“குளிர்காய்ந்து பசியாறுங்கள்,”என்று சொல்லுவதைவிட அதிகம் செய்யுங்கள்
“உங்களில் ஒருவன் அவர்களை [அத்தியாவசிய காரியங்களின் தேவையிலிருக்கும் சகோதரர்களை] நோக்கி: ‘நீங்கள் சமாதானத்தோடே போங்கள், குளிர்காய்ந்து பசியாறுங்கள்,’ என்று சொல்லியும் சரீரத்திற்கு வேண்டியவைகளை அவர்களுக்குக் கொடாவிட்டால், பிரயோஜனமென்ன? . . . விசுவாசமும் கிரியைகளில்லாதிருந்தால் தன்னில்தானே செத்ததாயிருக்கும்.”—யாக்கோபு 2:15-17.
லெபச்சி ஆக்வாரோச்சா 1880-க்கு முன்பு பிறந்திருக்க வேண்டும் என்று கணக்கிடப்படுகிறது, அப்படியென்றால் அவருடைய வயது நூறுக்கு மேல். அவர் தன்னுடைய நைஜீரிய பெற்றோரின் குல தெய்வத்தை வணங்கிவந்தார். பின்பு, தனது 80-களில் யெகோவாவின் சாட்சிகளுடன் பைபிளைப் படிக்க ஆரம்பித்தார். தான் படித்ததை வாழ்க்கையில் பொருத்துகிறவராய் முழுக்காட்டுதலும் பெற்றார். சில நாட்களுக்குப் பின்பு, ஒருநாள் கடுமையான மழையைத் தொடர்ந்து, அவருடைய சபையின் மூப்பர்கள் இவரையும் ஆங்லிக்கன் சர்ச்சை சேர்ந்த இவருடைய 72 வயது மனைவியையும் சந்திக்க வந்தார்கள். இருவருமே மனமொடிந்த நிலையில் காணப்பட்டனர்—அவர்களுடைய குடிசை தண்ணீருக்குள் அமிழ்ந்துவிட்டது, அவர்களுக்குத் தஞ்சமளிக்க உறவினர் எவருமில்லை, வீட்டைப் பழுதுபார்த்துக் கொடுக்கவும் ஒருவருமில்லை. நீங்கள் அங்கே இருந்திருந்தால் என்ன செய்திருப்பீர்கள்? என்ன நடந்தது என்பதைக் கண்டுபிடிப்பதற்கு முன்பு, பைபிளின் சில ஆலோசனைகளைக் கவனிப்போம்.
2 கிறிஸ்து இயேசு, “தமக்குரிய சொந்த ஜனங்களாகவும், நற்கிரியைகளைச் செய்யப் பக்திவைராக்கியமுள்ளவர்களாகவும் நம்மைச் சுத்திகரிக்கும்படி நமக்காகத் தம்மைத் தாமே ஒப்புக்கொடுத்தார்.” (தீத்து 2:14) இந்தக் கிரியைகள் ஜீவனைப் பாதுகாக்கும் ராஜ்ய பிரசங்கிப்பை மையமாகக் கொண்ட கிரியைகள். (மாற்கு 13:10; வெளிப்படுத்துதல் 7:9, 10) என்றபோதிலும் கிறிஸ்தவ நற்கிரியைகள் முக்கியமான பிரசங்கிப்பு வேலையைவிட அதிகத்தை உட்படுத்துகிறது, ஏனென்றால் இயேசுவின் ஒன்றுவிட்ட சகோதரனாகிய யாக்கோபு பின்வருமாறு விவரிக்கிறான்: “திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறதும், உலகத்தால் கறைபடாதபடிக்குத் தன்னைக் காத்துக்கொள்ளுகிறதுமே பிதாவாகிய தேவனுக்கு முன்பாக மாசில்லாத சுத்தமான பக்தியாயிருக்கிறது.”—யாக்கோபு 1:27.
3 முதல் நூற்றாண்டு சபைகள் இந்த இரண்டு வகை “நற்கிரியைகளிலும்” தங்களை ஈடுபடுத்தின. கண்காணிகளுக்கும் உதவி ஊழியருக்குமான தகுதிகளை விவரித்தப் பின்னர் “ஜீவனுள்ள தேவனுடைய சபை சத்தியத்துக்குத் தூணும் ஆதாரமுமாயிருக்கிறது,” என்று அப்போஸ்தலனாகிய பவுல் எழுதினான். (1 தீமோத்தேயு 3:1-15) இப்படிப்பட்ட சத்திய போதனைகளில் நிலைத்திருக்கும் கிறிஸ்தவர்கள் தங்களையும் தங்களுக்குச் செவிகொடுப்பவர்களையும் இரட்சித்துக்கொள்ள முடியும் என்று காண்பித்தான். (1 தீமோத்தேயு 4:16) “தனிமையாயிருந்த” உத்தம விதவைகளைப் பொருள் சம்பந்தமாகக் கவனிக்கும் ‘நற்கிரியைகளைக்’ குறித்துப் பவுல் பேசினான்.—1 தீமோத்தேயு 5:3-5.
4 எனவே நம்முடைய சுவிசேஷக ஊழியத்தோடுகூட ‘திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரிக்கிறது’ போன்ற “நற்கிரியைகளுக்கு” நாம் கவனம் செலுத்த வேண்டும். “முன்நின்று நடத்துகிறவர்களாக” மூப்பர்களும் உதவி ஊழியர்களும் என்ன செய்யலாம்? இந்தக் காரியத்தில் மற்றவர்களாகிய நாம் அவர்களுக்கு எப்படி உதவலாம்? இப்படிப்பட்ட “நற்கிரியைகளைச்” செய்வதில் நாம் தனிப்பட்ட விதத்தில் என்ன செய்யலாம்?
நல்ல விதத்தில் காரியங்களை முன்நின்று செய்யும் மூப்பர்கள்
5 யூதேயாவில் ஒரு தேவை ஏற்பட்டபோது, மூப்பராக இருந்த பவுல் ஒரு நிவாரண பணியை ஏற்பாடு செய்வதில் முன்நின்று செயல்பட்டான். அப்படிப்பட்ட பொறுப்பை ஏற்று நடத்தியது குழப்பத்தைக் குறைத்தது. தேவைக்கேற்ப காரியங்கள் சமமாகப் பகிர்ந்தளிக்கப்படுவதைக் கூடிய காரியமாக்கியது. (1 கொரிந்தியர் 16:1-3; அப்போஸ்தலர் 6:1, 2) தற்கால மூப்பர்களுங்கூட விசேஷமாக, பெருஞ்சேதத்தை விளைவித்திடும் வெள்ளங்கள், நிலச்சரிவுகள், கடல் கொந்தளிப்புகள், சூறாவளிகள் அல்லது நிலநடுக்கங்களுக்குப் பின்பு இப்படிப்பட்ட நிவாரண பணியைப் பொறுப்புடன் ஏற்றிருக்கிறார்கள். இப்படியாக ‘மற்றவர்களுடைய தனிப்பட்ட அக்கறைகளிலும் கவனஞ் செலுத்துகிறவர்களாக’ இருக்கிறார்கள்.—பிலிப்பியர் 2:3, 4.
