யெகோவா குற்றஞ்சாட்டப்படவேண்டியவர் அல்ல
“தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல, கர்த்தர் தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார், நம்முடைய உருவம் இன்னதென்று அவர் அறிவார்; நாம் மண்ணென்று நினைவுகூருகிறார்.”—சங்கீதம் 103:13, 14.
1, 2. ஆபிரகாம் யார், அவருடைய சகோதரன் மகனாகிய லோத் எவ்விதமாக பொல்லாத பட்டணமாகிய சோதோமில் குடியிருக்கலானான்?
நம்முடைய தவறுகள் காரணமாக நாம் அனுபவிக்கக்கூடிய துன்பங்களுக்கு யெகோவா பொறுப்புள்ளவர் அல்ல. இதன் சம்பந்தமாக, சுமார் 3,900 வருடங்களுக்கு முன் என்ன நடந்தது என்பதைக் கவனியுங்கள். கடவுளின் நண்பனாகிய ஆபிரகாம் (ஆபிராம்) மற்றும் அவருடைய சகோதரனின் மகனாகிய லோத்தும் மிகவும் செழிப்படைந்தனர். (யாக்கோபு 2:23) உண்மையில், ‘அவர்கள் ஒருமித்துக் குடியிருப்பதை அந்த இடம் அனுமதிக்காத’ அளவிற்கு அவர்களுடைய உடைமைகளும் கால்நடைகளும் அதிகமாயின. மேலுமாக, இந்த இருவருடைய மந்தைமேய்ப்பருக்கும் இடையே ஒரு வாக்குவாதம் உண்டாயிற்று. (ஆதியாகமம் 13:5-7) இதைக்குறித்து என்ன செய்யப்படலாம்?
2 வாக்குவாதத்தை முடிவுக்குக் கொண்டுவர, ஒரு பிரிவு ஏற்படவேண்டும் என்று ஆபிரகாம் ஆலோசனை கூறினார்; அதில் லோத்தை முதல் தெரிவைச் செய்யும்படியாக அனுமதித்தார். ஆபிரகாம் வயதில் முதிர்ந்தவராக இருந்ததால் அவருடைய சகோதரனின் மகனான லோத்து அவரை நல்ல பகுதியைத் தெரிந்தெடுக்க அனுமதிப்பது பொருத்தமாக இருந்திருக்கும்; என்றாலும் லோத்து மிகச் சிறந்த பகுதியை—யோர்தானுக்குக் கீழுள்ள நீர்வளம் பொருந்திய முழு சமபூமியையும் தேர்ந்தெடுத்தான். வெளித் தோற்றங்கள் ஏமாற்றுபவையாக இருந்தன, ஏனென்றால் அருகேதான் ஒழுக்கத்தரங்கெட்ட பட்டணங்களாகிய சோதோமும் கொமோராவும் இருந்தன. காலப்போக்கில், லோத்தும் அவருடைய குடும்பமும் சோதோமுக்கு குடிபுகுந்தனர்; இது அவர்களை ஆவிக்குரிய ஆபத்திற்குட்படுத்தியது. மேலுமாக, அரசனாகிய கெதர்லாகோமேரும் அவனோடு கூடியிருந்த அரசர்களும் சோதோமின் ஆட்சியாளனை முறியடித்தபோது அவர்கள் சிறைபிடிக்கப்பட்டனர். ஆபிரகாமும் அவருடைய ஆட்களும் அவர்களை விடுவித்தனர், ஆனால் லோத்தும் அவனுடைய குடும்பமும் சோதோமுக்குத் திரும்பினர்.—ஆதியாகமம் 13:8-13; 14:4-16.
3, 4. சோதோம் மற்றும் கொமோராவைக் கடவுள் அழித்தபோது லோத்துக்கும் அவனுடைய குடும்ப அங்கத்தினர்களுக்கும் என்ன சம்பவித்தது?
3 சோதோம், கொமோராவின் பாலினத்தில் முறைகெட்ட பழக்கங்கள் மற்றும் ஒழுக்கச் சீரழிவுகள் காரணமாக யெகோவா அந்தப் பட்டணங்களை அழிக்க தீர்மானித்தார். அவர் இரக்கப்பட்டு லோத்து, அவர் மனைவி, அவர்களுடைய இரு மகள்களை சோதோமைவிட்டு வெளியே கொண்டு செல்ல இரண்டு தூதர்களை அனுப்பினார். அவர்கள் திரும்பி பார்க்கக் கூடாது, ஆனால் லோத்தின் மனைவி ஒருவேளை அங்கு விட்டுவந்த பொருள்சம்பந்தப்பட்ட காரியங்களுக்கான ஏக்கத்துடன் திரும்பி பார்த்தாள். அந்தச் சமயத்தில்தானே, அவள் ஓர் உப்புத் தூண் ஆனாள்.—ஆதியாகமம் 19:1-26.
