-
வெள்ளிக்கிழமை புதைக்கப்படுகிறார்—ஞாயிற்றுக்கிழமை ஒரு காலியான கல்லறைஎக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப்பெரிய மனிதர்
-
-
ஞாயிறு அதிகாலை மகதலேனா மரியாள், யாக்கோபுவின் தாயாகிய மரியாள், சலோமே, யோவன்னாள் ஆகியோரோடுங்கூட மற்ற பெண்களும் இயேசுவின் உடலை தயாரிப்பதற்கு நறுமணப் பொருட்களை கல்லறைக்கு கொண்டு வருகின்றனர். செல்லும் வழியில் அவர்கள் ஒருவரையொருவர் நோக்கி இவ்வாறு சொல்கின்றனர்: “கல்லறையின் வாசலிலிருக்கிற கல்லை நமக்காக எவன் புரட்டித் தள்ளுவான்?” ஆனால் வந்து சேர்ந்த போது, ஒரு பூமியதிர்ச்சி ஏற்பட்டிருக்கிறது என்றும் யெகோவாவின் தூதன் கல்லை புரட்டித் தள்ளியிருக்கிறான் என்றும் அறியவருகின்றனர். காவல் சேவகர் போய் விட்டிருக்கின்றனர், கல்லறை வெறுமையாய் இருக்கிறது! மத்தேயு 27:57–28:2; மாற்கு 15:42–16:4; லூக்கா 23:50–24:3, 10; யோவான் 19:14, 31–20:1; 12:42; லேவியராகமம் 23:5–7; உபாகமம் 21:22, 23; சங்கீதம் 34:20; சகரியா 12:10.
-
-
இயேசு உயிரோடிருக்கிறார்!எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப்பெரிய மனிதர்
-
-
அதிகாரம் 128
இயேசு உயிரோடிருக்கிறார்!
இயேசுவின் கல்லறை வெறுமையாய் இருப்பதை பெண்கள் கண்டபோது, மகதலேனா மரியாள் பேதுருவிடமும் யோவானிடமும் சொல்வதற்கு ஓடுகிறாள். மற்ற பெண்கள் கல்லறையிலேயே இருந்து விடுகின்றனர். விரைவில் ஒரு தூதன் தோன்றி அவர்களை உள்ளே அழைக்கிறான்.
இங்கே பெண்கள் மற்றொரு தூதனைக் காண்கின்றனர், தூதர்களில் ஒருவன் அவர்களிடம் இவ்வாறு சொல்கிறான்: “நீங்கள் பயப்படாதிருங்கள்; சிலுவையில் [கழுமரத்தில், NW] அறையப்பட்ட இயேசுவைத் தேடுகிறீர்கள் என்று அறிவேன். அவர் இங்கே இல்லை; தாம் சொன்னபடியே உயிர்த்தெழுந்தார்; கர்த்தரை வைத்த இடத்தை வந்து பாருங்கள்; சீக்கிரமாய்ப் போய், அவர் மரித்தோரிலிருந்து எழுந்தார் என்று அவருடைய சீஷர்களுக்குச் சொல்லுங்கள்.” பயத்தோடும் மகா சந்தோஷத்தோடும் இந்தப் பெண்களும்கூட ஓடுகின்றனர்.
இதற்குள், மரியாள் பேதுருவையும் யோவானையும் கண்டு அவர்களிடம் அவள் இவ்வாறு அறிவிக்கிறாள்: “கர்த்தரைக் கல்லறையிலிருந்து எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள், அவரை வைத்த இடம் எங்களுக்குத் தெரியவில்லை.” உடனடியாக அந்த இரண்டு அப்போஸ்தலர்களும் அவ்விடத்தை விட்டு புறப்பட்டு ஓடுகின்றனர். யோவான் விரைந்து ஓடுகிறான்—வயதில் இளையவனாக இருப்பதால்—அவன் கல்லறைக்கு முதலில் சென்று சேருகிறான். இதற்குள் அந்தப் பெண்கள் அங்கிருந்து சென்று விட்டிருக்கின்றனர், ஆகையால் அங்கு ஒருவரும் இல்லை. யோவான் குனிந்து கல்லறைக்குள்ளே உற்றுப் பார்க்கிறான், சீலைகளைக் காண்கிறான், ஆனால் அவன் வெளியிலேயே இருந்து விடுகிறான்.
