கடவுளுடைய வசனம் என்றென்றும் நிலைத்திருக்கிறது
“நமது தேவனுடைய வசனமோ என்றென்றைக்கும் நிற்கும்.”—ஏசாயா 40:8.
1. (அ) ‘நமது தேவனுடைய வசனம்’ என்பது எதைக் குறிக்கிறது? (ஆ) தேவனுடைய வசனத்தோடு ஒப்பிட மனிதரின் வாக்குறுதிகள் எவ்வாறுள்ளன?
மனிதர்கள் மேம்பட்ட நிலையிலுள்ள ஆண்களும் பெண்களும் கொடுக்கும் வாக்குறுதிகளில் நம்பிக்கை வைக்கும் மனப்போக்கு உடையோராக இருக்கிறார்கள். தங்கள் வாழ்க்கை நிலையில் முன்னேற்றம் செய்ய ஆவலாக இருக்கிற ஆட்களுக்கு இந்த வாக்குறுதிகள் எவ்வளவாய் விரும்பத்தக்கதாகத் தோன்றினாலும், நம்முடைய கடவுளின் வசனத்தோடு ஒப்பிடுகையில் அவை வாடிவதங்கிப்போகும் பூக்களைப்போல் இருக்கின்றன. (சங்கீதம் 146:3, 4) 2,700-க்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன்பாக, ஏசாயா தீர்க்கதரிசி இவ்வாறு எழுதும்படி யெகோவா தேவன் ஏவினார்: “மாம்சமெல்லாம் புல்லைப்போலவும், அதின் மேன்மையெல்லாம் வெளியின் பூவைப்போலவும் இருக்கிறது. . . . புல் உலர்ந்து பூ உதிரும்; தேவனுடைய வசனமோ என்றென்றைக்கும் நிற்கும்.” (ஏசாயா 40:6, 8) நிலைத்திருக்கும் அந்த “வசனம்” எது? அது, கடவுள் தம்முடைய நோக்கத்தைக் கூறும் அவருடைய கூற்று. இன்று அந்த “வசனம்” எழுதப்பட்ட உருவில் நமக்கு பைபிளில் இருக்கிறது.—1 பேதுரு 1:24, 25.
2. பூர்வ இஸ்ரவேலையும் யூதாவையும் குறித்த தம்முடைய வசனத்தை, என்ன மனப்பான்மைகளுக்கும் செயல்களுக்கும் எதிரில் யெகோவா நிறைவேற்றினார்?
2 ஏசாயா எழுதி வைத்ததன் மெய்ம்மையை, பூர்வ இஸ்ரவேலின் நாட்களில் வாழ்ந்துகொண்டிருந்த ஜனங்கள் அனுபவித்தார்கள். தம்மிடம் மிகவும் உண்மையற்றவர்களாக நடந்துகொண்ட காரணத்தினால், முதலாவதாக இஸ்ரவேலின் பத்துக் கோத்திர ராஜ்யமும், பின்பு இரண்டு கோத்திர யூதா ராஜ்யமும் சிறைப்படுத்தப்பட்டு நாடுகடத்தப்படும் என்று, தம்முடைய தீர்க்கதரிசிகளின் மூலமாக யெகோவா முன்னறிவித்தார். (எரேமியா 20:4; ஆமோஸ் 5:2, 27) யெகோவாவின் தீர்க்கதரிசிகளை அவர்கள் துன்புறுத்தி, கொல்லவுங்கூட செய்து, கடவுளுடைய எச்சரிக்கை செய்தி அடங்கியிருந்த புத்தகச் சுருள்களை எரித்துப்போட்டு, அதன் நிறைவேற்றத்தைத் தடுப்பதற்கு இராணுவ உதவிக்காக எகிப்தைக் கேட்டபோதிலும், யெகோவாவின் வார்த்தை நிறைவேறாமல் போகவில்லை. (எரேமியா 36:1, 2, 21-24; 37:5-10; லூக்கா 13:34) மேலும், மனந்திரும்பின யூத மீதிப்பேரைத் திரும்பிவரச்செய்து அவர்களுடைய தேசத்தில் திரும்பவும் நிலைநாட்டுவார் என்ற கடவுளுடைய வாக்குறுதி குறிப்பிடத்தக்க முறையில் நிறைவேற்றமடைந்தது.—ஏசாயா 35-ம் அதிகாரம்.
3. (அ) ஏசாயாவால் பதிவுசெய்யப்பட்ட என்ன வாக்குறுதிகள் நமக்கு முக்கிய அக்கறைக்குரியவையாக இருக்கின்றன? (ஆ) இந்தக் காரியங்கள் மெய்யாக நிறைவேறும் என்று நீங்கள் ஏன் நம்பிக்கையுடையோராக இருக்கிறீர்கள்?