6 அக்டோபர் 8, 1986 விழித்தெழ! இப்படியாகச் செயல்படும் கிறிஸ்தவத்திற்கு ஒரு உதாரணத்தைக் கொடுத்தது. அமெரிக்க ஐக்கிய மாகாணங்களிலுள்ள கலிபோர்னியாவில் ஓர் அணை உடைந்து பெருவெள்ளத்தை ஏற்படுத்தியபோது மூப்பர்கள் நன்கு பிரதிபலித்தனர். இந்த ஆவிக்குரிய மேய்ப்பர்கள் உடனடியாக யார் காணவில்லை யாருக்கு மருத்துவ உதவி, உணவு, தங்குவதற்கு இடம் ஆகியவை தேவைப்படுகிறது என்பதைக் கவனித்தார்கள். மூப்பர்கள் யெகோவாவின் சாட்சிகளுடைய தலைமைக் காரியாலயத்துடன் தொடர்புகொண்டு தங்களுடைய முயற்சிகளை ஒருமுகப்படுத்தினார்கள். ஒரு நிவாரண கமிட்டி ஏற்படுத்தப்பட்டது. உதவிக்காக உடன் சாட்சிகள் வந்தவுடன் அவர்கள் சுத்தம் செய்யும் மற்றும் வீடுகளைப் பழுதுபார்க்கும் பணிகளைக் கவனித்துக் கொள்வதற்காகத் தொகுதியாகப் பிரிக்கப்பட்டனர். தேவைப்பட்ட பொருட்களை வாங்குவது, அவற்றைப் பங்குபோடுவது போன்ற வேலைகளை மூப்பர்கள் கவனித்துக் கொண்டனர். ஆக, இப்படிப்பட்ட விசேஷ தேவை ஏற்படும் சமயங்களில் ‘ஒவ்வொரு சீஷனும் தங்கள் தங்கள் திராணிக்குத்தக்க கொடுக்க’ அல்லது செய்ய தீர்மானிக்கலாம், ஆனால் உள்ளுர் கண்காணிகளுடன் கலந்து பேசுவதும் அவர்களுடைய வழிநடத்துதலைப் பெறுவதும் ஞானமான காரியம் என்று இது காண்பிக்கிறது.—அப்போஸ்தலர் 11:27-30-ஐ ஒப்பிட்டுப் பாருங்கள்.
7 ஒரு பெருஞ்சேதத்திற்குப் பின்பு தேவைகளைக் கவனிக்கும் விஷயத்தில் நீங்கள் (மூப்பராக இருந்தாலும் இல்லாவிட்டாலும்] நன்கு பிரதிபலிக்கக்கூடியவர்களாக இருந்தபோதிலும் இதுபோன்ற முக்கியமான சில தேவைகளும் இருக்கின்றன—உங்களுடைய சபையிலேயே இருக்கின்றன. அவை ஒரு பெருஞ்சேதத்தைப் போன்று உணர்ச்சிகளைத் தொடுகிறவையாக இருக்காதென்றாலும், அந்தத் தேவைகள் அசட்டை செய்யப்படக்கூடும் அல்லது அவற்றிற்குக் குறைந்த கவனம் செலுத்தப்படக்கூடும். ஆனால் உள்ளூர் சபையின் தேவைகள் யாக்கோபு 2:15-17-ல் குறிப்பிடப்பட்டிருப்பதற்கு ஒத்திருக்கிறது. ஆம், உங்களுடைய ‘விசுவாசம் கிரியையுள்ளவையா, அல்லது தன்னில்தானே செத்ததா?’ என்ற ஒரு பெரிய சவாலை உங்கள் சபை உங்களுக்கு முன் வைக்கக்கூடும்.
8 காரியங்களை முன்நின்று செய்யும் மூப்பர்கள் “ஞானியும் விவேகியுமாக” இருக்க முற்பட வேண்டும். (யாக்கோபு 3:13) ஒவ்வொரு சகோதரராக (அல்லது சபை சபையாக) சென்று சந்தித்து “உதவிக்காக” கடன் வாங்கும் அல்லது கதைகட்டி ஏமாற்றித்திரியும் ஆட்களிடமிருந்து மூப்பர்கள் ஞானத்தோடு மந்தையைப் பாதுகாக்க முடியும். சோம்பலைக் காணும் ஞானமுள்ள மூப்பர்கள் சாதகமாக பரிதபிப்பதில்லை, ஏனெனில் பைபிள் பின்வருமாறு கூறுகிறது: “ஒருவன் வேலை செய்ய மனதில்லாதிருந்தால் அவன் சாப்பிடவும் கூடாது.” (2 தெசலோனிக்கேயர் 3:10-15) என்றபோதிலும் அவர்கள் ‘தங்கள் இருதயத்தை அடைத்துக்கொள்ள’ விரும்ப மாட்டார்கள் அல்லது மற்ற சகோதரர்களும் அவ்விதம் செய்ய வழிவகுக்க மாட்டார்கள். (1 யோவான் 3:17) ஞானமாக நடந்துகொள்ள வேண்டியதற்கு மற்றொரு காரணம், தேவையிலிருப்பவர்களையும் சிறுமைப்பட்டவர்களையும் கவனிப்பது சம்பந்தமாகப் பைபிள் எண்ணிக்கையற்ற விதிமுறைகளைக் கொடுப்பதில்லை. காலத்திற்குக் காலம், இடத்திற்கு இடம் நிலைமை வித்தியாசப்படுகிறது.