4 லோத்தும் அவனுடைய மகள்களும் எத்தனை நஷ்டங்களைப் பொறுத்துக்கொண்டனர்! அந்தப் பெண்கள் மணம் செய்துகொள்ளவிருந்த ஆட்களைப் பின்னால் விட்டுவரவேண்டியதிருந்தது. லோத்து இப்பொழுது தன்னுடைய மனைவியும் பொருளாதார சம்பத்தும் இல்லாதிருந்தார். முடிவாக, அவர் உண்மையில் தன்னுடைய மகள்களுடன் ஒரு குகையில் வாழும் நிலைக்குக் கொண்டுவரப்பட்டார். (ஆதியாகமம் 19:30-38) அவருக்கு மிகவும் நல்லதாகத் தென்பட்டது, நேர்எதிர்மாறாக சம்பவித்தது. தெளிவாகவே அவர் சில வினைமையான தவறுகளைச் செய்தபோதிலும், பின்னால் அவர் “நீதிமானாகிய லோத்”தென்று அழைக்கப்பட்டார். (2 பேதுரு 2:7, 8) நிச்சயமாகவே, யெகோவா தேவன் லோத்தின் தவறுகளுக்காக குற்றஞ்சாட்டப்படவேண்டியவர் அல்ல.
‘பிழைகள்—அவற்றை யாரால் உணரக்கூடும்?’
5. தவறுகள் மற்றும் துணிகரம் குறித்து தாவீது எவ்வாறு உணர்ந்தார்?
5 அபூரணராகவும் பாவிகளாகவும் இருப்பதால் நாம் எல்லாருமே தவறுகள் செய்கிறோம். (ரோமர் 5:12; யாக்கோபு 3:2) லோத்தைப் போலவே, நாமும் வெளித்தோற்றங்களால் ஏமாற்றப்பட்டு, நம்முடைய மதிப்பீடுகளில் தவறிவிடக்கூடும். இவ்வாறாக சங்கீதக்காரனாகிய தாவீது மன்றாடினார்: “தன் பிழைகளை உணருகிறவன் யார்? மறைவான குற்றங்களுக்கு என்னை நீங்கலாக்கும். துணிகரமான பாவங்களுக்கு உமது அடியேனை விலக்கிக்காரும்; அவைகள் என்னை ஆண்டுகொள்ள ஒட்டாதிரும்; அப்பொழுது நான் உத்தமனாகி, பெரும்பாதகத்துக்கு நீங்கலாயிருப்பேன்.” (சங்கீதம் 19:12, 13) தான் உணராதிருக்கும் பாவங்களைக்கூட செய்துவிடக்கூடும் என்று தாவீது அறிந்திருந்தார். எனவே, தனக்கும்கூட மறைவாய் இருந்திருக்கக்கூடிய பாவங்களுக்கும் அவர் மன்னிப்பு கேட்கிறார். ஒரு தவறான போக்கை ஏற்கும்படி மாம்ச அபூரணத்தால் உந்தப்பட்டு ஒரு வினைமையான தவறைச் செய்தபோது அவர் யெகோவாவின் உதவியைப் பெரிதும் வாஞ்சித்தார். துணிகரமான செயல்களிலிருந்து கடவுள் தன்னை விலக்குமாறு விரும்பினார். துணிகரம் தன்னில் மேம்பட்டு நிற்கும் பண்பாகிவிட தாவீது விரும்பவில்லை. மாறாக, யெகோவா தேவனுக்கான பக்தியில் முழுமையாக இருக்கவேண்டுமென அவர் விரும்பினார்.
6. சங்கீதம் 103:10-14-லிருந்து என்ன ஆறுதலைப் பெறலாம்?
