கிறிஸ்தவர்கள் ஆவியோடும் சத்தியத்தோடும் வணங்குகிறார்கள்
“தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் [“சத்தியத்தோடும்,” NW] அவரைத் தொழுதுகொள்ள வேண்டும்.”—யோவான் 4:24.
1. எப்படிப்பட்ட வணக்கம் கடவுளை பிரியப்படுத்துகிறது?
யெகோவாவின் ஒரேபேறான குமாரனாகிய இயேசு கிறிஸ்து, எப்படிப்பட்ட வணக்கம் தம் பரலோகத் தகப்பனைப் பிரியப்படுத்தும் என்பதை தெளிவாக சுட்டிக்காட்டினார். சீகார் ஊருக்குப் பக்கத்தில் ஒரு கிணற்றருகே சமாரிய பெண் ஒருத்தியிடம் இயேசு கனிவோடு சாட்சிகொடுக்கையில் இப்படிச் சொன்னார்: “நீங்கள் அறியாததைத் தொழுதுகொள்ளுகிறீர்கள்; நாங்கள் அறிந்திருக்கிறதைத் தொழுதுகொள்ளுகிறோம்; ஏனென்றால் இரட்சிப்பு யூதர்கள் வழியாய் வருகிறது. உண்மையாய்த் தொழுதுகொள்ளுகிறவர்கள் பிதாவை ஆவியோடும் உண்மையோடும் [“சத்தியத்தோடும்,” NW] தொழுதுகொள்ளுங்காலம் வரும், அது இப்பொழுதே வந்திருக்கிறது; தம்மைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் இப்படிப்பட்டவர்களாயிருக்கும்படி பிதாவானவர் விரும்புகிறார். தேவன் ஆவியாயிருக்கிறார், அவரைத் தொழுதுகொள்ளுகிறவர்கள் ஆவியோடும் உண்மையோடும் [“சத்தியத்தோடும்,” NW] அவரைத் தொழுதுகொள்ள வேண்டும்.” (யோவான் 4:22-24) இந்த வார்த்தைகள் நமக்கு எதைத் தெரிவிக்கின்றன?
2. சமாரியர்கள் எதன் அடிப்படையில் கடவுளை வணங்கினர்?
2 சமாரியர்களுக்கு தவறான மத கருத்துக்கள் இருந்தன. பரிசுத்த வேதாகமங்களின் முதல் ஐந்து புத்தகங்களை மட்டுமே கடவுளால் ஏவப்பட்டதாக அவர்கள் ஏற்றுக்கொண்டனர்; அதுவும் அவர்களது மொழிபெயர்ப்பாகிய சமாரிய ஐந்தாகமத்தின்படி மட்டுமே ஏற்றுக்கொண்டனர். சமாரியர்களுக்கு கடவுளைப் பற்றி தெளிவாக தெரியாதிருக்கையில், யூதர்களிடமோ வேதப்பூர்வ அறிவு ஒப்புவிக்கப்பட்டிருந்தது. (ரோமர் 3:1, 2) உண்மையுள்ள யூதர்களும் மற்றவர்களும் யெகோவாவின் தயவைப் பெறுவதற்கு வாய்ப்பிருந்தது. ஆனால் அவர்கள் என்ன செய்ய வேண்டியிருந்தது?
3. கடவுளை ‘ஆவியோடும் சத்தியத்தோடும்’ வணங்குவது எதை தேவைப்படுத்துகிறது?
3 யெகோவாவைப் பிரியப்படுத்த யூதர்களும் சமாரியர்களும் பூர்வத்தில் வாழ்ந்த மற்றவர்களும் என்ன செய்ய வேண்டியிருந்தது? அவரை ‘ஆவியோடும் சத்தியத்தோடும்’ வணங்க வேண்டியிருந்தது. நாமும் அதைத்தான் செய்ய வேண்டும். அன்பும் விசுவாசமும் நிரம்பிய இருதயத்தால் தூண்டப்பட்டு, ஊக்கமான ஆவியோடு அதாவது வைராக்கியத்தோடு கடவுளை சேவிக்க வேண்டும் என்பது உண்மைதான்; ஆனால் கடவுளை ஆவியோடு வணங்குவது என்பது முக்கியமாக அவரது பரிசுத்த ஆவியை பெற்றிருப்பதையும் அதனால் வழிநடத்தப்பட நம்மை அனுமதிப்பதையும் தேவைப்படுத்துகிறது. கடவுளுடைய வார்த்தையை படித்து, அதற்கிசைய நடக்கையில் நம் ஆவி அல்லது மனச்சாய்வு அவருடையதோடு இசைந்திருக்கும். (1 கொரிந்தியர் 2:8-12) யெகோவாவை சத்தியத்தோடும் வணங்குகையிலேயே அவர் நம் வணக்கத்தை ஏற்றுக்கொள்வார். அவருடைய வார்த்தையாகிய பைபிள் அவரையும் அவரது நோக்கங்களையும் பற்றி வெளிப்படுத்துகிறவற்றோடு நம் வணக்கம் இசைந்திருக்க வேண்டும்.