9 உதாரணமாக, ‘தனிமையாக விடப்பட்ட’ உத்தம விதவைகளைக் குறித்துப் பவுல் 1 தீமோத்தேயு 5:3-10-ல் பேசுகிறான். அவர்களுக்கு உதவி செய்ய வேண்டிய உத்தரவாதம் விசுவாசத்திலுள்ள அவர்களுடைய உறவினருடையது; அந்த உத்தரவாதத்தை அசட்டை செய்வது அந்த உறவினன் கடவுளோடு கொண்டிருக்கும் நிலைநிற்கையைச் சேதப்படுத்திவிடும். என்றபோதிலும் தேவையிலிருக்கும் இந்த நபர் அல்லது உதவிபெற தகுதிவாய்ந்த அந்த விதவை இந்த வழியில் உதவி பெறமுடியாத நிலையிலிருந்தால், சபையிலிருந்து ஓரளவு பொருள் சம்பந்தமான உதவியைப் பெறுவதற்கு மூப்பர்கள் ஏதாவது ஏற்பாடு செய்யலாம்.” சமீப காலங்களிலுங்கூட சில சபைகள் தங்கள் மத்தியிலுள்ள உதவி தேவைப்பட்ட ஆட்களுக்கு விசேஷித்த விதத்தில் உதவி செய்திருக்கின்றனர். என்றபோதிலும் அநேக தேசங்கள் முதியோருக்கும், ஊனமுற்றோருக்கும், வேலைவாய்ப்பற்றவர்களுக்கும் வரிப்பணத்திலிருந்து ஒரு மானியத்தொகை வழங்கும் திட்டங்களைக் கொண்டிருக்கின்றன. என்றபோதிலும் கிறிஸ்தவ மூப்பர்கள் வேறு வழியில் உதவி செய்திட மனமுள்ளவர்களாயிருக்கக்கூடும். உண்மையான தேவையிலிருக்கும் சிலர், இப்படிப்பட்ட பொதுநல உதவி பெற தகுதிபெற்ற சிலர், அதற்காக எப்படி விண்ணப்பிப்பது என்பதை அறியாதவர்களாக அல்லது தயங்கிக்கொண்டிருப்பவர்களாக இருப்பதனால் அப்படிப்பட்ட உதவியைப் பெறாதவர்களாக இருக்கிறார்கள். எனவே மூப்பர்கள் அரசாங்க நிறுவனங்களையோ அல்லது இது குறித்து அறிந்த சகோதரர்களையோ அணுகி காரியங்களைத் தெரிந்துகொள்ளலாம். பின்பு இந்த ஏற்பாடுகளின் நன்மைகளைப் பெற்றுக்கொள்ளத்தக்கதாக தேவையிலிருக்கும் அந்த நபருக்கு உதவி செய்ய மூப்பர்கள் திறமைவாய்ந்த ஒரு சகோதரரையோ அல்லது சகோதரியையோ நியமிக்கலாம்.—ரோமர் 13:1, 4.
நடைமுறையான உதவி கொடுக்க ஏற்பாடு செய்தல்
10 சிறுமைப்பட்ட, தேவையிலிருக்கும் ஆட்கள் அன்புள்ள சகோதரர் மற்றும் சகோதரிகளிடமிருந்து உதவி பெறுவதைப் பார்த்துக்கொள்ளுவதில் கவனமுள்ள கண்காணிகளே முக்கிய பாகத்தை வகிக்கின்றனர். மந்தையிலுள்ள எல்லோரையும் மேய்க்கும் மூப்பர்கள் அவர்களுடைய ஆவிக்குரிய தேவைகளையும் சரீர தேவைகளையுங் குறித்து கவனமுள்ளவர்களாயிருக்க வேண்டும். “ஜெபம் பண்ணுவதற்கும் தேவவசனத்தைப் போதிக்கிறதற்கும்” மூப்பர்கள் முக்கியத்துவமளிக்கிறார்கள் என்பது புரிந்துகொள்ளத்தக்கது. (அப்போஸ்தலர் 6:4) எனவே படுத்தப்படுக்கையாயிருக்கும் அல்லது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கும் மந்தையின் அங்கத்தினர்கள் ஆவிக்குரிய பிரகாரமாய் போஷிக்கப்படுவதற்கான ஏற்பாடுகளை மூப்பர்கள் செய்துகொள்வார்கள். கூட்டங்களுக்கு வரமுடியாதவர்களுக்காக அவற்றை டேப்களில் பதிவுசெய்து கொள்வதற்காக ஏற்பாடுகளையும் செய்வார்கள். இவற்றை அவர்களிடம் கொடுப்பதற்காக மூப்பர்களும் உதவி ஊழியர்களும் மாறி மாறிச் செல்வதன் மூலம் தாங்கள் ஆவிக்குரிய வேறு வரங்களைக் கொடுப்பதற்கு ஏதுவாயிருப்பதைக் காண்கின்றனர். (ரோமர் 1:11, 12) அதே சமயத்தில் அவர்கள் அந்தச் சமயத்திற்குரிய தேவைகளையுங்கூட கவனித்துக்கொள்ள வேண்டும்.
11 வயது முதிர்ந்த அல்லது ஊனமுற்ற ஒரு சகோதரிக்கு யாராவது ஒரு சகோதரி குளிப்பாட்டிட, உடை மாற்றிட உதவி செய்தால் அவள் சில சமயங்களில் ராஜ்ய மன்றத்திற்கு வரமுடியும் அல்லது சற்று வெளி ஊழியத்தில் பங்குபெறவும் முடியும் என்பதை மூப்பர்கள் கவனிக்கக்கூடும். (சங்கீதம் 23:1, 2, 5) இதற்கான ஏற்பாடுகளைக் கவனித்துக்கொள்ளும்படி தங்களில் ஒருவரை அவர்கள் நியமிக்கலாம். அதுபோல பாதிக்கப்பட்டிருக்கும் அந்த நபருடன் பயணம் செய்வதற்கோ அல்லது அவரை வீட்டில் விட்டு வருவதற்கோ முன்வரும்படி சகோதரர்களைக் கேட்டுக்கொள்ளலாம். இதற்காக ஒரு அட்டவணையைக் கொண்டிருப்பது காரியங்களைக் கிரமமாகச் செய்வதற்கு உதவும்.
12 உதவி தேவைப்படும் காரியங்களையும் அல்லது அன்பான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டிய மற்ற காரியங்களையும் மூப்பர்கள் கவனிக்கக்கூடும். உதாரணமாக, வயது முதிர்ந்த அல்லது வியாதியாக இருக்கும் ஒரு சகோதரி முன்போல் தன் வீட்டைக் கவனிக்க முடியாதவளாயிருக்கக்கூடும். உதவி ஊழியர்களில் அல்லது மற்றவர்களில் ஒருவர் அந்தச் சகோதரிக்கு உதவ முன்வரக்கூடுமா? வீட்டைச் சுற்றியுள்ள புதர்களையும் புற்களையும் சீர்செய்து கொடுப்பது, சுற்றுவட்டாரத்தில் தன்னுடைய வீடு குறைகூறப்படும் நிலையிலில்லை என்ற ஒரு மன நிறைவைக் கொடுக்கும். தோட்டத்தில் களைகளை அப்புறப்படுத்த வேண்டிய அல்லது தண்ணீர் பாய்ச்ச வேண்டிய நிலையில் தோட்டம் காட்சியளிக்கிறதா? கடைக்குச் செல்லும் ஒரு சகோதரி வழியில் அவளுடைய வீட்டிற்குச் சென்று கடையிலிருந்து ஏதாவது வாங்கித்தர வேண்டுமா என்று கேட்கக்கூடுமா? இப்படிப்பட்ட நடைமுறையான அம்சங்களில் அப்போஸ்தலர்கள் அக்கறை காண்பித்தனர் என்பதையும், உதவியளிப்பதற்காக சபையில் திறமையுள்ளவர்களை ஏற்பாடு செய்தனர் என்பதையும் நினைவிற்கொள்ளுங்கள்.—அப்போஸ்தலர் 6:1-6.
