உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • வசனங்களைச் சரியான அழுத்தத்தோடு வாசித்தல்
    தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள்
    • படிப்பு 21

      வசனங்களைச் சரியான அழுத்தத்தோடு வாசித்தல்

      நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

      உங்களுடைய தர்க்க ரீதியிலான விவாதத்தை சிறப்பித்துக் காட்டுகிற வார்த்தைகளையும் சொற்றொடர்களையும் அழுத்திக் கூறுங்கள். தகுந்த உணர்ச்சியோடு வாசியுங்கள்.

      ஏன் முக்கியம்?

      வசனங்களுக்கு தகுந்த அழுத்தம் கொடுத்து வாசிக்கும்போது அவற்றின் முழு வலிமையும் முனைப்பாக காட்டப்படுகிறது.

      கடவுளுடைய நோக்கங்களைப் பற்றி நீங்கள் தனிநபரிடம் பேசினாலும்சரி கூட்டத்தாரிடம் பேசினாலும்சரி, கடவுளுடைய வார்த்தையை மையமாக கொண்டே பேச வேண்டும். இது பொதுவாக பைபிளிலிருந்து வேதவசனங்களை வாசிப்பதை உட்படுத்துகிறது; இதை சிறப்பாக செய்ய வேண்டும்.

      தகுந்த அழுத்தம் கொடுப்பது உணர்ச்சியை உட்படுத்துகிறது. வேதவசனங்களை உணர்ச்சியோடு வாசிக்க வேண்டும். சில உதாரணங்களை கவனியுங்கள். சங்கீதம் 37:11-ஐ நீங்கள் சத்தமாக வாசிக்கும்போது, அங்கே வாக்குறுதி கொடுக்கப்பட்டுள்ள சமாதானத்தை மகிழ்ச்சியோடு எதிர்பார்க்கும் உணர்வு உங்களுடைய குரலில் வெளிப்பட வேண்டும். வேதனையும் மரணமும் முடிவுக்கு வருவது சம்பந்தமாக வெளிப்படுத்துதல் 21:4-ஐ வாசிக்கும்போது, முன்னறிவிக்கப்பட்டுள்ள மகத்தான விடுதலைக்கு மனமார்ந்த போற்றுதல் காட்டும் விதத்தில் உங்களுடைய குரல் இருக்க வேண்டும். பாவக் கறைகள் நிறைந்த ‘மகா பாபிலோனை’ விட்டு வெளியே வரும்படியான அழைப்பை வெளிப்படுத்துதல் 18:2, 4, 5-ல் வாசிக்கும்போது அவசர உணர்வை ஊட்டும் தொனியில் வாசிக்க வேண்டும். ஆனால் வெளிப்படுத்தப்படும் உணர்ச்சி உள்ளப்பூர்வமாக இருக்க வேண்டும், மிதமிஞ்சி இருக்கக் கூடாது. எந்தளவு உணர்ச்சியோடு வாசிக்க வேண்டும் என்பது அந்த வசனத்தை வைத்தும் அது பயன்படுத்தப்படும் விதத்தை வைத்தும் தீர்மானிக்கப்படுகிறது.

      சரியான வார்த்தைகளை வலியுறுத்துங்கள். ஒரு வசனத்தில் ஒரு பகுதியின் பேரில் மட்டுமே குறிப்புகள் சொல்வதாக இருந்தால், அந்த வசனத்தை வாசிக்கையில் அந்தப் பகுதியை நீங்கள் சிறப்பித்துக் காட்ட வேண்டும். உதாரணமாக, மத்தேயு 6:33-ஐ வாசிக்கும்போது, “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தை . . . தேடு”வது எதை அர்த்தப்படுத்துகிறது என்பதை நீங்கள் பகுத்தாராய எண்ணியிருந்தால், “நீதியையும்” என்ற வார்த்தைக்கோ “இவைகளெல்லாம்” என்ற வார்த்தைக்கோ முக்கிய அழுத்தம் கொடுக்க மாட்டீர்கள்.

      ஊழியக் கூட்டத்தில் ஒரு பேச்சில், மத்தேயு 28:19-ஐ வாசிக்க நீங்கள் திட்டமிடலாம். எந்த வார்த்தைகளை நீங்கள் வலியுறுத்த வேண்டும்? வீட்டு பைபிள் படிப்புகளை ஆரம்பிப்பதில் தளராமலிருப்பதற்கு உற்சாகப்படுத்த விரும்பினால், “சீஷராக்கி” என்ற வார்த்தையை வலியுறுத்துங்கள். மறுபட்சத்தில், உங்களுடைய நாட்டில் குடியேறும் மக்களுடன் பைபிள் சத்தியத்தைப் பகிர்ந்துகொள்ள வேண்டிய கிறிஸ்தவ உத்தரவாதத்தைப் பற்றி பேசுவதற்குத் திட்டமிட்டால், அல்லது தேவை அதிகமுள்ள இடங்களில் சேவை செய்வதற்கு பிரஸ்தாபிகள் சிலரை உற்சாகப்படுத்த விரும்பினால், “சகல ஜாதிகளையும்” என்பதை வலியுறுத்தலாம்.

      பெரும்பாலும், ஒரு கேள்விக்கு பதிலளிப்பதற்காக அல்லது பிறர் சர்ச்சைக்குரியதாக கருதுகிற ஒரு விவாதத்திற்கு ஆதரவாக ஒரு வசனம் பயன்படுத்தப்படுகிறது. அந்த வசனத்திலுள்ள எல்லா கருத்துக்கும் ஒரே மாதிரி அழுத்தம் கொடுத்தால், அந்த வசனத்திற்கும் உங்களுடைய விவாதத்திற்கும் இடையே உள்ள தொடர்பை சபையார் புரிந்துகொள்ள தவறிவிடலாம். உங்களுக்கு அந்தக் குறிப்பு தெளிவாக தெரியலாம், ஆனால் அவர்களுக்கோ அது தெரியாது.

      உதாரணமாக, பைபிளில் கடவுளுடைய பெயர் காணப்படுகிற சங்கீதம் 83:17-ஐ வாசிக்கும்போது, “உன்னதமானவர்” என்பதற்கு அதிக அழுத்தம் கொடுத்தால், கடவுளுக்கு தனிப்பட்ட பெயர் இருக்கிறது என்பதை வீட்டுக்காரர் தெளிவாக புரிந்துகொள்ள தவறிவிடலாம். “யேகோவா” என்ற பெயருக்கு நீங்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும். ஆனால், யெகோவாவின் அரசுரிமையைப் பற்றி விவாதிக்கையில் அதே வசனத்தைப் பயன்படுத்தும்போது, “உன்னதமானவர்” என்பதற்கு அதிக அழுத்தம் கொடுக்க வேண்டும். அதைப் போலவே, விசுவாசத்தோடு கிரியையும் அவசியம் என்பதை வலியுறுத்த யாக்கோபு 2:24-ஐ பயன்படுத்தும்போது, “கிரியைகளினாலேயும்” என்பதற்குப் பதிலாக “நீதிமான்களாக்கப்படுகிறானென்று” என்ற வார்த்தைக்கு அதிக அழுத்தம் கொடுத்தால் சிலர் முக்கிய குறிப்பை உணரத் தவறிவிடலாம்.

