உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • w98 6/1 பக். 5-7
  • பொறுமையோடு காத்திருங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பொறுமையோடு காத்திருங்கள்
  • காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1998
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • தெளிவாக சிந்தியுங்கள்
  • கடவுள் தாமதிக்கிறதில்லை
  • வார்த்தைகளைக் காட்டிலும் செயல்கள் சப்தமாக பேசும்
  • முன்னமே அறிந்திருத்தல்
  • ‘தேவனுடைய அன்பிலே உங்களைக் காத்துக்கொள்ளுங்கள்’
  • யெகோவாவின் நாளை மனதில் இடைவிடாது வைத்துவாருங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1997
  • நம்முடைய அருமையான விசுவாசத்தை உறுதியாய்ப் பற்றியிருப்போமாக!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1997
  • பைபிள் புத்தக எண் 61—2 பேதுரு
    ‘வேதாகமம் முழுவதும் கடவுளால் ஏவப்பட்டது பயனுள்ளது’
  • மன்னிக்கக் கற்றுக்கொண்டார்
    இவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்
மேலும் பார்க்க
காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1998
w98 6/1 பக். 5-7

பொறுமையோடு காத்திருங்கள்

‘புலி வராதபோதே ‘புலி வருது!’ ‘புலி வருது!’ அல்லது நரி வராதபோதே ‘நரி வருது!’ ‘நரி வருது!’ என்று அடிக்கடி பொய் கூச்சலிட்டுக் கொண்டிருந்தான் ஒரு மேய்ப்பன். ஆனால் அதற்குப் பிற்பாடு உண்மையிலேயே உதவிக்காக கூச்சலிட்டபோது அது அசட்டை செய்யப்பட்டதை அவன் அறிந்துகொண்டான். அதேபோல் இன்று அநேகர் யெகோவாவின் நாள் சமீபித்துள்ளதை அலட்சியம் செய்கின்றனர், ஏனெனில் அவர்கள் போலியாய் நிரூபித்துள்ள எச்சரிப்புகள் பலவற்றைக் கேட்டிருக்கின்றனர். எந்த எச்சரிப்பு உண்மையானது என்பதை கண்டறிந்து அதை கவனத்தில் எடுத்துக்கொள்ள தவறும் அநேகர் கடவுளுடைய பெரும் சத்துருவாகிய சாத்தான், அந்தப் போலி ‘ஒளியின் தூதனுடைய’ கைப்பாவைகளாய் இருக்கின்றனர்.—2 கொரிந்தியர் 11:14.

யெகோவாவை சில காலமாக சேவித்திருப்போருக்கும்கூட ஆபத்துக்களை சரியாக அறிந்துகொள்ளாத, திருப்தியான மனநிலையுடன் இருப்பது ஆபத்தானதாயிருக்கும். ஏன்? முதல் நூற்றாண்டில் அப்போஸ்தலனாகிய பேதுரு கொடுத்த எச்சரிப்பை சிந்தித்துப் பாருங்கள்.

தெளிவாக சிந்தியுங்கள்

பேதுருவின் ஏவப்பட்டு எழுதப்பட்ட இரண்டாவது கடிதம் ஆரம்பகால கிறிஸ்தவர்களுக்கு ஒரு நினைப்பூட்டுதலாய் இருந்தது, அது நமக்கும்கூட அவ்வாறே உள்ளது. “பிரியமானவர்களே, இந்த இரண்டாம் நிருபத்தை இப்பொழுது உங்களுக்கு எழுதுகிறேன். . . . இந்த நிருபங்களினால் உங்கள் உண்மையான மனதை நினைப்பூட்டி எழுப்புகிறேன்” என்று அவர் எழுதுகிறார். (2 பேதுரு 3:1, 2) பேதுரு இவ்வாறு கவலைகொள்வதற்கு அவருக்கு என்ன காரணம் இருந்தது? பரிகாசக்காரர் இருப்பதைக் குறித்து பேதுரு வலியுறுத்திக் கூறுகிறார்; அவர்கள் செய்யும் பரிகாசம் கடவுளுடைய ஊழியர்கள் வாழும் காலத்தில் தேவைப்படும் அவசரத்தன்மையை அழித்துப் போடுகிறது. கேலியாகப் பேசுகிறவர்களால் ஏமாற்றப்படாதவாறு எச்சரிக்கையாயிருப்பதற்கு இதுவே காலம். இவ்வாறு பேதுரு ‘பரிசுத்த தீர்க்கதரிசிகளால் முன்சொல்லப்பட்ட வார்த்தைகளை நினைவுகூரும்படி’ தன் வாசகரை ஊக்குவிக்கிறார். (2 பேதுரு 3:2; அப்போஸ்தலர் 3:22, 23) தீர்க்கதரிசிகள் என்ன சொல்லியிருந்தார்கள்?

