‘உங்களுடைய மெய்யறிவிலிருந்து உடனே அசைக்கப்படாதிருங்கள்’
“ஒரு ஆவியினாலாவது வார்த்தையினாலாவது, எங்களிடத்திலிருந்து வந்ததாய்த் தோன்றுகிற ஒரு நிருபத்தினாலாவது கிறிஸ்துவினுடைய நாள் சமீபமாயிருக்கிறதாகச் சொல்லப்பட்டால் உங்களுடைய மெய்யறிவிலிருந்து உடனே அசைக்கப்படாமலும் கலங்காமலும் இருங்கள்.”—2 தெசலோனிக்கேயர் 2:1, 2, NW.
1. சத்தியத்தை முதலில் கற்றுக்கொண்ட அந்த சமயத்தை எண்ணி பார்க்கும்போது, என்ன இனிமையான நினைவுகள் நம்முடைய மனதுக்கு வருகின்றன?
கிறிஸ்தவர்களாக, நாம் கடவுளுடைய வார்த்தையிலிருந்து சத்தியத்தை முதலில் கற்றுக்கொண்ட அந்த சமயத்தை எண்ணிப் பார்க்கும்போது ஒரே விதமாக இன்பமான நினைவுகள் நம்முடைய மனதுக்கு வருகின்றன. அது அழகாக, நியாயமானதாக மனநிறைவை அளிப்பதாக இருந்தது. யெகோவாவைப் பற்றியும், அவருடைய பெரிதான அன்பையும் இரக்கத்தையும் உட்பட அவருடைய மேலான குணாதிசயங்களைப் பற்றியும் நாம் கற்றுக்கொண்டபோது, நம்முடைய இருதயங்கள் எவ்விதமாக போற்றுதலினால் பூரித்து போயின! மெய்யான கிறிஸ்தவ அன்பைக் காண்பித்து, பைபிள் நியமங்களின்படி வாழ்ந்து வந்த உடன் விசுவாசிகளோடு கூட்டுறவுக் கொண்டபோது நாம் மகிழ்ந்து களிகூர்ந்தோம்.
2. யெகோவாவின் ஊழியர்களாக நமக்கு என்ன எதிர்பார்ப்புகள் இருக்கின்றன? என்ன ஆவிக்குரிய நிலைமையில் நாம் இருப்பதை உணருகிறோம்?
2 யெகோவா சீக்கிரத்தில் வருத்தத்தையும் துக்கத்தையும் மரணத்தையும்கூட நீக்கிப்போடுவதைப்பற்றி கற்றுக்கொண்டபோது நாம் எவ்வளவு நன்றியுள்ளவர்களாக இருந்தோம். (வெளிப்படுத்தின விசேஷம் 21:3, 4) பரிபூரண உடல் ஆரோக்கியத்தோடும் நிறைவான மகிழ்ச்சியோடும் பரதீஸிய பூமியில் என்றுமாக வாழ்வதை கற்பனைச் செய்துப் பாருங்கள்! அது உண்மையாக இருக்க முடியாதபடி அத்தனை இன்பமளிப்பதாக இருந்தது. ஆனால் அது உண்மையாக இருந்தது. கடவுளுடைய வார்த்தை அதை ஆதரித்தது. அது கிளர்ச்சியூட்டுவதாக இருந்தது. நிச்சயமாகவே உயிர்தெழுந்தப் பின்பு இயேசு அவருடைய சீஷர்களுக்கு காட்சியளித்தபோது, அவருடைய சீஷர்கள் உணர்ந்த விதமாகவே நாம் உணர்ந்தோம். அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி: “வழியிலே அவர் நம்முடனே பேசி, வேதவாக்கியங்களை நமக்கு விளங்கக் காட்டின பொழுது நம்முடைய இருதயம் நமக்குள்ளே கொழுந்துவிட்டு எரியவில்லையா?” என்று சொல்லிக் கொண்டார்கள். (லூக்கா 24:32) ஆம் சத்தியத்தைக் கற்றுக்கொண்டு நம்முடைய வாழ்க்கையை யெகோவாவுக்கு ஒப்புக் கொடுத்தபோது, நாம் ஒரு ஆவிக்குரிய பரதீஸில் இருப்பதை உணர்ந்தோம். என்னே ஒரு ஆசீர்வாதம்!
3. யெகோவாவின் ஆவிக்குரிய பரதீஸின் நன்மைகளை நாம் இழக்கும்படியாகச் செய்ய, பிசாசும் மற்ற எதிரிகளும் எவ்விதமாக முயற்சி செய்கிறார்கள்?
