பைபிளிலிருந்து கற்றுக்கொள்ளுங்கள்
நியாயத்தீர்ப்பு நாளில் என்ன நடக்கும்?
உங்கள் மனதில் வரும் சில கேள்விகளைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம். அந்தக் கேள்விகளுக்கான பதில்கள் பைபிளில் எங்கே இருக்கின்றன என்றும் பார்ப்போம். கூடுதல் விவரங்களைத் தெரிந்துகொள்ள தயங்காமல் யெகோவாவின் சாட்சிகளைக் கேளுங்கள்.
1. நியாயத்தீர்ப்பு நாள் என்றால் என்ன?
வலது பக்கத்தில் இருக்கும் படம் காட்டுகிறபடி, நியாயத்தீர்ப்பு நாளில் கோடிக்கணக்கான ஆத்துமாக்கள் கடவுளுடைய சிம்மாசனத்துக்கு முன்பு நியாயந்தீர்க்கப்படுவார்கள் என்று நிறைய பேர் நினைக்கிறார்கள். நல்லது செய்தவர்கள் பரலோகத்துக்குப் போவார்கள் என்றும், கெட்டது செய்தவர்கள் நரகத்தில் வாட்டி வதைக்கப்படுவார்கள் என்றும் நம்புகிறார்கள். ஆனால், மக்களை அநீதியிலிருந்து காப்பாற்றுவதுதான் நியாயத்தீர்ப்பு நாளின் நோக்கம் என்று பைபிள் சொல்கிறது. (சங்கீதம் 96:13) இயேசுவைத்தான் நீதிபதியாகக் கடவுள் நியமித்திருக்கிறார். இயேசு மனிதர்களுக்கு நீதி வழங்குவார்.—ஏசாயா 11:1-5-ஐயும் அப்போஸ்தலர் 17:31-ஐயும் வாசியுங்கள்.
2. நியாயத்தீர்ப்பு நாள் எப்படி மனிதர்களுக்கு நீதி வழங்கும்?
முதல் மனிதன் ஆதாம் வேண்டுமென்றே கடவுளுக்குக் கீழ்ப்படியாமல் போனதால், மனிதர்கள் எல்லாருக்குமே பாவமும் துன்பமும் மரணமும் வந்தது. (ரோமர் 5:12) இந்த அநீதியைச் சரிசெய்ய, இறந்துபோன கோடிக்கணக்கான ஆட்களை இயேசு மறுபடியும் உயிரோடு கொண்டுவருவார். அவருடைய ஆயிர வருஷ ஆட்சியில் இது நடக்கும் என்று வெளிப்படுத்துதல் புத்தகம் சொல்கிறது.—வெளிப்படுத்துதல் 20:4, 11, 12-ஐ வாசியுங்கள்.
உயிரோடு வருகிறவர்கள் தாங்கள் இறப்பதற்கு முன்பு செய்த செயல்களின் அடிப்படையில் நியாயந்தீர்க்கப்பட மாட்டார்கள். உயிரோடு வந்த பிறகு செய்யும் செயல்களின் அடிப்படையில்தான் நியாயந்தீர்க்கப்படுவார்கள். வெளிப்படுத்துதல் 20-ஆம் அதிகாரம் சொல்லும் “சுருள்களில்” உள்ள விஷயங்களுக்கு அப்போது அவர்கள் கீழ்ப்படிய வேண்டியிருக்கும். (ரோமர் 6:7) “நீதிமான்களும் அநீதிமான்களும்” மறுபடியும் உயிரோடு வந்து, கடவுளைப் பற்றித் தெரிந்துகொள்ளும் வாய்ப்பைப் பெறுவார்கள் என்று அப்போஸ்தலன் பவுல் சொன்னார்.—அப்போஸ்தலர் 24:15-ஐ வாசியுங்கள்.
3. நியாயத்தீர்ப்பு நாள் என்ன நல்ல விளைவுகளை ஏற்படுத்தும்?
யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொள்ளவும் அவருக்குச் சேவை செய்யவும் வாய்ப்பு கிடைக்காமல் இறந்துபோனவர்களுக்கு அந்த வாய்ப்பு கொடுக்கப்படும். அவர்கள் நல்லது செய்தால் ‘வாழ்வு பெறும்படி உயிர்த்தெழுப்பப்பட்டவர்களாக’ இருப்பார்கள். ஆனால், உயிரோடு எழுப்பப்படும் சிலர் யெகோவாவுக்குக் கீழ்ப்படிய விரும்ப மாட்டார்கள். அப்படிப்பட்டவர்கள் ‘நியாயத்தீர்ப்பு பெறும்படி உயிர்த்தெழுப்பப்பட்டவர்களாக’ இருப்பார்கள்.—யோவான் 5:28, 29-ஐயும் ஏசாயா 26:10; 65:20-ஐயும் வாசியுங்கள்.
நியாயத்தீர்ப்பு நாளின் முடிவில், அதாவது ஆயிர வருஷங்களின் முடிவில், யெகோவா எல்லா மனிதர்களையும் பரிபூரண நிலைக்குக் கொண்டுவந்திருப்பார். (1 கொரிந்தியர் 15:24-28) யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்து நடக்கிறவர்களுக்கு எவ்வளவு அருமையான ஒரு எதிர்காலம் காத்திருக்கிறது! ஆயிர வருஷங்களுக்குப் பிறகு கடைசியாக ஒரு சோதனை இருக்கும். அவ்வளவு காலமாக அடைத்து வைக்கப்பட்டிருந்த பிசாசாகிய சாத்தான் விடுதலை செய்யப்படுவான். யெகோவாவை வணங்குகிறவர்களைத் தன் பக்கம் இழுத்துக்கொள்ள அவன் மறுபடியும் முயற்சி செய்வான். ஆனால், அவன் பக்கம் சேராமல் யெகோவாவுக்கு உண்மையாக இருப்பவர்கள் இந்தப் பூமியில் என்றென்றும் சந்தோஷமாக வாழ்வார்கள்.—ஏசாயா 25:8-ஐயும் வெளிப்படுத்துதல் 20:7-9-ஐயும் வாசியுங்கள்.
4. பைபிள் சொல்லும் வேறொரு நியாயத்தீர்ப்பு நாள் எது, அதனால் கிடைக்கும் நன்மை என்ன?
இந்த உலகத்துக்கு வரும் முடிவும் ‘நியாயத்தீர்ப்பு நாளாக’ இருக்கும் என்று பைபிள் சொல்கிறது. நோவாவின் காலத்தில் எப்படிப் பெருவெள்ளம் திடீரென்று வந்து கெட்டவர்கள் எல்லாரையும் அழித்ததோ அதேபோலத்தான் இந்த நியாயத்தீர்ப்பு நாளும் திடீரென்று வரும். ரொம்ப சீக்கிரத்தில், கெட்டவர்கள் எல்லாரும் அழிந்துபோவார்கள்! அதன் பிறகு, “நீதி குடியிருக்கிற” புதிய பூமியில் நாம் எல்லாரும் சந்தோஷமாக வாழ்வோம்.—2 பேதுரு 3:6, 7, 13-ஐ வாசியுங்கள்.