13 இப்படிப்பட்ட கிறிஸ்தவ கரிசனையைத்தான் ஏற்கெனவே குறிப்பிடப்பட்ட மூப்பர்கள் காண்பித்தார்கள். மேய்ச்சலுக்குரிய சந்திப்பைச் செய்யும்போதுதானே லெபச்சி ஆக்வாரோச்சாவும் அவருடைய மனைவியும் பரிதாபமான நிலையிலிருப்பதைக் கண்டார்கள். மூப்பர் குழு உடனடியாக அந்தக் காரியத்தைக் கலந்தாலோசித்து தங்களுடைய மனதிலிருந்ததை—வீட்டை மறுபடியும் கட்ட வேண்டியதன் அவசியத்தை—சபையாருக்குத் தெரிவித்தனர். அதற்காக அநேக சகோதரர்களும் சகோதரிகளும் பொருளுதவி செய்தது மட்டுமின்றி அந்தத் திட்டத்தில் மனமுவந்து பங்கு கொண்டார்கள். ஒரு வாரத்திற்குள் அவர்கள் தகர கூரை கொண்ட ஒரு பாதுகாப்பான சிறிய வீட்டைக் கட்டினார்கள். நைஜீரியாவிலிருந்து வந்த அறிக்கை பின்வருமாறு:
“அந்தக் கிராமவாசிகள் ஆச்சரியப்பட்டார்கள். அடுத்த மழை வருவதற்கு முன்பு வேலையை முடித்துவிட வேண்டுமென்று சுறுசுறுப்பாக நீண்ட மணிநேரம் வேலை செய்து கொண்டிருந்த சகோதர சகோதரிகளுக்கு அவர்கள் உணவையும் பானங்களையும் மனமுவந்தளித்தார்கள். மற்ற மதப் பிரிவுகள் ஏழைகளுக்கு உதவி செய்வதற்குப் பதிலாக மக்களைக் கொள்ளையடிக்கிறார்கள் என்று அந்தக் கிராமவாசிகளில் பலர் குறைகூறினார்கள். இந்தச் சம்பவம் அந்தச் சமுதாயத்தினரிடையே முக்கியமான பேச்சுப்பொருளாகிவிட்டது. அந்தக் கிராமத்து மக்கள் நன்கு உபசரிப்பவர்களாக மாறியிருக்கிறார்கள், மற்றும் அநேக வீடுகளில் பைபிள் படிப்புகளும் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன.
இந்த “நற்கிரியைகளில்” உங்கள் பங்கு
14 ஆம், வயது முதிர்ந்தவர்கள், ஊனமுற்றவர்கள், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பவர்கள் அல்லது வேறு வகையில் கஷ்டத்திற்குள்ளிருப்பவர்களுக்கு நாம் தனிப்பட்ட விதத்திலும் நேரடியாகவும் உதவி செய்யலாம். உண்மையான கிறிஸ்தவத்தைப் பிரதிபலிப்பதற்கு ஒரு வழி இருப்பதை நாம் காணும்போது, நாம் ஏன் முன்சென்று உதவ முற்படக்கூடாது? (அப்போஸ்தலர் 9:36-39) மற்றவர்களுடைய வற்புறுத்தலல்ல, ஆனால் அன்புதான் அப்படிச் செய்வதற்கு நம்மைத் தூண்டவேண்டும். எந்த ஒரு நடைமுறையான உதவி அளிப்பதற்கும் அத்தியாவசியமான காரியம் உண்மையான அக்கறையும் தயவுமாகும். நம்மில் எவருமே முதிர் வயதினரின் வயதைக் குறைக்க முடியாது, அற்புதங்கள் மூலமாக வியாதியைக் குணப்படுத்தவோ, அல்லது சபையிலுள்ள எல்லோருடைய பொருளாதார நிலையையும் சமநிலைக்குக் கொண்டுவரவோ முடியாது என்பது உண்மைதான். ஆனாலும், நாம் பிறருக்குக் கரிசனை காண்பிக்கும், கொடுக்கும் ஆவியைக் கொண்டிருக்க வேண்டியது மிகவும் அவசியம். அந்த ஆவி நமக்குள்ளிருக்கும்போதும் அதன்படி செயல்படும்போதும், அது நமக்கும் நாம் உதவிசெய்யும் நபருக்கும் இடையேயுள்ள அன்பின் பிணைப்பைப் பலப்படுத்திடும். அது சிறைக்கட்டிலிருந்த பவுலுக்கு ‘ஊழியஞ்செய்த’ புதிதாக கிறிஸ்தவனான ஒநேசிமுக்கு இதைத்தான் செய்தது.—பிலேமோன் 10-13; கொலொசேயர் 3:12-14; 4:10, 11.
15 சில சமயங்களில், பொருள் சம்பந்தப்பட்ட தேவையைப் பூர்த்திசெய்ய உங்கள் பெயரைத் தெரிவிக்காமலோ அல்லது தனிப்பட்ட விதத்திலோ தயவான ஒரு வெகுமதியைக் கொடுக்கலாம். சகோதரரில் ஒருவர் தன் வேலையை இழந்து மற்றொரு வேலை கிடைக்காத நிலையிலிருக்கிறாரா? சகோதரிகளில் ஒருவர் எதிர்பாராத மருத்துவ செலவை எதிர்பட வேண்டியதாயிருக்கிறதா? அவள் விபத்துக்குள்ளானாளா அல்லது அவளுடைய பொருட்கள் திருடப்பட்டனவா? இப்படிப்பட்ட நிலைமைகள் நம் மத்தியில் எந்தச் சமயத்திலும் ஏற்படக்கூடும். நாம் “தர்மம்” [இரக்கத்தின் வெகுமதிகள், NW] செய்யும்போது அந்தரங்கத்தில் பார்க்கும் நம்முடைய பிதா நாம் செய்வதைப் பார்த்து அங்கீகரிப்பார். (மத்தேயு 6:1-4) அல்லது, பணம் கொடுப்பதற்குப் பதிலாக, நாம், யோபுவைப் போல, ஏழ்மையிலிருப்பவர்களுக்கு உடைகளையும் விதவை அல்லது திக்கற்ற பிள்ளைகளுக்கு உணவு பண்டங்களையும் அல்லது வீட்டில் சமைத்த உணவையும் கொடுக்கலாம்.—யோபு 6:14; 29:12-16; 31:16-22.