கடவுளுடைய நியாயத்தீர்ப்புகள் எவ்வாறு துன்மார்க்கத்துக்கு ஒரு முடிவை கொண்டு வந்தன என்பதை கடவுளுடைய உண்மையுள்ள ஊழியர்கள் பல சந்தர்ப்பங்களில் கவனத்துக்கு கொண்டு வந்திருக்கின்றனர். பூமி தீமையால் நிறைந்திருந்தபோது, கடவுள் குறுக்கிடுவதற்கு நோவாவின் நாளைய ஜலப்பிரளயத்தை வழிவகையாக பயன்படுத்தினார் என்று பேதுரு தன் வாசகருக்கு நினைப்பூட்டுகிறார். அந்தப் பலத்த மழையால் ஏற்பட்ட பெருவெள்ளம் அந்தச் சமயத்தில் இருந்த உலகத்தை சக்திவாய்ந்த முறையில் முடிவுக்கு கொண்டு வந்தது. ஆனால் கடவுள் நோவாவையும் அவருடைய குடும்பத்தையும் அவர்களோடுகூட “சகலவித மாம்சமான” உயிருள்ள பிராணிகளின் ஒவ்வொரு வகையையும் பேழையில் வைத்து பாதுகாத்தார். உலகமுழுவதிலுமுள்ள பழங்கதைகள் பைபிள் பதிவின் உண்மைத்தன்மைக்கு சாட்சி பகருகின்றன. a—ஆதியாகமம் 6:19; 2 பேதுரு 3:5, 6.

பேதுரு அந்தக் கடவுளுடைய குறுக்கிடுதலை, சில ஜனங்கள் ‘அறியாதிருக்கும் இந்த ஒரு காரியம்’ என்று சொல்கிறார். இன்னும் மற்றவர்கள் அந்நாளில் இருந்த பரிகாசக்காரரால் சுயதிருப்தியுள்ள மந்தமான நிலைக்கு கொண்டு வரப்பட்டனர். ஆனால் யெகோவா ஏற்கெனவே செய்திருப்பவற்றை நாம் மறந்துவிடக்கூடாது. பேதுரு நமக்கு இவ்வாறு சொல்கிறார்: “இப்பொழுது இருக்கிற வானங்களும் பூமியும் அந்த வார்த்தையினாலேயே அக்கினிக்கு இரையாக வைக்கப்பட்டு, தேவபக்தியில்லாதவர்கள் நியாயந்தீர்க்கப்பட்டு அழிந்துபோகும் நாள்வரைக்கும் காக்கப்பட்டிருக்கிறது.” (2 பேதுரு 3:7) ஆம், கடவுள் மறுபடியும் குறுக்கிடப் போகிறார்.

கடவுள் தாமதிக்கிறதில்லை

ஏற்கெனவே ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கடந்துவிட்டிருக்கின்றன. மனிதவர்க்கத்தின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு கடவுள் ஏன் இத்தனை நீண்ட காலம் காத்திருக்கிறார்? பேதுரு மறுபடியும் மற்றொரு உண்மையின் பேரில் கவனத்தை ஊன்ற வைக்கிறார். அவர் இவ்வாறு சொல்கிறார்: “பிரியமானவர்களே, கர்த்தருக்கு ஒரு நாள் ஆயிரம்வருஷம் போலவும், ஆயிரம் வருஷம் ஒருநாள் போலவும் இருக்கிறதென்கிற இந்த ஒரு காரியத்தை நீங்கள் அறியாதிருக்க வேண்டாம்.” (2 பேதுரு 3:8) நேரத்தைப் பற்றிய யெகோவாவின் நோக்குநிலை நம் நோக்குநிலையிலிருந்து வித்தியாசப்படுகிறது. நித்தியமான கடவுளுக்கு, ஆதாமின் சிருஷ்டிப்பிலிருந்து இன்று வரையாக உள்ள காலப்பகுதி ஒரு வாரத்திற்குக்கூட சமமாயில்லை. ஆனால் காலத்தைப் பற்றி எப்படிப்பட்ட நோக்குநிலை நமக்கு இருந்தாலும், கடந்து செல்லும் ஒவ்வொரு ஆயிரமாண்டுகளும் ஒவ்வொரு நாளும் யெகோவாவின் நோக்கம் நிறைவேற்றமடையும் சமயத்திற்கு சமீபத்தில் நம்மை கொண்டு வருகிறது.