3 ஆனால் யெகோவாவின் ஆவிக்குரிய பரதீஸ், தானாக வந்துவிடுவதாக நாம் எண்ணக்கூடாது. நாமாகவே விரும்பி இந்த பரதீஸிற்குள் வந்திருக்கிறோம். நாம் அவநம்பிக்கையில் வீழ்ந்துவிட்டாலோ அல்லது யெகோவாவின் நீதியான சட்டங்களை வேண்டுமென்றே மீறினாலோ நாம் அதிலிருந்து வெளியேறவிடலாம் (அல்லது வெளியேற்றப்படலாம்). ஆனால் நிச்சயமாகவே “ஆதியில் கொண்டிருந்த அன்பில்” நாம் உறுதியாக இருந்தோமேயானால், ஆவிக்குரிய விதத்தில் பலமுள்ளவர்களாக இருக்க யெகோவாவின் ஏற்பாடுகள் அனைத்தையும் தொடர்ந்து மதித்துணர்ந்து வருவோமேயானால், இது நமக்கு சம்பவிக்காது. (வெளிப்படுத்தின விசேஷம் 2:4) ஆனால் பிசாசும் மெய் வணக்கத்தின் மற்ற எதிரிகளும், வஞ்சிப்பதில் கைத்தேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். அவர்களால் முடிந்தால், நம்முடைய உத்தமத்தை முறித்துப்போட அவர்கள் எப்பெழுதும் ஆயத்த நிலையில் இருப்பதை நாம் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது. நம்முடைய விசுவாசத்தை பலவீனப்படுத்துவதும், கடவுளிடமாக நமக்குள்ள அன்பில் நம்மை தணிந்துபோகச் செய்வதும், நம்முடைய மனங்களில் சந்தேகத்தின் விதைகளை விதைப்பதுமே அவர்களுடைய பிரசாரத்தின் நோக்கமாக இருக்கிறது—ஆம் ஆவிக்குரிய பரதீஸை அது பரதீஸே இல்லை என்பதாகச் தோன்றச் செய்யவே அவை திட்டமிடப்பட்டிருக்கின்றன.
4. நம்முடைய விசுவாசம் பலவீனமடைய அனுமதித்து வினைமையான சந்தேகங்களுக்கு நாம் இடங்கொடுப்போமேயானால் என்ன நடக்கக்கூடும்?
4 முதுமொழி ஒன்றிலிருந்து எடுத்துச் சொல்ல வேண்டுமானால், இப்பொழுது அதிலுள்ள அபூரணமான மனித மரங்களை அத்தனை அண்மையில் நின்று பார்ப்பதன் காரணமாக, ஆவிக்குரிய பரதீஸின் காட்டை காண்பதுகூட கடினமாக, ஒருவேளை காண முடியாதபடியும்கூட போய்விடும். கடவுளுடைய வார்த்தையின் சத்தியத்தை அறிந்துகொண்டபோது நமக்கிருந்த கிளர்ச்சி, நாம் கொண்டிருந்த மகத்தான நம்பிக்கை, கடவுளிடமாகவும் நம்முடைய ஆவிக்குரிய சகோதரர்களிடமாகவும் நாம் வளர்த்துக்கொண்ட அன்பு, யெகோவாவின் ஊழியத்தில் நமக்கிருந்த வைராக்கியம் ஆகிய இவை மறைந்துவிடக்கூடும். இதுபோன்ற எந்த ஒரு ஆவிக்குரிய சீரழிவையும் சரிசெய்ய தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால் சீக்கிரத்தில் கடவுள் தேவைப்படுத்தும் அன்பான காரியங்கள் நமக்கு பாரமானவையாக தோன்றிவிடக்கூடும். “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை” வகுப்பு அளிக்கும் ஆரோக்கியமான ஆவிக்குரிய உணவு, வெறுக்கத்தக்க ஒன்றாகவும், யெகோவாவின் அன்புள்ள ஊழியர்களின் சகோதரத்துவம் சத்துருக்களின் வீட்டாராகவும் தோன்றக்கூடும். பின்பு இழிவான ஒரே திருப்தி, உடன் அடிமைகளை அவதூறுகளினாலும் அரைகுறை உண்மைகளினாலும் தாக்குவதிலிருந்து மட்டுமே கிடைக்கக்கூடும்.—மத்தேயு 24:45-51.
5. ஒருவருடைய இழப்பு எவ்விதமாக ஏதேனிய பரதீஸிலிருந்து வெளியேற்றப்படுகையில் ஆதாமும் ஏவாளும் இழந்ததற்கு ஒப்பாக இருக்கக்கூடும்?