16 உங்களுடைய அனுபவமும், அல்லது உங்களுடைய தொடர்பு வளம்கூட நடைமுறையான உதவியளிப்பதற்கு ஊற்றுமூலமாகச் சேவிக்கக்கூடும். சகோதரர் ஒருவர் சகோதரர் W——விடம் கடன் கேட்டார். அவருடைய தயவான பிரதிபலிப்பு: ‘கடன் கொடுப்பதற்கு என்னிடம் கூடுதல் பணம் இருக்கும் என்று நீங்கள் நினைப்பதற்குக் காரணம் என்ன?’ அதற்குப் பதில்: ‘ஏனென்றால் நீங்கள் உங்கள் பணத்தை நல்ல முறையில் கையாளுகிறீர்கள்.’ தேவையிலிருப்பவர்களுக்கு அடிக்கடி கடன் கொடுத்து உதவிய சகோதரர் W—— விவேகத்துடன் கொடுத்த ஆலோசனை: ‘உங்களுக்கு மிகவும் அவசியமானது உங்களுடைய பணத்தை எவ்வாறு கையாள வேண்டும் என்பதன் பேரில் உதவி, எனவே நீங்கள் விரும்பினால் இந்த விஷயத்தில் உங்களுக்கு உதவிசெய்ய நான் மகிழ்ச்சியாயிருப்பேன்.’ இப்படிப்பட்ட உதவி, விசேஷமாக புதியதோர் சூழ்நிலைக்கேற்ப தங்களுடைய வாழ்க்கைத் தரத்தை அமைத்துக்கொள்ளும் சகோதரர்களால் போற்றப்படுகிறது, அல்லது குறைந்த மதிப்புடைய வேலையாக இருந்தாலும் கடினமாக உழைத்திடும் சகோதரர்களால் போற்றப்படுகிறது. கடன் உண்மையிலேயே தேவைப்பட்டால், பின்னால் பிரச்னைகள் ஏற்படாதிருக்க அதன் பேரில் கையொப்பமிடப்பட்ட ஒரு பதிவை வைத்துக்கொள்வது நல்லது. எனினும், கடன் வாங்க விரும்பாத சகோதரரில் பலர் நல்ல ஆலோசனை மற்றும் அனுபவம் சார்ந்த தனிப்பட்ட உதவியை வெகுவாகப் போற்றுகின்றனர். (ரோமர் 13:8) இந்தக் காரியம் இம்மானுவேலை உட்படுத்திய மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்து வந்த ஒரு அனுபவத்தில் எடுத்துக் காட்டப்படுகிறது:
இம்மானுவேல் முடிதிருத்தும் தொழிலில் நல்ல பயிற்சி பெற்றவராக இருந்தபோதிலும், குறைவான வாடிக்கையாளர்களே இருந்ததால், சம்பாதிப்பதற்குத் தனக்குத் திறமையில்லை என்று நினைத்து அதிக சோர்வடைந்தார். அந்தச் சமயத்தில் சபை மூப்பரில் ஒருவர் இம்மானுவேலிடம், வேறொரு வகை வேலை செய்வதைக் குறித்து யோசித்தாலென்ன என்று கேட்டார். ஆம், தொழில் கர்வம் குறுக்கிடுவதற்கு தான் அனுமதிப்பதில்லை என்று இம்மானுவேல் பதிலளித்தார். அந்த மூப்பர் மற்றவர்களுடன் பேசி இம்மானுவேலுக்கு மருத்துவமனையில் ஒரு பணியாளராக இருக்கும் வேலை பார்த்துக் கொடுத்தார். இந்த வேலையில் நன்கு பணிபுரிந்தார், மற்றும் சபையிலுள்ள மற்றவர்களுக்கும் உதவி செய்ய முடிந்தது.
17 உடன் கிறிஸ்தவன் மருத்துவ மனையிலிருக்கும் சந்தர்ப்பம் ஏற்பட்டால், நாம் உதவி செய்வதற்கு நமக்கு விசேஷ வாய்ப்பை அளிக்கிறது. இந்த நிலையிலுங்கூட உள்ளான அக்கறையும் கரிசனையும் அடிப்படையாகத் தேவைப்படுகின்றன. அந்த நோயாளிக்கு பக்திவிருத்திக்கேதுவான கிறிஸ்தவ பிரசுரத்தை வாசித்துக் காண்பிக்க அல்லது உற்சாகமூட்டும் அனுபவத்தைச் சொல்ல மனமுள்ளவர்களாயிருப்பதன் மூலம் இந்தத் தன்மைகளை வெளிக்காட்டலாம். உங்களாலான சரீரப்பிரகாரமான உதவி கொடுப்பதற்கான தேவை இருக்கிறதா? சில இடங்களிலே மருத்துவ கவனம் கொடுக்க முடியாதளவுக்கு அவர்கள் அதிக வேலையாக இருப்பதனால் குளிப்பாட்டுதலை அல்லது உணவு ஊட்டுதலை நோயாளிகளைப் பார்க்க வருபவர்கள் செய்ய வேண்டியதாக இருக்கும். எனவே, மருத்துவர்கள் ஒப்புக்கொண்டால், நீங்கள் அவருக்குப் போஷாக்குள்ள உணவைக் கொண்டுவரலாம் அல்லது குளிப்பாட்டுவதற்கு உதவி செய்யலாம். ஒரு மேலாடை அல்லது ஒரு ஜோடி காலணி அவருக்குப் பிரயோஜனப்படுமா? (2 தீமோத்தேயு 4:13) அல்லது நோயாளி கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் காரியத்தை நீங்கள் கவனித்துக்கொள்ள முடியுமா? தன் சம்பளத்தை எப்படிப் பெற்றுக்கொள்வது, செலவு பணத்தை எப்படிப் பகிர்ந்துகொடுப்பது என்பதைக் குறித்துக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கக்கூடும். உதாரணமாக, வீட்டிலே சேர்ந்துகொண்டிருக்கும் கடிதங்களைக் கொண்டு வந்து கொடுப்பது, அவர்களுடைய வீட்டிலுள்ள செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சுவது அல்லது சமயலறையில் நெருப்பை அணைத்துவிடுவது போன்ற சில சிறிய உதவிகளைச் செய்வதன் மூலம் அவருக்கு நீங்கள் வேலையைக் குறைக்கலாம்.
18 “குளிர் காய்ந்து பசியாறுங்கள்,” என்று வெறுமனே சொல்வதைவிட அதிகத்தைச் செய்யும் காரியத்தில் முன்னேறுவதற்கு வழி இருப்பதை நாம் ஒவ்வொருவரும் காணக்கூடும். (யாக்கோபு 2:16) உங்கள் சபையிலுள்ள சகோதர சகோதரிகளைக் குறித்தும் எண்ணிப் பாருங்கள். பொருளாதார நெருக்கடியில், வியாதியில், ஊனமுற்ற நிலையில் அல்லது படுத்த படுக்கையாயிருப்பதில் இருக்கும் உதவிக்குத் தகுதியான சிலர் இருக்கிறார்களா? சபையிலுள்ள இந்த அன்பான சகோதரருக்காகவும் கிறிஸ்து மரித்தார். இவர்களுக்கு நடைமுறையான வழியில் உதவி செய்வதற்கு நீங்கள் என்ன செய்யக்கூடும்? இந்த ஒரு மனநிலையைக் கொண்டிருப்பது, கஷ்டங்கள் ஏற்படும்போது, உடனடியாகப் பிரதிபலிப்பதற்கு உங்களை நன்கு தயார் நிலையில் வைக்கும்.
