யோசிக்கும் திறன் எப்படி உங்களை பாதுகாக்கலாம்?
மலைபோல் எழுந்து வரும் அலைகள் கண்களுக்கு விருந்தளிக்கும் கண்கொள்ளாக் காட்சி, ஆனால் கப்பலோட்டிகளுக்கோ அவை அபாயத்தை அறிவிக்கும் காட்சி. பொங்கி வரும் தண்ணீர் அவர்களுடைய உயிர்களுக்கு உலை வைக்கலாம்.
அவ்வாறே, மலைபோல் உயர்ந்து வந்து தங்களை மூழ்கடிக்கப்போவது போல் அச்சுறுத்தும் பிரச்சினைகளை கடவுளுடைய ஊழியர்கள் எதிர்ப்படலாம். சோதனை, துன்பம் எனும் அலைகள் ஒன்றன்பின் ஒன்றாக கிறிஸ்தவர்களின்மீது மோதி அவர்களை அமிழ்த்துவதை நீங்கள் அறிந்திருக்கலாம். ஆன்மீக கப்பல் சேதமடையாதிருக்க வேண்டும் என்ற உறுதியுடன் அவற்றையெல்லாம் சமாளிக்க நீங்கள் நிச்சயமாகவே விரும்புவீர்கள். (1 தீமோத்தேயு 1:19) யோசிக்கும் திறன் உங்களுக்கு பாதுகாப்பளிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. யோசிக்கும் திறன் என்றால் என்ன, அதை பெறுவது எப்படி?
“யோசிக்கும் திறன்” என மொழிபெயர்க்கப்பட்டுள்ள மஸிமா என்ற எபிரெய வார்த்தை “திட்டமிடு” என்ற அர்த்தம் தரும் வேர்ச் சொல்லிலிருந்து வருகிறது. (நீதிமொழிகள் 1:4, NW) ஆகவே, சில பைபிள் மொழிபெயர்ப்புகள் மஸிமா என்ற வார்த்தையை “விவேகம்” அல்லது “முன்யோசனை” என மொழிபெயர்க்கின்றன. பைபிள் அறிஞர்கள் ஜேமஸன், ஃபாசெட், பிரௌன் போன்றவர்கள் மஸிமா என்ற வார்த்தையை “தீமையை விட்டுவிலகி நன்மையானதை கண்டடைய உதவும் விழிப்புணர்வு” என விவரிக்கிறார்கள். நம்முடைய நடத்தையால் உடனடியாகவும், பின்னரும் ஏற்படும் விளைவுகளைக் கவனத்தில் வைப்பதை இது அர்த்தப்படுத்துகிறது. யோசிக்கும் திறன் இருந்தால், என்ன செய்வது நல்லதென கவனமாக யோசித்து செயல்படுவோம், அதுவும் முக்கிய தீர்மானங்களை எடுக்க வேண்டியிருக்கையில்.
யோசிக்கும் திறனுடையவர் எதிர்கால அல்லது தற்போதைய சூழ்நிலைகள் சம்பந்தமாக தீர்மானம் எடுக்கையில், முதலாவதாக சாத்தியமான ஆபத்துக்களை அல்லது படுகுழிகளை அலசி ஆராய்கிறார். அவற்றையெல்லாம் அறிந்தபின், தன்னுடைய சூழ்நிலையையும் கூட்டுறவுகளையும் மனதில் வைத்து அவற்றை எப்படி தவிர்க்கலாம் என தீர்மானிக்கிறார். இவ்வாறு, நல்ல பலன்களையும் ஒருவேளை கடவுளுடைய ஆசீர்வாதத்தையும் பெறுகிற விதத்தில் நடந்துகொள்ள அவர் திட்டமிடலாம். இது எப்படியென சில நடைமுறை உதாரணங்கள் மூலமாக நாம் சிந்திக்கலாம்.
