“மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்”
“பெருமையுள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார்.”—1 பேதுரு 5:5
1, 2. ஒன்றுக்கொன்று எதிரான என்ன குணங்கள், மனித நடத்தையை ஆழமாக பாதிக்கின்றன?
ஒன்றுக்கொன்று எதிரான இரண்டு குணங்களை பைபிள் நம்முடைய கவனத்திற்குக் கொண்டுவருகிறது. ஆனால் இந்த இரண்டுமே மனித நடத்தையை மிக ஆழமாய் பாதிக்கின்றன. அதில் ஒன்று “மனத்தாழ்மை.” (1 பேதுரு 5:5) “தாழ்மை” என்பதை ஓர் அகராதி இவ்வாறு விவரிக்கிறது: “நடத்தையில் அல்லது மனப்பான்மையில் பணிவு: பிடித்த பிடியை விடாதிருக்கும் பெருமை இல்லாதது.” மனத்தாழ்மைக்குப் பணிவு என்றும் பொருள்; கடவுளுடைய பார்வையில் அது மிகவும் விரும்பத்தக்க பண்பு.
2 இதற்கு எதிரானதுதான் பெருமை. “மட்டுக்குமீறிய சுயமதிப்பு,” “ஆணவம்” என்பது இதன் பொருள். இது தன்னலத்தையே மையமாக கொண்டது, மற்றவர்களுக்கு என்ன ஆனாலும்சரி, செல்வங்களையும் தற்புகழ்ச்சியையும் மற்ற ஆதாயங்களையும் அடையவே நாடுகிறது. இதன் ஒரு விளைவை பைபிள் குறிப்பிடுகிறது: ‘ஒரு மனுஷன் தனக்கே கேடுண்டாக வேறொரு மனுஷனை ஆளுகிறான்.’ “மனிதரிடையே காணப்படும் போட்டி மனப்பான்மை” “காற்றைப் பிடிக்க முயல்வதற்கு ஒப்பாகும்” என்பதாக சொல்கிறது, ஏனெனில் இறக்கும்போது, “பயன் எதையும் தம்மோடு எடுத்துச் செல்வதில்லை.” இத்தகைய பெருமை, கடவுளுடைய பார்வையில் அறவே விரும்பத்தகாதது.—சபை உரையாளர் [பிரசங்கி] 4:4; 5:15; 8:9; பொது மொழிபெயர்ப்பு.
இவ்வுலக மனப்பான்மை
3. இவ்வுலக மனப்பான்மை என்ன?
3 இந்த இரண்டு குணங்களில் எது இன்றைய உலகில் பளிச்சென்று தெரிகிறது? இவ்வுலகில் மேலோங்கி இருக்கும் மனப்பான்மை எது? உலக இராணுவ மற்றும் சமுதாய செலவுகள் 1996 (ஆங்கிலம்) இவ்வாறு குறிப்பிடுகிறது: “காட்டுமிராண்டித்தனமான . . . வன்முறைக்கு இந்த 20-வது நூற்றாண்டுக்கு நிகர் 20-வது நூற்றாண்டே.” அரசியல் ஆசனத்திற்காக இருந்தாலும்சரி பொருளாதார அந்தஸ்தை பெறுவதற்காக இருந்தாலும்சரி, எங்கும் போட்டி எதிலும் போட்டி. அதுமட்டுமா, தேசம், மதம், இனம் என்ற போட்டி மனப்பான்மை வேறு! இந்த நூற்றாண்டில் மட்டுமே பத்து கோடிக்கும் மேற்பட்ட ஜனங்களின் உயிரை இவை வாரிக்கொண்டு போயிருக்கின்றன. தனி நபர்களை எடுத்துக் கொண்டாலும் தன்னலமே தலைவிரித்தாடுகிறது. சிக்காகோ டிரிப்யூன் இவ்வாறு கூறியது: “சமுதாயத்தைப் பீடித்துள்ள நோயில் கேடு விளைவிக்கும் வன்முறை, குழந்தைகள் துஷ்பிரயோகம், விவாகரத்து, குடிவெறி, எய்ட்ஸ், இளைஞர் தற்கொலை, போதைப் பொருட்கள், போக்கிரி கும்பல்கள், கற்பழிப்பு, முறைகேடான பிறப்பு, கருச்சிதைவு, ஆபாச ஓவியம், . . . பொய், மோசடி, அரசியல் ஊழல், . . . எது சரி, எது தவறு என்ற ஒழுக்க நெறிகள் அழிக்கப்பட்டிருப்பது ஆகிய இவை யாவும் அடங்கும்.” இதனால், “சமுதாயங்கள் சின்னா பின்னமாகின்றன” என ஐநா செய்திப்பட்டியல் எச்சரித்தது.
