உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • பாசமுள்ளவர்களைப் பறிகொடுக்கும்போது...
    காவற்கோபுரம் (பொது)—2016 | எண் 3
    • ஒரு பெண் துக்கத்தில் அழுகிறார்

      அட்டைப்படக் கட்டுரை

      பாசமுள்ளவரைப் பறிகொடுக்கும்போது...

      “அழாத, கண்ணு. . . .  எல்லாம் . . .  நல்லதுக்குதான்”

      இந்த வார்த்தைகளை சவ அடக்கத்தின்போது பீபி என்ற பெண்ணிடம் ஒருவர் சொன்னார். அந்தப் பெண்ணின் அப்பா ஒரு கார் விபத்தில் இறந்துவிட்டார்!

      பீபிக்கு அப்பா என்றால் உயிர். அந்தப் பெண்ணின் குடும்ப நண்பர் ஒருவர் நல்ல எண்ணத்தோடுதான் இந்த வார்த்தைகளைச் சொன்னார். ஆனால் அந்த வார்த்தைகள் அவளுக்கு ஆறுதலாக இல்லை, மனதை நோகடிப்பது போலத்தான் இருந்தன. “அப்படினா, எங்கப்பா செத்தது நல்லதுக்கா?” என்ற கேள்வி அவளுடைய மனதில் அடிக்கடி ரீங்காரமிட்டுக் கொண்டே இருந்தது. பல வருஷங்களுக்குப் பின்பு இந்தச் சம்பவத்தைப் பற்றி ஒரு புத்தகத்தில் குறிப்பிட்டபோது இன்னும் அவள் வேதனையில்தான் இருந்தாள்.

      பீபியின் விஷயத்தில் பார்த்தப்படி, யாராவது இறந்துபோகும்போது அந்தத் துக்கத்திலிருந்து மீண்டுவர ஒருவருக்கு ரொம்ப நாள் ஆகும், அதுவும் உயிருக்கு உயிரானவர்கள் என்றால் சொல்லவே வேண்டியதில்லை. மரணத்தை “கடைசி எதிரி” என்று பைபிள் சரியாகத்தான் சொல்கிறது. (1 கொரிந்தியர் 15:26) மரணம் எல்லாருடைய வாழ்க்கையிலும் வருகிறது. அது நம் நெஞ்சைப் பிளக்கிறது. அதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. அது திடீரென்று ஏற்படுகிறது, நமக்குப் பிரியமானவர்களைப் பிடித்துக்கொண்டு போய்விடுகிறது. மரணத்தின் தாக்குதலிலிருந்து யாருமே தப்பிக்க முடியாது. அதனால்தான், சாவையும் அதனால் உண்டாகும் பாதிப்புகளையும் சமாளிக்க முடியாமல் திணறுகிறோம். ஆனால் அது இயல்புதான்.

      ஒருவேளை நீங்கள் இப்படி யோசித்திருக்கலாம்: ‘துக்கத்திலிருந்து மீண்டுவர எவ்வளவு நாளாகும்? துக்கத்திலிருந்து எப்படி மீண்டுவர முடியும்? அன்பானவர்களை இழந்து தவிப்பவர்களுக்கு எப்படி ஆறுதல் சொல்வது? இறந்தவர்களை மறுபடியும் உயிரோடு பார்க்க முடியுமா?’ (w16-E No. 3)

  • துக்கப்படுவது தவறா?
    காவற்கோபுரம் (பொது)—2016 | எண் 3
    • அட்டைப்படக் கட்டுரை | பாசமுள்ளவரைப் பறிகொடுக்கும்போது...

      துக்கப்படுவது தவறா?

      நீங்கள் ஏதாவது வியாதியால் கஷ்டப்பட்டிருக்கிறீர்களா? ஒருவேளை அந்த வியாதியிலிருந்து சீக்கிரம் குணமாகியிருக்கலாம், இப்போது அந்த வியாதி வந்ததே உங்களுக்கு ஞாபகமில்லாமல் இருக்கலாம். ஆனால், அன்பானவர்களைப் பறிகொடுத்ததால் ஏற்படும் துக்கம் அந்த மாதிரி கிடையாது. “துக்கத்திலிருந்து ‘மீண்டுவருவதற்கு’ வாய்ப்பே இல்லை” என்று துணையை இழந்த துக்கத்தைச் சமாளித்தல் (ஆங்கிலம்) புத்தகத்தில் டாக்டர் ஆலன் உல்ஃபெல்ட் எழுதுகிறார். ஆனாலும், “காலங்கள் செல்லச் செல்ல... மற்றவர்களுடைய உதவியால்... துக்கத்தைக் குறைக்க முடியும்” என்றும் அவர் சொல்கிறார்.