      பயனுள்ள மற்றொரு உதாரணத்தை ரோமர் 15:7-13-ல் காணலாம். இது, புறஜாதிகளும் யூதர்களும் இருந்த சபைக்கு அப்போஸ்தலன் பவுல் எழுதிய ஒரு நிருபத்தின் பாகமாக இருக்கிறது. கிறிஸ்துவின் ஊழியம் விருத்தசேதனம் பண்ணப்பட்ட யூதர்களுக்கு மாத்திரமல்ல, “புறஜாதியாரும் இரக்கம் பெற்றதினிமித்தம் தேவனை மகிமைப்படுத்து”வதற்கு அவர்களுக்கும் பயன் தருகிறது என்பதை இங்கே அப்போஸ்தலன் பவுல் விவாதிக்கிறார். புறஜாதியாருக்கு கொடுக்கப்பட்ட அந்த வாய்ப்பிற்கு கவனத்தை ஈர்த்து, அவர் நான்கு வசனங்களை மேற்கோள் காட்டுகிறார். பவுலின் மனதிலிருந்த குறிப்பை வலியுறுத்துவதற்கு அந்த மேற்கோள்களை நீங்கள் எப்படி வாசிக்க வேண்டும்? 9-ம் வசனத்தில் “புறஜாதியாரும்” என்பதையும் 10-ம் வசனத்தில் “புறஜாதிகளே” என்பதையும், 11-ம் வசனத்தில் “புறஜாதிகளே, எல்லாரும்” மற்றும் “ஜனங்களே, எல்லாரும்” என்பதையும், 12-ம் வசனத்தில் “புறஜாதியாரை” என்பதையும் வலியுறுத்துவதற்கு நீங்கள் குறித்துக்கொள்ளலாம். ரோமர் 15:7-13-ஐ அதேவிதமாக வலியுறுத்தி வாசித்துப் பாருங்கள். அப்படி வாசிக்கும்போது, பவுலுடைய விவாதத்தின் முழு கோர்வையும் உங்களுக்குத் தெளிவாகத் தெரியும், புரிந்துகொள்வதற்கு எளிதாகவும் இருக்கும்.

      அழுத்தம் கொடுக்கும் முறைகள். முனைப்பாக காட்ட விரும்பும் கருத்தாழமிக்க வார்த்தைகளை பல வழிகளில் வலியுறுத்தலாம். நீங்கள் பயன்படுத்தும் முறைகள் வேதவசனத்திற்கும் பேச்சு அமைப்பிற்கும் இசைவாக இருக்க வேண்டும். இங்கே சில ஆலோசனைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

      குரல் அழுத்தம். இது, கருத்தாழமிக்க வார்த்தைகளை வாக்கியத்திலுள்ள பிற வார்த்தைகளிலிருந்து முனைப்பாக தெரியச் செய்வதற்கு குரலில் ஏற்படுத்தும் எந்த மாற்றத்தையும் உட்படுத்துகிறது. சத்தத்தின் அளவை மாற்றுவதன் மூலம்​—அதிகரிப்பதன் மூலமோ குறைப்பதன் மூலமோ​—இந்த அழுத்தத்தைக் கொடுக்கலாம். பல மொழிகளில், குரலில் ஏற்றத்தாழ்வை ஏற்படுத்துவது அழுத்தம் கொடுக்கிறது. என்றபோதிலும், சில மொழிகளில் அப்படி செய்வது அர்த்தத்தையே அடியோடு மாற்றிவிடலாம். முக்கியமான வார்த்தைகளை மெதுவாக சொல்லும்போது அவற்றின் முக்கியத்துவம் அதிகரிக்கிறது. குறிப்பிட்ட சில வார்த்தைகளை சிறப்பித்துக் காட்டுவதற்கு குரலில் அழுத்தம் கொடுக்க முடியாத மொழிகளில், நீங்கள் சிறந்த பலனைப் பெற அந்த மொழியில் வழக்கமாக பின்பற்றப்படும் முறை எதுவோ அதை பின்பற்றுவது அவசியம்.

      நிறுத்தம். ஒரு வசனத்தின் முக்கிய பகுதியை வாசிப்பதற்கு முன்போ பின்போ​—அல்லது முன்பும் பின்பும்​—இதைச் செய்யலாம். முக்கிய கருத்தை வாசிப்பதற்கு முன்பு நிறுத்தம் கொடுப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது; பின்பு நிறுத்தம் கொடுப்பது நீங்கள் மனதில் ஏற்படுத்திய பதிவை ஆழமாக்குகிறது. ஆனால் அளவுக்கு மீறி நிறுத்தம் கொடுத்தால் எதுவுமே முனைப்பாக தெரியாது.

      திரும்பத் திரும்ப கூறுதல். வாசிக்கும்போதே ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிறுத்தி, ஒரு வார்த்தையையோ சொற்றொடரையோ மீண்டும் வாசிப்பதன் மூலமாகவும் முக்கிய குறிப்பை வலியுறுத்தலாம். ஆனால் முழு வசனத்தையும் வாசித்துவிட்டு பின்பு முக்கிய வார்த்தைகளைத் திரும்ப சொல்லும் முறை அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

      சைகைகள். அங்க அசைவும் முகபாவமும் ஒரு வார்த்தைக்கு அல்லது சொற்றொடருக்கு உணர்ச்சியை சேர்க்கலாம்.

      குரலின் தொனி. சில மொழிகளில், வார்த்தைகளுக்கு அர்த்தமூட்டி அவற்றை தனியே பிரித்துக் காட்டுகிற தொனியில் அவை சில சமயம் வாசிக்கப்படலாம். இங்கேயும் விவேகத்தை காண்பிக்க வேண்டும், முக்கியமாக நக்கலாக வாசிக்கும் விஷயத்தில்.

      வசனங்களை பிறர் வாசிக்கையில். ஒரு வசனத்தை வீட்டுக்காரர் வாசிக்கையில், அவர் ஒருவேளை தவறான வார்த்தைக்கு அழுத்தம் கொடுக்கலாம் அல்லது எந்த வார்த்தைக்கும் அழுத்தம் கொடுக்காமல் வாசிக்கலாம். அப்பொழுது நீங்கள் என்ன செய்யலாம்? பொதுவாக, அந்த வசனங்களை நீங்கள் பொருத்திக் காட்டுவதன் மூலம் அர்த்தத்தை தெளிவாக்குவதே மிகவும் சிறந்தது. பொருத்திக் காட்டிய பிறகு, கருத்தாழமிக்க வார்த்தைகளுக்கு நேரடியாக விசேஷ கவனம் செலுத்தலாம்.