19 நம்முடைய சகோதரருக்கு உதவியளிப்பதற்காக நாம் முன்வருவதன் மூலம், நம்முடைய விசுவாசம் செத்ததாயில்லை என்பதை நிரூபிப்பவர்களாக இருப்போம். கிறிஸ்தவ பிரசங்க ஊழியத்தில் மும்முரமாயிருப்பதற்கு நம்மை உந்துவிப்பதும் அதே விசுவாசம்தான். பொருள் சம்பந்தமாக மற்றவர்களுக்கு உதவுவதற்கும் கிறிஸ்தவ சுவிசேஷக வேலையில் ஒழுங்காகப் பங்குகொள்வதற்கும் இடையே சமநிலையைக் காத்துக்கொள்வது மிகவும் அவசியம். (மத்தேயு 15:3-9; 23:23) மார்த்தாளுக்கும் மரியாளுக்கும் இயேசு கொடுத்த ஆலோசனை இந்த சமநிலையைக் காண்பிக்கிறது. ஒருவர் பொருளாதார காரியங்களை ஆவிக்குரிய உணவோடு எடைபோட்டுப் பார்க்கும்போது ஆவிக்குரிய உணவுதானே எடுக்கப்பட்டுப்போகாத “நல்ல பங்கு” என்று அவர் சொன்னார். (லூக்கா 10:39-42) இந்த ஒழுங்குமுறையைக் குறித்ததில் நோயாளியும் ஏழையும் எப்பொழுதுமே இருப்பார்கள். அவர்களுக்கு நன்மை செய்ய நம்மால் முடியும், செய்ய வேண்டும். (மாற்கு 14:7) இருந்தபோதிலும் நாம் செய்யக்கூடிய மிகச்சிறந்த, நிரந்தர நன்மை பயக்கும் காரியம், கடவுளுடைய ராஜ்யத்தைக் குறித்து மற்றவர்களுக்குக் கற்பித்தலாகும். இந்தக் காரியத்தின் பேரில்தான் இயேசுவும் கவனஞ்செலுத்தினார். (லூக்கா 4:16-19) ஏழையும், நோயுற்றிருப்பவரும், சிறுமைப்பட்டவரும் நிரந்தர பரிகாரத்தைப் பெறுவதற்கு இதுவே ஒரே வழியாக இருக்கிறது. நம்முடைய சகோதர சகோதரிகளும் மற்றவர்களும் கடவுளில் நம்பிக்கையாயிருக்கவும் “உண்மையில் ஜீவனாயிருப்பதைப் பற்றிக் கொள்ளவும்” உதவி செய்வது எவ்வளவு மகிழ்ச்சி மிகுந்ததாயிருக்கிறது.—1 தீமோத்தேயு 6:17-19. (w86 10/15)
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
◻ கிறிஸ்தவ சபை செய்யும் மிகமுக்கியமான “நற்கிரியைகள்” யாவை?
◻ தங்களுடைய சகோதரர்களின் பொருளாதார சூழ்நிலைகள் சம்பந்தமான “நற்கிரியைகளுக்கு” மூப்பர்கள் எப்படிச் சமநிலையான கவனத்தைச் செலுத்தலாம்?
◻ மூப்பர்கள் என்ன நடைமுறையான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்?
◻ தேவையிலிருக்கும் உங்கள் சகோதர சகோதரிகளுக்கு உதவி செய்ய நீங்கள் என்ன நடைமுறையான காரியங்களைச் செய்யக்கூடும்?
[கேள்விகள்]
1. நைஜீரியாவிலுள்ள ஒரு சகோதரருக்கு என்ன தேவை ஏற்பட்டது?
2. ஏன் நாம் “நற்கிரியைகளில்” அக்கறையாயிருக்கிறோம்?
3, 4. 1 தீமோத்தேயு 3-5 அதிகாரங்களில் “நற்கிரியைகளைக்” குறித்து நாம் என்ன கற்றுக்கொள்ளக்கூடும்?
5. தேவைக்குரிய ஒரு நிலைமை ஏற்பட்டபோது அதைப் பவுல் எப்படிக் கையாண்டான்? இதற்கு ஒப்பான நவீன காரியங்கள் என்ன?
6. அமெரிக்க ஐக்கிய மாகாணங்களிலுள்ள கலிபோர்னியாவில் பெரியதொரு சேதம் ஏற்பட்டபோது, மூப்பர்களின் பிரதிபலிப்பு என்னவாயிருந்தது?
7. பொதுவில் காணப்படும் என்ன தேவைகளுக்கும் நாம் நன்கு பிரதிபலிக்க வேண்டும்?
8. சபையில் ஏற்படும் தேவைகளைக் கண்காணிகள் எப்படி ஞானமாகக் கையாளலாம்?
9. (எ) முதல் நூற்றாண்டில் தகுதிவாய்ந்த கிறிஸ்தவ விதவைகள் எப்படிக் கவனிக்கப்பட்டார்கள்? (பி) அப்படிப்பட்டவர்கள் இன்று எப்படிப்பட்ட உதவியிலிருந்து நன்மைபெறக்கூடும்?
10. மந்தையை மேய்க்கும் மூப்பர்கள் என்ன காரியத்திற்குக் கவனம் செலுத்த வேண்டும்?
11. உதவி தேவைப்படும் ஒரு சகோதரிக்கு உதவிக்கான ஏற்பாடுகளை எப்படிச் செய்யலாம் என்பதை உதாரணத்துடன் விளக்குங்கள்.
12 நோயுற்றவர்களுக்கும் வயோதிபர்களுக்கும் உதவி செய்வதில் மற்றவர்கள் எப்படி மூப்பர்களுடன் சேர்ந்து செயல்படலாம்?
13. ஏற்கெனவே குறிப்பிடப்பட்ட அந்த நைஜீரிய சகோதரருக்கு மூப்பர்கள் உதவியளித்ததன் பலன் என்ன?
14. நம்முடைய சகோதரர் நிமித்தமாக “நற்கிரியைகளைச்” செய்வதன் பேரில் நாம் என்ன மனநிலையைக் கொண்டிருக்க வேண்டும்?
15. உண்மையிலேயே தேவையிலிருக்கும் சிலருக்கு நாம் எப்படி உதவக்கூடும்?
16. வேறு என்ன நடைமுறையான வழியிலும் உதவி கொடுக்கப்படலாம்? உதாரணத்தோடு விளக்குங்கள்.
17. மருத்தவமனையிலிருக்கும் ஒரு சகோதரருக்கு நீங்கள் எப்படி உதவிசெய்ய முடியும்? (சங்கீதம் 41:1-3)
18. தேவையிலிருக்கும் சகோதரர் சம்பந்தமாக நீங்கள் என்ன செய்ய தீர்மானித்திருக்கிறீர்கள்?