      உதாரணமாக, வம்சத் தலைவரான ஆபிரகாம் அவருடைய மனைவி இறந்தபோது எப்படி துக்கப்பட்டார் என்பதை கவனியுங்கள். ‘சாராளுக்காகப் புலம்பி அழ ஆரம்பித்தார்’ என்று பைபிள் சொல்கிறது. ‘ஆரம்பித்தார்’ என்ற வார்த்தை துக்கத்தை சமாளிக்க அவருக்கு கொஞ்ச காலம் எடுத்தது என்பதைச் சுட்டிக்காட்டுகிறது.a மற்றொரு உதாரணம் யாக்கோபு. கொடிய மிருகம் அவருடைய மகன் யோசேப்பை அடித்துக் கொன்றுவிட்டது என்று அவர் நம்பிக்கொண்டிருந்தார். இதற்காக அவர் “அநேக நாள்” துக்கப்பட்டார், அவருடைய குடும்பத்தாரால்கூட அவரை ஆறுதல்படுத்த முடியவில்லை. பல வருஷங்களுக்குப் பிறகும், யோசேப்பை இழந்த துக்கம் அவருடைய மனதில் பாரமாக அழுத்திக்கொண்டுதான் இருந்தது.—ஆதியாகமம் 23:2, NW; ஆதியாகமம் 37:34, 35; 42:36; 45:28.

      அன்பு மனைவி சாராள் இறந்தபோது ஆபிரகாம் புலம்பி அழுதார்

      அன்பு மனைவி சாராள் இறந்தபோது ஆபிரகாம் புலம்பி அழுதார்

      நெஞ்சத்திற்கு நெருக்கமானவர்கள் இறந்துபோகும்போது இன்றும் நிறைய பேர் இதேபோல்தான் துக்கப்படுகிறார்கள். பின்வரும் இரண்டு உதாரணங்களைக் கவனியுங்கள்.

      • “ஜூலை 9, 2008-ல, என்னோட கணவர் ராபர்ட் ஒரு விபத்துல இறந்துட்டார். அந்த கோர விபத்து நடந்த அன்னைக்கு காலையில எல்லா நாள் மாதிரிதான் அந்த நாளும் இருந்துச்சு. அவர் சாப்பிட்டதுக்கு அப்புறம், வேலைக்கு போறதுக்கு முன்னாடி எப்பவும் போல நாங்க ரெண்டு பேரும் ஒருத்தருக்கொருத்தர் கட்டியணைச்சு கிஸ் பண்ணிக்கிட்டோம். அன்பா ‘ஐ லவ் யூ’ சொல்லிக்கிட்டோம். ஆறு வருஷம் கழிச்சும் அவர இழந்த வலி என் இதயத்தில இன்னும் இருக்கு. அவர இழந்த துக்கத்தில இருந்து மீண்டுவருவேனானு எனக்கு தெரியல.”—கெயில், வயது 60.

      • “என் அன்பு மனைவி இறந்து 18 வருஷத்துக்கு மேல ஆகுது. இருந்தாலும் நான் அவள இன்னும் ‘மிஸ்’ பண்றேன். அவள நினைச்சு இன்னும் துக்கப்படுறேன். நான் அழகா ஏதாச்சும் பார்த்தேன்னா உடனே அவ ஞாபகம்தான் வரும். அத பார்த்து அவளும் எந்தளவு ரசிச்சிருப்பானு என்னால நினைக்காம இருக்க முடியாது.”—ஏட்டியன், வயது 84.

      அப்படியென்றால், இறந்தவர்களை நினைத்து சதா வேதனைப்படுவது இயல்புதான். சோக சம்பவம் தாக்கும்போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் துக்கப்படலாம். ஒருவர் துக்கப்படும் விதத்தை வைத்து அவரை நியாயந்தீர்ப்பது சரியல்ல. அதே சமயத்தில், கவலையில் மூழ்கும்போது நம்மை நாமே நொந்துகொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. அப்படியென்றால், துக்கத்திலிருந்து எப்படி மீண்டு வரலாம்? (w16-E No. 3)

      a ஆபிரகாமின் மகன் ஈசாக்கும்கூட தன் அம்மா இறந்ததை நினைத்து பல காலம் துக்கப்பட்டார். அவருடைய அம்மா சாராள் இறந்து மூன்று வருஷங்களுக்குப் பிறகும் அதை நினைத்து துக்கப்பட்டுக் கொண்டிருந்தார்.—ஆதியாகமம் 24:67.

  • துக்கத்தைச் சமாளிப்பது எப்படி?
    காவற்கோபுரம் (பொது)—2016 | எண் 3
    • அட்டைப்படக் கட்டுரை | பாசமுள்ளவரைப் பறிகொடுக்கும்போது...