      அழுத்தத்தோடு வாசிக்கும் கலையை வளர்த்துக்கொள்வது எப்படி

      • நீங்கள் எந்த வசனத்தை வாசிக்க திட்டமிட்டாலும் இவ்வாறு கேட்டுக்கொள்ளுங்கள்: ‘இந்த வார்த்தைகள் எப்படிப்பட்ட உணர்ச்சியை வெளிப்படுத்துகின்றன? அதை நான் எப்படி தெரியப்படுத்துவது?’

      • நீங்கள் பயன்படுத்த திட்டமிடும் வசனங்களை பகுத்தாராயுங்கள். ஒவ்வொன்றுக்கும் இவ்வாறு கேட்டுக்கொள்ளுங்கள்: ‘இந்த வசனம் என்ன நோக்கத்திற்கு உதவும்? அந்த நோக்கத்தை அடைய எந்த வார்த்தைகளை வலியுறுத்த வேண்டும்?’

      பயிற்சிகள்: (1) வெளி ஊழியத்தில் நீங்கள் பயன்படுத்த திட்டமிடும் ஒரு வசனத்தை பகுத்தாராயுங்கள். தகுந்த உணர்ச்சியோடு வாசிப்பதற்கு பழகிப் பாருங்கள். நீங்கள் பயன்படுத்த திட்டமிடும் முறையை மனதிற்கொண்டு, சரியான வார்த்தை(களு)க்கு அழுத்தம் கொடுத்து அந்த வசனத்தை சத்தமாக வாசியுங்கள். (2) தற்போது படிக்கும் பிரசுரத்தில், வசனங்கள் மேற்கோள் காண்பிக்கப்பட்டுள்ள ஒரு பாராவை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். வசனங்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதை பகுத்தாராயுங்கள். கருத்தாழமிக்க வார்த்தைகளைக் குறித்துக் கொள்ளுங்கள். வசனங்களுக்கு தகுந்த அழுத்தம் கொடுக்கும் முறையில் முழு பாராவையும் சத்தமாக வாசியுங்கள்.

  • வசனங்களைச் சரியாக பொருத்துதல்
    தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள்
    • படிப்பு 22

      வசனங்களைச் சரியாக பொருத்துதல்

      நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

      எந்தவொரு வசனத்தைப் பொருத்தும்போதும் அது சூழமைவோடும் முழு பைபிளோடும் ஒத்திருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் பொருத்திக் காட்டுவது “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை”யால் பிரசுரிக்கப்பட்ட தகவல்களுக்கும் இசைவாக இருக்க வேண்டும்.

      ஏன் முக்கியம்?

      கடவுளுடைய வார்த்தையை பிறருக்கு கற்பிப்பது ஒரு பொறுப்புள்ள வேலை. எல்லாரும் “சத்தியத்தை அறிகிற [“திருத்தமான,” NW] அறிவை அடைய” வேண்டும் என்பதே அவருடைய சித்தம். (1 தீ. 2:3, 4) ஆகவே, கடவுளுடைய வார்த்தையை கற்பிப்பது நம்முடைய உத்தரவாதம்.

      மற்றவர்களுக்கு கற்பிக்கும்போது பைபிளிலிருந்து வசனங்களை வெறுமனே வாசித்தால் மட்டும் போதாது. அப்போஸ்தலன் பவுல் தன்னுடைய தோழனாகிய தீமோத்தேயுவுக்கு இவ்வாறு எழுதினார்: ‘நீ வெட்கப்படாத ஊழியக்காரனாயும் சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்துப் போதிக்கிறவனாயும் [“சரியாக பயன்படுத்துகிறவனாயும்,” NW] உன்னை தேவனுக்கு முன்பாக உத்தமனாக நிறுத்தும்படி ஜாக்கிரதையாயிரு.’​—2 தீ. 2:15.

      வசனங்களுக்கு நாம் தரும் விளக்கம் பைபிள் கற்பிக்கிறதற்கு இசைவாக இருக்க வேண்டும் என்பதை இது அர்த்தப்படுத்துகிறது. நமக்குப் பிடித்த வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து நம்முடைய சொந்த கருத்துக்களை சேர்த்து சொல்வதற்குப் பதிலாக, வசனத்தின் சூழமைவை (context) கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். யெகோவாவின் வாயிலிருந்து வரும் வார்த்தைகளைப் பேசுவதாக உரிமைபாராட்டிக் கொண்டு, ‘தாங்கள் யூகித்த தரிசனத்தையே’ சொன்ன தீர்க்கதரிசிகளை எரேமியா தீர்க்கதரிசியின் மூலம் யெகோவா எச்சரித்தார். (எரே. 23:16) மனித தத்துவங்களால் கடவுளுடைய வார்த்தையை களங்கப்படுத்துவதற்கு எதிராக கிறிஸ்தவர்களை அப்போஸ்தலன் பவுல் எச்சரித்தார். அவர் இவ்வாறு எழுதினார்: “மக்கள் மறைவாகச் செய்யும் வெட்கக் கேடான செயல்களை நாங்கள் தவிர்த்து விட்டோம். எங்கள் நடத்தையில் சூழ்ச்சி என்பதே இல்லை. கடவுளுடைய வார்த்தையை நாங்கள் திரித்துக் கூறுவதில்லை [“கலப்படம் செய்வதில்லை,” NW].” அந்தக் காலத்தில் திராட்சரசம் விற்கும் நேர்மையற்ற வியாபாரிகள் அதிக பணம் சம்பாதிப்பதற்காக அதில் கலப்படம் செய்தார்கள். நாமோ கடவுளுடைய வார்த்தையில் மனித தத்துவங்களை சேர்த்து கலப்படம் செய்வதில்லை. “நாங்கள் கடவுளின் வார்த்தையை மலிவுச் சரக்காகக் கருதும் பலரைப் போன்றவர்கள் அல்ல. மாறாக, கிறிஸ்துவோடு இணைந்துள்ள நாங்கள் கடவுளால் அனுப்பப்பட்டவர்கள் என்னும் முறையில் அவர் முன்னிலையில் நேர்மையோடு பேசுபவர்கள்” என பவுல் கூறினார்.​—2 கொ. 2:17; 4:2; பொ.மொ.