4, 5. நம் நாளுக்குரிய பைபிள் தீர்க்கதரிசனம் எவ்வாறு இவ்வுலக மனப்பான்மையை திருத்தமாக விவரிக்கிறது?
4 இதே நிலைமைகள் உலகமுழுவதும் ஊடுருவி கிடக்கின்றன. நம்முடைய காலத்தைப் பற்றி பைபிள் தீர்க்கதரிசனம் முன்னறிவித்தபடியே இது உள்ளது: “கடைசிநாட்களில் கொடிய காலங்கள் வருமென்று அறிவாயாக. எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும், தூஷிக்கிறவர்களாயும், தாய்தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும், சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும், துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும், . . . இருப்பார்கள்.”—2 தீமோத்தேயு 3:1-4.
5 இது தற்போதைய உலக மனப்பான்மையை தத்ரூபமாக படம்பிடித்துக் காட்டுகிறது. இதுவே ‘நான்-முதல்’ என்ற தன்னல மனப்பான்மை. தனி நபர்களுக்கு இடையே காணப்படும் போட்டியையே தேசங்களுக்கு இடையே நடைபெறும் போட்டி பறைசாற்றுகிறது. உதாரணமாக, போட்டி விளையாட்டுகளில் முதலிடத்தைப் பெறவே பலர் துடியாக துடிக்கிறார்கள். அது உணர்ச்சிரீதியிலும் உடல்ரீதியிலும் மற்றவர்களை எப்படி பாதித்தாலும்சரி கவலைப்படுகிறதில்லை. தன்னலமே கருதும் இந்த மனப்பான்மை பச்சிளம் பிள்ளைகளில் ஆரம்பித்து, பருவ வயதினர் வரை பல அம்சங்களில் தொடர்கிறது. இது, “பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், . . . பொறாமைகள்” ஆகியவற்றில் கொண்டுபோய் விடுகிறது.—கலாத்தியர் 5:19-21.
6. தன்னலத்தை வளர்ப்பவன் யார், இந்த மனப்பான்மையைப் பற்றி யெகோவா எவ்வாறு உணருகிறார்?
6 தன்னலமே கருதும் இந்த உலக மனப்பான்மை, ‘உலகமனைத்தையும் மோசம்போக்குகிற பிசாசு என்றும் சாத்தான் என்றும் சொல்லப்படும்’ அவனுடைய மனப்பான்மையின் பிம்பமென பைபிள் காட்டுகிறது. இந்தக் கொடிய “கடைசி நாட்களில்” வாழும் ஜனங்களின்மீது சாத்தான் செலுத்தும் செல்வாக்கைக் குறித்து பைபிள் இவ்வாறு முன்னறிவிக்கிறது: ‘பூமியில் . . . குடியிருக்கிறவர்களே! ஐயோ, பிசாசானவன் தனக்குக் கொஞ்சக்காலமாத்திரம் உண்டென்று அறிந்து, மிகுந்த கோபங்கொண்டு, உங்களிடத்தில் இறங்கினபடியால், உங்களுக்கு ஆபத்துவரும்.’ (வெளிப்படுத்துதல் 12:9-12) ஆகையால் அவனும் அவனுடைய கூட்டாளி பேய்களும் மனித குடும்பத்தில் தன்னல மனப்பான்மையை பெருகச் செய்வதற்கான தங்கள் முயற்சிகளைத் தீவிரமாக்கியிருக்கின்றனர். இத்தகைய மனப்பான்மையை பற்றி யெகோவா எவ்வாறு உணருகிறார்? அவருடைய வார்த்தை சொல்கிறது: “மனமேட்டிமையுள்ளவனெவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன்.”—நீதிமொழிகள் 16:5.
தாழ்மையானவர்களுடன் யெகோவா இருக்கிறார்
7. தாழ்மையானவர்களை யெகோவா எவ்வாறு கருதுகிறார், அவர்களுக்கு என்ன கற்பிக்கிறார்?
