினமாக முயலுங்கள். யெகோவா தம் மக்கள்மீது அதிகாரம் செலுத்தும் விதத்தைப் பற்றி தாவீது அருமையாகச் சித்தரித்ததை நினைவுபடுத்திப் பாருங்கள். அவர் இவ்வாறு பாடினார்: ‘யெகோவா என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன். அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமர்ந்த தண்ணீர்கள் அண்டையில் என்னைக் கொண்டுபோய்விடுகிறார். அவர் என் ஆத்துமாவைத் தேற்றி, தம்முடைய நாமத்தினிமித்தம் என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார்.’ அதேபோல, இயேசுவைக் குறித்து நாம் இவ்வாறு வாசிக்கிறோம்: “நானே நல்ல மேய்ப்பன்; பிதா என்னை அறிந்திருக்கிறது போலவும், நான் பிதாவை அறிந்திருக்கிறது போலவும், நான் என்னுடையவைகளை அறிந்தும் என்னுடையவைகளால் அறியப்பட்டுமிருக்கிறேன்; ஆடுகளுக்காக என் ஜீவனையும் கொடுக்கிறேன்.” அதிகாரத்தை அன்புடன் பிரயோகிப்பதில் இவர்களைவிடச் சிறந்த முன்மாதிரிகள் இருக்க முடியுமா?—சங்கீதம் 23:1-3; யோவான் 10:14, 15.
[பக்கம் 18-ன் சிறு குறிப்பு]
அன்பு, ஞானம், நீதி ஆகிய பண்புகளோடு பூரணமாகச் சமநிலைப்படுத்தியே யெகோவா தம் அதிகாரத்தைப் பிரயோகிக்கிறார்
[பக்கம் 18-ன் படம்]
சில சமயம் மூப்பர்கள், தவறு செய்பவர்களுக்கு அன்பாக ஆலோசனை கொடுக்க வேண்டும்
[பக்கம் 19-ன் படம்]
மரியாதையுள்ள மகனைப் போலவும், அக்கறையுள்ள அண்ணனைப் போலவும் நடந்துகொள்ளும்படி தீமோத்தேயுவுக்கு பவுல் அறிவுறுத்தினார்
[பக்கம் 20-ன் படம்]
இயேசு கிறிஸ்து தம் அதிகாரத்தை ஞானமாகவும் நீதியாகவும் அன்பாகவும் பிரயோகிக்கிறார்