      சில சமயங்களில், ஒரு நியமத்தை வலியுறுத்திக் காட்டுவதற்கு ஒரு வசனத்தை நீங்கள் மேற்கோள் காட்டலாம். பல்வேறு சூழ்நிலைகளை சமாளிப்பதற்கு நல்வழி காட்டும் நியமங்கள் பைபிளில் ஏராளம் உள்ளன. (2 தீ. 3:16, 17) ஆனால் ஒரு வசனத்தை நீங்கள் பொருத்திக் காண்பிப்பது சரி என்பதையும், உங்களுடைய விருப்பத்திற்கு இசைவாக அதை தவறாக பயன்படுத்தவில்லை என்பதையும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். (சங். 91:11, 12; மத். 4:5, 6) வசனங்களைப் பொருத்துவது யெகோவாவின் நோக்கத்திற்கு இசைவாக, அவருடைய வார்த்தை முழுவதற்கும் ஒத்ததாக இருக்க வேண்டும்.

      ‘சத்திய வசனத்தை சரியாக பயன்படுத்துவது’ என்பது பைபிளின் உட்கருத்தைப் புரிந்துகொள்வதையும் உட்படுத்துகிறது. மற்றவர்களை அடிப்பதற்கு அது ஒரு “தடி” அல்ல. இயேசு கிறிஸ்துவை எதிர்த்த மத போதகர்கள் வேதவசனங்களிலிருந்து மேற்கோள் காண்பித்தனர், ஆனால் கடவுள் எதிர்பார்க்கும் மிக முக்கியமான விஷயங்களுக்கு​—நீதி, இரக்கம், உண்மைத்தன்மை ஆகியவற்றை உட்படுத்துகிற விஷயங்களுக்கு​—தங்களுடைய கண்களை மூடிக்கொண்டனர். (மத். 22:23, 24; 23:23, 24) கடவுளுடைய வார்த்தையை கற்பிக்கும்போது இயேசு தமது பிதாவின் குணங்களை பிரதிபலித்தார். இயேசுவுக்கு சத்தியத்தின் மீது வைராக்கியமும் மக்கள் மீது ஆழ்ந்த அன்பும் இருந்தது. நாம் அவருடைய முன்மாதிரியைப் பின்பற்றுவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.​—மத். 11:28.

      ஒரு வசனத்தை சரியாக பயன்படுத்துகிறோம் என்பதை நாம் எவ்வாறு உறுதிப்படுத்திக் கொள்ளலாம்? தவறாமல் பைபிள் வாசிப்பது உதவும். விசுவாச குடும்பத்தாருக்கு ஆவிக்குரிய உணவை வழங்க ஆவியால் அபிஷேகம் செய்யப்பட்ட “உண்மையும் விவேகமுமுள்ள அடிமை”யினரை யெகோவா தந்திருப்பதற்கு நாம் போற்றுதல் காண்பிப்பதும் அவசியம். (மத். 24:45, NW) உண்மையும் விவேகமுமுள்ள அடிமை வகுப்பார் வாயிலாக கொடுக்கப்படும் அறிவுரையிலிருந்து பயன் பெறுவதற்கு, தனிப்பட்ட படிப்பும் சபைக் கூட்டங்களில் தவறாமல் கலந்துகொண்டு பங்குபெறுவதும் நமக்கு உதவி செய்யும்.

      வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தை நன்கு உபயோகிக்க கற்றுக்கொண்டால், ஊழியத்தில் அடிக்கடி பயன்படுத்தப்படும் நூற்றுக்கணக்கான வசனங்களை உங்களால் சரியாக பொருத்திக் காட்ட முடியும். பழக்கமில்லாத ஒரு வசனத்தை உபயோகிக்க திட்டமிட்டால், சத்திய வார்த்தையை சரியாக பயன்படுத்துவதற்கு மனத்தாழ்மையுடன் ஆராய்ச்சி செய்யுங்கள்.​—நீதி. 11:2.

      தெளிவாக பொருத்திக் காட்டுங்கள். மற்றவர்களுக்கு கற்பிக்கும்போது, பொருளுக்கும் பயன்படுத்தும் வசனத்திற்கும் இடையே உள்ள தொடர்பை அவர்கள் தெளிவாக புரிந்துகொள்கிறார்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் ஒரு கேள்வி கேட்டு பின்பு ஒரு வசனத்திற்கு கவனத்தைத் திருப்பினால், அந்தக் கேள்விக்கு அந்த வசனம் எப்படி பதிலளிக்கிறது என்பதை செவிசாய்ப்பவர் புரிந்துகொள்ள வேண்டும். நீங்கள் சொல்லும் ஏதாவதொரு கூற்றுக்கு ஆதாரமாக அந்த வசனத்தைப் பயன்படுத்தினால், அந்தக் கூற்றை அந்த வசனம் எப்படி நிரூபிக்கிறது என்பதை மாணாக்கர் தெளிவாக புரிந்துகொள்கிறாரா என நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள்.

      பொதுவாக, வசனத்தை வெறுமனே வாசிப்பது​—அழுத்தம் கொடுத்து வாசிப்பதும்கூட​—போதாது. ஒரு சராசரி நபர் பைபிளோடு பழக்கப்படாதவராக இருக்கிறார் என்பதையும் வசனத்தை வாசித்த மாத்திரத்திலேயே அதன் கருத்தை கிரகித்துக்கொள்ள மாட்டார் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். அந்த வசனத்தில் நீங்கள் விவாதிக்கும் விஷயத்தோடு நேரடியாக பொருந்துகிற பாகத்திற்கு கவனத்தைத் திருப்புங்கள்.

      இதற்கு பொதுவாக முக்கிய வார்த்தைகளை, விவாதிக்கப்படும் குறிப்புக்கு நேரடியாக தொடர்புடைய வார்த்தைகளை நீங்கள் தனிப்படுத்திக் காட்ட வேண்டும். கருத்தாழமிக்க வார்த்தைகளை மீண்டும் சொல்வதே மிகவும் எளிய வழி. நீங்கள் ஒருவரிடம் பேசிக்கொண்டிருந்தால், முக்கிய வார்த்தைகளை கண்டுகொள்ள உதவும் கேள்விகளை அவரிடம் கேட்கலாம். ஒரு தொகுதியினரிடம் பேசும்போது, நேர்ப்பதங்களை (synonyms) பயன்படுத்துவதன் மூலமோ அல்லது அந்தக் கருத்தை மீண்டும் சொல்வதன் மூலமோ பேச்சாளர்கள் சிலர் தங்களுடைய நோக்கத்தை அடைய விரும்புகிறார்கள். என்றபோதிலும், நீங்கள் இப்படி செய்யும்போது, விவாதிக்கப்படும் குறிப்புக்கும் வசனத்திலுள்ள வார்த்தைகளுக்கும் இடையே உள்ள தொடர்பை சபையார் விட்டுவிடாதவாறு கவனமாயிருங்கள்.