“ஆவலோடு எதிர்பார்க்கும் இடைக்காலம் ஒரு யுகம்போல் தோன்றும்” என்ற பழமொழி, வெறுமனே ஒரு நிகழ்ச்சிக்காக காத்திருப்பது அது நிகழ்வதற்குள் காலம் தாழ்த்துவதைப் போல் தோன்றலாம் என்று பொருள்படுகிறது. என்றபோதிலும், ‘தேவனுடைய நாள் சீக்கிரமாய் வரும்படிக்கு மிகுந்த ஆவலோடே காத்திருங்கள்’ என்று பேதுரு சிபாரிசு செய்கிறார். (2 பேதுரு 3:12) கடவுளுடைய குறுக்கிடுதல் நெருங்கி வருவதைக் குறித்து நம்மை விழிப்புள்ளவர்களாக வைக்கும் மனநிலையை நாம் எவ்வாறு வளர்க்கலாம்?

வார்த்தைகளைக் காட்டிலும் செயல்கள் சப்தமாக பேசும்

பேதுரு செயல்களின் பேரிலும் நடவடிக்கைகளின் பேரிலும் கவனத்தை ஒருமுகப்படுத்துகிறார். அவர் ‘பரிசுத்த நடத்தைக்குரிய செயல்களையும்’ அதோடுகூட ‘தேவபக்திக்குரிய செயல்களையும்’ குறிப்பிடுகிறார். (2 பேதுரு 3:11) இவை எவற்றை உள்ளடக்குகின்றன?

கடவுளுடைய உண்மையான ஊழியர் கடவுளுக்குப் பிரியமான விதத்தில் செயல்படுகிறார். அப்படிப்பட்ட உண்மை வணக்கத்தாரின் விசுவாசம் அவருடைய நடத்தையில் வெளிக்காட்டப்படுகிறது. கடவுளையும் அவருடைய வாக்குறுதிகளையும் நம்புவதாக வெறுமனே பேசுபவர்களிடமிருந்து இது அவரை வேறுபடுத்திக் காட்டுகிறது. யெகோவாவின் சாட்சிகளுடைய பொது ஊழியம் அவர்களை வித்தியாசமானவர்களாக பிரித்து வைப்பதை நீங்கள் ஒருவேளை கவனித்திருப்பீர்கள். பைபிளில் வர்ணிக்கப்பட்டிருக்கும் கடவுளுடைய வாக்குறுதிகளுக்கு உங்கள் கவனத்தைத் திருப்புவதற்காக அவர்கள் உங்களை வீட்டில் வந்து சந்திக்கின்றனர். ஆனால் அவர்கள் எங்கெல்லாம் மக்களை சந்திக்கிறார்களோ அங்கெல்லாம்கூட தங்கள் எதிர்பார்ப்புகளையும் நம்பிக்கைகளையும் குறித்து சாட்சி பகருகின்றனர்.

தன் விசுவாசத்தை மற்றவர்களிடம் அறிவிப்பதில் தன்னை சுறுசுறுப்புடன் வைத்துக்கொள்ளும் சாட்சி, தன் சொந்த நம்பிக்கைகளை உறுதிப்படுத்திக்கொண்டு அதைப் பலப்படுத்திக் கொள்கிறார். அந்த நம்பிக்கைகளை வார்த்தைகளால் வெளிப்படுத்திக் கூறுகையில் அவை மனதில் ஆழப் பதிகிறது, அதே சமயத்தில் உள்ளான சந்தோஷத்தையும் திருப்தியையும் தருகிறது. நாம் கடவுளுடைய ராஜ்யத்தின் நற்செய்தியை அறிவிக்கையில் யெகோவாவையும்கூட பிரியப்படுத்துகிறோம். பேதுருவின் உடன் அப்போஸ்தலனாகிய பவுல் அறிவிக்கிறபடி, ‘தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தை மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவரல்லவே’ என்பதை நாம் அறிந்திருக்கிறோம்.—எபிரெயர் 6:10; ரோமர் 10:9, 10.

இந்தத் தற்போதைய துன்மார்க்க ஒழுங்குமுறை முடிவடையும் தறுவாயில் ராஜ்ய நற்செய்தியை பரப்புவதில் அதிகமாக ஆர்வம் காண்பிப்பதால் என்ன பலன் கிடைத்திருக்கிறது? யெகோவாவோடு எப்படி ஒரு நெருங்கிய உறவுக்குள் வருவது, அவருடைய தகுதியற்ற தயவிலிருந்து எவ்விதம் பயனடைவது, எவ்வாறு ஒரு பரதீஸிய பூமியில் நித்திய ஜீவனுக்கான எதிர்பார்ப்பில் மகிழ்ச்சி காண்பது ஆகியவற்றை லட்சக்கணக்கான நேர்மை இருதயமுள்ள ஆட்கள் கற்றுக்கொண்டு வருகின்றனர்.