7 மறுபட்சத்தில், மனத்தாழ்மையுள்ளவர்களை யெகோவா ஆசீர்வதிக்கிறார். அரசனாகிய தாவீது, யெகோவாவுக்குப் பாடின பாட்டில் இவ்வாறு சொன்னார்: “சிறுமைப்பட்ட ஜனத்தை ரட்சிப்பீர்; மேட்டிமையானவர்களைத் தாழ்த்த, உம்முடைய கண்கள் அவர்களுக்கு விரோதமாய்த் திருப்பப்பட்டிருக்கிறது.” (2 சாமுவேல் 22:1, 28) ஆகையால், கடவுளுடைய வார்த்தை இவ்வாறு அறிவுரை அளிக்கிறது: “தேசத்திலுள்ள [“பூமியிலுள்ள,” NW] எல்லாச் சிறுமையானவர்களே, . . . அவரைத் [யெகோவாவைத்] தேடுங்கள்; நீதியைத் தேடுங்கள், மனத்தாழ்மையைத் தேடுங்கள்; அப்பொழுது ஒருவேளை யெகோவாவுடைய கோபத்தின் நாளிலே மறைக்கப்படுவீர்கள்.” (செபனியா 2:3, திருத்திய மொழிபெயர்ப்பு.) மனத்தாழ்மையுடன் யெகோவாவைத் தேடுகிறவர்கள் இந்த உலகத்தின் மனப்பான்மையிலிருந்து முற்றிலும் வேறுபட்ட மனப்பான்மையை வளர்க்கும்படி அவரால் கற்பிக்கப்படுகிறார்கள். யெகோவா, “சாந்தகுணமுள்ளவர்களுக்குத் தமது வழியைப் போதிக்கிறார்.” (சங்கீதம் 25:9; ஏசாயா 54:13) அந்த வழி அன்பின் வழி, கடவுளுடைய தராதரங்களின்படி சரியானதைச் செய்வதில் ஆதாரங்கொண்டது. பைபிளின்படி, நியமம் சார்ந்த இந்த அன்பு, “தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது, . . . தற்பொழிவை நாடாது.” (1 கொரிந்தியர் 13:1-8) மனத்தாழ்மையிலும் அது தன்னை வெளிப்படுத்துகிறது.
8, 9. (அ) நியமம் சார்ந்த அன்பின் ஊற்றுமூலர் யார்? (ஆ) இயேசு காண்பித்த அன்பையும் மனத்தாழ்மையையும் பின்பற்றுவது எவ்வளவு முக்கியம்?
8 பவுலும் அவரைப் பின்பற்றிய முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களும் இந்த வகையான அன்பை இயேசுவின் போதனைகளிலிருந்து கற்றார்கள். இயேசு அதை தம்முடைய பிதாவாகிய யெகோவாவிடமிருந்து கற்றார். “தேவன் அன்பாகவே இருக்கிறார்” என்று யெகோவாவை குறித்து பைபிள் சொல்லுகிறது. (1 யோவான் 4:8) அன்பின் சட்டத்தின்படி தாம் வாழவேண்டும் என்பதே கடவுளுடைய சித்தம் என்பதை இயேசு அறிந்திருந்தார், அவ்வாறே செய்தார். (யோவான் 6:38) இதனால், ஒடுக்கப்பட்டவர்கள், தரித்திரர், பாவிகள் ஆகியோரிடம் இரக்கம் காட்டினார். (மத்தேயு 9:36) அவர்களிடம் அவர் சொன்னார்: ‘வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள் மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்.’—மத்தேயு 11:28, 29.
9 “நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்” என்று இயேசு சொன்னபோது, தம்முடைய அன்பையும் மனத்தாழ்மையையும் பார்த்துப் பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை காண்பித்தார். (யோவான் 13:35) தன்னலத்தை மையமாகக் கொண்ட இந்த உலகத்திலிருந்து வேறுபட்டவர்களாய் அவர்கள் தனித்து நிற்பார்கள். இதன் காரணமாகவே தம்மைப் பின்பற்றினோரைக் குறித்து இயேசு இவ்வாறு சொல்ல முடிந்தது: “அவர்கள் இவ்வுலகத்தின் பாகமானவர்கள் அல்லர்.” (யோவான் 17:14, NW) சாத்தானிய உலகின் பெருமையான தன்னல மனப்பான்மையை அவர்கள் பினபற்றுவதில்லை. மாறாக, இயேசு காட்டின அன்பையும் தாழ்மையையுமே அவர்கள் பின்பற்றுகிறார்கள்.