பாலியல் ஒழுக்கக்கேடு எனும் கண்ணியைத் தவிருங்கள்
படகின் முன்புறத்தை நோக்கி ராட்சத அலைகளை காற்று தள்ளுகையில் அந்தச் சூழ்நிலை கப்பல் செல்லும் திசைக்கு நேர் எதிராக ஓடும் கடல் (head sea) என விவரிக்கப்படுகிறது. படகின் முன்புறத்தை நோக்கி வரும் அலைகளை கப்பலோட்டிகள் திறமையாக சமாளிக்காவிட்டால் படகு கவிழ்ந்து விடும் ஆபத்தை எதிர்ப்படுவார்கள்.
இப்படிப்பட்ட சூழ்நிலையையே நாமும் எதிர்ப்படுகிறோம்; ஏனெனில் பாலியல் காரியங்கள் ஆக்கிரமித்திருக்கும் உலகில் நாம் வாழ்கிறோம். புலன்களுக்கு இன்பமளிக்கும் கருத்துக்களும் காட்சிகளும் தினம் தினம் நேருக்கு நேர் வந்து மோதுகின்றன. நமது இயல்பான பாலியல் ஆசைகளின் மீது இவை ஏற்படுத்தும் பாதிப்புகளை நாம் பொருட்படுத்தாமல் இருந்துவிட முடியாது. ஆபத்தான சூழ்நிலைகளுள் இழுக்கப்படுவதற்குப் பதிலாக, யோசிக்கும் திறனை பயன்படுத்தி சோதனையை தயங்காமல் சந்திக்க வேண்டும்.
உதாரணமாக, பெண்களை துளியும் மதிக்காமல் அவர்களை செக்ஸ் பாவைகளாக மட்டுமே கருதும் ஆண்களுடன் கிறிஸ்தவ ஆண்கள் பெரும்பாலும் வேலை செய்கிறார்கள். சக பணியாளர்கள் அவ்வப்போது பச்சையாக ஜோக்கடிக்கலாம், இரட்டை அர்த்தமுள்ள ஆபாச வார்த்தைகளை பேசலாம். இந்தச் சூழல் போகப் போக ஒரு கிறிஸ்தவரின் மனதில் ஒழுக்கக்கேடான எண்ணங்களை விதைக்கலாம்.
ஒரு கிறிஸ்தவ பெண்ணும்கூட வெளியில் வேலைக்குச் செல்ல வேண்டியிருக்கலாம்; அதனால் பல கஷ்டங்களையும் எதிர்ப்படலாம். தன்னுடைய ஒழுக்கநெறிகளை மதித்து நடக்காத ஆண்களோடும் பெண்களோடும் அவர் வேலை செய்யலாம். ஒருவேளை அவருடன் வேலை செய்யும் ஆண்களில் ஒருவர் அவரிடம் அக்கறை காட்டலாம். ஆரம்பத்தில் அந்தக் கிறிஸ்தவ பெண்ணிடம் அவர் கரிசனையுடன் நடந்துகொள்ளலாம்; அவருடைய மத கருத்துக்களுக்காகவும் அவருக்கு மதிப்பு கொடுக்கலாம். அவர் எப்போதுமே தன் கண்முன் இருப்பதாலும் எப்போதுமே தன்மீது கண்ணும் கருத்துமாக இருப்பதாலும் அவருடன் நெருங்கிய நட்புறவு கொள்ளும் ஆசை அந்த கிறிஸ்தவ பெண்ணுக்கு ஏற்படலாம்.
இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில், கிறிஸ்தவர்களாக நமக்கு யோசிக்கும் திறன் எப்படி உதவலாம்? முதலாவதாக, இது ஆவிக்குரிய ஆபத்துக்களை நமக்கு உணர்த்தலாம்; இரண்டாவதாக, தகுந்த நடவடிக்கையை எடுக்க திட்டமிடும்படி நம்மை தூண்டலாம். (நீதிமொழிகள் 3:21-23) இது போன்ற சந்தர்ப்பங்களில் நமது வேதப்பூர்வ நம்பிக்கைகளினால் நாம் பின்பற்றும் தராதரங்களே வேறு என்பதை சக பணியாளர்களிடம் தெளிவாக தெரியப்படுத்த வேண்டியிருக்கலாம். (1 கொரிந்தியர் 6:18) நமது சொல்லும் செயலும் அதை தெரியப்படுத்தலாம். அதோடு, சக பணியாட்கள் சிலரிடம் அளவோடு பழகுவது அவசியமாக இருக்கலாம்.
