யெகோவாவுக்குக் காத்திருப்பதில் மகிழ்ச்சி
நன்கு கனியாத ஒரு பழத்தை நீங்கள் எப்போதாவது சாப்பிட்டிருக்கிறீர்களா? நீங்கள் அதை சுவைத்து ஏமாற்றம் அடைந்திருப்பீர்கள் என்பது நிச்சயம். ஒரு காய் கனிந்து பழமாவதற்குக் காலம் எடுக்கிறது; என்றாலும், அதற்காகக் காத்திருப்பது நன்மையானதே. நாம் காத்திருக்க வேண்டிய வேறுசில சந்தர்ப்பங்களும் இருக்கின்றன, அவையும் நன்மை அளிப்பவையே. “கர்த்தருடைய [“யெகோவாவுடைய,” NW] இரட்சிப்புக்கு நம்பிக்கையோடு காத்திருக்கிறது நல்லது” என பைபிள் சொல்கிறது. (புலம்பல் 3:26; தீத்து 2:13) கிறிஸ்தவர்கள் எவ்வழிகளில் யெகோவாவுக்காகக் காத்திருக்க வேண்டும்? அவருக்காகக் காத்திருப்பதால் நாம் எப்படிப் பலன் அடையலாம்?
கடவுளுக்குக் காத்திருப்பதில் என்ன உட்பட்டிருக்கிறது?
கிறிஸ்தவர்களாகிய நாம் ‘தேவனுடைய நாள் சீக்கிரமாய் வரும்படிக்கு மிகுந்த ஆவலோடே காத்திருக்கிறோம்.’ அவர் ‘தேவபக்தியில்லாதவர்களை அழிக்கையில்’ விடுதலைபெற நாம் எதிர்நோக்கியிருக்கிறோம். (2 பேதுரு 3:7, 12) எல்லா கெட்ட காரியங்களையும் முடிவுக்குக் கொண்டுவர யெகோவாவும் ஆவலாகத்தான் இருக்கிறார்; ஆனால், தம்முடைய பெயர் மகிமைப்படும் விதத்தில் கிறிஸ்தவர்களுக்கு இரட்சிப்பு அளிப்பதற்காக அவர் காத்திருக்கிறார். பைபிள் இவ்வாறு சொல்கிறது: ‘தேவன் தமது கோபத்தைக் காண்பிக்கவும், தமது வல்லமையைத் தெரிவிக்கவும், . . . கிருபாபாத்திரங்கள்மேல் தம்முடைய மகிமையின் ஐசுவரியத்தைத் தெரியப்படுத்தவும் சித்தமாய், அழிவுக்கு எத்தனமாக்கப்பட்ட கோபாக்கினைப் பாத்திரங்கள்மேல் மிகவும் நீடிய சாந்தத்தோடே பொறுமையாயிருக்கிறார்.’ (ரோமர் 9:22, 23) நோவாவின் காலத்தில் செய்ததைப் போலவே, இன்றும் தம்முடைய மக்களைக் காப்பாற்றுவதற்கான சரியான சமயத்தை யெகோவா அறிந்திருக்கிறார். (1 பேதுரு 3:20) ஆகவே, கடவுளுக்காகக் காத்திருப்பதில் அவர் நடவடிக்கை எடுக்கப்போகும் சமயத்திற்காகக் காத்திருப்பது உட்பட்டிருக்கிறது.
யெகோவாவின் நாளுக்காக நாம் காத்திருக்கும்போது, இந்த உலகின் ஒழுக்கநெறிகள் சீரழிந்து வருவதைப் பார்த்து சில சமயங்களில் சோர்ந்து விடுகிறோம். அத்தருணங்களில், கடவுளுடைய தீர்க்கதரிசியான மீகா சொன்ன வார்த்தைகளைச் சிந்தித்துப் பார்ப்பது உற்சாகம் அளிக்கும். “தேசத்தில் பக்தியுள்ளவன் அற்றுப்போனான்; மனுஷரில் செம்மையானவன் இல்லை; . . . நானோவென்றால் கர்த்தரை நோக்கிக்கொண்டு, என் இரட்சிப்பின் தேவனுக்குக் காத்திருப்பேன் [“காத்திருக்கும் மனப்பான்மையைக் காட்டுவேன்,” NW]” என அவர் எழுதினார். (மீகா 7:2, 7) நாம் வளர்த்துக்கொள்ள வேண்டிய “காத்திருக்கும் மனப்பான்மை” என்ன? காத்திருப்பது பெரும்பாலும் பொறுமையைச் சோதிப்பதாய் இருப்பதால், கடவுளுக்காகக் காத்திருக்கையில் நாம் எப்படிச் சந்தோஷத்தைக் காண முடியும்?