பேதுரு வந்து சேர்ந்த போது, அவன் தயங்காமல் நேரடியாக உங்ளே செல்கிறான். சீலைகள் கிடக்கிறதையும் இயேசுவின் தலையைச் சுற்றுவதற்கு உபயோகிக்கப்பட்ட துணியையும் அவன் காண்கிறான். அது தனியே ஓர் இடத்தில் சுருட்டி வைக்கப்பட்டிருக்கிறது. யோவானும் இப்போது கல்லறைக்குள் பிரவேசிக்கிறான், அவன் மரியாளின் அறிக்கையை நம்புகிறான். ஆனால் பேதுருவோ அல்லது யோவானோ இயேசு உயிர்த்தெழுப்பப்பட்டிருக்கிறார் என்பதை புரிந்துகொள்ளவில்லை. அவர் அவ்வாறு உயிர்த்தெழுப்பப்படுவார் என்று அவர் அவர்களிடம் அடிக்கடி சொல்லியிருந்த போதிலும் குழப்பமடைந்தவர்களாய் இருவரும் வீடு திரும்புகின்றனர், ஆனால் கல்லறைக்கு திரும்பி வந்திருக்கும் மரியாளோ அங்கேயே இருந்து விடுகிறாள்.
இதற்கிடையே, இயேசு உயிர்த்தெழுப்பப்பட்டுவிட்டார் என்பதை மற்ற பெண்கள் சீஷர்களிடம் சொல்வதற்கு விரைந்து செல்கின்றனர், தேவதூதர்கள் அவர்கள் அவ்வாறு செய்யும்படி கட்டளையிட்டிருந்தனர். அவர்களால் முடிந்த அளவு விரைவாக அவர்கள் ஓடிக்கொண்டிருக்கையில், இயேசு அவர்களைச் சந்தித்து “வாழ்க!” என்று சொல்கிறார். அவர்கள் அவருடைய பாதங்களில் விழுந்து அவரை பணிந்து கொள்கின்றனர். அப்போது இயேசு இவ்வாறு சொல்கிறார்: “பயப்படாதிருங்கள்; நீங்கள் போய், என் சகோதரர் கலிலேயாவுக்குப் போகும்படி அவர்களுக்குச் சொல்லுங்கள்; அங்கே அவர்கள் என்னைக் காண்பார்கள்.”
இதற்கு முன்பு, பூமியதிர்ச்சி ஏற்பட்டு தேவதூதர்கள் தோன்றிய போது, காவலில் இருந்த போர்ச்சேவகர்கள் அதிர்ச்சியடைந்து செத்த மனிதர்களைப் போல் ஆனார்கள். இயல்பான நிலைக்கு மீண்டும் வந்த பிறகு, அவர்கள் உடனடியாகப் பட்டணத்துக்குள் சென்று என்ன நடந்தது என்பதை பிரதான ஆசாரியர்களிடம் கூறினர். யூதர்களின் “மூப்பர்களோடு” கலந்து பேசிய பிறகு, போர்ச்சேவகருக்கு லஞ்சம் கொடுப்பதன் மூலம் அந்த விஷயத்தை மறைப்பதற்கு முயற்சி செய்ய தீர்மானம் எடுக்கப்பட்டது. அவர்கள் இவ்வாறு சொல்லப்பட்டனர்: “நாங்கள் நித்திரை பண்ணுகையில், அவனுடைய சீஷர்கள் இராத்திரியிலே வந்து, அவனைக் களவாய்க் கொண்டு போய் விட்டார்கள் என்று சொல்லுங்கள்.”
ரோம போர்ச்சேவகர்கள் காவல் செய்யும் இடங்களில் உறங்கிவிட்டால் ஒருவேளை மரண தண்டனை கொடுக்கப்படுவர் என்பதற்காக ஆசாரியர்கள் அவர்களுக்கு இவ்விதமாக வாக்களித்தார்கள்: “இது [நீங்கள் உறங்கிவிட்ட அறிக்கை] தேசாதிபதிக்குக் கேள்வியானால், நாங்கள் அவரைச் சம்மதப்படுத்தி, உங்களைத் தப்புவிப்போம்.” லஞ்சம் போதுமான அளவு பெரியதாக இருந்ததினால், அவர்கள் கட்டளையிட்டபடியே போர்ச்சேவகர்கள் செய்தனர். இதன் விளைவாக, இயேசுவின் உடல் களவு போனதைப் பற்றிய பொய் அறிக்கை யூதர்கள் மத்தியில் விரிவாக பரவுகிறது.