ஆனால் ஒழுக்கங்கெட்ட காரியங்களில் ஈடுபட வழிநடத்தும் சூழ்நிலைகள் வேலை செய்யுமிடங்களில் மட்டுமே ஏற்படுவதில்லை. மண வாழ்வில் தம்பதிகள் தங்களுடைய பந்தத்தை குலைத்துவிடும் பிரச்சினைகளுக்கு இடமளிக்கையில் அங்கேயும் அவை ஏற்படலாம். ஒரு பிரயாண ஊழியர் இவ்வாறு குறிப்பிட்டார்: “மண முறிவு திடீரென நிகழும் காரியமல்ல. தம்பதியினர் கொஞ்சம் கொஞ்சமாக உணர்ச்சி ரீதியில் ஒருவரையொருவர் விட்டுப் பிரியலாம், அவர்கள் அபூர்வமாகவே பேசிக்கொள்ளலாம் அல்லது அபூர்வமாகவே சேர்ந்து நேரம் செலவிடலாம். தங்கள் மண வாழ்வில் ஏற்பட்ட வெறுமையை நிரப்புவதற்கு பொருளுடைமைகளை நாடலாம். அவர்கள் ஒருவருக்கொருவர் பாராட்டி பேசாததால் மற்ற எதிர்பாலாரிடம் வசீகரிக்கப்படலாம்.”
அனுபவசாலியான இந்த ஊழியர் தொடர்ந்து கூறுவதாவது: “தங்கள் உறவுக்கு பங்கம் விளைவிக்கும் காரியம் ஏதாவது உண்டாவென தம்பதியர் இருவரும் சேர்ந்து தவறாமல் சிந்தித்துப் பார்க்க வேண்டும். எப்படி இருவரும் சேர்ந்து படிப்பது, ஜெபிப்பது, ஊழியத்திற்கு செல்வது என திட்டமிட வேண்டும். பெற்றோரும் பிள்ளைகளும் போல இவர்களும் ‘வீட்டிலும், வழியிலும், படுக்கும்போதும், எழுந்திருக்கிறபோதும்’ சேர்ந்து உரையாடுவதன் மூலம் மிகுந்த நன்மை அடைவார்கள்.”—உபாகமம் 6:7-9.
கிறிஸ்தவமற்ற நடத்தையை சமாளித்தல்
யோசிக்கும் திறன், ஒழுக்கம் சம்பந்தப்பட்ட சோதனைகளை வெற்றிகரமாக சந்திக்க உதவுவதோடு, சக கிறிஸ்தவர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை சமாளிப்பதற்கும் நமக்கு உதவலாம். சிலசமயங்களில் படகின் பின்புறத்தில் மோதுமாறு அலைகளை காற்று உந்துகிறது. அதாவது, படகின் அதே திசையில் செல்லும் அலைகளை உருவாக்குகிறது. இந்த அலைகள் படகின் பின்புறத்தை உயர்த்தி அதை பக்கவாட்டில் இழுத்துச் செல்லலாம். இதனால் படகின் அகன்ற பக்கவாட்டு பகுதி அலைகளால் தாக்கப்பட்டு சேதமடையும் நிலைக்கு உள்ளாகிறது.
நாமும்கூட எதிர்பாராத திசையிலிருந்து ஆபத்தை எதிர்ப்படலாம். நாம் உண்மையுள்ள கிறிஸ்தவ சகோதர சகோதரிகள் அநேகருடன் “தோளோடு தோள் நின்று” யெகோவாவை சேவிக்கிறோம். (செப்பனியா 3:9, NW) அவர்களில் ஒருவர் கிறிஸ்தவரைப் போல் நடந்துகொள்ளாதபோது நம் நம்பிக்கை சுக்குநூறானதாக தோன்றலாம், தாங்க முடியாத மனவேதனையையும் ஏற்படுத்தலாம். சமநிலை இழந்து, அளவுக்கு அதிகமாக புண்படுத்தப்படுவதிலிருந்து யோசிக்கும் திறன் நம்மை எப்படி தடுக்கலாம்?