10. நம்முடைய நாளில் மனத்தாழ்மையுள்ளவர்களை யெகோவா என்ன செய்கிறார்?
10 இந்தக் கடைசி நாட்களில், அன்பு மற்றும் மனத்தாழ்மையின் அடிப்படையில் ஓர் உலகளாவிய சமுதாயமாக மனத்தாழ்மையுள்ளவர்கள் ஒன்றாக கூட்டிச் சேர்க்கப்படுவார்கள் என கடவுளுடைய வார்த்தை முன்னறிவித்தது. எனவே, மேலும் மேலும் அதிக பெருமைமிக்க ஒன்றாக ஆகிவரும் உலகின் மத்தியில், யெகோவாவின் ஜனங்கள் முற்றிலும் மாறான மனப்பான்மையை—மனத்தாழ்மையை—காட்டுகிறார்கள். இத்தகையோர் இவ்வாறு சொல்கிறார்கள்: “நாம் யெகோவாவின் பர்வதத்துக்கு [அவரது மேலோங்கிய உண்மை வணக்கத்திற்கு] . . . போவோம் வாருங்கள், அவர் தமது வழிகளை நமக்குப் போதிப்பார், நாம் அவர் பாதைகளில் நடப்போம்.” (ஏசாயா 2:2, 3, தி.மொ.) யெகோவாவின் சாட்சிகளே, கடவுளுடைய பாதையில் நடக்கிற இந்த உலகளாவிய சமுதாயம். “சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்த” பெருகிவரும் ஒரு ‘திரள் கூட்டமாக’ அவர்கள் இருக்கிறார்கள். (வெளிப்படுத்துதல் 7:9) இந்தத் திரள் கூட்டத்தில் இப்போது லட்சோப லட்சம் பேர் இருக்கிறார்கள். மனத்தாழ்மையுடன் இருப்பதற்கு யெகோவா இவர்களை எவ்வாறு பயிற்றுவிக்கிறார்?
மனத்தாழ்மையுடன் இருக்க கற்றுக்கொள்ளுதல்
11, 12. எவ்வாறு கடவுளுடைய ஊழியர்கள் மனத்தாழ்மையைக் காட்டுகிறார்கள்?
11 கற்றுக்கொள்ள மனமுள்ள தம்முடைய ஜனங்களில் கடவுளுடைய ஆவி கிரியை செய்து, இந்த உலகத்தின் கெட்ட மனப்பான்மையை ஒழிக்கவும், பின்பு கடவுளுடைய ஆவியின் கனிகளை செயலில் காட்டவும் அவர்களுக்கு உதவிசெய்கிறது. இது, “அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்” ஆகியவற்றின் வாயிலாக தன்னை வெளிப்படுத்துகிறது. (கலாத்தியர் 5:22, 23) இந்தப் பண்புகளை வளர்ப்பதற்கு, கடவுளுடைய ஊழியர்கள் “வீண் புகழ்ச்சியை விரும்பாமலும், ஒருவரையொருவர் கோபமூட்டாமலும், ஒருவர்மேல் ஒருவர் பொறாமைகொள்ளாமலும்” இருக்கும்படி அறிவுரை கூறப்படுகிறார்கள். (கலாத்தியர் 5:26) இதுபோலவே, அப்போஸ்தலன் பவுல் சொன்னார்: “நான் சொல்லுகிறதாவது; உங்களில் எவனானாலும் தன்னைக்குறித்து எண்ணவேண்டியதற்கு மிஞ்சி எண்ணாமல், . . . தெளிந்த எண்ணமுள்ளவனாய் எண்ணவேண்டும்.”—ரோமர் 12:3.
12 “ஒன்றையும் வாதினாலாவது வீண் பெருமையினாலாவது செய்யாமல், மனத்தாழ்மையினாலே ஒருவரையொருவர் தங்களிலும் மேன்மையானவர்களாக எண்ணக்கடவீர்கள். அவனவன் தனக்கானவைகளையல்ல, பிறருக்கானவைகளையும் நோக்குவானாக” என்று கடவுளுடைய வார்த்தை உண்மை கிறிஸ்தவர்களுக்குச் சொல்கிறது. (பிலிப்பியர் 2:3, 4) “ஒவ்வொருவனும் தன் சுயபிரயோஜனத்தைத் தேடாமல், பிறனுடைய பிரயோஜனத்தைத் தேடக்கடவன்.” (1 கொரிந்தியர் 10:24) ஆம், தன்னலமற்ற வார்த்தைகளாலும் செயல்களாலும் ‘அன்பு’ மற்றவர்களுக்கு ‘பக்திவிருத்தியை உண்டாக்குகிறது.’ (1 கொரிந்தியர் 8:1) அது, போட்டி போடாது. ஒத்துழைப்பை விருத்திசெய்கிறது. யெகோவாவின் ஊழியர்கள் மத்தியில் ‘நான்-முதல்’ என்ற மனப்பான்மைக்கு இடமில்லை.