      துக்கத்தைச் சமாளிப்பது எப்படி?

      இந்த விஷயத்தைக் குறித்து பலரும் பலவிதமாக ஆலோசனை சொல்கிறார்கள். இருந்தாலும், எல்லா ஆலோசனைகளும் பிரயோஜனமாக இருக்காது. உதாரணத்துக்கு, அழக் கூடாது... உன் துக்கத்தை வெளியில் காட்டக் கூடாது... என்றெல்லாம் சிலர் சொல்வதைக் கேட்டிருக்கலாம். வேறு சிலரோ, உன் துக்கத்தை அடக்கக் கூடாது... கொட்டி தீர்த்துவிடு... என்று சொல்லலாம். ஆனால், பைபிள் சமநிலையான ஆலோசனையை தருகிறது. அதை ஆராய்ச்சியாளர்களே ஒத்துக்கொள்கிறார்கள்.

      ஆண்கள் அழுவதை கோழைத்தனம் என்று சில கலாச்சாரங்கள் சொல்கின்றன. ஆனால், கண்ணீர்விட்டு அழுவதை, அதுவும் எல்லாருக்கும் முன்பாக அழுவதை, கேவலமாக நினைக்க வேண்டுமா? துக்கப்படும்போது கண்ணீர்விடுவது இயல்புதான் என்பதை மனநல வல்லுநர்களே ஒத்துக்கொள்கிறார்கள். உங்களுக்கு ஏற்பட்ட இழப்பு எவ்வளவு பெரியதாக இருந்தாலும், துக்கத்தை வெளிப்படுத்தும்போது காலப்போக்கில் உங்கள் வாழ்க்கை சகஜமாகப் போகும். ஆனால், துக்கத்தை அடக்கி வைக்கும்போது, உங்களுக்கு நன்மை அல்ல அதிக தீமைதான் உண்டாகும். கண்ணீர்விட்டு அழுவது தவறு... அது ஆண்மைக்கு அழகில்லை... என்ற கருத்தை பைபிள் ஒத்துக்கொள்வதில்லை. உதாரணமாக, தன்னுடைய உயிர் நண்பர் லாசரு இறந்தபோது இயேசு எப்படி துக்கப்பட்டார் என்று யோசித்துப் பாருங்கள். அவர் எல்லாருக்கும் முன்பாக கண்ணீர்விட்டு அழுதார். லாசருவைத் திரும்ப உயிருக்குக் கொண்டுவரும் சக்தி இயேசுவுக்கு இருந்தபோதிலும் அவர் கண்ணீர்விட்டு அழுதார்.—யோவான் 11:33-35.

      துக்கப்படும்போது கோபம் வருவது சகஜம்தான், முக்கியமாக, திடீரென அன்பானவர் இறந்துபோகும்போது அப்படி கோபம் வருவது இயல்புதான். மதிப்பும் மரியாதையும் உள்ள ஒருவர் யோசிக்காமல் அல்லது காரணம் இல்லாமல் ஏதாவது பேசிவிடும்போது, அன்பானவர்களை இழந்து தவிப்பவருக்கு ஏன் கோபம் வருகிறது என்பதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. “என் அப்பா சாகும்போது எனக்கு 14 வயசுதான் இருக்கும். நல்லவங்கள கடவுள் சீக்கிரமா எடுத்துக்கிறார்னுa சவ அடக்கத்தில ஆங்கிலிக்கன் சர்ச் ஊழியர் சொன்னார். அதை கேட்டவுடனே எனக்கு கோவம் கோவமா வந்துச்சு. ஏன்னா, எங்க அப்பாதான் எங்களுக்கு எல்லாமே. இப்போ 63 வருஷம் ஆயிடுச்சு. இருந்தாலும், அவர் சொன்னது என் மனசுல இன்னும் ரணமாதான் இருக்கு” என்று தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த மைக் சொல்கிறார்.

      அடுத்ததாக, குற்ற உணர்ச்சி ஏன் வருகிறது என்பதைப் பற்றி பார்க்கலாம். எதிர்பாராமல் மரணம் ஏற்படும்போது, ‘நான் இப்படி செஞ்சிருந்தா... இது நடந்திருக்காது’ என்று பாசமுள்ளவர்களைப் பறிகொடுத்தவர் அடிக்கடி யோசிக்கலாம். அல்லது இறந்துபோனவரிடம் கடைசியாக ஏதாவது வாக்குவாதம் செய்திருந்தால், அடிக்கடி அதைப் பற்றி யோசிக்கலாம். இப்படியெல்லாம் நினைப்பது உங்களுடைய குற்ற உணர்ச்சியை அதிகமாக்கலாம்.