சத்தியத்தை கண்டுபிடிக்க முடியும்
4. சத்தியத்தை சிலர் எவ்வாறு கருதுகின்றனர்?
4 தத்துவம் பயிலும் மாணவர்கள் சிலர், மனிதனால் முழுமையான சத்தியத்தை தெரிந்துகொள்ளவே முடியாது என்ற முடிவுக்கு வந்திருக்கின்றனர். சொல்லப்போனால், ஸ்வீடன் நாட்டு ஆசிரியர் ஆல்ஃப் ஆல்பர்க் இவ்வாறு எழுதினார்: “திட்டவட்டமாக பதிலளிக்க முடியாத விதத்தில்தான் அநேக தத்துவ கேள்விகள் அமைந்திருக்கின்றன.” சத்தியத்தை முழுமையாக அல்ல, ஆனால் சம்பந்தப்பட்ட விதத்தில்தான் அறிந்துகொள்ள முடியும் என சிலர் சொன்னாலும், அது உண்மையா? இயேசு கிறிஸ்து அவ்வாறு நினைக்கவில்லை.
5. இயேசு இந்த உலகிற்கு ஏன் வந்தார்?
5 பின்வரும் காட்சியை நாம் பார்ப்பதாக கற்பனை செய்து கொள்ளலாம்: காலம், பொ.ச. 33-ன் ஆரம்பப் பகுதி. ரோம ஆளுநராகிய பொந்தியு பிலாத்துவிற்கு முன்பாக இயேசு நின்றுகொண்டிருக்கிறார். “சத்தியத்தைக் குறித்துச் சாட்சிகொடுக்க நான் பிறந்தேன், இதற்காகவே இந்த உலகத்தில் வந்தேன்” என பிலாத்துவிடம் இயேசு கூறுகிறார். “சத்தியமாவது என்ன” என பிலாத்து கேட்கிறார். ஆனால் இயேசுவின் பதிலுக்கு அவர் காத்திருப்பதில்லை.—யோவான் 18:36-38.
6. (அ) “சத்தியம்” எவ்வாறு விளக்கப்பட்டுள்ளது? (ஆ) இயேசு தம்மை பின்பற்றியவர்களுக்கு என்ன கட்டளையைக் கொடுத்தார்?
6 “சத்தியம்” என்பது “நிஜ காரியங்கள், சம்பவங்கள், உண்மைகள் ஆகியவற்றின் தொகுப்பு” என்பதாக விளக்கப்பட்டுள்ளது. (உவெப்ஸ்டர்ஸ் நைன்த் நியூ காலெஜியேட் டிக்ஷ்னரி) ஆனால் இயேசு பொதுப்படையான சத்தியத்தைக் குறித்து சாட்சி கொடுத்தாரா? இல்லை. அவர் குறிப்பான ஒரு சத்தியத்தை மனதில் வைத்திருந்தார். அந்த சத்தியத்தை அறிவிக்கும்படியே தமது சீஷர்களுக்கு பின்வருமாறு கட்டளையிட்டார்: “சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள்.” (மத்தேயு 28:19, 20) இந்த உலகத்தின் முடிவுக்கு முன்பு இயேசுவின் உண்மை சீஷர்கள் பூமியெங்கும் ‘சுவிசேஷத்தின் சத்தியத்தை’ அறிவிப்பார்கள். (மத்தேயு 24:3; கலாத்தியர் 2:14) அது, “ராஜ்யத்தினுடைய இந்தச் சுவிசேஷம் பூலோகமெங்குமுள்ள சகல ஜாதிகளுக்கும் சாட்சியாகப் பிரசங்கிக்கப்படும், அப்போது முடிவு வரும்” என இயேசு சொன்ன வார்த்தைகளின் நிறைவேற்றமாக இருக்கும். (மத்தேயு 24:14) ஆகவே ராஜ்யத்தின் நற்செய்தியை அறிவிப்பதன் மூலம் சகல தேசத்தாருக்கும் சத்தியத்தை கற்பிப்பவர்களை நாம் அடையாளம் கண்டுகொள்வது அவசியம்.
சத்தியத்தை எப்படிக் கற்றுக்கொள்ளலாம்
7. யெகோவா சத்தியத்தின் ஊற்றுமூலர் என்பதை எப்படி நிரூபிப்பீர்கள்?
