அதிகாரம் 48
கடவுளுடைய சமாதானமான புதிய உலகம்—நீ எப்படி அங்கு வாழலாம்
கடவுள் ஆதாமையும் ஏவாளையும் ஏதேன் தோட்டத்தில் வைத்தார். அவர்கள் கீழ்ப்படியாமல் போய் செத்துப்போனது உண்மைதான். ஆனால் அவர்களுடைய பிள்ளைகள் பரதீஸில் என்றென்றும் வாழ்வதற்கு கடவுள் ஏற்பாடு செய்துள்ளார். நாமும் அந்த வாய்ப்பைப் பெறுகிறோம். ‘நல்லவர்கள் இந்தப் பூமியில் என்றென்றும் வாழ்வார்கள்’ என பைபிள் வாக்குறுதி தருகிறது.—சங்கீதம் 37:29.
‘ஒரு புதிய வானமும் ஒரு புதிய பூமியும்’ உண்டாகும் என்று பைபிள் சொல்கிறது. (ஏசாயா 65:17; 2 பேதுரு 3:13) இன்றைய ‘வானம்’ மனித அரசாங்கங்களைக் குறிக்கிறது. ஆனால் ‘புதிய வானம்’ இயேசு கிறிஸ்துவையும் அவரோடு பரலோகத்தில் ஆட்சி செய்யப் போகிறவர்களையும் குறிக்கிறது. இந்தப் புதிய வானம், அதாவது சமாதானத்தை கொண்டுவரும் கடவுளுடைய நீதியுள்ள அரசாங்கம் பூமி முழுவதையும் ஆட்சி செய்யும்போது எவ்வளவு அருமையாக இருக்கும்!
அப்படியென்றால் ‘புதிய பூமி’ என்பது என்ன?— யெகோவாவை நேசிக்கும் நல்ல ஜனங்களே புதிய பூமியாக இருப்பார்கள். பூமியில் வாழும் மக்களை குறிப்பதற்காகவே பைபிள் சிலசமயம் ‘பூமி’ என்ற வார்த்தையை பயன்படுத்துகிறது என்பதை நீ புரிந்துகொள்ள வேண்டும். (ஆதியாகமம் 11:1; சங்கீதம் 66:4; 96:1) ஆகவே புதிய பூமியாக இருக்கப்போகும் ஜனங்கள் இதே பூமியில் வாழ்வார்கள்.
இன்றுள்ள கெட்ட ஜனங்கள் அழிக்கப்படுவார்கள். நோவாவின் காலத்தில் கெட்டவர்கள் நிறைந்த உலகம் வெள்ளத்தில் அழிந்தது உனக்கு ஞாபகம் இருக்கும். இன்றுள்ள கெட்ட உலகம் அர்மகெதோனில் அழியும் என்பதை நாம் ஏற்கெனவே படித்தோம். அர்மகெதோனுக்குப் பிறகு கடவுளுடைய புதிய உலகில் வாழ்வது எப்படியிருக்கும் என்று இப்போது பார்க்கலாம்.
கடவுளுடைய சமாதானமான புதிய உலகில் பரதீஸில் என்றென்றும் வாழ உனக்கு ஆசையா?— எந்த டாக்டராலும் நம்மை என்றென்றும் வாழ வைக்க முடியாது. எந்த மாத்திரையும் நம் சாவை தடுக்க முடியாது. என்றென்றும் வாழ்வதற்கு ஒரே வழி, கடவுளிடம் நெருங்கிச் செல்வதுதான். அதை எப்படி செய்வது என்று பெரிய போதகர் நமக்கு சொல்கிறார்.
இப்போது நாம் பைபிளை எடுத்து யோவான் 17-ஆம் அதிகாரம், 3-ஆம் வசனத்தை வாசிக்கலாம். அங்கே பெரிய போதகர் என்ன சொல்லியிருக்கிறார் பார்: “ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.”
