இளைஞர் கேட்கின்றனர் . . .
நான் என்ன வாழ்க்கைப் பணியைத் தெரிந்துகொள்ள வேண்டும்?
‘என்னுடைய மீதமுள்ள வாழ்க்கையில் நான் என்ன செய்ய வேண்டும்?’ கட்டாயமாக ஏதாவது ஒரு சமயத்திலாவது நீ இந்தச் சவாலுக்குரிய கேள்வியை எதிர்ப்படுகிறாய். மனதைக் குழப்புகின்ற வரிசையான பல தெரிவுகள் முன்னால் தோன்றுகின்றன—மருத்துவம், வியாபாரம், கலை, கல்வி, கம்ப்யூட்டர் விஞ்ஞானம், பொறியியல், தொழில்கள். ஒருவேளை பின்வருமாறு சொன்ன இளைஞனைப் போல நீ நினைக்கலாம்: “நான் வெற்றிகரமானது என்பதாக நினைப்பது . . . நீங்கள் வளர்ந்துவருகையில் இருந்த அதே வசதியைக் காத்துக்கொள்வதாகும்.” அல்லது உன் பொருளாதார நிலையை மேம்படுத்த வேண்டும் என்று நீ எண்ணலாம்.
ஆனால் பொருளாதார ஆதாயத்தைக் காட்டிலும் வெற்றிக்கு அதிகமிருக்கிறதா? உலகப்பிரகாரமான எந்த ஒரு வாழ்க்கைப் பணியும் உனக்கு மெய்யான சாதனையுணர்வைக் கொடுக்குமா?
‘அது எனக்கு ஒரு பொருட்டாக இல்லை’
கவர்ச்சியானது, கிளர்ச்சியூட்டுவது, இலாபகரமானது! இவ்விதமாகத்தான் உலகப்பிரகாரமான வாழ்க்கைப்பணிகளைத் திரைப்படங்களும், டி.வி.யும், புத்தகங்களும் அநேகமாக வருணிக்கின்றன. ஆனால் வெற்றி எனப்படுவதை அடைய வாழ்க்கைப் பணியில், சுயமுன்னேற்றத்தைக் குறியாகக் கொண்டவர்கள் அநேகமாக அங்கீகாரத்துக்காக ஒருவரோடொருவர் உயிர்-மரண போரட்டத்தில் போட்டியிட வேண்டியுள்ளது. “விரைந்து முன்னேறும் திறம்வாய்ந்த, உயர்தகுதி பெற்ற தொழில்நுட்ப தொழில் துறையிலுள்ள” அநேக இளம் மனிதர்கள் எவ்விதமாக “அதிருப்தி, கவலை, சோர்வு, வெறுமை, அறிவுப்பிறழ்ச்சி இன்னும் பலவிதமான சரீர கோளறுகளைக் குறித்து” தெரிவிக்கிறார்கள் என்பதாக டாக்டர் டக்லஸ் லாபையர் சொல்கிறார்.
வெகு காலத்துக்கு முன்பாகவே சாலொமோன் ராஜா வெறும் உலகப்பிரகாரமான வெற்றியின் பயனின்மையை வெளிப்படுத்திக்காட்டினான். உண்மையில் எல்லையற்றிருந்த செல்வத்தின் துணைக்கொண்டு சாலொமோன் வாழ்க்கைத் தொழிலில் வியத்தகு சாதனைகளின் பட்டியலை உருவாக்கினான். (பிரசங்கி 2:4–10 வாசிக்கவும்.) என்றபோதிலும் சாலொமோனின் முடிவு வருமாறு: “என் கைகள் செய்த சகல வேலைகளையும், நான் பட்ட எல்லாப் பிரயாசத்தையும் கண்ணோக்கிப் பார்த்தேன்; இதோ, எல்லாம் மாயையும் [“அது எனக்கு ஒரு பொருட்டாக இல்லை என்பதை நான் உணர்ந்தேன்,” இன்றைய ஆங்கில மொழிபெயர்ப்பு] மனதுக்குச் சஞ்சலமுமாயிருந்தது.”—பிரசங்கி 2:11.