முன்னமே அறிந்திருத்தல்

யெகோவா தேவன் தமக்குத் தகுதியான சமயத்தில் குறுக்கிடுவார் என்பதை நாம் பைபிளிலிருந்து அறிந்திருந்தாலும், பேதுரு அளிக்கும் ஒரு கூடுதலான எச்சரிக்கைக்கு நாம் கவனம் செலுத்துவது அவசியம். “இவைகளை முன்னமே நீங்கள் அறிந்திருக்கிறபடியால், அக்கிரமக்காரருடைய வஞ்சகத்திலே நீங்கள் இழுப்புண்டு உங்கள் உறுதியிலிருந்து விலகி விழுந்துபோகாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்.”—2 பேதுரு 3:17.

கடவுளுடைய குறுக்கிடுதல் தாமதிப்பது போல் தோன்றுவதால் பலமான விசுவாசம் இல்லாத சிலர் உற்சாகம் இழந்துவிடக்கூடும் என்பதை நிச்சயமாக யெகோவா முன்னமே அறிந்திருந்தார். தேவபக்தியற்ற மக்களின் செல்வாக்கு தம் உண்மையுள்ள ஊழியர்களை கறைப்படுத்தக்கூடும் அல்லது கடவுளுடைய பெயர் பரிசுத்தப்படுத்தப்படும் சமயம் நெருங்கி விட்டது என்ற அவர்களுடைய நம்பிக்கையை அழித்தாவது போடும் என்பதையும்கூட அவர் அறிந்திருந்தார். இந்தக் கடைசி நாட்களில் உறுதியான நிலையிலிருந்து இடறி விழுந்து விடுவது எவ்வளவு வருந்தத்தக்கதாய் இருக்கும்!

யெகோவா என்ன செய்வார் என்பதைக் குறித்து மனதில் சந்தேகங்களுக்கு இடங்கொடுப்பதற்கோ அல்லது நிச்சயமில்லாமல் இருப்பதற்கோ இதுவல்ல காலம். (எபிரெயர் 12:1) மாறாக, யெகோவாவின் பொறுமையால் விளைந்த பலனின் பேரில் போற்றுதலை வளர்ப்பதற்கான காலம் இதுவே; சர்வதேச திரள்கூட்டத்தாரின் பாகமாக ஆகும் லட்சக்கணக்கானோர் இரட்சிப்படைவதற்கான எதிர்பார்ப்பும் வரப்போகும் மிகுந்த உபத்திரவத்தை தப்பிப்பிழைப்பதற்கு ஆவலாக காத்திருப்பதுமே பலனாக இருந்திருக்கிறது. (வெளிப்படுத்துதல் 7:9, 14) பேதுரு இவ்வாறு புத்திமதி கூறுகிறார்: “நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையிலும் அவரை அறிகிற அறிவிலும் வளருங்கள். அவருக்கு இப்பொழுதும் என்றென்றைக்கும் மகிமையுண்டாவதாக.”—2 பேதுரு 3:18.

‘தேவனுடைய அன்பிலே உங்களைக் காத்துக்கொள்ளுங்கள்’

ராஜ்ய பிரசங்கிப்பு வேலையில் சுறுசுறுப்பாக ஈடுபடுவதும், வணக்கத்துக்கான கிறிஸ்தவ கூட்டங்களில் தவறாமல் ஆஜராவதும், கடவுளுடைய வார்த்தையை படிப்பதும் நமக்கு பாதுகாப்பை அளிக்கிறது. இன்றைய துன்மார்க்க ஒழுங்கில் படுமோசமாகிக்கொண்டே செல்லும் நிலைமைகளைக் குறித்து அளவுக்குமீறி கவலைப்படுவதற்கு நமக்கு நேரம் இருக்காது. பயங்களும் கவலைகளும் மெய் கிறிஸ்தவர்களின் வாழ்க்கையில் மேலோங்கியிருக்க வேண்டிய அவசியமில்லை. (1 கொரிந்தியர் 15:58) நாம் யெகோவாவை சேவிப்பதில் எவ்வளவு சுறுசுறுப்பாயிருக்கிறோமோ அவ்வளவு வேகமாய் நேரமும் கடந்து செல்கிறது.