5 ஆம், இப்பொழுது ஆவிக்குரிய பரதீஸின் ஆசீர்வாதங்களை இழப்பது மட்டுமல்லாமல், ஆனால் மிக முக்கியமாக, பூமிக்குரிய பரதீஸில் நித்தியமாக வாழும் நம்பிக்கையையும்கூட இழந்துவிடுவோம். எந்த காரணத்துக்காக ஆதாமும் ஏவாளும் ஏதேன் பரதீஸை இழந்துவிட்டார்களோ, அதே காரணத்தினாலே நாமும் இழந்துவிடக்கூடும். நிறைவான சந்தோஷத்தோடிருப்பதற்கு தேவையான அனைத்தும் அவர்களுக்கு இருந்தது. மேலும் அவர்கள் என்றுமாக வாழ்ந்திருக்கவும்கூடும். ஆனால் சுதந்தரம்—உண்மையில் வித்தியாசமான ஒரு போதகம்—யெகோவாவுக்கு கீழ்ப்படிந்திருப்பதற்கும் ஏதேனின் ஆசீர்வாதங்களுக்கும் மேலாக அவர்களுக்கு அதிக முக்கியமாக இருந்தது. ஏவாள் வஞ்சிக்கப்பட்டாள். ஆதாம் வஞ்சிக்கப்படாவிட்டாலும் அவனுடைய மனைவியின் பலமான செல்வாக்கு உட்பட, சூழ்நிலைமைகளின் சக்தி, தன்னையும்கூட பாவம் செய்ய தூண்ட அவன் அனுமதித்தான். ஆகவே அவர்களுடைய மரணம் வரையாக அவலமான ஒரு வாழ்க்கையை வாழ, பரதீஸிலிருந்து அவர்கள் வெளியேற்றப்பட்டார்கள். நித்திய ஜீவனின் எதிர்பார்ப்பை அவர்கள் இழந்து தங்களுடைய பிள்ளைகளின் மீது பாவத்தையும் மரணத்தையும் சுதந்திரமாகக் கொண்டு வந்தார்கள். (ஆதியாகமம் 3:1-7, 14-19, 24; 1 தீமோத்தேயு 2:14; ரோமர் 5:12) அவர்கள் சுதந்தரம் என்று அழைத்துக்கொண்டதற்கு என்ன பயங்கரமான ஒரு விலையாக அது இருக்கிறது!
6. (எ) கொரிந்திய சபையிலிருந்து சிலரின் சம்பந்தமாக, பவுல் என்ன கவலையை வெளியிட்டான்? (பி) தெசலோனிக்கேயாவிலிருந்த சபைக்கு எழுதிய காரியத்தில் இதே விதமான அக்கறை எவ்விதமாக காண்பிக்கப்பட்டது?
6 அப்போஸ்தலனாகிய பவுல் தனக்கிருந்த இந்த கவலையை இவ்விதமாக வெளிப்படுத்தினான்: “சர்ப்பமானது தன்னுடைய தந்திரத்தினாலே ஏவாளை வஞ்சித்ததுபோல உங்கள் மனதும் கிறிஸ்துவைப் பற்றிய உண்மையினின்று விலகும்படி கெடுக்கப்படுமோவென்று பயந்திருக்கிறேன்.” (2 கொரிந்தியர் 11:3) பவுல், அவனுடைய நாளில் பரவிக்கொண்டிருந்த தவறான போதகங்களின் சம்பந்தமாக எழுதுவதை அவசியமாகக் கண்டான். தெசலோனிக்கேயாவிலிருந்த சபைக்கு எழுதிய தன்னுடைய இரண்டாவது கடிதத்தில் அவன் இவ்விதமாக எழுதினான்: “ஒரு ஆவியினாலாவது, வார்த்தையினாலாவது, எங்களிடத்திலிருந்து வந்ததாய்த் தோன்றுகிற ஒரு நிருபத்தினாலாவது, கிறிஸ்துவினுடைய நாள் சமீபமாயிருக்கிறதாகக் சொல்லப்பட்டால், உங்களுடைய மெய்யறிவிலிருந்து உடனே அசைக்கப்படாமலும் கலங்காமலும் இருங்கள், எவ்விதத்தினாலும் ஒருவனும் உங்களை மோசம் போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்.”—2 தெசலோனிக்கேயர் 2:1-3.
விசுவாச துரோகிகளோடு எந்த தொடர்பும் வைத்துக் கொள்ளாதீர்கள்
7. விசுவாச துரோக பிரசுரம் தபாலில் பெற்றுக்கொள்ளப்படுமேயானால் என்ன கேள்விகள் எழும்புகின்றன? (பி) விசுவாச துரோகிகளின் செல்வாக்கிலிருந்து ஒருவரை பாதுகாத்துக்கொள்வதன் சம்பந்தமாக மட்டுமீறிய தன்னம்பிக்கை ஏன் ஆபத்தானதாக இருக்கிறது?