13. மனத்தாழ்மையை ஏன் கற்க வேண்டும், அதை ஒருவர் எவ்வாறு கற்றுக்கொள்கிறார்?
13 ஆனால், அபூரணத்தின் காரணமாக யாருமே மனத்தாழ்மையோடு பிறப்பதில்லை. (சங்கீதம் 51:5) இந்தப் பண்பை கற்றுக்கொள்ள வேண்டும். யெகோவாவின் வழிகளை ஏற்றுக்கொண்ட ஆனால் சிறுவயதிலிருந்தே அவ்வாறு போதிக்கப்படாதவர்களுக்கு இது ஒருவேளை கடினமாக இருக்கலாம். ஏற்கெனவே அவர்களிடம் இந்தப் பழைய உலக மனப்பான்மை வேர்விட்டு தழைத்திருக்கலாம். ஆகையால் அவர்கள், “முந்தின நடக்கைக்குரிய . . . பழைய மனுஷனை . . . களைந்துபோட்டு,” “மெய்யான நீதியிலும் பரிசுத்தத்திலும் தேவனுடைய சாயலாக சிருஷ்டிக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொள்ள” வேண்டும். (எபேசியர் 4:22, 24) ‘உருக்கமான இரக்கத்தையும், தயவையும், மனத்தாழ்மையையும், சாந்தத்தையும், நீடிய பொறுமையையும் தரித்துக்கொள்ளுங்கள்’ என கடவுள் தங்களிடம் எதிர்பார்ப்பதை நேர்மை மனமுள்ளவர்கள் அவருடைய உதவியால் செய்ய முடியும்.—கொலோசெயர் 3:12.
14. தன்னை உயர்த்திக்கொள்ள விரும்புவதற்கு எதிராக இயேசு எவ்வாறு பேசினார்?
14 இயேசுவின் சீஷர்களும் இதை கற்றுக்கொள்ள வேண்டியதாக இருந்தது. ஏனெனில் அவர்கள் இயேசுவின் சீஷர்களானபோது வயதுவந்தோராக இருந்தார்கள். அவர்களிடம் இந்த உலகப்பிரகாரமான போட்டி மனப்பான்மை ஓரளவு ஒட்டியிருந்தது. அவர்களில் இருவருடைய தாய், தன் குமாரருக்கு முதன்மை இடத்தைக் கேட்டுக்கொண்டபோது இயேசு இவ்வாறு சொன்னார்: “புறஜாதியாருடைய அதிகாரிகள் அவர்களை [ஜனங்களை] இறுமாப்பாய் ஆளுகிறார்கள் என்றும், பெரியவர்கள் அவர்கள்மேல் கடினமாய் அதிகாரஞ் செலுத்துகிறார்கள் என்றும், நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். உங்களுக்குள்ளே அப்படி இருக்கலாகாது; உங்களில் எவனாகிலும் பெரியவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்குப் பணிவிடைக்காரனாயிருக்கக்கடவன். உங்களில் எவனாகிலும் முதன்மையானவனாயிருக்க விரும்பினால், அவன் உங்களுக்கு ஊழியக்காரனாயிருக்கக்கடவன். அப்படியே, மனுஷகுமாரனும் [இயேசு] ஊழியங்கொள்ளும்படி வராமல், ஊழியஞ் செய்யவும், அநேகரை மீட்கும்பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுக்கவும் வந்தார்.” (மத்தேயு 20:20-28) தங்களை உயர்த்திக்கொள்ள பட்டப்பெயர்களைப் பயன்படுத்த வேண்டாமென இயேசு தம்முடைய சீஷர்களுக்குச் சொன்னபோது, “நீங்கள் எல்லாரும் சகோதரராயிருக்கிறீர்கள்” என்றார்.—மத்தேயு 23:8.
15. கண்காணிப்பை நாடுகிறவர்களுக்கு எப்படிப்பட்ட மனப்பான்மை இருக்க வேண்டும்?