3 மேசியாவினால், மனிதவர்க்கத்தின்மீது நீதியுள்ள ஆட்சியையும், பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் விடுதலையையும், பூமி பரதீஸாக மாற்றப்படுவதையுங்கூட, ஏசாயாவின் மூலமாய் யெகோவா முன்னறிவித்தார். (ஏசாயா 9:6, 7; 11:1-9; 25:6-8; 35:5-7; 65:17-25) இந்தக் காரியங்களுங்கூட நிறைவேற்றமடையுமா? எவ்வித சந்தேகமுமில்லாமல் நிச்சயமாக நிறைவேறும்! அவர் “பொய்யுரையாத தேவன்.” நம்முடைய நன்மைக்காக, தம்முடைய தீர்க்கதரிசன வசனம் பதிவுசெய்யப்படும்படி அவர் செய்து, அது பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கும்படியும் நிச்சயப்படுத்தியிருக்கிறார்.—தீத்து 1:3; ரோமர் 15:4.
4. முதன்முதல் எழுதப்பட்ட பைபிள் கையெழுத்துப் பிரதிகள் பாதுகாத்து வைக்கப்படாதபோதிலும், தேவனுடைய வசனம் ‘உயிருள்ளதாக’ இருக்கிறது என்பது எவ்வாறு உண்மையாக உள்ளது?
4 தம்முடைய பூர்வ எழுத்தாளர்கள் எழுதிய, அந்தத் தீர்க்கதரிசனங்களின் முதல் கையெழுத்துப் பிரதிகளை யெகோவா பாதுகாத்து வைக்கவில்லை. ஆனால் அவருடைய அறிவிக்கப்பட்ட நோக்கமாகிய அவருடைய “வசனம்” உயிருள்ள வசனமாக நிரூபித்திருக்கிறது. அந்த நோக்கம் தடுக்கமுடியாதபடி முன்னேறுகிறது. அவ்வாறு செய்கையில், அதனால் தங்கள் வாழ்க்கை பாதிக்கப்படுகிற ஆட்களின் உள்ளார்ந்த சிந்தனைகளும் நோக்கங்களும் வெளியாகின்றன. (எபிரெயர் 4:12) மேலும், தேவாவியால் ஏவப்பட்ட வேதவசனங்கள் பாதுகாக்கப்படுவதும் மொழிபெயர்க்கப்படுவதும், கடவுளுடைய வழிநடத்துதலால் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன என்று சரித்திரப்பதிவு காட்டுகிறது.
அதை அழித்துப் போடுவதற்கான முயற்சிகளை எதிர்ப்படுகையில்
5. (அ) தேவாவியால் ஏவப்பட்ட எபிரெய வேதாகமத்தை அழித்துப்போடுவதற்கு சீரிய அரசன் என்ன முயற்சி எடுத்தான்? (ஆ) அவன் ஏன் தோல்வி அடைந்தான்?
5 தேவாவியால் ஏவப்பட்ட எழுத்துக்களை அழிப்பதற்கு, ஆட்சியாளர்கள் பல சமயங்களில் முயற்சி செய்திருக்கிறார்கள். பொ.ச.மு. 168-ல் சீரிய அரசன் அன்டியாக்கஸ் எப்பிஃபேனஸ் (10-ம் பக்கத்தில் படம் குறிக்கப்பட்டுள்ளது) யெகோவாவுக்குப் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஆலயத்தில் ஸூயஸுக்கு ஒரு பலிபீடத்தை கட்டினான். மேலும் அவன், ‘நியாயப்பிரமாண புத்தகங்களை’ தேடியெடுத்து அவற்றை எரித்துப்போட்டு, அத்தகைய வேதப்புத்தகங்களை வைத்திருக்கும் எவரும் கொல்லப்படுவர் என்று அறிவித்தான். எருசலேமிலும் யூதேயாவிலும் பல பிரதிகளை எரித்தபோதிலும், வேதாகமத்தை அவனால் முழுமையாக அழிக்க முடியவில்லை. அந்தச் சமயத்தில், யூதர்களின் குடியிருப்புகள் பல நாடுகளில் சிதறியிருந்தன, ஒவ்வொரு யூத ஜெபாலயமும் அதனதன் திரட்டிய சுருள்களை வைத்திருந்தன.—அப்போஸ்தலர் 13:14, 15-ஐ ஒப்பிடுக.
6. (அ) பூர்வ கிறிஸ்தவர்கள் பயன்படுத்தின வேதாகமத்தை அழித்துப்போடுவதற்கு என்ன கடும் முயற்சி எடுக்கப்பட்டது? (ஆ) அதன் முடிவு என்ன?