6 யெகோவாவின் இப்போதைய நாளின் ஒப்புக்கொடுக்கப்பட்ட ஊழியர்களாக, நாமும் அபூரணராக இருக்கிறோம், ஆகவே தவறுகள் செய்கிறோம். எடுத்துக்காட்டாக, லோத்தைப்போல நாம் வசிக்கும் இடத்தைக்குறித்து ஒரு தவறான தெரிவை செய்யக்கூடும். நம்முடைய பரிசுத்த சேவையை விரிவாக்குவதற்குரிய ஒரு வாய்ப்பை ஒருவேளை நாம் தவறவிட்டிருக்கலாம். யெகோவா அத்தகைய தவறுகளைப் பார்த்தாலும்கூட, நீதிக்கான மனச்சாய்வைக் கொண்டிருப்பவர்களை அவர் அறிந்திருக்கிறார். நாம் வினைமையாக தவறு செய்தால்கூட மனம் வருந்துபவர்களாக இருந்தால், யெகோவா மன்னிப்பையும் உதவியையும் தந்து தொடர்ந்து நம்மைத் தேவபக்தியுள்ள நபர்களாக நோக்குகிறார். “அவர் நம்முடைய பாவங்களுக்குத்தக்கதாக நமக்குச் செய்யாமலும், நம்முடைய அக்கிரமங்களுக்குத் தக்கதாக நமக்குச் சரிக்கட்டாமலும் இருக்கிறார்,” என்று தாவீது அறிவிக்கிறார். “பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாயிருக்கிறதோ, அவருக்குப் பயப்படுகிறவர்கள்மேல் அவருடைய கிருபையும் அவ்வளவு பெரிதாயிருக்கிறது. மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மைவிட்டு விலக்கினார். தகப்பன் தன் பிள்ளைகளுக்கு இரங்குகிறதுபோல, கர்த்தர் தமக்குப் பயந்தவர்களுக்கு இரங்குகிறார். நம்முடைய உருவம் இன்னதென்று அவர் அறிவார்; நாம் மண்ணென்று நினைவுகூருகிறார்.” (சங்கீதம் 103:10-14) நம்முடைய இரக்கமுள்ள பரலோக தகப்பன் நம்முடைய தவறுக்கு இழப்பீடு செய்ய உதவியளிக்கவுங்கூடும் அல்லது அவருடைய துதிக்காக நம்முடைய பரிசுத்த சேவையை விரிவாக்க நமக்கு மற்றொரு வாய்ப்பை அளிக்கக்கூடும்.
கடவுளைக் குற்றஞ்சாட்டும் தவறு
7. நாம் ஏன் இன்னல்களை அனுபவிக்கிறோம்?
7 காரியங்கள் தவறாக நேரிடும்போது, அவ்வாறு நிகழ்ந்ததற்கு யாரோ ஒருவரை அல்லது ஏதோ ஒன்றைக் குற்றஞ்சாட்டுவது மனித இயல்பாகும். சிலர் கடவுளைக்கூட குற்றஞ்சாட்டுகின்றனர். ஆனால் யெகோவா அத்தகைய கஷ்டங்களை மக்கள்மேல் கொண்டுவருவதில்லை. அவர் கேடான காரியங்களை அல்ல, நன்மையே செய்கிறார். ஏன், “அவர் தீயோர்மேலும் நல்லோர்மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள்மேலும் அநீதியுள்ளவர்கள்மேலும் மழையைப் பெய்யப்பண்ணுகிறார்”! (மத்தேயு 5:45) பிசாசாகிய சாத்தானின் அதிகாரத்தின்கீழிருந்து, தன்னல கோட்பாடுகளைக் கொண்டு செயல்படும் ஓர் உலகில் நாம் வாழ்வதே, நாம் இன்னல்களால் பாதிக்கப்படுவதற்கு ஒரு முக்கிய காரணமாகும்.—1 யோவான் 5:19.
8. அவனுக்குக் காரியங்கள் சரியாக நடக்காதபோது ஆதாம் என்ன செய்தான்?
8 நம்முடைய தவறுகள் நம்மீது கொண்டுவரும் துன்பங்களுக்காக யெகோவா தேவனைக் குற்றஞ்சாட்டுவது ஞானமற்றதாகவும் ஆபத்தானதாகவும் இருக்கிறது. அவ்வாறு செய்தல் நம் உயிரை இழப்பதில்கூட விளைவடையலாம். முதல் மனிதனாகிய ஆதாம், அவன் பெற்ற எல்லா நல்ல காரியங்களுக்காகவும் கடவுளுக்குப் பாராட்டைக் கொடுத்திருக்கவேண்டும். ஆம், உயிருக்காகத்தானேயும், ஏதேன் தோட்டமாகிய ஒரு பூங்காவைப் போன்ற வீட்டில் அவன் அனுபவித்த ஆசீர்வாதங்களுக்காகவும் ஆதாம் யெகோவாவுக்கு ஆழ்ந்த நன்றியுள்ளவனாய் இருந்திருக்கவேண்டும். (ஆதியாகமம் 2:7-9) யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமல் அந்த விலக்கப்பட்ட கனியை சாப்பிட்டதால், காரியங்கள் சரியாகச் செல்லாதபோது ஆதாம் என்ன செய்தான்? “என்னுடனே இருக்கும்படி தேவரீர் தந்த ஸ்திரீயானவள் அவ்விருட்சத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள், நான் புசித்தேன்,” என்று ஆதாம் கடவுளிடம் முறையிட்டான். (ஆதியாகமம் 2:15-17; 3:1-12) நிச்சயமாகவே, ஆதாம் செய்ததைப்போல நாம் யெகோவாவைக் குற்றஞ்சாட்டக்கூடாது.
