உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • wp21 எண் 1 பக். 10-13
  • நீங்கள் எப்படி ஜெபம் செய்ய வேண்டும்?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • நீங்கள் எப்படி ஜெபம் செய்ய வேண்டும்?
  • காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2021
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • இயேசுவின் பெயரில் யெகோவாவிடம் ஜெபம் செய்ய வேண்டும்
  • இதயத்திலிருந்து பேச வேண்டும்
  • கடவுளுடைய விருப்பத்துக்கு ஏற்றபடி ஜெபம் செய்ய வேண்டும்
  • என்னென்ன விஷயங்களுக்காக ஜெபம் செய்யலாம்?
  • பொறுமையாக இருங்கள், தொடர்ந்து ஜெபம் செய்யுங்கள்
  • ஜெபம்​—கடவுளிடம் நெருங்க வழி
    இன்றும் என்றும் சந்தோஷம்!—கடவுள் சொல்லும் வழி
  • ஜெபம்—நமக்குக் கிடைத்திருக்கும் ஒரு பாக்கியம்
    பைபிள் நமக்கு என்ன சொல்லித் தருகிறது?
  • ஜெபத்தில் கடவுளிடம் நெருங்குதல்
    கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்?
  • ஜெபத்தில் கடவுளிடம் நெருங்கி வாருங்கள்
    பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது?
மேலும் பார்க்க
காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2021
wp21 எண் 1 பக். 10-13

நீங்கள் எப்படி ஜெபம் செய்ய வேண்டும்?

யெகோவா “ஜெபத்தைக் கேட்கிற” கடவுள் என்று பைபிள் சொல்கிறது. (சங்கீதம் 65:2) எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் அவரிடம் பேசலாம்; சத்தமாகவும் பேசலாம், மனதுக்குள்ளும் பேசலாம். “தகப்பனே” என்று தன்னைக் கூப்பிடும்படி யெகோவா விரும்புகிறார். உண்மையிலேயே அவர் நம்முடைய மிகச் சிறந்த தகப்பன்! (மத்தேயு 6:9) தனக்குப் பிரியமான விதத்தில் எப்படி ஜெபம் செய்ய வேண்டுமென்று அவர் நமக்கு அன்பாகக் கற்றுக்கொடுக்கிறார்.

இயேசுவின் பெயரில் யெகோவாவிடம் ஜெபம் செய்ய வேண்டும்

“நீங்கள் என் தகப்பனிடம் எதைக் கேட்டாலும், அதை அவர் என்னுடைய பெயரில் உங்களுக்குத் தருவார்.”—யோவான் 16:23.

இயேசுவின் இந்த வார்த்தைகள் எதைக் காட்டுகின்றன? உருவச் சிலைகள், புனிதர்கள், தேவதூதர்கள் அல்லது இறந்துபோன முன்னோர்கள் மூலம் ஜெபம் செய்யாமல், இயேசுவின் பெயரில் ஜெபம் செய்ய வேண்டுமென்றே யெகோவா விரும்புகிறார் என்பதைக் காட்டுகின்றன. அப்படியென்றால், ‘இயேசுவின் பெயரில் இதைச் செய்கிறோம்’ என்று ஜெபத்தில் சொல்ல வேண்டும். இப்படிச் சொல்லும்போது, அவர் நமக்காகச் செய்திருக்கிற விஷயங்களைப் புரிந்துகொள்கிறோம் என்பதைக் காட்டுகிறோம். “என் மூலமாக மட்டுமே ஒருவரால் தகப்பனிடம் வர முடியும்” என்று இயேசு சொன்னார்.—யோவான் 14:6.

இதயத்திலிருந்து பேச வேண்டும்

“உங்களுடைய இதயத்தில் இருப்பதையெல்லாம் அவர்முன் ஊற்றிவிடுங்கள்.”—சங்கீதம் 62:8.

யெகோவாவிடம் ஜெபம் செய்யும்போது, அன்பான ஒரு அப்பாவிடம் பேசுவதுபோல் பேச வேண்டும். மதிப்பு மரியாதையோடு இதயத்திலிருந்து அவரிடம் பேச வேண்டும். ஒரு ஜெபப் புத்தகத்திலிருந்து வாசிக்கவோ ஒரு ஜெபத்தை மனப்பாடம் செய்து ஒப்பிக்கவோ கூடாது.

கடவுளுடைய விருப்பத்துக்கு ஏற்றபடி ஜெபம் செய்ய வேண்டும்

“கடவுளுடைய விருப்பத்துக்கு ஏற்றபடி நாம் எதைக் கேட்டாலும், அவர் காதுகொடுத்துக் கேட்கிறார்.”—1 யோவான் 5:14.