      இப்படிப்பட்ட குற்ற உணர்ச்சிகளோ கோபமோ உங்களை அலைக்கழித்துக் கொண்டிருந்தால் அதை அடக்கி வைக்கக் கூடாது. நீங்கள் சொல்வதை காதுகொடுத்து கேட்கிற நண்பரிடம் பேசுங்கள். அன்பானவர்களை இழந்து தவிப்பவர்களுக்கு இப்படிப்பட்ட உணர்ச்சிகள் வருவது சகஜம்தான் என்பதை புரிந்துகொள்ளும் நண்பரிடம் பேசுங்கள். பைபிள் இதை நினைப்பூட்டுகிறது: “சிநேகிதன் எல்லாக் காலத்திலும் சிநேகிப்பான்; இடுக்கணில் உதவவே சகோதரன் பிறந்திருக்கிறான்.”—நீதிமொழிகள் 17:17.

      துயரப்படுகிற நபருக்கு மிகச் சிறந்த நண்பர் நம் படைப்பாளரான யெகோவா தேவன். “அவர் உங்கள்மீது அக்கறையாக இருப்பதால்,” உங்கள் மனதில் உள்ள எல்லாவற்றையும் அவரிடம் ஜெபத்தில் கொட்டிவிடுங்கள். (1 பேதுரு 5:7) அப்படி செய்பவர்களுக்கு, ‘எல்லாச் சிந்தனைக்கும் அப்பாற்பட்ட தேவசமாதானத்தை’ கொடுப்பதாக அவர் வாக்குக் கொடுத்திருக்கிறார். அது உங்களுடைய மனதிற்கு ஆறுதலாக இருக்கும். (பிலிப்பியர் 4:6, 7) அதோடு, ஆறுதல் தருகிற அவருடைய வார்த்தையாகிய பைபிளின் மூலம் அவர் உங்களுக்கு உதவி செய்கிறார். உங்களுக்கு ஆறுதல் தரும் வசனங்களை எழுதி வைத்துக்கொள்ளுங்கள். (முன்பக்கத்தில் உள்ள பெட்டியைப் பாருங்கள்.) சில வசனங்களை மனப்பாடம்கூட செய்துகொள்ளலாம். ராத்திரியில் நீங்கள் தனியாக இருக்கும்போது... தூக்கம் வராமல் கஷ்டப்படும்போது... இவற்றை ஆழமாக யோசித்துப் பாருங்கள்.—ஏசாயா 57:15.

      40 வயதாகும் ஜாக் என்பவரின் அன்பு மனைவி புற்றுநோயால் சமீபத்தில் இறந்துவிட்டார். சில சமயங்களில் தனிமை அவரை மிகவும் வாட்டுவதாக சொல்கிறார். கடவுளிடம் ஜெபம் செய்தது அவருக்கு ரொம்ப உதவியாக இருந்தது. “யெகோவாகிட்ட ஜெபம் செய்றப்போ நான் தனிமையில வாடுறதே கிடையாது. அடிக்கடி ராத்திரியில திடீர்னு முழிப்பு வந்திடும், மறுபடியும் தூக்கமே வராது. அப்போ நான் பைபிள்ல இருக்கிற ஆறுதலான வசனங்கள வாசிப்பேன், அதை பத்தி ஆழமா யோசிச்சு பார்ப்பேன், என் மனசுல இருக்கிறதெல்லாம் யெகோவாகிட்ட கொட்டுவேன். அப்போ எனக்கு மன அமைதியும் நிம்மதியும் கிடைக்கும். அதுக்கு அப்புறம் எனக்கு நல்லா தூக்கம் வரும்.”

      வனிசா என்ற இளம் பெண்ணின் அம்மா நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டார். அந்தச் சமயத்தில், ஜெபத்துக்கு எவ்வளவு சக்தி இருக்கிறது என்பதை அவரும் அனுபவத்தில் தெரிந்துகொண்டார். “ரொம்ப வேதனையா இருக்குற சமயத்துல, வெறுமனே கடவுளோட பெயரைச் சொல்லி கண்ணீர்விட்டு அழுவேன். யெகோவா என்னோட ஜெபத்த கேட்டு எல்லா சமயத்திலயும் தேவையான பலத்த கொடுத்தார்.”