7 யெகோவா, ஆவிக்குரிய சத்தியத்தின் ஊற்றுமூலர். சொல்லப்போனால், சங்கீதக்காரனாகிய தாவீது யெகோவாவை ‘சத்தியபரனாகிய கர்த்தர்’ என அழைத்தார். (சங்கீதம் 31:5; 43:3) பிதாவின் வார்த்தை சத்தியம் என இயேசு ஒப்புக்கொண்டார்; மேலும், “எல்லாரும் தேவனாலே போதிக்கப்பட்டிருப்பார்கள் என்று தீர்க்கதரிசிகளின் ஆகமத்தில் எழுதியிருக்கிறதே; ஆகையால் பிதாவினிடத்தில் கேட்டுக் கற்றுக்கொள்ளுகிறவன் எவனும் என்னிடத்தில் வருகிறான்” என்று கூறினார். (யோவான் 6:45; 17:17; ஏசாயா 54:13) ஆகவே சத்தியத்தைத் தேடுகிறவர்கள் மகத்தான போதகராகிய யெகோவாவால் கற்பிக்கப்பட வேண்டும் என்பது தெளிவாக தெரிகிறது. (ஏசாயா 30:20, 21, NW) சத்தியத்தை நாடுபவர்கள் “தேவனை அறியும் அறிவைக்” கண்டடைய வேண்டும். (நீதிமொழிகள் 2:5) யெகோவா சத்தியத்தை பல்வேறு வழிகளில் அன்பாக கற்றுக்கொடுத்திருக்கிறார் அல்லது தெரிவித்திருக்கிறார்.
8. கடவுள் என்ன விதங்களில் சத்தியத்தை கற்பித்திருக்கிறார் அல்லது தெரிவித்திருக்கிறார்?
8 உதாரணத்திற்கு, தேவதூதர்கள் மூலம் கடவுள் இஸ்ரவேலர்களுக்கு நியாயப்பிரமாணத்தை கொடுத்தார். (கலாத்தியர் 3:19) முற்பிதாக்களாகிய ஆபிரகாமுக்கும் யாக்கோபுக்கும் சொப்பனங்களில் ஆசீர்வாதங்களை வாக்குறுதி அளித்தார். (ஆதியாகமம் 15:12-16; 28:10-19) பரலோகத்திலிருந்தும்கூட கடவுள் பேசினார்; உதாரணத்திற்கு இயேசு முழுக்காட்டுதல் பெற்றபோது, “இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன்” என்ற நெகிழ வைக்கும் வார்த்தைகள் பூமியில் ஒலித்தன. (மத்தேயு 3:17) பைபிள் எழுத்தாளர்களை ஆவியால் ஏவியதன் மூலமும் கடவுள் சத்தியத்தை தெரிவித்திருப்பதற்கு நாம் நன்றியுள்ளவர்களாக இருக்கலாம். (2 தீமோத்தேயு 3:16, 17) ஆகவே கடவுளுடைய வார்த்தையிலிருந்து கற்றுக்கொள்வதன் மூலம் நாம் ‘சத்தியத்தை விசுவாசிக்க’ முடியும்.—2 தெசலோனிக்கேயர் 2:13.
சத்தியமும் கடவுளுடைய குமாரனும்
9. சத்தியத்தை வெளிப்படுத்த கடவுள் எவ்வாறு தம் குமாரனைப் பயன்படுத்தியிருக்கிறார்?
9 மனிதவர்க்கத்திற்கு சத்தியத்தைத் தெரிவிக்க கடவுள் முக்கியமாக தம் குமாரனாகிய இயேசு கிறிஸ்துவைப் பயன்படுத்தியிருக்கிறார். (எபிரெயர் 1:1-3) சொல்லப்போனால், வேறெந்த மனிதனும் எக்காலத்திலும் பேசாத விதத்தில் இயேசு சத்தியத்தை பேசினார். (யோவான் 7:46) பரலோகத்திற்குப் போன பிறகும்கூட அவர் தம் பிதா அருளிய சத்தியத்தை வெளிப்படுத்தினார். உதாரணத்திற்கு, அப்போஸ்தலன் யோவான் வெளிப்படுத்துதல் ஒன்றை பெற்றார்; அது “இயேசு கிறிஸ்து அருளிய திருவெளிப்பாடு. விரைவில் நிகழ வேண்டியவற்றைத் தம் பணியாளர்களுக்குக் காட்டுமாறு கடவுள் இவ்வெளிப்பாட்டைக் கிறிஸ்துவுக்கு அருளினார்.”—திருவெளிப்பாடு [வெளிப்படுத்துதல்] 1:1-3, பொ.மொ.