“பாவஞ்செய்யாத மனுஷன் இல்லை” என்பதை நினைவில் வையுங்கள். (1 இராஜாக்கள் 8:46) ஆகவே, சில சமயங்களில் ஒரு கிறிஸ்தவ சகோதரன் நமக்கு எரிச்சலூட்டலாம் அல்லது புண்படுத்தலாம் என்பது நமக்கு அதிர்ச்சி அளிக்கக் கூடாது. இதை அறிந்தவர்களாய் அப்படிப்பட்ட சூழ்நிலைகளை சந்திக்க நம்மை தயார்படுத்திக் கொள்ளலாம்; அப்படிப்பட்ட சூழ்நிலையில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் எனவும் சிந்தித்துப் பார்க்கலாம். கிறிஸ்தவ சகோதரர்கள் சிலர் அப்போஸ்தலன் பவுலை புண்படுத்தும் விதத்திலும் அவமதிக்கும் விதத்திலும் பேசிய போது அவர் எப்படி நடந்துகொண்டார்? அவர் ஆன்மீக சமநிலையை இழக்காமல் மனிதனுடைய அங்கீகாரத்தைவிட கடவுளுடைய அங்கீகாரமே மிக முக்கியம் என்ற முடிவுக்கு வந்தார். (2 கொரிந்தியர் 10:10-18) பிறருடைய செயல்கள் நமக்கு எரிச்சலை ஏற்படுத்துகையில் அவசரப்பட்டு முன்யோசனையின்றி நடந்துகொள்ளாதிருக்க இப்படிப்பட்ட மனநிலை நமக்கு உதவும்.
இது கால் விரலில் அடிபடுவதைப் போன்றது. அந்த சமயத்தில் ஓரிரு நிமிடத்திற்கு நம்மால் சரிவர சிந்திக்க முடியாது. வலி சற்று குறைந்தபின், நம்மால் யோசிக்க முடியும், பழையபடி இயல்பாக நடந்துகொள்வோம். அவ்வாறே நாம் சொல்லாலோ செயலாலோ புண்படுத்தப்பட்டால், உடனடியாக பதிலடி கொடுக்கக்கூடாது. மாறாக சற்று நிதானித்து, யோசனையற்ற விதத்தில் பதிலுக்கு பதில் செய்வதால் வரும் பின்விளைவுகளை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
மிஷனரியாக பல வருடங்கள் சேவை செய்துவரும் மால்கம், புண்படுத்தப்படுகையில் என்ன செய்கிறார் என்பதை விளக்குகிறார். “முதல் காரியமாக செக்-லிஸ்டிலுள்ள கேள்விகளை என்னை நானே கேட்டுக்கொள்கிறேன்: எங்களிடையே முரண்பட்ட குணங்கள் இருப்பதால் நான் இந்த சகோதரனிடம் கோபப்படுகிறேனா? அவர் சொன்னது உண்மையில் முக்கியமானதா? மலேரியாவின் அவஸ்தையால் உணர்ச்சிகள் பாதிக்கப்பட்டு இப்படி மோசமாக நடந்துகொள்கிறேனா? கொஞ்ச நேரத்திற்குப் பின் காரியங்களை நான் வித்தியாசமான கண்ணோட்டத்தில் பார்ப்பேனா?” பெரும்பாலும் கருத்து வேறுபாடுகள் பெரிய விஷயமே இல்லை என்பதை மால்கம் உணர்ந்துகொண்டார்; ஆம், அவை கண்டும் காணாமல் விட்டுவிட வேண்டியவை.a
மால்கம் தொடர்ந்து கூறுவதாவது: “சிலசமயங்களில் இன்னொருவருடன் உள்ள பிரச்சினையை சரிசெய்வதற்கு நான் என்னதான் முயற்சி செய்தாலும் அவர் மசிவதேயில்லை. ஆனால் அதைப் பற்றி கவலைப்படாதிருக்க முயலுகிறேன். என்னாலான அனைத்தையும் செய்த பின்பு அந்த விஷயத்தை நான் வித்தியாசமான கண்ணோட்டத்தில் காண்கிறேன். பிரச்சினையை நான்தான் தீர்க்க வேண்டும் என நினைப்பதற்கு பதிலாக அது காலப்போக்கில் சரியாகிவிடும் என நினைத்து மனதில் ஓரங்கட்டிவிடுகிறேன். ஆவிக்குரிய விதத்தில் அது எனக்கு தீங்கு செய்யவோ, யெகோவாவிடமும் என் சகோதரரிடமும் உள்ள உறவை பாதிக்கவோ இடங்கொடுக்க மாட்டேன்.”