      துக்கத்தில் தவிப்பவர்கள் மற்றவர்களுக்கு ஏதாவது உதவியோ சமூக சேவையோ செய்யச் சொல்லி ஆலோசகர்கள் சிலர் சொல்கிறார்கள். அப்படி செய்வது ஒருவருக்கு சந்தோஷத்தைக் கொடுக்கும், அவருடைய வேதனையைக் குறைக்கும். (அப்போஸ்தலர் 20:35) மற்றவர்களுக்கு உதவும் வேலையில் ஈடுபடும்போது அதிக ஆறுதல் கிடைத்ததாக துக்கத்தில் இருக்கும் நிறைய கிறிஸ்தவர்கள் சொல்கிறார்கள்.—2 கொரிந்தியர் 1:3, 4. (w16-E No. 3)

      a ஆனால் பைபிள் இப்படி சொல்வதில்லை. ஏன் மரணம் வருகிறது என்பதற்கு மூன்று காரணங்களை பைபிள் சொல்கிறது.—பிரசங்கி 9:11; யோவான் 8:44; ரோமர் 5:12.

      ஆறுதல் தரும் பைபிள் வசனங்கள்

      • உங்களுடைய வேதனையை யெகோவா உணருகிறார்.—சங்கீதம் 55:22; 1 பேதுரு 5:7.

      • கடவுள் தன்னுடைய ஊழியர்கள் செய்யும் ஜெபங்களைப் பொறுமையோடு கேட்கிறார். —சங்கீதம் 86:5; 1 தெசலோனிக்கேயர் 5:17.

      • இறந்துபோன ஆட்களைக் கடவுள் ரொம்பவே ‘மிஸ்’ பண்ணுகிறார்.—யோபு 14:13-15.

      • இறந்தவர்களுக்கு மறுபடியும் உயிர் கொடுப்பதாகக் கடவுள் வாக்குக் கொடுத்திருக்கிறார். —ஏசாயா 26:19; யோவான் 5:28, 29.

  • துக்கப்படுகிறவர்களுக்கு ஆறுதல் சொல்வது எப்படி?
    காவற்கோபுரம் (பொது)—2016 | எண் 3
    • அட்டைப்படக் கட்டுரை | பாசமுள்ளவரைப் பறிகொடுக்கும்போது...

      துக்கப்படுகிறவர்களுக்கு ஆறுதல் சொல்வது எப்படி?

      அப்பாவும் மகனும் கல்லறையில் நிற்கிறார்கள்

      உங்களுக்கு நெருக்கமானவர்கள் துக்கப்படும்போது அவர்களுக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்று தெரியாமல் தவித்திருக்கிறீர்களா? அந்தச் சமயத்தில் அவர்களுக்கு என்ன சொல்வது அல்லது என்ன செய்வது என்று நமக்குத் தெரியாமல் இருந்திருக்கலாம், அதனால் ஒன்றுமே சொல்லாமல், செய்யாமல் இருந்திருக்கலாம். ஆனால், அவர்களுக்கு நம்மால் நடைமுறையான உதவிகளைச் செய்ய முடியும்.

      பெரும்பாலும், நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் அவர்களைப் போய் பார்ப்பதுதான். அவர்களிடம் சில வார்த்தைகளை பேசுவதுதான். ‘இத கேள்விப்பட்டதும் எனக்கு ரொம்ப வருத்தமா இருந்துச்சு’ போன்ற வார்த்தைகளைச் சொல்லலாம். நிறைய கலாச்சாரங்களில், கட்டிப்பிடிப்பது... கைகளைப் பிடிப்பது... போன்ற செயல்களைச் செய்கிறார்கள்; இதெல்லாம் அவர்கள்மேல் அக்கறையோடு இருக்கிறோம் என்பதைக் காட்டுவதற்குச் சில வழிகள். துக்கத்தில் இருப்பவர் உங்களோடு பேச விரும்பினால், காதுகொடுத்துக் கேளுங்கள், அனுதாபம் காட்டுங்கள். எல்லாவற்றையும்விட அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யுங்கள். அவர்களால் செய்ய முடியாத வேலைகளைச் செய்யுங்கள். உதாரணமாக சமைப்பது, பிள்ளைகளைக் கவனிப்பது, தேவைப்பட்டால் சவ அடக்கத்துக்கான ஏற்பாடுகளைச் செய்வது போன்ற உதவிகளைச் செய்யுங்கள். நீங்கள் பேசும் வார்த்தைகளைவிட செய்யும் செயல்களுக்கு சக்தி அதிகம்.