10, 11. (அ) இயேசு சாட்சி கொடுத்த சத்தியம் எதோடு சம்பந்தப்பட்டிருக்கிறது? (ஆ) இயேசு எவ்வாறு சத்தியத்தை நிஜமாக்கினார்?
10 சத்தியத்தைக் குறித்து சாட்சி கொடுக்கவே இந்த உலகிற்கு வந்ததாக இயேசு பொந்தியு பிலாத்துவிடம் கூறினார். அந்த சத்தியம், யெகோவாவின் பேரரசுரிமை நியாயநிரூபணம் செய்யப்படுவதோடு சம்பந்தப்பட்டதென இயேசு தம் ஊழியத்தின்போது வெளிப்படுத்தினார்; ராஜாவாக கிறிஸ்து ஆளும் கடவுளுடைய ராஜ்யத்தின் மூலமே கடவுளுடைய பேரரசுரிமை நியாயநிரூபணம் செய்யப்படும். ஆனால் இயேசு சத்தியத்தைக் குறித்து சாட்சிகொடுத்தது, அவர் பிரசங்கித்ததையும் கற்பித்ததையும் மட்டுமே உட்படுத்தவில்லை. அந்த சத்தியத்தை நிறைவேற்றுவதன் மூலம் இயேசு அதை நிஜமாக்கினார். அப்போஸ்தலன் பவுல் இவ்வாறு எழுதினார்: “போஜனபான விஷயத்திலாவது திருநாள் மாதப்பிறப்பு ஓய்வுநாள் இவற்றைப்பற்றிய விஷயத்திலாவது ஒருவனும் உங்களைக் குறை கூறாதிருப்பானாக. அவைகள் வருங் காரியங்களின் நிழல்; பொருளோ [“நிஜமோ,” NW] கிறிஸ்துவுக்குரியது.”—கொலோசெயர் 2:16, 17, தி.மொ.
11 முன்னறிவிக்கப்பட்டபடி இயேசு பெத்லகேமிலே பிறந்தது சத்தியம் நிஜமானதற்கு ஓர் உதாரணமாகும். (மீகா 5:2; லூக்கா 2:4-11) 69 ‘வார வருடங்களின்’ முடிவில் மேசியா வருவார் என தானியேல் தீர்க்கதரிசனம் உரைத்தது நிறைவேறியபோதும் சத்தியம் நிஜமானது. முன்னறிவிக்கப்பட்டபடியே சரியாக பொ.ச. 29-ல் இயேசு முழுக்காட்டுதலின் மூலம் கடவுளுக்கு தம்மை அர்ப்பணித்து, பரிசுத்த ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்டபோது அது நிறைவேறியது. (தானியேல் 9:25; லூக்கா 3:1, 21, 22) ராஜ்ய அறிவிப்பாளராக இயேசு செய்த அறிவொளியூட்டும் ஊழியத்தின் மூலம் சத்தியம் மேலும் நிஜமானது. (ஏசாயா 9:1, 2, 6, 7; 61:1, 2; மத்தேயு 4:13-17; லூக்கா 4:18-21) அவரது மரணம் மற்றும் உயிர்த்தெழுதலின் மூலமும் அது நிஜமானது.—சங்கீதம் 16:8-11; ஏசாயா 53:5, 8, 11, 12; மத்தேயு 20:28; யோவான் 1:29; அப்போஸ்தலர் 2:25-31.
12. ‘நானே சத்தியமாய் இருக்கிறேன்’ என இயேசுவால் ஏன் சொல்ல முடிந்தது?
12 சத்தியம் இயேசு கிறிஸ்துவையே மையமாக கொண்டிருந்ததால் இப்படி சொல்ல அவரால் முடிந்தது: “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.” (யோவான் 14:6) கடவுளுடைய நோக்கத்தில் இயேசு வகிக்கும் பங்கை ஏற்றுக்கொள்வதன் மூலம் “சத்தியத்தின் பக்கம்” நிலைநிற்கை எடுக்கும்போது மக்கள் ஆவிக்குரிய விதத்தில் விடுதலை பெறுகிறார்கள். (யோவான் 8:32-36; 18:37, NW) செம்மறியாடு போன்றவர்கள் சத்தியத்தை ஏற்றுக்கொண்டு விசுவாசத்தோடு கிறிஸ்துவை பின்பற்றுவதால் நித்திய ஜீவனைப் பெறுவார்கள்.—யோவான் 10:24-28.
13. எந்த மூன்று அம்சங்களில் வேதப்பூர்வ சத்தியத்தை நாம் ஆராய்வோம்?