7 இப்பொழுது, யெகோவாவின் சாட்சிகளில் ஒருவராக, நீங்கள் நம்புவது சத்தியம் அல்ல என்பதாக வாதிடும் விசுவாச துரோக போதகத்தை—தந்திரமான விளக்கங்களை—எதிர்பட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்? உதாரணமாக நீங்கள் ஒரு கடிதத்தை அல்லது ஒரு பிரசுரத்தை பெற்றுக்கொண்டு, அதை பிரித்து, அது ஒரு விசுவாச துரோகியிடமிருந்து வந்திருப்பது உடனடியாக உங்களுக்குத் தெரியவந்தால் நீங்கள் என்ன செய்வீர்கள்? படித்து தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வம், அவர் என்னதான் சொல்ல இருக்கிறார் என்பதை வெறுமென பார்ப்பதற்காக உங்களை வாசிக்கும்படியாகச் செய்யுமா? நீங்கள் இவ்விதமாகவும்கூட விவாதிக்கலாம்: ’அது என்னை பாதிக்காது. நான் சத்தியத்தில் மிகவும் உறுதியாக இருக்கிறேன். அல்லாமலும் நம்மிடம் சத்தியம் இருக்குமானால் நமக்கு பயப்பட எதுவுமில்லை. சத்தியம் சோதனையை தாங்கி நிற்கும்.’ இவ்விதமாக சிந்தித்து சிலர் விசுவாச துரோக விளக்கங்களினால் தங்களுடைய மனதை போஷித்து வினைமையான கருத்து வேறுபாட்டுக்கும் சந்தேகத்துக்கும் இரையாகிவிட்டிருக்கிறார்கள். (யாக்கோபு 1:5-8 ஒப்பிடவும்) ஆகவே 1 கொரிந்தியர் 10:12-லுள்ள எச்சரிப்பை மனதில் வைத்திருங்கள்: “இப்படியிருக்க தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடி எச்சரிக்கையாயிருக்கக் கடவன்.”
8. சந்தேகத்தினால் ஆட்கொள்ளப்பட்டுவிட்ட சிலருக்கு என்ன உதவி அவசியமாயிருக்கிறது?
8 அக்கறையுள்ள சகோதரர்களின் அன்பான உதவியின் காரணமாக, ஆவிக்குரிய குழப்பமும் வேதனையும் நிறைந்த ஒரு காலப்பகுதிக்குப் பின்னர் விசுவாச துரோகிகள் விதைத்த சந்தேகத்திலிருந்து சிலர் மீண்டு வந்திருக்கிறார்கள். ஆனால் இந்த வேதனை தவிர்க்கப்பட்டிருக்கலாம். நீதிமொழிகள் 11:9-ல் நமக்கு இவ்விதமாக சொல்லப்படுகிறது: “மாயக்காரன் தனக்கு அடுத்தவனை வாயினால் கெடுக்கிறான்; நீதிமானோ அறிவினால் தப்புகிறான்.” யூதா உடன் கிறிஸ்தவர்களிடம், “சந்தேகமுள்ள சிலருக்கு இரக்கம் பாராட்டி, சிலரை அக்கினியிலிருந்து இழுத்துவிடுங்கள்” என்று சொன்னான். (யூதா 22, 23) பவுல், கண்காணியாக இருந்த தீமோத்தேயுவுக்கு, “எதிர் பேசுகிறவர்கள் சத்தியத்தை அறியும்படி தேவன் அவர்களுக்கு மனந்திரும்புதலை அருளத்தக்கதாகவும் பிசாசானவனுடைய இச்சையின்படி செய்ய அவனால் பிடிபட்டிருக்கிற அவர்கள் மறுபடியும் மயக்கந் தெளிந்து அவன் கண்ணிக்கு நீங்கத் தக்கதாகவும் சாந்தமாய் அவர்களுக்கு உபதேசிக்கும்”படியாகச் சொன்னான்.—2 தீமோத்தேயு 2:25, 26.
9. மெய் வணக்கத்தை உதறி தள்ளுகிறவர்களின் அவல நிலை என்ன?
9 மற்றவர்கள் முழுமையாக இருளுக்குள் கிறிஸ்தவ மண்டலத்தின் பிழையான போதகங்களுக்கும்கூட திரும்பவுமாக போய்விட்டிருப்பது அவலமாக இருக்கிறது. முதலில் சத்தியத்தில் நடந்து, பின்னர் அதிலிருந்து விலகி விட்டிருக்கும் சிலரின் அவல நிலையைக் குறித்து அப்போஸ்தலனாகிய பேதுரு எழுதினான். அவன் சொன்னான்: “கர்த்தரும் இரட்சகருமாயிருக்கிற இயேசு கிறிஸ்துவை அறிகிற அறிவினாலே உலகத்தின் அசுத்தங்களுக்குத் தப்பினவர்கள் மறுபடியும் அவைகளில் சிக்கிக்கொண்டு ஜெயிக்கப்பட்டால், அவர்களுடைய பின்னிலைமை முன்னிலைமையிலும் கேடுள்ளதாயிருக்கும்.” அவர்கள் கக்கினதைத் தின்னும் நாய்க்கும், சேற்றிலே புரள திரும்பும் கழுவப்பட்ட பன்றிக்கும் ஒப்பாக இருப்பதாக பேதுரு சொன்னான்.—2 பேதுரு 2:20-22.
10. (எ) விசுவாச துரோகிகளுக்கு செவி கொடுப்பது பற்றி யெகோவா என்ன சொல்லுகிறார்? (பி) விசுவாச துரோக பிரசுரங்களை வாசிப்பது எதைச் செய்வது போல இருக்கும்?