      கொஞ்ச நாள் கழித்து, இறந்த அன்பானவர்களைப் பற்றி பேசலாம். அவர்களுடைய நல்ல குணங்களைப் பற்றி... அருமையான அனுபவங்களைப் பற்றி... பேசலாம். இப்படிப்பட்ட உரையாடல்கள் துக்கத்தில் இருப்பவரின் முகத்தில் புன்முறுவலை பூக்க செய்யும். உதாரணமாக, பேம் என்பவருடைய கணவர் ஈயன் இறந்து ஆறு வருஷங்கள் ஆகின்றன. பேம் இப்படி சொல்கிறார்: “என் கணவர் செஞ்ச நல்ல விஷயங்கள பத்தி சிலசமயம் யாராவது என்கிட்ட சொல்வாங்க. அந்த விஷயத்தை பத்தி அப்பதான் கேள்விப்படுவேன். அத கேட்கிறப்போ என் மனசுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும்.”

      துக்கத்தில் இருப்பவர்களுக்கு அவர்களுடைய நண்பர்கள் ஆரம்பத்தில் நிறைய உதவிகளைச் செய்கிறார்கள், ஆனால் சீக்கிரத்தில் அந்த நண்பர்கள் தங்களுடைய சொந்த வாழ்க்கையில் மூழ்கிவிடுகிறார்கள்; துக்கத்தில் இருப்பவர்களையோ மறந்துவிடுகிறார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள். அதனால், அவர்களை அடிக்கடி போய் பார்க்க முயற்சி செய்யுங்கள்.a ரொம்ப நாள் அடக்கி வைத்திருந்த வேதனைகளைக் கொட்டுவதற்கு வாய்ப்பு கிடைத்ததை நினைத்து அவர்கள் சந்தோஷப்படுவார்கள்.

      கயோரி என்ற ஜப்பானிய பெண்ணின் அம்மா இறந்துவிட்டார். அவர் இறந்து 15 மாதங்கள் கழித்து அவருடைய அக்காவும் இறந்துவிட்டார். இது அவருக்குப் பேரிடியாக இருந்தது. ஆனால், அவருக்குத் தொடர்ந்து நண்பர்களுடைய ஆதரவு கிடைத்தது. கயோரியைவிட அதிக வயதான ரிட்சுகோ என்பவர் அவரோடு நெருங்கிய நண்பரைப் போல் பழக விரும்பினார். “உண்மைய சொன்னா, எனக்கு அதுல துளிகூட இஷ்டமில்ல. யாரும் என் அம்மாவோட இடத்த பிடிக்க நான் விரும்புல. அவரோட இடத்த யாரும் பிடிக்க முடியும்னு நான் நினைக்கல. ஆனாலும், அவங்க நடந்துக்கிட்ட விதம் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது, அதனால அவங்களோட ரொம்ப நெருக்கமாயிட்டேன். ஒவ்வொரு வாரமும் நாங்க சேர்ந்தே ஊழியத்துக்கும் கூட்டத்துக்கும் போவோம். ஒன்னா சேர்ந்து டீ குடிக்க என்னை கூப்பிடுவாங்க, எனக்குச் சாப்பாடு கொண்டுவந்து கொடுப்பாங்க, நிறைய தடவை கடிதம் எழுதியிருக்காங்க, வாழ்த்து அட்டைகள் அனுப்பிருக்காங்க. அவங்க இப்படியெல்லாம் செஞ்சது எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது.”

      கயோரியின் அம்மா இறந்து 12 வருஷங்கள் ஆகின்றன. கயோரியும் அவருடைய கணவரும் முழுநேரமாக கடவுளுக்குச் சேவை செய்கிறார்கள். கயோரி இப்படி சொல்கிறார்: “மம்மா ரிட்சுகோ, எப்பவும் என்மேல அக்கறையா இருக்காங்க, எங்க வீட்டுக்கு எப்போ போனாலும் அவங்கள போய் பார்த்துட்டு வருவேன்.”

      தொடர்ந்து நண்பர்களுடைய உதவியைப் பெற்ற மற்றொருவர்தான் போல்லி. இவருடைய உதாரணத்தை கவனியுங்கள். இவர் சைப்ரஸில் ஒரு யெகோவாவின் சாட்சியாக இருக்கிறார். போல்லியின் அன்பான கணவர் சோசோஸ் மற்றவர்களுக்கு நல்ல உதாரணமாக இருந்தார். அப்பா-அம்மா இல்லாதவர்களையும் விதவைகளையும் வீட்டுக்குக் கூப்பிட்டு உபசரிப்பார். அவர்களோடு நன்றாகப் பழகுவார். (யாக்கோபு 1:27) ஆனால், 53-ஆம் வயதில் ‘பிரெய்ன் டியூமரால்’ இறந்துவிட்டார். “என்கூட 33 வருஷமா வாழ்ந்த அன்பான கணவர நான் இழந்துட்டேன்” என்று போல்லி சொல்கிறார்.