ஒரு வேலை செல்வத்தையும் அங்கீகாரத்தையும் கொண்டுவரலாம், ஆனால் அது ஒருவருடைய ‘ஆவிக்குரிய தேவைகளைப்’ பூர்த்தி செய்யமுடியாது. (மத்தேயு 5:3) ஆகவே உலகப்பிரகாரமான சாதனைகளைச் சுற்றி மாத்திரமே தங்களுடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறவர்களுக்குத் திருப்தி கிடைக்காமற்போகிறது.
திருப்தியளிக்கும் ஒரு வாழ்க்கைப்பணி
சாலொமோன் ராஜா அறிவுரை கூறுவதாவது: “காரியத்தின் கடைத்தொகையைக் கேட்போமாக, மெய் தேவனுக்குப் பயந்து அவர் கற்பனைகளைக் கைக்கொள், எல்லா மனுஷர் மேலும் விழுந்த கடமை இதுவே.” (பிரசங்கி 12:13) இன்று கிறிஸ்தவர்களின் முக்கிய கடமை ராஜ்ய செய்தியைப் பிரசங்கிப்பதாகும். (மத்தேயு 24:14) இந்தக் கடமையைப் பொறுப்புணர்ச்சியுடன் எடுத்துக்கொள்ளும் இளைஞர், முடிந்தவரை இந்த வேலையில் முழுமையான பங்கைக் கொண்டிருக்க வற்புறுத்தப்பட்டவர்களாக உணருகிறார்கள்—பிரசங்கிப்பினிடமாக இயற்கையான ஒரு மனச்சாய்வு இல்லாவிட்டாலும்கூட அவ்விதமாக உணருகிறார்கள். (2 கொரிந்தியர் 5:14 ஒப்பிடவும்.) உலகப்பிரகாரமான முழுநேர வேலையை தேடுவதற்குப் பதிலாக ஆயிரக்கணக்கானோர் முழுநேர சுவிசேஷகர்களாக [பயனியர்கள்] சேவிப்பதைத் தெரிந்துகொண்டிருக்கிறார்கள். மற்றவர்கள், அயல் நாட்டு மிஷனரிகளாக அல்லது காவற்கோபுர சங்கத்தின் கிளைக்காரியாலயங்களில் சேவிக்கிறார்கள்.
காரியதரிசியாக தன் வாழ்க்கைப்பணியை விட்டு, பயனியரான எமிலி சொல்கிறாள்: “இந்த வேலைக்கு உண்மையான ஒரு விருப்பத்தை நான் வளர்த்துக்கொண்டிருக்கிறேன்.” ஆம், முழு நேர ஊழியம் ஒருவர் நினைத்துப்பார்க்கக்கூடியதற்கும் அதிகமாக திருப்தியளிக்கும் கிளர்ச்சியூட்டும் வாழ்க்கைப்பணியாகும்! ஒருவர் “தேவனுக்கு உடன்வேலையாளாக” இருப்பதைவிட வேறு என்ன மேன்மையான சிலாக்கியத்தைக் கொண்டிருக்கமுடியும்?—1 கொரிந்தியர் 3:9.
பல்கலைக்கழகக் கல்வி—பயனுள்ளதா?
பெரும்பாலான பயனியர் ஊழியர்கள் பகுதி நேர வேலையொன்றை செய்து தங்களைப் பராமரித்துக் கொள்கின்றனர். ஆனால் பின்னால் நீ ஒரு குடும்பத்தைப் பராமரிக்க வேண்டிய தேவை ஏற்பட்டால் அப்போது என்ன? நிச்சயமாகவே ஒருவருடைய இளமைப் பருவ வருடங்களைக் கடவுளுடைய சேவையில் அர்ப்பணித்ததற்காக ஒருபோதும் ஒருவர் மனஸ்தாபப்படமாட்டார்! இது ஒருபுறமிருக்க, ஓர் இளைஞன் முதலில் ஒரு பல்கலைக்கழகப் பட்டத்தைப் பெற்றுக்கொண்டு பின்னால் ஒருவேளை ஊழியத்தை மேற்கொள்வது அறிவுள்ளதாக இருக்குமல்லவா என்பதாகச் சிலர் கேட்கின்றனர்.