10 உடன் மானிடர் நம்மிடமாக, ‘இதை வாசிக்காதே” அல்லது ‘அதை கேட்காதே’ என்று சொல்லும்போது அவருடைய புத்திமதியை அசட்டை செய்ய நமக்குத் தோன்றலாம். ஆனால் இந்த விஷயத்தில், யெகோவா தாமே என்ன செய்ய வேண்டும் என்பதை நமக்கு அவருடைய வார்த்தையில் சொல்லுகிறார். விசுவாச துரோகிகளைப் பற்றி அவர் என்ன சொல்லுகிறார்? “அவர்களை விட்டு விலகுங்கள்.” (ரோமர் 16:17, 18) “அவர்களோடே கலந்திருக்கக்கூடாது.” (1 கொரிந்தியர் 5:11) “[அவர்களை] உங்கள் வீட்டிலே ஏற்றுக்கொள்ளாமலும் [அவர்களுக்கு] வாழ்த்துதல் சொல்லாமலும் இருங்கள்.” (2 யோவான் 9, 10) அவை அழுத்தமான வார்த்தைகளாக, தெளிவான அறிவுரைகளாக இருக்கின்றன. அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தின் காரணமாக, அறியப்பட்ட ஒரு விசுவாச துரோகியின் பிரசுரம் ஒன்றை நாம் வாசிப்போமேயானால், மெய் வணக்கத்தின் இந்த விரோதியை நம்மோடு உட்கார்ந்து அவருடைய விசுவாச துரோக கருத்துக்களை எடுத்துக் சொல்லும் பொருட்டு அவரை நம்முடைய வீட்டுக்குள் வரவேற்பது போலவே இது இருக்குமல்லவா?
11, 12. (எ) தீங்கை விளைவித்துக் கொள்ளாமல் நாம் விசுவாச துரோக இலக்கியங்களை வாசிக்க முடியாது என்பதை மதித்துணருவதற்கு நமக்கு உதவி செய்ய என்ன உதாரணம் கொடுக்கப்பட்டிருக்கிறது? (பி) யெகோவா அவருடைய ஜனங்களைக் குறித்து அக்கறையுள்ளவராக இருக்கிறார் என்பதற்கு இது எவ்விதமாக பொருத்தப்படலாம்?
11 இவ்விதமாக இதை நாம் விளக்குவோம்: பருவ வயதிலுள்ள உங்களுடைய மகன் தபாலில் இழிவான இலக்கியங்களை பெற்றுக்கொள்கிறான் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் என்ன செய்வீர்கள்? ஆர்வத்தின் காரணமாக அதை வாசிக்க அவன் விரும்பினால் நீங்கள்: ‘ஆம் மகனே தைரியமாக நீ அதை படி, அது உன்னை பாதிக்காது. சிறு பிராயம் முதற்கொண்டே ஒழுக்கயீனம் தவறானது என்று நாங்கள் உனக்கு கற்பித்து வந்திருக்கிறோம். அது மட்டுமல்லாமல் உலகமானது உண்மையில் மோசமாக இருக்கிறது என்பதைக் காண, உலகில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை நீ தெரிந்துகொள்வது அவசியமாக இருக்கிறது.’ இவ்விதமாக நீங்கள் வாதாடுவீர்களா? நிச்சயமாகவே மாட்டீர்கள்! மாறாக, இழிவான இலக்கியங்களை வாசிப்பதனால் வரும் அபாயங்களைச் சுட்டிக்காட்டி, அது அழிக்கப்பட வேண்டும் என்று நீங்கள் நிச்சயமாக சொல்வீர்கள். ஏன்? ஏனென்றால் ஒரு நபர் சத்தியத்தில் எவ்வளவு உறுதியாக இருந்தாலும், இதுபோன்ற இலக்கியங்களில் காணப்படும் இழிவான கருத்துக்களினால் அவனுடைய மனதை அவன் போஷிப்பனேயானால், அவனுடைய மனதும் இருதயமும் பாதிக்கப்படும். இருதயத்தின் ஆழத்தில் ஊன்றுவிக்கப்பட்டு, அதைவிட்டு அகலாதிருக்கும் தவறான ஆசை, கடைசியாக கீழ்த்தரமான மோக இச்சைகளை உருவாக்கக்கூடும். விளைவு? தவறான இச்சை கர்ப்பந்தரித்து, பாவத்தை பிறப்பிக்கும் என்றும் பாவம் மரணத்துக்கு வழிநடத்தும் என்றும் யாக்கோபு சொல்லுகிறான். (யாக்கோபு 1:15) ஆகவே ஏன் இந்த சங்கிலி தொடரான செயல்களை ஆரம்பித்து வைப்பது?