13 இயேசுவினாலும் ஆவியால் ஏவப்பட்ட அவரது சீஷர்களாலும் அளிக்கப்பட்ட சத்தியத்தின் தொகுப்பே உண்மை கிறிஸ்தவத்தின் விசுவாசம். இவ்வாறு, ‘விசுவாசத்துக்குக் கீழ்ப்படிபவர்கள்’ தொடர்ந்து ‘சத்தியத்திலே நடக்கிறார்கள்.’ (அப்போஸ்தலர் 6:7; 3 யோவான் 3, 4) அப்படியென்றால் இன்று யார் சத்தியத்திலே நடக்கிறார்கள்? எல்லா தேசத்தாருக்கும் யார் உண்மையிலேயே சத்தியத்தை கற்பிக்கிறார்கள்? இக்கேள்விகளுக்கு பதிலளிக்கையில் நாம் ஆரம்ப கால கிறிஸ்தவர்களைக் குறித்து முக்கியமாக சிந்திப்போம்; மேலும், (1) நம்பிக்கைகள், (2) வணக்கமுறை, (3) தனிப்பட்ட நடத்தை ஆகியவற்றோடு சம்பந்தப்பட்ட வேதப்பூர்வ சத்தியத்தை ஆராய்வோம்.
சத்தியமும் நம்பிக்கைகளும்
14, 15. வேதவசனங்களின் பேரில் ஆரம்ப கால கிறிஸ்தவர்களுக்கும் யெகோவாவின் சாட்சிகளுக்கும் உள்ள மனப்பான்மையைப் பற்றி என்ன சொல்வீர்கள்?
14 ஆரம்ப கால கிறிஸ்தவர்கள், எழுதப்பட்ட யெகோவாவின் வார்த்தையை மிக உயர்வாக மதித்தார்கள். (யோவான் 17:17) அதன் அடிப்படையிலேயே அவர்களது நம்பிக்கைகளும் பழக்கங்களும் அமைந்திருந்தன. இரண்டாம் மூன்றாம் நூற்றாண்டுகளைச் சேர்ந்த அலெக்ஸாந்திரியாவின் கிளமென்ட் இப்படிச் சொன்னார்: “மேன்மைக்காக பாடுபடுகிறவர்கள், தங்கள் நம்பிக்கைகளுக்கு வேதப்பூர்வ ஆதாரங்களை பெறும் வரை சத்தியத்திற்கான தேடலை நிறுத்தமாட்டார்கள்.”
15 ஆரம்ப கால கிறிஸ்தவர்களைப் போலவே, யெகோவாவின் சாட்சிகளும் பைபிளை உயர்வாக மதிக்கிறார்கள். ‘வேதவாக்கியங்களெல்லாம் தேவ ஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; உபதேசத்துக்கு பிரயோஜனமுள்ளவைகளாக இருக்கிறது’ என்று அவர்கள் நம்புகிறார்கள். (2 தீமோத்தேயு 3:16, 17) ஆகவே ஆரம்ப கால கிறிஸ்தவர்களின் நம்பிக்கைகள் சிலவற்றைப் பற்றி இப்போது சிந்திக்கலாம்; யெகோவாவின் இன்றைய ஊழியர்கள் கற்றிருப்பவற்றை கருத்தில் கொண்டு சிந்திக்கலாம், காரணம் இவர்கள் பைபிளை தங்கள் பிரதான பாடபுத்தகமாக பயன்படுத்துகிறார்கள்.
ஆத்துமாவைப் பற்றிய சத்தியம்
16. ஆத்துமாவைப் பற்றிய சத்தியம் என்ன?
16 ஆரம்ப கால கிறிஸ்தவர்கள் வேதவசனங்களில் சொல்லப்பட்டதையே நம்பியதால் ஆத்துமாவைப் பற்றிய சத்தியத்தைக் கற்பித்தார்கள். மனிதனை கடவுள் படைத்தபோது “மனுஷன் ஜீவாத்துமாவானான்” என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். (ஆதியாகமம் 2:7) மேலும், மனித ஆத்துமா சாகும் என்பதை அவர்கள் ஒப்புக்கொண்டார்கள். (எசேக்கியேல் 18:4; யாக்கோபு 5:20) “மரித்தவர்கள் ஒன்றும் அறியார்கள்” என்பதும் அவர்களுக்கு தெரிந்திருந்தது.—பிரசங்கி 9:5, 10.
17. இறந்தவர்களுக்கான நம்பிக்கையை எப்படி விளக்குவீர்கள்?