9. (எ) நம்முடைய ஞானமற்ற செயல்களின் காரணமாக துன்பங்களை எதிர்ப்பட்டால், நாம் எதிலிருந்து ஆறுதலைப் பெறலாம்? (பி) நீதிமொழிகள் 19:3-ன்படி, தங்கள்மீது தாங்களே கஷ்டங்களைக் கொண்டுவரும்போது, சிலர் என்ன செய்கின்றனர்?
9 நம்முடைய செயல்கள் ஞானமற்றதாய் இருப்பதால் நாம் துன்பங்களை எதிர்ப்பட்டால், நம்முடைய பலவீனங்களை நம்மைவிட யெகோவா நன்கு புரிந்துகொள்கிறார், மேலும் நாம் அவருக்கு தனிப்பட்ட பக்தியைக் கொடுத்தால் நம்முடைய நெருக்கடியிலிருந்து விடுவிப்பார் என்ற அறிவிலிருந்து ஆறுதலைக் கண்டடையலாம். நாமே நம்மீது கொண்டுவரும் இக்கட்டுகளுக்கும் கஷ்டங்களுக்கும் ஒருபோதும் கடவுளைக் குற்றஞ்சாட்டாமல், நாம் பெறும் தெய்வீக உதவியைப் போற்றவேண்டும். இதன் சம்பந்தமாக, ஒரு ஞானமான பழமொழி கூறுகிறது: “மனுஷனுடைய மதியீனம் அவன் வழியைத் தாறுமாறாக்கும்; என்றாலும் அவன் மனம் கர்த்தருக்கு விரோதமாய்த் தாங்கலடையும்.” (நீதிமொழிகள் 19:3) மற்றொரு மொழிபெயர்ப்பு சொல்கிறது: “சில மக்கள் தங்களுடைய சொந்த முட்டாள்தனமான செயல்களால் தங்களையே கெடுத்துக்கொண்டு, பின்னர் கர்த்தரைக் குற்றஞ்சாட்டுகிறார்கள்.” (டுடேஸ் இங்கிலீஷ் வெர்ஷன்) இன்னும் மற்றொரு மொழிபெயர்ப்பு கூறுகிறது: “மனிதனுடைய அறியாமை அவனைத் தடுமாறச் செய்கிறது. அவன் கடவுளுக்கு விரோதமாக சீறுகிறான்.”—பையிங்டன்.
10 இந்தப் பழமொழியின் நியமத்துக்கு இணங்க, ஆதாம் தன்னலத்துடன் செயல்பட்டான்; அவனுடைய முட்டாள்தனமான சிந்தனை அவன் ‘வழியைத் தாறுமாறாக்கிற்று.’ அவனுடைய இருதயம் யெகோவா தேவனைவிட்டு விலகியது; அவன் தன் சொந்த தன்னலமான, தன்னிச்சையான போக்கில் செல்ல முற்பட்டான். ஏன், அவன் தன் சிருஷ்டிகரையே குற்றஞ்சாட்டுமளவிற்கு நன்றிகெட்டவனாகி, இவ்விதமாகத் தன்னை மகா உன்னதமானவருக்கு ஒரு பகைஞனாக ஆக்கிக்கொண்டான்! ஆதாமின் பாவம் அவனுடைய மற்றும் அவனுடைய குடும்பத்தின் வழியை அழிவுக்குக் கொண்டுவந்தது. இதில் எத்தகைய ஓர் எச்சரிப்பு இருக்கிறது! விரும்பத்தகாத சூழ்நிலைகளில் யெகோவாவைக் குற்றஞ்சாட்டும் மனச்சாய்வைக் கொண்டிருப்பவர்கள் தங்களைத் தாங்களே இவ்வாறு கேட்டுக்கொள்ளலாம்: நான் அனுபவிக்கும் நல்ல காரியங்களுக்காகக் கடவுளுக்குப் பாராட்டைக் கொடுக்கிறேனா? அவருடைய சிருஷ்டிகளில் ஒன்றாக உயிரைக் கொண்டிருக்கிறேன் என்பதற்காக நான் நன்றியுடன் இருக்கிறேனா? என்னுடைய சொந்த தவறுகள்தாமே என்மேல் துன்பங்களைக் கொண்டுவந்திருக்கக்கூடுமா? அவருடைய ஆவியால் ஏவப்பட்ட வார்த்தையாகிய பைபிளில் கொடுக்கப்பட்டிருக்கும் வழிநடத்துதலைப் பின்பற்றியதன் காரணமாக யெகோவாவின் தயவையும் உதவியையும் பெற தகுதி பெற்றிருக்கிறேனா?