15 இயேசுவை உண்மையாக பின்பற்றுபவர் ஓர் ஊழியர். ஆம், உடன் கிறிஸ்தவர்களுக்கு ஓர் அடிமை. (கலாத்தியர் 5:13, NW) சபையில் கண்காணிப்புக்குத் தகுதிபெற விரும்புகிறவர்களுடைய விஷயத்தில் இது இவ்வாறுள்ளது. முதன்மை ஸ்தானத்திற்காகவோ அதிகாரத்திற்காகவோ அவர்கள் ஒருபோதும் போட்டி போடக்கூடாது. கடவுளுடைய “சுதந்தரத்தை இறுமாப்பாய் ஆளுகிறவர்களாக அல்ல, மந்தைக்கு மாதிரிகளாக’’ இருக்க வேண்டும். (1 பேதுரு 5:3) சொல்லப்போனால், தன்னலத்தை நாடும் மனப்பான்மை ஒருவர் கண்காணிப்புக்குத் தகுதியற்றவர் என்பதற்கு அறிகுறி. அப்படிப்பட்டவர் சபைக்கு ஆபத்து! உண்மைதான், ‘கண்காணிப்பை விரும்புவது’ சரியே, ஆனால் மற்ற கிறிஸ்தவர்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற ஆவலினால் இது தோன்ற வேண்டும். இந்த ஊழிய பொறுப்பு, முதன்மை நிலைக்குரிய அல்லது அதிகாரத்திற்குரிய ஒரு பதவி அல்ல. ஏனெனில் கண்காணிப்பு செய்பவர்களே சபையில் மிகவும் மனத்தாழ்மையுடன் இருக்க வேண்டும்.—1 தீமோத்தேயு 3:1, 6.
16. கடவுளுடைய வார்த்தையில், தியோத்திரேப்பு ஏன் கண்டனம் செய்யப்பட்டான்?
16 தவறான நோக்குநிலையை கொண்டிருந்த ஒருவனை அப்போஸ்தலன் யோவான் இவ்வாறு நம்முடைய கவனத்திற்குக் கொண்டுவருகிறார்: “நான் சபைக்கு ஒன்றை எழுதினேன், ஆனால், அவர்களுக்குள் முதலிடத்தை விரும்புகிற தியோத்திரேப்பு, எங்களிடமிருந்து வருகிற எதையும் மரியாதையுடன் ஏற்பதில்லை.” இந்த மனிதன் தன் பதவியை உயர்த்துவதற்காக மற்றவர்களை அவமரியாதையுடன் நடத்தினான். ‘நான்-முதல்’ என்ற தியோத்திரேப்புவின் மனப்பான்மையின் காரணமாக அவனைப் பற்றிய ஒரு கண்டன அறிவிப்பை பைபிளில் சேர்க்கும்படி, கடவுளுடைய ஆவி யோவானை ஏவியது.—3 யோவான் 9, 10.
சரியான மனப்பான்மை
17. எவ்வாறு பேதுருவும் பவுலும் பர்னபாவும் மனத்தாழ்மையைக் காட்டினார்கள்?
17 சரியான மனப்பான்மையாகிய மனத்தாழ்மையை காண்பித்த பலரின் உதாரணம் பைபிளில் இருக்கிறது. பேதுரு கொர்நேலியுவின் வீட்டுக்குள் பிரவேசித்தபோது, “கொர்நேலியு, . . . அவன் [பேதுருவின்] பாதத்தில் விழுந்து, பணிந்துகொண்டான்.” ஆனால், அந்த மிதமீறிய பணிவை ஏற்பதற்குப் பதிலாக, “பேதுரு அவனைத் தூக்கியெடுத்து: எழுந்திரும், நானும் ஒரு மனுஷன்தான் என்றான்.” (அப்போஸ்தலர் 10:25, 26) பவுலும் பர்னபாவும் லீஸ்திராவில் இருந்தபோது, பிறந்ததிலிருந்து சப்பாணியாக இருந்த ஒரு மனிதனை பவுல் சுகப்படுத்தினார். இதனால், இந்த அப்போஸ்தலர்களை தேவர்கள் என ஜனக்கூட்டத்தார் சொன்னார்கள். எனினும், பவுலும் பர்னபாவும் “தங்கள் வஸ்திரங்களைக் கிழித்துக்கொண்டு, கூட்டத்துக்குள்ளே ஓடி, உரத்த சத்தமாய்: மனுஷரே, ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? நாங்களும் உங்களைப்போலப் பாடுள்ள மனுஷர்தானே; . . . என்றார்கள்.” (அப்போஸ்தலர் 14:8-15) மனத்தாழ்மையுள்ள இப்படிப்பட்ட கிறிஸ்தவர்கள் மனிதரிடமிருந்து புகழை ஏற்கவில்லை.