17 இருந்தாலும், கடவுளுடைய ஞாபகத்தில் உள்ள இறந்தவர்கள் உயிர்த்தெழுப்பப்படுவார்கள் அல்லது மீண்டும் உயிர்பெறுவார்கள் என்ற நிச்சயமான நம்பிக்கை இயேசுவின் ஆரம்ப கால சீஷர்களுக்கு இருந்தது. இந்த நம்பிக்கையை இவ்வாறு பவுல் தெளிவாக குறிப்பிட்டார்: “நீதிமான்களும் அநீதிமான்களுமாகிய மரித்தோர் உயிர்த்தெழுந்திருப்பது உண்டென்று . . . நானும் நம்பிக்கைகொண்டிருக்கிறேன்.” (அப்போஸ்தலர் 24:15) பிற்பட்ட காலத்தில்கூட, தன்னை கிறிஸ்தவரென சொல்லிக்கொண்ட மினூகியுஸ் ஃபீலிக்ஸ் இவ்வாறு எழுதினார்: “கடவுளால் ஆரம்பத்தில் உண்டாக்கப்பட்ட மனிதனை மறுபடியும் அவரால் புதிதாக படைக்க முடியாது என அடித்துக்கூறும் அளவுக்கு புத்தியில்லாதவராக அல்லது முட்டாளாக இருப்பது யார்?” ஆரம்ப கால கிறிஸ்தவர்களைப் போலவே யெகோவாவின் சாட்சிகளும் மனித ஆத்துமா, மரணம், உயிர்த்தெழுதல் ஆகியவற்றைக் குறித்த வேதப்பூர்வ சத்தியத்தை பற்றியிருக்கின்றனர். அடுத்ததாக, கடவுளும் கிறிஸ்துவும் உண்மையில் யார் என சிந்திக்கலாம்.
சத்தியமும் திரித்துவமும்
18, 19. திரித்துவம் வேதப்பூர்வ போதனையல்ல என ஏன் சொல்லலாம்?
18 ஆரம்ப கால கிறிஸ்தவர்கள் கடவுளையும் கிறிஸ்துவையும் பரிசுத்த ஆவியையும் திரித்துவமாக கருதவில்லை. தி என்ஸைக்ளோப்பீடியா பிரிட்டானிக்கா இப்படிச் சொல்கிறது: “திரித்துவம் என்ற சொல்லோ, அதன் திட்டவட்டமான கோட்பாடோ புதிய ஏற்பாட்டில் காணப்படுகிறதுமில்லை, இயேசுவும் அவரைப் பின்பற்றினவர்களும் பழைய ஏற்பாட்டிலுள்ள பின்வரும் ஷேமாவை [ஒரு எபிரெய ஜெபத்தை] மறுத்துப்பேச எண்ணவுமில்லை: ‘இஸ்ரவேலே, கேள்: நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர்’ (உபா. 6:4).” ரோம திரித்துவ கடவுட்களையோ வேறெந்த கடவுட்களையோ கிறிஸ்தவர்கள் வழிபடவில்லை. யெகோவாவை மட்டுமே வணங்க வேண்டும் என இயேசு சொன்னதை அவர்கள் ஏற்றுக்கொண்டார்கள். (மத்தேயு 4:10) மேலும், “என் பிதா என்னிலும் பெரியவராயிருக்கிறார்” என்ற கிறிஸ்துவின் வார்த்தைகளை அவர்கள் நம்பினார்கள். (யோவான் 14:28) இன்று யெகோவாவின் சாட்சிகளுடைய நம்பிக்கைகளும் அதுவே.
19 கடவுளும் கிறிஸ்துவும் பரிசுத்த ஆவியும் வெவ்வேறாக இருப்பதை இயேசுவின் ஆரம்ப கால சீஷர்கள் தெளிவாக புரிந்துகொண்டிருந்தார்கள். சொல்லப்போனால், திரித்துவத்தின் பெயரிலல்ல, ஆனால் (1) பிதாவின் பெயரிலும், (2) குமாரனின் பெயரிலும், (3) பரிசுத்த ஆவியின் பெயரிலும் அவர்கள் சீஷர்களுக்கு முழுக்காட்டுதல் கொடுத்தார்கள். அதேவிதமாக யெகோவாவின் சாட்சிகள் வேதப்பூர்வ சத்தியத்தை கற்பிக்கிறார்கள்; ஆகவே கடவுளுக்கும் குமாரனுக்கும் பரிசுத்த ஆவிக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை எடுத்துக் காட்டுகிறார்கள்.—மத்தேயு 28:19.
சத்தியமும் முழுக்காட்டுதலும்
20. முழுக்காட்டுதல் பெறுபவர்களுக்கு என்ன அறிவு தேவை?