      முக்கிய வார்த்தைகளை தனிப்படுத்திக் காட்டுவதன் மூலம் நீங்கள் ஒரு நல்ல அஸ்திவாரத்தை போடுகிறீர்கள். இப்பொழுது அதன்மீது நியாயவிவாதத்தை கட்டுங்கள். நீங்கள் ஒரு வசனத்தைப் பயன்படுத்துவதற்குரிய காரணத்தை தெளிவாக சுட்டிக்காட்டி அதை அறிமுகப்படுத்தினீர்களா? அப்படியானால், எதை எதிர்பார்க்கும்படி சபையாரை தூண்டினீர்களோ அதற்கும் நீங்கள் சிறப்பித்துக் காட்டிய வார்த்தைகளுக்கும் உள்ள தொடர்பை சுட்டிக்காட்டுங்கள். அந்தத் தொடர்பு என்ன என்பதை தெளிவாக கூறுங்கள். இதுபோன்ற தெளிவான ஓர் அறிமுகத்தை அந்த வசனத்திற்கு நீங்கள் பயன்படுத்தாவிட்டாலும்கூட, பிற்பாடு அந்த வசனத்தை ஓரளவுக்காவது தெளிவுபடுத்துவது அவசியம்.

      சிக்கலான கேள்வி என தாங்கள் நினைத்த ஒன்றை பரிசேயர்கள் இயேசுவிடம் கேட்டார்கள்; அதாவது, “புருஷனானவன் தன் மனைவியை எந்த முகாந்தரத்தினாலாகிலும் தள்ளிவிடுவது நியாயமா”? என்றார்கள். ஆதியாகமம் 2:24-ஐ அடிப்படையாக வைத்து இயேசு பதிலளித்தார். அதில் ஒரு பாகத்திற்கு மட்டுமே கவனத்தை ஒருமுகப்படுத்தி, பின்பு தேவையான பொருத்தத்தை செய்தார் என்பதை கவனியுங்கள். கணவனும் மனைவியும் “ஒரே மாம்சமாயிருக்கிறார்கள்” என்பதை சுட்டிக்காட்டி, இயேசு இவ்வாறு கூறி முடித்தார்: “ஆகையால், தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன்.”​—மத். 19:3-6.

      ஒரு வசனத்தை தெளிவாக பொருத்திக் காட்டுவதற்கு நீங்கள் எவ்வளவு விளக்கம் கொடுக்க வேண்டும்? உங்களுடைய சபையாரைப் பொறுத்தும் விவாதிக்கப்படும் குறிப்பின் முக்கியத்துவத்தைப் பொறுத்தும் இதை தீர்மானிக்க வேண்டும். எளிமையாகவும் நேரடியாகவும் பேசுவதை உங்களுடைய குறிக்கோளாக வைத்திருங்கள்.

      வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுங்கள். தெசலோனிக்கேயாவில் அப்போஸ்தலன் பவுல் ஊழியம் செய்கையில், “வேதவாக்கியங்களின் நியாயங்களை எடுத்து” பேசியதாக அப்போஸ்தலர் 17:2, 3 நமக்கு கூறுகிறது. இது, யெகோவாவின் ஊழியர்கள் ஒவ்வொருவரும் வளர்த்துக்கொள்ள வேண்டிய ஒரு திறமை. உதாரணமாக, இயேசுவின் வாழ்க்கை மற்றும் ஊழியத்தைப் பற்றிய உண்மைகளை பவுல் விவரித்தார், இவை எபிரெய வேதாகமத்தில் முன்னுரைக்கப்பட்டிருந்தன என்பதை காண்பித்தார், பின்பு “நான் உங்களுக்கு அறிவிக்கிற இந்த இயேசுவே கிறிஸ்து” என சொல்வதன் மூலம் வலிமைமிக்க முடிவுரையை வழங்கினார்.

      எபிரெயருக்கு எழுதியபோது, பவுல் அடிக்கடி எபிரெய வேதாகமத்திலிருந்து மேற்கோள் காண்பித்தார். ஒரு குறிப்பை வலியுறுத்துவதற்கு அல்லது தெளிவாக்குவதற்கு ஒரு வார்த்தையையோ சிறிய சொற்றொடரையோ தனிப்படுத்தி பிற்பாடு அதன் முக்கியத்துவத்தைக் காட்டினார். (எபி. 12:26, 27) எபிரெயர் 3-⁠ம் அதிகாரத்திலுள்ள விவரப்பதிவில், சங்கீதம் 95:7-11-லிருந்து பவுல் மேற்கோள் காட்டினார். பின்பு அதிலுள்ள மூன்று பாகங்களை விரிவாக்கியதை கவனியுங்கள்: (1) இருதயம் (எபி. 3:8-12), (2) “இன்று” என்ற வார்த்தையின் முக்கியத்துவம் (எபி. 3:7, 13-15; 4:6-11), (3) “என்னுடைய இளைப்பாறுதலில் அவர்கள் பிரவேசிப்பதில்லை” என்ற கூற்றின் அர்த்தம் (எபி. 3:11, 18, 19; 4:1-11). ஒவ்வொரு வசனத்தைப் பொருத்தும்போதும் இந்த முன்மாதிரியைப் பின்பற்ற முயலுங்கள்.

      லூக்கா 10:25-27-ல் காணப்படும் பதிவில், இயேசு திறம்பட்ட முறையில் வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசியதை கவனியுங்கள். நியாயப்பிரமாணத்தில் தேர்ச்சிபெற்ற ஒருவன் அவரிடத்தில் இவ்வாறு கேட்டான்: “போதகரே, நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக் கொள்ளும்படிக்கு நான் என்ன செய்ய வேண்டும்”? இந்த விஷயத்தின் பேரில் முதலில் அவனுடைய கருத்தை இயேசு கேட்டார், அதன் பின்பு கடவுளுடைய வார்த்தை சொல்வதை செய்வதன் முக்கியத்துவத்தை இயேசு வலியுறுத்தினார். அந்த மனிதன் அக்குறிப்பை கவனிக்கத் தவறியது தெளிவாக தெரிந்தபோது, அந்த வசனத்திலிருந்து ஒரேவொரு வார்த்தையை​—‘அயலான்’ என்ற வார்த்தையை​—பற்றியே இயேசு விரிவாக பேசினார். வெறுமனே அந்த வார்த்தையை விளக்குவதற்குப் பதிலாக, அந்த மனிதனே சரியான முடிவுக்கு வர ஓர் உவமையை பயன்படுத்தினார்.

      கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போது, நேரடியான, சந்தேகத்திற்கு இடமற்ற பதிலை தருகிற வசனங்களை இயேசு வெறுமனே மேற்கோள் காண்பிக்கவில்லை என்பது தெளிவாக தெரிகிறது. அவற்றை சரியாக பகுத்துணர்ந்து, அதன்பின் கேட்கப்பட்ட கேள்விக்குப் பொருத்திக் காட்டினார்.