நிச்சயமாகவே ஒரு கிறிஸ்தவ இளைஞன் எத்தனை வருடங்கள் சரியாக படிக்க வேண்டும் என்பதை பைபிள் விவரமாகக் குறிப்பிடுவதில்லை. அல்லது கல்வியை அது கண்டனம் செய்வதுமில்லை. “மகத்தானப் போதகராகிய” யெகோவா தம்முடைய ஜனங்கள் நன்றாக வாசித்து தங்கள் கருத்துக்களைத் தெளிவாக வெளிப்படுத்த வேண்டும் என்று உற்சாகப்படுத்துகிறார். (ஏசாயா 30:20; சங்கீதம் 1:2; எபிரெயர் 5:12) மேலுமாக கல்வி மக்களையும் நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் உலகத்தையும் பற்றிய நம்முடைய புரிந்து கொள்ளுதலை விரிவாக்கக்கூடும்.
என்றபோதிலும் ஒரு பல்கலைக்கழகப் பட்டத்தைப் பெற்றுக்கொள்ள, அது தேவைப்படுத்தும் ஏராளமான பணமும் நேரமும் எப்போதும் தகுதியுடையதாக இருக்கிறதா?a பல்கலைக்கழகப் பட்டதாரிகள், உயர்நிலைப்பள்ளி பட்டதாரிகளைக் காட்டிலும் உயர் ஊதியத்தைப் பெற்றுக் கொள்வதையும் குறைந்த அளவு வேலையில்லா திண்டாட்டத்தையுமே அனுபவிப்பதையும் புள்ளிவிவரங்கள் காண்பித்தபோதிலும் உங்கள் கல்லூரி படிப்பைத் திட்டமிடுதல் என்ற புத்தகம், இந்தப் புள்ளி விவரங்கள் வெறும் சராசரியே என்பதை நமக்கு நினைப்பூட்டுகின்றன. பல்கலைக்கழகப் பட்டதாரிகளில் சிறுபான்மையானோரே உண்மையில் மிக உயர்வான ஊதியத்தைப் பெறுகிறார்கள்; மற்ற அனைவரும் மிகக்குறைவாகவே ஊதியமளிக்கப்படுகிறார்கள். தவிர, பல்கலைக்கழகப் பட்டதாரிகளுக்குக் கொடுக்கப்படும் உயர் ஊதியங்கள் வெறுமென அவர்களுடைய கல்வி அளவுக்காக இல்லாமல், “அசாதாரணத் திறமைகள், தூண்டுதல், வேலைக்கு அவ்விடத்திலுள்ள வாய்ப்புகள் . . . விசேஷமானத் திறமைகள்” போன்றவற்றிற்காக கொடுக்கப்படலாம்.
“ஒரு [பல்கலைக்கழக] பட்டம் இனிமேலும் வேலை சந்தையில் வெற்றிக்கு உத்தரவாதமளிப்பதில்லை” என்பதாக ஐ.மா. தொழில்துறை தெரிவிக்கிறது. “வாழ்க்கைத் தொழில் தொடர்புடைய, மற்றும் நிறுவன செயலாட்சித் தொடர்புடைய உத்தியோகங்களில் வேலைப்பார்க்கும் [பல்கலைக்கழகப்பட்டதாரிகளின்] எண்ணிக்கை . . . குறைந்துவிட்டது. ஏனென்றால் இந்த வேலைவாய்ப்புகள் எண்ணிக்கையில் வளர்ந்துவரும் பட்டதாரிகளை எடுத்துக்கொள்வதற்குப் போதிய அளவு வேகமாக விரிவடையவில்லை. இதன் விளைவாக 1970 மற்றும் 1984-க்கு இடைப்பட்ட காலத்தில் தொழில் சந்தைக்குள் பிரவேசித்த சுமார் 5 [பல்கலைக்கழக] பட்டதாரிகளில் ஒருவர் பட்டப்படிப்பு தேவையில்லாத வேலையில் சேர்ந்துகொண்டிருக்கிறார். இவ்விதமாக அதிகமான பட்டதாரிகள் 1990-களின் மத்திபத்திலும்கூட இருப்பார்கள்.”