ஆகவே என்றென்றும் வாழ்வதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்று இயேசு சொன்னார்?— முதலாவதாக, நம் பரலோகத் தகப்பன் யெகோவாவைப் பற்றியும் நமக்காக உயிரை தியாகம் செய்த அவரது மகன் இயேசுவைப் பற்றியும் அறிந்துகொள்ள வேண்டும். இதற்கு நாம் பைபிளைப் படிக்க வேண்டும். அதைச் செய்ய, பெரிய போதகரிடம் கற்றுக்கொள் என்ற இந்தப் புத்தகம் நமக்கு உதவும்.
ஆனால் யெகோவாவைப் பற்றி கற்றுக்கொள்வது என்றென்றும் வாழ நமக்கு எப்படி உதவும்?— நமக்கு எப்படி தினமும் உணவு தேவையோ அப்படித்தான் தினமும் யெகோவாவை பற்றிய அறிவும் தேவை. ‘மனிதன் வெறும் அப்பத்தை சாப்பிட்டு வாழாமல், யெகோவாவின் வாயிலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தையாலும் வாழ வேண்டும்’ என்று பைபிள் சொல்கிறது.—மத்தேயு 4:4.
நாம் இயேசு கிறிஸ்துவைப் பற்றியும் கற்றுக்கொள்ள வேண்டும். ஏனென்றால் நம் பாவங்களைப் போக்க அவரை கடவுள் அனுப்பினார். ‘வேறு யாராலும் இரட்சிப்பு கிடைக்காது’ என்று பைபிள் சொல்கிறது. அதோடு, ‘கடவுளுடைய மகன் மீது விசுவாசம் வைப்பவர்கள் நித்திய ஜீவன் பெறுவார்கள்’ என்றும் சொல்கிறது. (அப்போஸ்தலர் 4:12; யோவான் 3:36) இயேசுவின் மீது ‘விசுவாசம் வைப்பது’ என்றால் என்ன?— இயேசுவை உண்மையிலேயே நம்புவதையும், அவர் இல்லாமல் என்றென்றும் வாழ முடியாது என புரிந்துகொள்வதையும் அது அர்த்தப்படுத்துகிறது. நாம் இதை நம்புகிறோமா?— நம்பினால், தினமும் பெரிய போதகர் சொல்வதைக் கேட்டு நடப்போம்.
பெரிய போதகர் சொல்வதைக் கேட்பதற்கு ஒரு சிறந்த வழி, இந்தப் புத்தகத்தை மறுபடியும் மறுபடியும் வாசிப்பதாகும். இதிலுள்ள எல்லா படங்களையும் பார்த்து சிந்திக்க வேண்டும். படங்களுக்கு பக்கத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்கு பதில்கள் சொல்ல முடிகிறதா என்று பார். இந்தப் புத்தகத்தை உன் அம்மாவோடு அல்லது அப்பாவோடு சேர்ந்து படி. அவர்கள் இல்லையென்றால் வேறு யாருடனாவது அல்லது மற்ற பிள்ளைகளுடன் சேர்ந்து படி. கடவுளுடைய புதிய உலகில் என்றென்றும் வாழ்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை பெரிய போதகரிடமிருந்து கற்றுக்கொள்ள மற்றவர்களுக்கு உதவுவது எவ்வளவு அருமையாக இருக்கும் அல்லவா?—
‘இந்த உலகம் அழியப் போகிறது’ என்று பைபிள் சொல்கிறது. ஆனாலும் கடவுளுடைய புதிய உலகில் நாம் எப்படி என்றென்றும் வாழலாம் என்றும் அது விளக்குகிறது. ‘கடவுளுடைய விருப்பத்தின்படி நடக்கிறவர்கள் என்றென்றும் வாழ்வார்கள்’ என்று சொல்கிறது. (1 யோவான் 2:17) ஆக, நாம் எப்படி கடவுளுடைய புதிய உலகில் என்றென்றும் வாழலாம்?— ஆமாம், யெகோவாவையும் அவரது அன்பு மகன் இயேசுவையும் பற்றி கற்றுக்கொள்வதன் மூலம் என்றென்றும் வாழலாம். அதேசமயத்தில், கற்றுக்கொள்கிறபடி நடக்கவும் வேண்டும். இதையெல்லாம் செய்ய இந்தப் புத்தகம் உனக்கு உதவட்டும்.