நமக்காக யெகோவா என்ன செய்யப் போகிறார், அவருக்காக நாம் என்ன செய்ய வேண்டுமென்று அவர் விரும்புகிறார் என்றெல்லாம் பைபிளில் சொல்லியிருக்கிறார். நம் ஜெபத்தைக் கடவுள் கேட்க வேண்டுமென்றால், ‘அவருடைய விருப்பத்துக்கு ஏற்றபடி’ ஜெபம் செய்ய வேண்டும். அதற்கு, நாம் பைபிளைப் படித்து அவரைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொள்ள வேண்டும். அப்போது, நம் ஜெபம் கடவுளுக்குப் பிரியமானதாக இருக்கும்.

என்னென்ன விஷயங்களுக்காக ஜெபம் செய்யலாம்?

ஒரு குடும்பத்தினர் உணவு சாப்பிடுவதற்கு முன் சேர்ந்து ஜெபம் செய்கிறார்கள்.

உங்களுடைய தேவைகளுக்காக ஜெபம் செய்யுங்கள். உணவு, உடை, இருப்பிடம் ஆகிய அன்றாட தேவைகளுக்காக ஜெபம் செய்யலாம். சரியான தீர்மானங்களை எடுப்பதற்குத் தேவையான ஞானத்தைக் கேட்டும், பிரச்சினைகளைத் தாங்கிக்கொள்வதற்குத் தேவையான பலத்தைக் கேட்டும் ஜெபம் செய்யலாம். விசுவாசத்துக்காக... மன்னிப்புக்காக... உதவிக்காக... கடவுளிடம் ஜெபம் செய்யலாம்.—லூக்கா 11:3, 4, 13; யாக்கோபு 1:5, 17.

ஒரு கணவர், மருத்துவமனையில் இருக்கும் தன் மனைவியோடு சேர்ந்து ஜெபம் செய்கிறார்.

மற்றவர்களுக்காக ஜெபம் செய்யுங்கள். பிள்ளைகள்மேல் உயிரையே வைத்திருக்கிற அப்பா-அம்மா, தங்களுடைய பிள்ளைகள் ஒருவருக்கொருவர் பாசமாக இருப்பதைப் பார்க்கும்போது ரொம்ப சந்தோஷப்படுவார்கள். அதேபோல் யெகோவாவும் பூமியிலுள்ள தன்னுடைய பிள்ளைகள் ஒருவருக்கொருவர் பாசமாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறார். உங்களுடைய கணவருக்காக/மனைவிக்காக, பிள்ளைகளுக்காக, குடும்பத்துக்காக, நண்பர்களுக்காக ஜெபம் செய்யலாம். “ஒருவருக்காக ஒருவர் ஜெபம் செய்யுங்கள்” என்று சீஷனாகிய யாக்கோபு சொன்னார்.—யாக்கோபு 5:16.

மாலை நேரத்தில் ஒருவர் புல்வெளியில் நடந்துபோகிறார்.

நன்றி சொல்லுங்கள். நம் படைப்பாளர், “வானத்திலிருந்து மழையையும், பருவ காலங்களில் அமோக விளைச்சலையும், ஏராளமான உணவையும் உங்களுக்குத் தந்து, உங்கள் உள்ளத்தைச் சந்தோஷத்தால் நிரப்பி நன்மை செய்திருக்கிறார்” என்று பைபிள் சொல்கிறது. (அப்போஸ்தலர் 14:17) நமக்காகக் கடவுள் செய்திருக்கிற எல்லாவற்றையும் பற்றி யோசித்துப் பார்க்கும்போது ஜெபத்தில் அவருக்கு நன்றி சொல்ல நாம் தூண்டப்படுவோம். கடவுளுக்குக் கீழ்ப்படிந்து நடப்பதன் மூலமும் அவருக்கு நம் நன்றியைக் காட்ட வேண்டும்.—கொலோசெயர் 3:15.

பொறுமையாக இருங்கள், தொடர்ந்து ஜெபம் செய்யுங்கள்

சில சமயங்களில், நாம் மனதார செய்கிற ஜெபங்களுக்கு உடனடியாக பதில் கிடைக்காததை நினைத்து நாம் மனமுடைந்து போகலாம். அதனால், கடவுளுக்கு நம்மேல் அக்கறையில்லை என்ற முடிவுக்கு வர வேண்டுமா? வேண்டியதில்லை. அதற்குப் பதிலாக, தொடர்ந்து ஜெபம் செய்ய வேண்டும். இந்த அனுபவங்களைக் கவனியுங்கள்:

முதல் கட்டுரையில் பார்த்த ஸ்டீவ் இப்படிச் சொல்கிறார்: “நான் தொடர்ந்து ஜெபம் செய்யாம இருந்திருந்தா, என்னோட வாழ்க்கை எப்பவோ இருண்டு போயிருக்கும்.” தன்னுடைய எண்ணத்தை மாற்றிக்கொள்ள எது அவருக்கு உதவியது? அவர் பைபிளைப் படிக்க ஆரம்பித்த சமயத்தில் ஜெபம் செய்வது, அதுவும் தொடர்ந்து ஜெபம் செய்வது எவ்வளவு முக்கியம் என்பதைப் புரிந்துகொண்டார். “என்னோட அன்பான நண்பர்கள் செஞ்ச எல்லா உதவிக்கும் நான் கடவுளுக்கு ரொம்ப நன்றி சொல்றேன். இதுவரை இல்லாத அளவுக்கு இப்போ நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன்” என்கிறார் ஸ்டீவ்.