      சதுசேயர்கள் உயிர்த்தெழுதல் நம்பிக்கையை எதிர்த்து கேள்வி கேட்டபோது, யாத்திராகமம் 3:6-ல் காணப்படும் குறிப்பிட்ட ஒரு பகுதிக்கே இயேசு கவனத்தை ஒருமுகப்படுத்தினார். ஆனால் அவர் அந்த வசனத்தை மேற்கோள் காட்டியதோடு விட்டுவிடவில்லை. உயிர்த்தெழுதல் கடவுளுடைய நோக்கத்தின் பாகம் என்பதை தெளிவாக காண்பிப்பதற்கு அதன் பேரில் நியாயங்காட்டிப் பேசினார்.​—மாற். 12:24-27.

      நீங்கள் திறமை வாய்ந்த போதகராவதற்கு, வேதவசனங்களிலிருந்து திருத்தமாகவும் திறம்படவும் நியாயங்காட்டிப் பேசுவதில் வல்லவர்களாவது இன்றியமையாதது.

      இத்திறமையை வளர்த்துக்கொள்வது எப்படி

      • தவறாமல் பைபிள் வாசியுங்கள். காவற்கோபுரம் பத்திரிகையை கவனமாக படியுங்கள், சபைக் கூட்டங்களுக்கு நன்றாக தயாரியுங்கள்.

      • நீங்கள் பயன்படுத்த திட்டமிடும் எந்தவொரு வசனத்திலுள்ள வார்த்தைகளின் அர்த்தத்தையும் அறிந்திருக்கிறீர்களா என்பதை நிச்சயப்படுத்திக் கொள்ளுங்கள். அது என்ன சொல்கிறதோ அதை சரியாக புரிந்துகொள்வதற்கு அந்த வசனத்தை கவனமாக வாசியுங்கள்.

      • நமது கிறிஸ்தவ பிரசுரங்களில் ஆராய்ச்சி செய்வதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

      பயிற்சி: 2 பேதுரு 3:7 எதை அர்த்தப்படுத்துகிறது என்பதன் பேரில் நியாயங்காட்டிப் பேசுங்கள். இந்தப் பூமி அக்கினியால் அழிக்கப்படும் என அது நிரூபிக்கிறதா? (“பூமி” என்ற வார்த்தையை விளக்கும்போது, ‘வானங்கள்’ என்பது எதை அர்த்தப்படுத்துகிறது என்பதையும் ஆராயுங்கள். “பூமி”யை அடையாள அர்த்தத்தில் பயன்படுத்தலாம் என்பதை எந்த வசனங்கள் காட்டுகின்றன? 7-ம் வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, யார் அல்லது எது உண்மையில் அழிக்கப்படும்? 5-ம் மற்றும் 6-ம் வசனங்களில் கூறப்பட்டுள்ளபடி, நோவாவின் நாளில் சம்பவித்ததோடு இது எவ்வாறு ஒத்திருக்கிறது?)

  • நடைமுறைப் பயனை தெளிவுபடுத்துதல்
    தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள்
    • படிப்பு 23

      நடைமுறைப் பயனை தெளிவுபடுத்துதல்

      நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

      நீங்கள் பேசும் பொருள் எவ்வாறு தங்கள் வாழ்க்கையை பாதிக்கிறது அல்லது அதை எவ்வாறு பயன்தரும் விதத்தில் உபயோகிப்பது என்பதைப் புரிந்துகொள்ள சபையாருக்கு உதவுங்கள்.

      ஏன் முக்கியம்?

      நீங்கள் சொல்கிற விஷயத்தின் நடைமுறைப் பயனை ஆட்கள் உணரவில்லையென்றால் தங்களுக்கு ஆர்வமில்லை என சொல்லிவிடலாம், அல்லது மனதை அலைபாயவிட்டு செவிசாய்ப்பதை நிறுத்திவிடலாம்.

      நீங்கள் தனிப்பட்ட நபரிடம் பேசினாலும்சரி பெரும் கூட்டத்தாரிடம் பேசினாலும்சரி, நீங்கள் பேசப்போகும் விஷயத்தில் உங்களுக்கு ஆர்வம் இருப்பதால் கேட்போரும் ஆர்வம் காட்டுவார்கள் என நினைத்துக்கொள்வது ஞானமற்றது. உங்களுடைய செய்தி முக்கியம்தான், ஆனால் அதன் நடைமுறைப் பயனை நீங்கள் தெளிவுபடுத்த தவறினால், கூட்டத்தாருடைய ஆர்வத்தை ஒருவேளை அதிக நேரத்திற்கு ஈர்த்துப்பிடிக்க முடியாது.

      ராஜ்ய மன்றத்தில் கூடிவந்திருப்போருடைய விஷயத்திலும் இதுவே உண்மை. இதுவரை கேள்விப்படாத ஓர் உவமையையோ அனுபவத்தையோ நீங்கள் பயன்படுத்தும்போது, அவர்கள் உங்களுக்குச் செவிகொடுக்கலாம். ஆனால் அவர்களுக்கு ஏற்கெனவே தெரிந்த ஒரு பொருளில் பேசிக்கொண்டிருக்கும்போது, முக்கியமாக நீங்கள் அதை விரிவாக்கத் தவறும்போது, அவர்கள் செவிசாய்ப்பதை நிறுத்திவிடலாம். நீங்கள் சொல்வது ஏன், எப்படி உண்மையிலேயே அவர்களுக்கு பயனுள்ளது என்பதைப் புரிந்துகொள்ள உதவி செய்ய வேண்டும்.

      நடைமுறையான வழிகளில் யோசித்துப் பார்க்கும்படி பைபிள் நம்மை உற்சாகப்படுத்துகிறது. (நீதி. 3:21, NW) ஜனங்களை ‘நீதிமான்களுடைய நடைமுறையான ஞானத்திற்கு’ வழிநடத்த முழுக்காட்டுபவனாகிய யோவானை யெகோவா பயன்படுத்தினார். (லூக். 1:17, NW) இதுவே யெகோவாவுக்கு காண்பிக்கும் ஆரோக்கியமான பயத்தில் வேரூன்றிய ஞானம். (சங். 111:10) இந்த ஞானத்தை மதித்துணருகிறவர்கள் இப்பொழுது வாழ்க்கையை வெற்றிகரமாக சமாளிப்பதற்கும் வரப்போகும் நித்திய ஜீவனாகிய மெய் வாழ்வை பற்றிக்கொள்வதற்கும் உதவி செய்யப்படுகிறார்கள்.​—1 தீ. 4:8; 6:19, NW.