மால்கமைப் போலவே, ஒருவரின் தவறான நடத்தை நம்மை மிதமிஞ்சி அலைக்கழிக்க நாம் இடங்கொடுக்கக் கூடாது. மகிழ்வூட்டுகிற, விசுவாசமுள்ள அநேக சகோதர சகோதரிகள் எல்லா சபைகளிலும் இருக்கிறார்கள். அவர்களுடன் “கூட” கிறிஸ்தவ வழியில் நடப்பது இன்பமானது. (பிலிப்பியர் 1:27) நம் பரலோகத் தகப்பனின் பக்கத்துணை இருப்பதை நினைவில் வைத்திருப்பது, காரியங்களை சரியான கண்ணோட்டத்தில் காணவும் நமக்கு உதவும்.—சங்கீதம் 23:1-3; நீதிமொழிகள் 5:1, 2; 8:12.
உலகத்திலுள்ளவற்றை நேசிக்காதிருத்தல்
யோசிக்கும் திறன், மற்றொரு மறைமுகமான அழுத்தத்தை எதிர்ப்படுவதற்கும் நமக்கு உதவும். சிலசமயங்களில் காற்று, கப்பலின் பக்கவாட்டை நோக்கி அலைகளை தள்ளுகிறது. சாதாரண வானிலையில் இவ்வகை கடல் கப்பலை அது செல்ல வேண்டிய திசையிலிருந்து மெதுவாக திசை திருப்பி விடலாம். புயல் அடிக்கும்போதோ இது கப்பலையே கவிழ்த்து விடலாம்.
அவ்வாறே, இந்தப் பொல்லாத உலகம் தரும் எல்லாவற்றையும் அனுபவிக்கும்படியான அழுத்தத்திற்கு இடங்கொடுத்தால் இந்தப் பொருள் சம்பந்தமான வாழ்க்கை முறை ஆவிக்குரிய பாதையிலிருந்து நம்மை கவிழ்த்துவிடும். (2 தீமோத்தேயு 4:10) உலக ஆசையை நாம் கட்டுப்படுத்தவில்லையென்றால் நாளடைவில் கிறிஸ்தவ வாழ்க்கை போக்கை அறவே விட்டுவிலகிவிடும் நிலைக்கு ஆளாவோம். (1 யோவான் 2:15) இந்த விஷயத்தில் யோசிக்கும் திறன் நமக்கு எப்படி கைகொடுக்கலாம்?