சிந்திப்பதற்கு மேலுமான உண்மைகள்
ஒரு பல்கலைக்கழகப் பட்டம் உன் வேலை வாய்ப்புகளை மேம்படுத்தவோ மேம்படுத்தாமலோ இருக்கலாம். ஆனால் ஓர் உண்மை மறுக்க முடியாததாகும்: “மீதமுள்ள காலம் குறுகினது”! (1 கொரிந்தியர் 7:29, NW) நம்பப்படும் அதன் எல்லா நன்மைகள் மத்தியிலும் ஒரு பல்கலைக்கழகத்தில் நான்கு அல்லது அதற்கு அதிகமான ஆண்டுகள், மீதமுள்ள அந்த நேரத்தை மிகச் சிறப்பாக பயன்படுத்துவதாக இருக்குமா?—எபேசியர் 5:16.
ஒரு பல்கலைக்கழகக் கல்வி உன் ஆவிக்குரிய இலக்கினிடமாக உன்னை நடத்திச் செல்லுமா அல்லது அதிலிருந்து உன்னை விலகிச் செல்லச் செய்யுமா? உயர்வான ஓர் ஊதியம் கிறிஸ்தவனுக்கு முதன்மையானது அன்று என்பதை நினைவில் கொள். (1 தீமோத்தேயு 6:7, 8) என்றபோதிலும் ஐ.மா. பல்கலைக்கழக நிர்வாகிகளின் ஒரு சுற்றாய்வு இன்றைய மாணவர்களை “வாழ்க்கைப்பணியில் உணர்வுள்ளவர்கள், பொருளாதார வெற்றி குறித்து அக்கறையுள்ளவர்கள், தங்களைப் பற்றியே கவலைக்கொள்கிறவர்கள்” என்பதாக விவரித்தது. ஒரு மாணவர் தொகுதி சொன்னதாவது: “நாம் பேசுவதெல்லாம் பணத்தைப் பற்றியே இருப்பதாகத் தெரிகிறது.” தீவிரமான போட்டியும் சுயநலமான பொருளாசையும் நிரம்பிய ஒரு சூழலில் மூழ்கியிருப்பது உன்னை எவ்வாறு பாதிக்கும்?
பல்கலைக்கழகங்கள் 1960-களின் பெருங்கலகத்தனமான காட்சிகளை இனிமேலும் கொண்டில்லாமல் இருக்கலாம். ஆனால் பல்கலைக்கழகத்தில் கூச்சலும் குழப்பமும் குறைந்திருப்பது, கல்லூரி வளாகம் ஆரோக்கியமானது என்பதை நிச்சயமாகவே அர்த்தப்படுத்துவதில்லை. கல்லூரி வளாக வாழ்க்கையைப் பற்றிய ஓர் ஆராய்ச்சியின் முடிவு வருமாறு: “மாணவர்களுக்குத் தனிப்பட்ட மற்றும் சமூக விஷயங்களில் இன்னும் பெரும்பாலும் எல்லையற்ற சுதந்திரம் இருக்கிறது.” போத வஸ்துக்களும் மதுபானங்களும் தாராளமாகப் புழங்கப்படுகிறது. ஒழுக்கங் கெட்ட நடத்தை விதிவிலக்காக இல்லாமல் வழக்கமுறையாக உள்ளது. நீ வாழும் தேசத்திலுள்ள பல்கலைக்கழகங்களில் இது உண்மையாக இருக்குமானால், அங்கே வாழ்வது, ஒழுக்கத்தில் சுத்தமாக நிலைத்திருக்க நீ எடுக்கும் முயற்சிகளை அது குலைத்துவிடுமா?—1 கொரிந்தியர் 6:18.
உயர்கல்விக்கு உட்படுத்தப்படுவது “இன்றியமையாத மதசம்பந்தமான கொள்கைகளைக்” கடைப்பிடிப்பதில் குறைவுபடுவதோடு சம்பந்தப்பட்டிருப்பதற்கு நல்ல ஆதாரமிருப்பது மற்றொரு கவலையாக இருக்கிறது. (சமயசார்பற்ற சகாப்தத்தில் புனித ஆசாரம்) உயர் மதிப்பெண்களை வாங்குவதற்கான அழுத்தம், சில கிறிஸ்தவ இளைஞரை ஆவிக்குரிய நடவடிக்கைகளை அசட்டைச் செய்யும்படியாகச் செய்திருக்கிறது. இதன் காரணமாக அவர்கள் பல்கலைக்கழகங்களால் வளர்க்கப்படும் உலகப்பிரகாரமான சிந்தனையின் தாக்குதலில் எளிதில் பாதிக்கப்பட்டுவிடுகிறார்கள். சிலர் தங்கள் விசுவாசத்தின் சம்பந்தமாக கப்பற்சேதத்தையும் அனுபவித்திருக்கிறார்கள்.—கொலோசெயர் 2:8.