கல்லறையில் இன்னும் இருக்கும் மகதலேனா மரியாள் அழுதுகொண்டிருக்கிறாள். இயேசு எங்கே இருக்கக்கூடும்? கல்லறைக்குள் பார்ப்பதற்கு அவள் முன்னாக குனிகிறாள், மறுபடியும் தோன்றியிருக்கும் வெள்ளுடை தரித்த இரண்டு தூதர்களை அவள் காண்கிறாள்! இயேசுவின் உடல் வைக்கப்பட்டிருந்த இடத்தில் தலைமாட்டில் ஒருவனும் கால்மாட்டில் ஒருவனுமாக உட்கார்ந்திருக்கின்றனர். “ஸ்திரீயே, ஏன் அழுகிறாய்?” என்று அவர்கள் கேட்கின்றனர்.
“என் ஆண்டவரை எடுத்துக்கொண்டு போய்விட்டார்கள், அவரை வைத்த இடம் எனக்குத் தெரியவில்லை” என்று மரியாள் பதிலளிக்கிறாள். பின்பு அவள் பின்னாகத் திரும்பி அந்தக் கேள்வியை மறுபடியும் கேட்கும் யாரோ ஒருவரைப் பார்க்கிறாள்: “ஸ்திரீயே, ஏன் அழுகிறாய்?” இவரும்கூட “யாரைத் தேடுகிறாய்?” என்று கேட்கிறார்.
இந்த நபர் கல்லறை இருக்கும் இடத்திலுள்ள தோட்டத்துப் பொறுப்பாளர் என்று கற்பனை செய்து கொண்டு அவள் அவரிடம் இவ்வாறு சொல்கிறாள்: “ஐயா, நீர் அவரை எடுத்துக்கொண்டு போனதுண்டானால், அவரை வைத்த இடத்தை எனக்குச் சொல்லும், நான் போய் அவரை எடுத்துக் கொள்ளுவேன்.”
“மரியாளே” என்று அந்த நபர் சொல்கிறார். அவர் அவளிடம் வழக்கமாக பேசும் விதத்திலிருந்து அது இயேசு என்பதை உடனடியாக அறிந்து கொள்கிறாள். “ரபூனி!” (“போதகர்” என்று அர்த்தம்) என்று அவள் வியப்பால் குரலெழுப்புகிறாள். அடக்கமுடியாத சந்தோஷத்தோடு அவள் அவரை இறுகப் பிடிக்கிறாள். ஆனால் இயேசு இவ்வாறு சொல்கிறார்: “என்னைத் தொடாதே, நான் இன்னும் என் பிதாவினிடத்திற்கு ஏறிப்போகவில்லை; நீ என் சகோதரரிடத்திற்குப் போய், நான் என் பிதாவினிடத்திற்கும் உங்கள் பிதாவினிடத்திற்கும், என் தேவனிடத்திற்கும் உங்கள் தேவனிடத்திற்கும் ஏறிப்போகிறேன் என்று அவர்களுக்குச் சொல்லு.”
அப்போஸ்தலர்களும் உடன் சீஷர்களும் கூடியிருக்கும் இடத்துக்கு மரியாள் இப்போது ஓடுகிறாள். உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசுவைக் கண்டதைப் பற்றி மற்ற பெண்கள் ஏற்கெனவே கொடுத்திருந்த அறிக்கையோடு அவள் தன் அறிக்கையை கூட்டுகிறாள். என்றபோதிலும், இந்த மனிதர்கள் முதலாவதாக கூறிய பெண்களை நம்பாதது போலவே மரியாள் கூறுவதையும் நம்பவில்லை. மத்தேயு 28:3–15; மாற்கு 16:5–8; லூக்கா 24:4–12; யோவான் 20:2–18.
▪ கல்லறை காலியாக இருப்பதைக் கண்டபிறகு, மகதலேனா மரியாள் என்ன செய்கிறாள்? மற்ற பெண்கள் என்ன அனுபவத்தைக் கொண்டிருக்கின்றனர்?
▪ கல்லறை காலியாக இருப்பதைக் கண்டவுடன் பேதுருவும் யோவானும் எவ்வாறு பிரதிபலிக்கின்றனர்?
▪ இயேசு உயிர்த்தெழுந்ததை சீஷர்களுக்கு அறிவிக்கச் செல்லும் வழியில் மற்ற பெண்கள் எதை எதிர்ப்படுகின்றனர்?
▪ காவல் சேவகருக்கு என்ன நடந்துவிட்டிருக்கிறது? ஆசாரியர்களிடம் அவர்கள் அறிவித்த அறிக்கைக்கு என்ன பிரதிபலிப்பு இருந்தது?