20 மக்களுக்கு சத்தியத்தைக் கற்பிப்பதன் மூலம் அவர்களை சீஷர்களாக்கும்படி இயேசு தம்மை பின்பற்றியவர்களுக்குக் கட்டளையிட்டார். முழுக்காட்டுதலுக்கு தகுதி பெற அவர்கள் வேதவசனங்களைக் குறித்த அடிப்படை அறிவை பெற்றிருக்க வேண்டும். உதாரணத்திற்கு பிதா மற்றும் அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் ஸ்தானத்தையும் அதிகாரத்தையும் அவர்கள் ஒப்புக்கொள்ள வேண்டும். (யோவான் 3:16) மேலும், பரிசுத்த ஆவி ஒரு நபரல்ல ஆனால் கடவுளுடைய செயல் நடப்பிக்கும் சக்தி என்பதையும் முழுக்காட்டுதல் பெறுபவர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.—ஆதியாகமம் 1:2, NW அடிக்குறிப்பு.
21, 22. முழுக்காட்டுதல் விசுவாசிகளுக்கு மட்டுமே என நீங்கள் ஏன் சொல்வீர்கள்?
21 தகவலறிந்தவர்களும், மனந்திரும்பியவர்களும், கடவுளுடைய சித்தத்தை செய்வதற்காக நிபந்தனையின்றி தங்களை அவருக்கு ஒப்புக்கொடுத்தவர்களுமான நபர்களுக்கு மட்டுமே ஆரம்ப கால கிறிஸ்தவர்கள் முழுக்காட்டுதல் கொடுத்தார்கள். பொ.ச. 33, பெந்தெகொஸ்தே நாளன்று எருசலேமிற்கு வந்திருந்த யூதர்களும் புறதேசத்தாரும் எபிரெய வேதவசனங்களைக் குறித்து ஏற்கெனவே அறிந்திருந்தனர். மேசியாவாகிய இயேசுவைக் குறித்து அப்போஸ்தலன் பேதுரு பேசியதைக் கேட்டபோது சுமார் 3,000 பேர் ‘அவருடைய வார்த்தையைச் சந்தோஷமாய் ஏற்றுக்கொண்டு,’ “ஞானஸ்நானம் பெற்றார்கள்.”—அப்போஸ்தலர் 2:41; 3:19–4:4; 10:34-38.
22 கிறிஸ்தவ முழுக்காட்டுதல், விசுவாசிகளுக்கே. சமாரியர்கள் சத்தியத்தை ஏற்றுக்கொண்டு, “தேவனுடைய ராஜ்யத்துக்கும் இயேசு கிறிஸ்துவினுடைய நாமத்துக்கும் ஏற்றவைகளைக் குறித்து, பிலிப்பு பிரசங்கித்ததை அவர்கள் விசுவாசித்தபோது, புருஷரும் ஸ்திரீகளும் ஞானஸ்நானம் பெற்றார்கள்.” (அப்போஸ்தலர் 8:12) யெகோவாவைப் பற்றி அறிந்திருந்தவரும், யூத மதத்திற்கு மாறியிருந்தவருமான எத்தியோப்பிய மந்திரி ஒருவர், மேசியானிய தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றத்தைப் பற்றி பிலிப்பு தந்த விளக்கத்தை முதலாவதாக ஏற்றுக்கொண்டார், பிறகு முழுக்காட்டுதல் பெற்றார். (அப்போஸ்தலர் 8:34-36) கடவுளுக்கு “பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்கு உகந்தவன்” என்றும் இயேசு கிறிஸ்துவில் விசுவாசம் வைக்கும் அனைவரும் பாவங்களுக்கு மன்னிப்பைப் பெறுகின்றனர் என்றும் கொர்நேலியுவிடமும் புறதேசத்தாராகிய மற்றவர்களிடமும் பேதுரு சொன்னார். (அப்போஸ்தலர் 10:35, 43; 11:18) இவை அனைத்தும் இயேசு கொடுத்த கட்டளையோடு, அதாவது மற்றவர்களை ‘சீஷராக்கி, . . . அவர் கட்டளையிட்ட யாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுமாறு’ கொடுத்த கட்டளையோடு இசைந்திருக்கின்றன. (மத்தேயு 28:19, 20; அப்போஸ்தலர் 1:8) யெகோவாவின் சாட்சிகளும் இதே தராதரத்தைத்தான் பின்பற்றுகிறார்கள்; வேதவசனங்களைப் பற்றிய அடிப்படை அறிவை பெற்றிருக்கிறவர்களுக்கும் கடவுளுக்கு தங்களை ஒப்புக்கொடுக்கிறவர்களுக்கும் மட்டுமே முழுக்காட்டுதல் கொடுக்கிறார்கள்.
23, 24. கிறிஸ்தவ முழுக்காட்டுதல் பெறுவதற்கு சரியான முறை என்ன?