இப்போது ஜெனியைப் பற்றிப் பார்க்கலாம். தன்னுடைய ஜெபத்தைக் கடவுள் கேட்கிற அளவுக்குத் தனக்குத் தகுதியில்லை என்று அவர் நினைத்தார். அவர் இப்படிச் சொல்கிறார், “என் மனசு உடைஞ்சு போயிருந்தப்போ, நான் எதுக்குமே லாயக்கில்லனு ஏன் நினைக்கிறேங்கிறத புரிஞ்சுக்க எனக்கு உதவி செய்யுங்கனு கடவுள்கிட்ட கெஞ்சி கேட்டேன்.” இது அவருக்கு எப்படி உதவியது? “கடவுள் என்னை எப்படி பாக்குறாரோ அதே மாதிரி நானும் என்னை பாக்க ஜெபம் எனக்கு உதவி செஞ்சுது. என் மனசு என்னை குறை சொல்லிகிட்டே இருந்தாலும், கடவுள் அப்படிச் செய்ய மாட்டார்னு நான் புரிஞ்சுகிட்டேன். அதுமட்டுமல்ல, என்னோட முயற்சிய கைவிடாம இருக்கவும் ஜெபம் எனக்கு உதவி செஞ்சுது” என்கிறார் ஜெனி. இதனால், என்ன பலன் கிடைத்தது? அவர் தொடர்ந்து இப்படிச் சொல்கிறார், “யெகோவாவ ஒரு நிஜமான நபரா, அன்பான அக்கறையான கடவுளா, அப்பாவா, ஒரு நண்பரா பாக்க ஜெபம்தான் எனக்கு உதவி செஞ்சிருக்கு. எனக்கு உதவ அவர் எப்பவும் என் பக்கத்திலேயே இருக்காரு. அவருக்கு பிடிச்சத நான் செஞ்சுட்டிருந்தா நிச்சயம் அவர் எனக்கு உதவி செய்வாரு.”

இஸபெல் தன் கணவரோடும் மகனோடும்.

உடல்நல பிரச்சினை இருந்தாலும் ஜெரார்ட் சந்தோஷமாக இருப்பதைப் பார்க்கும்போது, “என் ஜெபத்துக்கு கடவுள் கொடுத்த மிகச் சிறந்த பதிலே என் பையன்தான்னு நான் புரிஞ்சுகிக்கிறேன்” என்று இஸபெல் சொல்கிறார்

இப்போது இஸபெலுடைய அனுபவத்துக்கு வரலாம். அவர் கர்ப்பமாக இருந்தபோது, உடல் குறைபாடுள்ள குழந்தைதான் பிறக்கும் என்று மருத்துவர்கள் அவரிடம் சொல்லியிருந்தார்கள். அதைக் கேட்டதும் அவர் அப்படியே இடிந்துபோய்விட்டார். சிலர், கருக்கலைப்பு செய்யும்படியும் அவரிடம் சொன்னார்கள். “இதெல்லாம் கேட்டு தாங்கமுடியாம நான் செத்து போயிடுவேன்னு நெனச்சேன்” என்கிறார் இஸபெல். அவர் எப்படி இதையெல்லாம் தாங்கிக்கொண்டார்? “உதவி செய்யுங்கனு கேட்டு கடவுள்கிட்ட ஜெபம் செஞ்சுகிட்டே இருந்தேன்” என்று அவர் சொல்கிறார். பிறகு, உடல் குறைபாடுள்ள ஒரு மகன்தான் அவருக்குப் பிறந்தான். அவன் பெயர் ஜெரார்ட். தன் ஜெபத்துக்குக் கடவுள் பதில் கொடுத்ததாக இஸபெல் நினைத்தாரா? நிச்சயமாக! எப்படி சொல்கிறோம்? “இப்போ என்னோட பையனுக்கு 14 வயசு. உடல்நல பிரச்சினை இருந்தாலும் அவன் சந்தோஷமா இருக்குறத என்னால பாக்க முடியுது. என் ஜெபத்துக்கு கடவுள் கொடுத்த மிகச் சிறந்த பதிலே என் பையன்தான்னு நான் புரிஞ்சுகிட்டேன். யெகோவா கொடுத்த பெரிய பொக்கிஷமே அவன்தான்” என்கிறார் இஸபெல்.