6 அவ்வாறே, பொ.ச. 303-ல், ரோம பேரரசன் டயக்லீஷியன், கிறிஸ்தவ கூட்டம் நடத்தும் இடங்கள் இடித்துப்போடப்பட வேண்டும் என்றும், அவர்களுடைய ‘வேதப்புத்தகங்களை நெருப்பில் எரித்துப்போட வேண்டும்’ என்றும் கட்டளையிட்டான். இவ்வாறு அழிப்பது தொடர்ந்து பத்தாண்டுகளாக நடந்தன. அந்தத் துன்புறுத்துதல் பயங்கரமாக இருந்தபோதிலும், டயக்லீஷியன், கிறிஸ்தவத்தை அழிக்கும் தன் முயற்சியில் வெற்றிபெறவில்லை. தம்முடைய ஏவப்பட்ட வார்த்தையின் எந்த ஒரு பாகத்தையும் அந்த அரசனின் பிரதிநிதிகள் அறவே அழித்துப்போடுவதற்கு கடவுள் அனுமதிக்கவில்லை. ஆனால், கடவுளுடைய வசனத்தை பரவலாக அளிப்பதற்கும் பிரசங்கிப்பதற்கும் எதிராக செயல்படுவதன் மூலம், தங்கள் இருதயங்களில் உள்ளதை எதிரிகள் வெளிப்படுத்தினார்கள். சாத்தானால் குருடாக்கப்பட்டு, அவனுடைய சித்தத்தை நிறைவேற்றுவோராகத் தங்களை அவர்கள் அடையாளம் காட்டினார்கள்.—யோவான் 8:44; 1 யோவான் 3:10-12.
7. (அ) மேற்கு ஐரோப்பாவில் பைபிள் அறிவு பரவுவதைத் தடுத்து நிறுத்துவதற்கு என்ன முயற்சிகள் செய்யப்பட்டன? (ஆ) பைபிளை மொழிபெயர்ப்பதிலும் பிரசுரிப்பதிலும் என்ன நிறைவேற்றப்பட்டது?
7 பைபிளின் அறிவு பரவச் செய்வதைத் தடுத்து நிறுத்தும்படியான முயற்சிகள் வேறு வகைகளிலும் எடுக்கப்பட்டன. லத்தீன் அன்றாட மொழியாக இல்லாதபோது, பொதுமக்களின் மொழிகளில் பைபிள் மொழிபெயர்க்கப்படுவதை மும்முரமாய் எதிர்த்தவர்கள் புறமத ஆட்சியாளர்கள் அல்ல; கிறிஸ்தவர்களாக உரிமைபாராட்டினவர்களே எதிர்த்தவர்கள். அவர்கள் போப் கிரெகரி VII (1073-85), போப் இன்னொசென்ட் III (1198-1216) ஆகியோர் ஆவர். சர்ச்சின் அதிகாரத்திற்கு எதிரான கருத்துவேறுபாட்டை அடக்க முயன்று, குருவாக இராதவன் பைபிள் புத்தகங்களை பொதுமொழியில் வைத்திருக்கக்கூடாது என்று, 1229-ல் பிரான்ஸிலுள்ள டொலோஸியில் நடத்தப்பட்ட ரோமன் கத்தோலிக்க கவுன்ஸில் கட்டளையிட்டது. இந்தக் கட்டளையைச் செயல்படுத்துவதற்கு, கொடும் விசாரணைமுறை பயன்படுத்தப்பட்டது. எனினும் அந்தக் கொடும் விசாரணைமுறை 400 ஆண்டுகளாக நடத்தப்பட்ட பின்னும், கடவுளுடைய வசனத்தை நேசித்தவர்கள் முழு பைபிளையும் மொழிபெயர்த்து, அச்சடிக்கப்பட்ட பதிப்புகளை ஏறக்குறைய 20 மொழிகளிலும், கூடுதலான பேச்சுவழக்கு வகைகளிலும், அதன் பெரும் பகுதிகளை மேலும் 16 மொழிகளிலும் பரவச்செய்து வந்தனர்.
8. 19-வது நூற்றாண்டின்போது, ரஷ்யாவில் பைபிளை மொழிபெயர்ப்பது, விநியோகிப்பது சம்பந்தமாக என்ன நடந்துகொண்டிருந்தது?
8 பொதுமக்களுக்கு பைபிள் கிடைக்காதபடி விலக்கிவைக்க முயற்சி செய்தது கத்தோலிக்க சர்ச் மாத்திரமேயல்ல. 19-வது நூற்றாண்டின் தொடக்கத்தில், செயின்ட் பீட்டர்ஸ்பர்க் பல்கலைக்கழக இறையியல் ஆய்வுத்துறை பேராசிரியர் பாவிஸ்க்கி, மத்தேயு சுவிசேஷத்தை கிரேக்கிலிருந்து ரஷ்ய மொழிக்கு மொழிபெயர்த்தார். கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் மற்ற புத்தகங்களும் ரஷ்ய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டன, பாவிஸ்க்கி பதிப்பாசிரியராக சேவித்தார். 