      அப்பாவுக்கும் மகனுக்கும் ஒரு தம்பதி சாப்பாடு கொண்டுவருகிறார்கள்

      துக்கப்படுகிறவருக்கு உதவிசெய்ய நடைமுறையான வழிகளைக் கண்டுபிடியுங்கள்

      கணவருடைய சவ அடக்கம் முடிந்த பிறகு, போல்லி தன்னுடைய 15 வயதுடைய இளைய மகன் டேனியலோடு கனடாவுக்குக் குடிமாறி போய்விட்டார். அங்கே யெகோவாவின் சாட்சிகளுடைய சபையில் இருப்பவர்களோடு அவர்கள் பழக ஆரம்பித்தார்கள். “எங்களோட கடந்தகால வாழ்க்கைய பத்தியோ கஷ்டமான சூழ்நிலைகள பத்தியோ புது சபைல இருந்த நண்பர்களுக்குத் தெரியாது. ஆனாலும், அவங்க எங்களோட பழகறதயோ எங்களுக்கு ஆறுதல் சொல்றதயோ உதவி செய்றதயோ நிறுத்தல. முக்கியமா என் மகன், அப்பாவ நினைச்சு ஏங்கும்போதெல்லாம் அவங்க செஞ்ச உதவிய என்னால மறக்கவே முடியாது. சபையை வழிநடத்துறவங்க டேனியல் மேல தனிப்பட்ட விதமா அக்கறை காட்டுனாங்க. அவன நல்லா கவனிச்சுக்கிட்டாங்க. முக்கியமா, நண்பர்களோட ஒன்னா இருக்கும்போது இல்லனா, வெளில போய் விளையாடும்போது டேனியலயும் சேர்த்துக்குவாங்க.” இப்போது அம்மாவும் மகனும் சந்தோஷமாக இருக்கிறார்கள்.

      சோகத்தில் இருப்பவர்களுக்கு உதவியும் ஆறுதலும் அளிப்பதற்கு நிறைய வழிகள் இருக்கின்றன. பைபிளும் எதிர்காலத்தை பற்றிய அருமையான நம்பிக்கையை கொடுத்து ஆறுதல் அளிக்கிறது. (w16-E No. 3)

      a அன்பானவர்கள் இறந்த தேதியையோ மாதத்தையோ சிலர் காலண்டரில் குறித்து வைத்து, வேதனையில் தவிப்பவர்களுக்கு ஆறுதல் சொல்கிறார்கள்.

  • இறந்தவர்கள் உயிரோடு வருவார்கள்!
    காவற்கோபுரம் (பொது)—2016 | எண் 3
    • அட்டைப்படக் கட்டுரை | பாசமுள்ளவரைப் பறிகொடுக்கும்போது...

      இறந்தவர்கள் உயிரோடு வருவார்கள்!

      இந்த அட்டைப்பட கட்டுரையில் முன்பு குறிப்பிடப்பட்ட கெயில் என்ற பெண்ணை உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். அவளுடைய கணவர் ராபர்ட்டை இழந்த சோகத்திலிருந்து அவள் மீண்டு வந்தாளா என ஒருவேளை நீங்கள் யோசிக்கலாம். ஆனால், கடவுள் வாக்கு கொடுத்திருக்கிற புதிய உலகத்தில் அவரை மறுபடியும் பார்க்க முடியும் என்ற நம்பிக்கையோடு இப்போது அவள் இருக்கிறாள். “எனக்கு ரொம்ப பிடிச்ச வசனம் வெளிப்படுத்துதல் 21:3, 4” என்று அவள் சொல்கிறாள். “கடவுள்தாமே அவர்களோடு இருப்பார். அவர்களுடைய கண்ணீரையெல்லாம் கடவுள் துடைத்துவிடுவார்; இனி மரணம் இருக்காது, துக்கம் இருக்காது, அழுகை இருக்காது, வேதனை இருக்காது; முன்பிருந்தவை ஒழிந்துவிடும்” என்று அந்த வசனம் சொல்கிறது.

      கெயில் இப்படிச் சொல்கிறாள்: “இந்த ஒரே வாக்குறுதில எல்லாமே அடங்கிடுச்சு. இறந்தவங்கள மறுபடியும் உயிரோட பார்க்க முடியுங்கிற வாக்குறுதிய பத்தி தெரியாம அன்பானவங்கள இழந்து தவிக்கிறவங்களுக்காக நான் ரொம்ப அனுதாபப்படுறேன்.” அவள் தன்னுடைய நம்பிக்கையைப் பற்றி எல்லாருக்கும் சொல்ல முழுநேர ஊழியம் செய்கிறாள். அக்கம்பக்கத்தில் இருக்கிறவர்களைச் சந்தித்து, “இனி மரணம் இருக்காது” என்று கடவுள் கொடுத்திருக்கிற வாக்குறுதியைப் பற்றி சொல்கிறாள்.