12 ஆம், கீழ்த்தரமான ஆபாசமான இலக்கியங்களால் பாதிக்கப்படாதபடி நம்முடைய பிள்ளைகளை பாதுகாக்க நாம் இத்தனை தீர்மானமாக செயல்படுவோமேயானால், விசுவாச துரோகம் உட்பட ஆவிக்குரிய வேசித்தனத்தைக் குறித்து, நம்முடைய அன்பான பரம தகப்பனும் அதேவிதமாக நம்மை எச்சரித்து நம்மை பாதுகாக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்ப்போமல்லவா? அவர் சொல்லுகிறார், அதை விட்டு விலகு!
13. பிரசங்க வேலையில் நாம் பங்குகொள்ளும்போது, விசுவாச துரோகிகள் சொல்லியிருக்கும் அல்லது எழுதியிருக்கிறவைகளின் அடிப்படையில் தகவல் கோரும் கேள்விகள் எழுப்பப்படுமேயானால் என்ன செய்யப்படலாம்?
13 ஆனால் நற்செய்தியை நாம் பிரசங்கித்துக் கொண்டிருக்கையில், எதிராளிகள் எழுப்புவதுபோன்ற கேள்விகளை அல்லது எதிப்புகளை ஜனங்கள் எழுப்புவதாக இருந்தால் எப்படி? நிச்சயமாகவே ஒரு நபர் சந்தேகத்தை தெளிவுபடுத்திக்கொள்ள வேண்டும் என்றில்லாமல் வெறுமென தர்க்கம் பண்ண விரும்புவாரேயானால், பொதுவாக அவரிடமிருந்து விடை பெற்றுக்கொண்டு அடுத்த வீட்டுக்குச் சென்றுவிடுவதே சிறப்பான காரியமாக இருக்கும். ஆனால் ஒருவர் உண்மை மனதுடன் விசுவாச துரோகிகளின் ஒருசில கூற்றுகளைக் குறித்து கேட்பாரேயானால் என்ன செய்யப்படலாம்? முதலாவது, உண்மையில் சரியாக எது அவருடைய மன அமைதியை கலைத்திருக்கிறது என்பதாக கேட்கலாம். அது ஒருவேளை ஒன்று அல்லது இரண்டு குறிப்புகளாக இருக்கலாம். அப்பொழுது நாம் இவற்றைக் குறித்து மட்டுமே பேசி, வேதவசனங்களிலிருந்தும், சங்கத்தின் பிரசரங்களிலிருந்தும் அந்த விஷயத்தைப் பற்றி உண்மையில் நாம் அறிந்திருக்கிறவைகளிலிருந்தும் பதிலளிக்கலாம். எதிராளிகளின் பொய்யான கூற்றுகளையும் போதகங்களையும் தவறென காட்டுவதற்கு அவதூறுகளும் அரைகுறை உண்மைகளும் நிறைந்த புத்தகம் அல்லது கைப்பிரதியை வாசிக்க வேண்டும் என்ற முடிவுக்கு நாம் வரவேண்டிய அவசியமில்லை.
யெகோவாவில் நம்பிக்கை
14. நம்முடைய பரம தகப்பன் நம்மிடமாக என்ன அன்பான அக்கறையை உடையவராக இருக்கிறார்? நாம் ஏன் அவரில் நம்முடைய முழுமையான நம்பிக்கையை வைக்கலாம்?
14 நம்முடைய விசுவாசத்தை வளர்த்துக்கொண்டும், ராஜ்ய ஊழியத்தில் சுறுசுறுப்பாக நம்மை வைத்துக்கொண்டும் நாம் முன்னேறிச் செல்லும்போது, நம்முடைய அன்புள்ள பரமதகப்பனாக, நமக்கு அவர் மிகச் சிறந்ததை விரும்புகிறார் என்பதை அறிந்தவர்களாய் நாம் உறுதியாக நம்முடைய நம்பிக்கையை யெகோவாவில் வைக்கலாம். கடவுள் நமக்கு போதிக்கிறார்; நம்மை எச்சரிக்கிறார். இதை அவர் தம்முடைய வார்த்தையின் மூலமாகவும் தம்முடைய காணக்கூடிய அமைப்பு அளிக்கும் தெளிவான அறிவுரைகளின் மூலமாகவும் செய்கிறார். அன்புள்ள ஒரு பெற்றோரிடம் நாம் அப்பத்தையும் மீனையும் கேட்க அவர் நமக்கு கல்லையோ சர்ப்பத்தையோ கொடுக்கமாட்டார். கடவுளும் நம்மை ஏமாற்றவோ வஞ்சிக்கவோ மாட்டார். (மத்தேயு 7:7-11) ஆனாலும்கூட கடவுள் நம்மை சோதனைகளிலிருந்து அல்லது வஞ்சகமான பொய்களிலிருந்தும் பேய்த்தனமான பிரசுரங்களிலிருந்தும்கூட முழுவதுமாக நம்மை தடுத்து காப்பாற்ற மாட்டார். அவர் தம்மைக் குறித்து இவ்விதமாகச் சொல்லுகிறார்: “பிரயோஜனமாயிருக்கிறதை உனக்குப் போதித்து, நீ நடக்க வேண்டிய வழியிலே உன்னை நடத்துகிற உன் தேவனாகிய யெகோவா நானே.” (ஏசாயா 48:17) ஆம் நமக்கு பிரயோஜனமாயிருக்கிறதை யெகோவா நமக்கு போதிக்கிறார். விசுவாச துரோகிகளிடமிருந்தும் அவர்களுடைய போதகங்களிலிருந்தும் விலகியிருக்கும்படியாக அவர் நமக்குச் சொல்லுகிறார். இது நம்முடைய சொந்த பாதுகாப்புக்காகவே இருக்கிறது. இது நமக்கு ஜீவனை அர்த்தப்படுத்துகிறது.