கடவுளின் ஊழியருக்குங்கூட ஓர் ஆபத்து
11. கடவுளைப் பொருத்தமட்டில், முதல் நூற்றாண்டு மதத் தலைவர்கள் எதைக்குறித்து குற்றஉணர்வுடையவர்களாய் இருந்தனர்?
11 பொ.ச. முதல் நூற்றாண்டின் யூத மதத் தலைவர்கள் கடவுளைச் சேவிப்பதாக உரிமைபாராட்டினார்கள்; ஆனால் அவருடைய சத்திய வார்த்தையை புறக்கணித்துவிட்டு தங்கள் சொந்த புரிந்துகொள்ளுதலின்மேல் சார்ந்திருந்தனர். (மத்தேயு 15:8, 9) இயேசு கிறிஸ்து அவர்களுடைய தவறான சிந்தனைகளை வெளிப்படுத்தியதால் அவரை மரணத்திற்குட்படுத்தினார்கள். பின்னர், அவருடைய சீஷர்களுக்கு எதிராக மிகுந்த கோபத்தை அவர்கள் வெளிக்காட்டினார்கள். (அப்போஸ்தலர் 7:54-60) உண்மையில் யெகோவாவுக்கு விரோதமாகவே கோபமடையுமளவிற்கு அந்த ஆட்களின் வழி தாறுமாறாக இருந்தது.—ஒப்பிடவும் அப்போஸ்தலர் 5:34, 38, 39.
12. கிறிஸ்தவ சபையுடன் தொடர்புடைய சில நபர்கள்கூட தங்களுடைய கஷ்டங்களுக்கு யெகோவாவைக் குற்றஞ்சாட்ட முயற்சிசெய்கின்றனர் என்று என்ன உதாரணம் காண்பிக்கிறது?
12 கிறிஸ்தவ சபையிலிருக்கும் சிலர்கூட, அவர்கள் எதிர்ப்பட்ட கஷ்டங்களுக்கு கடவுளைப் பொறுப்புள்ளவராக்க முயற்சிசெய்யும் ஆபத்தான சிந்தையை வளர்த்திருக்கிறார்கள். உதாரணமாக, ஒரு சபையிலுள்ள நியமிக்கப்பட்ட மூப்பர்கள், ஓர் உலகப்பிரகாரமான ஆளுடன் கூட்டுறவு கொள்வதற்கு எதிராக ஒரு திருமணமான பெண்ணுக்கு தயவான, ஆனால் உறுதியான வேதப்பூர்வமான அறிவுரை கொடுக்க வேண்டியதன் அவசியத்தைக் கண்டார்கள். ஒரு கலந்தாலோசிப்பின்போது, அந்த ஆளுடன் கொண்டுள்ள தொடர்ச்சியான கூட்டுறவால் அவளுக்கு ஏற்படும் சோதனையை எதிர்க்க அவளுக்கு உதவிசெய்யவில்லை என்பதாகக் கடவுளைக் குற்றஞ்சாட்டினாள். அவள் உண்மையில் கடவுளிடம் எரிச்சலுற்றிருப்பதாகச் சொன்னாள்! வேதப்பூர்வமாக நியாயங்காட்டிப் பேசுதலும் அவளுக்கு உதவுவதற்கான திரும்பவும் திரும்பவுமான முயற்சிகளும் பலன் தரவில்லை; பின்னர் ஓர் ஒழுக்கக்கேடான போக்கு அவளைக் கிறிஸ்தவ சபையிலிருந்து நீக்கும்படி வழிநடத்தியது.
13. ஏன் குறைகூறும் ஆவியைத் தவிர்க்கவேண்டும்?
13 குறைகூறும் ஆவி, ஓர் ஆள் யெகோவாவைக் குற்றஞ்சாட்டுவதற்கு வழிநடத்தக்கூடும். அவ்வகையான கெட்ட ஆவியையும் அதோடு ஆவிக்குரியவிதத்தில் கறைப்படுத்தும் வேறுவிதமான சிந்தனைகளையும் கொண்டிருந்த “பக்தியற்றவர்கள்” முதல் நூற்றாண்டு சபையில் நுழைந்திருந்தனர். சீஷனாகிய யூதா கூறியபடி, இந்த ஆட்கள், “நமது தேவனுடைய கிருபையைக் காமவிகாரத்துக்கேதுவாகப் புரட்டி, ஒன்றான ஆண்டவராகிய நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை மறுதலிக்கிற”வர்களாய் இருந்தனர். “இவர்கள் முறுமுறுக்கிறவர்களும், முறையிடுகிறவர்களுமாயிருக்கிறார்கள்,” என்றும் யூதா குறிப்பிட்டார். (யூதா 3, 4, 16) அவர்கள், முடிவில் கடவுள்மேலுள்ள விசுவாசத்தை இழந்து அவரோடுள்ள தங்களுடைய உறவை ஆபத்திற்குள்ளாக்கும் ஒரு குறைகூறும் மனப்பான்மையை அல்ல, ஆனால் ஒரு போற்றுதலுக்குரிய ஆவியைக் கொண்டிருக்கும்படி யெகோவாவின் உண்மைத்தவறாத ஊழியர்கள் ஞானமாக ஜெபிப்பார்கள்.