▪ மகதலேனா மரியாள் கல்லறையில் தனியாக இருக்கும் போது என்ன நடக்கிறது? பெண்கள் சொன்ன அறிக்கைகளுக்கு சீஷர்களின் பிரதிபலிப்பு என்ன?
-
-
கூடுதலான தோற்றங்கள்எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப்பெரிய மனிதர்
-
-
சீஷர்கள் இன்னும் மனம் வாடிய நிலையிலேயே இருக்கின்றனர். காலியாக இருக்கும் கல்லறையின் முக்கியத்துவத்தையும் புரிந்துகொள்ளவில்லை, பெண்களின் அறிக்கைகளையும் அவர்கள் நம்பவில்லை. ஆகையால் பின்னர் ஞாயிற்றுக்கிழமையன்று, கிலெயோப்பாவும் மற்றொரு சீஷனும் எருசலேமை விட்டு ஏறக்குறைய பதினெரு கிலோமீட்டர் தூரமான எம்மாவு என்ற இடத்துக்குப் புறப்படுகின்றனர்.
செல்லும் வழியில் அந்நாளைய சம்பவங்களை அவர்கள் சம்பாஷித்துக் கொண்டிருக்கையில், ஓர் அந்நியன் அவர்களோடே சேர்ந்து கொள்கிறார். “நீங்கள் . . . ஒருவருக்கொருவர் சொல்லிக்கொள்ளுகிற காரியங்கள் என்ன?” என்று அவர் கேட்கிறார்.
துக்கமான முகங்களோடு சீஷர்கள் நிற்கின்றனர். கிலெயோப்பா இவ்வாறு பதிலளிக்கிறான்: “இந்நாட்களில் எருசலேமிலே நடந்தவைகளை அறியாதபடிக்கு நீர் அந்நியராயிருக்கிறீரோ?” “எவைகள்?” என்று அவர் கேட்கிறார்.
“நசரேயனாகிய இயேசுவைக் குறித்தவைகளே” என்று அவர்கள் பதிலளிக்கின்றனர். “நம்முடைய பிரதான ஆசாரியரும் அதிகாரிகளும் அவரை மரண ஆக்கினைக்குட்படுத்தி, சிலுவையில் [கழுமரத்தில், NW] அறைந்தார்கள். அவரே இஸ்ரவேலை மீட்டிரட்சிப்பவர் என்று நாங்கள் நம்பியிருந்தோம்.”
கிலெயோப்பாவும் அவனுடைய கூட்டாளியும் அந்நாளின் வியப்பூட்டும் சம்பவங்களை—தேவதூதர்கள் காணப்பட்ட அசாதாரண காட்சியைப் பற்றியும் காலியான கல்லறையைப் பற்றியும்—விளக்குகின்றனர். ஆனால் அவர்கள் இந்தக் காரியங்களின் அர்த்தத்தைக் குறித்து தங்கள் மனங்குழம்பிய நிலையை அறிக்கையிடுகின்றனர். அந்த அந்நியன் அவர்களை இவ்வாறு கடிந்துரைக்கிறார்: “தீர்க்கதரிசிகள் சொன்ன யாவையும் விசுவாசிக்கிறதற்குப் புத்தியில்லாத மந்த இருதயமுள்ளவர்களே, கிறிஸ்து இவ்விதமாகப் பாடுபடவும், தமது மகிமையில் பிரவேசிக்கவும் வேண்டியதில்லையா?” பின்பு அவர் பரிசுத்த பதிவிலிருந்து கிறிஸ்துவைக் குறித்த பகுதிகளை விளக்கிக் காட்டுகிறார்.
இறுதியில் அவர்கள் எம்மாவு என்ற இடத்துக்கு அருகே வந்து சேருகின்றனர், அந்த அந்நியன் அவர்களை விட்டு பிரிந்து போவதைப் போல் பாவனைச் செய்கிறார். அதிகமாக அவரிடமிருந்து காரியங்களைக் கேட்க விரும்புவதால் சீஷர்கள் அவரை இவ்வாறு வருந்திக் கேட்டுக் கொள்கின்றனர்: “நீர் எங்களுடனே தங்கியிரும், சாயங்காலமாயிற்று.” ஆகையால் அவர் உணவுக்காக அங்கே தங்குகிறார். அவர் அப்பத்தை எடுத்து, ஜெபம் செய்து, அதைப் பிட்டு அவர்களிடம் கொடுக்கையில், அவர் உண்மையில் மனித உருவில் இயேசு என்பதை அவர்கள் கண்டுணர்கின்றனர். ஆனால் அதற்குப் பிறகு அவர் மறைந்து போகிறார்.