15. சீஷர்களை இழுத்துக்கொள்ள முயற்சிக்கிற சிலரைக் குறித்து என்ன எச்சரிப்புகளை அப்போஸ்தலனாகிய பவுல் கொடுத்தான்?
15 அப்போஸ்தலனாகிய பவுல் உடன் கிறிஸ்தவ மூப்பர்களை இவ்விதமாக எச்சரித்தான்: “உங்களிலும் சிலர் எழும்பி, சீஷர்களைத் தங்களிடத்தில் இழுத்துக்கொள்ளும்படி மாறுபாடானவைகளைப் போதிப்பார்களென்று அறிந்திருக்கிறேன்.” (அப்போஸ்தலர் 20:30) தந்திரமான தர்க்கங்களையும் நம்பக்கூடியவையாகத் தோன்றும் விளக்கங்களையும் நாம் கேட்டுக்கொண்டே இருப்போமேயானால் “மாறுபாடானவைகளும்”கூட சரியானவையாக இருப்பதாக தொனிக்கக்கூடும். ஏவாள் எவ்வளவு நேரமாக விலக்கப்பட்ட கனியை பார்த்துக் கொண்டும் பிசாசின் மாறுபாடான விளக்கங்களை கேட்டுக் கொண்டுமிருந்தாளோ அவ்வளவு அதிகமாக அவன் சரியானதைச் சொன்னதாக அவள் நம்பினாள். பவுல் எச்சரித்தான்: “லெளகீக ஞானத்தினாலும் மாய்மான தந்திரத்தினாலும் ஒருவனும் உங்களைக் கொள்ளைக்கொண்டு போகாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்; அது மனுஷர்களின் பாரம்பரிய நியாயத்தையும் உலக வழிபாடுகளையும் பற்றியதேயல்லாமல் கிறிஸ்துவைப் பற்றினதல்ல.” (கொலோசெயர் 2:8) “நயவசனிப்பினாலும் இச்சகப் பேச்சினாலும் (விசுவாச துரோகிகள்) கபடில்லாதவர்களுடைய இருதயங்களை வஞ்சிக்கிறவர்களாயிருக்கிறார்கள்” என்பதாகவும்கூட அப்போஸ்தலன் சுட்டிக் காட்டினான். (ரோமர் 16:17, 18; 2 கொரிந்தியர் 11:13-15 ஒப்பிடவும்) ஒருசிலர் அந்த விதமான பிரச்சாரத்தினால் இழுக்கப்பட்டு போகிறார்கள் என்பதினாலே நாம் அவர்களை பின்பற்றி போக வேண்டும் என்பதை இது நிச்சயமாகவே அர்த்தப்படுத்தாது. இருந்தபோதிலும் நாம் எப்பொழுதும் விழிப்புள்ளவர்களாக இருக்க வேண்டியது அவசியமாயிருக்கிறது.
16. வேதப் பூர்வமான எந்த எச்சரிப்புகளை பின்பற்றுவது, ஜனங்களை வஞ்சித்து மெய் வணக்கத்திலிருந்து அவர்களை விலகச் செய்துவிட சாத்தான் செய்யும் முயற்சிகளை தடை செய்ய நமக்கு உதவி செய்யும்?
16 ஏதேனிலிருந்து இதுவரையாக பிசாசின் தந்திரங்கள் மாறிவிடவில்லை. அவன் சூழ்ச்சிமிக்க சந்தேகங்களை உபயோகித்து சுய அக்கறைக்கு கவர்ச்சியூட்டுகிறான். பேதுரு எழுதினான்: “உங்களுக்குள்ளும் கள்ளப் போதகர்கள் இருப்பார்கள். அவர்கள் கேட்டுக்கேதுவான வேதப்புரட்டுகளைத் தந்திரமாய் நுழையப்பண்ணி . . . பொருளாசையுடையவர்களாய் தந்திரமான வார்த்தைகளால் உங்களைத் தங்களுக்கு ஆதாயமாக வசப்படுத்திக் கொள்ளுவார்கள்.” (2 பேதுரு 2:1-3) மெய்யானதாக தோன்றுவதற்கு அல்லது தொனிப்பதற்கு தந்திரமாக ஏதோ ஒன்று திட்டமிடப்படுகிறது. 2 தீமோத்தேயு 2:14-19-ல் பவுல், காரியங்களை நேராக்க, யெகோவாவின் வார்த்தையை பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை அழுத்திக் காண்பித்தான். ஆனால் பரிசுத்தமானதை குலைக்கும் சீர்கேடான வீண் பேச்சுக்களை பேசும் விசுவாச துரோகிகளை தவிர்ப்பதன் அவசியத்தைக் குறித்து அவன் எச்சரித்தான். ஏனென்றால் “அவர்களுடைய வார்த்தை அரிபிளவையைப் போலப் படரும்” என்பதாக அவன் சொன்னான்.