1826-ல், ரஷ்யன் ஆர்த்தடாக்ஸ் சர்ச்சின் ‘புனித குருமார் பேரவையினுடைய’ கட்டுப்பாட்டுக்குள் ரஷ்யன் பைபிள் சொஸைட்டியை வைக்கும்படி மதகுருத்துவம் ரஷ்ய பேரரசரைத் தூண்டும் வரையில், இவை பரவலாக விநியோகிக்கப்பட்டன. அவ்வாறு செய்த பின்பு, அந்த பைபிள் சொஸைட்டியின் நடவடிக்கைகளை அந்தக் குருமாரின் பேரவை பேரளவாய் அடக்கிப்போட்டது. பின்னால், எபிரெய வேதாகமத்தை எபிரெயுவிலிருந்து ரஷ்ய மொழிக்கு பாவிஸ்க்கி மொழிபெயர்த்தார். ஏறக்குறைய அதே சமயத்தில், ஆர்த்தடாக்ஸ் சர்ச்சினுடைய ஒரு கிரேக்க மடத்தின் தலைவராயிருந்த மக்காரியோஸூம் எபிரெய வேதாகமத்தை எபிரெயுவிலிருந்து ரஷ்ய மொழிக்கு மொழிபெயர்த்தார். இவர்கள் இருவரும், தாங்கள் எடுத்த இந்த முயற்சிகளுக்காகத் தண்டிக்கப்பட்டனர்; இவர்களுடைய மொழிபெயர்ப்புகள் சர்ச்சின் பொது ஆவணப் பெட்டகத்தில் வைக்கப்பட்டன. பைபிள் பூர்வ ஸ்லாவிய மொழியிலேயே இருக்கும்படி சர்ச் தீர்மானித்திருந்தது; அது அந்தச் சமயத்தில் பொதுஜனங்களால் வாசிக்கப்படவோ புரிந்துகொள்ளப்படவோ இல்லை. பைபிள் அறிவை பெற ஜனங்கள் எடுத்த முயற்சிகளை இனிமேலும் அடக்க முடியாமற்போனபோதே அந்த ‘கிழக்கத்திய சர்ச் பேரவை’ 1856-ல் அதன் சொந்தப் பேரவையின் அங்கீகாரத்தைக்கொண்ட மொழிபெயர்ப்பைச் செய்யும்படி பொறுப்பேற்றது. அதில் பயன்படுத்தப்படும் சொற்றொடர்கள் சர்ச்சின் கருத்துக்களோடு ஒத்திருக்கும்படி உறுதிப்படுத்திக்கொள்ள, கவனமாய் தந்திரத்துடன் அமைக்கப்பட்ட வழிகாட்டு குறிப்புகளைக்கொண்டு அவ்வாறு செய்தது. இவ்வாறு, கடவுளுடைய வசனத்தைப் பரவச் செய்வதன் சம்பந்தமாக, மதத் தலைவர்கள் வெளித்தோற்றத்தில் காட்டிக்கொண்டதற்கும், தங்கள் வார்த்தைகளாலும் செயல்களாலும் வெளிப்படுத்தின உண்மையான உள்நோக்கங்களுக்கும் வேறுபாடு தெரிவிக்கப்பட்டது.—2 தெசலோனிக்கேயர் 2:3, 4.
பிழைக்கு எதிராக வசனத்தைப் பாதுகாத்தல்
9. கடவுளுடைய வார்த்தையின்பேரில் தங்கள் அன்பை, பைபிள் மொழிபெயர்ப்பாளர்கள் சிலர் எவ்வாறு மெய்ப்பித்துக் காட்டினர்?
9 வேதாகமத்தை மொழிபெயர்த்தவர்களும் பிரதி எடுத்தவர்களுமானவர்களுக்குள், கடவுளுடைய வசனத்தை உண்மையில் நேசித்தவர்களும், அதை எல்லாருக்கும் கிடைக்கக்கூடியதாகச் செய்யும்படி ஊக்கமான முயற்சி எடுத்தவர்களுமான ஆட்கள் இருந்தனர். உவில்லியம் டின்டேல், ஆங்கிலத்தில் பைபிள் கிடைக்கும்படி செய்ததற்காக (1536-ல்) இரத்தசாட்சியாகக் கொல்லப்பட்டார். ஃபிரான்ஸிஸ்கோ டி என்ஸினாஸ், கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தை ஸ்பானிய மொழியில் மொழிபெயர்த்து பிரசுரித்ததற்காக (1544-க்குப் பின்) கத்தோலிக்க கொடுங்கோன்மை விசாரணைமுறையால் சிறைப்படுத்தப்பட்டார். தன் உயிரை இழக்கும் ஆபத்தான நிலையில், ராபர்ட் மாரிஸன் (1807-லிருந்து 1818 வரையில்) பைபிளை சீன மொழியில் மொழிபெயர்த்தார்.
10. கடவுளுடைய வார்த்தையின்பேரிலுள்ள அன்பினால் அல்லாமல் மற்ற நோக்கங்களால் தூண்டப்பட்ட மொழிபெயர்ப்பாளர்கள் இருந்தார்கள் என்று எந்த உதாரணங்கள் காட்டுகின்றன?