14. ஓர் உடன்கிறிஸ்தவனால் புண்படுத்தப்பட்டால் ஒருவர் எவ்வாறு பிரதிபலிக்கக்கூடும், ஆனால் அது ஏன் சரியான போக்காக இருக்காது?
14 இது உங்களுக்குச் சம்பவிக்காது என்பதாக நீங்கள் நினைக்கக்கூடும். இருப்பினும், நம்முடைய அல்லது மற்றவர்களுடைய தவறுகளால் தவறாகச் செல்லும் காரியங்கள் முடிவாக கடவுளைக் குற்றஞ்சாட்டும்படி நம்மைத் தூண்டுவிக்கலாம். உதாரணமாக, ஓர் உடன் விசுவாசி சொன்ன அல்லது செய்த ஏதோ ஒரு காரியத்தால் ஒருவர் புண்படுத்தப்படக்கூடும். புண்படுத்தப்பட்ட நபர்—ஒருவேளை பல வருடங்களாக யெகோவாவை உண்மைத்தவறாமல் சேவித்தவராக இருக்கலாம்—சொல்லக்கூடும்: ‘அந்த நபர் சபையில் இருந்தால், நான் கூட்டங்களுக்குச் செல்லமாட்டேன்.’ ஒரு நபர் தன் இருதயத்தில் இவ்வாறு சொல்லுமளவிற்கு வருத்தப்படக்கூடும்: ‘இவ்விதமான காரியங்கள் நடந்துகொண்டிருந்தால், நான் சபையின் பாகமாக இருக்க விரும்பவில்லை.’ ஆனால் ஒரு கிறிஸ்தவன் அப்படிப்பட்ட மனநிலையைக் கொண்டிருக்கவேண்டுமா? இன்னொரு அபூரண மனிதனால் புண்படுத்தப்பட்டால், கடவுளால் ஏற்கத்தக்க, அவரை உண்மையுடன் சேவிக்கும் மக்களாலான முழு சபையின்மீதும் ஏன் கோபப்பட்டு வருத்தப்படவேண்டும்? யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்த ஒருவர் ஏன் தெய்வீக சித்தத்தைச் செய்வதை நிறுத்தி இவ்வாறாக கடவுளிடம் கோபமும் வருத்தமும் கொள்ளவேண்டும்? ஒரு நபர் அல்லது ஒருவிதமான சூழ்நிலைகள் யெகோவாவுடன் கொண்டுள்ள நல்ல உறவை அழித்துவிட அனுமதிப்பது எவ்வளவு ஞானமாக இருக்கும்? நிச்சயமாகவே, எந்தக் காரணத்திற்காகவும் யெகோவா தேவனை வணங்குவதை நிறுத்துவது முட்டாள்தனமானதாகவும் பாவமாகவும் இருக்கும்.—யாக்கோபு 4:17.
15, 16. தியோத்திரேப்பு என்ன குற்றத்தைச் செய்துகொண்டிருந்தான், ஆனால் காயு எவ்வாறு தன்னை நடத்திக்கொண்டார்?
15 அன்பான கிறிஸ்தவனாகிய காயு இருந்த அதே சபையில் நீங்களும் இருந்ததாக கற்பனை செய்துபாருங்கள். அவன் ‘ஓர் உண்மையான வேலையை’ செய்துகொண்டிருந்தான், சந்திக்கவரும் உடன் வணக்கத்தாரை உபசரிப்பதில்—அந்நியரையும்கூட! ஆனால் அதே சபையில் தியோத்திரேப்பு என்ற பெருமையான மனிதனும் இருந்திருக்கிறான். இயேசு கிறிஸ்துவின் அப்போஸ்தலரில் ஒருவரான யோவானிடமிருந்துவரும் எதையும் அவன் மரியாதையுடன் ஏற்றுக்கொள்ளவில்லை. உண்மையில், தியோத்திரேப்பு யோவானைப்பற்றி பொல்லாத வார்த்தைகளையுங்கூட அலப்பிக்கொண்டிருந்தான். அந்த அப்போஸ்தலன் சொல்கிறார்: “அவன் இப்படிச் செய்து வருவதும் போதாமல், [தியோத்திரேப்பு] தான் சகோதரரை ஏற்றுக்கொள்ளாமலிருக்கிறதுமன்றி, ஏற்றுக்கொள்ள மனதாயிருக்கிறவர்களையும் தடைசெய்து, சபைக்கு புறம்பே தள்ளுகிறான்.”—3 யோவான் 1, 5-10.