17, 18 (எ) விசுவாச துரோக போதகம் எவ்விதமாக அரிபிளவையைப் போலிருக்கிறது? (பி) மெய் வணக்கத்திலிருந்து நம்மை விலகிப் போய்விடச் செய்ய முயற்சிப்பவர்களைக் குறித்து அப்போஸ்தலனாகிய பேதுரு என்ன எச்சரிப்பைக் கொடுக்கிறான்? (சி) அடுத்த படிப்பில் என்ன கேள்விகள் பதிலளிக்கப்படும்?
17 நிச்சயமாகவே பொருத்தமான ஒரு ஒப்புமையாக இது இருக்கிறது! அரிபிளவையைப் போல, விசுவாச துரோக விளக்கம், வேகமாக பரவும் ஆவிக்குரிய மரணமே அன்றி வேறொன்றும் இல்லை. சபையிலுள்ள அங்கத்தினர்கள் ஒரே சரீரத்தைப்போல இருப்பதன் காரணமாக, மற்றவர்களுக்கும் அது ஒட்டி பரவக்கூடிய அபாயம் அங்கிருக்கிறது. கடவுளுடைய வார்த்தையின் தைலத்தை அன்பாகவும் ஆனால் உறுதியாகவும் பூசியும் விசுவாச துரோக போதகங்களை பரப்புகிறவரை ஆவிக்குரிய உடல் ஆரோக்கியத்துக்கு மீண்டும் கொண்டுவர முடியாவிட்டால், சரீரத்தின் மற்ற அங்கங்களின் பாதுகாப்புக்காக அந்த அங்கத்தை அறுத்து எடுத்துவிடுவதே (சபை நீக்கம்) ஒரே மாற்று வழியாக இருக்கக்கூடும். (தீத்து 1:10, 11 ஒப்பிடவும்) ஆவிக்குரிய விதமான சாவுக்கேதுவான அரிபிளவையினால் கறைப்படாதிருங்கள். விசுவாச துரோக எண்ணங்களால் கறைப்படுவதை தவிர்ப்பதன் மூலம் நல்ல ஆவிக்குரிய ஆரோக்கியத்தைக் காத்துக்கொள்ளுங்கள். 2 பேதுரு 3:17, 18-லுள்ள நியாயமான ஆலோசனைக்கு செவிகொடுங்கள்: “ஆதலால் பிரியமானவர்களே, இவைகளை முன்னமே நீங்கள் அறிந்திருக்கிறபடியால், அக்கிரமக் காரருடைய வஞ்சகத்திலே நீங்கள் இழுப்புண்டு உங்கள் உறுதியிலிருந்து விலகி விழந்து போகாதபடிக்கு எச்சரிக்கையாயிருந்து நம்முடைய கர்த்தரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் கிருபையிலும் அவரை அறிகிற அறிவிலும் வளருங்கள்.”
18 ஆனால் விசுவாச துரோகத்திலிருந்து நாம் எவ்விதமாக நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்? விசுவாச துரோக விளக்கங்களை ஏற்றுக் கொள்ளாதபடிக்கு நம்முடைய இருதயங்களை எவ்வாறு நாம் காத்துக்கொள்ளலாம்? இந்த கேள்விகள் அடுத்த கட்டுரையில் சிந்திக்கப்படும். (w86 3/15)
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
◻ யெகோவாவின் ஆவிக்குரிய பரதீஸின் நன்மைகளை நாம் எவ்விதமாக இழந்துவிடக்கூடும்?
◻ விசுவாச துரோக பிரசுரங்களை வாசிப்பது ஏன் கீழ்த்தரமான இலக்கியங்களை வாசிப்பதற்கு ஒத்ததாக இருக்கிறது?
◻ விசுவாச துரோகிகளின் ஒருசில கூற்றுகளைக் குறித்து நாம் கேட்கப்பட்டால், நாம் என்ன செய்யலாம்?
◻ விசுவாச துரோக போதகங்கள் ஏன் அரிபிளவையைப் போல இருக்கின்றன?
[பக்கம் 12-ன் படம்]]
விசுவாச துரோக கடிதங்களை அல்லது புத்தகங்களை ஞானமாக அழித்துவிடுகிறீர்களா?