10 எனினும், சில சமயங்களில், கடவுளுடைய வார்த்தையின்பேரிலுள்ள உயர் மதிப்பு அல்லாமல், வேறு நோக்கங்கள் நகல் எடுப்போரின் மற்றும் மொழிபெயர்ப்பாளரின் வேலையைப் பாதித்தன. நான்கு உதாரணங்களைக் கவனியுங்கள்: (1) எருசலேமிலிருந்த ஆலயத்திற்குப் போட்டியாக, சமாரியர், கெரிசீம் மலையில் ஓர் ஆலயத்தைக் கட்டினார்கள். அந்த நடவடிக்கைக்கு ஆதரவாக, சமாரிய ஐந்தாகமத்தில், யாத்திராகமம் 20:17-ல் சில வார்த்தைகள் இடையே சேர்க்கப்பட்டன. கெரிசீம் மலையில் கல் பலிபீடம் ஒன்றைக் கட்டி, அங்கே பலிகளைச் செலுத்தும்படியான ஒரு கட்டளை, பத்துக் கட்டளைகளின் பாகம் என்பதுபோல் இடையில் சேர்க்கப்பட்டது. (2) கிரேக்க செப்டுவஜின்ட் வேதாகமத்திற்கு தானியேல் புத்தகத்தை முதலாவதாக மொழிபெயர்த்தவர், தன் மொழிபெயர்ப்பில் கருத்துக்களைப் புரட்டினார். எபிரெய மூலவாக்கியத்திலிருந்ததை விளக்கும் அல்லது மேம்படுத்தும் என்று அவர் கருதின கூற்றுகளை இடையில் சேர்த்தார். வாசிப்போருக்கு ஏற்கத்தகாததாக இருக்கும் என்று அவர் கருதின நுட்பவிவரங்களை விட்டுவிட்டார். தானியேல் 9:24-27-ல் காணப்படுகிற மேசியாவின் வந்திருத்தலுக்குரிய காலத்தைக் குறித்தத் தீர்க்கதரிசனத்தை அவர் மொழிபெயர்க்கையில், அங்கு குறிப்பிட்ட காலப்பகுதியை தவறாகத் திரித்து, வார்த்தைகளைக் கூட்டி, மாற்றியமைத்து, இடம் மாற்றினார். மக்கபியரின் போராட்டத்தை ஆதரிப்பதாகத் தோன்றும்படி அந்தத் தீர்க்கதரிசனத்தைச் செய்விக்கும் நோக்கத்துடன் அவ்வாறு செய்ததாகத் தெரிகிறது. (3) “[பரலோகத்திலே சாட்சியிடுகிறவர்கள் மூவர், பிதா, வார்த்தை, பரிசுத்தஆவி என்பவர்களே, இம்மூவரும் ஒன்றாயிருக்கிறார்கள் . . .]” என்ற வார்த்தைகளை 1 யோவான் 5:7-ன் மேற்கோள் என்பதுபோல், பொ.ச. நான்காம் நூற்றாண்டில், மிதமீறிய வைராக்கியத்துடன் திரித்துவத்தை ஆதரித்த ஒருவர், லத்தீன் ஆய்வுக் கட்டுரையில் அதைச் சேர்த்தாரெனத் தோன்றுகிறது. பின்னால், அந்தப் பகுதி, லத்தீன் பைபிள் கையெழுத்துப் பிரதி ஒன்றின் மூலவாக்கியத்திற்குள் சேர்க்கப்பட்டது. (4) பிரான்ஸில், லூயி XIII (1610-43), புராட்டஸ்டண்டுகளின் முயற்சிகளை முறியடிப்பதற்கு, பைபிளை பிரெஞ்சில் மொழிபெயர்க்கும்படி ஸாக் கோர்பனுக்கு அதிகாரம் கொடுத்தார். இந்த நோக்கத்தை மனதில் கொண்டு, கோர்பன், அப்போஸ்தலர் 13:2-ல் (பிரெஞ்ச்) ‘மாஸின் பரிசுத்த பலியைக்’ குறிப்பிடுவது உட்பட, சில சொற்களை வசனங்களுக்கு இடையில் சேர்த்தார்.
11. (அ) சில மொழிபெயர்ப்பாளர்கள் நேர்மையற்ற காரியங்களைச் செய்தபோதிலும் தேவ வசனம் எவ்வாறு நிலைத்திருந்தது? (ஆ) மூலப்பிரதியில் பைபிளில் சொல்லப்பட்டதை நிரூபிப்பதற்கு, எத்தனை பூர்வ கையெழுத்துப் பிரதிகளின் அத்தாட்சிகள் உள்ளன? (பெட்டியைக் காண்க.)