பல்கலைக்கழகக் கல்விக்குப் பதிலாக தெரிவுகள்
இந்த உண்மைகளை முன்னிட்டு அநேக கிறிஸ்தவ இளைஞர் பல்கலைக்கழகக் கல்விக்கு எதிராகத் தீர்மானித்திருக்கிறார்கள். அநேகர், யெகோவாவின் சாட்சிகளுடைய சபைகளில் அளிக்கப்படும் பயிற்சி—குறிப்பாக வாராந்தர தேவராஜ்ய ஊழியப்பள்ளி—ஒரு வேலையைத் தேடிக்கொள்வதில் உண்மையாக பயனுள்ளதாக இருப்பதைக் கண்டிருக்கிறார்கள். ஒரு பல்கலைக்கழகப் பட்டத்தையுடையவர்களாக இல்லாவிட்டாலும்கூட, இப்படிப்பட்ட இளைஞர் சமநிலையுள்ளவர்களாயும் தங்கள் கருத்துக்களை வெளியிடுவதில் கைத்தேர்ந்தவர்களாயும் பொறுப்புகளைக் கையாள திறமையுள்ளவர்களாயுமிருக்கக் கற்றுக்கொள்கிறார்கள். மேலுமாக, சிலர் உயர்நிலைப்பள்ளியிலிருக்கையில் தட்டச்சு, கம்ப்யூட்டர் திட்டம் வகுத்தல், வாகனங்களைப் பழுதுபார்த்தல், இயந்திர பட்டறை வேலை போன்றவற்றில் பயிற்சி எடுத்துக்கொள்கிறார்கள். இப்படிப்பட்ட செயல்திறமைகள் பகுதிநேர வேலைக்குக் கைகொடுக்கக்கூடும். இவைகளுக்கு அநேகமாக தேவையும் அதிகமுண்டு. அநேக இளைஞர் ‘தங்கள் கைகளினால் செய்யும் வேலையை’ இழிவாகக் கருதியபோதிலும் பைபிள், “கடின உழைப்பை” மேன்மையானதாக நோக்குகிறது. (எபேசியர் 4:28) ஏன், இயேசு கிறிஸ்துதாமே “தச்சன்” என்பதாக அழைக்கப்படும் அளவுக்கு ஒரு தொழிலை அத்தனை நன்றாக கற்றிருந்தார்!—மாற்கு 6:3.
உண்மைதான், ஒருசில தேசங்களில் பல்கலைக்கழகப் பட்டதாரிகள் வேலை சந்தையில் ஏராளமாக இருப்பதன் காரணமாக கூடுதலான பயிற்சியின்றி சாதாரணமான வேலைகளைக்கூட பெற்றுக்கொள்வது கடினமாக உள்ளது. ஆனால் குறைந்தபட்ச நேரம் மற்றும் முதலீட்டில், விலைப்படுத்தக்கூடிய திறமைகளைக் கற்றுத்தரும் தொழிற்பயிற்சி திட்டங்கள், வாழ்க்கைத் தொழில் சார்ந்த அல்லது தொழில் நுட்பப் பள்ளிகள் மற்றும் குறுகியக் கால பல்கலைக் கழகப் பயிற்சிகள் இருக்கின்றன. மேலுமாக வேலைவாய்ப்பு புள்ளி விவரங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளாத ஒரு காரியமும் உண்டு: ஆவிக்குரிய அக்கறைகளுக்கு முதன்மையான இடத்தைத் தருகிறவர்களுக்கு வேண்டியதைக் கடவுள் தருவார் என்ற அவருடைய வாக்குறுதி.—மத்தேயு 6:33.