பேதுருவோடு சமகாலத்தில் வாழ்ந்துவந்த இயேசுவின் ஒன்றுவிட்ட சகோதரனாகிய யூதா இவ்வாறு அறிவுரை கூறுகிறார்: “நீங்களோ பிரியமானவர்களே, உங்கள் மகா பரிசுத்தமான விசுவாசத்தின் மேல் உங்களை உறுதிப்படுத்திக்கொண்டு, பரிசுத்தஆவிக்குள் ஜெபம்பண்ணி, தேவனுடைய அன்பிலே உங்களைக் காத்துக்கொண்டு, நித்திய ஜீவனுக்கேதுவாக நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினுடைய இரக்கத்தைப் பெறக் காத்திருங்கள்.” (யூதா 20, 21) ஜெபத்தில் இடைவிடாது தரித்திருப்பதன் மூலம் இருதயத்தில் வளர்க்கப்படும் உடன்பாடான மனநிலையின் முக்கியத்துவத்தை கவனியுங்கள். (1 தெசலோனிக்கேயர் 5:17) யூதா பின்பு கூடுதலாக சொல்கிறார்: “அல்லாமலும், நீங்கள் பகுத்தறிவுள்ளவர்களாயிருந்து, சிலருக்கு இரக்கம் பாராட்டி, சிலரை அக்கினியிலிருந்து இழுத்து விட்டு, பயத்தோடே இரட்சித்து, மாம்சத்தால் கறைப்பட்டிருக்கிற வஸ்திரத்தையும் வெறுத்துத் தள்ளுங்கள்.” (யூதா 22, 23) இந்தக் கடினமான காலங்களில் ஒருவரையொருவர் பலப்படுத்துவது எவ்வளவு இன்றியமையாதது! இன்னும் முடிவுறாமலிருக்கும் “இரட்சணிய நாளை” பயன்படுத்தி, இன்று ஒழுக்கரீதியில் சீர்கெட்டிருக்கும் உலகில் பரவலாய்க் காணப்படும் “காமவிகாரத்துக்கேதுவாகப்” புரட்டப்படும் சோதனைக்குள் விழுந்து போகாமல் இருப்பது எவ்வளவு முக்கியமானது.—யூதா 4; 2 கொரிந்தியர் 6:1, 2.

பேதுரு, பவுல், யூதா ஆகியோரின் அன்பான புத்திமதியை ஏற்றுக்கொள்வதன் மூலமும் கடவுளுடைய சேவையில் அதிகத்தைச் செய்து சுறுசுறுப்பாக இருப்பதன் மூலமும் யெகோவா குறுக்கிடும் வரை நீங்கள் பொறுமையோடு காத்திருக்கலாம். நீங்கள் அவ்வாறு காத்திருப்பீர்களா?

நித்திய ஜீவனுக்கான சிருஷ்டிகரின் வாக்குறுதியில் உங்கள் விசுவாசத்தைப் பலப்படுத்துவதற்கு உதவிட உங்கள் பிராந்தியத்திலுள்ள சாட்சிகளோடு தொடர்புகொள்ள தயங்காதீர்கள். நெருங்கி வரும் மிகுந்த உபத்திரவத்தில் முடிவடையப் போகும் இனி ஒருபோதும் செய்யப்படப்போகாத உலகளாவிய சாட்சி கொடுக்கும் வேலையில் பங்குகொள்ள தகுதியுள்ளவராவதற்கு என்ன தேவைப்படுகிறது என்பதைக் கற்றுக்கொள்ளுங்கள். (மாற்கு 13:10) நீங்கள் அப்போது யெகோவா வாக்குறுதியளிக்கும் நீதியுள்ள புதிய உலகில் வாழும் எதிர்பார்ப்பை பெறுவீர்கள். (2 பேதுரு 3:13) அவருடைய நினைப்பூட்டுதல்களுக்கு கவனம் செலுத்துங்கள்! பொறுமையோடு காத்திருங்கள்! சுறுசுறுப்பாயிருங்கள்!

[அடிக்குறிப்பு]

a உவாட்ச்டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டியால் பிரசுரிக்கப்பட்ட பைபிள்—கடவுளுடைய வார்த்தையா அல்லது மனிதனுடையதா? என்ற புத்தகத்தில் பக்கம் 116-ஐ தயவுசெய்து பாருங்கள்.

[பக்கம் 7-ன் படம்]

பரதீஸைப் பற்றிய கடவுளுடைய வாக்குறுதிகளை இப்போதே கற்றறியுங்கள்

[பக்கம் 5-ன் படத்திற்கான நன்றி]

நரி: Animals/Jim Harter/Dover Publications, Inc.; இளம் மேய்ப்பன்: Children: A Pictorial Archive from Nineteenth-Century Sources/Grafton/Dover Publications, Inc.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்