முதலாவதாக, என்னென்ன அபாயங்களை நாம் எதிர்ப்படலாம் என்பதை கணக்கிட்டுப் பார்க்க இது நமக்கு உதவும். நம்மை கவர்ந்திழுப்பதற்கு சாத்தியமான எல்லா வித வியாபார தந்திரங்களையும் இந்த உலகம் பயன்படுத்துகிறது. அனைவராலும் அங்கீகரிக்கப்படுவதாக தோன்றும் வாழ்க்கை முறையை—பணக்காரர்களின், கவர்ச்சி மாடல்களின், “வெற்றி திலகங்களின்” ஆடம்பர வாழ்க்கையை—நாடும்படி அது தொடர்ந்து தூண்டுவிக்கிறது. (1 யோவான் 2:16) எல்லாரும், முக்கியமாக நண்பர்களும் அக்கம்பக்கத்தாரும் போற்றிப் பாராட்டுவார்கள், ஏற்றுக்கொள்வார்கள் என நமக்கு உறுதியளிக்கிறது. இந்த விளம்பரத்தை எதிர்த்து சமாளிப்பதற்கு யோசிக்கும் திறனே நமக்கு உதவும்; “பண ஆசையில்லாதவர்களாய் நடந்து” கொள்வதன் முக்கியத்துவத்தை அது நமக்கு உணர்த்துகிறது. ஏனெனில் யெகோவா ‘நம்மை விட்டு விலகுவதில்லை’ என வாக்குறுதி அளித்திருக்கிறார்.—எபிரெயர் 13:5.
இரண்டாவதாக, ‘சத்தியத்தை விட்டு விலகியவர்களை’ பின்பற்றுவதிலிருந்து யோசிக்கும் திறன் நம்மை தடுக்கும். (2 தீமோத்தேயு 2:18) நம் பாசத்திற்கும் நம்பிக்கைக்கும் பாத்திரமாக இருந்தவரைப் பின்பற்றாதிருப்பது மிகவும் கடினம். (1 கொரிந்தியர் 15:12, 32-34) கிறிஸ்தவ வாழ்க்கை முறையை உதறித்தள்ளியவர்கள் நம்முடன் ஓரளவுக்கு ஒட்டுறவு வைத்திருந்தாலும் அது நம் ஆவிக்குரிய முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக இருந்து நாளடைவில் நம்மை ஆபத்திற்குள்ளாக்கலாம். சரியான போக்கிலிருந்து சற்றே பிசகிவிடும் ஒரு கப்பலைப் போல நாமும் ஆகிவிடலாம். இறுதியில், அது போய் சேர வேண்டிய இடத்திலிருந்து வெகு தூரம் விலகிச் சென்றுவிடலாம்.—எபிரெயர் 3:12.
நம் ஆவிக்குரிய நிலை என்ன, எதிர்காலத்தில் நம் ஆவிக்குரிய நிலை என்னவாக இருக்கும் என்பவற்றை தெள்ளத் தெளிவாக அறிந்துகொள்வதற்கு யோசிக்கும் திறன் நமக்கு உதவும். கிறிஸ்தவ நடவடிக்கைகளில் முழுமையாக பங்குகொள்வதன் அவசியத்தை நாம் ஒருவேளை அறிந்திருக்கலாம். (எபிரெயர் 6:11, 12) ஆவிக்குரிய இலக்குகளை நாடுவதில் ஓர் இளம் யெகோவாவின் சாட்சி தன்னுடைய யோசிக்கும் திறனை பயன்படுத்திய விதத்தைக் கவனியுங்கள்: “ஜர்னலிஸ்ட்டாக பணிபுரியும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அது உண்மையிலேயே எனக்கு பிடித்தமான வேலையாகத்தான் இருந்தது, ஆனால் ‘உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்’ என்ற பைபிள் வசனம் என் ஞாபகத்திற்கு வந்தது. (1 யோவான் 2:17) என்னுடைய வாழ்க்கை என் நம்பிக்கைகளைப் படம்பிடித்துக் காட்டுவதாக இருக்க வேண்டும் என நான் முடிவு செய்தேன். என் பெற்றோர் கிறிஸ்தவ விசுவாசத்தை புறக்கணித்திருந்தார்கள், நானோ அவர்களுடைய மாதிரியை பின்பற்ற விரும்பவில்லை. ஆகவே நோக்கமுள்ள வாழ்க்கையை வாழ தீர்மானித்து, முழுநேர ஊழியத்தில் அடியெடுத்து வைத்து ஓர் ஒழுங்கான பயனியரானேன். திருப்திகரமான நான்கு வருட சேவைக்குப்பின், நான் சரியான தெரிவையே செய்திருப்பதை அறிந்திருக்கிறேன்.”