வேலைவாய்ப்புகளும் கல்வி அமைப்புகளும் இடத்துக்கு இடம் வேறுபடுகின்றன. இளைஞர் வித்தியாசமான திறமைகளையும் விருப்பங்களையும் கொண்டிருக்கின்றனர். கிறிஸ்தவ ஊழியத்தில் ஒரு வாழ்க்கைப் பணி பிரயோஜனமுள்ளதாக சிபாரிசு செய்யப்பட்டபோதிலும் அது இன்னும் தனிப்பட்டவர் தெரிவு செய்ய வேண்டிய விஷயமாகவே இருக்கிறது. ஆகவே நீயும் உன் பெற்றோரும் சேர்ந்து உனக்கு எவ்வளவு கல்வி சரியானது என்பதைத் தீர்மானிப்பதில் உட்பட்டிருக்கும் அனைத்துக் காரியங்களையும் கவனமாக சீர்த்தூக்கிப் பார்க்க வேண்டும். இப்படிப்பட்ட தீர்மானங்களைச் செய்வதில், ‘ஒவ்வொருவரும் அவரவர் பாரத்தைச் சுமக்க வேண்டும்.’—கலாத்தியர் 6:5.
உதாரணமாக நீ ஒரு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிக்க வேண்டும் என்று உன் பெற்றோர் வற்புறுத்துவார்களேயானால், நீ அவர்களுடைய மேற்பார்வையின் கீழ் இருக்கும்வரை அவர்களுக்குக் கீழ்ப்படிவதைவிட உனக்கு வேறு எந்தத் தெரிவுமில்லை.b (எபேசியர் 6:1–3) ஒருவேளை நீ வீட்டில் தொடர்ந்து வசித்துக்கொண்டு, பல்கலைக்கழக காட்சியில் சிக்கிக்கொள்வதைத் தவிர்க்கலாம். நீ தெரிவு செய்யும் பயிற்சியைக் கவனமாக தெரிந்தெடு. உதாரணமாக, உலகப்பிரகாரமான தத்துவங்களுக்குப் பதிலாக வேலைத் திறமைகளைக் கற்றுக்கொள்வதில் கவனத்தை ஒருமுகப்படுத்து. உன் கூட்டுறவைக் குறித்து கவனமாயிரு. (1 கொரிந்தியர் 15:33) கூட்டங்களில் ஆஜராயிருத்தல், வெளி ஊழியம், தனிப்பட்ட படிப்பு இவற்றின் மூலமாக உன்னை ஆவிக்குரிய வகையில் பலமுள்ளவனாய் வைத்திரு. பல்கலைக்கழகத்துக்குச் செல்லக் கட்டாயப்படுத்தப்பட்ட சில இளைஞர், பயனியர் செய்வதை கூடியகாரியமாக்கிய பயிற்சியைத் தெரிந்துகொள்வதன் மூலம் அதையும் கூட செய்திருக்கின்றனர்.
தனிப்பட்ட மகிழ்ச்சியைக் கொண்டுவரும் வகையில் மாத்திரமல்ல, ஆனால் ‘பரலோகத்திலே பொக்கிஷங்களைச் சேர்த்து’ வைப்பதைக் கூடியகாரியமாக்கும் வகையிலும், உன் வாழ்க்கைப்பணியை கவனமாகவும் ஜெபசிந்தையோடும் தெரிந்துகொள்.—மத்தேயு 6:20. (g89 5/8)
[அடிக்குறிப்புகள்]
a ஐக்கிய மாகாணங்களில், பல்கலைக்கழகச் செலவு ஆண்டொன்றுக்கு சராசரியாக 1,60,000 ரூபாய்க்கும் மேலாகிறது! அநேகமாக கடனைத் திரும்பச் செலுத்த மாணவர்களுக்குப் பல வருடங்களாகிறது.
b உன் பெற்றோரைத் திருப்திப்படுத்த நான்கு ஆண்டுகால பட்டப் படிப்பை பெற்றுக் கொள்வது ஒருவேளை அவசியமாயிருக்காது. உதாரணமாக ஐக்கிய மாகாணங்களில் இணையானப் பட்டம் இரண்டாண்டுகளில் பெற்றுக்கொள்ளப்படக்கூடியதாகவும் தொழில் சார்ந்த மற்றும் பணி சம்பந்தப்பட்ட துறைகளிலுள்ள முதலாளிகளால் ஏற்றுக்கொள்ளப்படுகிறதுமாயிருக்கிறது.
[பக்கம் 14-ன் சிறு குறிப்பு]
‘ஒரு பல்கலைக்கழகப் பட்டம் இனிமேலும் வேலை சந்தையில் வெற்றிக்கு உத்தரவாத மளிப்பதில்லை.’—.மா. தொழில் துறை