23 தண்ணீரில் முழுமையாக முக்கியெடுக்கப்படுவதே விசுவாசிகள் முழுக்காட்டுதல் பெறுவதற்கான சரியான முறை. இயேசு யோர்தான் நதியில் முழுக்காட்டுதல் பெற்ற பிறகு அவர் ‘ஜலத்திலிருந்து கரையேறினார்.’ (மாற்கு 1:10) எத்தியோப்பிய அதிகாரி முழுக்காட்டுதல் பெற்ற சமயத்தில், அவரும் பிலிப்புவும் “தண்ணீரில் இறங்கினார்கள்,” பிறகு ‘தண்ணீரிலிருந்து கரையேறினார்கள்.’ (அப்போஸ்தலர் 8:36-40) முழுக்காட்டுதலை அடையாள அர்த்தத்தில் அடக்கம் பண்ணப்படுவதோடு வேதவசனங்கள் இணைத்துப் பேசுவதும்கூட, தண்ணீரில் முழுமையாக மூழ்கி எழுவதை சுட்டிக்காட்டுகிறது.—ரோமர் 6:4-6; கொலோசெயர் 2:12.
24 தி ஆக்ஸ்ஃபர்டு கம்பானியன் டு த பைபிள் இவ்வாறு குறிப்பிடுகிறது: “புதிய ஏற்பாட்டில் முழுக்காட்டுதலைக் குறித்து விவரிக்கப்பட்டிருப்பதன் அடிப்படையில் பார்த்தால் முழுக்காட்டுதல் பெற்றவர்கள் தண்ணீருக்குள் முக்கி எடுக்கப்பட்டது தெரிகிறது.” 20-ஆம் நூற்றாண்டின் லாரூஸ் (பாரிஸ், 1928) என்ற பிரெஞ்சு புத்தகத்தின்படி, “ஆரம்ப கால கிறிஸ்தவர்கள் தண்ணீர் காணப்பட்ட இடங்களில் எல்லாம் முழுக்காட்டுதல் பெற்றார்கள்.” இயேசுவுக்குப் பிறகு—கிறிஸ்தவத்தின் வெற்றி என்ற ஆங்கில புத்தகம் இவ்வாறு குறிப்பிடுகிறது: “மிக அடிப்படையான அர்த்தத்தில், முழுக்காட்டப்படுபவர் விசுவாசத்தை அறிக்கை செய்ய வேண்டியிருந்தது, பிறகு இயேசுவின் பெயரில் தண்ணீரில் முழுமையாக முக்கப்பட வேண்டியிருந்தது.”
25. பின்வரும் கட்டுரையில் எதை சிந்திப்போம்?
25 பைபிளின் அடிப்படையில் ஆரம்ப கால கிறிஸ்தவர்களுக்கு இருந்த நம்பிக்கைகளையும் அவர்கள் கடைப்பிடித்த பழக்கங்களையும் பற்றி நாம் சிந்தித்தவை சில உதாரணங்கள் மட்டுமே. அவர்களுடைய நம்பிக்கைகளும் யெகோவாவின் சாட்சிகளுடைய நம்பிக்கைகளும் ஒத்திருப்பதற்கு இன்னும் பல உதாரணங்களை தர முடியும். பின்வரும் கட்டுரையில், மக்களுக்கு சத்தியத்தைக் கற்பிப்பவர்களை அடையாளம் காண்பதற்கான கூடுதலான வழிகளைப் பற்றி சிந்திப்போம்.
நீங்கள் எப்படி பதிலளிப்பீர்கள்?
• கடவுள் எப்படிப்பட்ட வணக்கத்தை எதிர்பார்க்கிறார்?
• சத்தியம் எவ்வாறு இயேசு கிறிஸ்து மூலம் நிஜமானது?
• ஆத்துமாவையும் மரணத்தையும் பற்றிய சத்தியம் என்ன?
• கிறிஸ்தவ முழுக்காட்டுதல் எப்படி கொடுக்கப்படுகிறது, முழுக்காட்டப்படுபவர்களிடம் என்ன எதிர்பார்க்கப்படுகிறது?
[பக்கம் 16-ன் படம்]
‘சத்தியத்தைக் குறித்துச் சாட்சி கொடுக்கவே நான் இந்த உலகத்தில் வந்தேன்’ என பிலாத்துவிடம் இயேசு கூறினார்
[பக்கம் 17-ன் படம்]
‘நான் சத்தியமாய் இருக்கிறேன்’ என்று இயேசு ஏன் சொன்னார் என விளக்க முடியுமா?
[பக்கம் 18-ன் படம்]
கிறிஸ்தவ முழுக்காட்டுதலைப் பற்றிய சத்தியம் என்ன?