மனதார இவர்கள் சொன்ன வார்த்தைகள் சங்கீதக்காரன் சொன்ன வார்த்தைகளை நமக்கு ஞாபகப்படுத்துகின்றன. “யெகோவாவே, தாழ்மையானவர்களின் வேண்டுதலை நீங்கள் கேட்பீர்கள். அவர்களுடைய இதயத்தைத் திடப்படுத்துவீர்கள், அவர்களுடைய வேண்டுதலைக் கவனித்துக் கேட்பீர்கள்.” (சங்கீதம் 10:17) விடாமல் ஜெபம் செய்ய இப்படி எத்தனையோ நல்ல காரணங்கள் இருக்கின்றன.

இயேசு செய்த நிறைய ஜெபங்கள் பைபிளில் இருக்கின்றன. அவற்றில், தன்னுடைய சீஷர்களுக்கு அவர் கற்றுக்கொடுத்த ஜெபம்தான் ரொம்பவே பிரபலமானது. அதிலிருந்து நாம் என்ன பாடம் கற்றுக்கொள்ளலாம்?

இயேசு கற்றுக்கொடுத்த ‘பரமண்டல ஜெபம்’

மலைப் பிரசங்கத்தில் இயேசு சொல்கிற விஷயங்களை மக்கள் கவனித்துக் கேட்கிறார்கள்.

மலைப் பிரசங்கத்தில், இயேசு தன்னுடைய சீஷர்களுக்கு ஒரு ஜெபத்தைக் கற்றுக்கொடுத்தார். அதுதான் ‘பரமண்டல ஜெபம்’ என்று சொல்லப்படுகிறது. (மத்தேயு 6:9-13; லூக்கா 11:2-4-யும் பாருங்கள்.) அந்தச் சமயத்திலிருந்து இது பிரபலமான ஜெபமாக ஆகிவிட்டது. அதனால், நிறைய பேர் இதை மனப்பாடம் செய்து அப்படியே திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள். இப்படிச் செய்வதற்காகத்தான் இந்த ஜெபத்தை இயேசு கற்றுக்கொடுத்தாரா? அப்படியிருக்க வாய்ப்பில்லை. ஏனென்றால், சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லக் கூடாது என்று மலைப் பிரசங்கத்தில் ஏற்கெனவே தன்னுடைய சீஷர்களிடம் இயேசு சொல்லியிருந்தார். (மத்தேயு 6:7) எப்படி ஜெபம் செய்ய வேண்டும், என்னென்ன விஷயங்களுக்காக ஜெபம் செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்வதற்காகவே இதை அவர் கற்றுக்கொடுத்தார். இந்த ஜெபத்திலிருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்களை இப்போது பார்க்கலாம்.

“பரலோகத்தில் இருக்கிற எங்கள் தகப்பனே”

  • கடவுளிடம் மட்டும்தான் நாம் ஜெபம் செய்ய வேண்டும்.

“உங்களுடைய பெயர் பரிசுத்தப்பட வேண்டும்”

  • கடவுளுடைய பெயருக்கு, அதாவது யெகோவா என்ற பெயருக்கு, மதிப்பு மரியாதை கொடுக்க வேண்டும்; அதைப் புனிதமாகக் கருத வேண்டும்.

“உங்களுடைய அரசாங்கம் வர வேண்டும்”

  • கடவுளுடைய அரசாங்கம் என்பது பரலோக அரசாங்கத்தைக் குறிக்கிறது. இயேசுதான் அதன் ராஜா. அந்த அரசாங்கம், சீக்கிரத்தில் இந்த முழு பூமியையும் ஆட்சி செய்யும்.

“உங்களுடைய விருப்பம் பரலோகத்தில் நிறைவேறுவதுபோல் பூமியிலும் நிறைவேற வேண்டும்”

  • மனிதர்கள் இந்தப் பூமியில் காலமெல்லாம் சமாதானமாகவும் பாதுகாப்பாகவும் வாழ வேண்டும் என்பதுதான் கடவுளுடைய விருப்பம்.

“இன்றைக்குத் தேவையான உணவை எங்களுக்குக் கொடுங்கள்”

  • வாழ்வதற்குத் தேவையானவற்றை யெகோவாதான் நமக்குக் கொடுக்கிறார்.

“எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியுங்கள்”

  • நாம் எல்லாருமே நிறைய தவறுகளைச் செய்கிறோம். அதனால், நமக்கு மன்னிப்பு தேவைப்படுகிறது.

இந்தக் குறிப்புகளை மனதில் வைத்துக்கொண்டால், அர்த்தமுள்ள விதத்தில் உங்களால் ஜெபம் செய்ய முடியும்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்