      பேச்சை நடைமுறையாக்குதல். உங்களுடைய பேச்சு நடைமுறையாக இருக்க வேண்டுமென்றால், தகவலை மட்டுமல்ல, சபையாரையும் கவனமாக சிந்தித்துப் பார்க்க வேண்டும். அவர்களை வெறும் ஒரு தொகுதியாக நினைக்காதீர்கள். அந்தத் தொகுதி தனிநபர்களாலும் குடும்பங்களாலும் ஆனது. அங்கே சிறுவர்களும், பருவவயதினரும், வயதுவந்தவர்களும், முதியவர்களும் இருக்கலாம். புதிதாக அக்கறை காட்டுபவர்களும், நீங்கள் பிறப்பதற்கு முன்பே யெகோவாவை சேவிக்க ஆரம்பித்தவர்களும் இருக்கலாம். சிலர் ஆவிக்குரிய விதத்தில் முதிர்ச்சி வாய்ந்தவர்களாக இருக்கலாம்; வேறு சிலரோ இன்னும் இந்த உலகத்தின் மனப்பான்மைகளாலும் பழக்க வழக்கங்களாலும் பலமாக செல்வாக்கு செலுத்தப்படுகிறவர்களாக இருக்கலாம். உங்களையே இவ்வாறு கேட்டுக்கொள்ளுங்கள்: ‘நான் பேசப்போகும் விஷயம் எவ்வாறு சபையில் இருப்பவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கலாம்? குறிப்பை புரிந்துகொள்வதற்கு நான் எப்படி அவர்களுக்கு உதவி செய்யலாம்?’ இங்கே குறிப்பிடப்பட்டுள்ள ஓரிரண்டு தொகுதியினருக்கு மட்டுமே நீங்கள் ஒருவேளை முக்கிய கவனம் செலுத்த தீர்மானிக்கலாம். ஆனால் மற்றவர்களை அடியோடு மறந்துவிடாதீர்கள்.

      அடிப்படை பைபிள் போதனையைப் பற்றி பேசுவதற்கு நீங்கள் நியமிக்கப்பட்டிருந்தால் என்ன செய்யலாம்? இந்தப் போதனையை ஏற்கெனவே நம்புகிற சபையாருக்கு பயன்தரும் விதத்தில் எப்படி பேசலாம்? அதில் அவர்களுடைய நம்பிக்கையை மேலும் பலப்படுத்துவதற்கு முயலுங்கள். எப்படி? அதை ஆதரிக்கும் வேதப்பூர்வ அத்தாட்சியின் பேரில் நியாயங்காட்டிப் பேசுவதன் மூலமாகும். அந்த பைபிள் போதனையின் மீது அவர்களுடைய போற்றுதலை அதிகமாக்குவதற்கும் நீங்கள் உதவலாம். இந்தப் போதனை எவ்வாறு பைபிளில் உள்ள மற்ற சத்தியங்களோடும் யெகோவாவின் ஆள்தன்மையோடும் ஒத்திருக்கிறது என்பதை காண்பிப்பதன் மூலம் இதைச் செய்யலாம். குறிப்பிட்ட இந்தப் போதனையை புரிந்துகொண்டதால் மக்கள் எவ்வாறு பயனடைந்திருக்கிறார்கள், அதனால் எதிர்காலத்தைப் பற்றிய அவர்களுடைய நோக்குநிலை எவ்வாறு மாறியிருக்கிறது என்பதை காட்டுகிற உதாரணங்களை​—முடிந்தால் நிஜ வாழ்க்கை அனுபவங்களை​—பயன்படுத்துங்கள்.

      நடைமுறை பொருத்தத்தை உங்களுடைய பேச்சின் முடிவில் சுருக்கமாக சொல்வதோடு நிறுத்திக் கொள்ளாதீர்கள். ஆரம்பத்திலிருந்தே சபையார் ஒவ்வொருவரும் “இது எனக்குப் பொருந்துகிறது” என உணரும் விதத்தில் அந்தப் பேச்சு இருக்க வேண்டும். இந்த அஸ்திவாரத்தைப் போட்ட பிறகு, பேச்சின் பொருளுரையில் ஒவ்வொரு முக்கிய குறிப்பை விரிவாக்கும்போதும் முடிவுரையிலும் நடைமுறை பொருத்தத்தை தொடர்ந்து காண்பியுங்கள்.

      அவ்வாறு பொருத்துவது பைபிள் நியமங்களுக்கு இசைவாக இருக்க வேண்டும். இது எதை அர்த்தப்படுத்துகிறது? அன்பையும் அனுதாபத்தையும் காட்டுவதை அர்த்தப்படுத்துகிறது. (1 பே. 3:8; 1 யோ. 4:8) அப்போஸ்தலன் பவுல் தெசலோனிக்கேயாவில் பெரும் பிரச்சினைகளை கையாண்டபோதும்கூட, அங்கிருந்த கிறிஸ்தவ சகோதர சகோதரிகளின் ஆவிக்குரிய முன்னேற்றத்தைப் பற்றிய நம்பிக்கையூட்டும் அம்சங்களையே சிறப்பித்துக் காட்டினார். அப்பொழுது விவாதிக்கப்பட்ட விஷயத்தைக் குறித்ததிலும் அவர்கள் சரியானதை செய்யவே விரும்புவார்கள் என்ற தன்னுடைய நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார். (1 தெ. 4:1-12) பின்பற்றுவதற்கு எப்பேர்ப்பட்ட சிறந்த முன்மாதிரி!

      நற்செய்தியை பிரசங்கிப்பதிலும் போதிப்பதிலும் ஈடுபடும்படி உந்துவிப்பதே உங்கள் பேச்சின் குறிக்கோளா? அப்படியானால் இந்தச் சிலாக்கியத்திற்காக ஆர்வத்தையும் போற்றுதலையும் வளருங்கள். ஆனால் அப்படி செய்கையில், இதில் ஒருவர் எந்தளவு பங்குகொள்ள முடியும் என்பது ஆளுக்கு ஆள் வித்தியாசப்படுகிறது என்பதை மனதிற்கொள்ளுங்கள், பைபிளும் இதை கவனத்தில் எடுத்துக்கொள்கிறது. (மத். 13:23) உங்களுடைய சகோதரர்களை குற்றவுணர்வால் பாரமாக்காதீர்கள். “அன்பு செலுத்தவும் நற்செயல்கள் புரியவும் ஒருவரையொருவர் தூண்டியெழுப்”பும்படி எபிரெயர் 10:24 (பொ.மொ.) நம்மை உந்துவிக்கிறது. அன்பு செலுத்துவதற்கு நாம் சகோதரர்களை தூண்டினால், நல்நோக்கத்தின் அடிப்படையில் நற்செயல்களை செய்வார்கள். அதிகாரத்தால் இணங்க வைப்பதற்குப் பதிலாக, “விசுவாசத்தினால் கீழ்ப்படியும்படி” உந்துவிக்கவே யெகோவா விரும்புகிறார் என்பதை உணர்ந்துகொள்ளுங்கள். (ரோ. 16:26, NW) இதை மனதில் வைத்து, நம்முடைய விசுவாசத்தையும் பிறருடைய விசுவாசத்தையும் பலப்படுத்த விரும்புகிறோம்.