11 இவ்வாறு இடையில் புகுத்தி தம்முடைய வசனத்தை மாற்றுவதை யெகோவா தடுக்கவில்லை, அவருடைய நோக்கத்தை அது மாற்றவுமில்லை. என்ன பாதிப்புகளை அவை கொண்டிருந்தன? கெரிசீம் மலை சம்பந்தமான குறிப்புகளைச் சேர்த்தது, சமாரிய மதத்தை, மனிதவர்க்கத்தினரை ஆசீர்வதிப்பதற்கான கடவுளுடைய சாதனமாக்கிவிடவில்லை. மாறாக, ஐந்தாகமத்தை நம்புவதாக சமாரிய மதம் உரிமைபாராட்டினபோதிலும், சத்தியத்தைப் போதிக்கும்படி அதை நம்பியிருக்க முடியாது என்பதற்கே அது அத்தாட்சியை அளித்தது. (யோவான் 4:20-24) செப்டுவஜின்ட்டில் சொல்லமைப்பைப் புரட்டினது, தானியேல் தீர்க்கதரிசியின் மூலம் உண்மையாக முன்னறிவிக்கப்பட்ட அந்தக் காலத்தில் மேசியா வருவதைத் தடுக்கவில்லை. மேலும், முதல் நூற்றாண்டில் செப்டுவஜின்ட் பயன்படுத்தப்பட்டு வந்தபோதிலும், யூதர்கள், தங்கள் ஜெபாலயங்களில் வேதாகமம் எபிரெயுவில் வாசிக்கப்படுவதைக் கேட்டு தெரிந்துகொள்வதில் பழக்கப்பட்டிருந்தார்கள். இதன் பலனாக, அந்தத் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றத்திற்கான சமயம் நெருங்கிவந்தபோது, ‘ஜனங்கள் எதிர்பார்த்திருந்தார்கள்.’ (லூக்கா 3:15) திரித்துவத்தை ஆதரிப்பதற்கு 1 யோவான் 5:7-லும், மாஸை சரியெனக் காட்டுவதற்கு அப்போஸ்தலர் 13:2-லும் சேர்க்கப்பட்ட இடைச்சேர்க்கைகள், சத்தியத்தை மாற்றிவிடவில்லை. இந்த வஞ்சகப் பொய்கள், காலப்போக்கில் முழுமையாக வெளிப்படுத்தப்பட்டன. பேரளவில் உள்ள, பைபிளின் மூலமொழி கையெழுத்துப் பிரதிகள், எந்த மொழிபெயர்ப்பின் மதிப்பையும் சரிபார்ப்பதற்கு உதவியாக இருக்கின்றன.
12. (அ) பைபிள் மொழிபெயர்ப்பாளர்கள் சிலர், வினைமையான என்ன மாற்றங்களைச் செய்தனர்? (ஆ) இவை எத்தகைய பரந்த பாதிப்பை உண்டாக்கின?
12 வேதாகமத்தை மாற்றுவதற்குச் செய்யப்பட்ட மற்ற முயற்சிகள், சில வசனங்களின் வார்த்தைகளை மாற்றியமைப்பதைப் பார்க்கிலும் அதிகம் உட்பட்டதாக இருந்தன. மெய்யான கடவுளுடைய தனித்துவத்தின்பேரிலேயே ஒரு தாக்கலை இவை உண்டாக்கின. எந்த ஒரு மனிதனை அல்லது மனித அமைப்பைப் பார்க்கிலும் அதிக வல்லமைவாய்ந்த ஒரு மூலகாரணத்திலிருந்து வரும் செல்வாக்கின்—ஆம், யெகோவாவின் பெரும் பகைவனாகிய பிசாசான சாத்தானிடமிருந்து வரும் செல்வாக்கின்—தெளிவான அத்தாட்சியை இந்த மாற்றங்களின் இயல்பும் அளவும் தாமே அளித்தன. அந்தச் செல்வாக்குக்கு உடன்பட்டு, மொழிபெயர்ப்பாளர்களும் நகல் எடுப்போரும்—சிலர் ஆவலுடனும், மற்றவர்கள் தயக்கத்துடனும்—கடவுளுடைய சொந்த தனிப்பட்ட பெயராகிய, யெகோவா என்பதை, அவருடைய ஏவப்பட்ட வார்த்தையில் அது தோன்றின ஆயிரக்கணக்கான இடங்களிலிருந்து நீக்கிவிடத் தொடங்கினர். எபிரெயுவிலிருந்து, கிரேக்கு, லத்தீன், ஜெர்மன், ஆங்கிலம், இத்தாலியன், டச் போன்றவற்றில் மொழிபெயர்க்கப்பட்ட மொழிபெயர்ப்புகள், மிக முன்னதாகவே கடவுளுடைய பெயரை முழுமையாக விட்டுவிட்டன, அல்லது சில இடங்களில் மாத்திரமே விட்டுவைத்தன. கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் பிரதிகளிலிருந்தும் இது நீக்கப்பட்டது.
13. பைபிளில் மாற்றம் செய்வதற்கு எடுத்த பரவலான முயற்சி, கடவுளுடைய பெயரை மனிதரின் நினைவிலிருந்து நீக்கிப்போடுவதில் ஏன் முடிவடையவில்லை?
13 எனினும், அந்த மகிமையான பெயரை, மனித நினைவிலிருந்து முற்றிலுமாக நீக்கிப்போட முடியவில்லை. ஸ்பானிஷ், போர்ச்சுகீஸ், ஜெர்மன், ஆங்கிலம், பிரெஞ்ச், இன்னும் மற்ற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட எபிரெய வேதாகமத்தின் மொழிபெயர்ப்புகள் நேர்மையுடன், கடவுளுடைய சொந்தப் பெயரை தொடர்ந்து வைத்திருந்தன. 16-வது நூற்றாண்டுக்குள், கடவுளுடைய சொந்தப் பெயர், கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் பல்வேறு எபிரெய மொழிபெயர்ப்புகளில் மறுபடியும் தோன்ற ஆரம்பித்தது; 18-வது நூற்றாண்டுக்குள், ஜெர்மன் மொழியிலும்; 19-வது நூற்றாண்டுக்குள், க்ரோவேஷியன் மற்றும் ஆங்கில மொழிகளிலும் தோன்றியது. கடவுளுடைய பெயரை மறைத்துப்போட ஆட்கள் முயற்சி செய்தாலும், “யெகோவாவின் நாள்” வருகையில், கடவுள் அறிவிக்கிற பிரகாரம், “நானே யெகோவா என்று தேசங்கள் அறியவேண்டும்.” கடவுளின் அந்த அறிவிக்கப்பட்ட நோக்கம் தவறாது.—2 பேதுரு 3:10; எசேக்கியேல் 38:23, NW; ஏசாயா 11:9; 55:11.