காத்திருக்கையில் மகிழ்ச்சி
காத்திருக்கையில் சரியான மனப்பான்மை காட்டுவதை யெகோவாவிடமிருந்து கற்றுக்கொள்ளலாம். அவர் ‘நித்தியானந்த தேவன்’ என்ற நிலையிலிருந்து மாறியதே இல்லை. (1 தீமோத்தேயு 1:11) காத்திருக்கிற அதே சமயத்தில் அவர் மகிழ்ச்சியாகவும் இருக்கிறார்; எப்படி? பரிபூரணராக இருக்கும்படியே அவர் மனிதரைப் படைத்தார்; தம்மை நேசிக்கிறவர்களை மீண்டும் அந்தப் பரிபூரண நிலைக்கு உயர்த்த வேண்டுமென்ற நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக அவர் செயல்பட்டு வருகிறார். (ரோமர் 5:12; 6:23) அப்படிச் செயல்படுகையில், நல்ல பலன்களைக் காண்கிறார்; ஆம், லட்சக்கணக்கானோர் உண்மை மதத்திடம் கவரப்பட்டிருக்கிறார்கள். இயேசு இவ்வாறு சொன்னார்: “என் பிதா இதுவரைக்கும் கிரியைசெய்து வருகிறார், நானும் கிரியைசெய்து வருகிறேன்.” (யோவான் 5:17) மற்றவர்களுக்காகக் காரியங்களைச் செய்வது மகிழ்ச்சிக்கு அடிப்படையாகும். (அப்போஸ்தலர் 20:35) அவ்வாறே உண்மைக் கிறிஸ்தவர்களும் கையைக் கட்டி உட்கார்ந்துகொண்டு சும்மா காத்திருப்பதில்லை. மாறாக, மனிதரைக் குறித்த கடவுளுடைய நோக்கத்தைக் கற்றுக்கொள்ள மற்றவர்களுக்கு உதவி வருகிறார்கள்.
உண்மையுள்ள மக்கள், கடவுள் நடவடிக்கை எடுக்கப்போகும் காலத்திற்காகக் காத்திருக்கும் அதே வேளையில், அவரைத் துதிப்பதில் எப்போதும் திருப்தி கண்டிருக்கிறார்கள். உதாரணமாக, சங்கீதக்காரன் தாவீதை எடுத்துக்கொள்ளுங்கள். அவரை சவுல் ராஜா துன்புறுத்தினார், உற்ற நண்பனே அவரை வஞ்சித்தார், சொந்த மகனே அவருக்குத் துரோகம் செய்தார். இந்த எல்லாச் சந்தர்ப்பங்களிலும், யெகோவாவிடமிருந்து உரிய காலத்தில் விடுதலை கிடைப்பதற்காகக் காத்திருக்கையில் தாவீதால் சந்தோஷமாக இருந்திருக்க முடியுமா? தாவீதால் எழுதப்பட்டிருப்பதாகத் தெரிகிற சங்கீதம் 71-ல் அவர் இவ்வாறு சொல்கிறார்: “நானோ எப்பொழுதும் நம்பிக்கை கொண்டிருந்து [“காத்திருந்து,” NW], மேன்மேலும் உம்மைத் துதிப்பேன். என் வாய் நாள்தோறும் உமது நீதியையும் உமது இரட்சிப்பையும் சொல்லும்.” (சங்கீதம் 71:14, 15) காத்திருக்கையில் பொறுமை இழந்துவிடுவதற்குப் பதிலாக, தாவீது சந்தோஷத்தை வெளிக்காட்டினார்; ஏனெனில், யெகோவாவைத் துதிப்பதில் அவர் மும்முரமாய் ஈடுபட்டார், உண்மை வணக்கத்தில் மற்றவர்களையும் பலப்படுத்தினார்.—சங்கீதம் 71:23.
கால தாமதமாய் வருகிற பஸ்ஸுக்காகக் காத்திருப்பது எரிச்சலுண்டாக்கும்; யெகோவாவுக்காகக் காத்திருப்பது அப்படிப்பட்டதல்ல. இது, பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களாவதைக் கண்டு பெருமைப்படுவதற்குப் பெற்றோர் சந்தோஷத்தோடு காத்திருப்பதைப் போலிருக்கிறது. அவ்வாறு காத்திருக்கையில் பெற்றோர் மும்முரமாய் பாடுபடுகிறார்கள்; பிள்ளைகளுக்குப் பயிற்சி அளிக்கிறார்கள், போதிக்கிறார்கள், சிட்சை அளிக்கிறார்கள். விரும்பிய பலனைக் காண்பதற்காகவே இவை அனைத்தையும் செய்கிறார்கள். அவ்வாறே, யெகோவாவுக்குக் காத்திருக்கிற நாம், மற்றவர்கள் கடவுளிடம் நெருங்கி வர உதவுவதன் மூலம் சந்தோஷத்தைக் காண்கிறோம். நாமும்கூட கடவுளுடைய ஆதரவையும் கடைசியில் இரட்சிப்பையும் பெற விரும்புகிறோம்.