18. மனத்தாழ்மையுடைய வல்லமைவாய்ந்த ஒரு தூதன் யோவானிடம் என்ன சொன்னார்?
18 அப்போஸ்தலன் யோவானுக்கு ‘இயேசு கிறிஸ்துவினால் ஒரு வெளிப்படுத்துதல்’ தூதன் மூலம் அனுப்பப்பட்டது. (வெளிப்படுத்துதல் 1:1) ஒரு தூதனுக்கு இருந்த வல்லமையின் காரணமாக, அப்போஸ்தலன் யோவான் ஏன் வியப்படைந்தார் என்பதை நாம் புரிந்துகொள்ள முடிகிறது. ஏனெனில் ஒரே இரவில் ஒரே தூதன் 1,85,000 அசீரியர்களைக் கொன்றாரே! (2 இராஜாக்கள் 19:35) யோவான் சொல்கிறார்: “நான் கேட்டுக் கண்டபோது, இவைகளை எனக்குக் காண்பித்த தூதனை வணங்கும்படி அவன் பாதத்தில் விழுந்தேன். அதற்கு அவன்: நீ இப்படிச் செய்யாதபடிக்குப் பார்; உன்னோடும் உன் சகோதரரோடும் . . . நானும் ஒரு ஊழியக்காரன்; தேவனைத் தொழுதுகொள் என்றான்.” (வெளிப்படுத்துதல் 22:8, 9) வலிமைமிக்க இந்தத் தூதனுக்கு எவ்வளவு மனத்தாழ்மை!
19, 20. வெற்றிபெற்ற ரோம படைத்தலைவர் ஆணவத்துக்கும் இயேசுவின் மனத்தாழ்மைக்குமுள்ள வேறுபாட்டைக் குறிப்பிடுங்கள்.
19 மனத்தாழ்மைக்கு இயேசு மிகச் சிறந்த முன்மாதிரியாக இருந்தார். அவர் கடவுளுடைய ஒரே பேறான குமாரனாகவும், கடவுளுடைய பரலோக ராஜ்யத்தின் எதிர்கால அரசராகவும் இருந்தார். அத்தகையவராக அவர் தம்மை ஜனங்களுக்கு வெளிப்படுத்தினபோது, ரோம ஆட்சிக்காலங்களில் வெற்றிசிறந்த படைத் தலைவர்கள் செய்ததைப் போல் அவர் செய்யவில்லை. அவர்களுக்கென்றே பிரமாண்டமான ஊர்வலம் நடத்தப்பட்டது. பொன்னாலும் தந்தத்தாலும் அலங்கரிக்கப்பட்டு, வெண் குதிரைகளாலோ, அல்லது யானைகள், சிங்கங்கள், புலிகளாலோகூட இழுக்கப்பட்ட இரதங்களில் அவர்கள் சவாரி சென்றார்கள். இந்த ஊர்வலங்களில், கொள்ளைப் பொருட்களால் நிறைந்த வண்டிகளோடும், போர் காட்சிகளை விவரிக்கும் பெரும்பெரும் அலங்கார வண்டிகளோடும் இசைப் பாடகர்கள் வெற்றிப் பாடல்களைப் பாடிச்சென்றார்கள். மேலும், சிறைப்பிடிக்கப்பட்ட அரசர்களும் பிரபுக்களும் படைத்தலைவர்களும் அவர்களுடைய குடும்பங்களோடு கொண்டுசெல்லப்பட்டார்கள். இவர்களை இழிவுபடுத்துவதற்காக, நிர்வாணமாக கொண்டு செல்லப்பட்டார்கள். இந்தச் சம்பவங்களில் அகம்பாவமும் ஆணவமுமே தலைதூக்கியிருந்தது.