      உடம்பில் கொப்புளங்களுடன் யோபு

      மறுபடியும் உயிரோடு வரும் நம்பிக்கை யோபுவுக்கு இருந்தது

      ‘இதெல்லாம் நம்பற மாதிரி இல்ல’ என்று நீங்கள் ஒருவேளை சொல்லலாம். ஆனால் யோபு என்பவரின் உதாரணத்தை கவனியுங்கள். அவர் பயங்கரமான வியாதியில் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். (யோபு 2:7) செத்துப்போனால் நன்றாக இருக்கும் என்று அவர் சொன்னாலும்கூட, இதே பூமியில் தன்னை உயிரோடு கொண்டுவரும் சக்தி கடவுளுக்கு இருக்கிறது என்பதை உறுதியாக நம்பினார். அதனால்தான், ‘கடவுளே, நீங்கள் என்னைக் கல்லறையில் புதைத்து வையுங்கள், . . . நீங்கள் என்னைக் கூப்பிடுவீர்கள், நான் பதில் சொல்வேன். இறந்தவர்களை மறுபடியும் உயிரோடு கொண்டுவர நீங்கள் ஏக்கமாக இருப்பீர்கள்’ என்று நம்பிக்கையோடு சொன்னார். (யோபு 14:13, 15, NW) கடவுள் தன்னை ரொம்பவே ‘மிஸ்’ பண்ணுவார்... அவரை மறுபடியும் உயிரோடு கொண்டுவர ஏக்கமாக இருப்பார்... என்ற நம்பிக்கை யோபுவுக்கு இருந்தது.

      சீக்கிரத்தில், இந்தப் பூமியை பூஞ்சோலையாக கடவுள் மாற்றும்போது, யோபுவின் ஆசையை மட்டுமல்ல எல்லாருடைய ஆசையையும் நிறைவேற்றுவார். (லூக்கா 23:42, 43) நல்லவர்கள் எல்லாரும் ‘உயிரோடு எழுப்பப்படுவார்கள்’ என்று பைபிள் உறுதியளிக்கிறது. (அப்போஸ்தலர் 24:15) “இதைக் குறித்து ஆச்சரியப்படாதீர்கள்; ஏனென்றால், வேளை வரப்போகிறது; அப்போது, கல்லறைகளில் உள்ள அனைவரும் அவரது குரலைக் கேட்டு வெளியே வருவார்கள்” என்று இயேசுவும் நமக்கு உறுதியளிக்கிறார். (யோவான் 5:28, 29) இந்த வாக்குறுதி நிறைவேறப்போவதை யோபு பார்ப்பார். அவருடைய உடல் “இளமையில் இருந்ததைவிட ஆரோக்கியம் அடையும்.” அதோடு, அவருடைய உடல் மறுபடியும் “இளமைத் துடிப்போடு” மாறும் என்ற அவருடைய நம்பிக்கையும் நிறைவேறும். (யோபு 33:24, 25, NW) இறந்தவர்களை இதே பூமியில் கடவுள் உயிரோடு கொண்டுவருவார் என்பதை ஏற்றுக்கொள்கிற எல்லாருக்கும் இப்படிப்பட்ட வாழ்க்கை கிடைக்கும்.

      பாசமானவர்களை நீங்கள் பறிகொடுத்திருந்தால், இங்கே சொல்லப்பட்ட விஷயங்கள் ஒருவேளை உங்களுடைய துக்கத்தை முழுமையாகத் தணிக்காமல் இருக்கலாம். ஆனால், பைபிளில் கடவுள் சொல்லியிருக்கும் வாக்குறுதிகளைப் பற்றி ஆழமாக யோசித்துப் பார்க்கும்போது இது நிஜமான நம்பிக்கை என்பதைத் தெரிந்துகொள்வீர்கள். அதோடு, இது உங்களுடைய வாழ்க்கையைத் தொடர்ந்து நடத்துவதற்குத் தேவையான பலத்தையும் கொடுக்கும்.—1 தெசலோனிக்கேயர் 4:13.

      துக்கத்திலிருந்து எப்படி மீண்டுவருவது என்பதைப் பற்றி இன்னும் அதிகமாகத் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? அல்லது, “கஷ்டங்களையெல்லாம் கடவுள் ஏன் இன்னும் தீர்க்காமல் இருக்கிறார்?” போன்ற கேள்விகளுக்கு பதில் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறீர்களா? பைபிள் தரும் ஆறுதலான... நடைமுறையான... பதில்களைத் தெரிந்துகொள்ள, தயவுசெய்து jw.org பாருங்கள். ▪ (w16-E No. 3)

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்