19. (எ) இந்த அம்சத்தில் சமநிலை ஏன் அவ்வளவு முக்கியம்? (பி) மற்றவர்களுக்கு நம்மால் செய்ய முடிந்த மிகப்பெரிய நன்மை எது? ஏன் அப்படி? (சங்கீதம் 72:4, 16)
[பக்கம் 17-ன் பெட்டி]
சபை அக்கறை காண்பித்தது
நாட்டுப்புற பகுதியிலுள்ள ஒரு சிறிய சபைக்கு மாறிச்சென்ற ஒரு தம்பதி சிந்தனையைத் தூண்டும் பின்வரும் அறிக்கையை அளித்தனர்:
‘மூன்று வருடங்களுக்கு முன்பு, நானும் என்னுடைய மனைவியும் எங்கள் வீட்டை விற்று விட்டு, தூரத்திலுள்ள ஒரு சபைக்கு மாறிச் சென்றோம். அங்கு சில பிரச்னைகள் இருந்ததன் காரணமாக, முதிர்ந்த சகோதரரின் உதவி தேவையாக இருந்தது. வெகு சீக்கிரத்தில் பொறுப்புள்ள நான்கு ஸ்தானங்களையுடையவனாக இருந்தேன். நாங்கள் அந்தச் சகோதரர்களை நேசித்ததன் காரணமாக அவர்களோடு சேர்ந்து வேலை செய்ய விரும்பினோம். மாதங்கள் கடந்து செல்ல சபையின் ஆவியும் முன்னேறியது, இரண்டு நல்ல மூப்பர்களும் சபைக்கு மாறி வந்தனர்.
‘உடல் நலப் பிரச்னைகளையுடைய என்னுடைய மனைவி பெரியதொரு அறுவை சிகிச்சையை மேற்கொள்ள வேண்டியதாயிருந்தது. அவள் மருத்துவமனைக்குச் சென்ற அதே நாளில் நான் கல்லீரல் அழற்சியோடு வீடு திரும்பினேன். இரண்டு மாதங்களுக்குப் பின்பு எனக்கு வேலை இல்லாமற் போய்விட்டது, ஏனென்றால் பொருளாதாரம் அந்தப் பகுதியில் அதிக மோசமாயிருந்தது. எங்களுடைய பணமெல்லாம் தீர்ந்துபோனது, வேலையும் இல்லை. நாங்கள் இருவரும் மீண்டும் நலம்பெற முயற்சித்துக் கொண்டிருந்தோம். மாவட்ட மாநாடு நெருங்கி வந்து கொண்டிருந்ததினாலும் எனக்கு அந்த நிகழ்ச்சிநிரலில் பங்கு இருந்ததினாலும் சோர்வு ஏற்பட்டது. இரண்டு வாரங்களுக்குள் நடைபெற இருந்த வட்டார மாநாட்டிலும் எனக்கு ஒரு பொருப்பு கொடுக்கப்பட்டிருந்தது. என்னிடமோ பணமில்லை, நான் எப்படி இவற்றிற்குச் செல்வேன், என்னுடைய குடும்பத்தை எவ்வாறு பராமரிப்பேன் என்றறியாமல் திகைத்தேன். ஒரு நாள் காலை என்னுடைய மனைவி வெளி ஊழியத்திற்குச் சென்ற பின்பு, எங்களுடைய நிலைமையைப் பரிசீலனைச் செய்ய ஆரம்பித்தேன்.
‘ஜன்னல் வழியாய்ப் பார்த்துக்கொண்டு, யெகோவாவில் என்னுடைய நம்பிக்கை எங்கே போய்விட்டது என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன். கவலைப்பட வேண்டாம் என்று நான் என் மனைவியிடம் சொன்னேன், ஆனால் நானே இப்போது சந்தேகிக்க ஆரம்பித்தேன். எனக்கிருக்கும் “சிறிதளவு விசுவாசத்தை” நான் யெகோவாவிடம் வெளிப்படுத்தி, உதவிக்காக அவரிடம் ஜெபித்தேன். நான் ஜெபித்து முடிந்தவுடனே, ஒரு சகோதரர் என் வீட்டு கதவைத் தட்டினார். காப்பி அருந்த அவருடன் வர வேண்டுமென்று அவர் விரும்பினார். நான் வரவில்லையென்றும், அன்று இரவு கூட்டத்திற்காகத் தயாரிக்க வேண்டுமென்றும் சொன்னேன். சில நிமிடங்கள் மட்டுமே எடுக்குமென்று கூறி, அதிக கட்டாயப்படுத்தினார். எனவே நான் அவருடன் சென்றேன். அரை மணி நேரம் கழித்து நாங்கள் வீடு திரும்பினோம். நான் அவருடைய காரிலிருந்து இறங்கியபோது என் உடல் நலம் மேம்பட்டிருப்பதாக உணர்ந்தேன்.
‘நான் வீட்டில் நுழைந்தபோது, சமயலறையிலிருக்கும் அலமாரி மளிகைப் பொருட்களால் நிரப்பப்பட்டிருப்பதைக் கவனித்தேன். என்னுடைய மனைவி கடைக்குச் சென்றிருப்பாள் என்று நான் நினைத்தேன். “ஆனால் சற்றுப் பொருங்கள், அவள் எப்படி வாங்கியிருக்க முடியும், எங்களிடம் பணம் இல்லையே.” பிறகு நான் ஒரு காகித உறையைக் கண்டேன். அதன் மேல் இவ்வாறு எழுதியிருந்தது:
“உங்களை அதிகமாய் நேசிக்கும் சகோதர சகோதரிகளிடமிருந்து. இதிலிருந்து எதையும் நன்கொடை பெட்டியில் போட வேண்டாம். அதற்கானதை நாங்கள் கவனித்துக் கொண்டோம்.
‘கண்களில் நீர் பொங்கிட அதைக் கட்டுப்படுத்தமுடியவில்லை. எனக்கிருந்த “சிறிதளவு விசுவாசத்தை’ நான் எண்ணிப் பார்த்தப்போது எனக்கு அழுகை அதிகமாக வந்தது. பிறகு என்னுடைய மனைவி வீட்டிற்கு வந்தாள். மளிகைப் பொருட்களைக் குறித்தும் மற்ற வெகுமதிகளைக் குறித்தும் நான் பேசினேன். அவளோடு வந்த மற்ற இரண்டு சகோதரிகளோடு சேர்ந்து அழுதாள். நாங்கள் எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று விவரிக்க முயன்றபோது, யார் எதை கொடுத்தார்கள் என்று தெரியாது என்றார்கள். சபை முழுவதும் இதில் ஒரு பங்கை கொண்டிருந்தது. மற்றவர்களுக்கு எப்படித் தாராளமாக கொடுப்பது என்று நாங்கள் அவர்களுக்குக் கற்றுக்கொடுத்ததனால் அவர்கள் இதை எங்களுக்குச் செய்ய விரும்பினார்கள் என்றார்கள். இதைக் கேட்டபோது இன்னும் அதிகமாக கண்களில் கண்ணீரைப் பெருக்கியது!’