16 யோவான் அந்தச் சபைக்கு வந்தாரென்றால், தியோத்திரேப்பு செய்துகொண்டிருந்த காரியத்தை நினைவிற்குக் கொண்டுவர எண்ணியிருந்தார். இதற்கிடையில், காயுவும் அந்தச் சபையிலுள்ள மற்ற உபசரிக்கும் கிறிஸ்தவர்களும் எப்படி பிரதிபலித்தனர்? ‘சபையில் தியோத்திரேப்பு இருக்கும்வரையாக நான் அதன் பாகமாக இருக்க விரும்பவில்லை. நீங்கள் என்னைக் கூட்டங்களில் பார்க்கமாட்டீர்கள்,’ என்று எவரும் சொன்னதாக வேதப்பூர்வ குறிப்புகள் இல்லை. சந்தேகமின்றி, காயுவும் அவரைப்போன்ற மற்றவர்களும் உறுதியாக நின்றார்கள். தெய்வீக சித்தத்தைச் செய்வதிலிருந்து எதுவும் அவர்களைத் தடுக்க அனுமதிக்கவில்லை; அவர்கள் நிச்சயமாக யெகோவாவுக்கு எதிராகக் கோபப்படவில்லை. உண்மையாகவே, இல்லை; அவர்கள் யெகோவாவுக்கு உண்மையற்றவர்களாகி, கடவுளைக் குற்றஞ்சாட்டியிருந்தால் சந்தோஷப்பட்டிருக்கும் பிசாசாகிய சாத்தானின் தந்திரமான கண்ணிகளில் அவர்கள் அகப்படவில்லை.—எபேசியர் 6:10-18.
யெகோவாவுக்கு விரோதமாக ஒருபோதும் கோபமடையாதீர்கள்!
17. ஒரு நபர் அல்லது சூழ்நிலை நம்மை புண்படுத்துவதாக அல்லது நமக்கு விருப்பமற்றதாக இருந்தால் நாம் எப்படிச் செயல்படவேண்டும்?
17 ஒரு நபர் அல்லது ஒரு சபையிலுள்ள நிலைமை, கடவுளின் ஊழியர் ஒருவருக்கு வருத்தம் தருவதாகவோ புண்படுத்துவதாகவோ இருந்தால்கூட, அந்தக் குற்றத்தை எடுத்துக்கொண்டவர், யெகோவாவின் மக்களுடன் கூட்டுறவு கொள்வதை நிறுத்திவிட்டாரென்றால் தன் சொந்த வழியை உண்மையில் தாறுமாறாக்குகிறார். அப்படிப்பட்ட ஓர் ஆள் தன்னுடைய பகுத்தறியும் திறன்களைச் சரியாகப் பயன்படுத்துபவராக இருக்கமாட்டார். (எபிரெயர் 5:14) ஆகவே, உத்தமத்தைக் காத்துக்கொள்பவராக எல்லா இன்னல்களையும் எதிர்ப்பட தீர்மானமாயிருங்கள். யெகோவா தேவனுக்கும், இயேசு கிறிஸ்துவுக்கும், கிறிஸ்தவ சபைக்கும் உண்மைத்தவறாமையைக் காத்துக்கொள்ளுங்கள். (எபிரெயர் 10:24, 25) நித்திய ஜீவனுக்கு வழிநடத்தும் சத்தியத்தை வேறெங்கும் கண்டடையமுடியாது.
18. தெய்வீக கையாளும் முறைகளை நாம் எப்போதும் புரிந்துகொள்ளாவிட்டாலும், யெகோவா தேவனைப் பற்றியதில் எதைக்குறித்து நாம் நிச்சயமாய் இருக்கலாம்?