நம்பிக்கை இழந்துவிடாதீர்கள்
யெகோவாவுக்காகக் காத்திருப்பது, நம்பிக்கை இழக்காமல் எப்போதும் அவரிடம் அன்பு காட்டுவதையும் அவருக்குச் சேவை செய்வதையும் அர்த்தப்படுத்துகிறது. இது கடினமாக இருக்கலாம். ஏனெனில், கடவுளுடைய வாக்குறுதிகளில் விசுவாசம் வைத்து வாழ்பவர்களை ஏளனம் செய்யும் சமுதாயங்களில்தான் அவருடைய ஊழியர்கள் பலரும் இன்று இருக்கிறார்கள். என்றாலும், உண்மையுள்ள இஸ்ரவேலரின் உதாரணத்தைக் கவனியுங்கள். பாபிலோனில் 70 வருடங்கள் அடிமைகளாக இருந்தபோது அவர்கள் தங்களுடைய நம்பிக்கையை இழந்துவிடாதிருந்தார்கள். அவ்வாறு இருக்க எது அவர்களுக்கு உதவியது? சங்கீதங்களை வாசித்ததே அவர்களைப் பலப்படுத்தியது என்பதில் சந்தேகமில்லை. அந்தச் சமயத்தில் எழுதப்பட்டதாகத் தெரிகிற உற்சாகமூட்டும் ஒரு சங்கீதம் இவ்வாறு குறிப்பிடுகிறது: “அவருடைய வார்த்தைக்காக காத்திருக்கிறேன். எப்பொழுது விடியும் என்று விடியற்காலத்துக்குக் காத்திருக்கிற காவல்காரரைப் பார்க்கிலும் அதிகமாய் என் ஆத்துமா யெகோவாவுக்குக் காத்திருக்கிறது. இஸ்ரவேல் எப்போதும் யெகோவாவுக்குக் காத்திருப்பதாக.”—சங்கீதம் 130:5-7, NW.
கடைசியில், பாபிலோனை எதிரிகள் கைப்பற்றியபோது, தங்கள் நம்பிக்கையைப்பற்றி வாசிப்பதன் மூலமும் பேசுவதன் மூலமும் அதைப் பிரகாசமாய் வைத்திருந்த யூதர்கள் பலன் அடைந்தார்கள். உண்மையாயிருந்த ஆயிரக்கணக்கான யூதர்கள் சீக்கிரத்திலேயே எருசலேமுக்குத் திரும்பினார்கள். அந்தச் சமயத்தைப்பற்றி இவ்வாறு எழுதப்பட்டுள்ளது: ‘சீயோனின் சிறையிருப்பைக் கர்த்தர் திருப்பும்போது, . . . நம்முடைய வாய் நகைப்பினால் . . . நிறைந்திருந்தது.’ (சங்கீதம் 126:1, 2) அந்த யூதர்கள் நம்பிக்கை இழந்துவிடாதிருந்தார்கள், மாறாக தங்களுடைய விசுவாசத்தைத் தொடர்ந்து பலப்படுத்தினார்கள். யெகோவாவைத் துதித்துப் பாடுவதையும் அவர்கள் நிறுத்தாதிருந்தார்கள்.
இதே விதமாக, இந்த ‘உலகத்தின் முடிவு காலத்தில்’ கடவுளுக்காகக் காத்திருக்கிற உண்மை கிறிஸ்தவர்கள், தங்களுடைய விசுவாசத்தில் உறுதியாய் நிலைத்திருக்க தொடர்ந்து முயற்சிசெய்கிறார்கள். அவர்கள் கடவுளுடைய வார்த்தையைப் படிக்கிறார்கள், ஒருவரையொருவர் உற்சாகப்படுத்துகிறார்கள், ராஜ்யத்தின் நற்செய்தியைப் பிரசங்கிப்பதன் மூலம் யெகோவாவைத் துதிக்கிறார்கள்.—மத்தேயு 24:3, 14.