      நடைமுறைப் பயனை காண பிறருக்கு உதவுதல். நீங்கள் பிறருக்கு சாட்சி கொடுக்கும்போது, நற்செய்தியின் நடைமுறைப் பயனை சிறப்பித்துக் காட்ட தவறாதீர்கள். அப்படி செய்வதற்கு உங்களுடைய பிராந்தியத்திலுள்ள மக்களின் மனதில் என்ன இருக்கிறது என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். இதை நீங்கள் எப்படி கண்டுபிடிக்கலாம்? ரேடியோ, டெலிவிஷன் செய்திகளை கேளுங்கள். செய்தித்தாளின் முதல் பக்கத்தை நோட்டமிடுங்கள். அதோடு, மக்களை உரையாடலில் உட்படுத்த முயலுங்கள், பின்பு அவர்கள் பேசும்போது செவிகொடுத்துக் கேளுங்கள். நெருக்கடியான பிரச்சினைகளோடு​—வேலையை இழந்துவிடுதல், வாடகை கட்டுதல், வியாதி, குடும்பத்தில் மரணம், குற்றச்செயல்களால் வரும் ஆபத்து, அதிகாரிகளின் அநீதி, திருமண முறிவு, பிள்ளைகளை வளர்த்தல், இன்னும் இதுபோன்ற பிற பிரச்சினைகளோடு—அவர்கள் போராடிக் கொண்டிருப்பதை நீங்கள் காணலாம். பைபிள் அவர்களுக்கு உதவி செய்ய முடியுமா? நிச்சயமாகவே முடியும்.

      உரையாடலை ஆரம்பிக்கையில், உங்களுடைய மனதில் ஒரு பொருள் இருக்கலாம். இருந்தாலும், உடனடியாக தீர்க்க வேண்டிய சொந்த பிரச்சினை ஏதாவது இருப்பதாக அந்த நபர் சொன்னால், உங்களால் முடிந்தால் அதைப் பற்றி பேச தயங்காதீர்கள், அல்லது பயனுள்ள தகவலோடு பிறகு வந்து சந்திப்பதாக கூறுங்கள். ‘பிறருடைய விஷயங்களில் வீணாய் தலையிடுவதை’ நாம் தவிர்க்கிறோம் என்பது உண்மைதான், ஆனால் பைபிள் தரும் நடைமுறையான அறிவுரைகளை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்வதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். (2 தெ. 3:11, NW) மக்களுடைய மனதை மிகவும் கவருவது அவர்களுடைய சொந்த வாழ்க்கையை தொடுகிற பைபிள் அறிவுரைகளே.

      நம்முடைய செய்தி எவ்வாறு தனிப்பட்ட விதமாக தங்களை பாதிக்கிறது என்பதை ஆட்கள் புரிந்துகொள்ள முடியவில்லையென்றால், அவர்கள் உடனடியாக சம்பாஷணையை முடித்துக்கொள்ளலாம். நம்மை பேசுவதற்கு அவர்கள் அனுமதித்தாலும், சொல்லும் விஷயத்தின் நடைமுறைப் பயனை காண்பிக்க தவறினால், நம்முடைய செய்தி அவர்களுடைய வாழ்க்கையில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. மாறாக, நாம் சொல்லும் செய்தியின் நடைமுறைப் பயனை தெளிவாக காண்பித்தால், நம்முடைய சம்பாஷணை மக்களுடைய வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையாக அமையலாம்.

      பைபிள் படிப்புகள் நடத்தும்போது, நடைமுறைப் பயனை தொடர்ந்து சிறப்பித்துக் காட்டுங்கள். (நீதி. 4:7) யெகோவாவின் வழிகளில் எவ்வாறு நடப்பது என்பதை காட்டுகிற வேதப்பூர்வ அறிவுரை, நியமங்கள், எடுத்துக்காட்டுகள் ஆகியவற்றை மாணாக்கர் புரிந்துகொள்ள உதவுங்கள். அப்படி செய்வதால் வரும் நன்மைகளை வலியுறுத்திக் காட்டுங்கள். (ஏசா. 48:17, 18) இது, மாணாக்கர் தங்களுடைய வாழ்க்கையில் மாற்றங்களை செய்வதற்கு அவர்களைத் தூண்டும். யெகோவாவுக்கான அன்பையும் அவரைப் பிரியப்படுத்த வேண்டும் என்ற ஆவலையும் அவர்களிடம் வளருங்கள்; கடவுளுடைய வார்த்தை தரும் அறிவுரைகளை பின்பற்ற வேண்டும் என்ற உந்துவிப்பு அவர்களுடைய இருதயத்திலிருந்து பிறக்க அனுமதியுங்கள்.

      எப்படி செய்வது

      • ஒரு பேச்சை தயாரிக்கும்போது, அதிலுள்ள தகவலை மட்டுமல்ல உங்களுடைய சபையாரையும் சிந்தித்துப் பாருங்கள். அவர்களுக்கு உண்மையிலேயே பயன்தரும் விதத்தில் அதை அளியுங்கள்.

      • நடைமுறைப் பயனை முடிவுரைக்கு மட்டுமே மட்டுப்படுத்தக் கூடாது. அது உங்களுடைய பேச்சு முழுவதும் தெளிவாக தெரிய வேண்டும்.

      • சாட்சி கொடுப்பதற்கு தயாரிக்கையில் உங்கள் பிராந்தியத்திலுள்ள மக்களை மனதில் வைத்து தயாரியுங்கள்.

      • சாட்சி கொடுக்கும்போது, வீட்டுக்காரர் சொல்வதை உண்மையிலேயே செவிகொடுத்துக் கேட்டு அதற்கேற்ப உங்களுடைய பிரசங்கத்தை மாற்றியமைத்துக் கொள்ளுங்கள்.

      பயிற்சி: உங்கள் கைவசம் இருக்கும் நம் ராஜ்ய ஊழிய பிரதிகளை எடுத்துப் பாருங்கள், முக்கியமாக உங்களுடைய பிராந்தியத்தில் பயன்படுத்துவதற்கு நடைமுறையாக இருக்கும் ஓரிரண்டு பிரசங்கங்களை தேர்ந்தெடுங்கள். அவற்றை உங்களுடைய ஊழியத்தில் பயன்படுத்திப் பாருங்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்