18 யெகோவா பொல்லாங்கான காரியங்களால் எவரையும் சோதிப்பவர் அல்ல என்பதையும் நினைவில் வையுங்கள். (யாக்கோபு 1:13) அன்பின் உருவாகவே இருக்கும் கடவுள், விசேஷமாக தம்மிடம் அன்பு செய்வோருக்கு நன்மையானவற்றையே செய்கிறார். (1 யோவான் 4:8) தெய்வீக கையாளும் முறைகளை நாம் எப்போதும் புரிந்துகொள்ளாவிட்டாலும், யெகோவா தேவன் ஒருபோதும் தம்முடைய ஊழியர்களுக்குச் சிறந்ததைச் செய்ய தவறமாட்டார் என்பதில் நாம் நம்பிக்கையாய் இருக்கலாம். பேதுரு சொன்னபடி: “ஆகையால், ஏற்றகாலத்திலே தேவன் உங்களை உயர்த்தும்படிக்கு, அவருடைய பலத்த கைக்குள் அடங்கியிருங்கள். அவர் உங்களை விசாரிக்கிறவரானபடியால், உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்.” (1 பேதுரு 5:6, 7) ஆம், யெகோவா உண்மையிலே அவருடைய ஜனங்கள்மேல் அக்கறையுள்ளவராய் இருக்கிறார்.—சங்கீதம் 94:14.
19, 20. நம்முடைய சோதனைகள் சிலவேளைகளில் நம்மைச் சோர்வுறச் செய்தாலும் நாம் எவ்வாறு செயல்படவேண்டும்?
19 ஆகவே, எதுவும் அல்லது எவரும் உங்களை இடறலடையச்செய்ய அனுமதிக்காதீர்கள். சங்கீதக்காரன் மிகவும் நன்றாகக் கூறியபடி: “[யெகோவா தேவனுடைய] வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு; அவர்களுக்கு இடறலில்லை.” (சங்கீதம் 119:165) நாம் எல்லாருமே சோதனைகளை அனுபவிக்கிறோம்; இவை நம்மை ஓரளவு சோர்வுற்றவர்களாகவும் சிலவேளைகளில் ஊக்கமிழக்கவும் செய்யக்கூடும். ஆனால் உங்கள் இருதயத்தில் கசப்பை வளரவிடாதீர்கள், முக்கியமாக யெகோவாவுக்கு விரோதமாக. (நீதிமொழிகள் 4:23) அவருடைய உதவியுடனும் வேதப்பூர்வ அடிப்படையிலும் உங்களால் தீர்க்க முடியும் பிரச்னைகளைக் கையாளுங்கள்; தொடர்ந்திருப்பவற்றை சகித்து நிலைத்திருங்கள்.—மத்தேயு 18:15-17; எபேசியர் 4:26, 27.
20 உங்கள் உணர்ச்சிகள் உங்களை முட்டாள்தனமாக பிரதிபலிக்கச் செய்து, உங்கள் வழியைத் தாறுமாறாக்கும்படி ஒருபோதும் அனுமதியாதீர்கள். கடவுளுடைய இருதயத்தை சந்தோஷப்படுத்தும் வகையில் பேசுங்கள், செயல்படுங்கள். (நீதிமொழிகள் 27:11) அவருடைய ஊழியரில் ஒருவராக உங்கள்மீது உண்மையில் அக்கறையுள்ளவராய் இருக்கிறார், அவருடைய மக்களுடன் ஜீவபாதையில் நிலைத்திருப்பதற்குத் தேவையான புரிந்துகொள்ளுதலைத் தருவார் என்ற அறிவுடன் யெகோவாவை நோக்கி ஊக்கமாக ஜெபியுங்கள். (நீதிமொழிகள் 3:5, 6) எல்லாவற்றிற்கும் மேலாக, கடவுளுக்கு விரோதமாகக் கோபப்படாதீர்கள். காரியங்கள் தவறாகச் செல்லும்போது, யெகோவா குற்றஞ்சாட்டப்படவேண்டியவர் அல்ல என்பதை எப்போதும் நினைவில் வையுங்கள்.
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
◻ லோத்து என்ன தவறைச் செய்தார், ஆனால் கடவுள் அவரை எவ்வாறு நோக்கினார்?
◻ தவறுகளையும் துணிகரத்தையும்குறித்து தாவீது எவ்வாறு உணர்ந்தார்?
◻ காரியங்கள் தவறாகச் செல்லும்போது, நாம் ஏன் கடவுளை குற்றஞ்சாட்டக்கூடாது?
◻ யெகோவாவுக்கு விரோதமாகக் கோபங்கொண்டிருப்பதைத் தவிர்ப்பதற்கு நமக்கு எது உதவிசெய்யும்?
10. ஆதாமுடைய முட்டாள்தனம் எவ்வாறு ‘அவனுடைய வழியைத் தாறுமாறாக்கிற்று’?
[பக்கம் 15-ன் படம்]
ஆபிரகாமைவிட்டுப் பிரியும்போது, லோத்து தன்னுடைய குடியிருப்பிடம் சம்பந்தமாக மிக மோசமான தெரிவைச் செய்தார்