சிட்சையிலிருந்து பலன் அடைய காத்திருத்தல்
‘யெகோவாவுடைய இரட்சிப்புக்கு நம்பிக்கையோடு காத்திருக்கிறது நல்லது’ என எரேமியா தீர்க்கதரிசி எழுதினார். (புலம்பல் 3:26) எருசலேம் அழிக்கப்படுவதற்கு யெகோவா அனுமதித்தபோது, தம் மக்களை அவர் சிட்சித்த விதத்தைக் குறித்து அவர்கள் குறைகூறாதிருப்பது நல்லது என்றே எரேமியா கூறினார். மாறாக, தாங்கள் செய்த தவறையும் அதிலிருந்து மனந்திரும்ப வேண்டியதன் அவசியத்தையும் குறித்து சிந்தித்துப் பார்ப்பதன் மூலம் அந்தச் சிட்சையிலிருந்து அவர்கள் பலன் அடைய வேண்டும்.—புலம்பல் 3:40, 42.
யெகோவா தரும் சிட்சையிலிருந்து கிடைக்கும் பலனை ஒரு காய் கனிந்து பழமாவதற்கு ஒப்பிடலாம். கடவுள் தரும் சிட்சை சம்பந்தமாக பைபிள் இவ்வாறு சொல்கிறது: “அதில் பழகினவர்களுக்கு [அதாவது, பயிற்சி பெற்றவர்களுக்கு] அது நீதியாகிய சமாதான பலனைத் தரும்.” (எபிரெயர் 12:11) ஒரு பழம் கனிவதற்குக் காலம் எடுப்பதைப்போல, கடவுள் தரும் பயிற்சியை ஏற்று நம் மனப்பான்மைகளை மாற்றிக்கொள்வதற்கும் காலம் எடுக்கிறது. உதாரணமாக, நம்முடைய தவறான நடத்தையினால் சபையில் சில பொறுப்புகளை இழந்துவிடுவோமானால், கடவுளுக்காகக் காத்திருக்க மனமுள்ளவராய் இருப்பது சோர்ந்துவிடாமலும் நம்பிக்கை இழக்காமலும் இருக்க நமக்கு உதவும். அத்தகைய சந்தர்ப்பங்களில், தேவ ஆவியால் தாவீது எழுதிய பின்வரும் வார்த்தைகள் நமக்குத் தெம்பூட்டுகின்றன: “அவருடைய [கடவுளுடைய] கோபம் ஒரு நிமிஷம், அவருடைய தயவோ நீடியவாழ்வு; சாயங்காலத்தில் அழுகை தங்கும், விடியற்காலத்திலே களிப்புண்டாகும்.” (சங்கீதம் 30:5) காத்திருக்கும் மனப்பான்மையை வளர்த்து, கடவுளுடைய வார்த்தையிலிருந்தும் அமைப்பிலிருந்தும் கிடைக்கிற ஆலோசனையைப் பின்பற்றினால், “களிப்புண்டாகும்” காலம் நமக்கும் வரும்.
முதிர்ச்சியை நோக்கி வளருவதற்குக் காலம் தேவை
நீங்கள் ஓர் இளைஞராகவோ புதிதாய் முழுக்காட்டப்பட்டவராகவோ இருந்தால், கிறிஸ்தவ சபையில் சில பொறுப்புகளைப் பெற ஆவலாய் இருக்கலாம். ஆனால், அத்தகைய பொறுப்புகளை ஏற்றுக்கொள்வதற்குத் தேவையான ஆன்மீக முதிர்ச்சியை அடைய காலம் எடுக்கிறது. ஆகவே, ஆன்மீக ரீதியில் முன்னேறுவதற்கு அந்தக் காலப்பகுதியை நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். உதாரணமாக, பைபிளை முழுமையாக வாசித்து முடிப்பதற்கும், கிறிஸ்தவ குணங்களை வளர்ப்பதற்கும், சீஷராக்கும் திறமைகளைக் கற்றுக்கொள்வதற்கும் இளமைக் காலமே சிறந்தது. (பிரசங்கி 12:1) நீங்கள் தாழ்மையோடு காத்திருக்கும் மனப்பான்மையை வெளிக்காட்டினால், தக்க சமயம் வரும்போது மிகுதியான பொறுப்புகளை யெகோவா உங்களுக்குத் தருவார்.