அந்த அந்நியன் அவ்வளவு காரியங்களை எவ்வாறு அறிந்திருந்தார் என்பதை அவர்கள் இப்போது புரிந்து கொள்கின்றனர்! “வழியிலே அவர் நம்முடனே பேசி, வேதவாக்கியங்களை நமக்கு விளங்கக் காட்டின பொழுது, நம்முடைய இருதயம் நமக்குள்ளே கொழுந்துவிட்டு எரியவில்லையா?” என்று அவர்கள் கேட்கின்றனர். தாமதமின்றி, அவர்கள் உடனடியாக எழுந்து எருசலேம் வரை திரும்ப செல்கின்றனர், அங்கே அவர்கள் அப்போஸ்தலர்களையும் அவர்களோடு கூடியிருப்பவர்களையும் காண்கின்றனர். கிலெயோப்பாவும் அவனுடைய கூட்டாளியும் விஷயத்தை சொல்வதற்கு முன்பு, மற்றவர்கள் உணர்ச்சி வசப்பட்டு இவ்வாறு அறிக்கை செய்கின்றனர்: “கர்த்தர் மெய்யாகவே உயிர்த்தெழுந்து சீமோனுக்குத் தரிசனமானார்!” பின்பு இருவரும் இயேசு எவ்வாறு அவர்களுக்கும் காட்சியளித்தார் என்பதை விவரிக்கின்றனர். அந்நாளில் நான்கு முறைகள் தம்முடைய சீஷர்களில் வித்தியாசமான நபர்களுக்கு அவர் காட்சியளித்திருக்கிறார்.
இயேசு திடீரென்று ஐந்தாவது முறையாக காட்சியளிக்கிறார். சீஷர்கள் யூதர்களுக்கு பயப்பட்டு கதவுகளை பூட்டியிருந்த போதிலும் அவர் உள்ளே சென்று, அவர்கள் நடுவிலே நின்று இவ்வாறு சொல்கிறார்: “உங்களுக்குச் சமாதானம்.” அவர்கள் ஓர் ஆவியைக் காண்கிறதாக கற்பனை செய்து கொண்டு பயப்படுகின்றனர். அவர் தான் ஒரு பேய் உருவம் அல்ல என்பதை விளக்கி, இயேசு இவ்வாறு சொல்கிறார்: “நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள்; உங்கள் இருதயங்களில் சந்தேகங்கள் எழும்புகிறதென்ன? நான் தான் என்று அறியும்படி, என் கைகளையும் என் கால்களையும் பாருங்கள், என்னைத் தொட்டுப் பாருங்கள்; நீங்கள் காண்கிறபடி, எனக்கு மாம்சமும் எலும்புகளும் உண்டாயிருக்கிறது போல ஒரு ஆவிக்கு இராதே.” அப்படி சொல்லியும், அவர்கள் நம்புவதற்கு தயங்குகின்றனர்.
அவர் உண்மையிலேயே இயேசு என்பதை அவர்கள் புரிந்து கொள்ள உதவி செய்வதற்கு, அவர் இவ்வாறு கேட்கிறார்: “புசிக்கிறதற்கு ஏதாகிலும் இங்கே உண்டா?” பொரித்த மீன் கண்டத்தை வாங்கி புசித்த பின்பு, அவர் இவ்வாறு சொல்கிறார்: “மோசேயின் நியாயப்பிரமாணத்திலும் தீர்க்கதரிசிகளின் ஆகமங்களிலும் சங்கீதங்களிலும் என்னைக் குறித்து எழுதியிருக்கிறவைகளெல்லாம் நிறைவேற வேண்டியதென்று, நான் உங்களோடிருந்த போது [என் மரணத்துக்கு முன்பு] உங்களுக்குச் சொல்லிக் கொண்டு வந்த விசேஷங்கள் இவைகளே.”
தொடர்ந்து, அவர்களுக்கு ஒரு பைபிள் படிப்பு நடத்தும் வகையில் இயேசு போதிக்கிறார்: “எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து பாடுபடவும், மூன்றாம் நாளில் மரித்தோரிலிருந்தெழுந்திருக்கவும் வேண்டியதாயிருந்தது; அன்றியும் மனந்திரும்புதலும் பாவமன்னிப்பும் எருசலேம் தொடங்கிச் சகல தேசத்தாருக்கும் அவருடைய நாமத்தினாலே பிரசங்கிக்கப்படவும் வேண்டியது. நீங்கள் இவைகளுக்குச் சாட்சிகளாயிருக்கிறீர்கள்.”
-