ஆன்மீக புயல்களை வெற்றிகரமாக சமாளித்தல்
யோசிக்கும் திறனை இப்போதே பயன்படுத்துவது ஏன் அவசரமானது? அபாய அறிகுறிகளுக்கு கப்பலோட்டிகள் எப்போதும் விழிப்புள்ளவர்களாக இருக்க வேண்டும், முக்கியமாக புயல் உருவாகையில். திடீரென வெப்பநிலை குறைந்து காற்று பலமாக வீசினால், கப்பல்தள புழைவாயில்களை மரச் சட்டத்தால் இறுக்கமாக அடைத்து வைத்து, மிக மோசமான வானிலையை சமாளிப்பதற்கும் தயாராகிறார்கள். அதேபோல இந்தப் பொல்லாத ஒழுங்குமுறை அதன் முடிவை நெருங்க நெருங்க புயல்போல் வரும் பிரச்சினைகளை சமாளிக்க நாமும் தயாராக வேண்டும். ஒழுக்க நெறிகள் எனும் சமுதாய இழைகள் பிரிந்துவருவதால், ‘பொல்லாதவர்கள் மேன்மேலும் கேடடைகிறார்கள்.’ (2 தீமோத்தேயு 3:13) வானிலை அறிவிப்புகளுக்கு கப்பலோட்டிகள் எப்போதும் கவனம் செலுத்துவதுபோல கடவுளுடைய ஏவுதலால் எழுதப்பட்ட தீர்க்கதரிசன எச்சரிப்புகளுக்கு நாமும் கவனம் செலுத்த வேண்டும்.—சங்கீதம் 19:7-11.
யோசிக்கும் திறனை நாம் பயன்படுத்தினால், நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவை கடைப்பிடிப்போம். (யோவான் 17:3) மேலும் பிரச்சினைகளை எதிர்பார்த்து, அவற்றை எப்படி சமாளிக்கலாம் என தீர்மானிப்போம். இவ்வாறு, கிறிஸ்தவ போக்கிலிருந்து விலகிவிடாதிருக்க நம்மை உறுதியாக தயார்படுத்திக் கொள்வோம்; அதோடு, ஆன்மீக இலக்குகளை வைத்து அவற்றை அடைவதன் மூலம், ‘வருங்காலத்திற்காக நல்ல ஆதாரத்தையும்’ போடுவோம்.—1 தீமோத்தேயு 6:19.
நடைமுறையான ஞானத்தையும் யோசிக்கும் திறனையும் நாம் காத்துக்கொள்வோமானால், ‘சடுதியில் வரும் எந்தத் திகிலுக்கும் அஞ்ச வேண்டியதில்லை.’ (நீதிமொழிகள் 3:21, 25, 26) மாறாக, கடவுள் தரும் இந்த வாக்குறுதியிலிருந்து நாம் ஆறுதல் அடையலாம்: “ஞானம் உன் இருதயத்தில் பிரவேசித்து, அறிவு உன் ஆத்துமாவுக்கு இன்பமாயிருக்கும்போது, நல்யோசனை [“யோசிக்கும் திறன்,” NW] உன்னைக் காப்பாற்றும்.”—நீதிமொழிகள் 2:10, 11.
[அடிக்குறிப்பு]
a மத்தேயு 5:23, 24 வசனங்களுக்கு இசைவாக கிறிஸ்தவர்கள் சமாதானம் பண்ண முயல வேண்டும். மோசமான பாவங்களை உட்படுத்தும் விஷயமானால், மத்தேயு 18:15-17-ல் குறிப்பிட்டுள்ளபடி தங்களுடைய சகோதரனை ஆதாயப்படுத்திக் கொள்ள முயல வேண்டும். அக்டோபர் 15, 1999 காவற்கோபுரம் பக்கங்கள் 17-22-ஐக் காண்க.
[பக்கம் 23-ன் படம்]
தவறாமல் உரையாடுவது திருமண பந்தத்தை உறுதிப்படுத்துகிறது