செய்தி பூகோளம் சுற்றிலும் எட்டுகிறது
14. (அ) இருபதாம் நூற்றாண்டுக்குள், எத்தனை ஐரோப்பிய மொழிகளில் பைபிள் அச்சடிக்கப்பட்டிருந்தது, அதன் பலன் என்னவாக இருந்தது? (ஆ) 1914-ன் முடிவுக்குள் எத்தனை ஆப்பிரிக்க மொழிகளில் பைபிள் கிடைக்கக்கூடியதாக இருந்தது?
14 20-வது நூற்றாண்டின் தொடக்க காலத்திலேயே 94 ஐரோப்பிய மொழிகளில் பைபிள் அச்சடிக்கப்பட்டுவந்தது. 1914-ல் புறஜாதியாரின் காலங்களினுடைய முடிவோடு, உலகத்தை அதிரவைக்கும் நிகழ்ச்சிகள் சம்பவிக்கும் என்ற உண்மையை, உலகத்தின் அந்தப் பாகத்தில் இருந்த பைபிள் மாணாக்கருக்கு அது எச்சரித்தது; நிச்சயமாகவே அவை சம்பவித்தன! (லூக்கா 21:24) பெரும் சம்பவங்களுக்குரிய அந்த ஆண்டாகிய 1914 முடிவதற்கு முன்பாக, பைபிள், ஆங்கிலம், பிரெஞ்ச், மற்றும் போர்ச்சுகீஸ் மொழிகளில் பரவலாக பயன்படுத்தப்பட்டதோடுகூட, முழுமையாக அல்லது அதன் சில புத்தகங்கள் 157 ஆப்பிரிக்க மொழிகளில் பிரசுரிக்கப்பட்டன. இவ்வாறு, அங்கு வாழ்ந்துகொண்டிருந்த பல இனமரபினரிலும் தேசத்தாரான தொகுதியினரிலும் மனத்தாழ்மையுள்ளோருக்கு, ஆவிக்குரிய பிரகாரமாய் விடுதலைசெய்யும் பைபிள் சத்தியங்களைப் போதிப்பதற்கான அஸ்திபாரம் போடப்பட்டது.
15. கடைசி நாட்கள் தொடங்கினபோது, எத்தனை மொழிகளில் அமெரிக்காக்களில் இருந்த ஜனங்களுக்கு பைபிள் கிடைக்கக்கூடியதாக இருந்தது?
15 முன்னறிவிக்கப்பட்ட கடைசி நாட்களுக்குள் இந்த உலகம் பிரவேசிக்கையில், அமெரிக்க நாடுகளில் பைபிள் பரவலாகக் கிடைக்கக்கூடியதாக இருந்தது. ஐரோப்பாவிலிருந்து வந்து குடியேறினவர்கள், தங்கள் எல்லா பல்வேறு மொழிகளிலும் அதைத் தங்களுடன் கொண்டுவந்திருந்தார்கள். சர்வதேச பைபிள் மாணாக்கர் என அப்போது அறியப்பட்டிருந்த யெகோவாவின் சாட்சிகளால் அளிக்கப்பட்ட பைபிள் பேச்சுக்களாலும், அவர்களால் பிரசுரிக்கப்பட்ட இலக்கியங்களின் மிகப் பரந்த விநியோகிப்பாலும், பைபிள் கல்வி புகட்டும் விரிவான திட்டம் நிறைவேற்றப்பட்டு வந்தது. கூடுதலாக, பூகோளத்தின் மேற்கு பகுதியின் குடிமக்களுடைய தேவைகளை நிரப்புவதற்கு, வேறு 57 மொழிகளில் பைபிள் சங்கங்கள் பைபிளை ஏற்கெனவே அச்சடித்திருந்தன.
16, 17. (அ) பூகோளம் முழுவதும் பிரசங்கிப்பதற்கான சமயம் வந்தபோது, எந்த அளவுக்கு பைபிள் கிடைக்கக்கூடியதாகியிருந்தது? (ஆ) எவ்வாறு பைபிள், நிலைத்திருப்பதும் மிகுந்த செல்வாக்குச் செலுத்துவதுமான ஒரு புத்தகமாக உண்மையாகவே நிரூபித்திருக்கிறது?