சீஷராக்கும் வேலையிலும்கூட பொறுமை அவசியம். கடவுள் விதையை வளரச்செய்யும் வரையில் அதற்குத் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்; சீஷராக்கும் வேலையும் அப்படிப்பட்டதே. (1 கொரிந்தியர் 3:7; யாக்கோபு 5:7) மற்றவர்களின் இருதயத்தில் விசுவாசத்தையும் யெகோவாமீது நன்றியுணர்வையும் வளர்ப்பதற்குச் சில மாதங்களோ வருடங்களோகூட பொறுமையாக பைபிள் படிப்பு நடத்துவது அவசியம். யெகோவாவுக்காகக் காத்திருப்பதில் விடா முயற்சியும் சம்பந்தப்பட்டுள்ளது; ஆரம்பத்தில், மாணாக்கர்கள் கற்றுக்கொள்கிற விஷயங்களில் ஆர்வம் காட்டாதபோதிலும் முயற்சியைக் கைவிடாதிருப்பது அவசியம். அவர்கள் சிறிதளவு போற்றுதலைக் காட்டினாலும்கூட, அது யெகோவாவின் பரிசுத்த ஆவிக்கு இசைய அவர்கள் செயல்படுகிறார்கள் என்பதற்கு அடையாளமாக இருக்கலாம். பொறுமையோடு இருந்தால், உங்களுடைய மாணாக்கரைக் கிறிஸ்துவின் சீஷராக யெகோவா முன்னேறச் செய்வதைப் பார்த்து நீங்கள் ஆனந்தம் அடையலாம்.—மத்தேயு 28:20.
காத்திருப்பதன் மூலம் அன்பை வெளிக்காட்டுதல்
காத்திருப்பது எவ்விதத்தில் அன்பையும் நம்பிக்கையையும் வெளிக்காட்டுகிறது என்பதற்கு ஓர் உதாரணத்தைக் கவனியுங்கள். தென் அமெரிக்காவிலுள்ள ஆண்டிஸ் மலைத்தொடரின் பாலைவனப் பகுதியில் ஒரு வயதான பாட்டியம்மா வாழ்ந்து வருகிறார். அந்தக் கிராமத்தில் அவரும் மற்றொரு சகோதரியும் மட்டுமே யெகோவாவின் சாட்சிகள். சக கிறிஸ்தவர்கள் தங்களை வந்து சந்திப்பதற்காக அவர்கள் எவ்வளவு ஆவலாகக் காத்திருப்பார்கள் என்பதை உங்களால் கற்பனைசெய்ய முடிகிறதா? ஒருசமயம், பயணக் கண்காணி ஒருவர் முதன்முறையாக அவர்களைச் சந்திக்க செல்கையில், வழி தவறி வேறு பாதையில் சென்றுவிட்டார். அதனால், அவர் புறப்பட்ட இடத்திற்கே திரும்பவும் சென்று சரியான பாதையில் பயணப்பட வேண்டியிருந்ததால் பல மணிநேரம் தாமதமாகிவிட்டது. கடைசியாக, தூரத்தில் அந்தக் கிராமம் தெரிந்தபோது நடுராத்திரிக்கு மேல் ஆகிவிட்டது. மின்வசதி இல்லாதிருந்த அந்தப் பகுதியில் வெளிச்சத்தைப் பார்த்ததும் அவர் ஆச்சரியப்பட்டார். ஒருவழியாக அந்தக் கிராமத்தை எட்டியதும் அவர் எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பார்! அவர் தூரத்திலிருந்து பார்த்ததுகூட, அந்தப் பாட்டியம்மா தூக்கிப்பிடித்துக்கொண்டிருந்த திரிவிளக்கின் வெளிச்சம்தான்! அவர் கண்டிப்பாக வருவாரென பாட்டியம்மாவுக்குத் தெரியும், அதனால் காத்துக்கொண்டிருந்தார்.
இதுபோன்று பொறுமையுடன் நாம் யெகோவாவுக்காகச் சந்தோஷத்தோடு காத்திருக்கிறோம். அவர் தம் வாக்குறுதிகளை நிறைவேற்றுவார் என்று நமக்கு நிச்சயம் தெரியும். அந்தப் பயணக் கண்காணியைப் போல, நமக்காக அன்புடன் காத்திருப்பவர்களை நாம் பெரிதும் மதிக்கிறோம். ஆகவே, கடவுளும் தமக்காகக் காத்திருக்கிறவர்களை மதிக்கிறார் என்பதில் ஆச்சரியமில்லை. பைபிள் இவ்வாறு சொல்கிறது: “தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்கள்மேல் கர்த்தர் பிரியமாயிருக்கிறார்.”—சங்கீதம் 147:11.
[பக்கம் 18-ன் படம்]
யெகோவாவை துதிப்பதில் மும்முரமாக ஈடுபடுகிறவர்கள் அவருக்காகக் காத்திருப்பதில் மகிழ்ச்சி காண்கிறார்கள்