20 இயேசு தம்மை முன்வந்து அளித்த முறையோடு இதை சற்று வேறுபடுத்திப் பாருங்கள். தம்மைப் பற்றிய தீர்க்கதரிசனத்தை நிறைவேற்றுவதற்கு அவர் தம்மை மனத்தாழ்மையோடு கீழ்ப்படுத்த மனமுள்ளவராக இருந்தார். தீர்க்கதரிசனம் இவ்வாறு முன்னறிவித்தது: “இதோ, உன் ராஜா உன்னிடத்தில் வருகிறார்; அவர் நீதியுள்ளவரும் இரட்சிக்கிறவரும் தாழ்மையுள்ளவரும், கழுதையின்மேலும் . . . ஏறிவருகிறவருமாயிருக்கிறார்.” பொதி சுமக்கும் விலங்கின்மேல் அவர் தாழ்மையுடன் சவாரி சென்றார். சிறப்பு வாய்ந்த குதிரைகளால் இழுக்கப்பட்ட ஓர் இரதத்தில் அல்ல. (சகரியா 9:9; மத்தேயு 21:4, 5) உண்மையிலேயே மனத்தாழ்மையுள்ளவரும், பணிவுள்ளவரும், அன்புள்ளவரும், பரிவுள்ளவரும், இரக்கமுள்ளவருமாக இருக்கிற இயேசுவை புதிய உலகில் பூமி முழுவதற்கும் யெகோவாவால் நியமிக்கப்பட்ட அரசராகக் கொண்டிருப்பதில், மனத்தாழ்மையுள்ள ஜனங்கள் எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறார்கள்!—ஏசாயா 9:6, 7; பிலிப்பியர் 2:5-8.
21. மனத்தாழ்மை எதைக் குறிப்பிடுகிறதில்லை?
21 இயேசுவும் பேதுருவும் பவுலும் பைபிள் காலங்களில் விசுவாசமுள்ளவர்களாக இருந்த மற்ற ஆண்களும் பெண்களும் மனத்தாழ்மை காட்டிய இந்த உண்மை, தாழ்மையாயிருப்பது பலவீனம் என்ற எண்ணத்தைத் தவறென விலக்குகிறது. மாறாக அது, ஒருவரின் மன பலத்தையே காட்டுகிறது. ஏனெனில் இவர்கள் தைரியமும் ஆர்வமும் உள்ளோராக இருந்தார்கள். சிறந்த மனோபலத்துடனும் ஒழுக்க பலத்துடனும் கடும் துன்பங்களைச் சகித்தார்கள். (எபிரெயர் 11-ஆம் அதிகாரம்) இன்று யெகோவாவின் ஊழியர்கள் மனத்தாழ்மையுள்ளவர்களாக இருக்கையில், அதைப்போன்ற பலமே அவர்களுக்கும் கிடைக்கும். ஏனெனில் தாழ்மையுள்ளவர்களை கடவுள் தம்முடைய வல்லமைவாய்ந்த பரிசுத்த ஆவியைக்கொண்டு ஆதரிக்கிறார். ஆகவே, நாம் இவ்வாறு ஊக்குவிக்கப்படுகிறோம்: “நீங்களெல்லாரும் ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்து, மனத்தாழ்மையை அணிந்துகொள்ளுங்கள்; பெருமையுள்ளவர்களுக்கு தேவன் எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார். ஆகையால், ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள்.”—1 பேதுரு 5:5, 6; 2 கொரிந்தியர் 4:7.
22. அடுத்த கட்டுரையில் எது ஆலோசிக்கப்படும்?
22 கடவுளுடைய ஊழியர்கள் பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டிய மற்றொரு அம்சமும் மனத்தாழ்மைக்கு இருக்கிறது. அது, சபைகளில் அன்பையும் ஒத்துழைப்பையும் வளர்க்க பேரளவாய் உதவும் ஒன்று. நிச்சயமாகவே, அது மனத்தாழ்மைக்குரிய இன்றியமையாத ஒரு முக்கிய அம்சம். இது அடுத்தக் கட்டுரையில் ஆலோசிக்கப்படும்.
ஞாபகத்திற்காக
◻ இந்த உலக மனப்பான்மையை விவரியுங்கள்.
◻ மனத்தாழ்மையுள்ளோருக்கு யெகோவா எவ்வாறு தயவுகூருகிறார்?
◻ ஏன் மனத்தாழ்மையைக் கற்க வேண்டும்?
◻ மனத்தாழ்மைக்கு பைபிளில் குறிப்பிட்டுள்ள சில உதாரணங்கள் யாவை?
[பக்கம் 15-ன் படம்]
“நீ இப்படிச் செய்யாதபடிக்குப் பார்; . . . நானும் ஒரு ஊழியக்காரன்” என தேவதூதன் யோவானிடம் சொன்னார்