16 ‘முடிவு வருவதற்கு’ முன்பாக இந்த நற்செய்தியை பூகோளமெங்கும் பிரசங்கிப்பதற்கான காலம் வந்தபோது, பைபிள் ஆசியாவுக்கும் பசிபிக் தீவுகளுக்கும், புதிதாய் வந்த ஒன்றாக இல்லை. (மத்தேயு 24:14) பூகோளத்தின் அந்தப் பகுதிக்குத் தனிப்பட்டவையாக இருந்த 232 மொழிகளில் அது ஏற்கெனவே பிரசுரிக்கப்பட்டு வந்தது. முழுமையான பைபிள்களாக சில இருந்தன; கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தின் மொழிபெயர்ப்புகளாக பல இருந்தன; மற்றவை பரிசுத்த வேதாகமங்களின் தனித்தனி புத்தகங்களாக இருந்தன.
17 வெறுமனே பொருட்காட்சி சாலையில் காட்சிக்கு வைக்கப்படும் பழங்கால புத்தகமாக பைபிள் நிலைத்திருக்கவில்லை என்பது தெளிவாயிருக்கிறது. இருந்துவரும் எல்லா புத்தகங்களிலும், இதுவே மிக அதிகப் பரவலாக மொழிபெயர்க்கப்பட்டதும் மிக அதிக விரிவாய் விநியோகிக்கப்பட்டதுமான புத்தகம். கடவுளுடைய தயவு இருந்ததன் அத்தாட்சிக்கு ஒத்திசைவாக, அதில் பதிவுசெய்யப்பட்டது நிறைவேறிக்கொண்டிருந்தது. அதன் போதகங்களும் அவற்றை ஏவிய ஆவியும், பல நாட்டு ஜனங்களின் வாழ்க்கையில் நிலையான நற்பாதிப்பை கொண்டிருந்தன. (1 பேதுரு 1:24, 25) ஆனால் இன்னும் அதிகம்—மிக அதிகம்—வரவேண்டியிருந்தது.
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
◻ என்றென்றும் நிலைத்திருக்கும் ‘நமது தேவனுடைய வசனம்’ எது?
◻ பைபிளை பொதுமக்கள் அறியாதிருக்க என்ன முயற்சிகள் செய்யப்பட்டிருக்கின்றன, அவற்றின் விளைவுகள் என்ன?
◻ பைபிளின் நேர்மை எவ்வாறு பாதுகாக்கப்பட்டிருக்கிறது?
◻ கடவுளுடைய நோக்கத்தைப் பற்றிய கூற்று எவ்வாறு உயிருள்ள வசனமாக நிரூபித்திருக்கிறது?
[பக்கம் 12-ன் பெட்டி]
பைபிளின் மூலப்பிரதியில் சொல்லியிருந்தது நமக்கு உண்மையில் தெரியுமா?
கையால் எழுதப்பட்ட ஏறக்குறைய 6,000 கையெழுத்துப் பிரதிகள், எபிரெய வேதாகமத்தின் பொருளடக்கங்களுக்கு சான்றுறுதி அளிக்கின்றன. இவற்றில் சில கிறிஸ்தவ சகாப்தத்திற்கு முந்திய காலத்திற்குரியவை. எபிரெய வேதாகமம் முழுமையாய் அடங்கியவையாக குறைந்தபட்சம் 19 பூர்வ கையெழுத்துப் பிரதிகள் இயக்குமுறை அச்சடிப்பு கண்டுபிடிப்பதற்கு முந்தின காலத்திற்கு உரியவையாக உள்ளன. கூடுதலாக, வேறு 28 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட, அதே காலத்து மொழிபெயர்ப்புகளும் இருக்கின்றன.
கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்துக்கு, கிரேக்கில் ஏறக்குறைய 5,000 கையெழுத்துப் பிரதிகள் பட்டியலிடப்பட்டுள்ளன. இவற்றில் ஒன்று, பொ.ச. 125-க்கு முந்திய காலத்திற்குரியதாக, இவ்வாறு அதன் மூலப்பிரதி எழுதப்பட்ட சில ஆண்டுகளுக்கே பிந்தியதாகத் தேதி குறிக்கப்பட்டிருக்கிறது. சில துண்டுப்பிரதிகள் இன்னும் அதிக முற்பட்ட காலத்துக்குரியவையாகக் கருதப்படுகின்றன. தேவாவியால் ஏவப்பட்ட 27 புத்தகங்களில் 22 புத்தகங்களுக்கு, முற்கால அன்சியல் (சதுரவடிவு எழுத்தில் எழுதப்பட்ட), முழு கையெழுத்துப் பிரதிகள் 10-லிருந்து 19 என்ற எண்ணிக்கையில் உள்ளன. பைபிளின் இந்த கிரேக்க வேதாகம புத்தகங்களில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் முழுமையான அன்சிய கையெழுத்துப் பிரதிகளையுடைய புத்தகங்கள் மூன்று ஆகும். அவை வெளிப்படுத்துதலுக்கு உரியவை. கிறிஸ்தவ கிரேக்க வேதாகமம் முழுமையாக அடங்கியுள்ள ஒரு கையெழுத்துப் பிரதி, பொ.ச. நான்காம் நூற்றாண்டுக்குரியதாக உள்ளது.
வேறு எந்த பூர்வ இலக்கியமும் இத்தனை அதிகமாய் பூர்வ ஆவணச்சான்றின் அத்தாட்சியால் உறுதிசெய்யப்பட்டில்லை.