பின்னால் இந்த அனுபவத்தை அவர் எழுதியபோது, அந்தச் சகோதரரின் வேலை தொடர ஆரம்பித்தது மேலும் அவரும் அவருடைய மனைவியும் துணைப் பயனியர் சேவையில் ஈடுபட்டு வந்தனர்.
[பக்கம் 18-ன் பெட்டி]
கிறிஸ்தவ அன்பின் அத்தாட்சி
மேற்கத்திய ஐக்கிய மாகாணங்களில், யெகோவாவின் சாட்சிகள், வேதாகமத்தில் சிபார்சு செய்யப்பட்டிருக்கும் கிறிஸ்தவ அன்பை வெளிக்காட்டும்படியான சூழ்நிலை ஏற்பட்டது. அவர்களுடைய பிராந்தியத்தில், மூளை சம்பந்தப்பட்ட முடக்குவாதத்தால் அதிகமாய்ப் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாநிலம் ஒரு ஸ்தாபனத்தைத் திறந்து வைத்தது. இனிமேலும், வீட்டில் கவனிக்கப்பட முடியாத 25 வயது கேரி தானே இந்த மையத்தில் முதலில் வந்து குடியேறினான். இந்த நோய் அவனைப் படுத்தப்படுக்கையாக்கிவிட்டது, பேச்சையும் பாதித்துவிட்டது.
கேரி முழுக்காட்டப்பட்ட ஒரு சாட்சியாகி ஏழு வருடங்களானது. புதிய ஸ்தாபனத்திலிருந்த அவன் ஒருமுறை உள்ளூர் சபையின் கூட்டங்களுக்குச் செல்ல விரும்பினான். அவனுடைய பெற்றோர் அதிக தூரமாக இல்லை. சிறிது காலத்திற்கு அவனைக் கூட்டங்களுக்குக் கூட்டிக்கொண்டு வந்தார்கள். அவர்களுடைய வயதைக் கவனிக்கையில், சபையிலுள்ள மற்ற சகோதரர்கள் உதவ ஆரம்பித்தார்கள். ஒருவர் வாகனத்தை உடையவராயிருந்தார். எனவே அவரும் அவருடைய மனைவியும் அவர்களுடைய இரண்டு மகள்களோடுகூட 45 நிமிடத்திற்கு முன்பே தயாராகி கேரியை அழைத்துச் சென்றார்கள். கூட்டத்திற்குப் பிறகு, மறுபடியும் அந்த ஸ்தாபனத்திற்கு அவனைக் கொண்டு சேர்த்துவிட்டு வீட்டிற்கு அதிக தாமதமாகச் சென்றனர்.
ஸ்தாபனத்தில் ஏதோவொன்று உருவாகிக் கொண்டிருந்தது. மூளை சம்பந்தப்பட்ட முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்ட மற்றவர்களுங்கூட பைபிள் சத்தியத்தில் அக்கறை காட்டினர். சீக்கிரத்திலே அவர்களில் இருவர் பைபிள் படிப்பை ஏற்றுக் கொண்டனர். பிறகு, மற்றவர்களும் அக்கறை காண்பித்தனர். அவர்கள் எல்லோரையும் எவ்வாறு கூட்டத்திற்கு அழைத்துவர முடியும்? சபையில் இன்னொரு குடும்பம் ஒரு வாகனத்தை வாங்கியது. உள்ளூர் சாட்சிகளுக்கு சொந்தமாயிருந்த ஒரு கம்பெனி மூன்றாவது வாகனம் ஒன்றைக் கொடுத்து உதவியது. ஆகிலும் சில சமயங்களில் இவை வசதியாக அல்லது போதுமானதாக இல்லை. சபை கூடுதலாக ஏதாவது ஏற்பாடு செய்ய முடியுமா?
இந்தக் காரியத்தை மூப்பர்கள் கலந்தாலோசித்தார்கள். ஊனமுற்றவர்களைக் கூட்டத்திற்குக் கூட்டிக்கொண்டு வருவதற்கும், போவதற்கும் மட்டுமே வாகனம் ஒன்றை வாங்குவதென்று ஆலோசனை கொண்டுவரப்பட்டது. சபை அதற்கு ஒப்புக்கொண்டு அதற்காக தாராளமாக நன்கொடைகளை அளித்தது. இந்த நடவடிக்கை குறித்து கேள்விப்பட்ட சுற்று வட்டாரத்திலிருந்த மற்ற சில சாட்சிளும் நன்கொடைகளை அளித்தனர். ஒரு வாகனம் வாங்கப்பட்டு, சக்கர நாற்காலிகளை உள்ளே ஏற்றுவதற்கான விதத்தில் அது மாற்றியமைக்கப்பட்டது.
இப்பொழுது ஒவ்வொரு மாதமும் வாகனத்தைக் கூட்டங்களுக்கும் மாநாடுகளுக்கும் ஓட்டிச் செல்வதற்கு வித்தியாசமான புத்தகப் படிப்பு தொகுதிகள் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறது. அந்த மூளை சம்பந்தப்பட்ட முடக்குவாத சிகிச்சை ஸ்தாபனத்திலிருந்து இப்பொழுது ஐந்து பேர் கூட்டங்களுக்கு ஒழுங்காக வருகிறார்கள். அவர்களில் நான்கு பேர் முழுக்காட்டப்பட்ட சாட்சிகளாக இருக்கிறார்கள். அநேக சகோதரர்கள் அவர்களை அறியவந்து மிகவும் நேசிக்கிறார்கள். மற்றும் அவர்களுக்கு உதவிசெய்வதில் மகிழ்ச்சி காண்கிறார்கள். எப்படி? கூட்டங்களின்போது, அவர்களுக்காகப் பாட்டு புத்தகத்தைப் பிடிப்பதன் மூலமும் வசனங்களைத் திறந்து கொடுப்பதன் மூலமும். வட்டார மாநாடுகளிலும் மாவட்ட மாநாடுகளிலுங்கூட, தாங்களாகவே சாப்பிட முடியாத நிலையிலிருப்பவர்களுக்கு ஊட்டி விடுகின்றனர். இது உண்மையிலேயே மனமகிழ்ச்சி தரக்கூடிய ஒரு பரஸ்பர அன்பை ஏற்படுத்தியிருக்கிறது. கேரியைப் பற்றியதென்ன? தனது அன்பை வெளிக்காட்டியிருக்கும் அந்தச் சபையில் அவன் இப்பொழுது உதவி ஊழியனாக சேவை செய்கிறான்.—அப்போஸ்தலர். 20:35.